Jul 31, 2020

Hindumatha Dharma Vilakkam - 08


பாடம்- 8 

பொதுதர்மம் தொடர்ச்சி

எட்டு ஆத்ம குணங்கள் 
1)தயா - கருணை
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி அன்புகொண்டு இரக்கம் கொண்டு வாழ்தல்
2)க்ஷமா - பொறுமை
பிறரால் நமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.
3) அநஸூயா - பொறாமையின்மை
நம்மிடம் இல்லாமல் பிறரிடம் இருக்கும் செல்வங்களை குறித்து பொறுத்துக் கொள்ள முடியாத தன்மை.
4) சௌசம் = தூய்மை
அகத்தூய்மை - விருப்பு வெறுப்பு கோபம் போன்ற தீய குணங்கள் இல்லாமல் நற்குணங்களோடு இருக்கும் மனம்.
புறத்தூய்மை - உடல், உடை, இருப்பிடம் போன்ற எல்லா விஷயங்களிலும் தூய்மையைக் கடைபிடித்தல், தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்தல்.

5) அனாயாஸம் = சிரமம் இன்மை
சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். அதிகப்படியான உழைப்பு, ஓய்வின்மை, மன பாரம், தேவையற்ற சிந்தனைகள் போன்றவை இல்லாமல் வாழ்க்கையை இலகுவாக வாழ்தல்.
6) மங்களம் = நன்மை 
நடை, உடை, பாவனைகளில் உயர்ந்த வற்றை கடைப்பிடித்தல். அமங்கலமான சொற்கள் அலங்காரம், நடத்தை போன்றவற்றைத் தவிர்த்தல். பண்பாடான நடத்தை.

7)அகார்ப்பண்யம் = கருமித்தனமின்மை
தானும் அனுபவித்து மற்றவர்களும் தர்மம் முதலானவற்றைச் செய்து அனுபவிக்க செல்வத்தை பயன்படுத்துதல்.
சொற்கள், மனம் , அறிவு போன்றவற்றிலும் கருமித்தனம் இல்லாமல் இருத்தல்.
8) அஸ்ப்ருஹா - பற்றின்மை
ஸ்ப்ருஹா என்றால் பற்று. அஸ்ப்ருஹா என்றால் பற்றின்மை. உறவுகள் உடைமைகள் பதவிகள் போன்றவற்றில் தீவிர பற்று இல்லாமல் இருத்தல். உலக வாழ்க்கை நிலையற்றது என்று புரிந்துகொண்டு தாமரை இலை தண்ணீர் போல வாழ்தல்.
3️⃣ சமயச் சடங்குகள்

16 சம்ஸ்காரங்கள்
1. கர்ப்பாதானம்
2. பும்ஸவனம் (3ம் மாதம்)
3. சீமந்தம் (6 அ 8ம் மாதம்)
4.  ஜாத கர்மா
5. நாமகரணம் (11ம் நாள்)
6. நிஷ்க்ரமணம் (3ம் மாதம் அக்னி சந்திரதரிசனம். 4ம் மாதம் வெளியே கோயிலுக்குச் செல்வது ஈஸ்வர தரிசனம்)
7. அன்னப்பிராசனம் (6 ம் மாதம்)
8. சூடாகர்ணம் ( சௌளம்) முடியெடுத்தல் (1 - 5 வயது)
9. கர்ணவேதநம் - காதுகுத்துதல்
10. அக்ஷராரம்பம் வித்யாரம்பம் (4 - 5 வயது)
11. உபநயனம் ப்ரஹ்மோபதேசம் (6-8 வயது) 
12. ப்ரைஸார்த்தம் - வேதம் படிக்கத் தொடங்குதல்
13. கேஷாந்தம் - ஆண் - 16 வயதில் செய்யும் சிறுசடங்கு
 ருதுசுத்தி ( பெண் - பூப்பூச் சடங்கு)
14. ஸமாவர்தநம் அவப்ருத ஸ்நாநம் (கல்வியின் நிறைவு)
15. விவாகம்
16. அந்த்யேஷ்டி - இறுதிச்சடங்கு.

