Sep 25, 2020

Hindu matha Dharma Vilakkam - Chapter 14

 ஹிந்து மத தர்ம விளக்கம்




பாடம் - 14

ப்ரமாணங்கள்

(24.09.2020)

சென்ற வாரம்...
உலகின் தோற்றமும் ஒடுக்கமும்
பரமாத்மாவின் சக்தியாகிய மாயையிலிருந்து உலகம் தோன்றியது. ப்ரளயகாலத்தில் மாயையிலேயே ஒடுங்குகிறது.
பரமாத்மா நித்யமானவர் (தோற்றமும் மறைவுமில்லாதவர்).
தோன்றிமறைகின்ற உலகம் அநித்யமானது. நித்யமானதின்மேல் அநித்யமானது தோன்றிமறைகிறது. அநித்யமான அனைத்துள்ளும் நித்யமானது இருக்கிறது.

நித்யமானதை அறிந்துகொள்வது எப்படி?

ஞானத்தினால் கடவுள் காட்சி!

மெய்ப்பொருள் காண்பது அறிவு - அறிவு ஒன்றே மெய்ப்பொருளைக் காட்டக்கூடியது - திருக்குறள்.


கண்களாலும் வாக்கினாலும் மற்றவைகளாலும் அவன் அறியப்படுகிறானில்லை. நற்கருமங்களினாலும், தபசினாலும், சுத்தமான சத்துவ குணம் பொருந்திய மனதுடையவனும் இடையறாது தியானம் செய்கிறவனுமான மனிதன் ஞானத்தினால் அவனைப் பார்க்கிறான்.

  • முண்டக உபநிஷத். 


ஞானம் எப்படி வரும்?

ஞானம் கல்வி கேள்விகளால் வரும்.


கற்றனைத் தூறும் அறிவு - திருக்குறள்.


ஞான ப்ரமாணங்கள் (ஞான ஸாதனங்கள் - அறிவைத் தரும் கருவிகள்)

உள்ளதை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு சாதனம் - கருவி - எதுவோ அது பிரமாணம் எனப்படும்.
பிரமா கரணம் பிரமாணம். பிரமா என்றால் அறிவு. கரணம் என்றால் கருவி. அறிவைத் தரும் கருவி பிரமாணம்.

அது பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, சப்தம், ஸம்பவம், ஐதிஹ்யம் என எட்டு விதம்.

1.பிரத்யக்ஷப் பிரமாணம்

அக்ஷம் என்றால் புலன்கள். புலன்வழி உண்டாகும் ஞானம் பிரத்யக்ஷ ஞானம். அது ஏற்படுவதற்கு கருவியாக இருக்கக்கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்கள் பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதைக் காட்சி அளவை என்று தமிழில் சொல்வர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து அறிவுகளும் புலன்கள் வழி நமக்கு ஏற்படுகின்றன. ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவிற்கு முந்திய ஐந்து அறிவுகள் இவையே.


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு - திருக்குறள்.

யோகிகள், பக்தர்களுக்கு  நேரில் பிரத்யட்சமாகவே காட்சி கொடுத்திருக்கிறார் கடவுள். (ஸகுண பிரம்மம் ப்ரத்யக்ஷ பிரமாணத்தினாலும் அறியத்தக்கது)


2.அனுமானப் பிரமாணம்

பிரத்தியட்ச பிரமாணத்தை அடிப்படையாகக்கொண்டு யூகித்து (அநுமானித்து) அறியும் அறிவு அநுமான ஞானம் ஆகும். இந்த அறிவுக்கு ஸாதனமாக இருக்கக்கூடிய ஊகமே அநுமான ப்ரமாணமாகும்.

இது ஊக அளவை என்று தமிழில் சொல்லப்படுகிறது.


உதாரணம் - புகையை வைத்து நெருப்பு இருப்பதை அனுமானித்தால் அறிதல்.


காரியமான உலகை வைத்து இதைச் செய்த காரணமாக கடவுள் இருக்கின்றார் என்பது  அனுமான அறிவு.


3.உவமான பிரமாணம்

தெரிந்த ஒன்றைக் கொண்டு அதேபோலுள்ள தெரியாத ஒன்றைப் பற்றிய அறிவைப் பெறுதல். இங்கு அறிவைத் தரும் சாதனமாக உவமானம் இருக்கின்றது.

எ.கா: அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. அதுபோல உலகம் ஆதிபகவன் என்ற இறைவனை முதலாகக் கொண்டது. எழுத்துக்கள் நமக்குத் தெரிந்தவை. இறைவன் நமக்கு தெரியாதவர். எழுத்துக்களுக்கெல்லாம் ஒரு முதல் (அகரம்) இருப்பதுபோல, நமக்கு தெரிகின்ற உலகிற்கும் ஒரு முதல் இருக்க வேண்டும் என்று பெறும் கடவுளைப் பற்றிய அறிவு.

4.அர்த்தாபத்தி பிரமாணம்

ஒரு பொருளைக் கொண்டு, அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளை வருவித்து அறிந்து கொள்ளுதல்.


