Feb 29, 2020

அறம் செய விரும்பு -3

அறம் செய விரும்பு - 3

நன்முயற்சி நல்ல பலனைத்தரும் - விதி குறுக்கிடாதவரை. நாம் முன்செய்த புண்ணிய பாவங்களின் பின்விளைவே இந்த விதி. நம் முன்செயல் நல்லதாயின் அது நம்மையும் கெட்டதாயின் தீமையையும் விளையச் செய்கிறது. இந்த விதியை இன்று நாம் செய்கின்ற நல்வினையும் தீவினையும் தூண்டிவிடுகின்றன. விதியை ஒட்டி அமைந்த நம் மனப்பாங்கை இன்றைய நற்செயல் கட்டுப்படுத்துகிறது. நற்செயலில் நாம் எப்போதும் ஈடுபடும்படி இந்த ஆந்ஹிக நியமங்கள் நெறிப்படுத்தும். அதனால் முன் செய்த தீவினைப் பயனாகக் கெட்டதை நாடுகின்ற மனத்தை இந்த நியமங்கள் கட்டுப்படுத்தி நல்லதைப் பின்பற்றும்படி அடக்கி ஆளும்போது இந்த நியமங்கள் விதியை மாற்ற வல்லதாகின்றன. எந்த நற்பணியை மேற்கொள்ளும் போதும் "மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா" - "பலன் தர முனைந்துள்ள எனது எல்லாக் கெட்ட முன் வினைகளும் தேய்வுறச்செய்வதன்மூலம்" - என்று ஸங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி விதியை மாற்றவல்லவை இந்த ஆந்ஹிக நியமங்கள்.

‌"நான்" "எனது" என்று ஒவ்வொரு செயலிலும் அகந்தை மமதை கொள்வது இயல்பு. ஆனால் நம் நிலை அகந்தை மமதை கொள்ள சிறிதும் தகுதி இல்லாதது. பேராற்றல்மிக்க ஒரு பெரும் காலச்சக்ர சுழலில், அதன் வட்டத்திலும் ஆரத்திலும் ஒட்டிக் கொண்டுள்ள கோடிக்கணக்கான எறும்பு போன்ற சிறு ஜீவர்கள் ஆக நாம் இருக்கிறோம். நாம் சுதந்திரமாகச் சுழலவில்லை. அது சுற்றுவதால் நாம் சுற்றுகிறோம். நம் வசத்திற்கு உட்படாது பகல் இரவு என்ற மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் நில்லாத - நிறுத்தமுடியாத ஒன்று. நம்மை மீறிய ஒரு பேராற்றல் நம்மை ஆட்கொண்டு இருப்பதை நமக்கு இது உணர்த்துகிறது. அந்த பேராற்றலை உணர்ந்து அதனை ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு துடிப்பிலும் எங்கும் காண்பதற்கு உதவுபதையே இந்த ஆந்ஹிக நியமங்கள். அந்தப் பேராற்றலையே கடவுளாக அந்தர்யாமியாக எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக கருணைக்கடலாக விதியாக பல வடிவில் கண்டு, அதனிடம் ஆட்பட வைக்கின்றன இந்த ஆந்ஹிக நியமங்கள்.

இந்த நியமங்கள் நம் முன்னோர்களான பெரியோர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் நல்லதெனக்கண்டு அனுபவித்தவை. அவை பொய்யாய் இருந்தால் காலத்தால் அழிந்திருக்கும். மெய்யெனவே காலத்தால் அழியாமல் உபதேசத்தின் மூலம், வாழ்ந்து காட்டியதன் மூலம் நம்வரை வந்துள்ளன. இதனைக் கடைபிடிக்கும்படி நம் அந்தர்யாமி தூண்டும். நமது வினையால் அமைந்த விருப்பும் வெறுப்பும் இதற்குத் தடையாக நிற்கும். இந்த சுய விருப்பையும் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் நியமங்களை கடைப்பிடிப்பது தீரனின் செயல். அந்த நியமங்களைத் தொகுப்போம்.

Feb 28, 2020

கடவுள் இருக்கிறாரா ?





கடவுள் இருக்கிறாரா?

கடவுள் பற்றி இந்துமத வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள வேதாந்தம் எனப்படுகிற உபநிஷத்துகள் என்ன சொல்லுகின்றன என்பதைப்பற்றி சொல்லுகின்றேன்.

ஒருபொருள் தோன்றுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் தேவை. ஒன்று மூலகாரணம், மற்றொன்று அறிவுக் காரணம். உதாரணமாக பானை இருக்கிறது என்றால் பானை தோன்றுவதற்கு மண் மூலகாரணம் அதாவது மூலப்பொருள். குயவன் அறிவுக்காரணம் அல்லது உயிர்க்காரணம்.
ஆகவே பானை இருக்கிறது; பானைக்கு மூலப்பொருளாக மண் இருக்கிறது; (மண்ணே பானையாக ஆகி இருக்கின்றது.) மண்ணைப் பானையாக ஆக்கிய குயவன் இருக்கின்றான்.

