Aug 21, 2022

Kaivalya Navaneetham 2(121 - 180)

கைவல்ய நவநீதம்


ஸந்தேஹம் தெளிதல் படலம்



பாடல் : 121
மானஞ்சி றந்தகுரு நாதனே ஆநந்த
வகைகளெத் தனை என்னிலோ
ஞானந்தி கழ்ந்தபிர மாநந்தம் வாசனா
நந்தம்விட யாநந்தமென்று
ஆநந்தம் மூன்றுவிதம் எட்டுவகை என்பர்சிலர்
அவ்வைந்தும் இதிலடக்கம்
ஆனந்த வகைசொலக் கேள்மைந்த னேயெட்டும்
இஃதின்ன தின்னதெனவே.


பொருள் :

மானம் சிறந்த குருநாதனே = பெருமை மிகுந்த குருநாதனே,  

ஆநந்த வகைகள் எத்தனை என்னிலோ = ஆநந்தத்தின் வேறுபாடுகள் எத்தனை என்று கேட்பாயாகில்,

ஞானம் திகழ்ந்த பிரமாநந்தம் = சித்ஸ்வரூபமான பிரஹ்மாநந்தம்,

வாசனாநந்தம் = சும்மாயிருக்கும்பொழுது வெளிப்படும் வாசனாநந்தம்,

விடயாநந்தம் = விஷயங்களை அநுபவிக்கும் பொழுது மனதில் ஏற்படும் விஷயாநந்தம்,

என்று ஆநந்தம் மூன்று விதம் = என ஆநந்தம் மூன்று வகையாகும்.

எட்டு வகை என்பர் சிலர் = ஆநந்தத்தை எட்டு விதம் என்று சொல்வார்கள் சில அறிஞர்கள்,

அவ்வைந்தும் இதில் அடக்கம் = அவர்கள் கூறும் ஏனைய ஐந்து ஆநந்தங்களும் இந்த மூன்று ஆநந்தங்களுள் அடங்கும்.

எட்டும் இஃது இன்னது இன்னது எனவே = எட்டினையும் இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது, இந்த ஆநந்தம் இந்தப் பெயருடையது என,

ஆனந்த வகை சொலக் கேள் = என ஆநந்தத்தின் பிரிவுகளைச் சொல்கிறேன் கேட்பாயாக,

மைந்தனே = மகனே!


பாடல் : 122
போகத்தில் வருசுகம் விடயசுகம் நித்திரைப்
போதுளது பிரமசுகமாம் 
மோகத்த னந்தலில் சுகம்வாச னைச்சுகம்
முழுப்பிரிய மான்மசுகமாம்
யோகத்தில் உளதுமுக் கியசுகம் உதாசீனம்
உற்றசுகம் நிசசுகமதாம்
ஏகத்தை நோக்கலத் துவிதசுகம் வாக்கியம்
எழுந்தசுகம் ஞானசுகமே.


பொருள் :

போகத்தில் வருசுகம் விடயசுகம் = (விரும்பிய விஷயங்களை) அனுபவிக்கும்போது (ஆசை நீங்கினமையால் அமைதியடைந்த) மனதில் பிரதிபிம்பமாகும் இன்பம் (ஆத்மாநந்தம்) விஷயாநந்தமாகும்.

நித்திரைப் போது உளது பிரமசுகமாம் = ஆழ்ந்த உறக்க காலத்தில் வெளிப்படும் இன்பம் பிரஹ்மாநந்தமாகும்.

மோகத்து அனந்தலில் சுகம் வாசனைச் சுகம் = மயக்கத்தை உடைய உறக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது (உறக்கத்தில் அனுபவித்த பிரஹ்மாநந்தத்தின் வாஸனை சிறிது காலம் தொடர்ந்திருப்பதால்) ஏற்படும் இன்பம் வாஸனாநந்தமாகும்.

முழுப்பிரியம் ஆன்மசுகமாம் = (பிரியத்துக்குரிய பொருட்களுள் தானே அதிகப்பிரியத்துக்குரியவன் எனும் விவேகத்தால் தன்னிடத்தில் ஏற்படும்) முழுமையான இன்பம் ஆத்மாநந்தமாகும்.

யோகத்தில் உளது முக்கிய சுகம் = ஶமாதியில் ஏற்படும் இன்பம் முக்யாநந்தமாகும்.

உதாசீனம் உற்ற சுகம் நிச சுகம் அது ஆம் = (எதன் மீதும் விருப்பு வெறுப்பற்ற) உதாசீன நிலையில் மனதில் உள்ள இன்பம் நிஜாநந்தமாகும்.

ஏகத்தை நோக்கல் அத்துவித சுகம் = ( இருமைமயமான உலகத்தை மித்யா என்று விலக்கிவிட்டு) ஒன்றேயான ஆத்மாவை எப்பொழுது சிந்தித்திருப்பது அத்வைத ஆனந்தமாகும்.

வாக்கியம் எழுந்த சுகம் ஞான சுகமே = மஹாவாக்கிய விசாரத்தால் (ஐயமற்ற தெளிந்த ஞானத்தால்) மனதில் தோன்றும் இன்பம் வித்யாநந்தமாகும்.


பாடல்: 123
இவ்வா றுரைசெயும் சுகபே தங்களின் இயல்பாம்
அவைசொல மகனேகேள்,
ஒவ்வா நனவினில் உழல்வா னிடர்கெட வுறங்கும் 
சயனம துறுநேரம்,
செவ்வா மனமக முகமாம் அதில்ஒளிர் சித்தின்
சுகநிழல் சேரும்காண்,
அவ்வா றிவனுள மகிழ்வாம் அநுபவ மதுதான்
விஷயசு காநந்தம்.


பொருள் :

இவ்வாறு உரை செயும் = இந்தப்படியாக (பஞ்சதசி முதலான வேதாந்த நூல்களில்) விவரிக்கப்படும்,

சுக பேதங்களின் = ஆநந்த வேறுபாடுகளின்,

இயல்பு ஆம் அவை சொல = ஸ்வரூபங்களை நாம் கூற,

மகனே கேள் = மைந்தனே கேட்பாயாக!

நனவினில் உழல்வான் = விழிப்பு நிலையினில் விவகாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவனானவன்,

ஒவ்வா இடர் கெட = ஸஹிக்க முடியாத துன்பங்கள் நீங்குவதற்காக,

உறங்கும் சயனம் அது உறுநேரம் = உறங்குவதற்கு உதவியான மென்மையான மெத்தை முதலியவற்றில் தூங்கும் நேரத்தில்,

செவ்வா மனம் அக முகமாம் = செவ்வையான அவனது மனமானது உள்முகம் ஆகும்,

அதில் = அவ்வாறு உள்முகமான மனவிருத்தியில்,

ஒளிர் சித்தின் சுகநிழல் = சுயமாக விளங்கும் ஆத்ம சைதந்யத்தின் ஆநந்தப் பிரதிபிம்பமானது,

சேரும் காண் = ஏற்படும் என்றறிவாயாக,

அவ்வாறு = இப்படி,

இவன் உளம் = மனிதனுடைய மனோவிருத்தியில் (எண்ணத்தில்),

மகிழ்வாம் அநுபவம் அது தான் = தோன்றும் இன்ப அனுபவம்தான்,

விஷய சுக ஆநந்தம் = விஷய சுகமான ஆநந்தமாகும்.


பாடல்: 124
ஈனந் தருசுக விடயந் திரிபுடி இடரா
மெனமன மசையாமல்,
சேனந் தனதுகு லாயந் தனில் விழு செயல்போல்
நித்திரை செறிசீவன்,
தானந் தமில்பர னுடனொன் றுவனொரு தனையல் 
லதுபிற நினையாமல்,
ஆநந் தமயனு மாவன் சுகமிகு மதுதா
னுயர்பிர மாநந்தம்.


பொருள் :

ஈனம் தரு விடய சுகம் = இழிவைத் தரும் விஷய சுகமானது,

திரிபுடி இடராம் என = அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கப்படும் பொருள் எனும் திரிபுடி துன்பம் தரும் என நினைத்து,

மனம் அசையாமல் = (அத்திரிபுடியால் உண்டாகும் துன்ப நீக்கத்தின் பொருட்டு) மனம் அசையாமல்,

நித்திரை செறி சீவன் = உறங்கும் அந்த ஜீவன்,

அந்தம் இல் பரனுடன் ஒன்றுவன் = ஆநந்தரூபமான ப்ரஹ்மத்தோடு ஐக்கியமாவான்,

ஒரு தனை அல்லது = அத்வைதமான தன்னையல்லாமல்,

பிற நினையாமல் = வேறொன்றையும் எண்ணாமல்,

ஆநந்தமயனும் ஆவன் = அவன் ஆநந்தரூபன் ஆவன்.

மிகுசுகம் அதுதான் = மிகுந்த ஆருந்தமாகிய அதுவே,

உயர் பிரமாநந்தம் = மேலான பிரஹ்மாநந்தம் ஆகும்,

சேனம் = பருந்தானது,

தனது குலாயம் தனில் விழு செயல் போல் = தனது கூட்டில் சென்று சேர்வது போல.


பாடல் : 125
தூங்குஞ் சுகமது பிரமச் சுகமெனல் சுருதிப்
பொருள்விழி துயில்வோர்கள்,
தாங்கும் மலரணை நன்றா கச்சிலர்
சம்பா திப்பது தானூகம்,
தீங்குந் நன்மையு மாண்பெண் முறைமையும் தெரியா(து) 
அமளிசெய் பொழுதேபோல், 
ஆங்குள் வெளிகளு மறியா வநுபவ மதனால் 
அதுபிர மாநந்தம்.


பொருள் :

தூங்கும் சுகம் அது = உறங்கும் வேளையில் (எல்லா உலகங்களும் ஒருங்கி தமப்பிரதான அவித்யையால் மறைக்கப்பட்ட நிலையில்) வெளிப்படும் இன்பமானது,

பிரமச் சுகம் எனல் = ப்ரஹ்மாநந்தம் என்று சொல்லுதல்,

சுருதிப் பொருள் = ஶ்ருதிகளின் கருத்தாகும்.

விழி துயில்வோர்கள் சிலர் = கண்மூடித் தூங்குபவருள்ளே சில பேர்கள்,

தாங்கும் மலரணை = (உடல் வலி ஏற்பட்டு தூக்கம் தடைப்படாமல்) காக்கும் (மென்மையான, மலர்ப்படுக்கைகளை,

நன்றாகச் சம்பாதிப்பது தான் ஊகம் = நன்றாக உழைத்துப் பொருள் சேர்ப்பது தான் (உறக்கத்தில் ப்ரஹ்மாநந்தம் உண்டென்பதற்கு) அநுமானம் ஆகும்,

தீங்கும் நன்மையும் = கெட்டதும் நல்லதும் (அறியாமல்),

ஆண் பெண் முறைமையும் தெரியாது = நான் ஆண், நான் பெண் போன்ற ஒழுங்கும் சிறிதும் அறியாமல்,

அமளி செய் பொழுதே போல் = (விழிப்பில்) விரும்பியதை அடைந்து அனுபவிக்கும் காலத்தில் வெளிப்படும் ஆநந்தம் போல,

ஆங்கு = ஆழ்ந்த உறக்கத்தில்,

உள் வெளிகளும் அறியா = (ப்ராஜ்ஞனானவன் பரமாத்மாவுடன் ஒருமையடைந்து) அகம் புறம் என்ற பாகுபாடுகள் எதுவும் தெரியாமல்,

அநுபவம் = (ஆநந்தமூர்த்தியாகவே) இருப்பது அனுபவமாகும்.

அதனால் = இப்படி ஶ்ருதி, யுக்தி, அநுபவம் உள்ளது ஆகையால்,

அது பிரமாநந்தம் = ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஆநந்தம் ப்ரஹ்மாநந்தம் ஆகும்.


பாடல் : 126
உதவும் புவியினி லொருவன் னநுபவ மொருவன்
மனதினி லுதியாதே,
மதியுங் கெடுகிற துயில்கொண் டாநந்த மயனன் 
றோசுக முறுகின் றான்,
இதுவிஞ் ஞாந மயனாஞ் சிந்தையி னினைவாய்
வந்திட லழகன்றே,
சுதைவிண் ணோர்புகழ் குருவே நீரிது சொல்லீர்
சகலமும் வல்வீரே.


பொருள் :

உதவும் புவியினில் = (அனைவருக்கும் அனைத்தையும் விதிப்பட கொடுத்து) உதவுகின்ற இப்பூமியில்,

ஒருவன் அநுபவம் = ஒரு மனிதனின் அநுபவமானது,

ஒருவன் மனதினில் உதியாதே = இன்னொரு மனிதனின் மனதில் (நினைவாகத்) தோன்றாது,

மதியும் கெடுகிற துயில் கொண்டு = (மனோமய கோசத்தோடு, விஜ்ஞான மன கோசமும் ஒடுங்குகிற தூக்கத்தில்,

ஆநந்த மயன் அன்றோ சுகம் உறுகின்றான் = ஆநந்த மயன் அல்லவா சுகத்தை அனுபவிக்கிறான், 

இது = இந்த அனுபவம்,

விஞ்ஞாநமயனாம் = விஞ்ஞானமயனாகும் கர்த்தாவின்,

சிந்தையினில் = கரண ரூபமாகும் மனதில்,

நினைவாய் வந்திடல் அழகு அன்றே = நினைவாக வருதல் அழகு அல்லவே!,

சுதை விண்ணோர் புகழ் குருவே = அமிர்தம் பருகி மூப்பு மரணமில்லாமல் வாழும் தேவர்களாலும் புகழப்படுகின்ற பெருமையுடைய குருநாதரே,

நீர் = நீங்கள்

சகலமும் வல்லீர் = அனைத்து ஐயங்களையும் தெளிவுபடுத்தும் வல்லமையுள்ளவர் ஆதலால்,

இது சொல்லீர் = இந்த ஸந்தேஹத்திற்கும் ஸமாதானம் சொல்வீராக!


பாடல் : 127

நெய்யும் வெண்ணெயு மிருபேர் களுமறி நினைவில்

பிறிவறி வினிலில்லை,

செய்யுந் நனவினி லிறுகும் மனதோடு சேரும்

சிந்மய விஞ்ஞானன்,

நையுந் துயர்மன நழுவும் பொழுதுணர் ஞானச்

சுகமுணு மாநந்தன்,

பெய்யுந் துளிகளு நீருங் குள மொடு பாகும்

போலிவர் பிறிவன்றே.


பொருள் :

நெய்யும் வெண்ணெயும் = நெய்யும், வெண்ணெயும் (உருவத்தில் வேறு, அடிப்படையில் ஒன்று என்பது போல)

இருபேர்களும் = ஆநந்தமயன், விஞ்ஞானமயன் என்னும் இருவரும்,

நினைவில் பிறிவு அறிவினில் இல்லை = அவித்யை, , அந்தக்கரண விருத்தி (ரூப உபாதி திருஷ்டி) யினால் வேறு, (பிரதிபிம்ப, பிம்ப - சேதன - ரூப) திருஷ்டியினால் பிரிவில்லை,

செய்யுந் நனவினில் = (போகத்தைக் கொடுக்கும் வினைப்பயனின் தூண்டுதல் காரணமாக) பலவித கர்மங்களையும் செய்யும் விழிப்பு நிலையில்,

இறுகும் மனதோடு சேரும் = ஸ்தூலமாக இருக்கும் அந்தக்கரண  உபாதியோடு கூடி இருக்கும்,

சிந்மய விஞ்ஞானன் = சிந்மயனான விஞ்ஞானமயன் என்னும் ஆத்மா,

நையும்  துயர் மனம் = வருந்தும் துன்ப காரணமான மனமானது, 

நழுவும் பொழுது = ( போகத்தைக் கொடுக்கும் கர்மத்தின் முடிவின் காரணமாக) தூக்கத்தில் ஒடுங்கும்பொழுது,

உணர் ஞானச் சுகம் உணும் ஆநந்தன் = (புலன்கள் இன்றியே அஞ்ஞானத்தை) அறியும் (பிரகாசிக்கும்) சித்தின் ஆனந்தத்தை (ஸ்வரூப ஆனந்தத்தை) அநுபவிக்கும் ஆத்மா ஆனந்தமயன் என்று சொல்லப்படுவான்.

(ஆதலால்)

பெய்யும் துளிகளும் நீரும் = (வானின்று) கொட்டும் மழைத்துளிகளும் (பூமியிலுள்ள) நீரும்,

குளமொடு பாகும் போல் = வெல்லமும் பாகும் போல,

இவர் பிறிவு அன்று = விஞ்ஞானமயனும் ஆனந்தமயனும் வேறு வேறு இல்லை.


இக்காரணத்தால் ஆநந்தமயனின் அனுபவஸ்மரணம் (நினைவு) விஞ்ஞானமயனுக்கு உண்டாவது பிழையில்லை.


தன் இயற்கை வடிவான இன்பத்தை, சிதாபாஸத்தோடு கூடிய அஞ்ஞானத்திலிருந்து தோன்றி, சுகம் முதலானவைகளை விஷயமாக உடைய ஸத்துவ குணத்தின் பரிணாமமான விஷேச ரூப விருத்தியால் அனுபவிக்கிறான்.


பாடல் : 128

ஒன்றா கியபிர மாநந் தச்சுக மொழிவா

னேன்வெளி வருவானேன்,

என்றான் முன்செய்த கருமம் வெளியினி லிழுக்கும்

சுழுத்தி விட் டெழுந்தோனும்,

நன்றா யினசுக மகலான் வெளியிலு நடவான்

மறதியும் பெறமாட்டான்,

அன்றா மெனவிருந் துறங்குஞ் சிலகண மதுவே

வாதனை யாநந்தம்.


பொருள் :

ஒன்றாகிய பிரமாநந்தச் சுகம் = (ஆனந்தமயனாகிய ஜீவனானவன்) ஒன்றேயான ப்ரஹ்மாநந்த சுகத்தை,

ஒழிவான் ஏன் = விடுவதற்குக் காரணம் என்ன?

வெளி வருவான் ஏன் = வெளியே (விழிப்பிற்கு) வருவதற்கான காரணம் என்ன?

என்றால் = என்று கேட்பாயாகில்,

முன் செய்த கருமம் = முன்பிறவிகளில் செய்த (தற்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கும் - பிராரப்தமான) புண்ய பாப வினைப்பயன்,

வெளியினில் இழுக்கும் = (பிரஹ்மானந்தத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜீவனை) வெளியில் நனவு முதலான நிலைகளுக்கு இழுத்துக்கொண்டு வரும்.

சுழுத்தி விட்டு எழுந்தோனும் = தூக்கத்திலிருந்து எழுந்த மனிதனும்,

சிலகணம் = சிறிது நேரம்,

நன்றாயின சுகம் அகலான் = (தூக்கத்தில் அனுபவித்த) பிரஹ்மாநந்தின் வாசனையை விடாது இருக்கின்றான், 

வெளியிலும் நடவான் = மனதை புறவிஷயங்களில் செலுத்தவும் மாட்டான்,

மறதியும் பெறமாட்டான் = அகத்தே அனுபவித்த ஆநந்தத்தையும் விடாமல் இருப்பான்.

அன்று ஆம் என = தூக்கமும் அன்று தூக்கம் தான், விழிப்பும் அன்று, விழிப்பு தான் என்று கூறும்படியாக,

இருந்து உறங்கும் = சிறிது நேரம் அவ்வாறிருந்து உறங்கும்,

அதுவே வாதனை ஆநந்தம் = அதுவே வாஸனாநந்தம் ஆகும்.


பாடல்: 129

அந்தக் கணமுட லகமென் றிடர்களில் அலைந்தே

சுகந்தனை மறந்தேபோம்,

முந்தைச் செயும் வினை சுகதுக் கந்தரு மோனந்

தருநடு வடிவேகாண்,

எந்தப் புருடனு மொருசிந் தையுமற விருந் தேன்

எனலநு பவமாகும்,

இந்தப் படிதனு தாசீ னச்சுக மிதுவே

நிசமெனு மாநந்தம்.


பொருள் :

அந்தக் கணம் = வாஸனாநத்தத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் அந்த க்ஷணத்தில்,

உடல் அகம் என்று = உடல் நான் என்று (அபிமானம் வர) 

இடர்களில் அலைந்தே = பல வேறுபட்ட துன்பங்களில் (விஷய சிந்தனைகளில்) மனம் அலைந்து,

சுகந்தனை மறந்தே போம் = அநுபவித்த ப்ரஹ்மாநந்தை மறந்துபோய்விடும்.