எ-கா - மழை பெய்திருக்கிறது. (நிலத்திலுள்ள ஈரத்தைப் பார்த்து மழை பெய்திருக்கிறது என்ற அறிவைப் பெறுகிறோம்)


உலக இயக்கத்தில் இருக்கும் ஒழுங்கு, நேர்த்தி, அழகு, அறிவு. இதை ஒழுங்குபடுத்தி இயக்குபவன் ஒருவன் இருக்கின்றான் என்ற அறிவைத் தருகின்றது.


5.அனுபலப்தி அல்லது அபாவப் பிரமாணம்
ஒரு பொருள் காணப்படவில்லை என்பதால் அது இங்கு இல்லை என்று சொல்லும் அறிவு.

எ-கா : இங்கு யானை இல்லை.

உலகில் காரணம் இல்லாத காரியம் ஒன்று எங்கும் காணப்படவில்லை.

(ஆகவே, உலகமாகிய காரியத்திற்கு காரணமாக ஒன்று (கடவுள்) இருக்கிறார்.)

கடவுள் கண்ணுக்கு முன்னால் அவர்களுக்கு காணப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று நாத்திகர்கள் முடிவு செய்கிறார்கள். (அபாவ பிரமாணம் இங்கு இல்லை என்பதற்குத்தான் ப்ரமாணமே அன்றி எங்குமே இல்லை என்பதற்கு பிரமாணம் ஆகாது. மேலும் ஏற்கனவே அறிந்த ஒன்றைத் தான் இல்லையென்று சொல்லமுடியும்.)

6.ஸம்பவம்

சம்பவம் என்பது பொருந்துதல்/ ஒப்புதல் என்று பொருள்படும்.

ஒன்றைச் சொல்லுகின்ற பொழுதே அதற்குள் இன்னொன்று அடங்கி இருத்தல்.


எ-கா : 100 பேர் இருக்கிறார்கள் எனும் பொழுது நிச்சயமாக 99 பேர் அங்கு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


7.ஐதிஹ்யம்

ஐதிஹ்யம் என்பது உலக வழக்கு. பரம்பரை வழக்கம்.


எ- கா: முருங்கை மரத்தில் பேய் இருக்கு!

குறிப்பு: உபமானம் முதலாக ஐதிஹ்யம் ஈராக உள்ள ஐந்தும் அனுமானத்தில் அடங்கும். அனுமானம் ப்ரத்யக்ஷத்தை ஆதாரமாகக் கொண்டது.


8.சப்தப் பிரமாணம்

ஆப்த வாக்யம் - ஆன்றோர் வாக்கு - சப்த ப்ரமாணம்.


ஆப்தர் யார்?
உள்ளதை உள்ளவாறு அறிகின்ற சக்தி உடையவனும், தான் அறிந்ததை ஒளிக்காமல் உள்ளவாறு சொல்லுகின்ற நேர்மையுள்ள உள்ளவனான மனிதன் ஆப்தன். அவனுடைய சொல் ஆப்த வாக்கியம் எனப்படும். ஆப்த வாக்கியமே சப்த பிரமாணம். ஏனெனில் அது உண்மையானதாக இருக்கும். அதுவும் நமக்கு அறிவைத் தருகின்ற ஸாதனமாக இருப்பதனால் ப்ரமாணமாகிறது. அறியாமை, ஐயம், திரிபு இல்லாத வாக்கியங்கள் பிரமாண வாக்கியங்கள்.

எ-கா - பள்ளிப் பாடங்கள்,

குரு உபதேசம்.


எல்லா குருமார்களுக்கும் பரமகுருவாக இருக்கக் கூடியவர் இறைவன். இறைவனுடைய வாக்கு வேதங்கள், ஆகமங்கள்.

அறிவிக்கிறது வேதம். வேதப்பொருளை வருவித்துக் கொடுப்பது ஆகமம்.

பிரத்யக்ஷ, அநுமானங்களால் அறியமுடியாததை அறிவிப்பது வேதங்கள். அதாவது நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத விஷயங்களை பற்றிய அறிவைத் தருபவை வேதங்கள். அத்தகைய (பல பிறவிகள், பல உலகங்கள், புண்ணிய பாபம், சொர்க்க நரகம் போன்ற) விஷயங்களுக்கு வேதங்களே பிரமாணம்.

ஆகவே, வேதங்கள் சப்த பிரமாணம் எனப்படுகின்றன.


தோன்றாமை (அஞ்ஞானம்), ஐயம் (ஸம்ஶயம்), திரிபு (விபர்யயம்)


கற்க கசடற…. திருக்குறள்


இனி, ஹிந்து மதக் கொள்கைக்கு பிரமாணமாக இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.)

Sep 21, 2020

Kaivalya Navanitham 1 (21-40)


கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம்



பாடல் :21

இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி, ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும், அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம், செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே.