Jul 24, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 07

ஓம்

பாடம்  - 7

பொது தர்மம் தொடர்ச்சி

உலகியல் லட்சியங்கள் குறுகிய காலத்தில் முடிந்து விடுபவை. ஆனமிக லட்சியமான வீடுபேறு, நீண்ட நெடும் பயணம். ஒரு வாழ்க்கையில் மட்டுமல்ல, பல பிறவிகளில் தொடர்ந்து செய்யப்படுகின்ற சாதனை.

தர்மம் பக்தி ஞானம்
தர்மம் - சாமான்ய தர்மம், விசேஷ தர்மம்
சாமான்ய தர்மம் - தொடர்ச்சி

சென்ற வாரம் யமம் நியமம் பற்றிப் பார்த்தோம் இனி மேலும் சில நற்பண்புகள்...
ஆசார வித்துக்கள்
ஆசாரத்திற்கு காரணம்

எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும்.
அவை:-

நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து.
- ஆசாரக்கோவை 1.

நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுடன் இருத்தல்.
காண்க: திருக்குறள் செய்நன்றி அறிதல்.

பொறையுடைமை - பிறர் செய்யும் தீமையைச்  பொறுத்துக் கொள்ளுதல்.
காண்க: திருக்குறள் பொறையுடைமை.

இன்சொல் - வாய்மை - இனிமையும் உண்மையுமான சொற்களையே எப்பொழுதும் பேசுதல்.
காண்க: திருக்குறள் இனியவை கூறல்

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை - அஹிம்ஸா - எந்த உயிருக்கும் எவ்விதத்திலும் (உடலாலோ வாக்காலோ மனத்தாலோ) தீமை செய்யாது இருத்தல்.
காண்க: திருக்குறள் இன்னா செய்யாமை.

கல்வி - நீதிநூல்களை முறையாகக் கற்றறிதல்.
காண்க: திருக்குறள் கல்வி, கேள்வி

ஒப்புரவு ஆற்ற அறிதல் - உலக வழக்கைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடத்தல்.
காண்க: திருக்குறள் ஒப்புரவறிதல்

அறிவுடைமை - நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறிதல்.
காண்க: திருக்குறள் அறிவுடைமை

நல்லினத்தாரோடு நட்டல் - நல்ல குணம் உடையவர்களை நண்பர்களாகக் கொண்டிருத்தல்.
காண்க: திருக்குறள் பெரியாரைத் துணைக்கோடல்

எண்ணற்ற நற்பண்புகள் நல்லொழுக்கங்கள் திருக்குறள் நாலடியார் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் உலகநீதி போன்ற அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சாமானிய தர்மமே.

சாமானிய தர்மத்தில் முதலாவதாக நற்பண்புகளைப் பார்த்தோம் இனி இரண்டாவது...

2️⃣ஆசாரம் - நன்னடத்தை

மூன்று நிலைகள் மனிதனை கட்டுப்படுத்துகின்றன. ஒன்று அகநிலை - ஆத்யாத்மிகம். இரண்டு புறநிலை - ஆதி பௌதிகம். மூன்று அகத்திற்கும் புறத்திற்கும் அப்பாற்பட்ட நிலை - ஆதிதைவிகம். நமது உடல், உள்ளம், அறிவு, ஆளுமை ஆகியவை நம்மை அகநிலையில் கட்டுப்படுத்துபவை. காற்று, வெப்பம், குளிர், வெட்டவெளி, மனிதன், மிருகம், மரம், செடி, நாம் வாழ்கின்ற பூமி இவை புறநிலையில் கட்டுப்படுத்துபவை. மனிதனின் ஆற்றலுக்கு உட்படாத வெயில், இடி, மின்னல் போன்றவை மற்றும் அவற்றிற்கும் அப்பாற்பட்டு நின்று அவற்றை அதனதன் இயல்புப்படி இயங்க வைக்கின்ற அறியவொனாத தெய்வ சக்தியும் மூன்றாவது நிலையில் வருபவை. ஆத்யாத்மிகத்தையும் ஆதிபௌதிகத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தி அனுகூலம் ஆக்கிக் கொள்ள முடியும். ஆதிதைய்விகம் நம்மை பாதிக்காதபடி நமக்கு பாதுகாப்பு தேடிக் கொள்வதும், அதனை அனுகூலம் ஆக்கிக் கொள்வதும் நமது முக்கியக் குறிக்கோள். இந்த மூன்று நிலைகளையும் அனுகூலம் ஆக்கிக் கொள்வதற்காகவே அன்றாட நடவடிக்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியமாகிறது.