முந்தைச் செயும் வினை = முந்திய பிறவிகளில் செய்த புண்ய பாப வினைகள்,

சுக துக்கம் தரும் = இன்பதுன்பங்களைக் கொடுக்கும்.

நடு வடிவே மோனம் தரும் = இன்பதுன்பங்களின் இடைநிலையே தூஷ்ணீம் (மௌன) நிலையாகும்.

காண்,

எந்தப் புருடனும் = எந்த மனிதனும்,

ஒரு சிந்தையும் அற இருந்தேன் எனல் = யாதொரு சிந்தனையும் இல்லாமல் சுகமாக இருந்தேன் என்று சொல்வது,

எனல் அநுபவம் ஆகும் = அனுபவம் ஆகும்.

இந்தப்படி தன் உதாசீனச் சுகம் இதுவே = இப்படி தன் மனதின் உதாசீன நிலையில் ஏற்படும் இன்பம்,

நிசம் எனும் ஆநந்தம் = நிஜானந்தம் ஆகும்.


நிஜாநந்தம் என்பது வாஸனாநந்தமே. அது விழிப்பு நிலையிலும் வெளிப்படும் என்பது அறியத்தக்கது. ப்ரஹ்மாநந்தத்திலிருந்து அதை வேறுபடுத்திச் சொல்வதற்குக் காரணம் ஸாமான்ய அஹங்காரம் கலந்திருப்பதால். அடுத்த பாடலில் அது விவரிக்கப்படுகிறது.


பாடல் : 130

நிசமா னதுமுக் கியமோ குடத்துள நீரன்

றேவெளி யீரந்தான்,

வசமா வகங்கர மறைந்தா னிசமது படிந்தான்

முக்கிய வகையாகும்,

திசையார் திரிசய மறியா தேதுயில் செறியா

தேயுட (ற்)றறிபோல,

அசையா தேமதி சமமா கியநிலை யதுதான்

முக்கிய வாநந்தம்.


பொருள் :

அகங்கர வசமா மறைந்தால் = (தான் இன்னார் என்பது முதலான சிறப்புக்களோடு கூடாமல் நான் இருக்கிறேன் என்பது மாத்திரமான) ஸாமான்ய அஹங்காரத்தால் ப்ரஹ்மாநந்தம் மறைப்புறுவதால்,

நிசம் = அந்த உதாஸீன நிலையில் தோன்றும் சுகம் நிஜாநந்தம் ஆகும்.

நிஜமானது முக்கியமோ = இந்த நிஜானந்தமானது முக்யானந்தமா? (இல்லை)

(முக்யாநந்தத்திற்கு வேறாக வாஸனாநந்தம் உண்டென்பதற்கு உதாரணம் கூறப்படுகிறது)

வெளி ஈரம் தான் = தண்ணீரால் நிரம்பியுள்ள குடத்தின் வெளிப்புரம் தோன்றும் குளிர்ந்த தன்மை,

குடத்துள நீர் அன்றே = அக்குடத்தின் உள்ளே உள்ள நீர் அல்லவே.

(அது தண்ணீரின் குணமாகும். அதனால் உள்ளே நீர் உள்ளது என்பது அனுமானத்தால்அறியப்படுகிறது. அது போல வாஸனாநந்தத்தால் முக்யாநந்தம் அனுமானமாக அறியப்படுகிறது.)

அது படிந்தான் = அந்த அஹங்காரமும் (நிரோத சமாதியின் பயிற்சியினால்) நீங்கினால், (மனதின் ஸூக்ஷ்மத்தன்மையின் மிகுதியால்)

முக்கிய வகையாகும் =  முக்கிய நிஜாநந்தம் வெளியாகும்,

(மனதின் ஸுஷ்மத்தன்மையின் எல்லை கூறப்படுகிறது)

மதி = மனமானது,

திசையார் திரிசயம் அறியாதே = எல்லா திசைகளில் நிறைந்துள்ள காட்சிப் பொருட்களை அறியாமல் (மறந்து),

துயில் செறியாதே = தூக்கத்தையும் அடையாமல்,

உடல் தறி போல அசையாதே = உடம்பு கம்பம் போல அசையாமல் இருக்க (பூமியில் விழாமல் நிற்க),

சமம் ஆகிய நிலையதுதான் = ப்ரஹ்மாகாரமான அந்நிலையே (அந்நிலையில் வெளிப்படுவதே),

முக்கியாநந்தம் = முக்யாநந்தமாகும்.



பாடல் : 131

மநுடன் மநுடகந் தருவன் தேவநன் மாகந்

தருவனொண் பிதிரோடே,

பனுமா ஜானர்கள் கருமத் தேவர்கள் பகர்முக்

கியரிந் திரனாசான்,

கனமார் பிரஜா பதியென் விராட்டுபொன் கர்ப்பப்

பிரமனென் றின்னோர்கள்,

பினவா நந்தங்க ணுரையாம் பிரளய வெள்ளக்

கடல்பிர மாநந்தம்.


பொருள் :

மநுடன் = சார்வபௌமன்,

மநுடகந்தருவன்,

தேவ நன் மாகந்தருவன்,

ஒண் பிதிரோடே = ஒள்ளிய பிதிர்களோடு,

பனும் ஆஜானர்கள் = பிதிர்களுக்கு மேலாகச் சொல்லப்பட்ட ஆஜானர்கள்,

கருமத் தேவர்கள்,

பகர் முக்கியர் = கர்மத் தேவர்களுக்கு மேலாகச் சொல்லும் (யமன், அக்னி முதலிய) முக்யத் தேவர்கள்,

இந்திரன் = (இவர்களுக்கு இறைவனாகிய) இந்திரன்,

ஆசான் = ( ப்ருஹஸ்பதி எனும்) தேவகுரு,

கனமார் பிரஜாபதி என் விராட்டு = கனம் பொருந்திய பிரஜாபதி என்னும் பெயருடைய விராட்டு,

பொன் கர்ப்பப் பிரமன் = ஹிரண்யகர்ப்பன் என்னும் பெயருடைய பிரம்மா,

என்ற இன்னோர்கள் = என்று தைத்திரிய ஶ்ருதியில் கூறப்பட்ட இப்பதினொரு பேர்களுடைய,

பின ஆநந்தங்கள் = (மேன்மேல் நூறு பங்கு) அதிகமான ஆநந்தங்கள்,

நுரையாம்  = (கடலில் தோன்றும்) நுரை போல அற்பமாம்,

பிரளய வெள்ளக் கடல் பிரமாநந்தம் = பிரளய காலத்தில் தோன்றும் பெருங்கடல் போன்றது ப்ரஹ்மாநந்தம் ஆகும்.


(I) மனுடன் யௌவனனாய்,ரூபவானாய், வித்தை, அரோகம், திடசித்தமென் பவற்றை யுடையவனாய், சேனா சமுகங்களுடன் கூடிச் சர்வப் பிருதிவியை யும் பரிபாலனஞ் செய்பவன் சார்வ பெளமனாவன். மனித சுகத்திற்கு முடிவு இவனிடத்தேயாம்.


(2) இந்தக் கல்பத்திலே மனிதனாயிருந்து புண்ணிய விசேஷத்தால் கந்தர்வ பதம் அடைந்தவன் மனுட கந்தருவன் ஆவன். "இவன் சார்வபௌமனி லும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவனாவன்.


(8) முன்கல்பத்தில் செய்த புண்ணிய விசேஷத்தால் இக்கல்பத்தின் ஆதியிலேயே கந்தர்வத் தன்மை அடைந்தவன் தேவகந்தருவன் ஆவன். இவன் மனுட கந்தருவனிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவனாவன்.


(4) தமதுலகின்கண் வெகுகால அளவு வசிக்கின்ற அக்கினிஷ்வாத்தர் முதலியோர் பிதிரர் ஆவர். இவர் தேவ கந்தருவனிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(5) கல்பத்தின் ஆதியிலேயே தேவத்தன்மையை அடைந்தவர் ஆஜானதேவர் ஆவர். இவர் பிதிரரிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(6) இந்தக் கல்பத்தில் அசுவமேதாதி கருமங்களைச் செய்து, மகத் பதத்தையடைந்து, ஆஜானதேவரால் சேவிக்கப்பட்டிருப்பவர் கருமதேவர் ஆவர். இவர் ஆஜான தேவரிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(7) அஷ்டவசுக்கள், துவாதச ஆதித்தியர், ஏகாதச ருத்திரர் என்னும் இம்முப்பத்தொருவரும் முக்கியத்தேவர் ஆவர். இவர் கருமதேவரிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(8) தேவராஜன் - இந்திரன். இவன் முக்கியதேவரிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவனாவன்.


(9) தேவகுரு - பிருகஸ்பதி. இவர் இந்திரனிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(10) பிரஜாபதி - விராட்டு. இவர் பிருகஸ்பதியிலும் நூறுபங்கு அதிகமான சுகமுடையவராவர்.


(11) இரணியகருப்பன் - பிரமதேவர். இவர் பிரஜாபதியிலும் நூறு

பங்கு அதிக சுகமுடையவராவர்.


பாடல் 132 :

எவனா கிலுமிந்தத் துரியா தீதத்தி லேழாம்

பூமியி லிருந்தானேல்,

அவனா ரதன்சுகன் சிவன் மா லயன்முத லறிவோர்

அநுபவ சுகபோதம்,

விவகா ரதிர்சய மிதுவே யநுபவ மெனமுன்

சொல்லிய விவகாரி,

உவமா னமுமறி மகனே யவ னடி யுதிரும்

பொடிகளென் முடிமேலே.


பொருள்:

எவன் ஆகிலும் = யாரானாலும்,

இந்தத் துரியா தீதத்தில் ஏழாம் பூமியில் = இந்தத் துரியாதீதம் என்னும் ஏழாவது பூமியில்,

இருந்தானேல் = இருந்தானேயானால்,

அவன் நாரதன் சுகன் சிவன் மால் அயன் முதல் அறிவோர் = அவன் நாரத முனிவர், சுகப் பிரஹ்மரிஷி, சிவ பெருமான், திருமால், ப்ரஹ்மா முதலிய அறிஞர்களுடைய,

அநுபவ சுக போதம் = அனுபவமான ஆநந்த சின்மயமாவன்,

விவகார அதிர்சயம் இதுவே அநுபவம் என = இருமை தோன்றாததும் தூக்கமல்லாததும் ஆன இந்நிலையே முக்கிய நிஜானந்த அனுபவமாம் என்று,

முன் சொல்லிய விவகாரி = முன்னே (130 பாடலில்) சொல்லிய முக்யாநந்த அனுபவிக்கு,

உவமானமும் = அந்நாரதாதியர் உபமானமும் ஆவர்.

அறி மகனே = (என்று) அறிந்து கொள்வாய் மைந்தனே,

அவன் அடி உதிரும் பொடிகள் = அவன் பாதத்திலிருந்து உதிரும் துகள்கள்,

என் முடிமேலே = எனது தலையின் மீது (தாங்கத்தக்கனவாகும்).


பாடல்: 133

இந்தவா றைந்து சுகஞ் சொல்லினோம் வித்தைசுகம்

இனிமேல் சொல்வோம்,

முந்தமா யையுஞ் சச்சி தாநந்தப் பொருளுமே

மொழியும் போதில்,

அந்தமா மத்துவித சுகமாந்ம சுகமிரண்டும்

அங்கே சொன்னோம்,

தொந்தமாற் றியமகனே யின்ன முனக்கு

ஐயமுண்டேல் சொல்லுவாயே.


பொருள்:

இந்தவாறு ஐந்து சுகம் சொல்லினோம் = இப்படி விஷயாநந்தம் (பாடல் 123), ப்ரஹ்மாந்தம் (124 - 127), வாஸனாநந்தம் (128), நிஜாநந்தம் (எனும் இன்னொரு வாஸனாநந்தம்) (129), முக்ய நிஜாநந்தம் (130) எனும் ஐந்து வகை ஆநந்தம் இதுவரை சொல்லினோம்,

வித்தை சுகம் இனி மேல் சொல்வோம் = வித்யாநந்தத்தை இனி (நூலின் முடிவில் 164 - 177) சொல்லுவோம்.

முந்த = முன்னே,

மாயையும் = மாயையைப் பற்றியும்,

சச்சிதாநந்தப் பொருளும் மொழியும் போதில் = ஸத், சித், ஆநந்தம் என்னும் சொற்களின் பொருளைகளையும் கூறும்போது,

அந்தம் ஆம் = ஶ்ருதியின் முடிந்த கருத்தாகிய,

அத்துவித சுகம் ஆந்ம சுகம் இரண்டும் = அத்வைதாநந்தம் ஆத்மாநந்தம் ஆகிய இரண்டையும்,

அங்கே சொன்னோம் = முறையே 95 வது செய்யுள் முதல் 12 செய்யுள்களாலும் (95 - 106), 114 வது செய்யுள் முதல் 7 செய்யுள்களாலும் (114 - 120) கூறினோம்,

தொந்த மாற்றிய மகனே = (ஆத்மஞானத்தினால்) இன்பம் துன்பம் முதலான இருமைகளைப் போக்கிய மைந்தனே,

இன்னம் உனக்கு = இன்னமும் உனக்கு,

ஐயம் உண்டேல் சொல்லுவாயே = ஸந்தேஹம் இருந்தால் கேட்பாயாக!


பாடல் : 134

குகன்றனையு மெனையுமுல கினையுமீன் றளித்தருளுங் குருவே கேளீர்,

புகன்றசச்சி தாநந்தப் பதங்கள்தனித் தனியாகிப் பொருள்வே றானால்,

உகண்டமன முறைப்பதெங்ஙன் பரியாய பதங்களைப்போ லுறவுகாணேன்,

அகண்டமா யொருசுவையாய்த் தேனீக்கூட் டியமதுவா யறிவிப் பீரே.


பொருள் :

குகன்றனையும் = முருகக்கடவுளையும் (ஸகல தேவர்களையும்),

எனையும் = என்னையும் (ஸகல ஜீவர்களையும்),

உலகினையும் = உலகத்தையும் (எல்லா உலகங்களையும்),

ஈன்று அளித்து அருளும் குருவே = படைத்துக்காத்து அருளும் (பரமேஸ்வர ரூபமான) குருநாதரே,

கேளீர் = கேட்பீராக,

புகன்ற சச் சித் ஆநந்தப் பதங்கள் = ( ஆத்மாவின் ஸ்வரூபமாக) முன்னர்க் கூறிய ஸத் சித் ஆநந்தம் எனும் மூன்று சொற்களும்,

தனித் தனியாகிப் பொருள் வேறானால் = தனித் தனியாக வெவ்வேறு பொருள்களைக் குறிப்பதாக இருந்தால்,

உகண்ட மனம் = (ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத்) தாவி ஸஞ்சலப்படும் மனம்,

உறைப்பது எங்ஙன் = அநுபூதியில் நிலைப்பது எப்படி?

பரியாய பதங்களைப் போல் = ஒரே பொருளையே குறிக்கும் சொற்களைப் போல,

உறவு காணேன் = ஒரே அர்த்தமுடையவையாகக் காணவில்லை,

அகண்டமாய் ஒரு சுவையாய் = பிளவுபடாத ஒரே பொருளுடையதாக (அகண்டைகரஸமாய்),

தேனீக் கூட்டிய மதுவாய் = பல பூக்களில் இருந்து தேனீக்கள் சேர்த்த தேனைப் போல,

அறிவிப்பீரே = எனக்கு விளக்குவீராக.


பாடல் : 135

குளிரிளகல் வெண்மையென்ற பதங்களினா னீர்மூன்று கூறா யிற்றோ,

ஒளிதவநஞ் செம்மையென்ற பதங்களா லக்கிநியு மொருமூன் றாமோ,

வெளிமுதலாஞ் சகமசத்து மூடமிடரெனப் பிரித்து விலக்கி வேதம்,

எளிதறிய முரண்மொழிந்த சத்தாதி யெனும்பிரம மேகந் தானே.


பொருள் :

குளிர் இளகல் வெண்மை என்ற பதங்களினால் = குளிர்ச்சி, நெகிழ்ச்சி, வெண்மை ஆகிய சொற்களால்,

நீர் மூன்று கூறாயிற்றோ = நீரானது மூன்று பொருள்கள் ஆகிவிட்டதா?

ஒளி தவநம் செம்மை என்ற பதங்களால் = பிரகாசம், வெப்பம், சிவப்பு என்னும் சொற்களால்,

அக்கிநியும் ஒரு மூன்றாமோ = தீயும் மூன்று பொருள்கள் ஆகுமா? ( ஆகாது)

(இவை போல)

வெளி முதலாம் சகம் = ஆகாசம் முதலான உலகங்கள் (கற்பிதத்தால் ஸத்து சித்து ஆநந்தமாகத் தோன்றுவதால் அவை),

அசத்து மூடம் இடர் எனப் பிரித்து விலக்கி = பொய், ஜடம், துக்கம் என பிரித்து (ஸச்சிதாநந்த ப்ரஹ்மத்தின் மேல் கயிற்றில் பாம்பு போலக் கற்பிதம் என) நீக்கி,

எளிது அறிய = எளிதாக பிரமத்தைப் பிரித்து அறிவதற்காக,

முரண் = (அந்த அஸத்து ஜட துக்கங்களுக்கு) வேறான,

வேதம் மொழிந்த = வேதங்கள் கூறிய,

சத்தாதி எனும் பிரமம் = ஸத் சித் ஆநந்தம் ஆகிய ப்ரஹ்மம்

ஏகம் தானே = ஒன்றுதான்.


பாடல்: 136

நித்தியம்பூ ரணமேகம் பரமார்த்தம் பரப்பிரம நிதாநஞ் சாந்தம்,

சத்தியங்கே வலந்துரியஞ் சமந்திருக்குக் கூடஸ்தன் சாட்சி போதம்,

சுத்தமிலக் கியஞ்சநா தநஞ்சீவன் றத்துவம்விண் சோதி யான்மா,

முத்தம்விபு சூக்குமமென் றிவ்வண்ணம் விதி குணங்கண் மொழியும் வேதம்.


பொருள் :

நித்தியம் = தோற்றம், மறைவு இல்லாமல் மூன்று காலத்திலும் இருப்பதால் நித்யம்,

பூரணம் = எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பதால் பூர்ணம்,

ஏகம் = தனக்கு வேறாக ஒரு பொருள் இல்லாதிருப்பதால் ஒன்று,

பரமார்த்தம் = முக்காலத்திலும் பொய் என்று நீக்கப்படாது இருப்பதால் பரமார்த்தம்,

பரப்பிரமம் = தனக்கொரு காரணம் இன்றியும், எல்லாக் காரியங்களினும் மேம்பட்டும், வியாபகமாக இருப்பதாலும் பரப்ரஹ்மம்,

நிதானம் = பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைப்பு, ஒடுக்கங்களுக்கு விவர்த்த உபாதான காரணமாக (அதிஷ்டான மாக) இருப்பதால் நிதானம்,

சாந்தம் = எப்பொழுதும் இடம்பெயர்தல் இன்றி ஒரு தன்மையாய் இருத்தலால் சாந்தம்,

சத்தியம் = தத்துவக் கூட்டங்களைத் தத்தம் காரணங்களில் ஒடுக்கிக் கொண்டு சென்றால் காரண காரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்றலில் சத்தியம்,

கேவலம் = மோக்ஷ வடிவாய் இருத்தலின் கேவலம்,

துரியம் = விழிப்பு கனவு உறக்கம் என்னும் மூன்று அவஸ்தைகளையும் அறிவதாய் நான்காம் பொருளாய் இருப்பதால் துரியம்,

சமம் = எந்த உலகத்திலும் எந்த விவகாரமும் இன்றி இருத்தலால் சமம்,

திருக்கு = அனைத்தையும் அறிவதாக இருப்பதால் திருக் - அறிபவன்,

கூடஸ்தன் = கொல்லனது பணை (அடைகல்) போல விகாரம் இன்றி இருத்தலால் கூடஸ்தன்,

சாட்சி = தன் சொரூபமான ஞானத்தினாலே மறைப்பின்றி நேரே எல்லாப் பிரபஞ்சத்தையும் அறிவதால் சாட்சி,

போதம் = அறிவு வடிவாக இருத்தலால் போதம்,

சுத்தம் = ஜாதி, வர்ணம், ஆச்ரமம் முதலியவற்றோடு சம்பந்தம் உடைய ஜீவன், கருணை அவதாரம் முதலியவற்றோடு சம்பந்தமுள்ள ஈஸ்வரன், ஜீவ சம்பந்தத்தால் அசுத்தமான பூதங்கள் என்னும் இவற்றிற்கு வேறாக தான் இவற்றோடு கூடினும் தன்னை அசுத்தம் பற்றாமையாலும் இவை (கயிற்றில் பாம்பு போல) தனது விவர்த்தமாக இருப்பதால் சுத்தம்,

இலக்கியம் = தத், த்வம் பதங்களின் இலக்ஷண விர்த்தி வாயிலாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாக இருப்பதால் இலக்கியம் (இலக்ஷ்யம்),

சநாதநம் = எக்காலத்தும் ஒரே வடிவாக இருப்பதால் ஸநாதநம்,

சீவன் = க(கு)டத்தால் வரையரைக்குட்பட்ட ஆகாயம் போல, மூன்று உடல்களாலும் வரையரைக்குட்பட்டிருப்பதுபோல இருப்பதால் ஜீவன்,

தத்துவம் = தத், துவம் பதங்களின் மெய்ப்பொருளாக இருப்பதால் தத்துவம்,

விண் = அஸங்கத்வம், வியாபகத்துவம், ஏகத்துவம் முதலிய தர்மங்களால் ஆகாசத்திற்கு ஒத்து இருப்பதால் விண் (ஆகாயம்),

சோதி = தனது பிரகாசத்திற்கு வேறொன்றின் பிரகாசத்தை சாராமல், தான் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் ஸ்வப்ரகாசமாக இருப்பதால் சோதி,

ஆன்மா = நான் என்னும் அறிவுக்கு முக்கிய விஷயமாக அல்லது முக்கியப் பிரியத்திற்கு இடமாக இருத்தலால் ஆத்மா (தான்),

முத்தம் = இயல்பாகவே ஸம்ஸார பந்தம் அற்றிருப்பதால் முக்தம்,

விபு = கால தேச வஸ்துக்களாலான வரையரை (முடிவு) இன்றி இருத்தலால் விபு - வியாபகம். (இது பூமா, அநந்தம், அபரிச்சின்னம் என்றும் கூறப்படும்),

சூக்குமம் = நுண்மையாயுள்ள யாவற்றுள்ளும் அதி நுண்மையாயிருப்பதால் அல்லது காண்பதற்கு அரிதாக இருப்பதால் சூக்ஷ்மம்,

என்று இவ்வண்ணம் = என்று இவ்வாறு

விதி குணங்கள் மொழியும் வேதம் = நேர்மறையான லக்ஷணங்களை (ப்ரஹ்மத்திற்கு) உபநிஷத்துகள் கூறுகின்றன.