பொருள்:

இப்படிப் போன்ற = சென்ற பாடலில் சொன்ன ஆரோப உதாரணங்கள் போல,

நாம ரூபங்கள் இரண்டும் இன்றி ஒப்பமாய் = பெயர் வடிவங்கள் இரண்டும் இல்லாமல் சமமாக,

இரண்டற்று ஒன்றாய் = தனக்கு வேறாக இரண்டாவதாக ஒரு பொருள் இல்லாமல் தான் மாத்திரம் ஒன்றாக, 

உணர்வு, ஒளி, நிறைவாய் நிற்கும் அப்பிரமத்தில் = அறிவாய் பிரகாசமாய் எங்கும் நிறைந்ததாய் நிலைமாறாமல் இருக்கும் அந்த ப்ரஹ்மத்தில், 

தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம் = இருப்பதாக தோன்றுகின்ற பஞ்சபூத காரியங்கள் அனைத்தும், செப்பு கற்பனையினாலே = அத்தியாசம் என்று சொல்லப்பட்ட கற்பனையினாலே, 

செனித்தவென்று அறிந்து கொள்ளே = தோன்றியது என்று அறிந்து கொள்வாயாக.


இரண்டற்ற = ஸஜாதீய, விஜாதீய, ஸ்வகத பேதமற்றது. அத்வைதம்

சமமாய் = ஸர்வவ்யாபகமாய்

உணர்வு = ஞானஸ்வரூபம்

ஒளி = ஸ்வயம் ப்ரகாச சைதந்ய ஸ்வரூபம்.

நிறைவு = பூர்ணம்

நிற்கும் = ஸத்வஸ்து.


ஐம்பூத விகாரம் = பஞ்சபூத கார்யம்.

பாடல் : 22

அதுதான் எப் படிஎன் றக்கால்

அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே.


பொருள்:

அதுதான் எப் படிஎன் றக்கால் = கற்பனைதான் எப்படி தோன்றியது என்றால்,

அநாதியாம் சீவ ரெல்லாம் = அனாதியாய் உள்ள உயிரினங்கள் அனைத்தும்,

பொதுவான சுழுத்தி போல = அனைவருக்கும் பொதுவான உறக்கம் போன்ற,

அவ்வியத்தம் தன்னில் = ச்ருஷ்டிக்குமுன் வெளிப்படாமல் இருந்த (அவ்யக்தமான) மாயையிடத்தில்,

பொருந்தும் = கர்ம வாசனையுடன் ஒடுங்கி இருக்கும்.

இது = இந்த (அவ்யக்தமென்ற) மாயையானது,

கால தத்துவப்பேர் ஈசன் உட்பார்வை யாலே = கால தத்துவம் என்ற பெயரை உடைய ஈஶ்வன்ரனுடைய ஸங்கல்பத்தினாலே,

முதுமூல சுபாவம் விட்டு = முன்பிருந்த சமநிலை என்ற தன் இயல்பு மாறி,

முக்குணம் வியத்தம் ஆமே = சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் வெளிப்படும்.


பாடல் : 23

உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும், சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான், சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய், ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே.


பொருள்:

சத்துவ குணத்தினோடு ரசோகுணம் தமோகுணந்தான் = ஸத்வ குணத்துடன் ரஜோ குணமும் தமோ குணமும்,

உத்தம வெளுப்பு, 

செம்மை,

உரைத்திடும் கறுப்பும் ஆகும் = முறையே மேலான வெண்மை, சிவப்பு, கருப்பு என்று சொல்லப்படுவதாகும். 

சுத்தமோடு அழுக்கு இருட்டாச் சொல்லும் முக்குணமும் = தூய்மை, அழுக்கு, இருட்டு என்று சொல்லப்படும் மூன்று குணமும், 

மூன்றாய் ஒத்துளவேனும் = மூன்றும் (ஒன்றை ஒன்று சார்ந்து) சேர்ந்து இருந்தாலும், 

தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே = அவற்றுள் ஒரு குணம் மிகுந்தே இருக்கும்.


பாடல்:24

ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர், மருவும் அவ் வியத்தம் தானே மகத்தத்வம் ஆகும் அந்த, அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும், கரு அகங்காரம் மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும்


பொருள்:

ஒருவழி இதுவாம் = 

உபநிஷத்துக்களில் உலகின் உற்பத்தியைப் பற்றி சொல்வதில் ஒரு முறை இதுவாகும்.

இத்தை ஒருவழி வேறாச் சொல்வர் = இதனை வேறு ஒருவிதமாகவும் (ரிஷிகள்) சொல்வார்கள்.

மருவும் அவ்வியத்தம் தானே மகத்தத்துவம் ஆகும் = (அனாதியான ஜீவர்கள் எல்லாம் கர்ம வாசனைகளோடு) லயமாகி இருக்கின்ற அவ்யக்த தத்துவம் மகத் தத்துவமாக ஆகும்,

அந்த அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும்

= அந்த மகத்தத்துவமே பின்னர் அஹங்கார தத்துவமாக ஆகும் என்றும்,

கரு அகங்காரம் = காரணமான அந்த அகங்கார தத்துவமானது மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும் = முன்னர் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றாகச் சொல்லிய குணங்கள் ஆகும் என்றும் (சொல்வார்கள்).


