Jul 18, 2021

Kaivalya Navanitham 2(1-60)

 

ஓம்


கைவல்ய நவநீதம் 

சந்தேகம் தெளிதல் படலம்


பாடல்: 01

நரர்குழி பறித்து மெல்ல நாட்டிய நெடிய கம்பம்,

உரமுறக் குத்திக் குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலப்,

பரமசிற் சொரூபம் தன்னில் பற்றிய மனோவி ருத்தி,

திரநிலை பெறச்சந் தேகம் தெளிதலை மொழிகின் றேனே.


பொருள்:

நரர் = (உலகில்) மனிதர்,

குழி பறித்து =  குழிதோண்டி,

மெல்ல நாட்டிய = மெதுவாக அதில் நிறுத்திய,

நெடிய கம்பம் = நீண்ட கம்பத்தை,

உரம் உற = அசையாமல் உறுதியாக இருக்கும் பொருட்டு,

குத்திக் குத்தி =  கல் முதலானவைகளை இட்டு குத்திக்குத்தி,

உறைப்பிக்கும் உபாயம் போல = நிலைப்படுத்தும் முறைமை போல,

பரம சிற்சொரூபம் தன்னில் = மேலான சைதந்ய ஸ்வரூபத்தில்,

பற்றிய மனோவிருத்தி = (நான் அது எனும் வேறுபாடின்றி) அறிந்த அத்வைத ஞான எண்ணம்,

திரநிலை பெற = நிலைபெற்று நின்றிட,

சந்தேகம் தெளிதலை = சந்தேஹம் தெளிதல் எனும் படலத்தை,

மொழிகின்றேனே = இப்போது கூறுகின்றேன்.


பாடல் : 02

நற்கருத் துடையோ னாகி ஞானவா னாகி நின்றோன்,

மர்க்கட நியாயம் போல மகாபூத விகாரம் தொட்டு,

நிர்க்குண விதேக முத்தி நிலைபரி யந்தம் சொன்ன,

சற்குரு வினைவி டாமல் சந்ததம் அநு சரித்தான்.


பொருள்:

நற்கருத்து உடையோன் ஆகி = ஸாத்விகமனம் உடையவனாக,

ஞானவானாகி நின்றோன் = பிரஹ்மான்ம ஐக்கிய ஞானம் உடையவனாக இருக்கின்ற சிஷ்யன், 

மர்க்கட நியாயம் போல = குரங்கின் குட்டி தன் தாய்க்குரங்கினை (எங்கே தாவினும் தான் அதனை விடாது) பற்றியிருக்கும் நியாயம் போல, 

மகாபூத விகாரம் தொட்டு = பஞ்சீகிருத பஞ்சமஹாபூதங்களின் கார்யமான தூலதேகம் தொடங்கி,

நிர்க்குண விதேக முத்திநிலை பரியந்தம் = நிர்க்குண ப்ரஹ்மத்தை அடையும் விதேக முக்திநிலை வரையில்,

சொன்ன சற்குருவினை விடாமல் = உபதேசம் செய்த ஸற்குருவை விட்டு நீங்காமல்,

சந்ததம் அநுசரித்தான் = எப்பொழுதும் பின்பற்றினான்.


பாடல் : 03

சந்ததம் புருடன் தன்னைச் சாயைபோல் விடாமல் அன்பாம்,

மைந்தனை நோக்கிச் சாட்சி மாத்திர மாய்நின் றாயோ,

சிந்தையில் ஐயம் எல்லாம் தீர்ந்தவோ தெளிவி னுள்ளே,

அந்தரம் கலந்த துண்டோ அநுபவம் உரைசெய் வாயே.


பொருள்:

சந்ததம் புருடன் தன்னைச் சாயைபோல் = எப்பொழுதும் மனிதனை விட்டு நீங்காமல் தொடரும் நிழல் போல,

விடாமல் அன்பாம் மைந்தனை நோக்கி = நீங்காமல் தன்னிடத்தில் அன்புடையவனாக இருக்கும் சீடனைப் பார்த்து,

சாட்சி மாத்திரமாய் நின்றாயோ = சாட்சியாயிருக்கும் ஆத்மா மாத்திரமாக உன்னை உணர்ந்து கொண்டாயா?

சிந்தையில் ஐயம் எல்லாம் தீர்ந்தவோ = மனதில் உள்ள ஸந்தேஹங்கள் அனைத்தும் நீங்கி விட்டனவா?,

தெளிவினுள்ளே அந்தரம் கலந்ததுண்டோ = அறிவிலே வேற்றுமை (உண்மையென்ற) எண்ணம் இன்னும் உள்ளதா?

அநுபவம் உரைசெய்வாயே = உனது அனுபவம் எப்படி உள்ளதெனச் சொல்லுவாயாக ! (என்று கூறினார்.)


பாடல் :  04

எனஉரைத் தருளும் ஆசான் இருபதம் வணங்கி எந்தாய்,

சனனவன் காட்டில் மோகத் தமத்தெழு பேதப் பேய்கள்,

உனதருள் உதய வெற்பில் உபதேச அருக்கன் தோன்றி,

மனவிழி தெரிய ஞான வான்கதிர் பரந்தால் உண்டோ.


என உரைத்து அருளும் ஆசான் = என்று கேட்டு அருளிய குருவினுடைய,

இருபதம் வணங்கி = இருதிருவடிகளை வணங்கி,

எந்தாய் = என் தந்தையே,

சனன வன்காட்டில் = பிறவியாகிய கொடிய காட்டில்,

மோகத்தமத்து எழு = அஞ்ஞானமாகிய இருளிலிருந்து எழுகின்ற,

பேதப்பேய்கள் = வேற்றுமைத் தோற்றங்கள் எனும் பேய்கள்,

உனதருள் உதய வெற்பில் = உமது அருளெனும் சூரியன் உதயமாகும் மலையிலிருந்து,

உபதேச அருக்கன் தோன்றி = பிரஹ்ம உபதேசம் எனும் சூரியன் தோன்றி,

மனவிழி தெரிய = மனமெனும் கண் காணும்படி,

ஞான வான்கதிர் பரந்தால் = ஆத்மஞானமாகிய பெருமை பொருந்திய எண்ணங்கள் பரந்து விரிந்தால்,

உண்டோ = அதன் முன் இருக்குமோ? (இல்லாதொழிந்தன).


பாடல்: 05

மந்திர மூர்த்தி தன்னால் மாற்றிய பேய்போ னாலும்,

எந்திரம் எழுதிக் கட்டி இனிவரா வகைசெய் வார்போல்,

முந்திஉன் உபதே சத்தால் மோகம்போ னாலும் ஐயா, 

புந்திநின்று உறைக்க இன்னம் புகலும்விண் ணப்பம் உண்டே.


பொருள்:

மந்திர மூர்த்தி தன்னால் = உலகில் மந்திரமூர்த்தியினால்,

மாற்றிய பேய் போனாலும் = விரட்டப்பட்ட பேயானது உடலைவிட்டு நீங்கிப்போனாலும்,

எந்திரம் எழுதிக் கட்டி = மந்திரத்தகடு எழுதி (பேய் நீங்கிய அவ்வுடலில்) கட்டி,

இனி வராவகை செய்வார் போல் = மீண்டும் அப்பேய் வராமல் செய்பவர் போல,

முந்தி உன் உபதேசத்தால் = முன்னர் நீங்கள் செய்த ப்ரஹ்ம உபதேசத்தால்,

மோகம் போனாலும் = அறியாமை நீங்கிவிட்டது என்றாலும்,

ஐயா புந்திநின்று உரைக்க = ஸற்குருவே, எனது அறிவானது அநுபவத்தில் நின்று அழுந்த,

இன்னம் புகலும் விண்ணப்பம் உண்டே = மேலும் கேட்பதற்கு சில ஐயங்கள் உள்ளன.


