May 9, 2020

ஆத்திசூடி முழுவதும் - கருத்துரையுடன்



ஔவையார் அருளிய ஆத்திசூடி 

கருத்துரை
ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

ஔவையார் அருளிய ஆத்திசூடி அகரவரிசையில் அனைவருக்குமான அறத்தை சொல்வது. ஆத்திசூடி மொத்தம் 109. அதில் உயிர்மெய் எழுத்து வரிசையில் அமைந்த 13 வரிகளை மட்டுமே நாம் பள்ளிப் பாடங்களில் படிக்கிறோம். முழுவதையும் பொருளுடம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு கருத்துரையோடு ஆத்திசூடியை வெளியிடுகிறோம்.


இறைவணக்கம்
ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் நாமே!
ஆத்திமாலையைச் சூடி அமர்ந்திருக்கின்ற பரம்பொருளைப் புகழ்ந்து பாடி நாம் வணங்குவோம்.

ஆத்திசூடி

1. அறம் செய விரும்பு / தர்மம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம் / கோபத்தை அறிவால் அடக்கு.
3. இயல்வது கரவேல் / இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுப்பதை நிறுத்தாதே.
4. ஈவது விலக்கேல் / பிறர் கொடுப்பதைத் தடுக்காதே.
5. உடையது விளம்பேல் / உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொள்ளாதே.
6. ஊக்கமது கைவிடேல் / உற்சாகத்தை ஒருபொழுதும் இழக்காதே.
7. எண்ணெழுத்து இகழேல் / கணிதவியலையும் இலக்கணத்தையும் கடினமென்று இகழாமல் கருத்தூன்றிப்படி.
8. ஏற்பது இகழ்ச்சி / இலவசமாக எதையும் பெறுவது அவமானமாகும்.
9. ஐயம் இட்டு உண் / பகிர்ந்து உண்டு பழகு.
10. ஒப்புரவு ஒழுகு / பிறருக்கு உதவிசெய்து வாழ்.
11. ஓதுவது ஒழியேல் / படிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதே.
12. ஒளவியம் பேசேல் / பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகம் சுருக்கேல் / தான்யங்களை அளவு குறைத்து விற்காதே.
14. கண்டொன்று சொல்லேல் / முரண்படப் பேசாதே.
15. ஙப்போல் வளை / ஙகர எழுத்தைப்போல் உறவு காத்து வாழ்.
16. சனி நீராடு / சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளி.
17. ஞயம்பட உரை / நன்மை தரும் சொற்களை இனிமையாகக் கூறு.
18. இடம்பட வீடெடேல் / ஆடம்பரமாக வீடுகட்டி வாழ எண்ணாதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு / நல்லவரா என அறிந்து பழகு.
20. தந்தை தாய்ப் பேண் / பெற்றோரை இறுதிவரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல் / பிறர் செய்த உதவியை ஒருபோதும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செய் / உரிய காலத்தில் எதையும் செய்.
23. மன்று பறித்து உண்ணேல் / லஞ்சம் வாங்கி வயிறு வளர்க்காதே.
24. இயல்பு அலாதன செயேல் / உன் இயல்புக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவம் ஆட்டேல் / பாம்பு முதலான கொடிய உயிர்களோடு விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில் / உடலுக்கு ஊறுசெய்யாத இலவம்பஞ்சு படுக்கையில் உறங்கு.
27. வஞ்சகம் பேசேல் / கபடமாகப் பேசாதே.
28. அழகு அலாதன செயேல் / இழிவான செயல்களைச் செய்யாதே. 
29. இளமையில் கல் / படிக்க முடிந்த இளம்பருவத்திலேயே படித்துமுடி.
30. அரனை மறவேல் (அ) அறனை மறவேல்/ இறைவன் இருப்பதை (அல்லது) தர்மத்தை ஒருபொழுதும் மறந்துவிடாதே.