அதுபோல உலகம் இருக்கிறது என்றால் உலகம் தோன்றுவதற்கான மூலப்பொருளும் அறிவு பொருளும் இருக்க வேண்டும் அல்லவா! அதுவே கடவுள்.


மண்ணை பானையாக ஆக்கிய குயவன் போல் உலகை ஆக்கியவர் கடவுள்.

குயவன் பானையை செய்வதற்கான மூலப் பொருளான மண்ணை பூமியிலிருந்து எடுத்தது போல கடவுள் உலகை படைப்பதற்கான மூலப்பொருளை எங்கிருந்து எடுத்தார் என்ற கேள்வி வரலாம். கடவுள் உலகைப் படைக்க வேறு எங்கிருந்தோ மூலப்பொருளை எடுத்தார் என்று சொன்னால் அந்த மூலப்பொருளை  எதிலிருந்து எப்பொழுது யார் படைத்தார் என்று கேள்வி வரும். உபநிஷத் சொல்லுகின்றது கடவுளே உலகிற்கான மூலப்பொருளாகவும் இருக்கின்றார்.

அதாவது  தானே உலகமாக ஆனார். சிலந்திப்பூச்சி வலை பின்னுவதற்கான நூலை தன்னிடமிருந்து எடுத்து தானே பின்னுவது போல் கடவுள் தன்னுடைய மாயா சக்தியை கொண்டு உலகை படைத்திருக்கின்றார்.
கடவுளே உலகிற்கு மூலப் பொருளாகவும் அறிவுக் அறிவுக்காரணமாகவும் இருக்கின்றார்.

மண்ணே பானையாக விளங்கிக்கொண்டு இருப்பதுபோல் கடவுளே உலகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் அதேசமயம் உலகிற்கு வேறாகவும் அவர் இருக்கின்றார் குயவன் போல்.

இதில் இன்னொரு நுட்பமான விஷயமும் உண்டு. மண்ணிற்கு வேறாக தனியாக பானை இல்லை. மண்ணே பானையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
அதேசமயம் பானைகளாக ஆகாமல் தனித்த மண்ணும் இருக்கவே இருக்கின்றது.

அதுபோல, கடவுளே உலகம் ஆகியிருக்கிறார் என்பதனால் கடவுளுக்கு வேறாக உலகம் இல்லை; ஒரே மண்ணே பானைகள் என்ற பெயர் வடிவங்களுடன் விளங்குவது போல் ஒரே கடவுளே உலகில் பல்வேறு பெயர் வடிவங்களுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆகவே காண்பதெல்லாம் கடவுளே!
அதே சமயம் உலகத்திற்கு வேறாகவும் இருக்கின்றார் கடவுள்,
பானை ஆகாமல் தனித்த மண்ணும் இருப்பதுபோல.

ஆகவேதான் இந்து மதம் கல்லையும் மண்ணையும் கூட கடவுளாக வணங்கலாம் என்று சொல்லி இருக்கின்றது.

ஆகவே இந்த உலகம் கடவுளின் ஓர் அம்சமாக இருக்கின்றது என்பதே ஹிந்து மதம் சொல்லுகின்ற கடவுள் தத்துவம்.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.


ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

ஓம்


ஆசாரக் கோவை


ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்

உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ

ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். ரிஷிகள், ஸம்ருதிகள் எனப்படும் நீதிநூல்களில் அருளிய ஸதாசாரங்களை தொகுத்து வழங்கியது ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். இந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

பாடல் 1 : ஆசாரத்திற்கு காரணம்

நன்றி யறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.

நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து.

எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும்.
அவை:-

  1. நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுடன் இருத்தல்.
  2. பொறையுடைமை - பிறர் செய்யும் தீமையைச்  பொறுத்துக் கொள்ளுதல்.
  3. இன்சொல் - இனிமையும் உண்மையுமான சொற்களையே எப்பொழுதும் பேசுதல்.
  4. இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை - எந்த உயிருக்கும் எவ்விதத்திலும் (உடலாலோ வாக்காலோ மனத்தாலோ) தீமை செய்யாது இருத்தல்.
  5. கல்வி - நீதிநூல்களை முறையாகக் கற்றறிதல்.
  6. ஒப்புரவு ஆற்ற அறிதல் - உலக வழக்கைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடத்தல்.
  7. அறிவுடைமை - நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறிதல்.
  8. நல்லினத்தாரோடு நட்டல் - நல்ல அறிவு, ஞானம், ஒழுக்கம், பண்புகள் உடைய பெரியவர்களை நண்பர்களாகக் கொண்டிருத்தல்.

காண்க : திருக்குறள் அதிகாரங்கள் - செய்நன்றியறிதல், பொறையுடைமை, இனியவைகூறல், கொல்லாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, பெரியாரைத் துணைக்கோடல்.