பாடல்: 06

ஆகமப் பிரமா ணத்தால் அறியென்றும் வாக்குக் கெட்டாது,

ஏகமாம் பிரமம் என்றும் இதயத்தால் உணர்வாய் என்றும்,

சோகமாம் மனத்திற்கு எட்டாச் சுயஞ்சோதி என்றும் சொன்னீர்,

மோகமாம் இரண்டு சங்கை முளைத்தன பறித்தி டீரே.


பொருள்:

ஆகமப் பிரமாணத்தால் அறி என்றும் = (நீயே ப்ரஹ்மமென்னும்) வேதவாக்கியத்தால் (உனது உண்மை வடிவம் ப்ரஹ்மம் என்று) அறிவாயாக என்றும்,

ஏகமாம் பிரமம் = இரண்டற்ற ஒன்றான ப்ரஹ்மமானது,

வாக்குக்கு எட்டாது என்றும் = வாக்கியங்களுக்கு விஷயமாகாது என்றும்,

இதயத்தால் உணர்வாய் என்றும் = மனதினால் உன் சொரூபத்தை உணர்வாய் என்றும்,

சோகமாம் மனத்திற்கு எட்டாச் சுயஞ்சோதி என்றும் = துன்பமயமான மனத்திற்கு விஷயமாகாத ஸ்வயம்ப்ரகாச சொரூபம் எனவும்,

சொன்னீர் = உபதேசித்து அருளினீர்,

மோகமாம் இரண்டு சங்கை முளைத்தன = மயக்கத்தைத் தருவதான இருவித ஐயங்கள் எனது மனதில் உண்டாயின,

பறித்திடீரே = அவற்றைப் போக்குவீராக!.


பாடல் :07

மற்றைமுப் பிரமா ணத்தால் வத்துநிண் ணயங்கூ டாதே,

உற்றதோர் விடயம் பூதம் உபயம்அன்று ஆத லாலே,

குற்றம்ஆம் குணவி சேடம் கூடாமல் இருக்கை யாலே,

இற்றது வாக்குக்கு எட்டாது என்பதும் அறிவாய் நீயே.


பொருள்:

உற்றதோர் விடயம் (அன்று) = (ஆத்மாவுக்கு வேறாக இல்லாத பரமாத்மா) கண் முதலான புலன்களோடு சேர்வதான உருவம் முதலிய விஷயங்களுள்ளே ஓர் விஷயமும் அன்று,

பூதம் அன்று = தோன்றியது அன்று,

உபயம் அன்று = இரண்டுமன்று.

மற்றை முப்பிரமாணத்தால் = (பிரத்யக்ஷம், அநுமானம், உபமானம் ஆகிய) மூன்று பிரமாணங்களால், 

வத்து நிண்ணயம் கூடாதே = பிரஹ்ம நிச்சயம் கூடாது.

குற்றமாம் குண விசேடம் = குற்றமாகிய குண வேறுபாடுகளை

கூடாமல் இருக்கையாலே = சேராமல் இருப்பதனாலே,

இற்றது = இத்தன்மையதான ப்ரஹ்மமானது,

வாக்குக்கு எட்டாது என்பதும் = சொல்லுக்கு விஷயமாகாது என்று, 

அறிவாய் நீயே = நீ அறிவாயாக.


பாடல்: 08

வாக்கியம் தனக்கெட் டாது வத்துஎன்று உரைத்த வேதம்,

வாக்கிய விருத்தி யால்அவ் வத்துவைக் காட்டிற் றன்றோ,

வாக்கியங் களிலே மானம் ஆவதேது என்றாய் ஆகில்,

வாக்கியம் இரண்டும் மெய்யே மறைகள்பொய் யாது கேளாய்.


பொருள்:

வத்து = பிரஹ்மமானது,

வாக்கியம் தனக்கு = யாதொரு வாக்கியத்திற்கும்,

எட்டாது என்று = விஷயமாகாது என்று,

உரைத்த வேதம் = கூறிய வேதமானது,

வாக்கிய விருத்தியால் = (தத்துவமஸி) மஹாவாக்கியத்தின் (தத் பதம், த்வம் பதங்களின்) லக்ஷணா விருத்தியால்,

அவ்வத்துவை = அந்த பிரஹ்மத்தை,

காட்டிற்று அன்றோ = காட்டியுள்ளது அல்லவா! (ஆகவே, பிரஹ்மமானது வேதவாக்கியங்களுக்கு விஷயமாகும்.)

வாக்கியங்களிலே = (ஆனால், அவ்விரு) வாக்கியங்களுள்ளே,

மானம் ஆவது = பிரமாணம் ஆக எடுத்துக் கொள்ளத்தக்கது,

ஏது என்றாய் ஆகில் = எது என்று கேட்பாயே ஆனால்,

வாக்கியம் இரண்டும் மெய்யே = அவ்வாக்கியங்கள் இரண்டும் உண்மையே,

மறைகள் பொய்யாது = வேதங்கள் பொய் கூறாது ஆகலின்,

கேளாய் = (இதற்கு இன்னும் ஸமாதானம் கூறுகிறேன்) கேட்பாயாக.


பாடல்: 09

தன்பதி அல்லாப் பேர்கள் தமைஅல்லன் அல்லன் என்றாள்,

அன்பனைக் கேட்ட நேரம் அவள்வெட்கி மௌனம் ஆனாள்,

என்பது போல நீக்கி இதன்றிதன்று எனச்சே டித்த,

பின்பரப் பிரமம் தன்னைப் பேசாமல் காட்டும் வேதம்.


பொருள்:

தன் பதி அல்லாப் பேர்கள் தமை = (சில நண்பர்களோடு கூடி நிற்கும் கணவனையுடைய ஒரு மனைவியை மற்றொருத்தி பார்த்து உன் கணவன் இவனா? இவனா? என்று அக்குழுவிலுள்ளோரை ஒவ்வொருவராக சுட்டிக் கேட்டு வர அதற்கு அப்பெண்ணானவள்) தனது கணவன் அல்லாதவர்களை,

அல்லன் அல்லன் என்றாள் = இவன் இல்லை இவன் இல்லை என்று கூறிவந்தாள்.

அன்பனைக் கேட்ட நேரம் = தனது கணவனைச் சுட்டிக் கேட்டபொழுது,

அவள் வெட்கி மௌனம் ஆனாள் = அவள் நாணமுற்று சும்மா இருந்தாள்,

என்பது போல = என்ற நியாயம்போல,

இது அன்று இது அன்று என நீக்கி = (பிரஹ்மமல்லாதவை ஜடமாதலால்) அவற்றை இது பிரஹ்மம் அன்று, இது பிரஹ்மம் அன்று என ஒவ்வொன்றாக விலக்கி,

பின் = பின்னர்,

சேஷித்த பரப்பிரமம் தன்னை = எஞ்சிய (சேதன ரூபமான பரப்பிரஹ்மத்தை)

பேசாமல் காட்டும் வேதம் = மௌனமாகக் காட்டும் வேதம்.