பொன்னம்பல சுவாமிகள் உரை:-


நித்தியம்=[லட்சணாவிருத்தி] பின்னமாகிய எத்தேசத்தினும், எக்காலத்தினும் ஆகாசம் ஒருதன்மைத்தாய் இருப்பது போல, சர்வ பிரபஞ்ச கோசங்களுள்ள இடங்களில் கோசங்களைக் காண்பதாகி எப்போதும் இருத்தலின் நித்தியம்.


பூரணம் = [ல-தி] நீரினால் பூரிதமான கடம்போலப் பஞ்ச கோசங்கள் பூர்வ பூர்வம், உத்தரோத்தங்களால் பூரிதமாய்ச் சீவனாலும் பூரிதமாகிய கோசங்களால் பஞ்சபூதங்கள் பூரிக்கப்பட்டு, அப்பூதங்களால் பூரிக்கப்பட்டிருப்பது சகம்; அச்சகத்தில் எங்கணும் வியாபித்துள்ள மாயா விசிட்டனும் பிரஹ்மத்தால் பூரிதமாய்த் தன்னைப் பூரிப்ப தாய் வேறொன்றின்மையால் பூரணம்.


ஏகம்=[விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்] "ஏகமேவாத்துவிதீயம்" என்னும் சுருதியால் மரத்திற்குச் சமான ஜாதியான மற்றொரு மரமும், விஜாதீயமான கொடி முதலியவையும், ஸ்வகத பேதமான பத்திர,புஷ்ப, பலபேதங்களும் இருப்பன போலப் பரமார்த்தமாகச் சச்சிதாநந்த பரிபூரண வஸ்துவாக ஒரு ஸஜாதீய பேதமில்லை, விஜாதீயமென்னும் அநிருத ஜட துக்காத்மகமான பிரபஞ்சமும் சுத்தி ரஜதம்போல அதிதுச்சமாதலால் இல்லை, நிரவயவம் ஆதலால் ஸ்வகத பேதமுமில்லை ஆதலால் ஏகம்.


பரமார்த்தம் = [ல - தி] சொப்பனம் அபரமார்த்தம், சாக்கிரம் பரமார்த்தம், சாக்கிரத்தின் கண்ணும் மின், மேகம் அபரமார்த்தம், மற்றவை பரமார்த்தம். இவற்றுள்ளும், தேக முதலிய இவ்வுலக வத்துக்கள் அபரமார்த்தம், சொர்க்க முதலியவை பரமார்த்தம். இவற்றினும், பிரமலோகம் பரமார்த்தம் என இவ்வாறு தாரதம்மியமாகக் கூறாநிற்கும் சக சீவ பரங்கள் முழுவதும் ஆராயுங்காலையில் பரமார்த்த மாகாமையின், சர்ப்பாதிக்கு இரச்சுவாதிபோலத் தான் பரமார்த்த ரூபமாதலானும், தனக்கழிவு வந்து வேறொரு வஸ்து பரமார்த்தமாகாமையினானும் பரமார்த்தம்.


பரப்பிரஹ்மம் = [வி - ஸ - பா - ம் ] ஸத்தியஞானாநந்தம் பிரஹ்மம் என்னும் சுருதியானும், விஷ்ணு புராணத்தில் சஜாதீய, விஜாதீய, ஸ்வகத பேத ரகிதமாகவும், மனவாக்குகட்கு அகோசரமாகவும், சத்தியஞான சுகமாத்திரமாகவும், ஸ்வயம்பிரகாச ஸ்வவேத்தியமாகவும் இருக்கிற ஞானமாத்திரம் பிரஹ்மமென்று நிர்ணயித்ததாலும் பரப்ரஹ்மம்.


நிதானம் = [வி - ஸ- பா - ம்] காரணமாத்திரம். இதுதானே பிரபஞ்ச உற்பத்தியிலே உபாதான காரணமாயிருக்கின்ற பிரகிருதியும், நிமித்த காரணமாயிருக்கின்ற காலாதியுமாவதால் நிதானமென்னும் காரணம்.


சாந்தம் = [வி - ச - பா - ம்] நிஷ்களம், நிஷ்கிரியம், சாந்தம் என்னும் சுருதியால் விஷயபோகங்களில் அஸங்கமா யிருத்தலால் சாந்தம். அன்றியும்,


[ல - தி] காஷ்டத்திலுண்டான அக்னி அக்காஷ்டத்தைச் சுட்டுத் தானும் சாந்தமாவதுபோலச் சுருதியினானும், குருவினானும் உளதாகா நிற்கும் அகண்டாகார விருத்திஞானம் பிரஹ்மத்திற்கு வேறான சாத்திர முதலியவைகளைச் சுட்டுத் தானும் சாட்சியாகிய தன்னில் இறத்தலால், நிஷ்பிரபஞ்சமாகிய தான் சாந்தம்.


சத்தியம் = (வி - ஸ - பா - ம்) பரமார்த்த சத்திய சொரூபமாய் இருக்கையினாலே பிரதீதிக சத்தியமா யிருக்கிற சுத்தி ரஜத, இரச்சு சர்ப்பாதிகளினும், வியவகார சத்தியமாய் இருக்கிற ஆகாசாதி பதார்த்தங்களினும் விசேஷமாக நித்திய பரிபூரண சார்வகாலிக சர்வசாட்சியாய் இருத்தலின் சத்தியம்,


கேவலம் = ஏகமாவதால் அல்லது, முழுதுமாவதால் அல்லது, நிச்சயமாய் இருத்தலால் அல்லது, ஞானமாயிருத்தலால் அல்லது, சுத்தமாயிருத்தலால் கேவலம்.


துரியம் = [ல-தி] நான்காம்பொருள்; அஃதெங்ஙனம்? ஓரவஸ்தை உண்டாகில், மற்றோரவஸ்தை தோன்றாமல் அழிந்துநிற்கும் அவஸ்தாத்திரயப் பிரபஞ்ச மூன்றிற்கும் சாட்சியாய், நான்காம் பொருளாயிருத்தலின் துரியம்.


சமம் = [வி - ஸ - பா - ம்] சர்வ உலகங்களினும் சர்வ வியவகார ரகிதமாயிருத்தலால் சமம். அல்லது,


[ல - தி] தாரதம்மியமான உலகங்கள், பிரம்மா முதல் தம்ப பரியந்தம் உத்தம, மத்திம, அதமமான உடல்கள், ஞானி, யோகி,உபாசகன் கர்மியென்னும் சீவர் முதல் ஈசுரன் பரியந்தம் தாரதம்மியமாக விளங்கா நிற்கும் வஸ்துக்கள் அனைத்தினும் சத்தாகாரமாய்த் தாரதம்மியமற எப்போதும் இருத்தலால் ஸமம்.


திருக்கு = [ல - தி] அறிவது யாது அது திருக்கு. பிரஹ்மம் சர்வ திருசியங்களையும் அறிவதாயிருத்தலால் திருக்கு.


கூடஸ்தன் = கூடம் = கொல்லன் அடைகல்லு; அதுபோல நிர்விகார ரூபமாயிருத்தலால் கூடஸ்தன். அல்லது,


(விசாரசாகரம்) கூடமென்பது மித்தையாகிய புத்தியும், சிதாபாசனுமாம்; அவைகளில் அசங்கரூபமாக இருப்பவன் கூடஸ்தன்.


சாட்சி = [வி - ஸ - பா - ம்] நேரே மறைவில்லாமல் சொரூபபூத ஞானத்தாலே சகல பிரபஞ்சத்தையும் பார்ப்பதால் சாட்சி.


போதம் = [பஞ்சதசி] சத்த முதலான விடயங்களைந்தனையும் அறியும் சம்வித் ரூபமாவதால் போதம்.


சுத்தம் = [ல - தி] சாதிவர்ணாச்சிரமாதித் துடக்குற்ற சீவன், கிருபை அவதார முதலிய துடக்குற்ற ஈசன், சீவசங்கத்தால் அசுத்தமுற்ற பூதங்கள், இவைக்கு வேறானதான, இவைகளோடு கூடினும் தன்னை அசுத்தம் பற்றாமையினானும், இவை தனது விவர்த்தமாதலானும் சுத்தம்.


இலக்கியம் = இலட்சணையினால் போதிக்கப்பட்ட அர்த்தமாகலின் இலட்சியம்.


சநாதனம் = [முத்திகண்டம்] சந்ததம் ஒரே வடிவாயிருத்தலால் ஸநாதனன்.


சீவன் = (பிருகத்கோசம்] கட அவச்சின்ன ஆகாசம் போலச் சரீரத்திரயங்களால் அவச்சின்னமா யிருத்த லால் சீவன்.

"சீவனா யிருந்து காணும் சிற்பர தத்து வத்தே

மேவிய நனவை யுற்றோர்." என்னும் வாசிட்டத்தும் காண்க.


தத்துவம் = [வி - ஸ - பா - ம்] தத்துவம், அமிர்தம், சத்தியம், பரமார்த்தம், யது, தது, துவம் என்னும் இவ்வேழு சப்தங்களும் பரமார்த்த சத்தாயிருக்கின்ற பிரம்மத்தை உணர்த்துகின்றன வாகலின் தத்துவம் பரப்பிரஹ்மம்,


விண் [வாசிட்டம்) = "தடமான வதன் புறமில்லாமையினால்'' விண். அல்லது,


அசங்கத்துவாதி தர்மத்தால் ஆகாச ஸத்ருசமாவதால் விண்.


சோதி = [முண்ட கோபநிஷத் பாஷ்யம்) சூரியன் முதலிய சோதிகளை விளக்குவிக்கும் சிற்சோதியாவதால் சோதி.

அல்லது,


[வி-ச-பா-ம்] இதரமாக இருக்கின்ற ஆதித்ய சந்த்ராதிகளை அபேட்சியாமல் தானே மிகவும் பிரகாசமாகப் பிரகாசிக்கின்றதால் சோதி.


ஆன்மா = (ல - தி] நானென்ற அபிமானத்திற்கு இடமாய்த் தோன்றாநின்ற புத்திராதி, காரிய காரண தேகம், சீவன் இவை வெவ்வேறான நாமமடைந்து தனக்கந்நியமாகத் தோன்றலானும் இவைக்கப்பாலாய், ஞானகனப் பிரஹ்மமாகிய தான் அந்நியம் ஆகாமையானும் ஆன்மா.


(வாசிட்டம்]

''அகமகமென் றனைத்துயிரி னிடத்துமிருந் தனவரதம் உரைப்ப தாகி,

நிகழொளியா யான்மதத் துவமான சொரூபத்தை நினைத்தல் செய்வாம்." - என்றது.


[பிரமகீதை ]

"உரையாடு கின்றநா னென்னும் உரைக்கும் அறிவுக்கும் அறிவாய்,

நாடுகின்ற வுணர்வொன் றுண்டதுவே ஆன்மா நமக்கெல்லாம்.'' என்றது.


( यच्चाप्नोति यदादत्ते यच्चात्ति विषयानिह । यच्चास्य संततो भावस्तेन चात्मेति गीयते ॥


எது எல்லாவற்றையும் அடைகிறதோ (அதாவது வியாபிக்கிறதோ), எது எல்லாவற்றையும் கிரஹிக்கிறதோ, எது எல்லா விஷயங்களையும் அனுபவிக்கிறதோ, எது தொடர்ந்து எப்போதும் உள்ளதோ, அதனால் அது ஆத்மா என்று சொல்லப்படுகிறது. )


முத்தம் = (வி - ஸ - பா - ம்) விடுபட்டவனென்னும் சுருதியால், சுபாவமாக ஸம்ஸாரபந்தம் ஸர்வாத்மனா இல்லை ஆகலின் முக்தம்.


விபு -(வி- ஸ - பா - ம்] சகல பிரபஞ்ச ஆகாரமாகவும், இரண்ய கர்ப்பாதி விவித தேவராகவும், நாநாவிதமாக உண்டாகின்றதால் விபு, அன்றியும் சர்வத்திர பரிபூரணராகவும், லோக நாயகராகவும் இருப்பதால் விபு. அல்லது,


[ல - தி] அவித்தியா விசிட்டனின் விபு லிங்கதேகம், இதனின் விபு தூலதேகம், இதனின் ஒன்றின் ஒன்று விபு பிருத்வியாதி பூதங்கள், இவற்றின் ஒன்றினொன்று விபு இரண்யகர்ப்பாதி, இவைகளால் மட்டிடக்கூடாது விரிந்த மாயா விசிஷ்டனாலும் மட்டிடக்கூடாது விரிந்த அஸ்தி பாதிப் பிரிய ரூபமாகலின் விபு.


சூக்குமம் = [வி - ஸ - பா - ம்] "நுண்மையாம் அதினுண்மையாம்" என்னும் சுருதியானும், "சர்வ கதம் சூட்சுமம்" என்னும் சுருதியானும், உத்தரோத்தரம் ஸ்தூல காரணமாய் இருக்கின்ற பிருத்வியாதி பூதங்களும், கந்தாதி குணங்களும் பிரளயத்திலே இல்லாமையினால் சூக்குமம்.


வாசிட்டத்தில்,

"சூக்கமாயெட் டாமையினால் சொன்னபரமே பரமாணு' என்றது.


இனி நிஷேத முகமாகக் (மறைமுக விசேஷணம்) கூறுகின்றார்.


பாடல் : 137

அசலநிரஞ் சனம்அமிர்த மப்பிரமே யம்விமலம் வசனா தீதம்

அசட மநாமயம்அசங்க மதுலநிரந் தரம்அகோ சரம கண்டம்

அசமநந்த ம்அவிநாசி நிர்க்குண நிட்களநிரவ யவம நாதி

அசரீர மவிகார ம்அத்துவித மெனவிலக்கா ம்அநேக முண்டே.


பொருள்:

அசலம் = அவஸ்தா த்ரயத்தால் சலிக்கின்ற ஜீவ ஈஸ்வர ஜகத்திற்கு சாட்சியாய் சலிப்பின்றி - அசைவின்றி - இருப்பதால் அசலம்,

நிரஞ்சனம் = அஞ்சனம் ( தமஸ் அல்லது மனோ வியாபாரமின்றி இருப்பதால் நிரஞ்சனம்,

அமிர்தம் = மரணம் இன்றி இருத்தலால் அமிர்தம்,

அப்பிரமேயம் = பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்களுக்கு விஷயமாகாமல் இருப்பதால் அப்ரமேயம்,

விமலம் = மலமூத்ரம் போன்ற யாதொரு மலமும் இன்றி இருத்தலால் விமலம் (மலமற்றது),

வசனாதீதம் = சொல்லினால் - சக்தி விருத்தியால் - அறியப்படாது இருப்பதால் வசனாதீதம் (வாக்கிற்கு எட்டாதது), 

அசடம் = தேகாதி பிரபஞ்சம் போல ஜடமாகாது இருத்தலால் அஜடம் (சேதனம்),

அநாமயம் = ஆதி (மானஸதாபம்), வியாதி (சரீரத்தாபம்), இவ்விரண்டுக்கும் காரணமான ஸம்ஸ்காரம் என்னும் மூவகைத்தாபம் (நோயும்) இல்லாது இருத்தலால் அநாமயம்.

அசங்கம் = ஸஜாதீய விஜாதீய ஸ்வகதம் என்னும் மூவகை ஸம்பந்தமும் இன்றி இருப்பதால் அசங்கம்

அதுலம் = தனக்கு உவமை இன்றி ஒன்றாக இருப்பதால் அதுலம் (துலம் = உவமை)

நிரந்தரம் = அந்தரம் (இடைவெளி) இன்றி இருப்பதால் நிரந்தரம்

அகோசரம் = தான் எப்பிரமாணத்திற்கும் விஷயமாகாது இருப்பதால் அகோசரம் (கோசரம் - பற்றத்தக்கது),

அகண்டம் = கால தேச வஸ்துக்களால் துண்டிக்கப்படாது இருப்பதால் அகண்டம்,

அசம் = பிறர்த்தலின்றி இருப்பதால் அஜம்,

அநந்தம் = அந்தம் - முடிவு - இன்றி இருப்பதால் அநந்தம்,

அவிநாசி = நாசம் - அழிவு - இல்லாது இருப்பதால் விநாசி,

நிர்க்குணம் = விவகார நிலையில் சொல்லப்படும் ஸர்வஜ்ஞத்வாதி குணங்கள் எதுவுமின்றி இருப்பதால் நிர்க்குணம்,

நிட்களம் = களம் - மூர்த்தம் - வடிவம் - வடிவின்றி இருப்பதால் நிஷ்களம்,

நிரவயவம் = கை, கால் முதலான உறுப்புகள் இன்றி இருப்பதால் நிரவயவம்,

அநாதி = உற்பத்தி இன்றி இருப்பதால் அநாதி

அசரீரம் = யாதொரு உடலில் இன்றி இருப்பதால் அசரீரம்.

அவிகாரம் =  பிறத்தல், இருத்தல், வளர்தல், திரிதல், குறைதல், அழிதல் என்றும் ஆறு மாறுபாடுகளும் இன்றி இருப்பதால் அவிகாரம்,

அத்துவிதம் =  இரண்டற்று இருப்பதால் அத்வைதம்,

என விலக்காம் = என்று எதிர்மறையாகும் பெயர்கள்,

அநேகம் உண்டே = பல (ப்ரஹ்மத்திற்கு) உண்டு.


அநேகம் என்றமையால், இன்னும் அஸ்தூலம், அநணு, அஹ்ரஸ்வம், அதிர்சயம், அக்ராஹ்யம், அசப்தம், அஸ்பர்சம், அரூபம், அவ்யயம் என்பன முதலியவும் கொள்க.


அசலம் = [ல - தீ] வீடு, ஊர், தேசம் இவைகளில் ஒன்றை விட்டு மற்றொன்றில் அலைகின்ற ஸ்தூல தேகம், உலகங்களில் ஒன்றினின்று ஒன்றில் அலைகின்ற லிங்க தேகம், காரண தேகங்களோடு பிருதுவியை வளையமாகச் சுற்றி அலைக்கின்ற அப்பு, அக்கினி இவைகளை அலைக்கின்ற வாயு, இவைகட்கு இடமாயுள்ள ஆகாசம் இன்னும் பௌதிக சமஷ்டியோடுகூட இவையனைத்தையும் உடலாகக்கொண்டு அறிவினுள்ளே அலையாநின்ற ஈசுரனும், அதிவேகமாக ஆகாசத்தில் கருடன் போலப் பத்துத் திக்கினும் நூறுகோடி கற்பங்களோடி அளவிட வேண்டுமென்று பார்க்கினும் அளவுகாணக் கூடாததாய், அங்கங்கே சாட்சியாய் அசைவற்று இருக்கின்றதால் அசலம்.