பாடல் 2 : ஆசாரம் தவறாதவர் அடையும் நன்மைகள்

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப, என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு, நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோயின்மை இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும் ஒழுக்கம் பிழையாதவர்.

என்றும் ஒழுக்கம் தவறாமல் வாழ்பவர் எட்டு நன்மைகளை முறைப்படி அடைவார்கள் . அவை:-
  1. பிறப்பு - அடுத்த பிறவியில் உயர்ந்த குடியில் பிறத்தல் 
  2. நெடுவாழ்க்கை - நீண்ட ஆயுள்.
  3. செல்வம் - சுகமாக வாழ்வதற்குத் தேவையான பொருள்.
  4. வனப்பு  - அழகிய தோற்றம்.
  5. நிலக்கிழமை - நிலவுடைமை  (அசையாசொத்துகள்) 
  6. மீக்கூற்றம் - மேலான சொற்கள். செல்லுபடியாகும் சொற்கள். அதாவது செல்வாக்கு, சொல்வன்மை.
  7. கல்வி உயர்ந்த கல்வி அறிவைப் பெறுதல்.
  8. நோயின்மை - உடலிலும் மனதிலும் நோயின்றி நலமாக இருத்தல்.

காண்க : திருக்குறள் அதிகாரங்கள் - குடிமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை

பாடல் 3: தவறாது செய்ய வேண்டியவை

தக்கிணை வேள்வி தவம் கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க; உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க; உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

பொருள் :

தவறாமல் விதிப்படி செய்யத்தக்கவை நான்கு :

தக்கிணை - தக்ஷிணை (நாம் அடைந்த பலனுக்கு பிரதியுபகாரமாக அவரவர்க்கு உரிய ஊதியத்தைக் கொடுத்தல்)

வேள்வி - இறைவழிபாடு. (நமக்குக் கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்தும் விதமாக இறைவனை வணங்குதல்)

தவம் - புலன்,மனவடக்கம். (உடலையும் மனதையும் நம் வசப்படுத்தும் அதற்காக உடலை வருத்தி நாம் செய்கின்ற விரதம் முதலான ஆன்மீக சாதனை)

கல்வி - குரு வாயிலாக முறையாக லௌகீக ஆன்மீக நூல்களைக் கேட்டல், கற்றல்.

இவற்றை முறையாகச் செய்யாவிட்டால் எவ்விதத்திலும் பயனின்றி வாழ்க்கை வீணாய்ப் போகும்.

காண்க : திருக்குறள் அதிகாரங்கள் - நன்றியில்செல்வம், கடவுள் வாழ்த்து, தவம், கல்வி, கேள்வி.

பாடல் 4 : அதிகாலை எழுந்ததும் செய்ய வேண்டியவை

வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்,
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்,
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே,
முந்தையோர் கண்ட முறை.

பொருள் :
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற வைகறைப் பொழுதாகிய அதிகாலையில் எழவேண்டும்; எழுந்தவுடன் அன்று செய்யவேண்டிய நற்செயல்களையும், ஒப்பற்ற பொருளான இறைவனையும் மனதில் நினைத்து, தியானிக்க வேண்டும்; பிறகு பெற்றோரை விழுந்து வணங்கி நாளைத் தொடங்கவேண்டும் என்பதே நம்முன்னோர்கள் (மேன்மை அடைவதற்கு தங்கள் அனுபவத்தில் கண்டு) சொல்லிய சிறந்த வாழ்க்கைமுறை ஆகும்.

பாடல் 5 : எச்சிலுடன் தீண்டத்தகாதவை

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடிவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.

பொருள் :
எச்சிலோடு - தூய்மையற்றிருக்கும் நிலையில் - தொடத்தகாதவை இவை :
பசுமாடு, அந்தணர், நெருப்பு, தெய்வச்சிலை, உச்சந்தலை.

(எச்சில் = தூய்மையற்றிருக்கும் நிலை. தூய்மை கருதி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது.)

பாடல் 6 : எச்சிலுடன் காணத்தகாதவை

எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் நாய்ஞாயிறு
அத்தக வீழ்மீனோடு இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.

பொருள் :
அறநூல்களை நன்கறிந்தவர் எச்சிலோடு இவைகளைக் காணமாட்டார் - புலையன், சந்திரன், நாய், சூரியன், எரிநட்சத்திரம்.

பாடல் 7 : எச்சில் நிலைகள்

எச்சில் பலவும் உள, மற்ற வற்றுள்
இயக்கமிரண்டும் இணைவிழைச்சு வாயில்
விழைச்சிவை எச்சிலில் நான்கு.

பொருள் :
பல எச்சில்கள் உள்ளன. அவற்றுள் இவை நான்கும் கவனிக்கத்தக்கவை: மலம் கழித்தல், ஜலம் கழித்தல், ஆண் பெண் சேர்க்கை, முத்தமிடுதல்.

பாடல் 8 : எச்சிலுடன் செய்யத்தகாதவை

நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகளா குறு வார்.