பாடல்: 10

முந்திய சங்கை தீர மொழிந்ததை அறிந்து கொள்வாய்,

பிந்திய சங்கை தீரப் பேசும்உத் தரம்நீ கேளாய்,

இந்திரியங் களுக்கி ராசன் இதயமாம் அதின்எண் ணங்கள்,

புந்தியும் மனமும் என்றே புறத்தகத்து உலாவி ஆடும்.


பொருள்:

முந்திய சங்கை தீர = (பிரஹ்மம் வேத வாக்கியத்திற்கு எட்டும், எட்டாது என்பது எவ்வாறு என்று நீ வினவிய முதல் ஐயம்) உனது மனதிலிருந்து நீங்கும்படி,

மொழிந்ததை அறிந்து கொள்வாய் = யாம் கூறிய விடையைப் புரிந்து உன் இருத்திக் கொள்வாய்.

பிந்திய சங்கை தீரப் பேசும் உத்தரம் நீ கேளாய் = ஸ்வயம் ஜோதியான ப்ரஹ்மம் மனதிற்கு விஷயமாகும், ஆகாது எனும் இரண்டாவது ஐயம் தெளிய நாம் கூறும் பதிலை இப்போது கேட்பாயாக.

இந்திரியங்களுக்கு = கண் முதலான புலன்களுக்கு,

இதயம் இராசன் ஆம் = உள்ளம் ராஜா ஆகும்.

அதின் எண்ணங்கள் = அதில் எண்ணங்கள்,

புந்தியும் மனமும் என்றே = அறிவு, மனம் என்று,

புறத்தகத்து = உடலுக்கு வெளியிலும் உள்ளிலும்

உலாவி ஆடும் = சென்று வந்து விளையாடும்.


பாடல்: 11

உன்முகம் போல்கண் ணாடிக் குள்ளொரு முகம்கண் டாற்போல்,

சின்மய வடிவின் சாயை சித்துப்போல் புத்தி தோன்றும்,

நின்மனோ விருத்தி அந்த நிழல்வழி யாய்உ லாவும்,

தன்மநன் மகனே இத்தைத் தானன்றோ ஞானம் என்பார்.


பொருள்:

உன்முகம் போல் = உன்னுடைய முகம் போல

கண்ணாடிக்குள் ஒரு முகம் கண்டாற்போல் = முகம் பார்க்கும் கண்ணாடியினுள்ளே பிரதிபலிக்கும் ஒரு முகத்தைப் பார்ப்பதுபோல,

சின்மய வடிவின் சாயை = சித்ரூபமான ஆத்மாவின் பிரதிபிம்பமானது,

சித்துப்போல் = (மற்றொரு) சேதனம் போல,

புத்தி தோன்றும் = மனதில் பிரதிபலிக்கும்,

நின் மனோவிருத்தி = உன் மனதில் தோன்றும் எண்ணங்கள்,

அந்த நிழல் வழியாய் = அந்த பிரதிபிம்ப சைதந்யத்தோடு கூடி,

உலாவும் = விஷயங்களில் சென்று சேரும்.

தன்ம நன்மகனே = அறவழி வாழும்  நல்ல சீடனே,

இத்தைத் தான் அன்றோ = இந்த எண்ணங்களைத் தான் அல்லவா,

ஞானம் என்பார் = அறிவு என்று கூறுவர் (பெரியோர்).


பாடல் : 12

உருக்கிய தராநீர் நாநா உருவங்கள் ஆனாற் போல,

விருத்திகள் கடப டாதி விடயமாய்ப் பரிண மிக்கும்,

அருப்பல விடயம் எல்லாம் ஆபாசன் தோற்று விக்கும்,

இருட்டினில் விளக்கும் கண்ணும் இல்லாமல் பொருள்கா ணாதே.


பொருள் : 

உருக்கிய தராநீர் = (உலையிலிட்டு நெருப்பில் வைத்து) உருக்கிய திரவ உலோகமானது,

நாநா உருவங்கள் ஆனால் போல = அச்சுக்குக்கு ஏற்றார்போல பல வடிவங்கள் ஆவது போல,

விருத்திகள் = (புலன்கள் வழியாக வெளிச்செல்லும்) எண்ணங்கள்,

கடபடாதி விடயமாய்ப் பரிணமிக்கும் = குடம், துணி முதலிய விஷயமாகப் பரிணாமம் அடையும்.

விடயம் எல்லாம் = குடம், துணி போன்ற பொருட்கள் அனைத்தும்,

அருப்பல ஆபாசன் தோற்றுவிக்கும் = அருவமான விளக்கம் என்னும் பிரதிபிம்பசைதந்யம் (சிதாபாஸன்) தோற்றுவிக்கும் -

இருட்டினில் விளக்கும் கண்ணும் இல்லாமல் = இருளில் விளக்கும் கண்ணும் இல்லாமல்

பொருள் காணாதே = பொருள் தெரியாது (என்பது எப்படியோ அப்படி ஆவரண நீக்கத்தின் பொருட்டு எண்ணமும், அறிதல் வடிவ பயன் தோன்றக் காரணமான சிதாபாசனும் இல்லாமல் புறப்பொருட்கள் விளங்காது)


பாடல் : 13

எரிகின்ற விளக்கால் கண்ணால் இருட்பொருள் காணல் வேண்டும்,

தெரிகின்ற பரிதி காணச் சென்றிடில் கண்ணே போதும்,

விரிகின்ற சகத்தைக் காண விருத்தியும் பலமும் வேண்டும்,

புரிகின்ற விருத்தி ஒன்றே போதும்மெய்ப் பொருள்காண் போர்க்கே.


பொருள் :

எரிகின்ற விளக்கால் கண்ணால் = ஒளிர்ந்து கொண்டிருக்கிற விளக்கினாலும் கண்ணினாலும்,

இருட்பொருள் காணல் வேண்டும் = இருளிலுள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.

தெரிகின்ற பரிதி காணச் சென்றிடில் = தானே விளங்குகின்ற சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால்,

கண்ணே போதும் = கண் ஒன்றே போதும். (அது போல),

விரிகின்ற சகத்தைக் காண = (பலவாக) விரிந்திருக்கின்ற உலகப் பொருட்களைக் காண்பதற்கு,

விருத்தியும் = மனதிலிருந்து புலன்வழியே புறம் செல்லுகின்ற எண்ணமும்,

பலமும் வேண்டும் = சிதாபாஸனும் வேண்டும்.

மெய்ப்பொருள் காண்போர்க்கே = மெய்ப்பொருளான ஆத்மாவை அறிகிறவர்களுக்கு,

புரிகின்ற விருத்தி ஒன்றே போதும் = (ஆத்மஸ்வரூபத்தைப் பற்றிய குரு, சாஸ்த்ர அருளுபதேசத்தால் தோன்றும்) அறிவான  எண்ணம் (விருத்திஞானம்) மட்டும் போதும்.


பாடல்: 14

விருத்தியும் பலமும் கூடும் விகாரமே மனம்என் பார்கள்,

கருத்தெழு விருத்தி வேண்டும் கணக்கினால் மனத்திற்கு எட்டும்,

வருத்திய பலமாம் இந்த மனத்திற்கெட் டாது கண்டாய்,

அருத்தம்இப் படிஎன் றையம் அகன்றுநீ தெளிந்தி டாயே.