அன்றாட நியமங்கள்

அதிகாலையில் எழுதல், காலைக்கடன் முடித்தல்,
உடற்பயிற்சி செய்தல்,
குளித்தல், உடுத்தல்,
வழிபாடு செய்தல்,
உண்ணுதல்,
உழைத்தல், உறங்குதல்.

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதில் இருந்து இரவு உறங்கும் வரை பின்பற்ற வேண்டிய நியதிகள் ஆசாரம் எனப்படுகிறது.

"வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை"
  • ஆசாரக் கோவை

குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு; ஆலயம் தொழுவது சாலவும் நன்று….

தேவையான அளவு -
ஒழுங்குக்கு - உட்பட்ட உணவும், விளையாட்டும் (உடற்பயிற்சி) உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. -பகவத்கீதை 6.17

காண்க: ஆசாரக்கோவை

Jul 23, 2020

நீ நீ மாத்திரமே!

ஓம்


நீ நீ மாத்திரமே !






உண்மைப்பொருளான
உன்னிடத்தில் பொய்த்தோற்றங்கள் 
வந்துபோகின்றன.

அறிவு வடிவான உன்னிடத்தில் 
அறியாமை வந்து போகின்றது.

ஆனந்தக்கடலான உன்னிடத்தில்
துன்ப அலைகள் 
வந்து போகின்றன.

நீ பூர்ணமானவன்!
நீ வரையறையில்லாதவன்! 
நீ நீ மாத்திரமே!

மற்ற அனைத்தும் 
வெற்றுக் கற்பனைகளே !!


Jul 20, 2020

அவன்தான் அவன் !

ஓம்




அவன்தான் அவன் !

எல்லாம் கடவுள் என்றறிந்தவன்
கடவுளுக்கு ஆலயம் வைத்தான்.
ஆலயத்துள் எல்லாம் வைத்தான்.

எல்லா கலைகளையும் கடவுளிடம் கண்டவன்
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான்.
எல்லாக் கலைகளையும் ஆலயத்துள் வைத்தான்.
இயலில் இசையில் நாடகத்தில்
நடனத்தில் ஓவியத்தில் சிற்பத்தில் கடவுளை வடித்தான்.

எல்லா உணர்வுகளும் கடவுளாலேயே என்று கண்டவன்
எல்லா உணர்வுகளிலும் கடவுளை வைத்தான்.
வீரத்திலும் கோபத்திலும்  கருணையிலும்
காதலிலும் கடவுளை வடித்தான்.

எல்லா ஆசாபாசங்களும் அவனாலேயே என்றறிந்தவன்
அவனிடத்திலேயே அனைத்தையும் வைத்தான்.
தாயாய் தந்தையாய் கணவனாய் மனைவியாய்
குழந்தையாய் அண்ணனாய் தங்கையாய் கடவுளை வடித்தான்.

எல்லா உயிர்களும் அவனே என்றுணர்ந்தவன்
எல்லா உயிர்களாயு
ம் அவனை வைத்தான்.
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் பறவையாய் விலங்காய்
மீனாய் பாம்பாய் தேவனாய் கடவுளை வடித்தான்.