பொருள் :
எப்பொழுதும் அறிவுடையவர்களாக இருக்க விரும்புபவர் மேற்சொன்ன நால்வகை எச்சிலும் உண்டானபோது - தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் - படித்தல், பேசுதல், உறங்குதல் கூடாது.

பாடல் 9 : காலை மாலைக் கடன்

நாளந்தி கோல்தின்று கண்கழிஇத் தெய்வத்தைத்
தானறியுமாற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள் :
அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, இறைவனை தனக்குத் தெரிந்த வகையில் வணங்கித் தன் கடமைகளை செய்ய தொடங்க வேண்டும். மாலையில் அமர்ந்து இறைவனை பூஜிக்க வேண்டும். நின்று வணங்குதல் கூடாது.

(ஸந்தியாவந்தனம் செய்பவர்கள் காலையில் நின்றும் மாலையில் அமர்ந்தும் செய்ய வேண்டும் என்பது விதி)

பாடல் 10 : குளிக்க வேண்டிய பொழுதுகள்

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர்.

தேவர் வழிபாடு, தீக்கனா, வாலாமை, உண்டது கான்றல், மயிர்களைதல், ஊண்பொழுது,
வைகுதுயிலோடு இணைவிழைச்சு, கீழ்மக்கள்மெய்யுறல், ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுறா தாடுக நீர்.

பொருள் :
சந்தேகமின்றி உடனே நீராட வேண்டிய 10 பொழுதுகள் :
இறைவழிபாடு செய்வதற்கு முன்னரும், கெட்ட கனவு கண்டபின்னரும், அசுத்தப்பட்டபொழுதும், வாந்தியெடுத்த பொழுதும், மயிர்களைந்தபின்னரும், உணவுண்ணும் முன்னரும், மாலையில் தூங்கிய பின்னரும், ஆண்-பெண் சேர்க்கைக்கு பின்னரும், தூய்மையற்றவரை தொட்டபின்னரும், மலஜலம் கழித்த பின்னரும் அவசியம் குளிக்கவேண்டும்.

பாடல் 11 : ஆடை உடுத்தல்

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.

உடுத்தலால் நீராடார், ஒன்றுடுத் துண்ணார், உடுத்தாடை நீருட் பிழியார், விழுத்தக்கார் ஒன்றுடுத் தென்றும் அவை புகார் என்பதே முந்தையோர் கண்ட முறை.

பொருள் :
நற்பண்புள்ளவர் ஆடையின்றி நீராட மாட்டார்; மேலாடையின்றி உணவு உண்ண மாட்டார்கள்; உடுத்திக் குளித்த ஆடையை நீருள் பிழிய மாட்டார்; ஓர் ஆடை மட்டும் உடுத்து அறிஞர் அவையில் செல்லமாட்டார் என்பதே முன்னோர்கள் சொன்ன வாழ்க்கை முறையாகும்.

பாடல் 12 : தவிர்க்க வேண்டிய சில

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்,
பிறருடுத்த மாசணியும் தீண்டார், செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.

பொருள் :
தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புகளில் தேய்க்கக் கூடாது. பிறர் உடுத்திய அழுக்கு ஆடைகளை தொடக்கூடாது. அவசரமான செயல் என்றாலும் பிறருடைய காலணிகளை அணிந்துசெல்லுதல் கூடாது.

பாடல் 13 : செய்யக்கூடாதன சில

நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்
கீரார் இராமரமும் சேரார் இடரெனினும்
நீர்தொடா தெண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.

நீருள் நிழற்புரிந்து நோக்கார், நிலமிராக்
கீரார், இராமரமும் சேரார், இடரெனினும்
நீர்தொடா தெண்ணெய் உரையார், உரைத்தபின்
நீர்தொடார், நோக்கார் புலை.

பொருள் :
தண்ணீரிலே தம் நிழலைக் காணக்கூடாது; சும்மா அமர்ந்திருந்து நிலத்தைக் கீறக்கூடாது; இரவில் மரத்தின் அடியில் தங்கக்கூடாது; குளிக்காமல் தலைக்கு எண்ணெய் தேய்க்கக் கூடாது; எண்ணெய்க்குளியல் செய்வதற்காக எண்ணெய் தேய்த்த பின், குளிக்காமல் பிறரைப் பார்க்கக்கூடாது.

பாடல் 14 : நீராடும்போது

நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.

பொருள் :
அறநெறியில் வாழ்பவர்கள் குளிக்கும் பொழுது நீரில் நீந்தமாட்டார்; எச்சில் உமிழ மாட்டார்; அமுங்கி இருக்கமாட்டார்; நீரில் விளையாடமாட்டார்; நீதிநூல்களில் ஆழ்ந்த அறிவுடையவர் தலை காய்ந்து இருந்தாலும் தலை தவிர்த்து கழுத்து வரை மட்டும் நீராடமாட்டார்.

பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை

ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.