பொருள் :

விருத்தியும் = மனதின் விருத்தியும் (எண்ணமும்),

பலமும் = சிதாபாசன் (அஹங்காரம்)  என்ற பலமும்,

கூடும் விகாரமே = சேரும் பரிணாமமே,

மனம் என்பார்கள் = மனம் என்று சொல்லுவர் பெரியோர்.

விருத்தி வேண்டும் கணக்கினால்

= மனத்திலிருந்து எழும் பிரஹ்ம ஸ்வரூபம் பற்றிய எண்ணங்களை மட்டும் எதிர்பார்க்கும் நியாயத்தால்,

மனத்திற்கு எட்டும் = பிரஹ்மமானது மனதிற்கு எட்டும்.,

வருத்திய = ( இதுகாறும்) துன்பப்படுத்திய,

பலம்ஆம் இந்த மனத்திற்கு எட்டாது கண்டாய் = (சிதாபாஸன் என்னும்) பலத்தோடு கூடிய இந்த மனத்திற்கு பிரஹ்மமானது விஷயமாகாது என்று அறிவாய்,

அருத்தம் இப்படி என்று = (ப்ரஹ்மமானது மனதுக்கு எட்டும் எட்டாது என்று வேதங்கள் கூறியதற்கு) பொருள் இவ்வாறாகும் என்று அறிந்து,

ஐயம் அகன்று நீ தெளிந்திடாயே = ஸந்தேஹம் நீங்கி நீ தெளிந்திடுவாயாக.


பாடல்: 15

வஞ்சகம்இல் பரமார்த்த குருவே சொன்ன

        வழிகள் அறிந் தேன்இனியோர் வசனம் கேளீர்

சஞ்சலமற்று அகண்டபூ ரணமாய்ச் சித்தம் 

         ததாகாரம் ஆவதன்றோ சமாதி யோகம்

உஞ்சலையொத் தலைவதுதன் சுபாவ மாகி

         ஒருகணத்தில் பலவுலகாய் உதிக்கும் இந்த 

நெஞ்சகம்வத் துவிலசையா நிவாத தீப

          நிலையடைவது எப்படியோ நீர்சொல் வீரே.


பொருள் :

வஞ்சகம் இல் பரமார்த்த குருவே = வஞ்சகம் இல்லாத மெய்ப்பொருளை உபதேசிக்கும் குருநாதரே,

சொன்ன வழிகள் அறிந்தேன் = (வாக்குக்கும், மனதுக்கும் எட்டும், எட்டாது என்பதற்கு தேவரீர்) அருளிய காரணங்களை நன்கு அறிந்தேன்.

இனி ஓர் வசனம் கேளீர் = இப்பொழுது நான் வினவும் மற்றொரு ஐயம் கேட்டருள்வீர்,

சித்தம் சஞ்சலமற்று = மனமானது அலையாமல்,

அகண்ட பூரணமாய்ச் = பிளவுபடாமல் பூரணமாயுள்ள ஒன்றில்,

தத் ஆகாரம் ஆவது அன்றோ = அது(ப்ரஹ்ம) வடிவாக ஆவது அல்லவா,

சமாதி யோகம் = சமாதியோகம் எனப்படும் சித்த நிரோதம் ஆகும்.

உஞ்சலை ஒத்து அலைவது = ஊஞ்சலைப் போல இங்கும் அங்கும் அலைவதை, 

தன் சுபாவமாகி =  தனது இயல்பாகக் கொண்டு,

ஒருகணத்தில் பலவுலகாய் உதிக்கும் = ஒரு க்ஷண நேரத்தில் பலவுலகப் பொருட்களாய்த் தோன்றி நிற்கும்,

இந்த நெஞ்சகம் = இந்த மனமானது,

வத்துவில் = ஆத்ம ஸ்வரூபத்தில்,

அசையா நிவாத தீப நிலையடைவது = காற்றினால் அசைக்கப்படாத தீபம் நிலைத்துநின்று எரிவது போன்ற தன்மையை அடைவது,

எப்படியோ நீர் சொல்வீரே = எப்படி என்று நீங்கள் விளக்கி அருள்வீராக.


பாடல் : 16

கருதுமனோ குணமூன்றாம் மூன்றில் ஒன்று

            கதித்தெ ழுந்தால் மற்றிரண்டும் கரந்து நிற்கும்,

தருமம்மிகும் சத்துவமே லான போது

           சன்மார்க்க மானதெய்வ சம்பத் துண்டாம்,

மருவுரசோ குண மாகில் உலக தேக

            வாதனையாம் சாத்திரவா தனையு மாகும்,

அருமகனே தமோகுணம்மே லான போதில்

            அசுரசம்பத் துண்டாகும் அறிந்து கொள்ளே.


பொருள் : 

கருதுமனோ குணம்மூன்றாம் = விஷயங்களை எண்ணும் மனதின் குணங்கள் (ஸத்துவம், ரஜஸ், தமஸ் என) மூவகையாகும்.

மூன்றில் ஒன்று கதித்தெழுந்தால் = அம்மூன்று குணங்களில் ஓர் குணமானது அதிகரித்து மேலெழுந்தால்,

மற்று இரண்டும் கரத்து நிற்கும் = ஏனைய இரண்டு குணங்களும் அடங்கி இருக்கும்.

தருமம்மிகும் சத்துவம் மேலான போது = தர்மசிந்தனை மிகுந்து உண்டாவற்குக் காரணமான ஸத்துவ குணம் மேலாகும் போது,

சன்மார்க்கம் ஆனதெய்வ சம்பத்து உண்டாம்

 = நல்வழியாகும் தெய்வ ஸம்பத் உண்டாகும்,

மருவு ரசோகுணம் ஆகில் = கலந்து நிற்கும் ரஜோ குணம் மேலோங்குமானால்,

உலக தேக வாதனையாம் சாத்திர வாதனையும் ஆகும் = உலக வாஸனை, தேஹவாஸனை, சாஸ்த்ரவாஸனை

எனும் மூவிதவாவனைகளும் உண்டாகும்.

அருமகனே = அருமையான மைந்தனே,

தமோகுணம் மேலான போதில் = தமோகுணம் மேலிடும் பொழுது,

அசுரசம்பத்து உண்டாகும் = ((தீவழியாகிய) அசுரசம்பத்து உண்டாகும்

அறிந்து கொள்ளே = என்று நீ தெரிந்துகொள்வாயாக.


வாஸனை

திடபாவனையோடு முன் பின் ஆராயாது விஷயங்களைக் கொள்வது வாசனையாம்; அல்லது, திடபாவனையால் முன்பின்னொன்றையும் விசாரியாமல் உண்டாகும் குரோதாதி விர்த்திகளுக்கேதுவாய சித்தத்தின் சூட்சுமாவஸ்தையாகிய ஸம்ஸ்காரம் வாசனையாகும்.


மலினவாஸனை (அசுத்த வாஸனை)

உலகவாசனை: என்னை உலகம் நித்தித்தல் (இகழ்தல்) கூடாது; யாவரும் என்னைத் துதித்தல் வேண்டுமென்னும் பற்றுதலின் திட ஸம்ஸ்காரமாம்.