மகத்தத்த்வம் = ஸமஸ்டி புத்தி


பாடல் :25

இக்குணங் களிலே விண்போன் றிருக்கும்சிற் சாயை தோன்றும், முக்குணங் களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும், அக்குணப் பிரமச் சாயை அந்தரி யாமி மாயை, எக்குணங் களும்பற் றாதோன் நிமித்தகா ரணனாம் ஈசன்.


பொருள் :

இக்குணங்களிலே = இந்த மூன்று குணங்களிலே,

விண்போன்று இருக்கும் சிற்சாயை தோன்றும் = ஆகாசம் போல அஸங்கமாய், வியாபகமாய், ஸூக்ஷ்மமாய்) இருக்கும் சித்தின் பிரதிபிம்பம் உண்டாகும்.,

முக்குணங்களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும் = மூன்று குணங்களிலும் தூயதாக இருக்கும் முதல் குணமான சத்துவகுணம் மாயை எனப்படும்.

அக்குணப் பிரமச்சாயை அந்தரியாமி = அந்த சத்துவகுணத்தில் ஏற்படும் பிரஹ்மத்தின் பிரதிபிம்பம் அந்தர்யாமி  எனப்படும்.

மாயை எக்குணங்களும் பற்றாதோன் நிமித்த காரணனாம் ஈசன் = (அதுவே) தனக்குச் சரீரமாகிய மாயை மற்றும் அதன் காரியமாகிய ஸர்வஜ்ஞத்துவம் முதலான எக்குணங்களிலும் பற்றில்லாமல் நிமித்த காரணமாக இருக்கின்ற ஈச்வரன் ஆகும்.


பாடல் : 26

ஈசனுக் கிதுசு ழுத்தி இதுவேகா ரணச ரீரம், கோசம்ஆ நந்தம் ஆகும் குணம் இராசதம் அ வித்தை, தேசறும் அவித்தை தோறும் சிற்சாயை சீவ கோடி, நாசமாம் உயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞன் ஆமே.


பொருள்: 

ஈசனுக்கு இது சுழுத்தி = ஈஸ்வரனுக்கு இதுவே ஆழ்ந்த உறக்க நிலை, இதுவே காரணசரீரம் = இதுவே காரண சரீரம் ஆகும். 

கோசம் ஆநந்தம் ஆகும் = (பஞ்சகோசங்களில் இது) ஆனந்தமய கோசம் ஆகும். 

குணம் இராசதம் அவித்தை = ராஜச குணம் அவித்தை எனப்படும்.

தேசறும் அவித்தை தோறும் = மலின சத்துவ அவித்தைகள் எல்லாவற்றிலும், 

சிற்சாயை சீவகோடி = சித்தினுடைய பிரதிபிம்பம் ஏற்பட்டு அதுவே கோடிக்கணக்கான ஜீவர்கள் ஆகும்., 

நாசமாம் உயிர்க்களுக்கு அப்போது = அழியக்கூடிய உயிர்களுக்கு அப்போது,

நாமமும் பிராஞ்ஞன் ஆமே = பெயரும் ப்ராஜ்ஞன் ஆகும்.


பாடல் :27

அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம், சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம், முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம், வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.


பொருள்:

அழுக்கொடு பற்றும் சீவர்க்கு = மலினசத்துவ (ரஜோகுண) அவித்தையோடு பற்றுக் கொள்கின்ற ஜீவர்களுக்கு 

அதுவே ஆநந்த கோசம் = அவ்வவித்தையே ஆனந்தமய கோசம் ஆகும்.

சுழுத்தி காரண சரீரம் = (அவ்வவித்தையே) சுழுத்தி அவஸ்தையும், காரண சரீரமும் ஆகும். இம்மட்டும் சொன்னது = இதுவரையில் கூறியது

முழு மோக இரண்டு குணத்தால் வந்த = முழுமையான  மயக்கத்தைத் தருகின்ற சுத்தஸத்துவ (மாயை), மலினஸத்துவ (அவித்தை) ஆகிய இரண்டு குணங்களால் உண்டான,

மூல ஆரோபம் சொன்னோம் =  காரண (சரீர) அத்யாஸத்தைச் சொன்னோம். வழுத்து சூக்கும ஆரோப வழியும் = இனி கூறப்போகின்ற சூக்ஷ்ம பிரபஞ்ச அத்தியாய கிரமத்தையும், 

மொழியக் கேளாய் = கூறக் கேட்பாயாக.


பாடல் : 28

ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத் தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும் வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.