நிரஞ்சனம் = அஞ்சனம் = தமம், மலின சுபாவத்தால்; அஃதில்லாமையால் நிரஞ்சனம், அன்றியும், ஆத்மபோத டீகா அஞ்சனரகிதன் நிரஞ்சனன்; அஃதெங்ஙனம்? மனோவியாபாரமே அஞ்சனமாகலின், மனதே யில்லாமலிருத்தலால் நிரஞ்சனம், இன்னும் லட்சணாவிருத்தியிலும் காண்க.


அமிர்தம் = [ல-தி] மிர்தமற்றது அமிர்தம்: யோகாமிர்தம், தேவாமிர்தங்களைப் புசித்து நமக்கு மரணமில்லை என்றிருப்பவரும் ஈசுரப்பிரளயத்தில் மரணமாவதுபோல அநந்தாநந்த சின்மாத்திரமே நாமென்று மோட்சாமிர்தமான தன்னையடைந்தோர் மரணமாகாமையின் அமிர்தம்;


[வி - ச - பா - ம்] ஓர்காலத்தும் மரணமில்லாமல் நித்தியமாயும், சத்தியமாயும் இருத்தலின் அமிர்தம்.


அப்பிரமேயம் = (வி - ச - பா - ம் ] சர்வப்பிரமாணங்கட்கும் விடயமாகாமையின் அப்பிரமேயம். சத்த, ஸ்பரிச, ரூப, கந்தாதிகளான குணங்கள் இவரிடத்தில் இல்லாமையினால் கடபடாதிகள்போலப் பிரத்தியட்ச விஷயரல்ல, காரியலிங்கம் இல்லாமையின் அநுமான விஷயரல்ல, சாதிருசம் இல்லாமையின் உபமான வேத்தியரல்ல, ஜாதி, குண,கிரியைகள் இல்லாமையின் சத்தப்பிரமாண விஷயருமல்ல, உபாதான தர்மமில்லாமையின் அர்த்தாபத்தி விஷயருமல்ல, பாவரூபமான சிற்சொரூபராகலின் அபாவகோசரருமல்ல, அபாவத்திற்குச் சாட்சியாயிருத்தலானும் அபாவ விஷயரல்ல; இப்படிச் சகல பிரமாணங்கட்கும் விஷயராகாவிடில் வேதாந்த சாஸ்திரங்களாலே எப்படி அறியப்படுவாரெனின், சகலமான பிரத்தியட்ச, அநுமான, உபமான, சத்த, அர்த்தாபத்தி, அபாவசாஸ்திராதிகட்கும் சாட்சியாக அறிகிறவராகவும், சுவயம் பிரகாசராகவும் இருத்தலின் பிரமாணங்கட்கு விஷயராகாவிடினும் தம்மிடத்தில் கற்பிக்கப்பட்ட சகல பிரபஞ்ச பிரமாணங்களையும் சொப்பிரகாசத்தினாலே மித்தையென்று நிச்சயித்து, ஆநந்த சின்மாத்திரமாய் இருத்தலால், சாஸ்திரயோனி என்று சொல்லப்படுகிறார்; ஆகலின் அப்பிரமேயம்.


விமலம் =[ல - தீ] மலமற்றது. மலமூத்திராதி மலம் பொருந்திய பிருதுவி, கலங்கல், புகை, புழுதி முதலான மலம்பொருந்திய மற்ற நான்கு பூதங்கள், கோழை, சளி, பித்தம், மலம், மூத்திர முதலான மலமுடைய தூலதேகம், காசபடலம் காமக்குரோத முதலான மலமுடைய லிங்கதேகம், ஞானாஞ்ஞான மலமுடைய சீவன், பஞ்சகிருத்தியாதி மலமுடைய ஈசுரன். இவைக்கு வேறாய் யாதொரு மலமுமற்று பிரகாச ஞானாந்த வடிவாகலின் விமலம், 


வசனாதீதம் = வாக்கின் சக்திவிருத்திக்குக் கோசரமாகாமையின் வசனத்திற்கு எட்டாதது.


அசடம் = தேக முதலியவைபோல சடமாகாமையின் அசடம், 


அநாமயம் = ஆமயம். =நோய் ; அஃதற்றதால் அநாமயம்.

[ல-தி]ஆதிவியாதி வாசனையென்னும் மூன்று சரீரத்து சுரங்களும் தனக்கு இல்லாமையின் அநாமயன்.


அசங்கம் = (விசார சந்திரோதயம்] சங்கமென்பது, சம்பந்தம்; அது சஜாதீய விஜாதீய சுவகதபேதத்தால் மூவகையாம். பிராமணனுக்கு அந்நிய பிராமணனோடு உளதாகும் சம்பந்தம் சஜாதீய சம்பந்தம், சூத்திர ஜாதியரோடு உளதாகும் சம்பந்தம் விஜாதீய சம்பந்தம், அஸ்தபாதாதிகளோடுள்ள சம்பந்தம் சுவகதசம்பந்தம். தான் ஏகமாகலின் சாதியில்லை. சீவன், ஈசுரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், நான், நீ முதலிய பேதமோ உபாதியால் பண்ணப்பட்டது. ஆகலின், தனக்கு யாதொன்றோடும் சஜாதீய சம்பந்தமில்லை, அப்படியே தான் அத்வைதமாயும், சத்தாயும் இருத்தலின் தனக்குப் பின்னமாக மாயை, மாயாகாரியமான தூல சூட்சுமப் பிரபஞ்சங்கள் அசத்தாம், அசத்து அற்பமும் வஸ்துவன்று. ஆகலின், தனக்கு யாதொன்றோடும் விஜாதீய சம்பந்தமில்லை, அப்படியே தான் நிரவயவமாகலின் சச்சிதாநந்தாதிகளோ தனது அவயவமல்ல, பின்னையோ ஏகரூபமாகலின் தனது சொரூபமாம். இதனால் தனக்கு யாதொன்றோடும் சுவகத சம்பந்தம் இல்லை. இவ்வாறு சர்வசம்பந்தமும் இல்லாமையின் அசங்கம்.


அதுலம் = [வி-ச-பா-ம்] உபமானமற்றது. இதற்குச் சமானவஸ்து ஒருகாலத்தும், ஓரிடத்தும் இல்லாமையின் அதுலம்.


நிரந்தரம் = அந்தரம் = அவகாசம்; அஃதில்லாதது நிரந்தரம், [நிச்சித்திரம் என்றுபொருள்]


அகோசரம் = கோசரம் = விடயம், தானொன்றிற்கும் விடயமாகாமையின் அகோசரம்.


அகண்டம் = காலதேச வஸ்துக்களால் கண்டிதமாகாமையின் அகண்டம்.


அசம் = ஜநநமில்லாதது. [வி - ச - பா - ம் ] நித்திய சித்தமாக இருப்பது கொண்டு ஜநநத்தை அடையாமையின் அசம்.


ந ஜாயதே ம்ரியதே வா ….(ஸ்ரீமத் பகவத் கீதை)


அநந்தம்=[வி - ச - பா - ம்] நித்தியமாகவும், சர்வகதமாகவும் இருத்தலின் தேசகால வஸ்துக்களால் பரிச்சேதமில்லாமையான் அநந்தம்.


அவிநாசி = நாசரகிதமாகலின் அவிநாசி.


நிர்குணம் =[வி -ச-பா-ம்] பரமார்த்த தசைக்கண் குணத்திரயங்கள் இல்லாமையால் நிர்க்குணம்; அல்லது சத்த, ஸ்பரிசாதி குணரகிதமாயும், நித்தியசுத்த ஞானைகரூபமாயும் இருத்தலின் நிர்குணம்.


[ல - தீ] சத்துவ குணத்தால் ஈசுரனையும், இரஜோ குணத்தால் சீவரையும், தமோ குணத்தால் சகத்தையும் உண்டாக்கி அவைகளை யுகந்தோறும் விரித்தடக்கி வினோதியா நிற்கும் பிரகிருதிக்கு அதீதமாய்ச் சுத்த அதிஷ்டான சுகஸ்வரூபமாகத் தானிருத்தலின் நிர்க்குணம்.


நிட்களம் = களை = அவயவம்; அஃதின்மையின் நிட்களம். [ல - தீ] பிரஹ்மம் ஆகாசவுருவாய் இருக்குமென்றது ஒருவேதம்; அதற்கு நாம ரூபமில்லை, அமூர்த்தமாய் இருக்குமென்றது ஒருவேதம்; பிரஹ்மத்திற்கு முன் பின் உட்புறமில்லை, அது சாட்சியாயிருக்குமென்றது ஒருவேதம்; அறியப்பட்டது அறியப்படாததும் பிரஹ்மமல்ல, அவைக்கந்நியமாய் அவைகளைப் பிரகாசிப்பிக்கும் அறிவு நிராகாரமென்றது ஒருவேதம். இவ்வாறு கூறுகின்ற சுருதியானும், சூரியனை நாடாநிற்கும் மனதோடுகூட நீண்ட சிதாபாசனைக் கற்பிதசேதனம் என்றது கொண்டு, வாளால் வெட்டுதலும், அக்கினியாற் சுடுவதும், நீட்டின கரத்தில் தாக்குவதுபோல் தாக்காமற்போமாயின், சுபாவசித்து ரூபரகிதமென்னல் வேண்டுமோ என்னும் உத்தியானும், தான் உள்ளிந்திரியம், வெளியிந்திரியங்களுக்கு விஷயமாகாமல் அவைகளைப் பிரகாசிப்பிக்கும் அநுபவத்தானும் நிஷ்களம்.


நிரவயவம் = [ல-தி] அஸ்தபாதாதி அவயவங்களை யுடைய மூவகைச் சரீரங்கட்கும் அந்நியமாய், ஆகாயம்போலும் உருவமாய், மூவகை அவஸ்தைகட்கும் சாட்சியாய், நித்தியமாயும் உள்ள தனக்குத் தனக்கென ஓரவயவமின்மையானும், தன்போல உண்மையாயில்லாமல் தனது அவயவம் என்று சொல்லத் தக்கதான பொருளும் அல்லாமல், தன்னில் கற்பிதமாய்த் தோன்றாநின்ற பிரபஞ்சத்தைக் குறித்தும் ஓரவயவம் இன்மையானும் தான் நிரவயவம்.


அநாதி = ஆதி = உற்பத்தி. அஃதில்லாதது அநாதி, [வி-ச-பா-ம்] இதற்குக் காரணமில்லை, இது தானே சகத்பிராந்திக்கு ஆதிகாரணமாயும், அதிஷ்டானமாயும் இருத்தலால் அநாதி. 


[ல-தி] யாவைக்கும் காரணமான தனக்குக் காரணம் இன்மையானும், அநாதியென்று கூறும் கர்மம், அஞ்ஞானம், வேதம், ஈசன், சீவன் என்னும் சோபாதிக சகத்தும், நிருபாதிக சைதந்யமான பிரஹ்மமும் ஆகிய இவ்வாறினுள்ளே கற்பித அநாதியான ஐந்திற்கும் மூலமான சித்திற்கு ஆதியின்மையின் அநாதி.


அசரீரம் = தேகமின்மையது.

[ல-தீ] சரீரங்களையுடைய கருமி, யோகி, உலகபாலர், வைசுவாநரன் முதலிய சீவர்க்கும், ஜகசரீரமுடைய ஈசுரனுக்கும் அந்நியமாய் விளங்காநிற்கும் தான் சிற்ஸதாநந்த ரூபமாவதானும், தனக்கொரு சரீரமின்மையானும், சரீரம் என்னதென்னும் அநுபவத்தால் தனக்கு சரீரம் அந்நியம், அநித்திய மென்னும் யுத்தி சர்வலோக சம்மதமாவதானும் தான் அசரீரன்.


அவிகாரம் = விகாரமின்மையது.

[ல - தீ] பஞ்சகோசங்களையும், அவைகளின் விகாரங்களையும் அறியும் அறிவே வடிவாதலால் அவிகாரம்.


அத்துவிதம் = (ல-தீ] துவிதமென்பது இரண்டு; அஃதின்மையது அத்துவிதம். துவித ஜகம் தோன்றுவதனால் தான் அத்துவிதமென்பது எவ்வாறெனின், மரஞ் செடி கொடி முதலியவை மண்ணிலே யுண்டாய் மண்ணிலேயிருந்து மண்ணாகவே அழிதல் போலச் சாக்கிராதிய அவஸ்தைகளில் தோன்றாநின்ற ஜகம் சாட்சியாகிய தன்னிலேயுண்டாய்த் தன்னிலே இருந்து தானாகவே அழிதலானும், தன்னைப் போல மற்றோர் வஸ்து இன்மையானும் தான் அத்துவிதம்.


பாடல் : 138

இன்னவகை விதிவிலக்குக் குணங்கள்

நன்றாய்ச் சேர்ந்தொருமித் தெல்லாங் கூடிச்,

சொன்னபொரு ளொன்றன்றி யிரண்டில்லை

ஒருபொருளைச் சொல்லுஞ் சொற்கள்,

பிந்நபத மாமதனால் சத்தாதி

குணப்பொருளாம் பிரம மேகம்,

அன்னபொரு ளொருமையறிந்து

அகண்டபரி பூரணமா யாவாய் நீயே.


பொருள் :

இன்னவகை = இப்படி (அநேக ஶ்ருதிகள் கூறும்),

விதிவிலக்குக் குணங்கள் = விதி, விலக்குகளான குணங்கள்,

நன்றாய்ச் சேர்ந்து ஒருமித்து எல்லாம் கூடிச் சொன்ன பொருள் = நன்றாக முழுவதும் ஒன்றுதிரண்டு சொல்லிய வஸ்துவானது,

ஒன்றன்றி இரண்டில்லை = ஒன்றே அல்லாமல் இரண்டு இல்லை,

ஒருபொருளைச் சொல்லும் சொற்கள் = அகண்ட ஏகரஸமான ப்ரஹ்மத்தைச் விவரிக்கின்ற சொற்கள்,

பிந்ந பதமாம் = வெவ்வேறான வார்த்தைகள் தான்.

அதனால் = அக்காரணத்தினால், 

சத்தாதி குணப்பொருளாம் பிரமம் ஏகம் = ஸத்து, சித்து, ஆநந்தம் முதலான விசேஷணங்களை உடைய பொருளாகிய ப்ரஹ்மம்,

அன்னபொருள் ஒருமை அறிந்து = அத்தன்மையான பிரஹ்மத்தின் ஏகரஸத்தன்மையை (ஶ்ருதிப் பிரமாணத்தால்) உணர்ந்து,

அகண்ட பரிபூரணமாய் ஆவாய் நீயே = ஸஜாதியாதி பேதரஹிதமான பூர்ண ப்ரஹ்மமாக நீ இருப்பாயாக.


பாடல் : 139

நிர்க்குணவத் துவின்குணங்கள் உரைப்பதுதாய்

மலடியென நிகரென் னாதே,

சற்குணனே வத்துநிலை யுரையாமல்

அறியவல்ல சதுர ருண்டோ,

நற்குணவே தங்களிந்தச் சீவந்முத்தி

பெறப்பிரம ஞாநந் தோன்றச்,

சொற்குணங்கள் பிரமத்தின் குணங்களன்று

பிரமமாஞ் சொரூபந் தானே.


பொருள் :

நிர்க்குண வத்துவின் குணங்கள் உரைப்பது = நிர்க்குண வஸ்துவான ப்ரஹ்மத்திற்கு ஆநந்தாதி அநேக குணங்களை ஶ்ருதிகள் சொல்வது,

தாய் மலடி எனல் நிகர் என்னாதே = (என்) தாய் மலடி என்று சொல்வதற்கு இணையான வியாகாத தோஷம் (முன்னுக்குப் பின் முரணான வார்த்தை) என்று நினைக்காதே! 

சற்குணனே = ஸத்குணங்களை உடைய மைந்தனே,

வத்து நிலை உரையாமல் = ஒரு பொருளின் குணங்களைச் சொல்லாமல்,

அறியவல்ல சதுரர் உண்டோ = அப்பொருளை அறிய ஸாமர்த்யம் உடைய அறிஞர் உள்ளனரா? (இல்லை),

நற்குண வேதங்கள் = (ஆதலால் அனைவரிடத்திலும்) கருணை உள்ள வேதங்கள்,

இந்தச் சீவந்முத்தி பெற = (130 வது பாடலில் சொல்லிய) ஜீவன் முக்தி சுகம் அடையவும்,

பிரமஞாநம் தோன்ற = (முதல் படலத்தில் 59, 60 வது செய்யுளில் கூறிய) ப்ரஹ்மத்தின் பரோக்ஷ அபரோக்ஷ ஞானம் அதிகாரிக்கு உண்டாகும் பொருட்டும்,

சொல் குணங்கள் = சொல்லிய குணங்கள்,

பிரமத்தின் குணங்கள் அன்று = பிரஹ்மத்தின் குணங்கள் அல்ல,

பிரமமாம் சொரூபம் தானே = பிரஹ்மத்தின் ஸ்வரூபமே.


பாடல் : 140

மோகவிருள் கெடக்கோடி அருணனென வருகுருவே மொழியக் கேளீர்,

ஏகபரி பூரணமாம் என்சொரூபம் என்னுளத்தி லிறுகும் வண்ணம்,

ஆகமங்கள் சொன்னபடி என்னையகண் டார்த்தமா வறிந்தே னையா,

ஊகமுமொத் திடவுரைத்தால் பசுமரத்தி லாணிபோ லுறைக்கு நெஞ்சே.


பொருள் :

மோகவிருள் கெட = (தனது காரியங்களோடு) அஞ்ஞான இருள் அழிந்து போக,

கோடி அருணன் என வரு குருவே = கோடி சூர்யர்கள் போல எழுந்தருளிய குருநாதனே,

மொழியக் கேளீர் = அடியேனின் விண்ணப்பத்தைக் கேட்டருள்வீராக!

ஏக பரிபூரணமாம் என்சொரூபம் = ஒன்றேயான பரிபூர்ணமான என் ஆத்ம ஸ்வரூபம் (பற்றிய ஞானம்),

என் உளத்தில் இறுகும் வண்ணம் = என் மனதில் நிலைத்து நிற்கும்படியாக,

ஆகமங்கள் சொன்னபடி = வேதங்கள் கூறியவாறு,

என்னை அகண்டார்த்தமாக அறிந்தேன் = என்னை ஸச்சிதானந்த வரையறையற்ற ஏகரஸப் ப்ரஹ்மமாக அறிந்தேன்!

ஊகமும் ஒத்திட உரைத்தால் = (ஸச்சிதாநந்தம் ஏகம் என்பதில்) யுக்தியையும் எனது மனம் ஒப்பிடும்படியாக எடுத்துக் கூறினால்,

பசுமரத்தில் ஆணிபோல் உறைக்கு நெஞ்சே = பச்சை மரத்தில் அறைந்த ஆணி போல ஸ்வானுபவத்தில் எனது மனம் அழுந்தும்,

ஐயா = ஐயனே!


பாடல் : 141

சத்தேசித் தாகுமய லெனிலசத்தாம் அசத்தா னாற் சாட்சி யெங்கே,

சித்தேசத் தாகுமய லெனிற்சடமாம் சடங்களுக்குத் திதியுமில்லை,

ஒத்தேதோன் றியசத்துஞ் சித்துநல்ல சுகமாகு மூகத் துக்கோர்,

வித்தேயந் நியமாகில் சடமசத்தாம் சுகாநுபவம் விளைந்தி டாதே.