தேஹவாஸனை: ஸ்தூல சூட்சும தேகங்களின் நோய் முதலிய வடிவ அல்லது பாவ வடிவ மலங்களை ஒளஷதாதிகளாலாவது அல்லது தீர்த்த யாத்திரையினாலாவது முற்றும் நீக்குவேன்; மேலும், அவற்றின்கண் புஷ்டி, அழகு முதலிய வடிவ அல்லது புண்ணிய வடிவ குணத்தைச் சம்பாதிப்பேன் என்னும் ஆக்கிரகத்தின் (பற்றுதலின்) திட ஸம்ஸ்காரமாம்.


சாஸ்திரவாஸனை: சகல சாஸ்திரங்களின் பாடத்தையாவது அர்த்தத்தையாவது அல்லது அவை கூறிய யாகம் முதலான அறங்களையாவது யான் மேற்கொள்வேனென்னும் பற்றுதலின் திட ஸம்ஸ்காரமாகும்.

இம்மூன்றும் மலின (அசுத்த) வாசனையாகும்.


சுத்தவாஸனை 

மைத்திரி - கருணை - முதிதை - உபேட்சை - தியான முதலியவற்றால் உண்டாவதாகும்.


இவ்விரண்டனுள் முன்னது பிறவி பெருகுவதற்குக் காரணமாகும்; பின்னது அது சுருங்குவதற்குக் காரணமாகும். ஐயந்திரிபற்ற சீவப்பிரஹ்ம ஐக்கிய ஞானம் உடையவரது சித்தத்தின்கண் அவர்தம் உடல் வாழ்க்கையின் பொருட்டுமாத்திரம் உபயோகமாவதாய், டம்பம், கர்வ முதலிய அசுர சம்பந்தத்தை உண்டாக்காததாய், ஜன்மாந்தரத்திற்கு ஏதுவாகாததாயுள்ள வாசனை சுத்த வாசனையாம்.


தெய்வ சம்பத்: (1) விவேகம் (நித்தியா நித்திய வஸ்து விசாரம்), (2) சமம் (மனவடக்கம்), (3) தமம் (புலன் அடக்கம்), (4) உபரதி (விட்டவிஷயத்தில் விருப்பமின்மை), (5) திதிட்சை (சீதோஷ்ண முதலிய துவந்துவங்களைப் பொறுத்துக்கொள்ளல்), (6) சிரத்தை (ஸற்குரு - சாஸ்திர வசனங்களில் திட விசுவாசம் கொள்ளல்), (7) சமாதானம் (ஸத்ரூபப் பிரஹ்மத்தில் சித்தம் ஒருமுகமாக இருத்தல்), (8) முமுட்சுத்துவம் (மோட்ச விருப்பம்),(9) தவம் (தனது தருமத்திலிருத்தல்), (10) சத்தியம் (சமதரிசனம்), (11) தயை (பிறர் துக்கத்தை நீக்க விருப்புதல்), (12) ஸ்மிருதி (முன் பின் விசாரித்தல்), (13) துஷ்டி (கிடைத்தது கொண்டு மகிழ்தல்), (14) தியாகம் (பரோபகாரமாகத் திரவியத்தைச் செலவு செய்தல்), (15) ஸ்வநிர்விருத்தி (ஆன்மாவின்கண் பிரியம்), (16) மானமின்மை (தன்குணத்தைப் புகழாமை), (17) இடம்ப மின்மை (தனது தர்மத்தை வெளியிடாமை), (18) அஹிம்சை (பிறர்க்குத் துன்பஞ் செய்யாமை), (19) க்ஷமை (பொறுமை), (20) ஆர்ஜவம் (நேர்மையான நடை ) என்பனவாம். இவற்றின் விரிவைப் பகவத்கீதை 13-வது அத்தியாயத்தில் காண்க.


அசுர சம்பத் (1) யாக முதலிய வியாபாரம், (2) மதம், (3) பேராசை, (4) கர்வம், (5) பொருள் முதலியவற்றை விரும்பிக் கடவுளைப் பிரார்த்தித்தல், (6) நான்வேறு கடவுள்வேறு என்னும் பேதபுத்தி, (7) விஷயானுபவம், (8) மதத்தால் போர் முதலியவற்றைச் செய்யத் தொடங்கல், (9) புகழை விரும்புதல் (10) பிறரைப் பரிகசித்தல், (11) தன்பிரபாவத்தைப் பிறரறியச் செய்தல், (12) பொருள் முதலியவற்றை விரும்பி மேற்கொண்ட காரியத்தை முடிக்க பலமாக முயற்சி செய்தல், (13) விஷய சுகத்தை விரும்புதல் (14) வேறு காரியத்திலுள்ள பிரியத்தால் தான் அவசியஞ் செய்தற்குரிய காரியத்தைச் செய்யாமை,(15) பெருந்தூக்கம் கொள்ளல், (16) அவிவேகம்,(17) முயற்சியின்மை, (18) திரவியத்தைச் செய்யவேண்டிய வளவில் செலவு செய்யாமை, (19) பொய்பேசல்,(20) பிறரை வருத்தல், (21) வீணே சிரமமடைதல், (22) அற்ப விஷயத்திலும் சித்தங்கலங்கல், (23) இழந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொள்ளல், (24) தன்னைத்தானே வருத்திக்கொள்ளல், (25) திருப்தியின்மை, (26) மரண பயம் முதலியன வாம். இவ்வசுர சம்பத்து மலினவாசனையின் காரியமாம். முற்கூறிய தெய்வ சம்பத்தோ சுத்த வாசனையின் காரியமாம். அசுர சம்பத்தின் விரிவைப் பகவத்கீதை 16வது அத்தியாயத்தில் காண்க.


(கைவல்ய நவநீதம் வசன வினா விடை , வடிவேல் செட்டியார்)


பாடல் : 17

மனதுசத் துவசொ ரூபம் மற்றிரண்டும்

           வந்துகலந் தனஅவற்றை மாற்றி னால்போம்,

தனது சன்மார்க் கத்தைவிடா திருந்தபோது

           தமோகுணமும் ரசோகுணமும் சமிக்கும் பின்னைக்,

கணபரிணா மம்சலனம் போம்போ னக்கால்

           களங்கமற்று நின்றஆ காசம் போலும்,

நினதுளம்அப் படியாமப் பிரமத்து ஒன்றாய்

            நிருவிகற்ப சமாதியிலே நிற்கும் தானே.


பொருள் :

மனது சத்துவ சொரூபம் = (மனது ஸூக்ஷ்ம பஞ்சபூதங்களின் ஸமஷ்டி ஸத்வ குணத்திலிருந்து தோன்றியது ஆகையால்) மனதிற்கு ஸத்துவ குணமே ஸ்வரூபம் ஆகும்.

மற்ற இரண்டும் வந்து கலந்தன = மற்ற இரண்டு குணங்களும் (ரஜோகுணமும் தமோகுணமும்) வந்து சேர்ந்தவை.

அவற்றை மாற்றினால் போம் = அவற்றை நீக்கினால் போய்விடும்.

தனது சன்மார்க்கத்தை = தனது இயல்பான சன்மார்க்கமான தெய்வ ஸம்பத்தை,

விடாது இருந்தபோது = முயற்சினால் விடாமல் கடைப்பிடிக்கும் போது,

தமோகுணமும் ரசோகுணமும் சமிக்கும் = ரஜோகுணமும் தமோகுணமும் ஒடுங்கும்.