31. அனந்தல் ஆடேல் / தேவைக்கதிகமாகத் தூங்காதே.
32. கடிவது மற / யாரையும் கோபத்தால் கடிந்து பேசாதே.
33. காப்பது விரதம் / புலன்களையும் மனதையும் அடக்கிக் காப்பதே விரதமாகும்.
34. கிழமைப்பட வாழ் / பிறருக்கு பயன்படும்படி வாழ்வாயாக.
35. கீழ்மை அகற்று /  இழிவான குணங்களை நீக்கு.
36. குணமது கைவிடேல் / நல்ல குணங்களைக் கைவிட்டுவிடாதே.
37. கூடிப் பிரியேல் / நல்லவரோடு கூடி பின் அவரை விட்டுப் பிரியாதே.
38. கெடுப்பது ஒழி / பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.
39. கேள்வி முயல் / கற்றறிந்தவர் சொல்லும் நூற்பொருளைக் கேட்க முயற்சி செய்.
40. கைவினை கரவேல் / உனக்குத் தெரிந்த கைத்தொழிலை பிறருக்கும் மறைக்காமல் கற்றுக்கொடு.
41. கொள்ளை விரும்பேல் / பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பாதே.
42. கோதாட்டு ஒழி / தவறான விளையாட்டை விட்டுவிடு.
43. கௌவை அகற்று / அறிவால் துன்பத்தை அகற்று.
44. சக்கர நெறி நில் / தர்மத்தின் வழியில் நட.
45. சான்றோர் இனத்து இரு / அறிவொழுக்கங்களில் சிறந்த பெறியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.
46. சித்திரம் பேசேல் / பொய் வார்த்தைகளை மெய்போல் பேசாதே.
47. சீர்மை மறவேல் /  புகழ் தரும் நற்குணங்களை, நற்செயல்களை ஒருபோதும் மறவாதே.
48. சுளிக்கச் சொல்லேல் / கேட்பவர் மனம் நோகும்படிப் பேசாதே.
49. சூது விரும்பேல் / ஒருபொழுதும் பந்தயம் வைத்து விளையாட விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய் / செய்யும் செயல்களை பிழையில்லாமல் செய்.
51. சேரிடம் அறிந்து சேர் / நல்லவர்களை ஆராய்ந்தறிந்து பழகு.
52. சையெனத் திரியேல் / ஊரார்  'சீ ' என இகழும்படி நடக்காதே.
53. சொல் சோர்வு படேல் / தவறான சொற்களைப் பேசாதே.
54. சோம்பித் திரியேல் / முயற்சியின்றி சோம்பேறியாகத் திரியாதே.
55. தக்கோன் எனத் திரி / பெரியவர்கள் உன்னைத் தகுதியானவன் எனப் புகழும்படி நடந்துகொள்.
56. தானமது விரும்பு / தக்கவர்களுக்கு தானம் கொடுத்தலை விரும்பிச்செய்.
57. திருமாலுக்கு அடிமை செய் / இறைவனின் ஏவலாளாக உன்னைக் கருதி உன் கடமைகளை கருத்தாகச் செய்.
58. தீவினை அகற்று / பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / துன்பத்துக்கு மனதில் சிறிதும் இடம் கொடுத்துவிடாதே.
60. தூக்கி வினை செய் / ஆராய்ந்து எச்செயலையும் செய்வாயாக.
61. தெய்வம் இகழேல் / கடவுளை ஒருபோதும் இகழ்ந்து பேசாதே.
62. தேசத்தோடு ஒத்து வாழ் / உன் தேசப் பண்பாட்டோடு பொருந்தி வாழ்.
63. தையல் சொல் கேளேல் / பெண்களின் சொல் கேட்டு ஆராயாமல் நடக்காதே.
64. தொன்மை மறவேல் / பாரம்பர்யமான வழக்கங்களை விட்டுவிடாதே.
65. தோற்பன தொடரேல் / நிச்சயமாகத் தோற்கும் என அறிந்ததைச் செய்யாதே.
66. நன்மை கடைப்பிடி / புண்ணியம் தரும் செயல்களை உறுதியாகப் பின்பற்று.
67. நாடு ஒப்பன செய் / நாட்டுக்கு நல்லனவற்றை மட்டும் செய்.
68. நிலையில் பிரியேல் / உயர்பண்புகளிலிருந்து ஒருபோதும் தாழ்ந்துவிடாதே.
69. நீர் விளையாடேல் /  ஆழம் தெரியாத ஆற்று நீரில் இறங்கி விளையாடாதே.
70. நுண்மை நுகரேல் / உடலிற்குக் கேடான தின்பண்டங்களைத் தின்னாதே.
