Feb 2, 2021

Kaivalya Navanitham - தத்துவ விளக்கப் படலம் (51-101)


கைவல்ய நவநீதம்

தத்துவ விளக்கப் படலம்


பாடல்: 51
இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும்,
அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய்,
முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம்,
சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல்.

பொருள்:
இந்த மாயையினால் = சுத்த அசுத்தங்களான இந்த மாயையினால்
சீவர்க்கு = உயிர்களுக்கு,
ஏழ் அவத்தைகள் உண்டாகும் = ஏழு அவஸ்தைகள் உண்டாகும்,
அந்த ஏழ் அவத்தை தம்மை = அந்த ஏழு அவஸ்தைகளையும்,
அடைவினின் மொழியக் கேளாய் = கிராமமாகச் சொல்லுகிறேன் கேட்பாயாக,
முந்த அஞ்ஞானம் = முதலாவது அஞ்ஞானம்,
மூடல் = (இரண்டாவது) மூடல் என்ற ஆவரணம்,
முளைத்தல் = (மூன்றாவது) தோற்றம் என்ற விக்ஷேபம்,
காணாத ஞானம் = (நான்காவது) பரோக்ஷ ஞானம்,
சந்ததம் கண்ட ஞானம் = (ஐந்தாவது) அபரோக ஞானம்,
தழல்கெடல் = (ஆறாவது) சோக நிவிர்த்தி,
குளிர்மை ஆதல் = (ஏழாவது) குறைவிலா நிறைவு (திருப்தி).

பாடல் : 52
பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம்,
பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல்,
நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம்,
குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.

பொருள் :
பிரமமாம் தனை மறந்த பேதைமையே அஞ்ஞானம் = (ஆதாரமான ஸச்சிதாநந்த) பிரஹ்மம் ஆன தன் யதார்த்த ஸ்வரூபத்தை மறந்த அறியாமையே முதல் நிலையாக அஞ்ஞானமாகும்,
பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் = பிரஹ்மம் - ஆத்மா - இல்லை, தெரியவில்லை என்று சொல்லுதல் இரண்டாவதான ஆவரணம் என்ற மூடல் ஆகும்.
நான் நரன் என ஒரு கருத்தால் = நான் மனிதன் என்று எண்ணும் எண்ணத்தால், (இப்போது செயல்களைச் செய்வதால் இனி அவற்றின் பலன்களை அனுபவிக்கும்)
சீவன் நான் என முளைத்தல் தோற்றம் = (கர்த்ருத்வம் போக்த்ருவம் உடைய) ஜீவன் நான் என எண்ணுதல் விக்ஷேபம் ஆகும்.
குரவன் வாக்கியத்தால் = குருவால் உபதேசிக்கப்பட்ட ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம என்னும் அவாந்தர வாக்கியத்தால்,
தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம் = ஆத்மா - ப்ரஹ்மம் - உண்டு என்று அறிந்து கொள்ளுதல் பரோக்ஷஞானம் ஆகும்.

பாடல் : 53
தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய்,
அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும்,
கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போதல்,
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா நந்தம் ஆமே.

பொருள்:
தத்துவ விசாரம் செய்து = (தத் துவம் அஸி போன்ற மஹாவாக்யங்கள் வாயிலாக) ப்ரஹ்ம விசாரம் செய்து,
சகல சந்தேகமும் போய் = எல்லா ஐயங்களும் நீங்கி,
அத்துவிதம்தான் ஆதல் = அத்வைதப் ப்ரஹ்மமே நான் என்று இருத்தல் அபரோட்ச ஞானம் ஆகும் = அபரோக்ஷ ஞானம் ஆகும்,
கர்த்தனாம் சீவபேதம் = நான் கர்த்தா போத்தா எனும் ஜீவத்வம்
கழிவதே துக்கம் போதல் = நீங்குவதே துக்க நிவிர்த்தி ஆகும்.
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்தது ஆநந்தம் ஆமே = (எல்லாத் துன்பங்களில் இருந்தும்) விடுபட்டவனாய் (செய்யத்தக்கன அனைத்தும்) செய்து முடிந்தது (அடைய வேண்டிய அனைத்தும் அடைந்துவிட்டேன்) என்னும் திருப்தி ஆநந்தம் ஆகும்.

பாடல் : 54

இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம்,

புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி,

உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி,

அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான். 


பொருள் :

இதுநினக்கு அறியும் வண்ணம் = இது (ஆத்மா ஒருவனுக்கே ஏழு அவஸ்தைகளும் உண்டாகின்றது என்பது) உனக்கு நன்றாக விளங்கும்படிக்கு,

இப்படி ஒரு திட்டாந்தம் = இப்படி ஒரு உதாரணமாக,

புதுமையாம் கதை கேள் = ஆச்சர்யமான ஒரு கதையைக் கேட்பாயாக,

பத்துப் புருடர் ஓர் ஆற்றை நீந்தி = 10 நண்பர்கள் ஒரு ஆற்றைக் கடந்து,

உதகதீரத்தில் ஏறி = அந்நதியின் மறுகரையில் ஏறிய பின்னர்,

ஒருவன் ஒன்பதுபேர் எண்ணி = அவர்களில் ஒருவன் மற்ற ஒன்பது பேர்களையும் எண்ணி,

அதனொடு தசமன் தான் என்று = ஒன்பது பேரோடு தானே பத்தாமவன் என்று,

அறியாமல் மயங்கி நின்றான் = அறியாமல் ஒருவனைக் காணவில்லை என்று மயங்கி  நின்றான். 


பாடல் : 55

அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல்,

பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம்,

நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக்,

குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.


பொருள் :

அறியாத மயல் அஞ்ஞானம் = தன்னை (ஒன்பது பேரோடு பத்தாவது மனிதன் தான்தான் என்பதை) அறியாத மயக்கமே அஞ்ஞானம்,

அவன் இலை காணோம் என்றல் = பத்தாவது ஆள் இல்லை, காணவில்லை என்று கூறுதல்,

பிறியா ஆவரணம் ஆகும் = நீங்காத மறைப்பு ஆகும்,

பீழை கொண்டு அழல் விட்சேபம் = (நதியில் அவன் இறந்துவிட்டான் என்று கருதி) துன்பம் கொண்டு அழுதல் விக்ஷேபம்,

நெறியாளன் = ஆப்தன் ஒருவன்,

தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லை = பத்தாமவன் இருக்கின்றான், இங்கே நிற்கின்றான் என்று கூறுதலை,

நெஞ்சில் குறியாக எண்ணிக் கொள்வது = மனதில் நிச்சயித்து கருதிக் கொள்வது,

பரோட்ச ஞானம் = பரோக்ஷ ஞானமாகும் (கேள்வி அறிவாகும்).


பாடல் : 56

புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை,

எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல்,

கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல்,

திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த  மாமே.


பொருள் :

புண்ணிய பதிகன் = தர்மவானான பாதையில் செல்லும் ஓர் ஆப்தன்,

பின்னும் புருடர் ஒன்பதின்மர் தம்மை = பின்னரும் மனிதர் ஒன்பது பேரை,

எண்ணும் நீ தசமன் ஆவை என்னவே = எண்ணுகின்ற நீயே பத்தாவது மனிதன் ஆவாய் என்று சொல்லவே,

தன்னைக் காணல் = (பத்தாமவன் இருக்கின்றான், நானே அவன் என்று) தன்னை அறிந்து கொள்ளுதல்,

கண்ணினில் கண்ட ஞானம் = அபரோக்ஷ ஞானம் (நேரே கண்ட அறிவு) ஆகும்.

கரைதல் போவது நோய் போதல் = (பத்தாமவன் நதியில் போனான் என்று கருதி) அழுத துன்பம் நீங்குதலே துக்க நிவர்த்தி,

திண்ணிய மனதில் ஐயம் தெளிதல் ஆனந்தம் ஆமே = மனதில் சந்தேகமின்றி நிச்சய ஞானம் ஏற்பட்டு இன்பம் அடைதல் ஆனந்தம் ஆகும். 


பாடல் : 57

தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன்,

நிசவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான்,

சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு,

அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய்.


பொருள் : 

தசபுமான் தனைக்கண் டாற்போல் = பத்தாமவன் தான்தான் என்று கண்டுகொண்டார் போல,

சற்குருமூர்த்தியே என் = ஸத்குருநாதரே என்னுடைய,

நிச வடிவினை யான் காண = என்னுடைய உண்மையான சொரூபத்தை நான் அறிந்து கொள்ள,

நீர்காட்டல் வேண்டும் என்றான் = தாங்கள் உபதேசித்து அருள வேண்டும் என்று சீடன் வினவினான்.

தொம்பதம் தத்பதங்கட்கு = த்வம் (நீ), தத் (அது = ஈச்வரன்) ஆகிய சொற்களுக்கு,

சுசி பெறும் இலக்கியார்த்தம் = உபாதி சம்பந்தம் இன்றிய தூய்மையான லட்சிய அர்த்தங்களுக்கு,

அசிபத ஐக்கியம் செய்யும் = அஸி (இருக்கிறாய்) எனும் சொற்பொருளான ஐக்கியத்தை போதிக்கும்,

அதுசெயும் உண்மை கேளாய்= அஃது அங்ஙனம் போதிக்கும் தத்துவார்த்தத்தை

உபதேசிப்போம் கேட்பாயாக!


பாடல்: 58

விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில்,

மண்ணொன்று கடவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும்,

எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன்,

நண்ணும்கூ டத்தன் சீவன் நான்குசை தந்யம் ஆமே.


பொருள்:

பாரில் = உலகில்,

விண் ஒன்றை =  ஒன்றேயான ஆகாயத்தை,

மகாவிண் என்றும் = மஹாகாயம் என்றும்,

மேகவிண் என்றும் = மேகாகாயம் என்றும்,

மண்ணொன்று கடவிண் என்றும் = மண்ணினால் ஆன கடத்தில் கடாகாயம் என்றும்,

மருவிய சலவிண் என்றும் =  பொருந்திய ஜலாகாயம் என்றும்,

எண்ணும் கற்பனை போல் = சொல்கின்ற கற்பனை போல,

ஒன்றே எங்கும் ஆம் பிரமம் = ஒன்றேயாக எங்கும் வியாபித்திருக்கின்ற நிர்குண பிரஹ்மம்,

ஈசன்  = ஈச்வரன்

நண்ணும் கூடத்தன் = கூடஸ்தன்

சீவன் = ஜீவன் என,

நான்கு சைதந்யம் ஆமே = நான்கு சைதந்யமாக விளங்கும்.


கருத்துரை:

1-வது பிரமாண்டத்தின் உட்புறமெங்கும் ஏகரசமாய் வியாபகமாயுள்ள ஆகாசசொரூபத்தை மஹாகாச மென்பர். 


2-வது- மேகத்திற்கு அவகாசங்கொடுத்திருக்கின்ற ஆகாசத்தையும், மேகசலத்தில் பிரதிபிம்பித்துள்ள ஆகாசத்தையும் மேகாகாசம் என்பர்.


3-வது--சலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்திற்கு எவ்வளவு  ஆகாசம் அவகாசங் கொடுத்திருக்கின்றதோ, அவ்வளவு ஆகாசத்தைக் கடாகாசம் என்பர்.


4 வது - ஜலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்தில் மேக நட்சத்திரங்களோடு பிரதிபிம்பித்திருக்கின்ற ஆகாச பிரதி பிம்பத்தையும் கடாகாசத்தை சேர்த்து சலாகாசம் என்பர்.


பாடல் : 59

பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும்,

வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா,

காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும்,

ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே.


பொருள்:

பூச்சிய ஈசன் = அனைவராலும் பூசிக்கத் தகுந்த ஈச்வரனும், 

சீவன் = பூகப்பவனான ஜீவனும்,

புகல் பதம் இரண்டினுக்கும் வாச்சியம் = மஹாவாக்கியத்தில் சொல்லப்படுகின்ற 'தத்' எனும் சொல் 'த்வம்' எனும் சொல் இரண்டுக்கும் வாச்யார்த்தம் ஆகும்.

லட்சியம்தான் = லட்சியார்த்தமாவன,

மலம் இலாப் பிரமம் ஆன்மா = அவித்யா மலமற்ற ப்ரஹ்மமும் கூடஸ்தனுமாம்.

காய்ச்சிய பாலில் நெய்போல் = பாலில் நெய்யானது கலந்து ஒன்றாக இருப்பது போல,

கலந்தொன்றாம் = அவ்வாச்சிய இலட்சியங்கள் (விவேகம் இன்மையால்) கலந்து ஒன்றாக இருக்கின்றன.

கடைந்தெடுக்கும் ஆச்சியம் என்ன = மத்தினால் கடைந்து எடுக்கும் நெய்யைப் போல,

உன்னை அறிந்து = விசாரத்தால் இலட்சியார்த்தமான உன்னை அறிந்து,

நீ பிறிந்து கொள்ளே = வாச்யார்த்தத்தில் இருந்து நீ வேறுபடுத்திக்கொள்.


பாடல் : 60

பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும்,

அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ,

வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால்,

எறிபிரா ணனும்நீ அல்லை இராசத குணவி காரம். 


பொருள் :

பிறிவது எப்படி என்றக்கால் = (என்னை அறிந்து வாச்யார்தத்தில் இருந்து) வேறுபடுவது எவ்வாறான விவேகத்தால் என்று கேட்பாயாகில்,

பிணமாகும் உடல் நான் என்னும் = சில நாட்களில் இறந்து போகும் அந்தமயமான தூல உடல் நான் என்ற,

அறிவினைக் கொல்லல் வேண்டும் = தவறான அறிவினை அழிக்க வேண்டும்.

ஐம்பூத விகாரம் அன்றோ = இத்தூலவுடல் பஞ்சீகரணமான பஞ்சபூதங்களின் மாறுபாடு அல்லவா?

வெறியதோர் துருத்தி = வெறுமையான ஓர் தோல் துருத்தி

மூக்கின் விடுவது போல் = மூக்கினால் காற்றை விடுவது போல,

உன் மூக்கால் எறி பிராணனும் நீ அல்லை = உன்னுடைய மூக்கினால் வீசுகின்ற (சடமான) பிராணமய கோசமும் நீ இல்லை.

இராசத குண விகாரம் = அது அபஞ்சீகிருத பஞ்சபூதங்களின் ரஜோகுணக்காரியம்.

பாடல் : 61

கரணமாம் மனது புத்தி கர்த்தாவாம் அவை ஆன் மாவோ,
தரமுள இரண்டு கோசம் சத்துவ குணவி காரம்,
வரம்அறு துயில் ஆநந்த மயனையும் நான்என் னாதே,

விரவிய தமஅஞ் ஞான விருத்தியின் விகாரம் ஆமே.


பொருள் :

கரணம் ஆம் மனது = கரணம் ஆகிய மனமும்,

கர்த்தா ஆம் புத்தி = கர்த்தாவாகிய அறிவும்,

அவை ஆன்மாவோ = ஆகிய அவையும் நீயா? (இல்லை),

தரம் உள இரண்டு கோசம் = (ஸங்கல்பரூபம், நிச்சயரூபம் எனும்) தாரதம்மியமுள்ள மனோமயம், விஞ்ஞானமயம் ஆகிய இரண்டு கோசங்களும்,

சத்துவ குண விகாரம் = அபஞ்சீகிருத பூதங்களின் ஸத்வகுண காரியம்,

வரம் அறு = சிறப்பற்ற,

துயில் ஆநந்தமயனையும் = உறக்கத்திலுள்ள ஆநந்தமயனையும்

நான் என்னாதே = நான் என்று எண்ணாதே!,

விரவிய தம அஞ்ஞான விருத்தியின் விகாரம் ஆமே = பொருந்திய தமோகுணரூபமான அஞ்ஞான விருத்தியின் காரியம் ஆகும் அது.



பாடல் : 62

சத்தொடு சித்ஆ நந்தம் சமம்திரம் சாட்சி ஏகம்,

நித்தியம் வியாபி ஆன்மா நீயதுவா யறிந்து,

பொத்தொடு சமம்துக் காதி பொருந்துபே தங்கள் ஆன,

குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியில் ஆவாய்.


பொருள் :

சத்தொடு சித் ஆநந்தம் = ஸச்சிதானந்தமாய்,

சமம் திரம் சாட்சி ஏகம் = ஸமமாய், ஸ்திரமாய், சாட்சியாய், ஏகமாய்,

நித்தியம் வியாபி ஆன்மா நீ = நித்தியமாய், வியாபியாய் உள்ள ஆன்மாவே நீ,

அது வா அறிந்து = அப்படியான ஆத்மாவாக உன்னை நீ அறிந்து,

பொத்தொடு சமம் துக்காதி = அநிருத ஜட துக்கம் முதலான குணங்கள், 

பொருந்து பேதங்கள் ஆன = பொருந்திய முன்னொன்ன ஆத்மாவுக்கு விரோதமான அநாத்மாவாகிய,

குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு = வஞ்சகத்தையுடைய பஞ்சகோசங்களாகிய குகைகளில் உள்ள (அவை ஆத்மா என்ற) மயக்கத்தை ஒழித்து,

வெளியில் ஆவாய் = சுதந்திரனாய் ஆவாயாக!


விளக்கம்:

ஸத்= ஸத்யம் = இருப்பு = நிலையான ஒரே உண்மையான இருப்பு.

உடல் தோற்ற மாத்திரமான இருப்புடையது. தனித்த சொந்தமான இருப்புடையது அன்று. உடல் என்ற ஒரு பொருளே இல்லை. 

நகை இருக்கிறது எனும்போது நகை என்ற தோற்றம் இருக்கிறது. நகை என்றொரு பொருளில்லை. தங்கம் தான் இருக்கிறது. அலை இருக்கிறது எனும்போது அலை என்ற தோற்றம் மாத்திரமே இருக்கிறது. அலை என்றொரு பொருளில்லை. தண்ணீரே இருக்கிறது. அது போலவே, கடல், ஏரி, குளம் என்று சொல்லுகின்றபொழுதுதண்ணீரே இருக்கிறது. அவை வெறும் தோற்றத்திற்கான பெயர்களே.தங்கம், அல்லது தண்ணீர் என்பதும் வெறும் தோற்ற மாத்திரமே, உண்மையில் அவற்றினுடைய மூலக்கூறுகளே இருக்கின்றன. பல மூலக்கூறுகளின் தொகுதியான தோற்றமே அவை. அம்மூலக்கூறுகளும் பருப்பொருளாகவும் (Particle) ஆகவும் அலை (wave) ஆகவும் தான் இருக்கின்றன. பருப்பொருளாகவும் அலையாகவும் இருப்பது ஒன்றுதான். அது ஒரு சக்தி (Energy). உலகம் முழுவதும் இருப்பது ஒரு சக்திதான். உலகமாகவும் இருப்பது அந்த ஒரே சக்திதான். சக்தியின் நிலைத்த வடிவமே பருப்பொருள் (matter). பருப்பொருளின் அலைவடிவமே சக்தி (Energy). இது நிலைத்த தன்மையுடையதல்ல. ஆகவே இது மாயை. இந்த சக்திக்கும் ஆதாரமான இருப்பு பரமசிவம் (பரப்ரஹ்மம்). பரமசிவம் என்ற நிலைத்த இருப்பின்மேல் மாயாசக்தி - பராசக்தி - ஆடிய நடனம் தான் உலகம்.


நான் (ஆத்மா) இருக்கிறேன் எனும்போது அது உடலின் இருப்பைக் குறிப்பதல்ல. ஏனெனில் உடல் உண்மையில் இருப்பதல்ல, அது ஒரு தோற்றம் மாத்திரமே. இது உலக முழுவதற்கும் ஆதாரமான ஒரே இருப்பைக் குறிப்பது.


சித் = சேதனம் = சைதன்யம் = ஞானம்

ஸத் ஸத்மாத்திரமாக இருக்குமேயானால் சக்தியில்லை. சக்தியில்லையேல் உலகத் தோற்றமில்லை. ஸத்தே சித்தாகவும் இருக்கிறது. நான் இருக்கிறேன் என்பதை அறிகிறேன். இந்த அறிவு(சித்) உடலின் பகுதியான அறிவு அல்ல. அதையும் அறியும் அறிவு, எந்த ஒரு இருப்பு இருக்கிறதோ அந்த இருப்பே அறிவாகவும் இருக்கிறது. எப்படி ஒரே சக்தியே Energy ஆகவும் Matter ஆகவும் தோன்றுகிறதோ அதுபோலவே, ஒன்றே ஸத்தாகவும் சித்தாகவும் விளங்குகிறது. ஸத்மாத்திரம் வெளிப்பட்ட நிலையில் ஜடப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. சத்தோடு சித்தும் வெளிப்பட்டிடிருக்கும் நிலையில் சேதசேதனப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.


ஆனந்தம் - அதுவே ஆனந்தமாகவும் இருக்கிறது. உலகை மறந்து மனம் லயமாகியிருக்கும்போது ஆனந்தம் வெளிப்படுகிறது. இது யோகிகளுக்குப் ப்ரத்யக்ஷம். ஆகவே, உடல் ஸதாபாஸம். இதிலுள்ள சேதனத்தன்மை சிதாபாஸம். உடலால் அனுபவிக்கும் ஆநந்தம் ஆநந்தாபாஸம்.


ஸச்சிதாநந்தம் - ஆத்மா - பரமாத்மா - பரமசிவம் - பரப்ரஹ்மம் - சைதந்யம் - ஒன்றே உண்மைப் பொருள். அதுவே ப்ரஹ்மம், ஈசன், கூடஸ்தன், ஜீவன் என நான்கு சைதந்த மாமே. (பாடல்: 58)


ஆத்மா = நான் = ஸத் சித் ஆனந்தம்.


உலகம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு தோற்ற வெளிப்பாடே, ரூபமும் நாமமும்.


சமம் = எல்லா நாம ரூபங்களிலும் சமமாய் இருப்பது ஒரே ஸச்சிதானந்தம்.


திரம் = ஸ்திரம் - நிலையானது. சக்தி போல் மாறாமல் எப்பொழுதும் நிலையாய் இருப்பது.


சாட்சி = மாறுபடக்கூடிய சக்தியின் மாறுபாடுகளை தான் மாறுபடாமல் இருந்து ப்ரகாசித்துக் கொண்டிருப்பது. 

வன்பொருள், மென்பொருள், மின்சாரம் = ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்கள். ஒரே சக்தியின் மாறுபட்ட நிலைகள். ஆத்மா இவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் - இயக்கும் - சைதந்யம். ஸமஷ்டியாய் ஈச்வரன். வ்யஷ்டியாய் ஜீவன்.


ஏகம் = ஒன்று.  ஒரே ஸச்சிதானந்தம் தான்.

 

அறிவியலுக்கும் அடிப்படை கணிதம். கணிதம் எண்களை அடிப்படையாகக் கொண்டது, எண்கள் எத்தனை? அது முடிவிலி (Infinite). ஆனால் உண்மையில் இருப்பது ஒரே ஒரு எண் தான், அது ஒன்று - ஏகம். அந்த ஒன்றின் பெருக்கமே எண்ணற்ற எண்கள்.


மாயை - சக்தி = 0 - பூஜ்ஜியம் - சுயமதிப்பு இல்லாதது. 

பரமாத்மா - பரப்ரஹ்மம் - பரமசிவம் = 1 - ஒன்று.

ஒன்றோடு சுழியம் சேரும் போது, ஒன்றுக்கு மதிப்புக் கூடுகிறது.

ஒன்று ஆண், சுழியம் பெண். ஆண் பெண் என இரண்டில்லை. ஒன்றுதான் (1) மதிப்புடையது, இருப்பது. சுழியம் ஒரு எண் அல்ல (பொருளல்ல), அது ஒரு சக்தி மாத்திரமே. சுழியம் இல்லாமல் ஒன்றுக்குச் சக்தியில்லை. ஒன்றில்லாமல் சுழியம் ஒன்றுமே இல்லை.


நித்தியம் = என்றுமிருப்பது. தோற்றம் மறைவு இல்லாமல் என்றும் சாஸ்வதமாய் இருப்பது.


வ்யாபி = எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் இருப்பது.

பாடல் : 63

பஞ்சகோ சமும்விட் டப்பால் பார்க்கின்ற பொழுது பாழே,

விஞ்சிய ததுவல் லாமல் வேறொன்றும் தெரியக் காணேன்,

அஞ்சன இருளை யோநான் அகம்என அநுப விப்பேன்,

வஞ்சம் இல் குருவே என்ற மகன்மதி தெளியச் சொல்வார். 


பொருள்:

பஞ்சகோசமும் விட்டு அப்பால் = அந்நமயம் முதலான ஐந்து கோசங்களையும் நீக்கி,

அப்பால் பார்க்கின்ற பொழுது = மேலே பார்க்கின்ற பொழுது,

பாழே விஞ்சியது = வெறுமையே மிஞ்சியது.

அது அல்லாமல் = அந்த சூன்யத்தை அல்லாமல்,

வேறொன்றும் தெரியக் காணேன் = வேறு ஒன்றும் இருப்பதாகப் பார்க்கவில்லை.

அஞ்சன இருளையோ = கரிய ஒன்றுமின்மையையா,

நான் அகம் என அநுபவிப்பேன் = நான் ஆத்மா என்று உணர்வேன்.

வஞ்சம் இல் குருவே என்ற = வஞ்சனை ஒன்றில்லாத குருவே என்று கூறிய,

மகன் மதி தெளியச் சொல்வார் = சீடனின் அறிவு தெளியும்படியாக உபதேசிப்பார்.


பாடல் : 64

முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் எண்ணி எண்ணி,

ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் தனைக்கா ணாத,

பின்பவன் இடையில் கண்ட பெரியபாழ் அவனோ பாராய்,

அன்புள மகனே காண்ப தடங்கலும் காண்பான் நீயே.


பொருள் :

முன்புகல் தசமன் = முன் சொன்ன கதையில் பத்தாமவன்,

புத்தி மோகத்தால் = அறிவு மயக்கத்தால்,  

எண்ணி எண்ணி = மீண்டும் மீண்டும் எண்ணி,

ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் = ஒன்பது பேரை எண்ணிப் பார்த்த ஒருவனான,

தனைக் காணாத பின்பு = தன்னைப் பத்தாமவனாக அறியாத பிறகு,

அவன் இடையில் கண்ட = அவனிடத்தில் அவனால் பார்க்கப்பட்ட,

பெரிய பாழ் அவனோ = பெரிய சூன்யம் அவனே தானோ,

பாராய் = சிந்தித்துப் பார்ப்பாயாக!

அன்புள மகனே = சிரத்தையுள்ள மைந்தா!

காண்பது அடங்கலும் = உன்னால் காணப்படுகிற (சூனியம் முதலிய காணப்படுபவை) அனைத்தையும்,

காண்பான் நீயே = காண்பவனான சிதாத்மா நீயே!


பாடல் : 65

தூலசூக் குமஅஞ் ஞானம் தோன்றும்மூன் றவத்தை தாமும்,

காலமோர் மூன்றும் சன்மக் கடல்எழும் கல்லோ லங்கள்,

போலவே வந்து வந்து போனஎத் தனைஎன் பேன்நான்,

ஆலமர் கடவுள் ஆணை அவைக்கெலாம் சாட்சி நீயே. 


பொருள் :

தூல  சூக்கும அஞ்ஞானம் = பருவுடல், நுண்ணுடல்,  காரணவுடல் ஆகிய மூன்று உடல்களும்,

தோன்றும் மூன்று அவத்தை தாமும் = (அம்மூன்று உடல்களையும் பற்றித்) தோன்றும் விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளும்,

காலம் ஓர் மூன்றும் = கடந்த, நிகழ், எதிர் ஆகிய மூன்று காலங்களும்,

சன்மக் கடல் எழும் =  பிறவியாகிய கடலில் எழுகின்ற,

கல்லோலங்கள் போலவே = எழுந்து அழியும் அலைகள் போலவே,

வந்து வந்து போன = பிறந்து பிறந்து அழிந்து போனவற்றை,

நான் எத்தனை என்பேன் = நான் எவ்வளவு என்று எப்படி வரையறுத்துக் கூறுவேன்,

ஆல்அமர் கடவுள் ஆணை = கல்லால மரத்தின் அடியிலமர்ந்து சனகாதி ரிஷிகளுக்கு அருள் புரிந்த ஆதிகுருவாகிய தக்ஷிணாமூர்த்தியின் மேல் சத்தியம் செய்து சொல்கிறேன்,

அவைக்கெலாம் நீயே சாட்சி = அவை அனைத்திற்கும் நீயே சாட்சியாகும்.


பாடல் : 66

எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று,

சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ,

பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான்,

அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய்.


பொருள் :

எல்லாம் கண்டு அறியும் என்னை = அனைத்தையும் சாட்சியாக இருந்து அறியும் என்னை,

ஏதுகொண்டு அறிவேன் என்று சொல்லாதே = எதனைக் கொண்டு அறிவேன் என்று கேட்காதே,

சுயம் சோதி ஆம் சுடருக்கு = சுயப்பிரகாசம் ஆகிய அறிவுக்கு,

சுடர் வேறு உண்டோ = பிரகாசத்தை தரும் பொருள் வேறு உண்டோ,

பல்லார்முன் தசமன் = ஒன்பது பேரை எண்ணிய பத்தாமவன்,

தன்னைப் பார்த்தலும் = தன்னைப் பத்தாவது மனிதனாக அறிவது,

தனைக்கொண்டே தான் அல்லாமல் = தன்னாலேயே அன்றி,

பதினொன்றானும்  அவனிடத்து உண்டோ = பதினொன்றாமவனும் அவனிடத்து உண்டா?

பாராய் = நீ நன்கு சிந்தித்துப் பார்ப்பாயாக!


பாடல் : 67

அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும்,

அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும்,

அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை,

அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே.


பொருள் :

அறிவுக்கும் அறிவு செய்யும் = (குடம் முதலான) அறிவுக்கும் (ப்ரகாச ரூபமான) அறிவைத்தரும்,

அறிவு வேறு உண்டு என்று எண்ணும் = வேறு ப்ரகாசம் இருக்கிறது என்று நினைக்கும்,

அறிவற்ற குதர்க்க மூடர்க்கு = விவேகமற்ற தவறான தர்க்க மூடருக்கு,

அனவத்தை பலமாய்த் தீரும் = அநவஸ்தா தோஷம் (முடிவின்மை) பயனாக ஆகும்.

அறிபடும் பொருள்நீ அல்லை = அறியப்படும் பொருள் நீ(ஆத்மா) இல்லை.

அறிபடாப் பொருள்நீ அல்லை = அறியப்படாத பொருளும் நீ (ஆத்மா) இல்லை.

அறிபொருள் ஆகும் உன்னை = அனைத்தையும் அறியும் ப்ரகாசரூபமான சைதந்ய ஸ்வரூபமான உன்னை (ஆத்மாவை)

அனுபவித்து அறிவாய் நீயே = நான் என்று உணர்வாய் நீயே.


பாடல் : 68

மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம்,

மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ,

அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே,

அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே.


பொருள் :

மதுரம் ஆம் கட்டி சுட்ட = இனிமையான வெல்லக்கட்டி சேர்த்து சுடப்பட்ட,

மாப்பணியாரம் எல்லாம் = மாவின் பணியாரங்களான தனது ஸம்பந்தமுள்ள அனைத்தையும்,

மதுரம் ஆக்கிய அதற்கு = இனிப்பாக்கிய வெல்லக்கட்டிக்கு,

மதுரம்தான் சுபாவம் அன்றோ = இனிப்புதான் இயல்பு அல்லவா?,

(அப்படி)

அது இது எனும் சடங்கள் = அறியப்படாதது அறியப்பட்டது எனும் சட பதார்த்தங்கள்,

அறிவாக அறிவைத் தந்தே = விளங்குவனவாக விளக்கத்தைக் கொடுத்து,

அதுவிது இரண்டும் ஆகா = அறியப்படாதது, அறியப்பட்டது இரண்டும் தானாகாமல் அறிவு ஸ்வரூபமாக அவற்றிற்கு வேறாக,

அகம்பொருள் அறிவாய் நீயே = அஹம் எனும் சொல்லின் லட்சியப் பொருளாக உன்னை நீயே அறிவாயாக!

பாடல் : 69

இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும்,

பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம்,

அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம்,

சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே.


பொருள்:

இந்த நீ = மூன்று உடல்களுக்கும் பஞ்சகோசங்களுக்கும் வேறாகவும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாட்சியாகவும், நான் (அஹம்) என்ற சொல்லின் உண்மைப் பொருளான ஆத்மாவாகவும் இருக்கின்ற நீ,

துவம் பதத்தின் இலட்சியப் பொருளாம் = (த்வம்) நீ என்ற சொல்லின் குறிப்புப் பொருளாம்,

என்றும் பந்தம் இல் = எக்காலத்தும் பந்தம் இல்லாத,

பிரமமே = (ஸச்சிதாநந்த ஸ்வரூபமான) ப்ரஹ்மமே,

தத் பதந்தனின் இலட்சியார்த்தம் = அது(தத்) எனும் சொல்லின் குறிப்புப் பொருளாம்,

அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே = ஞானத்தினால் நீக்கப்படும் பிரதிபிம்பமான சீவன், ஈச்வரன் அவர்களே,

வாச்சியார்த்தம் = த்வம், தத் 'இருபதங்களுக்கும் முறையே நேரடிப்பொருளாகும்,

சந்ததம் = எப்பொழுதும்

பேதம் ஆவார் தமக்கு = உபாதியால் வேறுபட்டவராக இருக்கும் அவர்களுக்கு,

அயிக்கியம் கூடாதே = ஒன்று என்பது ஆகாது.


பாடல் : 70

பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும்,

ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும்,

பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர்,

ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே.


பொருள்:

பேதம் ஆனதுவும் கேளாய் =  ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் வேறுபாடு எப்படிப்பட்டது என்று கேட்பாயாக,

பெயராலும் இடங்களாலும் = ஜீவன் ஈஸ்வரன் என்னும் பெயர்களாலும் பிண்டம் அண்டம் என்ற இடங்களாலும்,

ஓதரும் உபாதி யாலும் = விவரிப்பதற்கரிய காரிய காரண உபாதியாலும்,

உடலாலும் = வியஷ்டி, ஸமஷ்டி என்னும் உடல் அபிமானங்களாலும்,

உணர்வினாலும் = அல்ப அறிவு, முற்றறிவு போன்ற சக்திகளாலும்

பாதலம் விசுவம் போலப் = பாதாளமும் விண்ணுலகமும் போல,

பலதூரம் அகன்று நிற்பர் = வெகுவாக வேறுபட்டிருப்பர்.

ஆதலால் இவர்க்கு எந்நாளும் = ஆகவே, ஜீவனுக்கும் ஈச்வரவனுக்கும் எக்காலத்திலும்,

அயிக்யம் என்பது கூடாதே = ஒன்று என்பது நடக்காது.


பாடல் : 71

வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல்,

இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார்,

திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும்,

விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே.


பொருள் :

வடநூல் வல்லவர்கள் = ஸம்ஸ்க்ருத மறைநூல்களில் நிபுணர்களான பண்டிதர்கள்,

சொல்லும் வாக்கியப் பொருள் சேராமல் இடராகின் = ஸ்ருதி, ஸ்ம்ருதிகளில் சொல்லும் வாச்யார்த்தம் பொருந்தாமல் முரண்பட்டால்,

பொருள் ஆம் வண்ணம் = சரியான பொருளைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,

இலக்கணை உரையால் கொள்வார் = இலக்ஷணா வாக்கியத்தால் பொருள் கொள்வர்.

திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் = உறுதியாக அந்த லக்ஷ்யார்த்தத்தையும் மூன்று விதமாகச் சொல்வார்கள்.

விட்டது என்றும் = விட்ட லக்ஷணை என்றும்,

விடல் இலாது தென்றும் = விடாத லக்ஷணை என்றும்,

விட்டு விடாதது என்றும் = விட்டுவிடாத லக்ஷணை என்றும்,

பேராமே = பெயர்களை உடையதாகும்.


பாடல் : 72

கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும்,

தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள்,

இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே,

துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே.


பொருள் :

கங்கையில் கோஷம் என்றும் = கங்கை ஆற்றில் கிராமம் இருக்கின்றதென்றும்,

கறுப்புத் தங்கிய சேப்பு ஓடுது என்றும் = கறுப்பு நிற்க சிவப்பு ஓடுகின்றது என்றும்,

சோயம் தேவதத்தன் என்றும் = அவன் இத்தேவதத்தன் என்றும்,

இங்கு உதாரணங்கள் ஆக்கி = (வாச்யார்த்தம் பொருந்தாத இடத்தில்) இம்மூன்றையும் உதாரணங்களாகக் கொண்டு,

சொல்வார்கள் = (அவ்வடநூல் வல்லவர்கள்) கூறுவார்கள்.

இந்த மூன்று உரைகளாலே = இந்த மூன்று லக்ஷணா வாக்கியங்களாலே,

துங்கநூல் = பெருமை பொருந்திய மறைநூல்களில்,

விரோதம் ஆன சொல் எலாம் = முரண்படும் வாக்கியங்களுக்கெல்லாம்,

பொருளாம் தானே = முரண்பாடுகள் நீங்கிய பொருளாகும்.


பாடல் : 73

பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம்,

அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம்,

சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல்,

உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும்.


பொருள் :

பன்னிய சோயம் என்னும் பதங்களின் = முன் சொல்லிய (சோயம் = ஸ: அயம்) அவன் இவன் என்னும் சொற்களினுடைய,

வாச்சியார்த்தம் = வாச்சியார் தங்கள் ஆவன,

அந்நிய தேசம் காலம் = வெவ்வேறான இடம், காலம்,

அவன் இவன் = அந்தத் தேவதத்தன் இந்தத் தேவதத்தன்,

என்ப எல்லாம் = என்பதான அனைத்தும் ஆகும்.

சொன்ன இவ்விரோதம் விட்டு =  சொன்னதான முரண்பட்ட இந்த வாச்யார்த்தங்களை விட்டுவிட்டு,

தொடர் இலக்கியம் விடாமல் = அவைகளை அநுசரித்திருக்கும் இலக்ஷ்யார்த்தத்தை (உடல் மாத்திரத்தை),

உன்னிடில் = ஆலோசித்துப் பார்த்தால்,

தேவதத்தன் ஒருவனை = தேவதத்தன் என்னும் ஓர் மனிதனை

வெளியாக் காட்டும் = விரோதமில்லாமல் நேரில் காட்டும் (ஸோயம் தேவதத்தன் என்னும் வாக்கியம்).


பாடல் : 74

தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான,

வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு,

நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும்,

அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும்.


பொருள் :

தத்துவம் எனும் பதங்கள் = ஸாமவேத மஹாவாக்யமாகிய தத்துவமஸி என்பதிலுள்ள தத் (அது), த்வம் (நீ) எனும் சொற்கள்,

பிரமமாய்ச் சாட்சி ஆன = ப்ரஹ்மமாகவும், சாட்சியாகவும் உள்ள,

வத்துவை விடாமல் = சேதன அம்சமான லக்ஷ்யார்த்தத்தை விடாமல்,

பேத வாச்சியார்த்தத்தை விட்டு = வேறுபடும் நேரடிப்பொருளின் அம்சத்தை விடுத்து, 

நித்தமும் அதுநீ ஆகும் = எப்பொழுதும் அது - ப்ரஹ்மமே - நீயாக இருக்கிறாய்,

நீ அது ஆகும் = நீயே ப்ரஹ்மமாக இருக்கிறாய்,

என்னும் அசிபத அர்த்தமும் = என்று சொல்லும் 'அஸி' (இருக்கிறாய்) என்ற சொல்லின் பொருளும்,

அகண்டம் என்றே = (ஜீவாத்மாவும் பரமாத்மாவும்) ஒன்று என்று 

ஐக்கியம் காட்டும் = ஐக்கியத்தைக் காட்டி நிற்கும்.

பாடல் : 75

கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே,

குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும்,

இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம்,

திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.


பொருள் :

கடநீரில் = குடத்திலுள்ள நீரிலும்,

மேகநீரில் = மேகத்திலுள்ள நீரிலும்,

கண்ட வான் இரண்டும் = பிரதிபலித்திருக்கின்ற கட ஆகாசம், மேக ஆகாசம் ஆகிய இரண்டும்,,

பொய்யே = உபாதிகளால் தோற்ற மாத்திரமாக இருப்பதால் பொய்யானவையே.

குடவானும் பெரிய வானும் = கடாகாசம், மஹாகாசம் ஆகிய இரண்டும்,

எப்போதும் = எக்காலத்திலும்,

கூடி ஒன்றாம் = (எப்படி) வேறுபாடில்லாமல் ஒன்றாக இருக்கிறதோ,

இடம் ஆன பிரமம் சாட்சி இரண்டும் = (அப்படி) எங்கும் வியாபகமான பிரஹ்மம், சாக்ஷி ஆகிய இரண்டும்,

எப்போதும் = எக்காலத்திலும்,

ஏகம் =  ஒன்றே ஆகும்.

திடமாக = இந்த ஒன்று எனும் ஞானம் ஐயம், திரிவு இன்றி நிலையாக எப்பொழுதும் மனதில் நிற்க,

சிவோகம் என்று = சிவமே நான் -.நானே சிவம் - என்று நிதித்யாஸனம் செய்து,

சுவாநுபூதி = தியானத்தின் பயனாக உளதாகும் அத்வைத அவஸ்தா ரூபமான ஸ்வரூப ஆனந்தத்தில், 

இருந்திடாயே = இருப்பாயாக.


பாடல் : 76

தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல்,

பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில்,

கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும்,

நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்.


பொருள் :

தஞ்சமாம் குருவும் சொன்ன = தஞ்சமென்று சரணாகதி அடைந்த குரு உபதேசித்து அருளிய,

தத்துவ வழி தப்பாமல் = தத்துவ உபதேசத்திலிருந்து பிறழாமல்,

பஞ்சகோசமும் கடந்து = அந்த மயம் முதல் ஆனந்தமய கோசம் முடிய நானல்லவென்று விலக்கி,

பாழையும் தள்ளி = பஞ்ச கோசங்களையும் விலக்கியபின் எஞ்சி நிற்கும் வெறுமையையும் அறியப்படுவதாய் இருப்பதால் நான்ல்லவென்று நீக்கி விட்டு,

உள்ளில் = மனதில்,

கொஞ்சம்ஆம் இருப்பும் விட்டு = அனைத்தையும் அனுபவரூபமான அறிவு நான் என்ற எண்ணத்தையும் விடுத்து,

கூடத்தன் பிரமம் என்னும் நெஞ்சமும் நழுவி = ஆத்மா பிரஹ்மமே என்ற எண்ணத்தையும் விட்டு,

ஒன்றாய் நின்ற = அகண்ட ஏகரஸமான,

பூரணத்தைக் கண்டான் = பரிபூர்ண ஆனந்தத்தை அனுபவித்தான்.


பாடல் : 77

அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித்,

தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய்,

மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண,

நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான்.


பொருள் :

அனுபவ ஆநந்த வெள்ளத்து அழுந்தியே = அநுபவமான ப்ரஹ்மாநந்தக் கடலில் மூழ்கியே,

அகண்டம் ஆகி = எல்லா பேதவுணர்வுகளும் நீங்கி,

தனு கரணங்கள் ஆதி = உடல், புலன்கள் முதலான

சகலமும் இறந்து = அனைத்து நாம ரூபங்களும் மறைந்து

சித்தாய் = ஸச்சிதானந்த ரூபமாய்,

மனது பூரணமாய் = மனது பரிபூர்ணமாக

தேகம் ஆன சற்குருவும் காண = அருளே திருவுருவான ஸத்குருவும் பார்த்திருக்க,

நனவினில் சுழுத்தி ஆகி = விழிப்பு நிலையிலேயே உறக்குபவன் போல,

நன்மகன் சுபாவம் ஆனான் = நல்ல சீடனானவன் ஆத்மஸ்வரூபத்தில் இருந்தான்.


பாடல் : 78

அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள,

வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான்,

துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான்,

குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான்.


பொருள் :

அளிமகன் நெடும்போது = அன்புள்ள சீடனானவன் வெகுநேரம்,

இவ்வாறு ஆனபின் = முன் சொல்லியபடி நிதித்யாயனம் செய்து தன் ஸ்வரூபத்தில் இருந்ததன் பின்னர்,

மனது மெள்ள வெளியில் வந்திட உணர்ந்தான் = மனது ஆத்மஸ்வரூப நினைவிலிருந்து மெதுவாக வெளியில் வர அறிந்தான்,

விமல தேசிகனைக் கண்டான் = அவித்யா மலமற்ற குருவைப் பார்த்தான்.

துளிவிழி சொரிய = ஆநந்தக் கண்ணீர் கண்களில் பொங்க,

பாதம் வீழ்ந்து தொழுது = குருவின் திருவடிகளில் விழுந்து வணங்கி,

எழுந்து சூழ்ந்தான் = எழுந்து வலம் வந்து,

கும்பிட்டு நின்று = கைகூப்பி நின்று,

குளிர்முகச் சுவாமி கேட்கச் சொல்வான் = சாந்தமான முகமுடைய குருசுவாமி கேட்கும்படியாகச் சொன்னான்.


பாடல் : 79

ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட,

மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி,

உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன்,

செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி.


பொருள் :

ஐயனே = குருநாதனே,

எனதுள்ளே நின்று = பரமேச்வரனாய் எனதுள்ளே இருந்து,

அநந்த சன்மங்கள் ஆண்ட = பலகோடி பிறவிகளில் கர்ம, உபாஸனைகளில் எனைச் செலுத்தி, எனது மனதிலிருந்த மலதோஷ, விக்ஷேப தோஷங்களைக் நீக்கி என்னை ஆண்டருளிய,

மெய்யனே = மெய்ப்பொருளே (கடவுளே),

உபதேசிக்க = (ஆவரண தோஷமும் நீங்கி எனது ஸ்வரூபத்தை நானறிந்து முக்தியடைய வேண்டுமென விரும்பி) தத்துவஞானத்தை அருள,

வெளிவந்த = வெளியே அருளே திருவுருவாய் எழுந்தருளிய

குருவே போற்றி = குருவே உம்மை வணங்குகிறேன்.

உய்யவே முத்தி நல்கும் ஓர் உதவிக்கு = நான் உயர்வடைய வேமுக்தியைக் கொடுக்கும் ஆத்மஞானத்தை உபதேசித்து அருளிய ஓர் ஒப்பற்ற உதவிக்கு,

உதவி = கைம்மாறு,

நாயேன் செய்யுமாறு = நாயடியேன் செய்யும்படிக்கு,

ஒன்றும் காணேன் = இணையான ஒன்றும் கண்டிலேன்,

திருவடி போற்றி போற்றி = திருவடியை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.


பாடல் : 80

சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்,

கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார்,

துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான,

நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.


பொருள் :

சிட்டன் இவ்வாறு கூற = சீடன் குரு செய்த உதவிக்கு கைம்மாறு ஒன்றும் செய்ய அறிந்திலேன் என்று கூறியவுடன்,

தேசிகர் மகிழ்ந்து நோக்கி = குருமூர்த்தியானவர் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்து,

கிட்ட வா என இருத்தி = அருகில் வா என அழைத்து தமது அருகில் இருக்கச் செய்து,

கிருபையோடு அருளிச் செய்வார் = கருணையோடு மேலும் கூறினார்.

துட்டம் ஆம் தடைகள் மூன்றும் = கெட்டதான தடைகள் மூன்றும்,

தொடராமல் = உன்னை அடையாமல்,

சொரூப ஞான நிட்டன் ஆய் = சொரூப ஞானத்தில் நிலைபெற்ற மனத்தினனாய்,

இருக்கின் = இருப்பாயேயானால்,

ஈதே = இதுவே,

நீ செயும் உதவி ஆமே = நீ (எனக்குச்) செய்யும் பிரதிவுதவி ஆகும்.


பாடல் : 81

நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும்,

நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான்,

தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும்,

ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே.


பொருள் :

நீ நான் என்று = -நீ என்றும் நான் என்றும்,

இரண்டு இலாமல் = வேறுபாடு தோன்றாமல்,

நிறைந்த பூரணமாய் = நிறைந்த பரிபூரணமாய்,

எங்கும் நானாக = எல்லா இடங்களிலும்

சின்மயனான நானொருவனே உளனாக,

தெளிந்த ஞானம் = அநுபவமாக அறிந்த ஞானம்,

நழுவுமோ குருவே என்றான் = நீங்குமோ ஆசார்யரே, என்று கேட்டான்.

தானாகும் பிரமரூபம் = தன்மயமாகும் பிரஹ்ம ரூபமானது,

சற்குரு நூலால் தோன்றும் = ஸற்குரு உபதேசத்தாலும் சஸ்த்ர விசாரத்தாலும் உண்டாகும்,

ஆனாலும் = இப்படி ப்ரஹ்ம அனுபவம் உளதானாலும்,

தடைகள் உண்டேல் = தடைகள் உண்டாகுமானால்,,

அனுபவம் உறைத்திடாதே = ஏற்பட்ட அனுபவம் நிலைபெறாது.


பாடல் :82

தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்,

படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே,

உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத்,

திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே.


பொருள் :

தடை எவை எனில் = தடைகள் யாவை என்று கேட்டால்,

அஞ்ஞான சந்தேக விபரீதங்கள் = அஞ்ஞானம் (அறியாமை) ஸந்தேஹம் (ஐயம்) விபரீதம் (திரிபு),

படர்செயும் இந்த மூன்றும் = துன்பத்தைக் கொடுக்கும் இந்த மூன்றும்,

பல சன்மப் பழக்கத்தாலே = முந்திய பல பிறவிகளில் ஏற்பட்ட பதிவுகளால்,

உடன் உடன் வரும் = அடிக்கடி உண்டாகும்,

வந்தக்கால் = அப்படி வந்தால்,

உயர்ஞானம் கெடும் = அத்தைவ ஞானம் மறந்து போகும்.

இவற்றை = இந்த அஞ்ஞான, ஸந்தேஹ, விபரீதங்களை,

கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே = சிரவண, மனன, நிதித்யாஸனங்களாலே,

திடமுடன் கெடுப்பாய் = உறுதியுடன் அழிப்பாய்.


பாடல் : 83

அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது,

மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது,

சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே,

விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே.


பொருள் :

அக்கினி கட்டுப்பட்டால் = நெருப்பானது (மணி மந்திர மூலிகைகளினாலே) அடக்கப்படுமானால்,

அற்பமும் சுடமாட்டாது = கொஞ்சமும் விறகு முதலானவற்றை எரிக்க முடியாதது போல,

மக்கின ஞானத்தாலே = அஞ்ஞான ஸந்தேஹ விபரீதங்களிலே மூழ்கிய ஞானத்திலே, 

வந்த பந்தமும் வேவாது = அநாதி காலமான தொடர்ந்து வந்துள்ள கர்த்திருத்வம் முதலான பந்தமும் அழியாது.

சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே = (ஆகவே,) நெடுங்காலம் இடைவிடாமல் ச்ரத்தையோடு தொடர்ந்து கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களாலே,

விக்கின மடம் சந்தேகம் விபரீதம் = ஞானபலமான மோக்ஷத்திற்குத் தடைகளான அறியாமை, ஐயம், திரிபு என்பவற்றை,

போக்குவாயே = அழிப்பாயாக.


பாடல் : 84

பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம்,

குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம்,

திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே,

விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர்.


பொருள்:

பிரம பாவனையை மூடி = சிவோகம் என்னும் பாவனையை மறைத்து,

பேதம் காட்டுவது அஞ்ஞானம் = (நான் ஜீவன் என்று) வேறுபடுத்திக் காட்டுவது அஞ்ஞானமாகும்.

குரவன் வாக்கியம் நம்பாமல் = (நீ ப்ரஹ்மமென்று அருளிய) குருவின் உபதேச மொழிகளை நம்பாமல்,

குழம்புவதாம் சந்தேகம் = (நான் ப்ரஹ்மமோ, அலனோ என்று) கலங்குவது ஸந்தேஹம் (ஐயம்) ஆகும்.

திரம் அறு சகம்  மெய் என்றும் = நிலையில்லாத உலகை உண்மை என்றும்,

தேகம் நான் என்றும் = அநான்மாவாகிய உடலை நான் என்றும்,

உள்ளே விரவிய மோகம் தானே = மனதில் பரவி இருக்கும் மயக்கமே,

விபரீதம் என்பர் மேலோர் = விபரீதம் என்னும் சொல்வர் மேலோர்.


பாடல் : 85

தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார், 

ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார்,

சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார்,

நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.


பொருள் : 

தத்துவ அநுபோகம் = ப்ரஹ்மாகார விருத்தியை,

தான் சாதித்தல் = (வேதாந்த அர்த்த சிந்தனத்தினாலே) தான் அடிக்கடி சிந்தித்து நிற்பதையே,

கேட்டல் என்பார் = சிரவணம் என்பார் (பெரியோர்).

ஒத்துள பொருள் = சிரவணத்தினாலே அறிந்து கொண்ட பொருளை,

ஊகத்தால் = அபேதத்தை நிச்சயிப்பதும், பேதத்தை நீக்குவதும் ஆன யுக்தியினால்,

உசாவல் சிந்தித்தல் என்பார் = ஆராய்தலை மனனம் என்பார் (பெரியோர்).

சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் = மனம் பிரஹ்மாகார மாத்திரமாக நிற்கும் அனுபவத்தை,

தெளிதல் என்பார் = நிதித்தியாயனம் என்பர் (பெரியோர்).

நித்தம் இப்படிச் செய்தக்கால் = என்றும் இவ்வாறு (சிரவணாதிகளை) அனுஷ்டித்து வந்தாயானால்,

நிருவாணம் பெறுவாய் நீயே = (அவ்வஞ்ஞானாதி தடைகள் நீங்கி) நீ மோக்ஷமடைவாய்.


பாடல் : 86

எத்தனை நாள்ஞா  தாவும் ஞானமும் இருக்கும் உன்பால்,

அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா,

நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன்,

முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும்.


பொருள் :

எத்தனை நாள் = எவ்வளவு காலம்,

ஞாதாவும் = (ஞானத்தின் கர்த்தாவாகிய) அந்தக்கரணமும் (மனமும் புத்தியும் அஹங்காரமும்)

ஞானமும் = (பிரஹ்மாகாரமான அந்தக்கரண விருத்திரூப) ஞானமும்,

இருக்கும் உன்பால் = உன்னிடத்தில் இருக்குமோ,

அத்தனை நாளும் வேண்டும் = அவ்வளவு காலமும் (அஜ்ஞானாதிப் பிரதிபந்த விரோதிகளான சிரவணாதிகள்) வேண்டும்.

அப்பால் = (அறிபவன், அறிவு எனும் பேதங்கள் இறந்து மஹாவாக்கிய விசாரத்தால் தோன்றிய ஞான விஷயமான ப்ரஹ்மம் மாத்திரமாக நீ நின்ற) பின்னர்,

ஓர் செயலும் வேண்டா = (சிரவணாதி ஸாதனைகளுள்) ஒரு ஸாதனையும் உனக்கு அவசியமில்லை.

நித்தமும் வெளிபோல் = நாள்தோறும் ஆகாயம் போல,

பற்றா ஞேய மாத்திரமாய் = அசங்க சிதாத்மா மாத்திரமாக,

சீவன் முத்தர் ஆனவர் = ஜீவன் முக்தர் ஆனவர்,

விதேக முத்தி பெற்று = விதேஹ முக்தி அடைந்து,

இருப்பார் = எக்காலமும் அதுவாய் இருப்பார்.


பாடல் : 87

ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்,

வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்,

ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின்,

தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன்.


பொருள் :

ஞானமார் ஜீவன் முத்தர் = ஞானம் நிறைந்த ஜீவன் முக்தர்கள்,

நால்வகை யாவர் = நான்கு விதமாய் இருக்கின்றனர்.

கேளாய் = அவ்விதங்களை சொல்லக் கேட்பாயாக,

வான்நிகர் பிரமவித்து = ஆகாயத்திற்கு ஒப்பான ப்ரஹ்மவித் எனவும்.

வரன் = வரன் எனவும்,

வரியான் = வரியான் எனவும்,

வரிட்டன் = வரிஷ்டன் எனவும்,

ஆனவர் நாமமும் ஆகும் = அச்சீவன் முக்தர்களின் பெயராகும்.

அவர்களில் பிரமவித்தின் தானமும் = அந்நால்வரில் முதலாவதான ப்ரஹ்மவித்தின் தன்மையையும்,

மற்றை மூவர் = ஏனைய மூவருடைய,

தாரதம்மியமும் = வேறுபட்ட தன்மைகளையும்,

சொல்வேன் = இனிச் சொல்கிறேன்.


பாடல் : 88

தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம்,

வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன,

பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக,

நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.


பொருள் : (பிரஹ்மவித்தின் இயல்பு 88 - 90)

தீரராய் = விவேகாதி ஸாதன சதுஷ்டய ஸம்பந்தராய்,

பிரமவித்தாய் = பிரம்ம தத்துவத்தை அறிந்த ஞானிகளாகி,

தெளிந்தவர் =  (மோஹம் நீங்கி நான் ஆத்மா எனத்) தெளிந்த அறிவுடையவர்,

தெளியு முன்னம் = அப்படித் தெளிந்ததற்கு முன்னர்,

வாரமாய் இருந்த = உரிமையாய் இருந்த,

தங்கள் = தங்களுடைய

வருணம் ஆச்சிரமம் சொன்ன = வர்ண, ஆச்ரமங்களைப் பற்றிய சாஸ்த்ரங்களில் சொல்லிய தர்மங்கள்,

பார காரியம் ஆனாலும் = கடினமான செயல்கள் ஆனாலும்,

பலர்க்கு உபகாரமாக = மற்ற பலருக்கு உதவும் பொருட்டு,

நேரதாச் செய்வர் = முறைப்படி செய்துவருவர்,

தீர்ந்த நிலைவிடார் = (அப்படிச் செய்துவந்தாலும் சாஸ்த்ரங்கள் சொல்லிய) முடிவான அத்வைதஞான நிச்சயத்தை விட்டுவிட மாட்டார்கள்.

சீவன்முத்தர் = வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே முத்தர்களாக உள்ள ப்ரஹ்மவித்துக்கள்..


பாடல் : 89

காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்,

தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்,

பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்,

ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.


பொருள் :

காமமாதிகள் வந்தாலும் = ப்ராரப்த (விதி) வலியினால் ப்ரஹ்மவித்துக்களிடத்து காமம் முதலானவை எழுந்தாலும்,

கணத்தில்போம் = கணநேரத்தில் மறைந்து போகும்.

மனத்தில் பற்றார் = அஞ்ஞானிகளை போல அவைகளை மனதில் வாசனையாகப் பற்றமாட்டார்கள்,

தாமரை இலைத் தண்ணீர் போல = தாமரை இலை மேல் உள்ள தண்ணீரைப் போல, 

சகத்தொடும் கூடி வாழ்வார் = பற்றில்லாமல் உலக மக்களோடு கூடி வாழ்வார்கள்,

பாமரர் எனக் காண்பிப்பார் = சாமான்ய மனிதரைப் போல் தன்னைக் காட்டிக் கொள்வார்கள்.

பண்டிதத் திறமை காட்டார் = ஞானிகளை போலக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்,

ஊமரும் ஆவார் = மௌனமாக இருப்பார்,

உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர் = மனதில் நிறைவான ஆனத்தத்தை எப்பொழுதும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜீவன் முக்தர்.


பாடல் : 90 புறவாழ்க்கை

பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும்,

ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும்,

மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார்,

பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.


பொருள் :

பேத கர்மத்தால் வந்த = வேறுபட்ட வினைகளால் விளைந்த,

பிராரத்தம் நாநாவாகும் = செயல்படத்துவங்கிய வினைப்பயன்கள் பலவாக இருக்கும்,

ஆதலால் விவகாரங்கள் = ஆகவே, தற்போதைய செயல்கள், 

அவரவர்க்கு ஆவ ஆகும் = அவரவர் வினைப்பயனுக்கு ஏற்ப அமையும்,

மாதவம் செயினும் செய்வார் = (துறவியராய் ஓரிடத்தில் இருந்து) பெருமையுடைய தவத்தினைக் செய்தாலும் செய்வார்கள்,

வாணிபம் செயினும் செய்வார் = (வைசியராய் இருந்து) வியாபாரத் தொழில் செய்தாலும் செய்வார்கள்,

பூதலம் புரப்பார் = (க்ஷத்தியராய் இருந்து) அரசாட்சி செய்தாலும் செய்வார்கள்,

ஐயம் புகுந்துண்பார் = பிக்ஷை எடுத்து உண்ணினும் உண்பார்கள்,

சீவன் முத்தர் = ஜீவன் முக்தர்கள்.


பாடல் : 91 அகவாழ்க்கை

சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன்,

நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து

பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார்,

நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர்.


பொருள் :

சென்றது கருதார் = கடந்த காலத்தை நினைக்க மாட்டார்,

நாளைச் சேர்வது நினையார் = நாளை வருவதைப் பற்றியும் நினைக்க மாட்டார்.

கண்முன் நின்றது புசிப்பார் = நிகழ்காலத்தில் கண்முன்னே வரும் வினைப்பயன்களை ஏற்றுக் கொண்டு அனுபவிப்பார்,

வெய்யில் நிலவாய் = சூரியன் நிலவைப் போல குளிர்ந்து போனாலும்,

விண் விழுது வீழ்ந்து = ஆலமரத்தினைப் போல ஆகாயத்திலிருந்து விழுதுகள் இறங்கி வந்தாலும்,

பொன்றின சவம் வாழ்ந்தாலும் = இறந்த உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தாலும், 

புதுமையா ஒன்றும் பாரார் = வியப்பாக ஒன்றையும் கருதமாட்டார்,

நன்று தீது என்னார் = ஒன்றை இது நன்றென்றும், மற்றொன்றை இது தீதென்றும் சொல்ல மாட்டார்கள்,

சாட்சி நடுவான சீவன் முத்தர் = திரிபுடிக்கு சாட்சியாய் இருக்கும் ஜீவன்முக்தர் ஆனவர்.


பாடல் : 92 

பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம்,

தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய்,

உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும்,

அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே.


பொருள் :

பின்னை மூவரில் = (வரன், வரியான், வரிஷ்டன் எனும்) ஏனைய மூவர்களில்,

இரண்டு பேர்களும் = (வரன், வரியான்) இருவரும்,

சமாதி யோகம் தன்னை உற்றிருப்பார் = சமாதியோகத்தில் பொருத்தியிருப்பார்கள்.

தேக சஞ்சார நிமித்தம் = உடல் இருப்பதற்கு இன்றியமையாத உணவு முதலியவற்றின்) பொருட்டு,

தானாய் உன்னுவோன் வரன் =  பிராரப்த வலிமையினால் சமாதியிலிருந்து விழித்தெழுபவன் வரன் ஆகும்.

வேற்றோரால் உணர்பவன் வரியான் ஆகும் = அருகிலுள்ள சீடர் முதலியோரால் எழுப்பப்பட்டு சமாதியினின்று எழுபவன் வரியான் ஆகும்.

அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் = பிறராலோ, தானாகவோ சமாதி கலையாதவன்,

வரிட்டன் ஆமே = வரிஷ்டன் ஆவான்.


பாடல் : 93

அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி,

சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்,

பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்,

வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.


பொருள் :

அரிது ஆகும் இவர்கள் = மூன்று உலகங்களிலும் கிடைப்பதற்கு அரியதான இத்தகைய சீவன் முக்தர்கள்,

இவ்வாறு அநேகர் ஆனாலும் = பிராரப்தத்தால் பலவிதமான விவகாரங்களை உடையவர்களாக இருந்தாலும்,

முத்தி சரியாகும் = (ஞானத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாததால் ஞான பலமான) மோக்ஷம் இவர்களுக்கு ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கும்.

பாடுபட்ட சமாதிக்கு = வரன் முதலானவர் சிரமப்பட்டு அடைந்திருக்கும் நிர்விகல்ப சமாதிக்கு,

பலன் ஏது என்றால் = பலன் என்னவென்று கேட்டால்,

பெரிதான திருஷ்ட துக்கம் = விதிவசத்தால் ஏற்படும் பிறரால் காணக்கூடிய துக்கத்தை (தோற்றத்தை) 

பிரமவித்து அநுபவிப்பன் = ப்ரஹ்மவித்து அநுபவிப்பான்.

வரியானும் வரனும் மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார் = மற்றை மூவரும் துக்கன்றி  ஜீவன்முக்தி சுகத்தினை உடையவராய் வாழ்வார்கள்.


பாடல் : 94

பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால்,

திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால்,

பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும்,

விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார்.


பொருள் :

பிரம ஞானிகளும் = ஆத்மஞானிகளும்,

கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால் = (பிறவிக்குக் காரணமான அவித்யா, காம) கர்மங்களையுடைய அறிவீனரைப் போலவே, விதிப்படி விவகாரங்களைச் செய்து வாழ்ந்தால்,

திரமுறும் அஞ்ஞானம் போய் = வலிமை பொருந்திய அவித்யா காம, கர்மல்கள் நீங்கி,

செனியாத வழி ஏது என்றால் = மீண்டும் பிறவாதிருப்பதற்குக் காரணம் என்னவென்று கேட்டால்,

பரவும் ஆகாசம் = எங்கும் விரிந்திருக்கும் ஆகாயம்,

ஒன்றில் பற்றாது = ஒன்றிலும் ஒட்டாது.

மற்றை நாலும் = மற்ற வாயு முதலான நான்கு பூதங்களும்,

விரவின தோடும் கூடும் விதம் = தம்மோடு கலக்கும் பொருட்களோடு ஒட்டுவது போல,

இரு வோரும் ஆவார் = ஞானி, அஜ்ஞானி இருவரும் ஆவார்கள்.