கடவுளையே உலகமாகக் கண்டவன்
வாழ்க்கையையே வழிபாடாக வைத்தான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
என்று உரக்கப் பாடினான்.
அவன் தான் யோகி.
அவன் தான் ஞானி.
அவன்தான் சித்தன்.
அவன்தான் அவன் !


கடவுளின் ஞானம்


ஓம்



கடவுளின் ஞானம்


எங்கும் கடவுளின் நாதத்தை கேட்டான் - 
இசைக்கலை வந்தது.

எங்கும் கடவுளின் காட்சியைக் கண்டான் -
சிற்பக்கலை வந்தது. 

எங்கும் கடவுளின் அழகைக் கண்டான் -
ஓவியக்கலை வந்தது.

எங்கும் கடவுளின் நடனத்தைக் கண்டான் -
நாட்டியக்கலை வந்தது. 

எங்கும் கடவுளின் அறத்தைக் கண்டான் -
போர்க்கலை வந்தது.

எங்கும் கடவுளின் விதியை கண்டான் -
விஞ்ஞானம் வந்தது.

எங்கும் கடவுளின் அன்பைக் கண்டான் -
காதல்க்கலை வந்தது.

எங்கும் கடவுளின் அமைதியை  கண்டான் -
யோகக்கலை வந்தது.

எல்லாக் கலைகளையும் கடவுளிடம் கண்டான் - 
எல்லா கலைகளிலும் கடவுளை வைத்தான். 

கடவுளிடம் உலகத்தைக் கண்டான் - 
உலகத்தில் கடவுளைக் கண்டான். 

உள்ளும் புறமும் கடவுளைக் கண்டான் -  
சொல்லும் பொருளுமற்றுச் சும்மாயிருந்தான்.

Jul 17, 2020

Hindu matha Dharma Vilakkam - Chapter 06


பாடம் - 06

யமம், நியமம்


இறைவனை வழிபடும் முறைகள்

வாழ்க்கையே வழிபாடு

தர்மம்  பக்தி ஞானம்

தர்மம் 1) ஸாமான்ய தர்மம் 2) விஷேச தர்மம்

1) ஸாமான்ய தர்மம் - யமம், நியமம்

1.யமம் : 
அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம், ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம்.

அ)அஹிம்ஸா - ஹிம்சை செய்யாமை

ஆ) ஸத்யம் - வாய்மை - பொய்பேசாமை

யதா த்ருஷ்டம் யதா ச்ருதம் யதா அநுமிதம் ததா வதநம்.

எதைப் பார்த்தோமோ எதைக் கேட்டோமோ எதை எவ்வாறு சிந்தித்தோமோ அப்படியே கூறுதல். 

i) உள்ளதை உள்ளவாறு கூறுதல்.
ii) (ஹிம்சை ஏற்படுமெனின், ஹிதமாக இருக்காது எனில்)
உண்மையை மறைத்தாலும் வாய்மையாகும்.
iii) (நன்மை ஏற்படும் எனில்) பொய்மையும் வாய்மையாகும்.

பலன் - மனத்தூய்மை, மனபாரமின்மை, மனவலிமை (பயமின்மை), புண்ணியம், மற்ற ஸாதனைகளை பின்பற்ற தகுதி.

இ) அஸ்தேயம் - திருடாமை
அசாஸ்த்ரபூர்வக பரத்ரவ்ய ஸ்வீகாரம்

உள்ளத்தால் உள்ளலும்.. திருக்குறள்

காரணம் - தமோகுணம் (சோம்பல், மோஹம்)

விடும்வழி - தன்மானம் வளர்த்துக்கொளல், உழைப்பு,  திருப்தி.

ஈ) ப்ரஹ்மசர்யம் - ஒழுக்கம் தவறாமை - பாலியல் ஒழுக்கம்.
ப்ரஹ்ம = வேதம். வேதத்தை கற்பதற்கான வாழ்க்கை. வேதத்தை பின்பற்றிய வாழ்க்கை. இந்திரிய கட்டுப்பாடு புலனடக்கம்.