பொருள்:

ஏம மாயா வினோத ஈசனார் = ஸ்வாநுபூதியும், மாயையினால் பலவித லீலைகளையுமுடைய ஈச்வரனின்,

பூமலி அருளினாலே = சிறப்புமிக்க அருளினாலே,

உயிர்கட்கு எல்லாம் = எல்லா ஜீவர்களுக்கும்,

போக சாதனம் உண்டாக = போகசாதனமான ஸூக்ஷ்ம சரீரம் உண்டாகும் பொருட்டு, தாமத குணம் = தாமஸ குண பிரதான மாயையானது, 

வீமம் ஆம் மூடல் என்றும் = கனமான ஆவரணம் என்றும்,

விவிதமாம் தோற்றம் என்றும் = பலவிதமான நாமரூபங்கள் என்றும்,

பிரிந்து இரண்டு சக்தியாய்ப் தோன்றும் = பிரிந்து இருவகை சக்திகளாகத் தோன்றும்.


ஏம மாயாவினோத ஈசனார் = ஆவரணமின்மையால் அஹம் ப்ரஹ்மமென்ற அனுபூதியும், மாயையினால் பலவித வினோத  லீலைகளையும் செய்யும் ஈச்வரன்.


போகஸாதனம் = புண்ய பாபத்தை அனுபவிப்பதற்கான ஸூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்)


கனமான ஆவரணம் = நீக்குவதற்கு அரிதான அஞ்ஞானம் எனும் மறைப்பு.


இரண்டு சக்திகள் = ஆவரண சக்தி, விக்ஷேப சக்தி

ஆவரணம் = ஸ்வரூபத்தை மறைத்தல்.

விக்ஷேபம் = வேறொன்றாகத் தோன்றுதல்.


பாடல் :29

தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின் காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர் நீரின் மண்ணாம் போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம் சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.


பொருள்: 

சொல்லிய தோற்றம் ஆம் சத்தி தன்னின் = முற்கூறிய அவ்விருவகைச் சக்திகளுள் தோற்றம் என்ற விக்ஷேப சக்தியில் இருந்து,

விண்ணாம் = (சப்த தந்மாத்ரையான) ஆகாசம் தோன்றும்,

விண்ணின் காற்றதாம் = விண்ணில் இருந்து (ஸ்பர்ச தந்மாத்ரையான) காற்று உண்டாகும், 

காற்றின் தீயாம் = காற்றிலிருந்து (ரூபதந்மாத்ரையான) நெருப்பு உண்டாகும்),

கனலில் நீர் = தீயிலிருந்து (ரஸ தந்மாத்ரையான) நீர் உண்டாகும்,

நீரின் மண்ணாம் = நீரில் இருந்து (கந்த தந்மாத்ரையான) நிலம் உண்டாகும்.

போற்றும் இவ்வைந்தும் = சொல்லிய இவ்வைந்து தந்மாத்ரைகளுக்கும்,

நொய்ய பூதங்கள் என்று பேராம் = ஸூக்ஷ்ம பூதங்கள் என்று பெயராகும்.

சாற்றும் இவற்றின் = சொல்லிய இவ்வைந்து ஸூக்ஷ்ம பூதங்களிலிருந்தும்,

போக சாதன தனுஉண் டாகும்‌ = போகஸாதனம் எனும் ஸூக்ஷ்ம சரீரம் தோன்றும்.

பாடல்:30


ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும், கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும், ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான, சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.


பொருள்:

ஆதி முக்குணம் = தனக்குக் காரணமான தமோகுணப் பிரதான மாயையின்கண் உள்ள‌ தமசில் சத்துவம், ரஜஸ், தமஸ்  என்னும் முக்குணங்கள்,

இப்பூதம் அடங்கலும் = இத்தன்மாத்திரைகள் முழுதினும், 

தொடர்ந்து நிற்கும் = கலந்து இருக்கும், கோதில் வெண்குணத்தில்  ஐந்து கூறு = (மாயையின் தமோகுணக் காரியமான பஞ்சபூதங்களின்) தூய்மையான ஸத்துவ குணத்தில் இருந்து ஐந்து பகுதிகளும் (தனித்தனியாக), 

உணர் கருவி ஆகும் = ஞான இந்திரியங்கள் (அறிவு உறுப்புகள்) தோன்றும், 

ஓதிய பின்னை ஐந்தும் = முன்னர்க் கூறிய (பஞ்சபூதங்களின் ஸத்துவ குணத்தின் ஐந்துபகுதிகளும் (ஒன்றாகச் சேர்ந்து), உளம்புத்தி இரண்டு ஆம் = மனம், அறிவு என இருவிதப் பரிணாமம் உடைய அந்தக்கரணமாக ஆகும்.

இவ்வேழும் = இந்த (ஞானேந்திரியங்கள் ஐந்து +மனம்,புத்தி) ஏழு தத்துவங்களும், 

சற்குணப் பிரிவினாலே = சத்துவகுணக் கூறாதலால்,

ஞானசாதனமாம் = ஞானஸாதனம் (அறிவைப் பெற உதவும் கருவிகள்) என்று சொல்லப்படும்.


ஞான இந்திரியங்கள் = மெய் வாய் கண் மூக்கு செவி.