பொருள் :
பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், இகழ்வானெனில் அவன் உடம்பில் உள்ள ஐந்து பூதங்களுக்கான தெய்வங்கள் அன்றே அவனைவிட்டுப் போய்விடும்.

பாடல் 16 : ஐந்து குருமார்கள்

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர் இவரைத்
தேவரைப் போல தொழுதொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.

பொருள் :
அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு மூத்தவன், இவர் ஐவரும் ஒப்பற்ற குரவர் ஆவர். இவரை தெய்வத்தை போல வணங்கிப் பின்பற்றுக என்பது அறமறிந்தவர் அனைவரும் சொல்லிய நெறி.

பாடல் 17 : தவிர்க்க வேண்டியன சில

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மென்கோலும் தின்னார்; மரங்குறையார்
என்பதே நல்லறி வாளர் துணிவு.

பொருள் :
நல்ல அறிவுடையவர்கள் முன்சொன்ன குருமார்கள் வாக்கை இகழ்ந்து நடக்க மாட்டார்; விரதம் முடிக்கப்படாமல் இருந்தால் அதை மறந்து விடமாட்டார்; பௌர்ணமியன்று பல் துலக்க மரக் குச்சிகளை உடைக்க மாட்டார்; அன்று மரங்களையும் வெட்ட மாட்டார்.

பாடல்18 : உண்ணும் முறை

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெடுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

('ஓம் பூர் புவஸ் ஸ்வஹ' என உணவின்மேல் மூன்று முறை தண்ணீர் தெளித்து, கையில் சிறிது ஜலம் விட்டு ஒரு முறை சுற்றி,

'உண்ணலும் உனதே உயிர்த்தலும் உனதே
உடலுயிர் மனமெல்லாம் உனதே
எண்ணலும் உனதே இச்சையும் உனதே
என்செயல் பயனெல்லாம் உனதே
என்செயல் பயனெல்லாம் உனதே.'

என்று சொல்லி கீழே விட்டுவிட்டு, மீண்டும் கையில் சிறிது நீர்விட்டுப் பருகி, 'உண்ணும் உணவு அமிர்தமாக ஆகவேண்டும்' என்று பிரார்த்தித்து உண்ண வேண்டும்.)

பாடல் 19 : உண்ணும் போது

காலில்நீர் நீங்காமை உண்டிடுக; பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

பொருள் :
கால் கழுவி, நீர் உலர்வதற்கு முன்னரே (உடனே) சாப்பிட அமந்துவிடவேண்டும்; ஈரம் காய்ந்த பின்னரே படுக்கவேண்டும், என்பது சிறந்த அறிவு உடையவர் முடிவு.

பாடல் 20 : உண்ணும் போது

உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து,
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்,
பிறிதுயாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு,
உண்க உகாஅமை நன்கு!

உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்கு, கண்ணமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிது யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு!

பொருள் :
உணவு உண்ணும் பொழுது கிழக்குத் திசை பார்த்து அமர்ந்து, தூங்காமல், அசைந்தாடாமல், நன்றாக அமர்ந்து, வேறு எங்கும் பார்க்காமல், பேசாமல், உணவை வணங்கி, சிந்தாமல் நன்றாக மென்று உண்ண வேண்டும்.

பாடல் 21 : உண்ணும் போது

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள் :
என்றும் ஒழுக்கம் தவறாதவர்கள் அதிதி என்ற விருந்தினர் வீட்டிலுள்ள வயதானவர்கள், பசு, பறவைகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு கொடுத்த பின்னரே தாங்கள் உண்பார்கள்.

பாடல் 22 : உண்ணும் போது
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டிற் பாடு.

பொருள் :
முன்சொன்ன கிழக்கு முகமாக அமர்ந்து உண்ணமுடியவில்லை என்றால் மற்ற திசைகளை நோக்கியும் உண்ணலாம். வாயிற்படிக்கு நேராக இருந்து உண்ணுதல் நல்லது என்று புகழ்ந்தார்கள்; வாயிற்படிக்கு நேராக கட்டிலிட்டுப் படுத்தல் நல்லதல்ல என்று இகழ்ந்தார்கள் அறம் அறிந்தவர்கள்.

பாடல் 23 : உண்ணும் போது

கிடந்துண்ணார்; நின்றுண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிகவுண்ணார்; கட்டின்மேல் உண்ணார்;
இறந்தொன்றும் தின்னற்க நின்று.

பொருள் :
படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் திறந்த வெளியிலும் உண்ணக்கூடாது. ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. நெறி இல்லாமல் அளவு கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு திண்ணல் ஆகாது.