பொருள் :

சத்தே சித்து ஆகும் = இருக்கின்றதே விளங்குகின்றதாம்,

அயல் எனில் = இருப்பதற்கு விளங்குவது வேறானது என்றால்,

அசத்தாம் = (சித்தானது) அஸத் (இல்லை) என்றாகும்,

அசத்தானால் = (அந்த சித்து முயற்கொம்பு போல) அஸத்து என்று ஆனால், 

சாட்சி எங்கே = அது சாட்சியாதல் எவ்விடத்தில் இருக்கும்,

சித்தே சத்து ஆகும் = விளங்குகின்றது இருக்கிறதாகும்,

அயல் எனில் = ( விளங்கின்றது இருக்கின்றதற்கு) வேறானது என்றால்,

சடம் ஆம் = (அந்த ஸத்திற்கு விளங்கும் தன்மையில்லாமையினால், கடபடாதிகள் போல அந்த ஸத்து) ஜடமாகும்,

சடங்களுக்குத் திதியும் இல்லை = ஜடப்பொருள்களுக்கு (கயிற்றுப் பாம்பு போல்) இருப்பில்லை, (ஆகவே சித்தே ஸத்தாகும் என்று கொள்ளல் வேண்டும்),

ஒத்தே தோன்றிய சத்தும் சித்தும் = இவ்வாறு (யுக்திக்கு பொருந்திய) ஒன்றாக இருக்கின்ற ஸத்தும் சித்துமே,

நல்ல சுகம் ஆகும் = மிகுந்த பிரியத்துக்குரிய ஆநந்தமாகும்,

அந்நியம் ஆகில் = ஸத்தாகிய சித்துக்கு ஆநந்தம் அந்நியம் ஆனால்,

சடம் அசத்து ஆம் = (ஆநந்தம்) சடமும் அஸத்தும் ஆகும்,

சுக அநுபவம் விளைந்திடாதே = (ஆகவே) ஆநந்த அநுபவம் உண்டாகாதே?

(ஆகவே, சத்தும் சித்துமே ஆநந்தம் எனக் கொள்ளல் வேண்டும்; கொள்ளவே ப்ரஹ்மம் அகண்ட ஏகரஸம் என்பது யுக்கியால் பெறப்படுகிறது),

ஊகத்துக்கோர் வித்தே = (ஸச்சிதாநந்தங்களை அகண்டார்த்தமாக) யூகிப்பதற்கு இவ்வுக்தியே தலைமையான யுக்தியாகும்.


பாடல் : 142

வீயாத சத்து முன்னம் விளங்குவது தன்னாலோ வேறொன்றாலோ,

வாயால்வே றெனிலதுவும் அசத்தோசத் தோவசத் தேன் மலடி மைந்தன்,

பேயாகா ரியஞ்செயுமோ சத்தெனவிப் படியதையும் பிரித்துச் சொன்னால்,

ஓயாத வவத்தையாங் குதர்க்கவிகற் பங்களைவிட் டொழிந்திடாயே.


பொருள் :

வீயாத சத்து  = மூன்று காலங்களிலும் நீங்காமல் இருக்கும் ஸத்து,

முன்னம் விளங்குவது = ஏற்கெனவே விளங்குவது,

தன்னாலோ = (தீபம் போல்) தானாகவே விளங்குகின்றதா?

வேறொன்றாலோ = (அல்லது, தீபத்தினால் குடம்போல) வேறொன்றினால் விளங்குகின்றதா ?

வாயால் வேறு எனில் = வாக்கினால் தனக்கு வேறான ஓர் பொருளால் விளங்குகிறது என்றால்,

அதுவும் = (ஆத்ம ஸத்திற்கு வேறாக) அப்பொருளும்,

அசத்தோ சத்தோ = ஸத்திற்கு வேறானதா? அல்லது வேறொரு ஸத்தா ?

அசத்தேல் = அஸத்து என்றால்,

பேயா = மதிகேடனே,

மலடி மைந்தன் காரியம் செயுமோ = மலடி மகன் செயல் புரிவானா?

(ஸத்துக்கு வேறானது அஸத்து, இருப்பு இல்லாதது - மலடி மகன் போல. அதற்கு ஸத்தை பிரகாசித்தல் என்பது இயலாது என்பது கருத்து)

சத்து என = வேறொரு ஸத்து என,

இப்படி = இவ்வாறே,

அதையும் = அந்த வேறொரு ஸத்தையும்,

பிரித்துச் சொன்னால்  = (ஸத், சித் என வேறுபடுத்திச் சொன்னால்)

ஓயாத வவத்தையாம் = அநவஸ்தா தோஷம் (முடிவற்ற நிலை) வரும்,

குதர்க்க விகற்பங்களை விட்டு = குதர்க்க தர்க்கங்களை விட்டு,

ஒழிந்திடாயே = விலகிடுவாயாக!


பாடல் : 143

சுருதியுத்தி யொத்ததுபோ லநுபவமும் கேள்சுழுத்திச் சுகவா நந்தம்,

மிருதிவடி வாதலிலவ் வாநந்த மேயறிவாம் வேறங் கில்லை,

கருதுபிர ளயஞ்சுழுத்தி யிரண்டிலுநீ இருந்திருளைக் காண்கின் றாயே,

இருதயத்திப் படிநோக்கி ஏகபரி பூரணமா யிருந்தி டாயே.



பொருள் :

சுருதி யுத்தி ஒத்தது போல் = (ஸச்சிதாந்தங்கள் தம்முள் வேறுபடாமல் ஒன்றாக இருப்பதில்) வேதமும் யுக்தியும் முரண்படாமல் ஒத்து இருப்பதுபோல,

அநுபவமும் கேள் = அனுபவமும் ஒத்து இருப்பதைக் கூறக்கேட்பாயாக!

சுழுத்திச் சுக ஆநந்தம் = தூக்கத்தில் வெளிப்படும் சுக வடிவான ஆநந்தமானது,

மிருதி வடிவாதலில் = (ஒன்றுமறியாமல் சுகமாகத் தூங்கினேன் என்னும்) ஸ்ம்ருதி ரூபமாக இருந்தலால்,

அவ்வாநந்தமே அறிவாம் = அந்த ஆநந்தமே சித் ஆகும்.

வேறு அங்கு இல்லை = ஆநந்தத்தை வேறு பிரகாசம் அங்கில்லை.

கருது பிரளயம் சுழுத்தி இரண்டிலும் = பிரளயம், உறக்கம் இரண்டு நிலைகளிலும்,

நீ இருந்து = சிதானந்த ரூபமாக இருந்து,

இருளைக் காண்கின்றாயே = அஜ்ஞானமாகிய இருளைப பார்க்கின்றாய்,

இருதயத்தில் இப்படி நோக்கி = அறிவினால் இவ்வுண்மையை ஆராய்ந்து அறிந்து,

ஏக பரிபூரணமாய் இருந்திடாயே = அத்வைத பரிபூர்ண ப்ரஹ்மாக இருப்பாயாக!


"கருது பிரளயம் சுழுத்தி இரண்டிலும் நீ இருந்து இருளைக் காண்கின்றாயே."

என்பதன் கருத்து:


(நீ சச்சிதானந்த சொரூபனாம். சச்சிதாநந்த சொரூபமே சாஸ்திரங்களில் பிரஹ்மமென்று கூறியிருப்பதால் பிரமசொரூபமே ஆன்மா. வியாபகமாய் இருப்பதற்குப் பிரஹ்மமென்று பெயராம். தேசத்தால் எதற்கு அந்தமில்லையோ அது வியாபகமென்று சொல்லப்படும்; அதற்கு ஆன்மா பின்னமா மேல், தேசத்தால் அந்தமுடையதாம்; எதற்குத் தேசத்தால் அந்தமுண்டோ அதற்குக் காலத்தானும் அந்தமுண்டாம்; இது நியமமாகலின், ஆன்மா அநித்தியமாம்; எதற்குக் காலத்தால் அந்தமுண்டோ அஃது அநித்தியமெனப்படும்; இதனால், பிரஹ்மத்திற்குப் பின்னமாக ஆன்மா இல்லை; ஆன்மாவிற்குப் பின்னமாகப் பிரஹ்மமில்லை; பின்னமாயின், அநான்மாவாம்; அநான்மாவாகிய கடாதிகள் சடமாகலின், ஆன்மாவிற்குப் பின்னமான பிரஹ்மமும் சடமேயாம். ஆதலால், ஆன்மாவிற்குப் பின்னமாகப் பிரஹ்மமுமில்லை; பின்னையோ பிரஹ்மசொரூபமே ஆன்மாவாம்.

சேதனமொன்றே சர்வப் பிரபஞ்சத்திற்கும், மாயைக்கும் அதிஷ்டானமாவதால் பிரஹ்மமென்று சொல்லப்படுகிறது. அவித்தைக்கும், வியஷ்டி தேகாதிகட்கும் அதிஷ்டானமாவதால் ஆன்மாவென்று சொல்லப்படுகிறது.

தற்பதலட்சியம் பிரஹ்மமென்றும், துவம்பதலட்சியம் ஆன்மாவென்றும் சொல்லப்படும். ஈசுரசாட்சி தற்பதத்திற்கு லட்சியம், சீவசாட்சி துவம்பதத்திற்கு லட்சியம். வியஷ்டி ஸங்காத உபகிதசேதனம் சீவசாட்சி, ஸமஷ்டி லங்காத உபகிதசேதனம் ஈசுரசாட்சி. சீவனுக்கும், ஈசுரனுக்கும் ஏகத்தன்மை கூடாதாயினும் சீவசாட்சிக்கும், ஈசுரசாட்சிக்கும் உபாதியினால் அன்றிப் பேதமின்மையால் சொரூபத்தால் அவ்விரண்டுமொன்றே; மடத்தின் கண்ணுள்ள கடாகாச மடாகாசங்கட்கு உபாதியினால் பேதமேயன்றிச் சொரூபத்தால் பேதமின்மைபோல ஆன்மாவுக்கும், பிரஹ்மத்திற்கும் உபாதிபேதமேயன்றி வேறுபேதமில்லை, இரண்டு மொன்றே.

- பொன்னம்பல சுவாமிகள் உரையிலிருந்து.


பாடல் : 144

பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமநு பவம்வி டாமல்,

பலமலரின் மதுப்போலே சச்சிதா நந்தமொன்றாம் பரமார்த் தத்தைப்,

பலபொழுதுங் கண்மூடிச் சமாதியிருந் தான்விழித் துப்பார்த்த போது,

பலவடிவாஞ் சராசரசித் திரங் களெலாந் தோன்றுமொரு படமா னானே.


பொருள் :

பல கலையும் உணர்ந்த குரு மொழிந்தபடி = பல ஞானநூல்களையும் உள்ளபடியே அறிந்து அதன்படி வாழ்கின்ற குருநாதர் உபதேசித்தபடி,

பல மலரின் மதுப்போலே = அநேக பூக்களில் இருந்து தேனீக்கள் எடுத்துச் சேர்த்த தேனினைப் போல,

சச் சித் ஆநந்தம் ஒன்று  ஆம் = ஸச்சிதானந்தங்கள் அகண்ட ஏகரஸமான,

பரமார்த்தத்தை = உண்மை நிலையை,

இவனும் = இந்த சீடனும்,

அநுபவம் விடாமல் = (ஶ்ருதி யுக்திகளுக்கு ஒத்ததான) தன் அநுபவத்தை விடாமல்,

பல பொழுதும் கண்மூடிச் சமாதி இருந்தான் = நீண்ட நேரம் கண்களை மூடி ஸமாதி நிலையில் இருந்தான்.

விழித்துப் பார்த்த போது = பின்னர் (ஸமாதியில் இருந்து) விழித்துப் பார்த்த போது,

பல வடிவாம் சராசர சித்திரங்கள் எலாம் = பலவிதங்களாய் இருக்கும் நகர்வனவும், நிலைத்தனவும் ஆகிய அனைத்தும்,

தோன்றும் ஒரு படமானானே = (தன்னிடத்தில்) தோன்றும் ஒரு படம் (துணி) , போல ப்ரஹ்மம் தானானான்.


(உலகம் சித்திரமாக உருவகப்படுத்தப்பட்டதால் ப்ரஹ்மம் படமாக (துணியாக) சொல்லப்பட்டது.


பாடல் : 145

இதயமொத்த சற்குருவே நமக்கிதுவே விநோதமின்றி யினிவே றுண்டோ,

அதையு ரைத்தும் அதைநினைத்தும் இருப்பதன்றோ ஞாநி களுக் கானநீதி,

முதலுரைத்த துரியாதீ தமும்ஏழாம் பூமியுமுக் கியமா மென்ற, பதமுமதின் வகை யுமெனக் கெளிதாகத் தெளியும்வண்ணம் பணித்திடீரே.


பொருள் :

இதயம் ஒத்த சற்குருவே = எனது மனது ஏற்குமாறு ஸத் விஷயங்களை உபதேசித்தருளும் குருவே,

நமக்கு = (க்ருத க்ருத்யரான - ஜீவன்முக்தரான ) நமக்கு,

இதுவே = (நமது ஆன்மஸ்வரூபமான ப்ரஹ்மத்தைச் சிந்தித்து மகிழும்) இத்தொழில்தானே,

விநோதம் அன்றி = வேடிக்கை, விளையாட்டு,பொழுதுபோக்கு, ஆச்சர்யம் அல்லாமல்,

இனி வேறு உண்டோ = இனிமேல் செய்வதற்கு வேறு வேலை உள்ளதா ? (இல்லை),

அதை உரைத்தும் = அறிய விருப்பம் உள்ளவர்கள் வந்தால் அப்பரஹ்மத்தை அவர்களுக்கு எடுத்து உபதேசிப்பதும்,

அதை நினைத்தும் = தனித்திருக்கையில் அதையே சிந்தித்தும்,

இருப்பது அன்றோ = வாழ்வது அல்லவா,

ஞாநிகளுக்கான நீதி = ஜீவன்முகதரகளுக்கான வாழ்க்கைமுறை, ஆகையால்,

முதல் உரைத்த = முன்னே (132வது செய்யுளில்) கூறிய,

துரியாதீதமும் ஏழாம் பூமியும் முக்கியமாம் என்ற பதமும் = துரியாதீதமும், ஏழாம் பூமியும் முக்கியமானவை என்று சொல்லிய வார்த்தையும்,

அதின் வகையும் = அதில் உள்ள பிரிவுகளையும்,

எனக்கு எளிதாகத் தெளியும் வண்ணம் = நான் எளிதாக அறிந்து கொள்ளுமாறு,

பணித்திடீரே = உபதேசித்து அருளுக!


பாடல் : 146

வினவுமிடத் தஞ்ஞாந பூமிகளேழ் ஞாநபூமிகளே ழென்பார்,

இனியவற்று ளஞ்ஞான பூமிகளே ழையுமுந்தி யியம்பக் கேளாய்,

தனிவித்துச் சாக்கிரம்சாக் கிரமகா சாக்கிரம்சாக் கிரத்தைச் சார்ந்த,

கநவுகநாக் கநவுசாக் கிரம்சுழுத்தியென் றெழுபேர் கணித்தார் மேலோர்.


பொருள் :

வினவும் இடத்து = பூமிகள் எத்தனை என்று கேட்கும் பொழுது,

அஞ்ஞாநபூமிகள் ஏழ் ஞாநபூமிகள் ஏழ் என்பார் = அஞ்ஞான பூமிகள் ஏழு என்றும், ஞான பூமிகள் ஏழு என்றும் சொல்வார்கள்,

இனி அவற்றுள் = இனி அப்பூமிகளுள்,

அஞ்ஞான பூமிகள் ஏழையும் முந்தி இயம்பக் கேளாய் = அஞ்ஞான பூமிகள் ஏழினையும் முதலில் சொல்லக் கேட்பாயாக!,

தனிவித்துச் சாக்கிரம் = 1. கலப்பில்லாத பீஜ ஜாக்ரம்,

சாக்கிரம் = 2.ஜாக்ரம் (விழிப்பு),

மகாசாக்கிரம் = 3.மஹா ஜாக்ரம்,

சாக்கிரத்தைச் சார்ந்த கநவு = 4.ஜாக்ரஸ்வப்னம்,

கநா = 5.கனவு (ஸ்வப்னம்),

கநவு சாக்கிரம் = 6.ஸ்வப்ன ஜாக்ரம்,

சுழுத்தி = 7.உறக்கம் (ஸுசுப்தி),

என்று எழுபேர் கணித்தார் மேலோர் = என்று ஏழு பெயர்களைச் சொன்னார்கள் பெரியவர்கள்.


பாடல் - 147

முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திர மதுதான் முதல்வித் தாகும்,

இந்தவறி விற்பண்டில் லாவகந்தை முளைபோலா மிதுந னாவாம்,

வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாந னாவாம், நந்துமகங் கொடுநனவின் மநோ ராச்சி யஞ்செயலே நனாக்க னாவே.


பொருள் :

முந்த = ஸ்ருஷ்டி ஆதியில் அல்லது ஜாக்ரத்தின் ஆதியில்,

அகண்டத்து எழும் = மாயையுடன் கூடிய சைதந்யத்திலிருந்து வெளிப்படுகின்ற,

ஓரறிவு மாத்திரம் = சிதாபாஸத்தோடு கூடிய ஓர் அறிவு மட்டுமான,

அதுதான் முதல் வித்தாகும் = அதுவே பீஜ ஜாக்ரம் ஆகும்,

இந்த அறிவில் = பீஜ ஜாக்ரம் என்னும் அறிவில்,

பண்டு இல்லா அகந்தை முளை போலாம் = முன்பு இல்லாத அஹங்காரம் (மமகாரமும்) முளை போலத் தோன்றும்,

இது நனாவாம் = இது ஜாக்ரம் - விழிப்புநிலை - ஆகும்,

வந்து வந்து பிறவி தொறும் = உண்டாகி, உண்டாகி பிறவிதோறும்,

அகம் மமதை வளரும் = அகங்காரம், மமகாரங்கள் வளரும்,

அது மகா நனாவாம் = அது மஹா ஜாக்ரம் (பெருவிழிப்பு) ஆகும்,

நந்தும் அகம் கொடு = ஆக்கம் உடைய மனதைக் கொண்டு,

நனவின் மநோராச்சியம் செயலே = விழிப்பு நிலையில் மனோராஜ்யம் செய்வதே,

நனாக் கனாவே = ஜாக்ரத் ஸ்வப்னம் ஆகும்.


பாடல் : 148

உண்டுறங்கி மநோராச்சி யஞ்செயல்சொப் பநமெனும்பே ருடைய தாகும், பண்டுகனாக் கண்டுமறந் ததைமீண்டு நினைப்பதுசொப் பனந னாவாம், மண்டுமிருண் மூடுவது சுழுத்தியாம் அஞ்ஞாந வகைகள் சொன்னோம், விண்டுநிறை முத்திதரு ஞானபூ மிகளேழும் விளம்பக் கேளாய்.


பொருள் :

உண்டு உறங்கி மநோராச்சியம் செயல் = உணவு உண்டு பாயில் படுத்து (அற்ப காலத்தில் அநேக கார்யங்களை) மானஸீகமாக அநுபவிப்பதே,

சொப்பநம் எனும் பேர் உடையது ஆகும் = கனவு ஆகும்.

பண்டு கனாக் கண்டு மறந்ததை = முன்னர் கனவு கண்டு மறந்ததை,

மீண்டு நினைப்பது சொப்பன நனாவாம் = மீண்டும் அதை நனவில் நினைத்தும் பார்ப்பது கனவு நனவாகும்,

மண்டும் இருள் மூடுவது சுழுத்தியாம் = வாஸனைகள் நெருங்கி இருக்கும் அஞ்ஞான இருள் மூடி (ஒன்றையும் அறியாமல்) தூங்குவது உறக்கம் (ஏழாம் பூமி) ஆகும்,

அஞ்ஞாந வகைகள் சொன்னோம் = (இதுவரை) அஞ்ஞான ஏழி பூமிகளின் வேறுபாடுகளைச் சொன்னோம்,

விண்டு நிறை முத்தி தரும் = (இனி) வியாபகமாக நிறைந்திருக்கின்ற மோக்ஷத்தைத் தரும்,

ஞான பூமிகள் ஏழும் விளம்பக் கேளாய் = ஞான பூமிகள் ஏழினையும் சொல்லக் கேட்பாயாக.


பாடல்: 149

புலவர்புகழ் முதற்பூமி சுபேச்சைவிசா ரணை யிரண்டாம் பூமியாகும்,

நலதநுமா நசிமூன்றாம் பூமிசத்து வாபத்தி நாலாம் பூமி,

சொலுமசம்சத் திப்பேரும் பதார்த்தாபா வனைப்பேருந் துரியப் பேரும்,

மலிநமறு மகனேயைந் தாறேழு பூமிகளா வகுத்தார் மேலோர்.