அந்தக்கரணம் = மனம் (+சித்தம்) புத்தி(+அஹங்காரம்)


பாடல் : 31


இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும், பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும், பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம், சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம்.


பொருள்:

இராசத குணத்தில் = (பஞ்சபூதங்களின்) ரஜோ குணத்தில்,

எடுத்து வேறு இட்ட ஐந்து கூறுக்கும் = எடுத்து  தனித்தனியே வைத்த ஐந்து கூறுக்கும்,

பெருந்தொழிற் கருவி என்றும் = கர்மேந்திரியங்கள் என்றும்

ஐந்தும் = (ஒன்றாக வைத்த) ஐந்து கூறுக்கும்,  

பிராணவாயுக்கள் என்றும் = பிராணாதி வாயுக்கள் என்றும்,

பராவிய பெயராம் = சாஸ்திரங்களில் சொல்லிய பெயராம்.

இந்தப் பதினேழும் = இந்தப் பதினேழு தத்துவங்களும், 

சுர, அசுரர், நரர், விலங்காய்த் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் = தேவர், அசுரர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள் ஆகிய உயிரினங்களுக்கு எல்லாம்,

இலிங்க தேகம் = ஸூக்ஷ்மசரீரம் (நுண்ணுடல்) ஆகும்.


கர்ம இந்திரியங்கள் = கைகள், கால்கள், வாய், எருவாய், கருவாய் (மல, ஜல உறுப்புகள்)


பதினேழு தத்துவங்கள் = ஞான இந்த்ரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, பிராணாதி வாயுக்கள் 5, அந்தக்கரணம் (மனம், புத்தி) 2.


எழுவகைப் பிறப்பு - ஏழு விதமான சரீரங்கள்

1.தேவ,அசுரர். 2.மனிதர். 3.விலங்கு. 4.பறவை. 5.ஊர்வன. 6.நீர்வாழ்வன. 7.தாவரங்கள்.


பாடல் : 32

இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன், இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன், இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம், இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா அவத்தை ஆமே.


பொருள்:

இவ்வுடல் மருவும் சீவன் = இந்த ஸூக்ஷ்ம சரீரத்தில் பொருந்தியிருக்கும் ஜீவன்,

இலங்கு தைசதன் என்று ஆவன் = விளங்கும் தைஜஸன் என்று சொல்லப்படுவான்.

இவ்வுடல் மருவும் ஈசன் = இவ்வுடலில் பொருந்தியிருக்கும்  ஈச்வரன்,

இரணியகர்ப்பன் ஆவன் = ஹிரண்யகர்ப்பன்  என்று சொல்லப்படுவான். 

இவ்வுடல் இரண்டு பேர்க்கும் = இந்த உடல் ஜீவன், ஈச்வரன் இரண்டு பேருக்கும்,

இலிங்க சூக்கும சரீரம் = லிங்கசரீரம் என்ற பெருடைய ஸூக்ஷ்ம சரீரம் ஆகும். 

இவ்வுடல் கோசம் மூன்றாம் = இந்த ஸூக்ஷ்மசரீரம் ப்ராணமயம், மனோமயம், விஜ்ஞானமயம் எனும் மூன்று கோசங்களாம்.

இதுகனா அவத்தை ஆமே = இந்த ஸூக்ஷ்ம உடல் (வெளிப்படையாய் காணப்படும் நிலை) கனவு நிலை ஆகும்.

பாடல் : 33

சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம், ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய், தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக், காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே.


பொருள்:

சூக்கும சடம் இம்மட்டும் சொல்லினோம் = சூட்சும சரீர (அத்தியாசத்தை) இதுவரை கூறினோம், 

இப்பால் = இனிமேல்,

தூலம் ஆக்கும் ஆரோபம் தானும் = தூலதேகம் (முதலிய பிரபஞ்சத்தைச்) படைக்கும் அத்தியாரோபத்தையும், அடைவினில் மொழியக் கேளாய் = கிரமமாகச் சொல்லக் கேட்பாயாக, தாக்கும் இவ்வுயிர்க்கு = (ஸூக்ஷ்மசரீரங்களில்) சம்பந்தித்துள்ள இவ்வுயிர்களுக்கு, 

தூல தநுவும் போகமும் உண்டாக = (தத்தம் கருமத்திற்குத் தக்கதாக) தூலதேகங்களும், (அவ்வத் தேகங்களுக்கு பொருத்தமான) போகங்களும் உண்டாவதற்காக, 

காக்கும் அவ்வீசன் = (யாவரையும்) காவல் செய்யும் அந்த ஈச்வரன், பஞ்சீகரணங்கள் செய்தான் = (ஆகாயம் முதலான பூதங்கள் ஐந்தனையும்) பஞ்சீகரணம் செய்தனன்.


பாடல் : 34

ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி, நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட, வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும், தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம்.