பிறனில் விழையாமை

ஒருமையுள் ஆமைபோல்...
அடக்கம் அமரருள்...

உ) அபரிக்ரஹம் - பொருள்மிகப்படையாமை.
எதையும் இலவசமாக பெறாமை.

யாதனின் யாதனின்...

காரணம் : லோபம், அச்ரத்தா, பயம்.

உபாயம் : பயனற்றதை அழித்துவிடல்.
பிறருக்கு பயனுடையதை கொடுத்துவிடல்.

2. நியமம் - கடைபிடிக்க வேண்டியன:
சௌச, ஸந்தோஷ, தப, ஸ்வாத்யாய, ஈச்வரப்ரணிதானானி நியமா:
நியம: = செய்யவேண்டியது Do's நியமயதி.

அ) சௌசம் = தூய்மை
பாஹ்யம், ஆந்தரம்
பாஹ்யம் - உடல், உடை, இருப்பிடம், புறப்பொருள்கள் அனைத்தும்.
ஆந்தரம் - மனம்.

காரணம் - தமஸ் ஆலஸ்யம் லோபம்

ஆ) ஸந்தோஷம் - கிடைப்பதில் திருப்தி.

மாற்றமுடியாதவைகளில் திருப்தி; மாற்றமுடிந்தவைகளில் முயற்சி.

இ) தவம் - தப: தபதி உருக்குதல்.
விரும்பி துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல். 

உற்றநோய் நோற்றல்...

உடலையும் மனதையும் நம் வசத்தில் கொண்டு வருவதற்கான ஸாதனை.

காயிகம், வாசிகம், மானஸம்.
ஸாத்விகம், ராஜஸம், தாமஸம்.

பலன் : ஆத்ம ஜயம். அடையமுடியாததையும் அடையச்செய்யும்.

ஈ) ஸ்வாத்யாயம் - படித்தல்
இலக்கையும் இலக்கிற்கான பாதையையும் காட்டுவது சாஸ்த்ரம் 
அவை தர்ம, பக்தி, ஞானநூல்கள்.

அவைகளை வாசித்தல், கேட்டல். மனப்பாடம் செய்தல், பாராயணம் செய்தல், பொருளறிதல்.

உ) ஈச்வரப்ரணிதானம்
கர்மயோகம், பக்தியோகம்
(நித்யகர்மாவில் விசேஷபாவனை), விசேஷகர்மா(பூஜை).

இவை அனைத்தும்
செய்தல், செய்யத்தூண்டுதல், செய்ததை ஆமோதித்தல்.

Jul 15, 2020

எது பகுத்தறிவு ?