பொருள் :

மலினம் அறு மகனே = அவித்யாதி தோஷங்களை அறுத்த மைந்தனே,

புலவர்புகழ் = (எல்லா உலகங்களும் பொய்யென்று விலக்கி ஆசை அறுத்து அறியத்தக்கதை அறிந்த)அறிஞர்கள் புகழுகின்ற (ஞானபூமிகளுள்),

முதல் பூமி சுபேச்சை = முதல் பூமி சுபேச்சை ஆகும்,

விசாரணை இரண்டாம் பூமி ஆகும் = விசாரணை இரண்டாம் பூமி ஆகும்,

நல தநுமாநசி மூன்றாம் பூமி = நல்ல ததுமானஸி என்பது மூன்றாம் பூமி ஆகும்,

சத்துவாபத்தி நாலாம் பூமி = ஸத்துவாபத்தி நாலாம் பூமி ஆகும்,

சொலும் அசம்சத்திப் பேரும் = சொல்லுகின்ற அஸம்சத்தி என்னும் பெயர் உடையதும்,

பதார்த்தாபாவனைப் பேரும் = பதார்த்தாபாவனை என்னும் பெயருடையதும்,

துரியப் பேரும் = துரியம் என்னும் பெயருடையதும்,

ஐந்து ஆறு ஏழு பூமிகளா = முறையே ஐந்து, ஆறு, ஏழு பூமிகளாக,

வகுத்தார் மேலோர் = பிரித்துக் கூறினர் பெரியோர்கள்.


பாடல்: 150

துற்சங்க நிவிர்த்திவந்து சிவஞானம் விரும்புவது சுபேச்சை யாகும்,

நற்சங்க மொழிவினவி ஞானநூல் பழகல்விசா ரணையா நம்பி,

முற்சங்க ஏடணைகள் விடல்தநுமா னசியிந்த மூன்றி னாலும்,

சற்சங்க மனதிலுண்மை அறிவுதித்தல் சத்துவா பத்தி தானே.


பொருள் :

துற்சங்க நிவிர்த்தி வந்து = மனைவி, புத்ரன், செல்வம் முதலான உலக விஷயங்கள் அநித்யமானவை என்ற விவேகத்தினால் வைராக்யத்தை அடைந்து,

சிவஞானம் விரும்புவது = நித்யமான சிவத்தை அறிய வேண்டும் என்று விரும்புவது,

சுபேச்சை ஆகும் = சுபேச்சா (சுப இச்சை) எனும் முதல் பூமி ஆகும்.

நற்சங்க மொழி = (சுபேச்சை முதிர்வால்) ஸத்ஸங்கமான குருமார்களை அணுகி அவர்கள் வாக்கால்,

ஞானநூல் வினவி = வேதாந்த சாஸ்த்ரங்களைக் கேட்டு,

பழகல் = அதை மனனம் செய்வது (கசடறக் கற்றல்)

விசாரணையா(ம்) = விசாரணை எனும் இரண்டாம் பூமி ஆகும்,

நம்பி = (முன் சொன்ன இரண்டு பூமிகளின் வலிமையினால்) குரு சாஸ்த்ர வாக்யார்த்தங்களில் ச்ரத்தை கொண்டு,

முற்சங்க ஏடணைகள் விடல் = (நிதித்யாஸனம் செய்து அந்நிதித்யாஸன அப்யாஸ வலிமையினால் ஸவிகல்ப ஸமாதி வரை அடைந்து) முன்னுள்ள மலின வாஸனைகளான இச்சைகளை விடுதலே,

தநுமானசி = தநுமானஸி ( தநு=ஸூக்ஷ்மதமம், ஸூக்ஷ்மத்தன்மையை அடைந்திருக்கும் மனம்) எனும் மூன்றாம் பூமி ஆகும்.

இந்த மூன்றினாலும் = இந்த மூன்று பூமிகளின் அப்யாஸ வலிமையால்,

சற்சங்க மனதில் = (வெளி விஷயங்களில் ஸம்ஸ்கார நாசத்தால் ஆத்யந்திக திட வைராக்ய வடிய) ஸத்வ வாஸனையோடு கூடிய மனதில்,

உண்மை அறிவு உதித்தல் = ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாதல்,

சத்துவாபத்தி தானே = ஸத்வாபத்தி (ஸத்வ ஆபத்தி = மனது பரமாத்ம ஸத்வ ரூபமான இருத்தல்) எனும் நான்காம் பூமி ஆகும்.


பாடல் : 151

தத்துவத்தின் மனமுறைத்து மித்தையெலா மறத்தல்அசம் சத்தி யாகும்,

அத்துவிதா நந்தம்வரும் திரிபுடிபோம் பதார்த்தா பாவனைய தாகும்,

வத்துநிலை யிருந்தபடி யிருந்தமவுனசு பாவம் துரிய மாகும்,

இத்துரிய பூமியைமுன் துரியாதீ தப்பதமென் றதுவுங் கேளாய்.


பொருள் :

தத்துவத்தின் மனம் உறைத்து = (முன் சொன்ன நான்கு பூமிகளின் அப்யாஸ வலிமையால் நிரதிசயாநந்த நித்ய அபரோக்ஷ) ப்ரஹ்மான்ம பாவத்தில் மனம் அழுந்தி,

மித்தையெலாம் மறத்தல் = மித்யையான அஞ்ஞானம் மற்றும் அதன் காரியங்கள் (த்வைத ப்ரபஞ்சம்) அனைத்தையும் நினையாது இருத்தலே

அசம்சத்தி ஆகும் = அசம்சத்தி எனும் ஐந்தாம் பூமி ஆகும்.

அத்துவித ஆநந்தம் வரும் = (ஐந்து பூமிகளின் அப்யாஸ வலிமையால்) அத்வைதமான (ஸ்வரூப) ஆநந்தம் மேலிடும்.

திரிபுடிபோம் = (காண்பான், காட்சி, காணப்படும் பொருள்) எனும் திரிபுடி ரூபமான பொருட்கள் நீங்கும்,

அது பதார்த்த அபாவனை ஆகும் = பதார்த்தாபாவனை எனும் ஆறாம் பூமி ஆகும்.

வத்துநிலை = (ஆறு பூமிகளின் அப்யாஸத்தால்) ஆத்ம நிலையில்,

இருந்தபடி இருந்த மவுன சுபாவம் = இருந்தபடியே இருக்கும் மௌனநிஷ்டையே,

துரியம் ஆகும் = துரியம் என்னும் ஏழாம் பூமி ஆகும்,

இத்துரிய பூமியை = இத்துரியம் எனும் ஏழாம் பூமியையே,

முன் துரியாதீதப்பதம் என்றதுவும் = முன் (132ம் பாடலில்) துரியாதீதப்பதம் என்று கூறிய வகையையும்,

கேளாய் = இப்போது கூறுகிறேன் கேட்பாயாக.


இந்த ஞானபூமி ஏழனுள் முதல் மூன்று பூமிகள் தத்துவ ஞானத்திற்குச் சாதனமும்,

நான்காவது பூமி தத்துவஞான வடிவமாய் இருத்தலின் ஜீவன்முத்தி விதேக முத்திகளுக்குச் சாதனமும், ஐந்தாவது ஆறாவது ஏழாவது பூமிகள் ஜீவன் முத்தியின் விலக்ஷணாநந்தத்திற்குச் சாதனமுமாம்.


ஈண்டு முதலாவது சாதன சதுஷ்டய பூமியும், இரண்டாவது சிரவண மனன பூமியும்,

மூன்றாவது நிதித்தியாசன பூமியும்,

நான்காவது பிரஹ்மவித்துப் பூமியும்,

ஐந்தாவது பிரஹ்மவித்  வரன் பூமியும்,

ஆறாவது பிரஹ்மவித் வரியான் பூமியும்,

ஏழாவது பிரஹ்மவித் வரிஷ்டன் பூமியுமாம்.

- கோ. வடிவேல் செட்டியார்.



பாடல் : 152

முற்புவிமூன் றினும்உலகம் தோன்றுதலால் சாக்கிரமா மூன்றற்கப்பால்,

சொற்பனமாம் அதுவுமுமெள்ள நழுவுமைந்தாம் பூமியே சுழுத்தி யாகும், அற்புதமாம் சுகானுபவ மிகுமாறாம் புவிதுரியம் அதற்கப் பாலோர்,

கற்பனை விலாதவிட அதீதமென்று மௌனமாக் காட்டும் வேதம்.


பொருள் :

முற்புவிமூன் றினும்உலகம் தோன்றுதலால் = முன்னுள்ள சுபேச்சை விசாரணை ததுமானஸி எனும் மூன்று நிலைகளிலும் உலகம் (பூர்ண ஞானம் இன்மையால்) உண்மையாகத் தோன்றுவதால், 

சாக்கிரமாம் = அம்மூன்று பூமிகளும் விழிப்பு நிலை போலாகும்.

மூன்றற்கப்பால் = மூன்று பூமிகளுக்கும் மேலுள்ள நான்காம் பூமி (ஸத்துவாபத்தியில் உலகம் கனவு போல மித்யையாகத் தோன்றுவதால்) 

சொற்பனமாம் = அது சொப்பனம் போலாகும்,

அதுவும் மெள்ள நழுவும் = அந்த பொய்த்தோற்றமும் மெதுவாக நழுவி நிற்கும்,

ஐந்தாம் பூமியே சுழுத்தி யாகும் = ஐந்தாம் பூமியான அஸம்ஸத்தி உறக்கம் போலாகும்,

அற்புதமாம் சுக அனுபவம் மிகும் = அற்புதமான ஆநந்த அனுபவம் மிகுந்து உண்டாகும்,

ஆறாம் புவி துரியம் = ஆறாம் பூமி (நான்காம் அவஸ்தை ஆவதால்) துரியம் ஆகும்,

அதற்கு அப்பால் = அதற்கும் மேல்,

ஓர் கற்பனை இலாத இடம் = (ஸத்து, அஸத்து முதலிய) யாதொரு கற்பனையும் இல்லாத ஏழாம் பூமியை (விஷயஸம்பந்தம் எதுவும் இல்லாதிருத்தலால்),

அதீதம் என்று = துரியாதீதம் என்று,

வேதம் மௌனமாக் காட்டும் = வேதங்கள் மெளனமாகக் காண்பிக்கும்.


பாடல் : 153

துரியநிலந் தனைத்துரியா தீதமெனின் மயக்கமென்று கருதி மேலோர்,

அரியதொரு விதேக முத்தி அதீத மென்பார் அதுகணக்கில் ஆறாம் பூமி,

மருவுசுழுத் தியிற்காட்சி சுழுத்தியென்பார் என்பதுநீ மனத்தில் கொள்வாய், பெருமைதரு ஞானபூ மியின்விகற்பம் இன்னமுண்டு பேசக் கேளாய்.


பொருள் :

துரிய நிலந்தனை துரியாதீதம் எனின் = துரியம் எனும் பெயரை உடைய (வாழும் போதே அடையும்) ஏழாம் பூமியை துரியாதீதம் என்று சொன்னால்,

மயக்கம் என்று கருதி = மயக்கம் உண்டாகும் என்று நினைத்து,

மேலோர் = பெரியவர்கள்,

அரியதொரு விதேக முத்தி = அரிதான ஒப்பற்ற விதேக முக்தியை,

அதீதம் என்பார் = துரியாதீதம் என்று கூறுவர்.

அது = அவ்வாறு கூறுவது,

கணக்கில் = பூமிகளின் கணக்கில் (முதல் மூன்று ஜாக்ரம், நான்காவது ஸ்வப்னம் என்று முற்கூறிய முறைப்படியே கொண்டு)

சுழுத்தியில் = (ஐந்தாவதான) உறக்கத்தில்,

மருவு = கிட்டினதான,

ஆறாம் பூமி = ஆறாம் பூமியான பதார்த்தாபாவனையைச் சேர்த்து,

காட்சி சுழுத்தி என்பார் = அற்புதமான காட ஸுசுப்தி என்பார்,

என்பது நீ மனத்தில் கொள்வாய் = என்று இவ்விதம் கூறுவதையும் நீ மனதில்கொள்வாய்.

பெருமை தரு ஞான பூமியின் விகற்பம் = சிறுமையைப் போக்கி பெருமையைத் தரும் ஞானபூமிகளின் வேறுபாடுகள்,

இன்னம் உண்டு = மேலும் உள்ளன,

பேசக் கேளாய் = அவற்றையும் கூறக் கேட்பாயாக.


1. சுபேச்சை

2. விசாரணை                 - விழிப்பு

3. தநுமானஸி


4. சத்துவாபத்தி              - கனவு


5.அசம்சத்தி                     - உறக்கம்

         

6. பதார்த்தாபாவனை    - துரியம்


7. துரியம்                          - துரியாதீதம்



ஞானவாஸிஷ்டப்படி...


1. சுபேச்சை

2. விசாரணை                   - விழிப்பு

3. தநுமானஸி


4. சத்துவாபத்தி                - கனவு


5.அசம்சத்தி                       - க்ஷீண சுசுப்தி 

   

6. பதார்த்தாபாவனை     - காட சுசுப்தி


7. துரியம்                           - துரியம்


துரியாதீதம்                       - விதேக முக்தி



பாடல் : 154

முன்னிலங்க ளேறியமூ வருமப்பி யாசிகளா முத்தர் அல்லர்,

பின்னிலங்கள் வரன்வரியான் வரிட்டனெனுஞ் சீவன்முத்தர் பேத மாகும்,

சொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தாந் தூய முத்தர், 

இன்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல் வேனே.


பொருள் :

முன் நிலங்கள் ஏறிய மூவரும் = சுபேச்சை, விசாரணை, தநுமானஸி என்னும் முன் மூன்று பூமிகளில் ஏறியிருக்கும் மூவரும்,

அப்பியாசிகள் ஆம் = ஸாதகர்கள் ஆவர்,

முத்தர் அல்லர் = ஸித்தர்கள் (ஜீவன்முக்தர்) அல்லர்,

பின் நிலங்கள் = அசம்சத்தி, பதார்த்தா பாவனை, துரியம் என்னும் பின் மூன்று பூமிகளில் ஏறியிருப்பது,

வரன் வரியான் வரிட்டன் எனும் சீவன்முத்தர் பேதம் ஆகும்,

சொன்ன நடுப்பூமி வந்த ஞானிகளே = சொல்லிய ஸத்துவாபத்தி எனும் நடுப்பூமி வந்த அறிஞரே,

பிரமவித்தாம் தூய முத்தர் = பிரஹ்மவித்து எனும் தூய்மையான முக்தர் ஆவார்.

இன்னமும் அப்பூமிகளின் பெருமைதனை = மேலும் அந்த ஞானபூமிகளின் பெருமைகளை,

நீ அறிய யான் சொல்வேனே = நீ அறியும்படி நான் கூறுவேன்.


பாடல் : 155

நாலாம்பூ மியில்வருமுன் மூன்றுபூ மியுமடைந்து நடந்து மாண்டோர்,

மேலான பதமடைந்து பிறந்துமெள்ள மெள்ளவந்து வீடு சேர்வார்,

மாலான பவத்தில்விழார் முதற்பூமி கிடைப்பதுவே வருத்த மைந்தா,

காலான முதற்பூமி கைவந்தான் முத்தியுங்கை வந்த தாமே.


பொருள் :

நாலாம் பூமியில் வரும் முன் = சத்துவாபத்தி எனும் நான்காம் பூமியை அடைவதற்கு முன்னர்,

மூன்று பூமியும் அடைந்து நடந்து மாண்டோர் = சுபேச்சை, விசாரணை, தநுமானஸி ஆகிய மூன்று பூமிகளையும் அடைந்து வாழ்ந்து இறந்தோர்,

மேலான பதம் அடைந்து = சுவர்க்கம் முதலான உயர்ந்த லோகங்களை அடைந்து (அங்குள்ள சுக போகங்களை அனுபவித்து பின்னர்),

பிறந்து = (பூமியில் ஒழுக்கமுள்ளவராகவும் செல்வந்தராகவும் உள்ளோர் வீட்டில், அல்லது யோகிகள் வம்சத்தில் பிறந்து, 

மெள்ள மெள்ள வந்து வீடு சேர்வார் = படிப்படியாக முன்னேறி மோக்ஷ வீட்டினை வந்தடைவர்,

மாலான பவத்தில் விழார் = மயக்கத்திற்குக் காரணமான பிறவியில் விழமாட்டார்கள் (முந்நிலையைவிட கீழ்நிலையை அடைய மாட்டார்கள்),

முதற்பூமி கிடைப்பதுவே வருத்தம் = சுபேச்சை எனும் முதல் பூமி கிடைப்பதே கடினம்,

மைந்தா = மகனே,

காலான முதற்பூமி கைவந்தால் = ( மற்றைப் பூமிகளுக்கு) வழியான முதல் பூமி ஒருவனுக்கு வசமானால்,

முத்தியும் கை வந்ததாமே = முக்தியும் அவனுக்கு வசமாகும்.



பாடல் : 156

இப்புவியில் இஞ்ஞாந பூமியொன்றி லிரண்டிலடைந் திருந்தா ரானால்,

அப்புருடர் மிலேச்சரா கிலுமுத்தர் குருபாதத் தாணை மெய்யே,

தப்புரை யென் றவர்கெடுவார் நடுவான மறைகளைநீ சங்கி யாதே,

செப்புமொழி வழிதிடமா யகம்பிரம மென்றிருந்து தெளிந்தி டாயே.


பொருள் :

இப்புவியில் = இந்த பூமியில்,

இஞ்ஞாந பூமி ஒன்றில் இரண்டில் = இந்த ஞானபூமிகளில் சுபேச்சை எனும் ஒன்றாவது பூமியில் அல்லது விசாரணை எனும் இரண்டாவது பூமியில்,

அடைந்து இருந்தார் ஆனால் = முயற்சி, பயிற்சி உடையவராக இருந்தாரானால்,

அப்புருடர் = அந்த மனிதர்,

மிலேச்சர் ஆகிலும் = (வைதிக தர்மத்திற்கு) அந்நியர் ஆகிலும் (யாராகிலும்),

முத்தர் = (காலப்போக்கில்) முக்தர் ஆவர்,

குரு பாதத்து ஆணை = ஸற்குரு பாதத்தின் மீது ஆணை,

மெய்யே = இது ஸத்தியமே.

தப்புரை என்றவர் = இது கபட வார்த்தை என்று சொல்பவர்,

கெடுவார் = அழிந்துபோவார்,

நடுவான மறைகளை = (குழந்தைகளிடத்தில் தாய் போலும்) பாரபட்சமற்ற வேத வாக்கியங்களை,

நீ சங்கியாதே = நீ ஸந்தேஹப்படாதே,

செப்பு மொழி வழி = வேதங்கள் உரைக்கும் உபதேசவழியில்,

திடமாய் = உறுதியுடையவனாக

அகம் பிரமம் என்று இருந்து = நான் பிரஹ்மமாக இருக்கிறேன் என்று இடைவிடாமல் சிந்தித்து ப்ரஹ்மமாகவே இருந்து,

தெளிந்திடாய் = ஸந்தேஹம் தெளிந்திடுவாயாக.


பாடல் : 157

பொல்லாத மிலேச்சருக்கும் விதேகமுத்தி தருஞான பூமி யென்று,

நெல்லாகி முளைக்குமெ னைத் தண்டுலமாக்கியகுருவே நீர்சொன் னீரே, இல்லாளுங் குடும்பம்விட்டுச் சந்நியா சம்புகுந்தே காங்கி யானோர்,

அல்லாமன் முத்திபெறா ரென்று சிலர் சொலுமயக்க மகற்று வீரே.


பொருள் :

நெல்லாகி முளைக்கும் எனை = உமியோடு கூடியிருந்து முளைக்கும் நெல்லை போல (அவித்யா, காம, கர்மங்களோடு கூடிப் பிறக்கும்) என்னை 

தண்டுலமாக்கிய குருவே = (முளைப்பதற்குக் காரணமான உமி முதலானவற்றை குத்திப் போக்கிய) அரிசியைப் போல (பிறவிக்குக் காரணமான அவித்யாதிகளை சுருதி, யுக்தி, அனுபவங்களால் உபதேசித்துப் போக்கி, பிறப்பு, முதுமை, மரணம் இல்லாத) ப்ரஹ்ம ரூபமாக ஆக்கிய குருவே,

பொல்லாத மிலேச்சருக்கும் = துஷ்டத்தன்மை உள்ள மிலேச்சருக்கும் (பசுமாம்சம் முதலானவற்றை உண்ணும் க்ராதர் - வேடர் - முதலான சாதியாருக்கும்)

ஞானபூமி விதேகமுத்தி தரும் என்று = (சுபேச்சை முதலான) ஞானபூமிகள் (அடையப்படுமானால்) விதேக கைவல்யத்தைக் கொடுக்கும் என்று,

நீர் சொன்னீரே = நீங்கள் கூறி அருளினீர்களே!