பொருள்:

ஐந்து பூதமும் பத்து ஆக்கி = ஐந்து பூதங்களையும் ஒவ்வொன்றையும் சமமாக இரண்டு இரண்டு பகுதியாகப் பண்ணி, அவைபாதி நந்நான் காக்கி = அவைகளின் (ஒவ்வொரு பாதியை வைத்து) மற்ற ஒவ்வொரு பாதியை நான்கு நான்கு பகுதிகளாகப் பண்ணி, நந்துதம் பாதி விட்டு = பெரிய அரைப்பகுதியை விட்டு,

நான்கொடு நான்கும் கூட்ட = (மற்றை) நான்கு பூதங்களின் அரைப்பாகங்களோடு நான்கு பாகங்களையும் சேர்க்கவே,

வந்தன தூல பூதம் = தூலமான பூதங்கள் உண்டாயின.

மகாபூதம் இவற்றி னின்றும்‌ = (பஞ்சீகிருத) மஹாபூதங்களான இவற்றிலிருந்தும், 

அண்ட புவன போகம் தூல தனு நான்காம்

தந்தன = (இந்திரியங்களின் விஷயமான தூலப்) பிரமாண்டமும், (பிரமாண்டத்தின் உள்ளே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் என்னும் மேலேழு புவனங்களும், அதலம், விதலம், சுதலம் தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் என்னும் கீழேழும் ஆகிய பதினான்கு) புவனங்களும், (ஜீவர்களின் போக்கியத்திற்கு யோக்கியமான அந்நாதி) போக விஷயங்களும், (போகத்திற்கு ஸ்தானமான சராயுஜம், அண்டஜம், சுவேதஜம், உத்பிஜம் என்னும்) நால்வகைப் பிறப்பாகிய (தேவர், மனிதர், பசுவாதிய) தூலசரீரங்களும் (ஈசுரனால்) படைக்கப்பட்டன.


சராயுஜம் = கருப்பையிலிருந்து தோன்றக்கூடிய மனிதன் முதலான உயிரினங்கள்.


அண்டஜம் =முட்டையிலிருந்து தோன்றக்கூடிய கோழி முதலான உயிரினங்கள்.


ச்வேதஜம் = வியர்வை அழுக்கு முதலானவைகள் இருந்து உண்டாகக்கூடிய கிருமிகள் முதலானவை


உத்பிஜம் = பூமியை பிளந்து கொண்டு உண்டாகக்கூடிய தாவரங்கள்.


பாடல் : 35

தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும், தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும், தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை, தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.


பொருள்:

சொல்லிய தூலமே மருவும் சீவன் விசுவ னாகும் = முன்னே சொல்லியது போல தூல உடலில் பொருந்திய ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயராகும், 

தூலமே மருவும் ஈசன் சொலும் விராட்புருடன் ஆகும் = அந்த (ஸமஸ்டி) ஸ்தூலசரீரத்தில் பொருந்தும் ஈச்வரனுக்கு விராட் புருஷன் என்று பெயராகும்.

தூலமே அன்ன கோசம் = தூல உடலே அன்னமய கோசம் ஆகும்.

துன்னும் சாக்கிர அவத்தை = இந்த தூல உடலே எல்லா இந்திரியங்களும் செயல்படும் விழிப்பு நிலைக்கு இடம் ஆகும், தூல கற்பனை ஈது என்று = தூல பிரபஞ்ச ஆரோபம் இதுவாகுமென்று,

தொகுத்தது மனத்திற் கொள்வாய் = நாம் சுருக்கமாகக் கூறியதை உன் மனதில் நிலைநிறுத்திக் கொள்வாயாக.


பாடல் : 36

சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல், ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால், காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன், வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே.


பொருள்:

சீரிய ஈசனார்க்கும் சீவர்க்கும் = சிறந்த ஈச்வரருக்கும் ஜீவர்களுக்கும் 

உபாதி ஒன்றேல் =

(தூல, ஸூக்ஷ்ம) உபாதி ஒன்றானால், 

ஆரிய குருவே = ஸத்குருவே,

பேதம் அறிவதெப்படி என்றக்கால் = வேறுபாடு எப்படி அறிவது என்று கேட்டால், 

காரிய உபாதி சீவன் = காரிய (அவித்யா) உபாதியை உடையவன் ஜீவன்,

காரண உபாதி ஈசன் = காரண (மாயா) உபாதியை உடையவன் ஈச்வரன், 

வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே = (இருவரும்) மகத்துவமிக்க ஸமஷ்டியினாலும் வியஷ்டியினாலும் பேதம்(வேற்றுமை) உடையவர் என்று அறிந்துகொள்வாயாக.


பாடல்: 37

மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம், சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார், பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார், இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.