ஓம்

எது பகுத்தறிவு ?
ஸ்வாமி பூர்ணாநந்த ஸரஸ்வதி

கருப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து மத வெறுப்பர் கூட்டம் புராணங்களை ஆபாச புராணம் என்று பேசி வருகின்றது.
நாங்கள் ஆபாசமாகப் பேசவில்லை புராணங்களில் உள்ளதையே சொல்லுகின்றோம் என பகுத்தறிவு என்று ஆபாசம் பேசுபவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆபாசம் என்பது என்ன?
ஆபாசம் என்பது பொருளில் உள்ளதா? பார்வையில் உள்ளதா? நிர்வாணம் என்பது இயல்பாக இருப்பது. அது எப்பொழுது ஆபாசம் ஆகின்றது? காம நோக்கோடு பார்க்கப்படும்பொழுதே வெளிப்படுத்தப்படும்பொழுதே அல்லவா?
உடலின் நிர்வாணம் ஆபாசம் அல்ல. எல்லா விலங்குகளும் எப்பொழுதும்  நிர்வாணமாகவே இருக்கின்றன. அது ஆபாசமாக கருதப்படுவது இல்லை. ஆடைகளுக்குள் அனைவரும் நிர்வாணமானவர்களே. அது காமத்தோடு பார்க்கப்பட்டு காமத்தைத் தூண்டும் விதமாக வெளிப்படுத்தப்படுகின்ற பொழுதே ஆபாசம் ஆகின்றது.
புராணங்களில் ஆபாசம் இல்லை. அது காமுகர்களால் ஆபாசமாகப் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்படுகின்றது என்பதே உண்மை
உண்மையை தேடும் பகுத்தறிவு என்று, ஆபாசமாகப் பகுத்தறிவை  வெளிப்படுத்துவது, பகுத்தறிவின் ஆபாசமே அன்றி வேறில்லை.
ஆபாசம் என்ற சொல்லுக்கு போலி என்பதே உண்மைப் பொருள். உண்மையை போல விளங்குவது  என்று அர்த்தம். இந்தப் பெரியாரிய பகுத்தறிவுவாதிகள் பகுத்தறிவுப் போலிகள்.
உண்மையைத் தேடும் பகுத்தறிவு என்றால் என்ன?, என்பதைப் பற்றிய உண்மையை சற்று பகுத்தறிவோம்.
சிந்திக்கத் தொடங்கிய மனிதன் உண்மையைத் தேடுகிறான். உலகம் எப்படி வந்தது ? எப்படி இருக்கின்றது ? உயிர் என்பது என்ன? அது எப்படி உடலில் வந்தது? உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு என்ன? இரண்டும் வேறு வேறா அல்லது ஒன்றா? இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இருப்பதாஇல்லை, ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதா? சார்ந்து இருப்பது எனில், எது எதைச் சார்ந்திருக்கிறது?
இந்த கேள்விகள்தான் மதங்களின் தோற்றத்திற்கு அடிப்படை. இந்தக் கேள்விகளுக்கான விடையை, தவத்தோடும் மன அடக்கத்தோடும் பகுத்தறிவுரீதியாகத் தேடி அடையப்பட்டவைதான் பல்வேறு சித்தாந்தங்கள். உலகத்தின், உயிரின் உண்மையைப் பற்றிய பகுத்தறிவு ரீதியான விளக்கங்களே பல்வேறு மதங்கள்.
உண்மையைத் தேடும் பகுத்தறிவு, தான் கண்ட உண்மையை விவரிப்பது தான், அதை முறையாக விவாதித்து மற்றவர்களையும் ஏற்கச் செய்வதுதான் உண்மையான பகுத்தறிவு. அப்படி வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்களான ரிஷிகள், ஞானிகள் ,யோகிகள், சித்தர்கள்
கௌதமர், கணாதர், கபிலர், பதஞ்ஜலி, ஜைமினி, வியாசர், நீலகண்ட சிவாச்சாரியார் இப்படி அநேகம்பேர். இறைவன் அருளாலும் இவர்கள் முயற்சியாலும் கண்டடையப்பட்ட சித்தாந்தங்களே நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சைவ சித்தாந்தம். புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகமது நபி இவர்களும் தங்கள் மதத்தை பகுத்தறிவுரீதியாகத் தேடி அடைந்தவர்களே.