பின்னைக் கணபரிணாமம் சலனம் போம் = பின்னர் (ரஜோ குண கார்யமான) விஷய பரிணாமமும் (விஷயத்தைப் பற்றுதலும்), (தமோ குணக் கார்யமான) அலைபாய்தலும் மனதை விட்டுப் போய்விடும்.

போனக்கால் = (அவை) போகவே,

நினது உளம் = உன் மனமானது,

களங்கமற்று நின்ற ஆகாசம் போலும் = மேகம் இல்லாமல் தெளிவாக விளங்கும் ஆகாயம் போல,

அப்படியாம் = அசஞ்சலமும், அதிஸுக்ஷ்மமும் ஆகும்.

அப்பிரமத்து ஒன்றாய் = அந்த பிரஹ்மமான ஸச்சிதாநந்த ஸ்வயம்பிரகாசமான ஆத்மாவுடன் ஒன்றாகி,

நிருவிகற்ப சமாதியிலே = ஸமாதி யோகத்தில்

நிற்கும் தானே =  தானே நிற்கும்.


பாடல் : 18

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர்

களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது,

விளங்கிஅதன் மயமாகி அபேதம் ஆகி

விகற்பமின்றி நிருவிகற்ப மானால் போல,

அளந்தறியப் படாவி புவாய்ச் சத்தாய்ச் சித்தாய்

ஆநந்த மாம்பிரமத் தைக்ய மான

உளந்தெளிந்த படியிருந்தால் உலக மெங்கே

உலைவெங்கே என்றுசங்கை ஒழித்தி டாயே.


பொருள் :

களங்கமற்ற கண்ணாடி தன்முன் = அழுக்கற்ற கண்ணாடி ஒன்றின் எதிரே,

வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது = மற்றொரு தூய்மையான கண்ணாடியைக் காட்டும் பொழுது,

விளங்கி அதன் மயமாகி = தூய்மையான அக்கண்ணாடி மயமாக தான் தோன்றி,

அபேதம் ஆகி = ஒன்றாகி,

விகற்பமின்றி நிருவிகற்பமானால் போல = (தான் வேறு அது வேறு எனும்) வேறுபாடு இன்றி அதுவாகவே விளங்குவது போல,

அளந்தறியப் படா விபுவாய் = வரையறையற்று எங்கும் நிறைந்ததாக,

சத்தாய்ச் சித்தாய் ஆநந்தமாம் பிரமத்து = ஸத்தாகவும், சித்தாகவும், ஆநந்தமாகவும் உள்ள பிரஹ்மத்தினிடத்தில்,

ஐக்யமான உளம் = ஒன்றிய மனது,

தெளிந்தபடி இருந்தால் = தெளிந்தபடியே (நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன் என்ற அபரோக்ஷ ஞானத்திலே) நிலைநின்றிருந்தால்,

உலக மெங்கே = அதற்கு உலக வடிவமான பரிணாமம் எப்படி வரும்?

உலைவெங்கே = (ஊசலப் போல) அலைவது எப்படி வரும்?

என்று சங்கை ஒழித்திடாயே = என்று அறிந்து (அலையும் மனது சமாதியோகம் அடைவது எப்படி? எனும்) உன் ஸந்தேஹத்தைப் போக்கிக் கொள்வாயாக.


பாடல்: 19

ஏகமாய் மனமிறந்தால் சீவன் முத்தர்

         இருக்குமட்டும் பிராரத்தம் எதினால் உண்பார்,

போகமா னதுபுசித்துத் தொலைப்ப தன்றோ

          புசிப்பதென்றால் மனம்தானும் போன தன்றே

சோகமாம் மனமிறந்தால் போகமில்லை,

          தோன்றுமெனில் முத்தரென்று சொலக்கூ டாதே

மோகமாம் இதுதெளியக் குருவே நன்றா

           மொழிந்தருள்வாய் தெளிந்ததன்றோ முத்தி தானே.


பொருள் :

ஏகமாய் மனமிறந்தால் = (நீரில் உப்புப் போல) பிரஹ்மத்திடத்தில் ஒன்றாகி மனம் அழிந்துவிட்டால்,

சீவன் முத்தர் இருக்குமட்டும் = ஜீவன் முக்தர் உடல் இருக்கும்வரை,

பிராரத்தம் எதினால் உண்பார் = தொடங்கிய வினைப்பயனை எதனைக் கொண்டு அனுபவிப்பார்.

போகமானது புசித்துத் தொலைப்பது அன்றோ = பிராரப்தமானது அனுபவித்துத் தீர்க்க வேண்டியது அல்லவா?

புசிப்பதென்றால் மனம்தானும் போனதன்றே = அனுபவிப்பதற்கு ஸாதனமான மனம்தான் அழிந்து போய்விட்டது அல்லவா!,

சோகமாம் மனமிறந்தால் போகமில்லை = துன்பமயமான மனது இல்லையென்றால் (ஆழ்வுறக்கம் போல) அநுபவித்தல் இல்லை.

தோன்றுமெனில் = மனது இருக்கிறது என்றால்,

முத்தரென்று சொலக்கூடாதே = ஜீவன் முக்தர் என்று சொல்லுதல் பொருந்தாதே.

மோகமாம் இது தெளிய = (ஆகவே) குழப்பமான இவ்வையம் தெளிய,

குருவே நன்றா மொழிந்தருள்வாய் = குருவே, விளக்கமாக விடை அருள்வீராக,

தெளிந்தது அன்றோ முத்தி தானே = ஸந்தேஹம் இன்றி தெளிந்த ஞானம் தானே ஜீவன்முக்தி ஆகும்.



பாடல் : 20

மனநாசம் சொரூபமென்றும் அரூப மென்றும் 

          வகுத்துரைப்பார் இருவகையா வருமி வற்றில்,

வினவாத சீவன்முத்தர் இடத்தி லொன்றும் 

          விதேகமுத்தர் இடத்திலொன்றும் மேவும் கண்டாய்,

தனதான சத்துவமாய் மனம்சே ஷித்துத்

          தமசுரச சுகள்நசித்தல் சொரூப நாசம்,

அனகாசத் துவம்தானும் இலிங்க தேகம்

         அடங்கும்போது அடங்குதலே அரூப நாசம்.


பொருள் :

மனநாசம் = மனதின் அழிவு,

சொரூபமென்றும் = ஸ்வரூபம் என்றும்,

அரூபமென்றும் = அருவமென்றும்,

வகுத்துரைப்பார் = பிரித்துக் கூறுவர் பெரியோர்.

இருவகையாக வரும் இவற்றில் = இரண்டு விதமாக இருக்கும் இவற்றில்,

வினவாத சீவன்முத்தர் இடத்தில் ஒன்றும் = (இதுவா? அதுவா? என ஸங்கல்ப விகல்பமாக எப்பொழுதும் அலையும் மனது) எதையும் கேட்காமல் இருக்கும் ஜீவன்முக்தர் இடத்தில் ஸ்வரூபநாசம் எனும் ஒன்றும்,

விதேகமுத்தர் இடத்திலொன்றும் = விதேக முக்தரிடத்தில் அரூபநாசம் எனும் மற்றொன்றும்,

மேவும் கண்டாய் = இருக்கும் என்று அறிந்து கொள்வாய்.