71. நூல் பல கல் / அறிவை வளர்க்கும் பல நூல்களை அறிஞர்களிடமிருந்து கற்றுக்கொள்.
72. நெற்பயிர் விளை / உணவுப் பயிர்களை வளர்.
73. நேர்பட ஒழுகு / எண்ணம், சொல், செயல் நேராக்கு.
74. நை வினை நணுகேல் / பிறருக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே.
75. நொய்ய உரையேல் / பயனற்ற வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கு இடம் கொடேல் / உடல் நோய்க்கு இடமாகும்படி இருந்துவிடாதே.
77. பழிப்பன பகரேல் / பிறர் குற்றங்களைப் பேசாதே.
78. பாம்பொடு பழகேல் / பாம்பு போன்று தீக்குணமுள்ளவரோடு நெருங்கிப் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல் / குற்றமின்றிப் பேசு.
80. பீடு பெற நில் / புகழ் உண்டாகும்படி உயர்ந்த ஒழுக்கங்களைப் பின்பற்று.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / உன்னை மதிப்பவரை நீ மதித்து வாழ்.
82. பூமி திருத்தி உண் / விவசாயம் செய்து உணவுப் பொருள்களைப் பெருக்கி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள் / சான்றோரை வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்.
84. பேதைமை அகற்று / அறநூல்களைக் கற்று அறியாமையை நீக்கிவிடு.
85. பையலோடு இணங்கேல் / அறிவில்லாத சிறியரோடு சேராதே.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / வாழ்க்கைக்குத் தேவையான பொருளை உழைத்துச் சேர்.
87. போர்த் தொழில் புரியேல் / வீண் வாதவிவாதங்களில், கலகங்களில் ஈடுபடாதே.
88. மனம் தடுமாறேல் / எதனாலும் மனவுறுதியை இழக்காதே.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / எதிரிகள் தோன்ற இடம் கொடுத்து விடாதே.
90. மிகைபடச் சொல்லேல் / உள்ளதை மிகுதிப்படுத்தியோ அளவுக்கு அதிகமாகவோ பேசாதே.
91. மீதூண் விரும்பேல் / தேவைக்கு அதிகமாக உண்ணாதே.
92. முனைமுகத்து நில்லேல் / சண்டை நடக்கும் இடங்களில் நின்று வேடிக்கை பார்க்காதே.
93. மூர்க்கரோடு இணங்கேல் / முரடர்களோடு சேராதே.
94. மெல்லில் நல்லாள் தோள் சேர் / சாந்தமான நல்ல குணமுடைய பெண்ணை இல்லறத்தில் சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள் / அறிவில் உயர்ந்தவர்களின் அறிவுரைகளைக் கேள்.
96. மைவிழியார் மனை அகல் / விலைமாதர் இடம் செல்லாதே.
97. மொழிவது அற மொழி / சொல்வதைத்  தவறின்றிச் சொல்.
98. மோகத்தை முனி / தவறான அறிவை முனைந்து நீக்கு.
99. வல்லமை பேசேல் / உன் வலிமையை நீயே உரக்கப் பேசாதே.
100. வாது முற்கூறேல் / பெரியோர்களிடத்தில் வாதம் செய்யாதே.
101. வித்தை விரும்பு / அறிவை வளர்க்க ஆசைப்படு.
102. வீடு பெற நில் / இறைநிலையை அடைய அறவழியில் நட.
103. உத்தமனாய் இரு /  உயர்பண்புள்ளவனாக உன்னை உயர்த்திக் கொள்.
104. ஊருடன் கூடிவாழ் / ஊராருடன் நல்லது கெட்டதுகளில் கலந்து வாழு.
105. வெட்டெனப் பேசேல் / யாரையும் துண்டித்துப் பேசாதே.
106. வேண்டி வினை செயேல் / விரும்பி தீவினைகளைச் செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு / விடிவதற்கு முன்பே விழித்தெழு.
108. ஒன்னாரைத் தேறேல் / பகைவரை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல் / ஒருதலைப் பக்ஷமாகப் பேசாதே.




No comments: