Oct 22, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 17

 ஹிந்துமத தர்ம விளக்கம்




பாடம் - 17

(22.10.2020)


சென்ற வாரம்…

கர்மம்

நல்வினை (புண்யம்) = விதி

வேதத்தில் விதிக்கப்பட்டவை நித்தியம், நைமித்திகம், காமியம், பிராயச்சித்தம். 


தீவினை(பாபம்) = நிஷித்தம் 

மஹாபாதகங்கள், ஸமபாதகங்கள், உபபாதகங்கள்.


கர்மத்தைத் தூண்டும் வாஸனைகள் எண்ணங்களாக 16 விதம்.


கர்மத்தின் அடிப்படையில் பிறவிகள்

புண்ணியமிகுதி, பாபமிகுதி, மிச்ரம் (இரண்டும் கலந்தது). ஒவ்வொன்றிலும் மூன்று உட்பிரிவுகள் - உத்தமம் மத்திமம் அதமம்.

இதனடிப்படையில் பிறவிகள்.


இனி...


கர்மத்தைச் செய்யும் கருவிகள்


மனிதன் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் புண்ணியம், பாபம், மிஸ்ரம் என்ற மூவிதமான செயல்களையும் செய்கின்றான். ஆகவே கர்மம் வேறு விதமாக திரும்பவும் ஒன்பது வகைப்படுகிறது. அவை மானஸபுண்ணியம், மானஸபாபம், மானஸமிச்ரம், வாசிகபுண்யம், வாசிக பாபம், வாசிகமிச்ரம், காயிகபுண்யம், காயிகபாபம், காயிகமிச்ரம். 


மானஸ புண்ய கர்மம்

வைராக்கியம், பக்தி, ஞானம் இவற்றை பெற வேண்டும் என்றும் இவற்றின் சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மனதில் நினைத்தல். பரோபகாரம் செய்யவேண்டும், ஜபம், தியானம் செய்ய வேண்டும், எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதலும் மானச புண்ணியம் ஆகும்.


மானஸ பாப கர்மம்

உடல் மற்றும் உலக சுகத்திற்காக பிறருக்கு கெடுதல் செய்யவும், வேத, ஆகம சாஸ்திரங்களையும், பெரியோர் உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்தலும் இவை பிரமாணங்கள் ஆகாது என்று மனதில் நினைத்தலும் மானச பாபம் ஆகும்.


மானஸ மிச்ர கர்மம்

மேற்கூறிய புண்ணியமான எண்ணங்களும் பாபமான எண்ணங்களும் கலந்து இருத்தல்.


வாசிக புண்ய கர்மம்

வேத ஆகம நூல்களை படித்தல், காயத்ரி, பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி முதலிய மந்திரங்களை ஜபித்தல், இனிமையான உண்மையான வார்த்தைகளை அன்புடன் பேசுதல், நாம சங்கீர்த்தனம் பாடுதல் போன்றவை வாசிகபுண்ணியம் ஆகும்.


வாசிக பாப கர்மம்

மகான்களையும், பெரியோர்களையும், வேதங்களையும் நிந்தித்தல், பொய், கோள், பிறர் மனம் புண்படுமாறு கடுமையான வார்த்தைகள், கேலி வார்த்தைகளைப் பேசுதல் போன்றவை வாசிகபாவமாகும்.


வாசிக மிச்ர கர்மம்

மேற்சொன்ன இரண்டையும் அவ்வப்பொழுது அனுஷ்டித்தல் வாசிகமிச்ரம் ஆகும்.


காயிக புண்ணிய கர்மம்

புண்ணிய தீர்த்தங்களில் நீராடல், புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை செல்லுதல், பெற்றோர், குரு முதலிய பெரியோர்களை வீழ்ந்து வணங்குதல், சிவன், விஷ்ணு போன்ற தேவதைகளின் விக்ரகங்களை பூஜித்தல், நல்லோர்களைப் பார்க்கத் தேடிச் செல்லுதல், அவர்கள் சொற்படி நடத்தல், பிறரின் நன்மைக்காக சேவை செய்தல், தகுதியானவர்களுக்கு தானம் செய்தல் போன்றவை காயிக புண்ணியமாகும்.


காயிகபாபம்

பிற மனிதர்களை, உயிர்களை ஹிம்சித்தல், பிறர் மனைவியுடன் சேருதல், தீயோருடன் சேர்ந்து தீயவற்றை (தனக்குத் தானே) செய்தல், பிறருக்கு கெடுதல் செய்தல், பிறர் பொருளை அபகரித்தல், பொதுச்சொத்தை சேதம் செய்தல், பொது நீர்நிலைகளை மாசுபடுத்துதல் போன்றவை காயிக பாவமாகும்.


காயிகமிச்ர கர்மம்

புண்ணிய செயல்களையும் பாப செயல்களையும் கலந்து செய்தல் காயிக மிச்ரம். சட்டவிரோதமாகச் சேர்த்த பொருளால் பொருளால் புண்ணிய காரியங்களைச் செய்தல். உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்காது இருத்தல்.


ஒவ்வொருவரும் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை புண்ணிய கர்மங்களிலேயே செலுத்த முயற்சிக்க வேண்டும். படிப்படியாக பாப கர்மங்களைக் குறைத்துக்கொண்டு முற்றிலும் விட்டுவிட வேண்டும்.


உதாரணம்: ஈ, தேனீ. ஈ போல இல்லாமல் தேனீ போல வாழ பழகிக் கொள்ள வேண்டும்.


ஞமலிபோல் வாழேல். (ஞமலி = நாய்)

ஞிமிறென இன்புறு. (ஞிமிறு = தேனீ)

-புதிய ஆத்திசூடி


நல்லாரைக் காண்பதுவும் நன்றே….

தீயாரைக் காண்பதுவும் தீதே…

-ஔவையார்.


கர்மத்தின் ஒழிவு

கர்மத்தினால் பிறப்பும் பிறப்பினால் கர்மமும் சுழற்சியாய் உண்டாகி வருகின்றன. இதிலிருந்து விடுபடுவது எப்படி?


வினைப்பயன் செயல்படும் விதம்


உயிர்களை பிறவியில் கட்டுப்படுத்துகின்ற கர்மபலன் ஸஞ்சிதம், பிராரப்தம், ஆகாமி என மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றது.


ஸஞ்சிதம் - எஞ்சுவினை

சேர்த்துவைக்கப்பட்டது என்ற பொருள். 

பல ஜென்மங்களில் செய்யப்பட்ட கர்மங்களின் தொகுதி ஸஞ்சிதம். 


பிராரப்தம் - நிகழ்வினை

பலன் கொடுக்க ஆரம்பித்து நடந்து வருவது. இந்தப் பிறவி தோன்றுவதற்குக் காரணமான ஸஞ்சிதத்தின் ஒரு பகுதி வினைப்பயன்கள்.


ஆகாமி - வருவினை

இனி பலனைக் கொடுக்க வருவது. இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகளின் பயன். இது இப்பிறவி முடிந்த பிறகு ஸஞ்சிதத்தோடு சேர்ந்து, எதிர்வரும் பிறவிகளுக்குக் காரணமாக அமையும்.


ஒரு பிறவியில் செய்த வினைகளின் பயனை அனுபவிக்க பல பிறவிகள் ஆகின்றன.


பிறவியில் இருந்து நிரந்தரமாக விடுபட...


வேதாந்தம் எனப்படும் உபநிஷத் நூல்களை குரு வாயிலாக முறையாகக் கற்கின்றபொழுது ஆத்மா 'நைஷ்கர்ம்யம்' என்ற ஞானம் ஏற்படும். அனைத்திற்கும் ஆதாரமான ஆத்மா எதையும் செய்வதுமில்லை எதன் பலனை அனுபவிப்பதும் இல்லை. உடல் உலகம் அனைத்தும் மாயையினால் ஆத்மாவின் மேல் கற்பிக்கப்பட்டவை. ஆகவே, உண்மையில் இல்லாதவை என்ற திட அபரோக்ஷமான ஞானத்தினால் எல்லா வினைகளும் எரிக்கப்படுகின்றன. அஜ்ஞான காரியமான சரீர அபிமானம் நீங்கி, நான் ஆத்மா என்ற தெளிவான ஞானத்தினால் செயலற்ற தன்மை சித்திக்கின்றது.

அதன் பிறகு வினையை செய்தவனும் இல்லை, வினைப் பயன்களும் இல்லை. அந்த ஜீவன், ஜீவத்துவம் இறந்து ஆத்மாவாகவே இருந்து விடுகிறான். புண்ணிய பாவங்களைச் செய்தவன் இல்லை; ஆகவே புண்ணிய பாவங்களுக்கு போக்கிடம் இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பிறவி இல்லை. பிராரப்தம் இருக்கும்வரை உடலோடு வாழ்ந்துவிட்டு பிறவாத நிலையை அடைகின்றான்.


ஜொலிக்கின்ற நெருப்பு விறகுகளை எரிப்பது போன்று, ஞானம் என்ற அக்நி எல்லாக் கர்மங்களையும் சாம்பலாக்கி விடுகின்றது. 

  • ஸ்ரீமத் பகவத்கீதை 4.37.


நான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும். 

- திருக்குறள் 346.


இறுதியாக…

இந்துமத தர்ம விளக்கம் என்ற இந்த தொடர் சொற்பொழிவு இதனோடு நிறைவு செய்கின்றோம். ஹிந்து மதம் ஒரு மஹா சமுத்திரம். இன்னும் அனேக விஷயங்கள் அறிந்துகொள்வதற்கு இருக்கின்றன என்றாலும் இந்து மதத்தினுடைய அடிப்படைக் கட்டமைப்பை,  கொள்கைகளை இதுவரை பார்த்திருக்கின்றோம். ஷந்மதங்கள் ஷட்தரிசனங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் இன்னும் பார்ப்பதற்கு இருக்கின்றன. இருந்தாலும்

முதல் நிலையில் இது போதுமானது என்று நினைக்கின்றேன். குருவருளும் இறைவன் ஸங்கல்பமும் இருந்தால்  வாய்ப்பு கிடைத்தால் பின்னர் பார்க்கலாம். 


ஓம் தத்ஸத்!


|| ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம் ||





Oct 16, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 16


ஹிந்துமத தர்ம விளக்கம்




 

பாடம் - 16

கர்மம்


கர்மம் என்றால் வினை, செயல். செயலை செய்ய உதவும் கருவி கரணம் எனப்படும். அவற்றுள் முக்கியமானவை மூன்று. மனம், வாக்கு, காயம் (உடல்). இவை திரிகரணங்கள் எனப்படும். இவற்றால் செய்யப்படும் கர்மங்கள் முறையே மானஸிகம், வாசிகம், காயிகம் எனப்படும். அக்கர்மங்கள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை. இவற்றின் பயன்கள் முறையே நன்மை, தீமை - புண்யம், பாபம் - எனப்படும். 


பகவத்கீதையில் பகவான் கர்மத்தையும், விகர்மத்தையும், அகர்மத்தையும்‌ தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறார்.


கர்மத்தின் பிரிவுகள்

நல்வினை, தீவினை எவை என்பது சாஸ்த்ரங்களில் விதி, நிஷேதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.


விதிகள்

செய் என்று விதிக்கப்பட்டவை விதிகள், அதாவது நல்வினைகள். அவை நான்கு பிரிவுகளாக உள்ளன.

1.நித்யம், 2.நைமித்யம், 3.காம்யம், 4. பிராயச்சித்தம்.


1.நித்யகர்மா

நாள்தோறும் செய்யவேண்டியவை. அவை ஜபம், தியானம், பூஜை, பாராயணம், படித்தல் போன்றவை. இவை பஞ்சமஹாயஜ்ஞம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


உடல் ஆரோக்யமாகவும், பலம் பொருந்தியதாகவும் இருக்க, தினசரி குளிப்பது, உடற்பயிற்சி செய்வது போல, மனம் தூய்மையானதாகவும் வலிமை உடையதாகும் இருப்பதற்கு இவை அவசியம் செய்யப்பட வேண்டியவை.


2.நைமித்திகம்

நிமித்தம் ஏற்படும்போது செய்யப்படுபவை நைமித்திகம். அமாவாசை, கிரகண காலங்களில் செய்யப்படும் தர்ப்பணம் ச்ராத்தம், ஜபம் போன்றவை.


3.காம்யம்

ஒரு விருப்பத்தை - ஆசையை - தேவையை முன்னிட்டு செய்யப்படுவது காம்யம். புத்ரகாமேஷ்டி போன்றவை. இதனால் ஒரு புண்ணியம் ஏற்பட்டு அதனால் விரும்பியது நிறைவேறும்.


4.ப்ராயச்சித்தம்

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாபத்தை நீக்குவதற்காக செய்யப்படுவது. நித்ய, நைமித்திக கர்மாக்களை செய்யாமல் விடுவதாலும், நிஷித்த கர்மத்தை செய்வதாலும் பாபம் ஏற்படும்.

விரதமிருத்தல், தானம் கொடுத்தல் போன்றவை.


நிஷித்த கர்மா - தீவினை

இது பாதகம் என்றும் சொல்லப்படுகின்றது. பாதகம்  மனிதனைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது.

இது மஹாபாதகம், ஸமபாதகம், உபபாதகம் என்று மூன்று விதம்.


மஹாபாதகங்கள்

கொலை செய்தல், கள்ளுண்ணல், தங்கத்தை திருடுதல், குரு மனைவியுடன் கூடல், இவை நான்கும் செய்பவர்களுடன் சினேகம் கொண்டிருத்தல். இவை ஐந்தும் பஞ்ச மகாபாதகங்கள் எனப்படுகின்றன.


ஸமபாதகங்கள்

இவை மஹாபாதகங்களுக்குச் ஸமமானவை.


குருவை அவமதித்தல், வேதசாஸ்த்ரங்களை நிந்தித்தல், மறந்துவிடுதல் இவை கொலைக்கு ஸமமானவை. 


உண்ணக்கூடாததை உண்ணணுதல், கபடமாகப் பேசுதல், பொய் பேசுதல், பொய்சாட்சி சொல்லுதல் போன்றவை மது அருந்துதலுக்கு ஸமமானவை.


குதிரை, ரத்னம், மனிதன், பெண், பூமி, பசு, அடைக்கலம் வைத்த பொருள் இவற்றை அபகரித்தல் தங்கம் திருடுதலுக்கு ஸமமானவை.


நண்பனின் மனைவி, மகள், உறவுப்பெண், ஸமகோத்திரத்தில் பிறந்த பெண், மருமகள் இவர்களுடன் கூடுதல் குருபத்னியை கூடுதலுக்கு ஸமமாகும்.


உபபாதகங்கள்

பசுவதை, விதித்த கர்மங்களை செய்யாதிருத்தல், கடனைத் தீர்க்காமல் மோசம் செய்தல், திருடுடல், ப்ராணிகளை வதம் செய்தல், சட்டவிரோதமான செயல்களைச் செய்தல், நாஸ்திகனாக இருத்தல், விரதங்களை முடிக்காமல் பாதியில் விட்டுவிடுதல், மகன் மகள் மனைவி விற்றுவிடல், பொதுத்தடாகம், நந்தவனம் போன்றவற்றை விற்றல், பிறர் உணவை உண்டு பருத்திருத்தல், அரசுநிதியைத் திருடல், கடமை தவறுதல் போன்றவை உபபாதகங்கள்.


விதித்த கர்மங்களை - நல்வினைகளைச் - செய்தல் புண்ணியத்தையும், நிஷித்த கர்மங்களை - தீவினைகளைச் - செய்தல் பாபத்தையும் உண்டுபண்ணும். 


புண்ணியத்தினால் இன்பமும் பாபத்தினால் துன்பமும் அனுபவிக்கப்படுகிறது.


ஒருமூட்டை நெல் பலமூட்டை நெல்மணிகளை உண்டுபண்ணுவது போல, ஒரு பிறவியில் செய்த வினையின் பயன் கிரமமாக பலபிறவிகளில் அனுபவிக்கப்படுகின்றது. 


செயலைத் தூண்டும் எண்ணங்கள்


வினைப்பயன்கள் வாஸனைகளாக மனதில் சேர்ந்திருந்து,  அவ்வப்பொழுது எண்ணங்களாக வெளிப்படுகின்றன. அவை பதினாறு விதமாக இருக்கின்றன. 


அவை :

1. ராகம் (ஆண், பெண் விருப்பம்), 

2. த்வேஷம் (தீங்கு செய்தோருக்கு தீங்கு செய்யும் எண்ணம்), 

3. காமம் (வீடு, நிலம், பெண் போன்ற போக விஷயங்களை அடையவேண்டுமென்ற விருப்பம்), 

4. குரோதம் (காமத்தில் தடை ஏற்பட்டால் ஏற்படும் வெறுப்பு), 

5.லோபம் (அடைந்த பொருளின் மேலுள்ள பற்று),

6. மோகம் (தர்மாதர்ம அறிவு மயக்கம்),

7. மதம் (தன்னால், தன்பொருளால் செய்யமுடியாதது ஒன்றுமில்லை என்ற இறுமாப்பு),

8. மாத்ஸர்யம் (பிறர் சிறப்புப் பொறுக்க முடியாமை),

9. ஈர்ஷியை (பிறரிடம் இல்லாத துன்பம் எனக்கு மாத்திரம் வந்ததே என்ற எரிச்சல்) ,

10.அஸுயை (தன் துன்பம் பிறர்க்கில்லையே என்ற சிந்தை),

11.தம்பம் (தர்மத்தினால் புகழ் வேண்டுமென்ற எண்ணம்),

12. தர்ப்பம் (எனக்குச் சமமானவன் இல்லை என்ற எண்ணம்),

13. அகங்காரம் (நான் செய்கிறேன் என்ற எண்ணம்),

14. இச்சை (பசி, தாஹம் போன்றவற்றை ஆஹாரம் முதலியவற்றால் போக்கவேண்டுமென்ற விருப்பம்),

15. சிரத்தை (சாஸ்த்ரத்திலும் குருவுபதேசத்திலுமுள்ள நம்பிக்கை),

16. பக்தி (தாய், தந்தை, பெரியோர், நல்லவர், குரு, கடவுள் இவர்களிடம் உள்ள அன்பு).


ராகம் முதல் அஹங்காரம் ஈறாகவுள்ள பதிமூன்றும் தீவினையைத் தூண்டும் மாசுகள். இவை நீக்கப்பட வேண்டியவை.


(மனத்துக்கண் மாசிலன் ஆதல்… திருக்குறள்)


இச்சை சரீரம் உள்ளவரை இருக்கும்.


ச்ரத்தா, பக்தி இரண்டும் விரும்பி முயற்சியுடன் வளர்த்துக் கொள்ளவேண்டியவை.


கர்மங்களின் விளைவு பிறவிகள். ஆகவே, கர்மங்களுக்கேற்ப ஏற்படும் பிறவிகளின் வகைகளை இனிப் பார்க்கலாம்.


கர்மமும் பிறப்பும்


பலவித பிறவிகள்


"சத்துவ குணம் உள்ளவர்கள் தேவர்கள் ஆகவும், ரஜோ குணம் உள்ளவர்கள் மனிதர்களாகவும், தமோ குணம் உள்ளவர்கள் பசு பக்ஷி மரம் செடி கொடி முதலியனவாகும் பிறக்கிறார்கள்." 

-  பகவத் கீதை அத்தியாயம் 14.18.


"புண்ணியத்தினால் அடையப்படுவது தேவ சரீரம்; பாபத்தினால் அடையப்படுவது விலங்கு, தாவர சரீரம். இரண்டும் கலந்த மிச்ரத்தினால் அடையப்படுவது மனுஷ்ய சரீரம்.  

- வாசுதேவ மனனம், வர்ணகம் 5.


இதனால் கர்மம் மூன்று வகைப்படும். புண்ணியம், பாபம், மிச்ரம். ஒவ்வொன்றும் உத்தமம், மத்யமம் அதமம் என்ற ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. ஆகவே  புண்ய உத்தமம், புண்ய மத்யமம், புண்ய அதமம், பாபோத்தமம், பாபமத்யமம், பாபாதமம் மிச்ரோத்தமம், மிச்ரமத்யமம், மிச்ராதமம் என்று கர்மம் ஒன்பது வகைப்படுகிறது. இம்மாதிரியான கர்மங்களின் பிரிவுகளினால் பிறவிகளும் பல வகைப்படுகின்றன.


புண்யப்பிறவிகள்

புண்யோத்தமம் - பிரம்மா, மனுக்கள், ஸப்தரிஷிகள்…


புண்யமத்யமம் - இந்திரன் முதலான தேவர்கள்


புண்யாதமம் - யக்ஷர், கின்னரர், ஸித்தர்…


பாபப்பிறவிகள்

பாபோத்தமம் - விஷவிருக்ஷங்கள், முள் மரங்கள்; புலி, கரடி, சிங்கம் முதலிய துஷ்ட மிருகங்கள்; பாம்பு தேள் முதலிய துஷ்டஜந்துக்கள்.


பாபமத்யமம் - மா பலா தென்னை முதலிய மரங்கள்; பழம், பூ இலைகளினால் பிற உயிர்களுக்கு உபயோகமாக இருக்கின்ற செடிகொடிகள்; எருமை, கழுதை, பன்றி முதலிய விலங்குகள்.


பாபாதமம் - ஆல், அரசு, புரசு, வில்வம் போன்ற மரங்கள்; துளசி, அருகு, போன்ற செடிகள் பசு, குதிரை போன்ற விலங்குகள்.


மிச்ரோத்தமம் - ஞானம் அடைய வேண்டும், மோக்ஷம் அடைய வேண்டும் ஆகிய விருப்பத்தோடு தர்மத்தையும், ஆன்மிக சாதனைகளையும் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்ற மனிதர்கள்.


மிச்ரமத்யமம் - தர்மமாக வாழ்க்கையோடு கர்மயோகம் ஆக சமூக நலனிலும் அக்கறை கொண்டு பரோபகாரமாக வாழ்கின்ற மனிதர்கள்.


மிச்ராதமம் - தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம் என்று பசு, பறவைகள் மிருகங்களை வதைத்து, மாமிசங்களை உண்டு, உலக சுகத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, வாழ்கின்ற மனிதர்கள்.


உணவின்றி நம்மால் உயிர்வாழ முடியாதாகையால் ஜீவ ஹிம்சை குறைவாக இருக்கின்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு பழுத்து உதிர்ந்த பழங்கள், உதிர்ந்து உலர்ந்த தானியங்கள் இப்படி… விதைகள் தானியங்களிலும் உயிர் இருக்கின்றது என்றாலும் அது விரிவடையாமல் இருப்பதால் ஹிம்சை குறைவு. தாவரங்கள் ஓரறிவு உயிரினங்கள். ஆகவே ஐந்தறிவுடைய உயிரினங்களை விட அவற்றிற்குக் துன்பம் குறைவு. 


மேலும் தாவரங்கள் பழம், காய், பூ போன்றவற்றை உற்பத்தி செய்வது உயிரினங்கள் அவற்றை உண்டு அவற்றின் விதைகளை பல இடங்களுக்கு பரவச்செய்வதன் மூலம் தங்கள் இனத்தை விருத்தி செய்துகொள்வதற்காகவே.


மனித உடலிலிருந்தே ஜீவன் புண்ணிய, பாபங்களிலிருந்து விடுபட்டு, பிறவா நிலையை அடைய முடியும். பாபங்களை குறைத்துக் கொள்வதும், புண்ணிய கர்மங்களை மிகுதியாக செய்வதும், பலனை விரும்பாமல் கர்மயோகமாக மனத்தூய்மைக்காக கர்மங்களைச் செய்வதும், பிறகு ஆத்ம ஞானத்தின் வாயிலாக மோட்சத்தை அடைவதும் மனித பிறவியில் இருந்தே ஸாத்தியம். ஆகவே தேவர் முதலான எல்லா பிறவிகளைக் காட்டிலும் மனிதப்பிறவி மேலானது.


.

Oct 1, 2020

Hindumatha Dharma Vilakkam - Chapter 15


🕉️


ஹிந்துமத தர்ம விளக்கம் 

பாடம் 15

(01.10.2020)



வித்யா ஸ்தானங்கள்


இனி, ஸநாதன தர்மம் என்ற ஹிந்து மதத்துக்கு பிரமாணமாக - ஆதாரமாக - இருக்கக்கூடிய நூல்களைப் பற்றி பார்ப்போம். அவை சாஸ்த்ரங்கள் எனப்படுகின்றன. (அறிவைக் கொடுத்து ஜீவனைக் காப்பாற்றுவது என்பது பொருள்.)


வேதங்கள்

நான்கு : ரிக், யஜுர், ஸாம, அதர்வணம்.


1.ரிக் (புகழ்த்தும்) வேதம்

யாக கிரியைகளைப் பற்றிச் சொல்வது. இதை அறிந்து ஹோமம் செய்பவன் ஹோதா எனப்படுவான்.


2.யஜுர் (மகிழ்விக்கும்) 

வேதம்

யாக தேவதைகளை அழைத்தல் துதித்தல், யாகசாலை அமைப்பு விவரம், ராஜஸூயம், அச்வமேதம்  போன்ற யாக விவரணம், தினசரி செய்யவேண்டிய ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலிய விஷயங்கள். இவற்றை அறிந்து யாகத்தை நடத்துகிறவன் அத்வர்யு.


3.ஸாமம் (துக்கத்தைப் போக்கும்) வேதம்

யாக அதிஷ்டான தேவதையாகிய இறைவனை துதிக்க வேண்டிய கிரியைகள்.

ஸாமகானம் செய்பவன் உத்காதா.


4.அதர்வணம் (நன்மை பயக்கும்) வேதம்

ஹோதா, அத்வர்யு, உத்காதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவிர்த்திக்கின்ற கிரியைகளைச் சொல்வது. அரசனுக்கு ஏற்படும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யவும், உலகத்திற்கு துரபிக்ஷத்தைப் போக்கி சுபிக்ஷத்தை உண்டு பண்ணவும், எதிரிகளை ஓட்டுவதற்கு பூதங்களை உண்டு பண்ணவும், ஸாதனமான பலவிதமான கிரியைகளைக் கூறுகின்றது. இதை அறிந்து செய்பவன் பிரம்மா எனப்படுகிறான்.


ரிக் வேதத்திற்கு பிருகஸ்பதியும், யஜுர் வேதத்திற்கு சுக்கிரனும், ஸாமவேதத்திற்கு அங்காரகனும், அதர்வண வேதத்திற்கு புதனும் அதிபதிகள்.


வேதங்களில் அமைப்பு

ரிக் வேதம் 21, யஜுர் வேதம் 100, சாமவேதம் ஆயிரம், அதர்வ வேதம் 9 சாகைகளைக் கொண்டது.

இவற்றுள் மந்திரங்கள், விதிகள், நிஷேதங்கள் அர்த்த வாதங்கள் இருக்கின்றன. 

 

மந்த்ரங்கள்

ஜபம், ஹோமம், ஸ்துதி, தானம், ஆராதனம், யாகம் போன்றவற்றைச் செய்யும் காலங்களில் உச்சரிக்க கூடியவை மந்திரங்கள்.

மனனம் செய்பவனைக் காப்பாற்றுவது மந்திரங்கள்.


விதிவாக்யங்கள்

சத்தியம் பேசு; வத தர்மம் செய்; தினந்தோறும் சந்தியா தேவியை உபாசனை  செய்; ஜீவன் உள்ளவரை அக்னிஹோத்ரம் செய்; வேதத்தை அத்யயனம் செய் போன்ற ஸத் காரியங்களில் நியமனம் செய்கின்றவை விதிவாக்யங்கள் எனப்படும். விதி என்றால் விதித்தல் ஏவுதல் என்று பொருள்.


நிஷேத வாக்யங்கள்

கள் குடியாதே; பிறர் மனைவியிடம் செல்லாதே போன்றவை நிஷேத வாக்கியங்கள். நிஷேதம் என்றால் தடுத்தல்.


அர்த்தவாத வாக்யங்கள்

விதித்த கர்மங்களை துதித்தும் நிஷேதித்த கர்மங்களை நிந்தித்தும் இருக்கும் வாக்கியங்கள் அர்த்தவாதம். அர்த்தவாதம் விஷயத்தை விளக்கிச் சொல்லுதல்.


வேதங்களை கர்மகாண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்றும் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். கர்மத்தின் சொரூபத்தை சொல்வது கர்மகாண்டம். யோகத்தின் சொரூபத்தை சொல்வது உபாசனா காண்டம். ப்ரஹ்மத்தின் சொரூபத்தை சொல்வது ஞான காண்டம். ஞானகாண்டம் வேதாந்தம் என்று உபநிஷத் என்றும் கூறப்படும். உபநிஷத் என்றால் பிரம்மத்தின் சமீபத்தில் சேர்ப்பிப்பவை என்று பொருள்.


உபவேதங்கள் - 4

ஆயுர்வேதம்

அர்த்தவேதம்

தநுர்வேதம்

காந்தர்வவேதம்


1.ஆயுர்வேதம்

உயிர்களுக்கு உண்டாகும் நோய்களைப் போக்குவதற்குரிய சிகித்சைகளைப் பற்றிக் கூறுவது. ஆயுள்வ்ருத்தியைக் கூறுவதால் ஆயுர்வேதம்.


2.அர்த்தவேதம்

தக்ஷிணை, ஹோமத்ரவ்யங்கள் பற்றிக் கூறுவது அர்த்தவேதம்.


3.தநுர்வேதம்

வில்வித்தையைப்பற்றிக் கூறுவது தநுர்வேதம்.


4.காந்தர்வ வேதம்

பலவிதமாக கீதங்களைப் பாடுவதைப் பற்றிய வித்யா காந்தர்வவேதம். தேவர்களில் ஒருபிரிவினரான கந்தர்வர்களுக்குப் பிரியமானதால் காந்தர்வவேதம்.


வேத அங்கங்கள் - 6

வேதத்தின் அர்த்தத்தை அறிவதன் பொருட்டு ஏற்பட்டவை வேதாங்கள். 

சிக்ஷா

வ்யாகரணம்

சந்தஸ்

நிருக்தம்

ஜ்யோதிஷம்

கல்பம்


1.சிக்ஷா (கற்பிப்பது) (ஒலியியல் - ஒலிக்கும் முறை)

சிக்ஷா வேதத்தை அத்யயனம் செய்யும் (படிக்கும்) முறையை தெரிவிக்கிறது. 


2.வியாகரணம் (நன்றாக்குவது) (இலக்கணம் - சொல்லியல்) ப்ரகிருதி(பகுதி) விக்ருதி(விகுதி) என்ற விவேகத்தை முன்னிட்டுத் தப்பிதமில்லாமல் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய அறிவை உண்டுபண்ணுவது.


3.சந்தஸ் (சந்தோஷப்படுத்துவது) (யாப்பிலக்கணம்)

செய்யுளை யாக்கும் இலக்கணங்களைக் கூறுவது.


4.நிருக்தம் (நன்றாய்க் கூறுவது) நிகண்டு

சொற்களின்‌ பொருளை அறிவிப்பது.


5. ஜ்யோதிஷம் (க்ரஹங்களைப்பற்றியது)

ககோள சாஸ்த்ரமும் பல சாஸ்த்ரமும் அடங்கியது. க்ரஹங்களின் ஸஞ்சாரத்தையும் அதனால் பிராணிகளுக்கு ஏற்படும் பலன்(பாதிப்பு)களைப் பற்றியும் கூறுவது.


6.கல்பம் (ஏற்படுத்துவது)

வேதத்தில் கூறிய அக்னி சம்பந்தமான கிரியைகளில் மந்த்ரங்களைச் சொல்லும் போது செய்யவேண்டிய தந்த்ரங்களைக் காட்டுகிற சாஸ்த்ரம் கல்பம். க்ருஹ்ய ஸூத்ரங்கள், தர்ம ஸூத்ரங்கள், ச்ரௌத ஸூத்ரங்கள், சுல்வஸூத்ரங்கள்(க்ஷேத்ர கணிதமுறை) ஆகியவை கல்பத்தில் அடங்கியிருக்கின்றன.


உப அங்கங்கள்

மீமாம்ஸா, நியாயம், தர்ம சாஸ்த்ரம், புராணம்.


1.மீமாம்ஸா

வேதத்திலுள்ள மாறுபட்ட வாக்யங்களின் பொருளை நிர்ணயிக்கும் விசாரம் - ஆராய்ச்சி.

பூர்வமீமாம்ஸா - கர்மகாண்ட விசாரம் - ஜைமினி மஹரிஷி.

உத்தர மீமாம்ஸா

ஞானகாண்ட விசாரம் - வியாச மஹரிஷி.


2.நியாயம் - தர்க்க சாஸ்த்ரம்

பதார்த்தங்கள் எத்தனை என்பதையும் அவற்றின் லக்ஷணங்களையும் விவரிப்பது.


3.தர்மம் - ஸ்ம்ருதிகள்

ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் முதலியவற்றைக் கூறுவதும் பிரவ்ருத்தி(இல்லறம்), நிவ்ருத்தி(துறவறம்) மார்க்க தர்மங்களைக் கூறுவதும் தர்ம சாஸ்த்ரமாகும். அவை 18.

18 உபஸ்ம்ருதிகளும் உள்ளன.


அவற்றும் நான்கு முக்கியமானவை. 

கிருதயுகத்தில் மனுஸ்ம்ருதி, திரேதாயுகத்தில் கௌதமஸ்ம்ருதி, த்வாபரயுகத்தில் சங்க, லிகித ஸ்ம்ருதிகள், கலியுகத்தில் பராசர ஸ்ம்ருதி.


4.புராணங்கள், இதிஹாஸங்கள்

புராதன சரித்திரத்தைக் கூறுவன புராணங்கள். தர்மம் முதலான நான்குவிதமான புருஷார்த்தங்களைப் பற்றி பற்பல கதைகளின் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்கிற பூர்வ காலத்திய சரித்திரங்கள் அடங்கியது.  இதிஹாஸம் = இவ்வாறு முன் நடந்தது. அவை இரண்டு - ராமாயணம், மஹாபாரதம்.

புராணம் என்பது முக்ய ஸ்ருஷ்டி, உப ஸ்ருஷ்டி, வம்சாவளி, மன்வந்தரங்கள், வம்ச சரித்திரங்கள் இவைகளைக் கூறும் நூல். அவை 18. உபபுராணங்கள் 18 ம் உள்ளன.


மொத்தம் இருநூறு கோடி க்ரந்தங்கள்(ச்லோகங்கள்) சுருங்கி தற்போது 4,32,000 க்ரந்தங்களாக இருக்கின்றன.


உபநிஷத்துகள்

உடல் தத்த்வம், மனத்தத்த்வம், ஆத்ம தத்த்வம் மூன்மையும் பற்றிச் சொல்பவை உபநிஷத்துகள். இது வேதத்தின் இறுதிப் பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என்று சொல்லப்படுகிறது. ஜீவனை பரமாத்மாவிடம் சேர்ப்பிப்பது என்பது உபநிஷத் என்ற சொல்லின் பொருள். உபநிஷத்துகள் பல உள்ளன. 108 முக்கியமானவை. அவற்றுள்ளும் 10 அல்லது‌ 12 பிரஸித்தமானவை. அவை ஈசவாஸ்யம், கேனம், கடம், ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், ஐதரேயம், கௌஷீதகி‌, தைத்தீரியம், சுவேதாச்வதரம், பிருகதாரண்யகம், சாந்தோக்யம் என்பனவாம். இவற்றுக்கு சங்கரர், நீலகண்டர், ராமானுஜர், மத்வர் ஆகிய ஆசார்களாலும் அவர்களது ஆதி சிஷ்யர்களாலும் பாஷ்யம் எனும் விரிவுரை வெவ்வேறு ஸித்தாங்களாகச் செய்யப்பட்டிருக்கின்றன.


சாரீரக மீமாம்ஸா எனும் ப்ரஹ்ம ஸூத்ரம்

சரீரத்தினுள் கட்டுண்டதுபோல இருக்கின்ற ஜீவாத்மாவைப் பற்றி ஆராய்தல் சாரீரக மீமாம்ஸா. ஸூத்ரம்போல்‌ ஸூக்ஷ்மமாய் இருப்பதாலும் உபநிஷத் கருத்துகளை தொகுத்துக் கொடுப்பதாலும் ஸூத்ரம்.‌ அதிகமான கருத்துக்களை அடக்கிக் கொண்டிருக்கிற சுருக்கமான வாக்கியங்களுக்கு ஸூத்ரம் என்று பெயர். ஒவ்வொன்றும் நான்கு பாதங்களைக் கொண்ட நான்கு அத்யாயங்களைக் கொண்டது. எண்ணற்ற விதமான விளக்கவுரைகளைக் கொண்டது என்பதால் ஒப்பு உயர்வற்ற ஒரு நூல்.


இப்படி ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாஸங்கள் மற்றும் உரைகள் முதலியவைகளில் வேதார்த்தத்தை அனுஸரித்திருப்பவை மட்டுமே ப்ரமாணங்கள் ஆகும்.


ஆகமம்

வேதத்தில் மறைந்திருக்கின்ற விஷயங்களை வருவித்துக் கொடுப்பவை ஆகமங்கள். உருவத்துடன் கூடிய பரம்பொருளான பகவானை வெளியிலும் மனத்திலும் ஆராதித்து அவனிடம் போய்ச் சேருவதற்கான நெறிமுறைகளை அறிவிப்பன ஆகம சாஸ்த்ரங்கள். வேதப்பொருளை எளிதாக அரியமுடியாத காலத்தில் ரிஷிகள் வாயிலாக இறைவன் அருளியவைதான் ஆகமங்கள். ஆகமம் என்பதற்கு இறைவனிடமிருந்து வந்தவை என்ற பொருளுமுண்டு.


ஆகமங்கள் சைவம் வைஷ்ணவம் என இருவகைப்படும். சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்டவை, சிவனைப் பற்றியவை சைவம். மஹாவிஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்டவை, விஷ்ணுவைப் பற்றியவை வைஷ்ணவம்.


ஆகமத்தில் கூறப்படும் பொதுவான விஷயங்களாவன:

1.ஆலயங்களை நிர்மாணித்தல், 2. அவற்றிலுள்ள பரிவார தேவதைகள், முக்கிய தேவதைகள் இன்னவை எனல். 3. அவற்றின் உயரம், அகலம், பருமன், அங்கங்களின்‌ அமைப்பு சின்னங்களின் இருப்பு, 

பிரதிஷ்டை செய்யவேண்டிய இடங்கள்.

4. பிம்பங்களின் பிரதிஷ்டா விதிகள், நித்ய பூஜா விதிகள், உத்ஸவ பூஜா விதிகள், தப்பிதங்களுக்கு பிராயச்சித்த விதிகள் , அவற்றிற்குரிய தத்திரங்களும், மந்திரங்களும். 5. பூஜகர்களின் தகுதி, ஒழுங்கு விதிகள். 6. பக்தர்தளுக்கான நெறிமுறைகள். 7. பொருள் கொடுப்பவர்கள், சில்பிகள், கோயிலதிகாரிகள், வேலைக்காரர்கள் இப்படி இன்னும் பல்வேறு விஷயங்கள்.


சைவம்

சைவ ஆகமங்கள் 28.

சிவதீக்ஷைகள் நான்கு.

1.சமயம் 2. விசேஷம் 3.நிர்வாணம் 4. ஆசார்யாபிஷேகம்.


சரியை, கிரியை, யோகம், ஞானம்.

சிவாலயப் பணிசெய்தல் சரியை.

சிவவழிபாடு கிரியை.

சிவதியானம் யோகம்.

சிவானுபவம் ஞானம்.

சரியை முதலானவை நன்நான்கு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 16 பேதங்களாகக் கூறப்படுகின்றன.


வைஷ்ணவம்

வைகானஸம், பாஞ்சராத்ரம் என வைஷ்ண ஆகமம் இருவகைப்படும். பெருமாளிடம் இருந்து விகனஸ் என்ற முனிவர் வழியாக வந்தது வைகானஸம். 5 நாட்களில் உபதேசிக்கப்பட்டது பாஞ்சராத்ரம்.


சாஸ்திரங்களை பிரமாணமாகக் கொண்டு அவற்றின்படி வாழ்வது தான் ஒரு ஹிந்துவின் தர்மம். முதலில் பிரவிர்த்தி மார்க்கத்தையும் பிறகு நிவிர்த்தி மார்க்கத்தையும் பின்பற்றி முறையாக வாழ்ந்து தர்மம், பக்தி, ஞானம் இவற்றின் வாயிலாக இறைவனை அடைந்து பிறவாநிலையைப் பெறுவதுதான் மோக்ஷம். பிறவியிலிருந்து நிரந்தர விடுதலை. அதுவே ஒரு ஹிந்துவின் ஒரே லட்சியம்.



ஹிந்து மத தர்ம விளக்கம் முதல் பாகம் முற்றிற்று.


🕉️🕉️🕉️