தனதான சத்துவமாய் = தனது இயல்பான ஸத்துவ குணமாக,

மனம்  சேஷித்து = மனது எஞ்சி நிற்கும் பொழுது,

தமசு ரசசுகள் நசித்தல் = தமோகுணமும் ரஜோகுணமும் அடங்கியிருத்தல், 

சொரூபநாசம் = ஸ்வரூப நாசம் ஆகும்.

அனகா = பாபமற்றவனே,

சத்துவம் = ஸத்துவ குணமும்,

இலிங்க தேகம் அடங்கும்போது = ஸூக்ஷ்ம சரீரம் அழியும் போது,

அடங்குதலே அரூபநாசம் = தானும் அழிதலே அரூப நாசம் ஆகும்.


பாடல் : 21

சுத்தமாம் சத்துவமே உண்மை யாகும்

          துகளிருள்போ னால்மனமென் சொல்லும் போம்போம்,

வர்த்தமா னத்தில்வந்த உணவை உண்பார்

          வருவதும்போ வதும்நினைந்து மகிழார் வாடார்,

கர்த்தரா மகந்தையைவிட் டகர்த்த ராகிக்

          கரணவிருத் திகளவத்தை காண்பா ராகி

முத்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும்

          முட்டிலைஎன் றறிந்துசங்கை மோசிப் பாயே.


பொருள் :

சுத்தமாம் சத்துவமே = தூய்மையான ஸத்துவகுணமே,

உண்மையாகும் = (மனத்திற்கு) உபாதான காரணமாகும்.

துகள் இருள் போனால் = துகளும் (ரஜோகுணமும்) இருளும் (தமோகுணமும்)  (ஸத்துவகுண மேம்பாட்டால்) அழிந்து (குறைந்து) போய்விட்டால்,

மனம் என் சொல்லும் போம்போம் = மனம் என்னும் விவகாரமும் ஒழிந்து போய்விடும்,

வர்த்தமானத்தில் = நிகழ்காலத்தில்

வந்த உணவை உண்பார் = விதிவசத்தால் வரும் உணவு முதலான விஷயங்களை அனுபவித்து வாழ்வார்.

வருவதும் போவதும் நினைந்து மகிழார் வாடார் = வினைப்பயன்களாக வந்து செல்லும் விஷயங்களை நினைத்து நினைத்து (அஞ்ஞானிகளைப் போல) மகிழ்ச்சியோ வருத்தமோ அடையமாட்.டார்,

கர்த்தராம் அகந்தையை விட்டு = நான் இதைச் செய்கிறேன் என்ற (உடல் சார்ந்த) அஹங்காரத்தை விட்டு விட்டு,

அகர்த்தராகி = ஆத்மா அகர்த்தா எனும் ஞானத்தால் தன்னை ஆத்மா என நினைந்திருந்து,

கரண விருத்திகள் = மனதில் தோன்றும் எண்ணங்களையும்,

அவத்தை காண்பாராகி = விழிப்பு முதலான அவஸ்தைகளையும் காணும் சாட்சியாய்,

முத்தராய் இருக்கலும் = சீவன் முக்தராய்,

புசிப்பும் கூடும் = வினைப்பயனை அனுபவிப்பதும் ,,நடக்கும்.

முட்டிலை என்று அறிந்து = இவ்வாறு இருப்பதற்கு ஒருவித தடையும் இல்லையென்று அறிந்து,

சங்கை மோசிப்பாயே = ஸந்தேஹத்தை விடுவாயாக.



பாடல் : 22

விவகார வேளையெலாம் சமாதி என்றால் 

          விகற்பமன்றோ மனமலைந்து விடாதோ விட்டால்,

அவதானம் நழுவுமன்றோ என்றா யாகில் 

           அதற்கொருதிட் டாந்தம்கேள் ஆசை கொண்டு,

நவமாகப் பரபுருடன் தன்னைக் கூடி

            நயந்தசுகம் அனுபவித்த நாரி நெஞ்சம்,

தவமான மனைத்தொழில்கள் செய்யும் போதும் 

            தழுவியநு பவித்தசுகம் தனைவி டாதே.


பொருள் :

விவகார வேளையெலாம் = உலக காரியங்களைச் செய்யும் காலங்களிலும்,

சமாதி என்றால் = மனது அடங்கியிருக்கும் என்றால்,

விகற்பம் அன்றோ = (உலக விஷயங்கள்) முரண்பாடுகள் உடையவை அல்லவா,

மனம் அலைந்து விடாதோ = (அதனால்) மனமானது சலனமடைந்து விடாதா?

விட்டால் = மனது சலனமடைந்துவிட்டால்,

அவதானம் நழுவுமன்றோ = ஜீவப்ரஹ்ம ஐக்ய ஞானம் மறந்து விடாதா?

என்றாய் ஆகில் = என்று கேட்பாயேயானால்,

அதற்கு ஒரு திட்டாந்தம் கேள் = அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்பாயாக!

ஆசை கொண்டு = காமத்தின் வசப்பட்டு,

நவமாகப் பரபுருடன் தன்னைக் கூடி = தன் கணவன் அன்றி புதியதாக வேறு ஒருவனைச் சேர்ந்து,

நயந்தசுகம் அனுபவித்த 

நாரி நெஞ்சம் = இனிய சுகம் அனுபவித்த பெண்ணுடைய மனமானது,

தவமாக மனைத்தொழில்கள் செய்யும் போதும் = தன் கடமைகளான வீட்டு வேலைகளைச் செய்கின்ற பொழுதும்,

தழுவி அநுபவித்த சுகந்தனை விடாதே = களளக்காதலனை தழுவி அனுபவித்த இன்பத்தினை மனம் மறந்து விடாது.

(அது போல சமாதியின் பெற்ற ஆத்மாநந்தத்தினை விவகார வேளையிலும் மனம் இழந்துவிடாது.)


பாடல் : 23

தேகத்தன் அலனாகி அகர்த்தன் ஆகிச்

          சீவனின்றிப் பிரமமாய்த் தெளிந்த முத்தன்,

போகத்தை உண்பன் என்றால் கருத்தா ஆமே

          பூரணமாம் அகர்த்தனுக்குப் போகம் உண்டோ,

சோகத்தை அறுத்தருளும் குருவே இந்தத்

          துகளறுக்க வேண்டுமென்று சொன்னா யாகில்,

மாகர்த்தன் மாபோகி மாத்தி யாகி 

          வகைமூன்றாய் அவரிருக்கும் மகிமை கேளாய்.