இப்படிப் பல்வேறு உண்மையான பகுத்தறிவுவாதிகள் தர்க்கரீதியாக பல்வேறு கோணங்களில் உண்மையை ஆராய்ந்து பல்வேறு சித்தாந்தங்களை நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள். சித்தாந்தம் என்பது நீண்ட ஆய்வின் முடிவாக சித்தித்த - அடையப்பட்ட - கொள்கை. அவைவே பல்வேறு மதங்கள். தங்களின் முடிவான வாழ்க்கைக் கொள்கை என்ன என்பதையே இவை விவரிக்கின்றன.
உண்மையைத் தேடியவன், தான் கண்டடைந்த உண்மையை உள்ளவாறு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் உண்மையான அறிவுடைமை. இந்தப் பெரியாரிய பகுத்தறிவுவாதிகளும்  தங்களுடைய சித்தாந்தம் என்ன என்பதை பகுத்தறிவு ரீதியாக மற்றவர்களுக்கு விவரிப்பது தான் உண்மையான பகுத்தறிவாக இருக்கும். வெறுமனே மற்ற மதங்களின் - குறிப்பாக ஹிந்து மதத்தைப் பற்றிய - குறியீடுகளை, புற அங்கங்களை, தோற்றங்களை விமர்சிப்பது மட்டும் பகுத்தறிவு ஆகாது. ஒருவன் தான் காண்கின்ற, கேட்கின்ற விஷயங்களின் நுண்பொருள் காண்பதே அறிவு. ஒருவர் எதை எப்படிச் சொன்னாலும், அவர் சொல்லுகின்ற நோக்கம் என்ன, எதைச் சொல்ல வருகின்றார், என்பதை உள்ளவாறு அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவு.
புராணங்களில் உள்ள கதைகளையும், கதைகளின் வழியாக சொல்லப்படுகின்ற தர்ம, தத்துவ விஷயங்களையும் நேர்மறைப் பார்வையோடு அணுகுவதும் புரிந்து கொள்வதும்தான் சரியான அறிவுடைமையாகும்
உதாரணத்திற்கு ஹரியும் ஹரனும் சேர்ந்து ஹரிஹர புத்திரரான ஐயப்பன் வந்தார் என்று புராணம் கதை சொன்னால், ஆணும் ஆணும் சேர்ந்து குழந்தை வருவது சாத்தியம் இல்லை, வந்திருக்கிறதென்றால் ஒரு ஆண் பெண்ணாக மாறி என்று பொருள். அப்படித்தான் புராணத்திலும் இருக்கிறது. தேவர்களுக்கு இது சாத்தியம். அதுவும் இது மாயையினால் பண்ணப்படுவது. உண்மையான உடல் ரீதியான சேர்க்கை அல்ல, காக்கும், அழிக்கும் இரண்டு சக்திகளின் சேர்க்கை. (இன்று அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில படங்களில் காண்கின்றோம் பல்வேறு வேறுபட்ட சக்தியுடையவர்கள் ஒன்றுகூடி தீயசக்தியை அழிப்பதை.) தோன்றிய கதையைச் சொல்வது கதையின் நோக்கம் அல்ல. அப்படி வந்த அந்த புத்திரன் என்ன செய்தான்? எப்படி வாழ்ந்தான்? என்பதை சொல்வதுதான் புராணத்தின் நோக்கம்.
இதேபோல, பூமாதேவியும் மகாவிஷ்ணுவும் சேர்ந்து நரகாசுரன் வந்தான் என்று கதை சொன்ன புராணம், அந்த நரகாசுரன் தீயவனாக இருந்ததினால் தந்தையான மகாவிஷ்ணுவினாலேயே கொல்லப்பட்டான் என்றும் சொல்கிறது. தீயவன், புத்திரனாக இருந்தாலும் அவன் அழிக்கப்பட வேண்டியவனே என்பதே செய்தி. மனுநீதிச் சோழன்  என்ற உண்மையான பகுத்தறிவுள்ள தமிழன் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினான். நேர்மையான ஒரு தமிழ் மன்னனை உருவாக்கியது இந்தப் புராணக் கதை தானே. இப்படிக் கதையின் தாற்பரியத்தை விடுத்து மகாவிஷ்ணுவும் பூமியும் சேர்வது போல ஆபாசமாக படத்தை வரைந்து இதுதான் புராணம் சொல்கின்றது என்று காட்டுவது ஆபாசமான  பகுத்தறிவற்ற மூடத்தனத்தையே காட்டுகின்றது.
தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டுதல் தான் ஹிந்து மத புராணங்களில் காணப்படுகின்ற வரலாறுகளின் கருத்து. இதன்மூலம் அனைவரும் தர்மமாக வாழவேண்டும்; தர்மமாக வாழவில்லையென்றால் இறைவன் தண்டிப்பான்தர்மமாக வாழ்பவனை இறைவன் காப்பான். உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ வேண்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மக்கள் உண்மையானவர்களாக, நேர்மையானவர்களாக, நல்லவர்களாக தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்துமத புராண இதிகாசங்கள் சொல்லுகின்ற செய்தி. இந்த மையக் கருத்தை விட்டுவிட்டு வெறும் கதையை வைத்துக்கொண்டு ஆபாசமாக காலக்ஷேபம் பண்ணுவது பயனற்றது. இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை ஏற்படப்போகின்றது? இதுவரை ஏற்பட்டிருக்கின்றது?
புராண, இதிஹாஸக் கதைகளை படித்தும் கேட்டும்தான் நம் முன்னோர்கள் தர்மமாக, மனநிம்மதியோடு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள்.
பெரியாரில் தொடங்கி இன்றைக்குப் பெரியாரின்  பிஞ்சுகள் குஞ்சுகள் வரை ராமர் முதல் அனைத்து புராண கதாபாத்திரங்களையும் ஆபாசமாகப் பார்த்து, சித்தரித்து இந்த சமூகத்திற்கு என்ன நல்ல செய்தியைச் சொல்லி விட்டார்கள்? அவர்களுடைய அழுக்குச் சிந்தனை சமூகத்தில் பரவி, சமூகமே தர்மத்தை விட்டும் பக்தியை விட்டும் ஒழுக்கத்தை விட்டும் சீர்கெட்டு போனதுதான் மிச்சம். நாத்திக கொள்கையால் சமூகமே சுயநலம் மிக்கதாகவும், பேராசை மிக்கதாகவும், பணம் என்பதை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டதாகவும் ஆகி இருக்கின்றது. வன்முறை, கொலை, கொள்ளை, காமம் மிகுந்ததாக தமிழினம், தமிழர் சமுதாயம் கடந்த நூறு வருடங்களில் கீழ்மை அடைந்திருக்கின்றது என்பதுதானே  நாம் கண்கூடாக காணுகின்ற உண்மை. ஸம்ஸ்கிருத வெறுப்பு, ஹிந்தி வெறுப்பு என்று ஆங்கிலத்தை தூக்கிப்பிடித்து இன்று தமிழையும் தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிட்டார்கள்.
இதை இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு என்று சமூகத்தில் விஷம் பரப்பப்படுகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கப்படுகின்றது. அதை வைத்து பண அரசியல், சுயநல அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. மற்ற மதங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக பகுத்தறிவுவாதிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கின்ற மதமாற்றம் செய்யாத, பிற மதத்தை வெறுக்காத, அழிக்க நினைக்காத ஹிந்து மதம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய், உயர்ந்த சிந்தனை எளிய வாழ்க்கை போன்ற ஹிந்து மத சித்தாந்தங்கள் உடைக்கப்படுகின்றன. பன்னாட்டு வியாபாரிகளால் அவர்கள் வியாபார நோக்கங்களுக்காக போகத்தை முக்கியமாகக் கொண்ட மதங்கள், சிந்தனைகள் வளர்க்கப்படுகின்றன
நன்கு சிந்திக்கும் ஆற்றலுள்ள இளம் வயதினர் உண்மையை - வாழ்க்கையின் பொருளைத் - தேடுதல் இயல்புஇவர்கள் இந்த பகுத்தறிவுக் குருடர்களின் - மூடர்களின் - குதர்க்கவாதிகளின் - வலையில் விழுந்து விடாமல், நமது முன்னோர்கள் காட்டிய தர்மவழியில் உண்மையைத் தேடி, உண்மையான குருமார்களை அணுகி ஞான மரபை, யோக மரபைக் கேட்டு, கற்று, வாழ்வின் உண்மை பொருளை அறிந்து நம் முன்னோர்கள் வாழ்ந்த தெய்வீக வாழ்க்கையை வாழ்வதே  அறிவுடைமை ஆகும்.