பாடல் 24 : உண்ணும் போது

முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார், ஊணின்கண்
என்பெறினும் ஆன்ற வலமிரார், தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

பொருள் :
பெரியவர்களுடன் சமபந்தியாக இருந்து உண்ணும் பொழுது, அவர்கள் உண்ணத்தொடங்குமுன் தாம் உண்ணார், அவர்கள் உண்டு எழுவதற்கு முன்னால் தாம் எழமாட்டார்; அவர்களுடன் மிக நெருங்(க்)கி அமர்ந்துண்ணார்; அவர்களுக்கு வலதுபுறத்தில் அமர்ந்து உண்ணுதலும் ஆகாது.

பாடல் 25 : உண்ணும் போது

கைப்பன வெல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க, முறைவகையால் ஊண்.

பொருள் :
கசப்பான உணர்வை கடைசியிலும் இனிப்பானது முதலிலும் மற்ற சுவைகளை இடையிலும் பெரியவர்கள் பாராட்டும்படி கிரமமாக (முறைப்படி) உண்ணவேண்டும்.

பாடல் 26 : உண்ணும் போது

முதியவரைப் பக்கத்து வையார், விதிமுறையால்
உண்பவற்றுல் எல்லாம் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.

பொருள் :
தம்மைக் காட்டிலும் முதியவர் உண்ணும் பொழுது அவரை தம் அருகிலேயே வைத்துக்கொண்டு உண்ணக்கூடாது. விதிமுறைப்படி உண்ணும் பொழுது சிறிய பாத்திரங்களில் உணவு பொருட்களை வைத்துக்கொண்டு, அன்பு மாறாமல் ஆசாரம் தவறாமல் உண்ணவேண்டும். உண்டபின் பாத்திரங்களை முறையாகத் தள்ளிவைக்க வேண்டும்.

பாடல் 27 : உண்டபின்

இழியாமை நன்குமிழ்ந் தெச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து, முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்,
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் :
உண்ட பிறகு வாயில் கொண்ட நீர் உள்ளே போகாதபடி நன்றாக கொப்பளித்து உமிழ்ந்து விட்டு, வாயையும் பாதத்தையும் நன்றாகத் துடைத்து, மூன்றுமுறை தண்ணீர் பருகி (ஆசமனம் செய்து) பிறகு கண், காது, மூக்கு முதலானவைகளை விரல்களால் துடைப்பதே வாய்பூசல் என்ற ஒழுக்கம் மிக்கவர் கண்ட தூய்மை முறை.

பாடல் 28 : பொது நெறி சில
இருகையால் தண்ணீர் பருகார், ஒரு கையால்
கொள்ளார், கொடாஅர் குரவர்க்கு, இருகை
சொரியார் உடம்பும் அடுத்து.

பொருள் :
தண்ணீரை இருகையால் மொண்டும் வாங்கியும் குடிக்கலாகாது. பெரியோர் கொடுப்பதை ஒரு கையால் வாங்குதல் அவருக்கு ஒரு கையால் கொடுப்பதும் கூடாது. (இருகைகளாலுமே பெற வேண்டும், கொடுக்க வேண்டும்.) இருகைகளாலும் உடம்பினைச் சொரியக் கூடாது.

பாடல் 29 : அந்திப்பொழுது செய்வன தவிர்வன

அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண் டடங்கல் வழி.

பொருள் :
மாலைப் பொழுதில் படுத்தலும் நடத்தலும் பயணம் செய்தலும் உண்ணுதலும் ஒருவர்மேல் கோபப்படுதலும் கூடாது. (ஸந்தியாவேளையில் மற்ற காரியங்களைத் தவிர்த்து இறைவழிபாடு செய்தல் சிறப்பு என்பது கருத்து.)
அந்திப்பொழுதில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். முன்னிரவில் உணவுண்டு ஓரிடத்தில் அடங்கி ஓய்வெடுத்தலும் சிறந்த நெறியாகும்.

பாடல் 30 : உறங்கும் முறை

கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வந் தொழுது,
வடக்கொடு கோணம் தலைசெய்யார், மீக்கோள்
உடல்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள் :
படுக்கும் பொழுது கைகூப்பி இறைவனை வணங்கி, வடக்கு மற்றும் கோணல் திசையில் தலை வைக்காமல், மேற்போர்வை போர்த்திப் படுத்தல் நலம்.

பாடல் 31 : பயணம் செய்யும் பொழுது

இருதேவர் பார்ப்பார் இடைப்போகார்; தும்மினும்
மிக்கார் வழுத்தின் தொழுதெழுக. ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.

பொருள் :
இரு தெய்வங்களுக்கு நடுவிலும் அந்தணர்கள் நடுவிலும் போதல் கூடாது. யாராவது தும்மிய பொழுதும் பெரியோர் வாழ்த்துகின்ற பொழுதும் வணங்கிக் கொண்டே செல்க. வழிபோகும் பொழுது, சமானமான நண்பர்களுடன் அவர்களுடன் சமமாக (ஒன்றாக) மனமகிழ்ச்சியுடன் செல்க.

பாடல் 32 : அசுத்தம் செய்யத்தகாத இடங்கள்

புல்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆனிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவ குலம், நிழல், ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

பொருள் :
புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

பாடல் 33 : மலஜலம் கழிக்கும் திசை

பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

பொருள் :
பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில் தீயினுள் நீர் ஊற்றார்.