சிலர் = (இதற்கு முரணாகச்) சிலர்,

இல்லாளும் குடும்பம் விட்டு = இல்லறத்தில் இருப்பவர்களும் குடும்பத்தினைத் விட்டு விலகி,

சந்நியாசம் புகுந்து = துறவறத்தை அடைந்து,

ஏகாங்கி ஆனோர் அல்லாமல் = (வனம், குகை முதலானவற்றில்) தனிமையிலிருந்து ஞானபூமிகளை பயிற்சி செய்பவர்கள் அல்லாமல் மற்றவர்கள் (இல்லறவாசிகள்),

முத்திபெறார் என்று = மோக்ஷம் அடையமாட்டார்கள் என்று

சொலும் மயக்கம் அகற்றுவீரே = சொல்லும் ஐயத்தை அகற்றுவீராக!


பாடல் : 158

சிட்டர்புகழ் மகனேநீ சங்கித்த சங்கைநன்று தெரியக் கேளாய்,

கட்டழியுந் துறவுநால் வகையாகும் அவைகளுக்கங் காகும் பேர்கள்,

பட்டதுயர் கெடுங்குடீ சகம்வெகூ தகமஞ்சம் பரம வஞ்சம்,

விட்டகலுந் துறவுக்கு விராகங்கா ரணமன்றி வேட மன்றே.


பொருள் :

சிட்டர் புகழ் மகனே = பெரியவர்களால் புகழப்படுகின்ற மைந்தனே,

நீ சங்கித்த சங்கை நன்று = நீ கேட்ட கேள்வி நல்லது,

தெரியக் கேளாய் = (அதற்கு விடை) தெரியக் கேட்பாயாக,

கட்டு அழியும் துறவு நால் வகையாகும் = பந்தம் விட்ட துறவு நான்கு பிரிவுகள் ஆகும்,

அவைகளுக்கு அங்கு ஆகும் பேர்கள் = அந்த நால்வகைத் துறவுக்கும் உள்ள பெயர்கள்,

குடீசகம், வெகூதகம் அஞ்சம் பரம அஞ்சம் = குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் (ஆகும்),

பட்ட துயர் கெடும் = (இவைகளால் ஸம்ஸாரத்தில்) பட்ட துன்பம் அழிந்து போகும்.

விட்டு அகலும் துறவுக்கு = குடும்பத்தை விட்டு நீங்கும் துறவு வாழ்க்கைக்கு,

விராகம் காரணம் அன்றி = வைராக்யம் காரணம் அல்லாமல்,

வேடம் அன்றே = (காஷாய வஸ்திரம் முதலியவை அணிந்த) வேஷம் காரணம் அல்ல.


பாடல் : 159

மந்தமுந்தீ விரமுந்தீ விரதரமும் எனமூன்று வகைவி ராகம்,

வெந்துயரம் வரும்பொழுது குடும்பத்தை வெறுத்துவரும் விராக மந்தம்,

இந்தவுட லளவுமனை தனம்வேண்டா மெனவிடல்தீ விரமென் பார்கள்,

அந்தணனூர் மித்தையென விடலதுதீ விரதரமா மறிந்தி டாயே.


பொருள் :

விராகம் = விராகமானது,

மந்தமும் தீவிரமும் தீவிரதரமும் என மூன்று வகை = மந்தம், தீவிரம், தீவிரதரம் என மூன்று வகை ஆகும் ,

வெந்துயரம் வரும்பொழுது = ( மனைவி, மக்கள் இறந்து போதல் முதலான) கொடிய துன்பம் வரும்பொழுது,

குடும்பத்தை வெறுத்துவரும் விராகம் = (அத்துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாழ்க்கை மிகக் கொடியது, இதனை ஒழிக்க வேண்டும் என்று) குடும்பத்தை வெறுத்துவரும் வைராக்யம்,

மந்தம் = மந்தம் ஆகும்,

இந்த உடல் அளவும் = இந்த உடல் உள்ள அளவும்,

மனை தனம் வேண்டாம் என விடல் = மனைவி, செல்வம் எதுவும் வேண்டாம் என வெறுத்து விடுகிற உறுதியை,

தீவிரம் என்பார்கள் = தீவிர வைராக்யம் என்பார்கள்,

அந்தணன் ஊர் மித்தை என விடல் அது = (மிகு புண்ய பலத்தினால்) ப்ரஹ்மலோகம் முதலியவையும் மித்யை ஆதலால், நமக்கது வேண்டாம் என வெறுத்து விடுதல்,

தீவிரதரமாம் = தீவிரதர வைராக்யம் ஆகும்,

அறிந்திடாயே = என அறிந்து கொள்வாயாக.


பாடல் : 160

பாவி மந்த விராகத்தில் சந்நியா சங்களொன்றும் பலித்தி டாதே,

தீவிரத்தில் குடீசகமும் வெகூதகமு மென்றிரண்டு திறங்க ளுண்டாம்,

தாவிநடந் திடத்திடமி லாதவர்க்குக் குடீசகமும் சகங்க ளெங்கும்,

மேவிநடந் திடத்திடமுள் ளவர்க்குவெகூ தகமுமென விதித்தார் மேலோர்.


பொருள் :

பாவி மந்த விராகத்தில் = பாவியினது மந்த வைராக்யத்தில்,

சந்நியாசங்கள் ஒன்றும் பலித்திடாதே = (நால்வகை ஸந்யாஸங்களுள்) எந்த ஒரு துறவும் பலித்திடாது,

தீவிரத்தில் = தீவிர வைராக்யத்தில்,

குடீசகமும் வெகூதகமும் என்று இரண்டு திறங்கள் உண்டாம் = குடீசகம் என்றும், வெகூதகம் என்றும் இரண்டு வகைத் துறவு உண்டு.

தாவி நடந்திடத் திடமிலாதவர்க்குக் குடீசகமும் = துள்ளி நடந்து யாத்திரை செல்வதற்கு சக்தி இல்லாதவர்களுக்கு குடீசக ஸந்ந்யாஸமும்,

சகங்கள் எங்கும் மேவி நடந்திடத் திடம் உள்ளவர்க்கு = பூமியில் எவ்விடத்தும் யாத்திரை செல்லச் சக்தி உள்ளவர்களுக்கு 

வெகூதகமும் என = வெகூதக (பகூதக) ஸந்ந்யாஸம் என்றும்,

விதித்தார் மேலோர் = விதித்தனர் பெரியவர்கள்.


பாடல் : 161

இருவகைதீ விரதரத்து மஞ்சனென்றும் பரமாஞ்ச னென்றுஞ் சொல்வர்,

வருமஞ்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாரா தென்பார்,

பரமாம்ச னுக்குமுத்தி யிவ்வுலகின் ஞாநத்தால் பலிக்கு மென்பார்,

திரமருவும் பரமாஞ்சன் தானுமிரு வகையாகும் செப்பக் கேளாய்.


பொருள் :

தீவிரதரத்தும் = தீவிரதர வைராக்யத்திலும்,

அஞ்சன் என்றும் = ஹம்ஸ ஸந்ந்யாஸி என்றும்,

பரம அஞ்சன் என்றும் = பரமஹம்ஸ ஸந்ந்யாஸி என்றும்,

இருவகை சொல்வர் = இருவகை ஸந்நியாஸமாகச் சொல்வார்கள் (பெரியவர்கள்).

வரும் அஞ்சனுக்கு முத்தி = அவ்விரண்டில் முதலாவதாக வரும் ஹம்ஸ ஸந்ந்யாஸிக்கு முக்தியானது,

சத்தியலோகத்து அன்றி வாராது என்பார் = ப்ரஹ்மலோகத்தில் அன்றி இவ்வுலகில் இல்லை என்று சொல்வர் (பெரியவர்கள்),

பரம அஞ்சனுக்கு = பரமஹம்ஸ ஸந்நியாஸிக்கு,

முத்தி  = முக்தியானது,

இவ்வுலகின் ஞாநத்தால் பலிக்கும் என்பார் = இந்த உலகில் ஆத்மஞானத்தால் ஏற்படும் என்று சொல்வர் (பெரியவர்கள்),

திரமருவும் பரம அஞ்சன் தானும் = வைராக்யமும் தீவிர ஜிஜ்ஞாசை (ஞான வேட்கையும்) பொருந்தியிருக்கும் பரம ஹம்ஸ ஸந்நியாஸியும்

இரு வகை ஆகும் = இருவகையாக இருப்பார்கள்,

செப்பக் கேளாய் = அவற்றைச் சொல்லக் கேட்பாயாக!


பாடல் : 162

சிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்களவ ரிற்சிஞ் ஞாசு,

மெய்ஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூ மியுள்நடக்கும் விவேகி யானோன்,

சுஞ்ஞான வானென்போன் சீவந்முத்தி யடைந்திருக்குந் தூய மேலோன்,

அஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசு மிருவகையா மதுவுங் கேளாய்.


பொருள் :

சிஞ்ஞாசு ஞானவான் என்ற இரண்டு பேர்கள் = (பரமஹம்ஸ ஸந்ந்யாஸிகளுள்) ஜிஞ்ஞாஸு, ஞானவான் என்று இரண்டு விதம் ஆவர்,

அவரில் சிஞ்ஞாசு = அவ்விருவருள் ஜிஞ்ஞாஸுவானவர்,

மெய்ஞ்ஞான பூமியில் = தத்துவ ஞான பூமிகளுள்,

முன் மூன்று பூமியுள் நடக்கும் = (சுயேட்சை, விசாரணை, தநுமாநஸி எனும்) முதல் மூன்று பூமிகளுள் செல்லும்

விவேகி ஆனோன் = விவேகி ஆவான்,

சுஞ்ஞானவான் என்போன் = நல்ல ஞானவான் என்பவன்,

சீவந்முத்தி அடைந்திருக்கும் தூய மேலோன் = ஜீவன் முக்தியை அடைந்துள்ள தூய்மையான பெரியவன் ஆவான்,

அஞ்ஞானம் அகலும் = அஜ்ஞானம் முழுவதும் நீங்கும்,

அந்த ஜிஞ்ஞாசும் இருவகையாம் = அந்த ஜிஞ்ஞாஸுவின் பாகுபாடும் இருவிதம் ஆகும்,

அதுவும் கேளாய் = அவற்றையும் சொல்கிறேன், கேட்பாயாக.


பாடல் : 163

பந்தமனை துறந்துசிலர் அதிதிகளாய் இருந்தடைவர் பரம ஞாநம்,

அந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரரா யிருந்துசில ரடைவர் ஞாநம்,

இந்த வகைச் சாத்திரத்தும் உலகத்து நடப்பது கண் டிருந்து மைந்தா,

சிந்தனையின் மயக்கமென்னே சுருதியுத்தி வநுபவத்தால் தெளிந்தி டாயே.


பொருள் :

சிலர் = சிலபேர்,

பந்தமனை துறந்து = பந்தரூபமான மனைவி, மக்கள், தனம் முதலானவற்றை சாஸ்த்ர விதிப்படி துறந்து,

அதிதிகளாய் இருந்து = யதிகளாய் இருந்து (குருவை அடைந்து)

பரமஞாநம் அடைவர் = (ஞானபூமிகளை பயிற்சி செய்து) ப்ரஹ்ம ஞானம் அடைவார்கள்,

சிலர் = சிலபேர்,

அந்தணர் மன்னவர் வணிகர் சூத்திரராய் இருந்து = ப்ராஹ்மணர், க்ஷத்தியர், வைஷ்யர், சூத்திரர் ஆக (இல்லறத்தில் இருந்தே தம்தம் வர்ண தர்மத்தை பின்பற்றி வாழ்ந்துகொண்டே, கர்மபலனில் மட்டும் பற்றை விட்டு மானஸ ஸந்ந்யாஸிகளாக இருந்து)

ஞாநம் அடைவர் = (ஞானபூமிகளின் பயிற்சியினால்) ப்ரஹ்ம ஞானத்தை அடைவார்கள்,

இந்த வகைச் சாத்திரத்தும் = இந்தப்படி சாஸ்த்ரங்களிலும்,

உலகத்து நடப்பது = உலகத்தில் நடப்பதும்,

கண்டிருந்து = பார்த்திருந்தும்,

மைந்தா = மகனே,

சிந்தனையில் மயக்கம் என்னே = (சிலரது சொற்களால் - 157 ம் செய்யுள்) உனது மனதில் மயக்கம் உண்டாவது எதனால்?

சுருதி யுத்தி அநுபவத்தால் தெளிந்திடாயே = சுருதி வாக்யங்களாலும், யுக்தி சிந்தனையினாலும், அநுபவ ஆராய்ச்சியினாலும் அறிவிலே தெளிவை அடைந்திடுவாயாக.


ஞானபல சதுஷ்டயம் கூறல்

துக்க அபாவம்(ஸர்வதுக்க நிவ்ருத்தி), ஸர்வகாமாப்தி(பரமாநந்தப் ப்ராப்தி), க்ருதக்ருத்யத்வம், ப்ராப்தப்ராப்யத்வம்.


துக்க அபாவம்

பாடல் : 164

பிறந்ததுண் டானா லன்றோ பிறகுசா வதுதா னுண்டாம்,

பிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே,

பிறந்தது நானென் றாகில் பிரமமன் றந்த நானே,

பிறந்தது மிறந்த தற்ற பிரமமா நானே நானே.


பொருள் :

பிறந்தது உண்டானால் அன்றோ = (முன்னொரு காலத்தில் வேறொன்றிலிருந்து நான்) பிறந்தேன் என்பது இருந்தால் அல்லவா,

பிறகு சாவது தான் உண்டாம் = (பின்பொருகாலத்தில் எனக்கு) இறப்பும் உண்டாகும்,

பிறந்ததே இல்லை என்னும் பிரமம் ஆவதுவும் நானே = பிறப்பே இல்லாத ப்ரஹ்மமாக நான் இருக்கிறேன்,

பிறந்தது நான் என்றாகில் = நான் பிறந்தேன் என்று இருந்தால்,

அந்த நான் பிரமம் அன்று = பிறந்த (கார்யகரண ஸங்காத மாகிய) அந்த உடலாகிய நான் ப்ரஹ்மம் அன்று,

பிறந்ததும் இறந்தது(ம்) அற்ற பிரமம் ஆம் நானே = பிறப்பு இறப்பு (முதலான ஷட்பாவ விகாரம்) இல்லாத அஸங்க பரிபூர்ண ப்ரஹ்மம் ஆகிய கூடஸ்தனே, 

நானே = நான்.


பாடல் : 165

நானென்ற பிரமமான நானேநா னறியே னென்றால்,

நானென்ப தேது பின்னை நம்முடைப் புந்தி யென்னில்,

தானது மயக்கந் தன்னில் சாகுமே சாவா தாகி,

நானென நிறைந்தி ருந்த ஞாநமா நானே நானே.

பொருள் :

நான் என்ற பிரமமான நானே நான் = (மெளன நிலையில் யாதொன்றும் இல்லாமல் இருந்த போது) இருக்கும் யான் என்று அறியப்படுகிற ப்ரஹ்மரூபமான ஆத்மாவாகிய நான்,

அறியேன் என்றால் = (மெளனநிலையில் தான் மட்டுமாயிருக்கும்) ஆத்மாவை அறியேன் நான் என்று சொன்னால்,

பின்னை = பின்னர்,

நான் என்பது ஏது = நான் என்று சொல்வது எது?,

நம்முடைப் புந்தி என்னில் = நம்முடைய அறிவு தான் கூறுகிறது என்றால்,

அதுதான் மயக்கம் தன்னில் சாகுமே = அந்த அறிவுதான் தூக்க மயக்கத்தில் இல்லாமல் போகுமே,

சாவாதாகி = அப்போது அதனோடு சாகாததாகி,

நான் என நிறைந்திருந்த = (நான் ஒன்றையும் அறியாமல் உறங்கினேன் என்று விழித்தபிறகு உணரும்) தூக்கம் முழுவதும் நிறைந்திருந்த நான்,

ஞாநம் ஆம் நானே = ஞானரூபமான ஆத்மாவே,

நானே = நான்.


ஸர்வகாமாப்தி

பாடல் : 166

நிறைந்தவா றெந்த வாறு நிலைதெரிந்தில னென் றாயேல்,

அறிந்ததாஞ் சுழுத்தி தன்னி லாநந்த மதுவே யாகும்,

குறைந்ததற் காநந் தந்தான் குவலயந் தன்னி லில்லை,

நிறைந்ததே யிந்த வான்மா நிதானமிவ் வறிவு தானே.


பொருள் :

நிறைந்தவாறு எந்தவாறு = (ஞானரூபமான ஆத்மா) பூரணமாய் இருக்கும் தன்மை எந்தக் காரணத்தினால்,

நிலை தெரிந்திலன் என்றாயேல் = (என்று) நிச்சயமான காரணத்தை நான் அறியவில்லை என்று நீ கூறுவாயேயானால்,

சுழுத்தி தன்னில் அறிந்ததாம் = ஆழ்ந்த உறக்கத்தில் அஜ்ஞானத்தை அறிந்ததாகிய,

அதுவே ஆநந்தம் ஆகும் = ஆத்மாவே (வரையறையற்ற) ஆநந்தம்  ஆகும் (ஆகவே ஆத்மா பரிபூர்ண ப்ரஹ்மாகும்),

குறைந்ததற்கு ஆநந்தம் தான் = குறைவுடையதற்கு ஆநந்தமானது,

குவலயம்  தன்னில் இல்லை = உலகில் ஓரிடத்திலும் காணப்படவில்லை,

இந்த ஆன்மா நிறைந்ததே = ஆகவே இந்த ஆத்மா பூர்ணமானது தான்.

இவ்வறிவு தானே நிதானம் = இந்த பரிபூரண ப்ரஹ்ம சைதந்யமே உலகத்திற்கு முதற்காரணமாகும்.


எதுவும் இல்லாதபோது எது இருக்கிறதோ அது பூர்ணமானது. ஸ்வயமாயிருப்பது, ஸ்வதந்திரமானது.


உலகிற்கு ஆதிகாரணம் ஆத்மா

பாடல் : 167

மனத்தினால் எண்ணித் தானே வந்ததிவ் வுலக மாகும்,

நினைத்திடில் அநேக லோக நிற்பதவ் வறிவி லன்றோ,

அனைத்தையும் கடந்தப் பாலும் அந்தமற் றறிவி தாமென்று,

எனைத்தனி விசாரித் திட்டால் ஏகமாய் நிறைந்தோ னானே.


பொருள் :

இவ்வுலகம் = (ஆகாயம் முதல் உடல் வரையிலான) இந்த உலகம்,

மனத்தினால் எண்ணித் தானே வந்தது ஆகும் = மனத்தால் பாவனை (கற்பனை) செய்தே உண்டானதாகும்,

நினைத்திடில் = ஆராய்ந்து பார்த்தால்,

அநேக லோக(ம்) நிற்பது = எண்ணற்ற உலகங்களும் (அம்மனத்தோடு கூடி) இருப்பது,

அவ்வறிவில் அன்றோ = (கடலில் அலைகள் போல) அந்த சைதந்யத்தில் அல்லவா?,

இது அறிவு ஆம் என்று = (அறிவில் தோன்றி அறிவில் நின்று அறிவிலே லயமாகும்) இம்மனம் முதலான உலகங்கள் யாவும் (கடலில் உள்ள அலைகள், நீர்க்குமிழிகள் அனைத்தும் நீரே போல) ஆத்ம சைதந்யமே ஆகும் என்று,

எனைத் தனி விசாரித்திட்டாலே = அறிவாகிய எனது ஏக ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறிந்தால்,

அனைத்தையும் கடந்து = (மனம் முதலான உலகங்கள் அனைத்தும் மித்யை என்று கடந்து),

அப்பாலும் அந்தமற்ற = அதற்கு மேலும் முடிவில்லாத,

ஏகமாய் = ஸ்வகதாதி வேறுபாடுகளற்ற ஒன்றாக,

நிறைந்தோன் நானே = பூர்ணமாக இருப்பவன் நான்.


வித்யாநந்தம் (முன் 133 ஆம் பாடலில் கூறியது)

ஸர்வகாமாப்தி பெற உபாயம்

பாடல்: 168

அந்தவா றிருந்து கொண்டே ஆநந்த மநுப விக்க,

எந்தவா றிருந்து கொண்டால் எனக்கிது தெரியு மென்னில்,

இந்தமூன் றவஸ்தை தம்முள் எழுந்திடும் விருத்தி நீக்கில்,

அந்தவா றிருந்து நீயும் ஆநந்த மடைய லாமே.