பாடல் : 95

சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான,

மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம,

பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால்,

மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்


பொருள் :

சீவன் முத்தரைச் சேவித்தோர் = ஜீவன் முத்தரை வணங்குபவர்கள்,

சிவன் அயன் நெடுமா லான மூவரும் மகிழ = பரமசிவன், ப்ரஹ்மா, பெருமாள் ஆகிய மூவரும் மகிழும்படியாக,

நோன்பு முழுவதும் செய்து = விரதங்கள் அனைத்தையும் குறை வரச் செய்து,

சன்ம பாவனம் ஆனார் என்று = (பாவங்கள் நீங்கி) பிறவி தூய்மையடைந்தவர்கள் ஆனார்கள் என்று,

பழமறை முழங்கும் = அநாதியான வேதங்கள் உரத்தச் சொல்லும்.

இப்பால் = இனிமேல்,

மேவரும் சீவன் முத்தர் = கிடைத்தற்கரிய ஜீவன்முக்தர் (அடையும்),

விதேகமுத்தியும் = விதேஹ கைவல்யத்தையும்,

நீ கேளாய் = நீ (கவனமாகக்) கேட்பாயாக.


பாடல் : 96

பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம்,

சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும்,

கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும்,

விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும்.


பொருள் :

பஞ்சினை = பருத்திப்பஞ்சு முதலியவற்றை,

ஊழித்தீப் போல் = பிரளய கால வடவாமுக நெருப்பு சார்ந்தால் எப்படி எரித்துச் சாம்பலாக்குமோ அது போல,

பலசன்ம விவித வித்தாம் = பல பிறவிகளுக்கு பலப்பலவான விதைகளாகிய,

சஞ்சிதம் எல்லாம் = ஸஞ்சிதவினைகள் அனைத்தையும்,

ஞானத்தழல் = ஞானமாகிய நெருப்பு,

சுட்டு வெண்ணீறு ஆக்கும் = எரித்துச் சாம்பலாகப் பண்ணும்,

ஆகாமியம்தான் = ஞானத்திற்குப் பின் செயும் வினையின் பலன்களானது,

கிஞ்சித் = சிறிதும்,

கிட்டாமல் விட்டுப் போகும் = ஒட்டாமல் விட்டுப் போகும்.

விஞ்சின = மிஞ்சிய,

பிராரத்தத்தின் வினை = பிராரப்த கர்மமானது,

அநுபவித்துத் தீரும் = அனுபவித்து முடியும்.


பாடல் : 97

பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம்,

மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால்,

சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்,

அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள் வாரே.


பொருள் :

பொறுமையால் = இன்பதுன்பங்களை ஸமமாகக் காணும் திதிக்ஷை எனும் ஸஹிப்புத்தன்மையால்,

பிராரத்தத்தை = பிராரப்த பலனான இன்பதுன்பங்களை,

மறுமையில் = ஜீவன் முக்தி நிலையில்,

புசிக்குநாள் = அநுபவிக்கும் வேளையில்

செய்யும் கர்மம் = செய்யும் நல்வினை, தீவினைகள்,

தொடர்ந்திடாமல் = அவரைத் தொடராமல்,

மாண்டுபோம் வழி = அழிந்து போகும் வழி

ஏது என்றால் = யாது என்று கேட்பாயாகில்,,

சிறியவர் இகழ்ந்து = விவேகமற்றவர் அவமதித்து,

ஞானி செய்த பாவத்தை = அச்சீவன் முக்தர் உடலினால் செய்த பாவங்களை,

கொள்வார் = ஏற்றுக்கொள்வர்.

அறிவுளோர் = விவேகம் உள்ளவர்,

அறிந்து பூசித்து = ஞானிகள் ப்ரஹ்ம சொரூபம் என்று அறிந்து பூசித்து,

அறமெலாம் = புண்ணியங்களெல்லாம்

கைக்கொள்வாரே = ஏற்றுக்கொள்வர்.


பாடல் : 98

அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ றாகும்,

பெரியதூ லமும்கா லத்தால் பிணமாகி விழுமந் நேரம்,

உரியசூக் குமச ரீரம் உலையிரும் புண்ட நீர்போல்,

துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.


பொருள்:

அரிய மெய்ஞ்ஞானத்தீயால் = கிடைத்தற்கரிய தத்துவஞானமாகிய நெருப்பினால்,

அவித்தையாம் உடல் நீறாகும் = அவித்யையாகிய காரண சரீரம் வெந்து சாம்பலாகும் (இல்லாமல் அழிந்து போகும்).

பெரிய தூலமும் = கனமான தூல சரீரமும்,

காலத்தால் பிணம் ஆகி விழும் = விதி முடியும் காலத்தில் இறந்து போகும்.

 அந்நேரம் = அப்பொழுது,

உரிய சூக்கும சரீரம் = உரிமையாகிய நுண்ணுடலானது,

உலை இரும்புண்ட நீர்போல் = கொல்லுவையில் காய்ந்த இரும்பு உண்ட நீர் போல,

துரியமாய் = துரியமாயும்,

விபுவாய் = பூரணமாயும்,

நின்ற சொரூபத்தில் = இருக்கின்ற ப்ரஹம சொரூபத்தில்,

இறந்து போமே = லயமாகி விடும். 


பாடல் : 99

கடமெனும் உபாதி போனால் ககனமொன் றானாற் போல,

உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர்,

அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற,

படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும்.


பொருள் : 

கடமெனும் உபாதி போனால் = குடம் எனும் உயாதியானது உடைந்து போய்விட்டால்,

ககனம் ஒன்றானால் போல = உள்ளும் புறமும் இருக்கும் ஆகாயம் ஒன்றாவது போல,

உடலெனும் உபாதி = காரண, சூக்கும், தூல உடல்கள் எனும் உபாதி,

போன உத்தரம் = நீங்கிய பிறகு,

சீவன் முத்தர் = ஜீவன்முக்தர்கள்,

அடிமுடி நடுவும் இன்றி = முதலும் முடிவும் நடுவும் இல்லாமல்,

அகம்புறம் இன்றி = உள்ளும் புறமும் இல்லாமல்,

நின்றபடி திகழ் = தான் இருந்தபடியே இருக்கின்ற,

விதேக முத்திப் பதம் அடைந்து = விதேக முக்தி (மீண்டும் பிறவா) நிலையை அடைந்து,

என்றும் இருப்பர் = எப்பொழுதும் அப்படியே இருப்பார்கள்.


பாடல் : 100

சொல்லிய மகனே எங்கும் சூழ்வெளி இருக்க மண்ணைக்,

கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆ காசம் போலே,

ஒல்லையாம் பிரம நூலால் உற்றது போலே தோன்றும்,

எல்லையில் நாமெப் போதும் ஏகமென் றிருந்து வாழ்வாய். 


பொருள் :

சொல்லிய மகனே = (நீ நான் என்று இரண்டிலாமல் நிறைந்த பூரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம்) என்று முன்னே பிரஹ்ம அனுபவம்) கூறிய மைந்தா,

எங்கும் சூழ்வெளி இருக்க = எவ்விடத்தும் நிறைந்துள்ள ஆகாயம் தான் இருந்தபடியே இருக்க,

மண்ணைக் கெல்லிய பின்பு = பூமியை அகழ்ந்த பின்னர்,

தோன்றும் கிணற்றின் ஆகாசம் போலே = (ஆகாயம் பூரணம் என்னும் ஞானம் இல்லாதவனுக்கு புதிதாக அப்போது உண்டானது போலத்) தோன்றுகின்ற கிணற்றின் ஆகாயம் போல,

ஒல்லையாம் பிரம = ஏற்கனவே சித்தமாகவுள்ள ப்ரஹ்மம்,

நூலால் = சாஸ்திர நூலால் (குருவுபதேசத்தாலும்)

உற்றது போலே தோன்றும் = அப்போது புதிதாக அடையப்பட்டது போல இருக்கும்.,

எல்லையில் நாம் = வரையறையில்லாத ( பதியக் அன்னபிரஹ்மமாகிய) நாம்,

எப்போதும் ஏகம் என்று = எக்காலத்திலும் ஒன்றே என்று,

இருந்து வாழ்வாய் = இவ்வண்ணம் இருந்து (ஆநந்தமாக) வாழ்வாயாக.


பாடல் : 101

கானல்நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர்,

வானமை கயிற்றில் பாம்பு மலடிசேய் முயலின் கோடு,

பீனமாம் தறிபு மானில் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே,

ஞானம் மெய் மகனே உன்னை நம்மாணை மறந்தி டாயே.


பொருள்:

கானல்நீர் (இல்)= கானலில் நீர் போலவும்,

கிளிஞ்சில் வெள்ளி = சிப்பியில் வெள்ளி போலவும்,

கந்தர்ப்ப நகர் = கந்தர்வ நகரம் போலவும்,

கனாவூர் = கனவு நகரம் போலவும்,

வானமை = ஆகாயத்தில் நீல நிறம் போலவும்,

கயிற்றில் பாம்பு = கயிற்றில் பாம்பு போலவும்,

மலடி சேய் = மலடியின் மகன் போலவும்,

முயலின் கோடு = முயலின் கொம்பு போலவும்,

பீனமாம் தறி புமான் இல் = பருத்த தடியில் மனிதன் போலவும்,

பிரபஞ்ச மெல்லாம் = (அஹங்காராதி) பிரபஞ்சம் முழுவதும்,

பொய்யே = மித்யையே ஆகும்.

ஞானம் = ஞான ஸ்வரூபமான பிரஹ்மமே,

மெய் = உண்மை ஆகும்.

மகனே = மைந்தா,

உன்னை = இத்தன்மையதான உனது ஆத்மஸ்வரூபத்தை,

நம்மாணை = நம் மேல் ஆணை,

மறந்திடாயே = நீ மறந்துவிடாதே.


தத்துவ விளக்கப் படலம் முற்றிற்று.