பாடல் 34 : மலஜலம் கழிக்கும்போது

பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத் தல்லால் உமிவோ டிருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

பொருள் :
பத்துத் திசையும் மறைத்திருப்பதாக மனதில் பாவித்து அந்தரத்தில் செய்வதாக நினைத்து எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் செய்யவேண்டும்.


பாடல் 35 : வாய் கழுவக்கூடாத நிலைகள்

நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்;
வழிநிலை நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண் டல்லது பூசார்; கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.

பொருள் :
பாத்திரத்தில் நீர் எடுத்து வாய் கழுவ வேண்டும். முடியாதபோது நீர்நிலையில் நின்று கொண்டோ நடந்து கொண்டோ வாய் அலம்புதல் கூடாது. மனத்தால் பத்துத் திசையும் மறைத்து அந்தரத்தில் செய்வதாகவே பாவித்து செய்ய வேண்டும்.


பாடல் 36 : தவிர்க்க வேண்டிய சில

சுடரிடைப் போகார்: சுவர்மேல் உமியார்;
இடரெனினும் மாசுணி தங்கீழ்மேற் கொள்ளார்;
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்;
பலரிடை ஆடை உதிராரே; என்றும்
கடனறி காட்சி யவர்.

பொருள் :
பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே உடுத்தார்; எவ்வளவு நெருக்கடி வந்தாலும் தாம் உடுத்தி இருக்கும் ஆடைக்காற்று பிறர் மேல் படுமாறு உராய்ந்து செல்ல மாட்டார்; பலர் முன்னிலையில் ஆடையை உதற மாட்டார். (அவிழ்த்து உடுத்த மாட்டார்.)


பாடல் 37 : நினைக்கவும் கூடாதன சில

பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்; திறனிலனென்று
எள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.

பொருள் :
அறமறிந்தவர்கள் பிறர் மனைவி, மது, திருட்டு, சூது, கொலை இந்த ஐந்தையும் (அடைவோம் என்று ஆசைப்பட்டால், ஒழுக்கங்கெட்டவன் என்று) சமூகத்தால் இகழப்படுவதுமன்றி, நரகத்திற்குச் செல்லும் பாதையில் சேர்த்துவிடும் என்று (இவற்றை) மனத்தாலும் நினைக்க மாட்டார்கள்.


பாடல் 38 : சிந்திக்கத்தகாதன

பொய்குறளை வௌவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார். சிந்திப்பின்
ஐயம் புகுவித் தருகிரயத் துய்த்திடும்;
தெய்வமுஞ் செற்று விடும்.

பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார். சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும்.

பொருள் :
பொய் சொல்லுதல், பிறரைக் குறை சொல்லுதல், பிறர் பொருளை விரும்புதல், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய நான்கையும் தெளிவான அறிவுடையவர் சிந்திக்க மாட்டார். அவ்வாறு நினைத்தால் அவை ஏழ்மையை கொடுத்து நரகத்திலும் புகுத்துவிடும். அவரை தெய்வமும் கைவிட்டுவிடும்.


பாடல் 39 : உண்ணும் முறையில் விடுபட்டவை

தமக்கென் றுலையேற்றார்; தம்பொருட்டூன் கொள்ளார்;
அடுக்களை எச்சிற் படாஅர்; மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.

தமக்கு என்று உலை ஏற்றார்;
தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப்பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்.

பொருள் :
தமக்காக மட்டும் சமையல் செய்யமாட்டார்; தெய்வப்பலி அல்லாமல் தனக்காக ஒரு உயிரை கொன்று உண்ண மாட்டார். அடுக்களையை எச்சில் படுத்தமாட்டார்; வைச்வதேவம் (கடவுளுக்கு நிவேதனம், அதிதி, காகம் முதலானவர்களுக்கு படைத்துப்) பின்னரே உணவு உண்ண வேண்டும்.

பாடல் 40 : உண்ணும் பொழுது

உயர்ந்ததின் மேலிரார், உள்ளழிவு செய்யார்,
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைகள் உண்ணு மிடத்து.

பொருள் :
சிறுவர்கள் உண்ணுமிடத்தில் பெரியவர்கள் உயர்ந்த இடத்தின் மேல் இருத்தல் கூடாது. சிறுவர்கள் செய்யக்கூடாத குற்றங்கள் செய்திருந்தாலும் உண்ணும் பொழுது அவர்கள் மனம் நோகும்படி எதுவும் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது.


பாடல் 41 : செய்வன தவிர்வன சில
கண்ணெச்சில் கண்ணூட்டார்; காலொடு கால்தேயார்;
புண்ணிய மாய தலையோ டுறுப்புறுத்த,
நுண்ணிய நூலறிவி னார்.