பொருள் :

அந்தவாறு இருந்துகொண்டு = முன் சொன்னபடி ஏகமாக, பூர்ணமாக இருந்து கொண்டு,

ஆநந்தம் அநுபவிக்க = ஸர்வகாமாப்தி என்னும் வித்யாநந்தத்தை அனுபவிக்க,

எந்தவாறு இருந்து கொண்டால் = எப்படி வாழ்ந்தால்,

இது எனக்கு தெரியும் என்னில் = எல்லா ஆசைகளும் பூர்த்தி அடைந்திருக்கும் நிலை எனக்கு விளங்கும் என்று கேட்பாயாகில்,

இந்த மூன்று அவஸ்தை தம்முள் = நாம் அன்றாடம் அனுபவிக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில்,

எழுந்திடும் விருத்தி நீக்கில் = எழுகின்ற ஸத்வ(சாந்த), ராஜஸ (கோர), தாமஸ (மூட) எண்ணங்களை விலக்குவாயானால்,

அந்தவாறு நீயும் இருந்து = முன்கூறியபடியே (நிறைந்தவனாய்) நீயும் இருந்து,

ஆநந்தம் அடையலாமே = வித்யாநந்தம் அடையலாம்.


பாடல் : 169

வாதனா வசத்தி னாலே வருகிற விருத்தி யெல்லாம்,

ஏதினா லடக்க லாகு மென்றுதான் விசாரஞ் செய்யில்,

போதமா மிராசன் தானாய்ப் புந்தியைம் புலன்க ளெல்லாம்,

தாதரா யிருக்கப் பெற்றால் சகலமு மடங்குந் தானே.


பொருள் :

வாதனா வசத்தினாலே = வாஸனையின் தூண்டுதலால்,

வருகிற விருத்தியெல்லாம் = மனதில் எழுகின்ற எண்ணங்கள் எல்லாவற்றையும்,

ஏதினால் அடக்கல் ஆகும் என்று = எந்த உபாயத்தினால் நீக்க முடியும் என்று,

தான் விசாரம் செய்யில் = நாம் ஆராய்ந்து பார்த்தால்,

போதம் ஆம் இராசன் தானாய் = ஞானரூபமான ஆத்ம ஸாம்ராஜ்ய அரசனாகி,

புந்தி ஐம்புலன்கள் எல்லாம் = மனமும் ஐம்பொறிகள் யாவும்,

தாதர் ஆய் இருக்கப் பெற்றால் = தன் ஆளாக இருக்கப்பெற்றால் (தனது வசமாக இருந்தால்),

சகலமும் தானே அடங்கும் = ஸகல வாஸனைகளும் தானே அடங்கும்.


பாடல் : 170

விருத்திக ளடக்க வின்னம் விநோதமாம் யோகத் தாலே,

துருத்திபோ லூது மூச்சைச் சுகமுட னடக்கி னிற்கும்,

கருத்ததற் கில்லை யென்னில் காரண சரீர மாகிப்,

பெருத்ததோ ரவித்தை தன்னைப் பிடுங்கிடி லடங்குந் தானே.


பொருள் :

விருத்திகள் அடக்க = விருத்திகளை - எண்ணங்களை (மனதை) அடக்க வேண்டுமானால்,

இன்னம் விநோதம் ஆம் யோகத்தாலே = மேலும் சிறப்பான யோகப்பயிற்சிகளால்,

துருத்தி போல் ஊது மூச்சை = (கொல்லனின்) துருத்தி போல நாசி வழியே சென்று வரும் சுவாசத்தை,

சுகமுடன் அடக்கில் = சிரமமின்றி முறையாகக் (ப்ராணாயாமத்தால்) கட்டுப்படுத்தினால்,

நிற்கும் = (மனோ விருத்திகள்) அடங்கும்,

அதற்குக் கருத்து இல்லை என்னில் = அந்த யோக ஸாதனைகளில் விருப்பம் இல்லை என்றால்,

காரண சரீரமாகி = (தூல, ஸூக்ஷ்ம உடல்களுக்குக்) காரணமாக இருக்கின்ற,

பெருத்தது ஓர் அவித்தை தன்னைப் பிடுங்கிடில் = (அடர் இருட்டைப் போல) பெருத்திருக்கின்ற அவித்யையை (வித்யையினால்) நாசம் செய்தால்,

தானே அடங்கும் = (உபாதானம் அழிந்ததால் வேறொரு காரணம் இல்லாமல்) தானே அழிந்து போகும்.


பாடல் : 171

காரண சரீரந் தன்னைக் களைவதெவ் வாறென் றோதில், 

ஆரணம் பொய்சொல் லாதே அதன்பொரு ளகத்தில் உய்த்துப்,

பூரண மாகு மென்மேல் புவனங்கள் தோற்ற மென்று,

தாரணை வந்த தாகில் தரித்திடு மவித்தை யெங்கே.


பொருள் :

காரண சரீரம் தன்னைக் களைவது = காரண உடலாகிய அவித்யையைப் போக்குவது,

எவ்வாறு என்று ஓதில் = எப்படி என்று கேட்பாயாகில்,

ஆரணம் பொய் சொல்லாதே = வேதம் உண்மையல்லாத ஒன்றைச் சொல்லாது,

அதன் பொருள் அகத்தில் உய்த்து = வேதத்தின் (இங்கு பல என்பதில்லை, ஈதனைத்தும் ப்ரஹ்மமே என்ற) கருத்தை மனதில் (அநுதினமும் சிந்தித்து) நிலைநிறுத்தி,

பூரணமாகும் என்மேல் = பரிபூர்ண ப்ரஹ்மஸ்வரூபமான என்னிடத்தில்,

புவனங்கள் தோற்றம் என்று = உலகங்கள் அனைத்தும் கல்பிதம் ஆகும் என்று,

தாரணை வந்தது ஆகில் = நிச்சயம் வந்துவிட்டால்,

அவித்தை எங்கே தரித்திடும் = அவித்யை எங்கே இருக்கும்? (ஓரிடத்திலும் இல்லாமல் அழிந்து போய்விடும்.)


பாடல் : 172

அப்படி யிருக்கச் சித்தம் அலைதலால் விவகா ரத்தில்,

எப்படி கூடு மென்னில் என்னைவிட் டொன்று மில்லை,

இப்படி கண்ட வெல்லாம் என்மய மென்க னாப்போல்,

கற்பித மென்று தானே காண்கின்ற சித்து நானே.


பொருள் :

அப்படி இருக்க = முன் சொன்னபடி (பரிபூர்ண ப்ரஹ்ம ஸ்வரூபமான என்னிடத்தில் உலகங்கள் அனைத்தும் கல்பிதம் ஆகும் என்று) இருப்பதற்கு,

விவகாரத்தில் சித்தம் அலைதலால் = உலக விவகாரத்தில் ஈடுபடும்பொழுது மனம் மாறுபடுவதால்,

எப்படி கூடும் என்னில் = எப்படி முடியும் என்று ஸந்தேஹம் வந்தால்,

என்னை விட்டு ஒன்றும் இல்லை = (ஒரே ஸத்வஸ்துவான ப்ரஹ்மமாகிய) எனக்கு வேறாக ஒரு பொருளும் உண்மையில் இல்லை,

இப்படி கண்ட எல்லாம் = இருப்பதாகத் தோன்றுபவை அனைத்தும்,

என்மயம் = (அலைகள், நுரைகள், குமிழிகள் எப்படி நீர் மயமோ, நகைகள் அனைத்தும் எப்படித் தங்கமயமோ, பாண்டங்கள் அனைத்தும் எப்படி மண்மயமோ அப்படி) நாம ரூபங்களான உலகப் பொருட்கள் அனைத்தும் ஸச்சிதாநந்த  ப்ரஹ்மமாகிய நானே,

(அல்லது)

என் கனாப் போல் கற்பிதம் = எனது கனவு உலகம் போலப் அனைத்தும் பொய்யாம்,

என்று = என நிச்சயித்து,

தானே காண்கின்ற = சுயமாய் அறிகின்ற,

சித்து நானே = சைதந்யமே நான்.


பாடல் : 173

சித்துநா னிறைந்தோ னென்ற திடமற வாதி ருந்தால்,

எத்தனை யெண்ணி னாலு மேதுசெய் தாலு மென்ன,

நித்திரை யுணர்ந்த பின்பு நிற்கின்ற கநாவே போல,

அத்தனை யும்பொய் தானே ஆநந்த வடிவு நானே.


சித்து நான் = சிதாத்மா ஆகிய நான்,

நிறைந்தேன் = பரிபூர்ணமாக எங்கும் நிறைந்திருக்கின்ற ப்ரஹ்மம்,

என்ற திடம் மறவாது இருந்தால் = என்ற நிச்சயம் (நான் மனிதன் என்பது போல) எப்போதும் மறக்காமல் இருந்துவிட்டால்,

எத்தனை எண்ணினாலும் = (க்ருதக்ருத்யனான எனது மனமானது உலக நன்மையின் பொருட்டு) எவ்வளவு நினைத்தாலும்,

ஏது செய்தாலும் = என்ன செயல்களைக் செய்தாலும்,

என்ன = எதுவுமில்லை, (அவற்றை நான் செய்பவனும் அல்ல செய்விப்பவனும் அல்ல, ஆகவே அதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.)

நித்திரை உணர்ந்த பின்பு = தூக்கத்தியிருந்து விழித்த பின்னர்,

நிற்கின்ற கநாவே போல = (வெறும் அனுபவம் மாத்திரமாக) மனதில் நிற்கின்ற கனவுக் காட்சி போல,

அத்தனையும் பொய் தானே = விவகாரங்கள் அனைத்தும் பொய்யானவையே.

ஆநந்த வடிவு நானே = பரமாநந்த ஸ்வரூபன் நான்.


பாடல் : 174

நானென வுடலைத் தானே நம்பினே னநேக சன்மம்,

ஈனராய்ப் பெரியோ ராகி யிருந்தவை யெலாமிப் போது,

கானலில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி னாலே,

நானென வென்னைத் தானே நம்பியீ டேறி னேனே.


பொருள் :

அநேக சன்மம் = (முன் சென்ற) எண்ணற்ற பிறவிகளில்,

நான் என உடலைத் தானே நம்பினேன் = (தேவ, மனித, விலங்கு முதலான தூல) உடல்களையே  நான் என்று (அறியாமையால்) பற்றி இருந்தேன்,

ஈனராய்ப் பெரியோராகி இருந்தவை எலாம் = (அப்போது) இழிவானவனாகவும், உயர்ந்தவனாகவும் இருந்த தன்மைகள் அனைத்தும்,

இப்போது = இப்பொழுது,

சற்குருவினாலே = ஶ்ரோத்ரிய ப்ரஹ்ம நிஷ்டரான ஸத்குருவின் அருளினாலே,

கானலில் வெள்ளம் போலக் கண்டு = கானல் இடத்தில் தோன்றும் (தோற்றம் மாத்திரமான - மித்யையான) நீரைப் போல அறிந்து,

நான் என என்னைத் தானே நம்பி = நான் ப்ரஹ்மம் என்று என்னை உள்ளவாறு உணர்ந்து,

ஈடேறினேனே = கடைத்தேறினேன்.


(இது குருவை வியந்தது)


பாடல் : 175

என்னபுண் ணியமோ செய்தே னேதுபாக் கியமோ காணேன்,

நன்னிலந் தனிலெ ழுந்த நாரணன் கிருபை யாலே,

தன்னிய னானேன் நானுத் தரீயத்தை வீசு கின்றேன்,

தன்னியன் இன்னு நானே தாண்டவ மாடு கின்றேன்.


பொருள் :

என்ன புண்ணியமோ செய்தேன் = எப்படிப்பட்ட மேலான புண்ணியங்களைச் செய்தேனோ,

ஏது பாக்கியமோ காணேன் = யாது அத்ருஷ்டமோ - இறையருளோ அறியேன்,

நன்னிலம் தனில் எழுந்த = நன்னிலம் எனும் புண்ய பூமியில் எழுந்தருளியுள்ள,

நாரணன் கிருபையாலே = நாராயண தேசிகர் எனும் குருமூர்த்தியின் பெருங்கருணையினாலே,

நான் தன்னியன் ஆனேன் = நான் கிருதார்த்தன் ஆனேன்,

உத்தரீயத்தை வீசுகின்றேன் = ஆநந்தத்தினால் மேல் துண்டை மேலே வீசி எறிந்து விளையாடுகின்றேன்,

தன்னியன் நான் = பெரும் பாக்யசாலியாகிய (கிருத கிருத்யனான) நான்,

இன்னும் தாண்டவம் ஆடுகின்றேன் = மேலும் ஆநந்தக் கூத்தாடுகின்றேன்.


பாடல் : 176

தத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தால்,

நித்தமா டுவன்கா ணென்ற நிலைமுன்ன மேய றிந்த,

சத்திய மதனா லன்றோ தாண்டவா வென்ற ழைத்தார்,

அத்தனை மகிமை யுள்ளோர் அன்னையும் பிதாவுந் தாமே.


பொருள் :

தத்துவ ஞானம் வந்த = ஜீவ, ஈச்வர, ஜகத்தின் ஸ்வரூபத்தை ஆராய்ந்து மெய்ஞ்ஞானம் வந்த காரணத்தால்,

சந்தோட அதிசயத்தால் = ஏற்பட்ட நிரதிசய ஆநந்தத்தால்,

நித்தம் ஆடுவன் காண் என்ற நிலை = தினமும் (ஆநந்தத்) தாண்டவம் ஆடுவேன் (நான்) என்ற நிச்சயத்தை,

முன்னமே அறிந்த = திருவடியை அடைந்த அன்றே திருவுளத்தின் கண்ணே உணர்ந்த,

சத்தியம் அதனால் அன்றோ = உண்மையால் அல்லவா,

தாண்டவா என்று அழைத்தார் = தாண்டவா என்று (காரணப்பெயர் கொண்டு) அழைத்தார்,

அத்தனை மகிமை உள்ளோர் தாமே = அவ்வளவு மஹிமை உள்ள எனது குருவே,

அன்னையும் பிதாவும் = (எனக்குத்) தாயும் தந்தையும் ஆவர்.


பாடல் : 177

வந்ததோ ரிவ்வா நந்த மகிழ்ச்சியா ருடன்சொல் வேன்யான்,

சிந்தையி லெழுந்து பொங்கிச் செகமெலா நிறைந்து தேங்கி,

அந்தமில் லாத தாயிற் றப்படி குருவே தாந்த,

மந்திர மருளு மீசன் மலரடி வணங்கி னேனே.


பொருள் :

வந்ததோர் இவ்வாநந்த மகிழ்ச்சி = ப்ரஹ்ம ஞானத்தினால் உண்டானதான ஒப்பற்ற இந்த வித்யாநந்த மகிழ்ச்சியை,

யான் யாருடன் சொல்வேன் = நான் எவரிடம் கூறுவேன்,

சிந்தையில் எழுந்து பொங்கி = மனதில் தோன்றி வளர்ந்து,

செகம் எலாம் நிறைந்து தேங்கி = உலகம் எங்கும் பரவி பூரணமாகி,

அந்தம் இல்லாதது ஆயிற்று = முடிவற்றதானது.

அப்படி = அப்படிப்பட்ட வித்யாநந்தத்தை அருளும்,

குரு = ஸற்குருவினையும்,

வேதாந்தமந்திரம் = வேதாந்த வாக்கியங்களையும்,

அருளும் ஈசன் = அருளிய பரமேஸ்வரனின்,

மலரடி வணங்கினேனே = மலர் போன்ற திருவடிகளைப் பணிந்தேன்.


பாடல் : 178

வித்தியா நந்த மிந்த விதமென விளம்பி னோமே,

பத்தியா லிந்த நூலைப் பார்த்தநு பவித்த பேர்கள்,

நித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து சீவன்,

முத்தியை யடைந்தி ருந்த முநிவர ராகு வாரே.


பொருள் :

வித்தியாநந்தம் இந்தவிதம் என விளம்பினோமே = தத்துவஞானத்தால் உண்டான ஆநந்தம் இப்படி (துக்க அபாவம், ஸர்ம காமாப்தி, க்ருத-க்ருயத்வம், ப்ராப்த- ப்ராப்யம்) என்று கூறினோம்,

பத்தியால் இந்த நூலைப் பார்த்து = ச்ரத்தையுடன் குருமுகமாக இந்த கைவல்ய நவநீதம் எனும் நூலைக் விசாரித்து,

அநுபவித்த பேர்கள் = (இந்நூலின் விஷயமான ப்ரஹ்மாந்ம ஐக்யத்தை இதில் கூறியபடியே அறிந்து) தன்னை ப்ரஹ்மமாக உணர்ந்த முமுக்ஷுக்கள்,

நித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து = நித்யமான புண்ய விசேஷத்தை உடைய சமாதி நிலையினை (ப்ரஹ்ம நிஷ்டையினை) எய்தி,

சீவன் முத்தியை அடைந்து இருந்த = ஜீவன்முக்தியை அடைந்து (முன்னர்) வாழ்ந்த (சுகர், நாரதர் போல)

முநிவரர் ஆகுவாரே = சிறந்த முனிவர் ஆகுவர்.


பாடல்: 179

ஆரணப் பொருளாம் வித்தி யாநந்தம் விளங்க வேதும்,

காரணங் குறைவி லாமற் கைவல்ய நவநீ தத்தைப்

பூரண மாக்க வேண்டிப் பூர்வமா நன்னி லத்தில்,

நாரண குருந மக்கு நவின் றனர் யோகில் வந்தே.


பொருள் :

ஆரணப் பொருளாம் வித்தியாநந்தம் விளங்க = வேதாந்த சாஸ்த்ரத்தின் தாத்பர்யமான வித்யாநந்தம் ( ஸாதன சதுஷ்டயம் முதல் வித்யாநந்தம் வரை அதிகாரிகள்) உள்ளவாறு நன்கு அறிந்து கொள்ள,

காரணம் ஏதும் குறைவிலாமல் = (எடுத்துக் கூற வேண்டிய) யுக்திகளுள் எதுவும் குறைவில்லாமல்,

கைவல்ய நவநீதத்தை = கைவல்ய நவநீதம் எனும் பெயருடைய இந்த நூலினை,

பூரணம் ஆக்க வேண்டிப் = முழுமையாய்ச் செய்து உலகிற்கு அளிக்க வேண்டி,

பூர்வம் ஆம் நன்னிலத்தில் = பழைமையான நன்னிலம் என்னும் க்ஷேத்ரத்தில்,

நாரண குரு = நாராயணன் என்னும் பெயருடைய குருமூர்த்தி,

யோகில் வந்தே = யோக நிஷ்டையில் இருக்கும் பொழுது தோன்றி,

நமக்கு நவின்றனர் = எமக்குக் கூறினார்.


பாடல் : 180

குலவுசற் குருவின் பாதக் குளிர்புனல் தலைமேற் கொண்டால்,

உலகினிற் றீர்த்த மெல்லாம் உற்றபே றடைவார் போல,

நலமையா குங்கை வல்ய நவநீத நூலைக் கற்றோர்,

பலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளாய் வாழ்வார்.


பொருள் :

குலவு சற்குருவின் = (அகண்ட ஏகரஸ ப்ரஹ்ம ஸ்வரூபமாக) விளங்கும் ஸற்குருவினுடைய,

பாதக் குளிர்புனல் தலைமேல் கொண்டால் = திருவடிகளை அபிஷேகம் செய்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால்,

உலகினில் தீர்த்தம் எல்லாம் உற்ற பேறு = உலகில் உள்ள (கங்கை முதலான) புனித தீர்த்தங்கள் யாவிலும் நீராடியவர் பெற்ற புண்யங்கள் அனைத்தும்,

அடைவார் போல = எப்படிப் பெறுவாரோ அது போல,

நலமை ஆகும் = (ஸர்வ துக்க நிவிர்த்தி, பரமாநந்தப் ப்ராப்தி ரூபமான) நன்மையைக் கொடுப்பதாகிய,

கைவல்ய நவநீத நூலைக் கற்றோர் = கைவல்ய நவநீதம் எனும் இந்த நூலைக் கேட்டறிந்தோர்,

பலகலை ஞானநூல்கள் = பல வகையான ஞானநூல்களை,

படித்த ஞானிகளாய் வாழ்வார் = கற்ற ஞானிகளைப் போல பூர்ண ஞானமுடையவராய் வாழ்வர்.



சந்தேகம் தெளிதல் படலம் முற்றிற்று.

கைவல்ய நவநீதம் முற்றுப் பெற்றது.


படலம் இரண்டிற்குச் செய்யுள்கள் 281,

பாயிரச் செய்யுள்கள் 7, மொத்தச் செய்யுள்கள் 288.


ஸ்ர்வம் சிந்மயம்