பொருள்:

மரங்கள் போல் வியட்டி பேதம் = வியஷ்டி பேதம் என்பது மரங்கள் என்பது போலாகும்,

வனமெனல் சமட்டி பேதம் = சமஷ்டி பேதம் என்பது வனம் என்பது போலாகும், 

சரங்கள் தாவரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார் = நகர்கின்ற உயிர்கள், நகராத செடிகொடிகள் என வேறுபட்டு தனித்தனியே இருக்கும் உடல்களை வியஷ்டி என்று சொல்லுவர், 

பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார் = பரவி இருக்கின்ற அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் காண்பதை ஸமஷ்டி என்று சொல்லுவர் (அறிஞர்),

இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே = அவித்தையினால் பலவிதமாக வேறுபட்டு இருக்கின்ற ஜீவர்களுக்கும் ஈச்வரனுக்கும் வேறுபாடு இதுவே.


பாடல் : 38

கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம், சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான், செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல, அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய்.


பொருள்:

கற்பனை வந்தவாறு காட்டினோம் = அத்யாரோபம் உண்டான வழியை அறிவித்தோம்.

காண்ப எல்லாம் = அஹங்காரம் முதலாக பிரபஞ்சம் அனைத்தும்,

சொற்பனம் போலும் என்றே = கனவு உலகம் போல (உண்மையில் இல்லாதது) என்று,

துணிந்தவன் ஞானி ஆவான் = சந்தேகமின்றி அறிந்தவனே ஞானி ஆவான்,

செற்புதை மழைக்காலம் போய் = மேகம் நெருங்கிய மழைக்காலம் போனபிறகு, 

தெளிந்த ஆகாசம் போல = மேகங்கள் இன்றித் தெளிவாகத் தோன்றும் ஆகாயம் போல,

அற்புத முத்தி சேரும் = எல்லா துன்பங்களும் நீங்கி ஒப்புயர்வற்ற ஆனந்த ரூபமான மோக்ஷத்தை அடையக் காரணம் ஆகும்,

அபவாத வழியும் கேளாய் = கற்பனையை நீக்குகின்ற வழியைக் கேட்பாயாக.


பாடல் : 39

அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல்,

குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு,

புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத்,

திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண்.


பொருள்:

அரவு அன்று கயிறு என்றாற்போல் = இது பாம்பு அல்ல கயிறுதான் என்று தெளிவது போலவும்,

ஆள் அன்று தறி என்றாற்போல் = இது மனிதன் அல்ல கட்டைதான் என்று தெளிவது போலவும்,

குரவன்சொல் உபதே சத்தால் = குரு உபதேசித்த உபதேசத்தின் தெளிவினாலும், 

கூறுநூல் ஒளியைக் கொண்டு = (அந்த குரு உபதேசத்திற்கு எடுத்துக்கொண்ட) வேதாந்த நூல்களின் விவேகத்தைக் கொண்டும்,

புரம் அன்று புவனம் அன்று பூதங்கள் அன்று = இது உடல் அல்ல, இது உலகம் அல்ல, இது பஞ்சபூதங்கள் அல்ல (இவை உண்மைப் பொருளல்ல),

திரஞானம் என்னும் பிரமம் என்று = ஸ்திரமான ஸ்வரூப ஞானம் என்னும் ப்ரஹ்மம் என்று, 

தெளிவதே அபவாதம் காண் = ஐயம் இன்றி நிச்சயமாகத் தெரிந்து கொள்வதே அபவாதம் என்று அறிந்து கொள்வாயாக.


பாடல் : 40

படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின், கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள்,

உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே, அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.


பொருள்:

காரிய காரணங்கள் = காரியத்தையும் (உலகத்தையும்) காரணத்தையும் (ப்ரஹ்மத்தையும்),

பார்க்கில் = (ச்ருதி, யுக்தி, அநுபவங்களால்) ஆராய்ந்து பார்க்குமிடத்து,

படமும் நூலும் போல் = காரியமான துணியையும் காரணமான நூலையும் போலவும்,

செய்த பணியும் பொன் னும் போல் = காரியமான நகையையும் அதன் காரணமான பொன்னையும் போலவும், கடமும் மண்ணும் போல் = காரியமான பானையையும் அதன் காரணமாக மண்ணையும் போலவும்,

ஒன்றாம் = ஒன்றுக்கொன்று வேறுபடாத ஒரே பொருளாகும்,

உடல்முதல் சுபாவம் ஈறா = தூல உடல் முதல் அவித்தை முடிவாக, ஒன்றில் ஒன்றுதித்த ஆறே = ஒன்றிலிருந்து ஒன்று தோன்றிய படியே, அடைவினில் ஒடுக்கிக் காண்பது = முறையே ஒடுக்கிப் பார்ப்பது,

அபவாத உபாயம் ஆமே = அபவாத வழி ஆகும்.


காரணம் ஸத்யம், காரியம் மித்யா.
காரணம் ஒன்று, காரியம் பல. 
காரணம் நித்தியம் காரியம் அநித்தியம்.
காரணம் நிரவயவம் காரியம் ஸாவயவம்.
காரணம் நிர்விகாரம், காரியம் ஸவிகாரம்.

காரணம் ஸ்வதந்திரம் காரியம் பரதந்திரம்.