பொருள் :
அறநூல்களின் நுணுக்கங்களை அறிந்தவர், பிறர் கண்ணுக்கு மை தீட்டிய கோலை (குச்சியை) சுத்தம் செய்யாமல் தான் பயன்படுத்த மாட்டார். காலோடு கால் தேய்த்துக் கால்கழுவமாட்டார். புனிதமான பொருட்கள் (கோவில் பிரசாதம் போன்றவை) கிடைத்தால் தலையிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வார்.


பாடல் 42 : மனைவியைப் பிரியக்கூடாத காலம்

தீண்டாநாள் முந்தாளும் நோக்கார்; நீராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு .

பொருள் :
மனைவிக்கு மாதத்தீட்டு நிகழ்ந்தால் மூன்று நாளளவும் அவரை நெருங்கலாகாது; நீராடியபின் 12 நாட்கள் அவரைவிட்டுப் பிரியலாகாது என்பது இல்லறம் அறிந்த சிறந்த அறிவு படைத்தவர் முடிவு.


பாடல் 43 : கூடக்கூடாத நாட்கள்

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோடு (உ)வாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.

பொருள் :
நடுப்பகலிலும் நள்ளிரவிலும் காலையிலும் மாலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும் அமாவாசை பௌர்ணமியிலும் அஷ்டமியிலும் தாம் பிறந்தநாளிலும் தம்துணையோடு உடனுறைதலில் நல்லார் உடன்படார்.

பாடல் 44 : தவிர்வன சில

நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டிற் படாஅர். அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.

பொருள் :
அளக்கின்ற படியை அமர்கின்ற மணை மேல் வைக்க மாட்டார்; மணையை கவிழ்த்து வைக்க மாட்டார்; புதுத்துணியை தலைக்கடையில் (வீட்டின் வரவேற்பறையில்) விரிக்க மாட்டார்; (பலரும் வந்து செல்லும்) வரவேற்பறையில் கட்டிலிட்டு படுக்க மாட்டார் தம்மை அறியார் முன் (அதிக நேரம்) நிற்கமாட்டார்.

பாடல் 45 : திருமணப் பந்தலின் கீழ் பரப்பலாகாதவை

துடைப்பம் துகட்காடு புல்லிதழ்ச் செத்தற்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோ டைந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

பொருள் :
துடைப்பம், குப்பை, பூவின் தனித்தஇதழ்கள், பழைய கரிப்பானை, கிழிந்தகட்டில்(பாய்) இவைகளை மணப்பந்தலில் பரப்பலாகாது.

பாடல் 46 : இல்லம் பொலியச் செய்வன

காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்.

'பொருள் :
நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி (பசுஞ்சாணம் தெளித்துத்) தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, இல்லம் விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.

பாடல் 47 : படிக்கலாகாத நாட்கள்

அட்டமியும் ஏனை யுவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க் குறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.

பொருள் :
அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்தசி, அரசர்க்கு (நாட்டிற்கு) ஆபத்துக் காலம், பூகம்பம், இடிமுழக்கம், தமக்குத் தூய்மை போதாத நாள் என்னும் இவை வேதம் ஓதக்கூடாத நாட்கள்.

பாடல் 48 : அறஞ்செய்தற்கும் விருந்திடுதற்கும் உரிய நாள்கள்

கல்யாணம் தேவர் பிதிர் விழா வேள்வியென்று
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க;
பெய்க விருந்திற்குங் கூழ்.

பொருள் .
திருமண நாளிலும், தெய்வங்களுக்கு சிறப்பான நாளிலும், பித்ருக்களுக்கு சிறப்பு செய்யும் நாளிலும், திருவிழா நாளிலும், வீட்டில் விசேஷ யாகம் முதலானவை செய்யும் நாளிலும் தானம் முதலான அறங்களைச் செய்யவேண்டும்; அன்னதானமும் செய்யவேண்டும்.

பாடல் 49 : இன்னதற்குத் தக இன்னது செய்தல்

உடைநடை சொற்செலவு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.

பொருள் :
உடை உடுத்தும் முறை, நடத்தை முறை, பேசும் முறை, பிறரைத் திட்டும்முறை ஆகிய நான்கும் அவரவருடைய (அப்போதைய) நிலைமை, அறிவு, தைரியம், குடும்ப பாரம்பர்யம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

பாடல் 50 : தவிர்வன சில

பழியார் இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார்; தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.

பொருள் :
நல்ல கேள்வி அறிவுடையவர் பலர் முன்னிலையில் ஒருவரை பழி சொல்லிப் பேசமாட்டார், இழித்தும் பேசமாட்டார்; பலர் முன்னிலையில் படுத்துறங்க மாட்டார். தம்மால் செய்ய முடியாததை செய்வேன் என்று பிறருக்கு வாக்குக் கொடுத்துப் பின்பு செய்யாமல் இருக்கமாட்டார்; இல்லாதவரைக் கேலிசெய்து இகழ்ந்துரைக்க மாட்டார்.