பொருள் : 

தேகத்தன் அலன் ஆகி = ஸ்தூல, ஸூக்ஷ்ம சேர்க்கையினால் இருக்கும் மனிதத்தன்மை, பிராமணத்தன்மை முதலிய அபிமானம் அற்றவனாகவும்,

அகர்த்தன் ஆகி = செய்கைகளற்ற ஆத்மா நான் எனவும்,

சீவனின்றிப் = அஹங்காரமாகிய ஜீவபாவம் நீங்கியும்,

பிரமமாய்த் தெளிந்த முத்தன் = பிரஹ்மமே ஆத்மா என்று தெளிந்திருக்கும் ஜீவன் முக்தன்,

போகத்தை உண்பன் என்றால் = உலக விவகாரங்களைச் செய்வான் என்று சொன்னால்,

கருத்தா ஆமே = (புண்ய பாபங்களை உண்டுபண்ணும்) கர்மங்களைச் செய்யும் கர்த்தா ஆகிவிடுவானே?,

பூரணமாம் அகர்த்தனுக்கு = பூரணப்ரஹ்மமாகத் தன்னை அறிந்து கொண்ட ஜீவன்முக்தனுக்கு,

போகம் உண்டோ = பிராரப்த போகமேது?,

சோகத்தை அறுத்தருளும் குருவே = துன்பத்தைப் போக்கி அருளும் குருநாதரே,

இந்தத் துகள் அறுக்க வேண்டும் = இந்த ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும்,

என்று சொன்னாய் ஆகில் = என்று கேட்பாயேயானால்,

மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி (என),

வகை மூன்றாய் = மூன்று வகையாக,

அவர் இருக்கும் = அந்த ஜீவன் முக்தர் இருக்கின்ற,

மகிமை கேளாய் = சிறப்பைக் கேட்பாயாக.


ஜீவன்முக்தனுக்கு கர்த்ருத்வம், போக்த்ருத்வம் எப்படிப் பொருந்தும் என்பது கேள்வி.


பாடல் : 24

செய்கையும்செய் விக்கையுமற் றிருக்கும் காந்தச் 

சிலைமலைமுன் இரும்புகள்சேட் டிக்கு மாபோல்,

செய்கையும்செய் விக்கையுமற் றிருக்கும் என்முன்

செடமான உலகமெலாம் சேட்டை செய்யும்,

மெய்கலந்த இந்திரிய விகார ரூப

விவகார விருத்திக்கும் விருத்தி தானா,

மெய்கலந்த சமாதிக்கும் சாட்சி யேநான்

வெயில்போலென்று உறைத்தவனே விபுமா கர்த்தன்.


பொருள்:

செய்கையும் = (தானே ஒன்றைச்) செய்யும் தன்மையும்,

செய்விக்கையும் = (இன்னொன்றைச்) செய்ய ஏவும் தன்மையும்,

அற்று இருக்கும் = (தான் வாஸ்தவமாக) கொண்டில்லாமல் இருக்கும்,

காந்தச்சிலை மலை முன் = காந்தக்கல்லாலாகிய மலையின் முன்னிலையில்,

இரும்புகள் சேட்டிக்கு மாபோல் = (ஜடமான) இரும்புத்துகள்கள் அசைவை அடைவது போல,

செய்கையும் = செய்வதும்,

செய்விக்கையும் = செய்விப்பதும்,

அற்றிருக்கும் என்முன் = இன்றி (ஏகமாய் பூரணமாய் சித்தாய்) இருக்கும் ஆத்மாவாகிய என் முன்னே,

செடமான உலகமெலாம் = சடமாயுள்ள உலகமனைத்தும்,

சேட்டை செய்யும் = தம்தம் விவகாரங்களைச் செய்யும்,

வெயில்போல் = (உலக செயல்களுக்கும் செயலின்மைக்கும் சாட்சி மாத்திரமாய் இருக்கும்) சூரியன் போல,

மெய் கலந்த = உடலோடு கூடியிருக்கின்ற,

இந்திரிய விகார ரூப = கண் முதலான புலன்களின் செயல் வடிவ,

விவகார விருத்திக்கும் = காணுதல் முதலான எண்ணங்களுக்கும்,

விருத்தி = அகண்டாகார மனோவிருத்தி,

தானா = தன்மயமாய்,

மெய் கலந்த சமாதிக்கும் = மெய்ப்பொருளான ஆத்மாவில்  ஒன்றிய சமாதிக்கும்,

நான் சாட்சியே என்று = நான் சாட்சி மாத்திரமாக உள்ளேன் என்று,

உறைத்தவனே = அழுந்திய அனுபவம் உள்ளவனே

விபுமாகர்த்தன் = வியாபகனான மஹாகர்த்தனாவான்.


பாடல் : 25

அறுசுவையில் குணம்குற்றம் அசுத்தும் சுத்தம்

அபத்தியம்பத் தியமெனவூ ணாய்ந்தி டாமல்,

பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத் தீப்போல்

போகங்கள் புசிப்பவன்மா போகி ஆகும்,

சிறிதுபெரி துகள்தனதந் நியங்கள் நன்மை

தீமைகள்சே ரினும்படிகச் செயல்போல் சித்தம்,

வெறிதிருக்கும் அவனேமாத் தியாகி ஆவன்

விரதமிம்மூன் றுடையவரே வீடு ளோரே.


பொருள் :

அறுசுவையின் ஊண் = அறுவகையான சுவையுடைய உணவில்.

குணம்குற்றம் = நிறைகுறைகள்,

அசுத்தும் சுத்தம் = தூய்மையற்றது, தூய்மையானது,

அபத்தியம் பத்தியம் = உண்ணத்தகாதது, தக்கது,

என ஆய்ந்திடாமல் = என ஆராய்ந்து பார்க்காமல்,

பொறுமையுடன் = ஸஹிப்புத்தன்மையுடன்,

கிட்டினதைக் காட்டுத் தீப்போல் = தன்னை நெருங்கியவைகளை எரிக்கும் காட்டுத்தீ போல,

போகங்கள் புசிப்பவன் = விதிப்படி தன்னை வந்து சேரும் உணவு முதலான போகங்களை அனுபவித்து வாழ்பவன்,

மாபோகி ஆகும் = மஹா போகி ஆவான்.

சிறிது பெரிதுகள் = சிறிதும் பெரிதுமான பொருட்கள்,

தனது அந்நியங்கள் = தன்னுடையதும் பிறருடையதுமான பொருட்கள்,

நன்மை தீமைகள் = புண்ணிய பாவங்கள்,

சேரினும் = தன்னை வந்து அடையும்,

படிகச் செயல்போல் = ஸ்படிக கல்லின் தன்மை போல,

சித்தம் வெறிதிருக்கும் அவனே = மனதில் சலனமின்றி இருக்கும் அவனே,

மாத்தியாகி ஆவன் = மகா தியாகி ஆவான்.

விரதம் இம்மூன்று உடையவரே = இந்த மூன்று வகை விரதம் உடையவரே,

வீடு உளோரே = மோக்ஷத்தை உடையவர் ஆவர்.


பாடல் : 26

மெய்யும் கொண்டு பிராரத் தம்தரு விதிவழி நின்றிடவும்,

உய்யும் கர்மிக ளுக்கநு குணமா வுறுதொழில் செய்திடவும்,

செய்யும் செய்கை முடிந்தவன் என்றுரை செப்புவது எப்படியோ,

நையும் துன்பம் அகற்றிய குருவே நலமா அருள்வீரே.


பொருள்:

மெய்யும் கொண்டு = உடலைத் தாங்கிக்கொண்டு,

பிராரத்தம் தரு விதி வழி நின்றிடவும் = பிராரப்தம் தருகின்ற நெறிப்படி வாழ்ந்திடவும்,

உய்யும் கர்மிகளுக்கு அநுகுணமா = தாம் உய்வடைய வேண்டுமென விரும்பும் கர்மகாண்டிகளுக்கு அநுகூலமாக,

உறுதொழில் செய்திடவும் = நிதிய நைமித்திகாதி கர்ம, உபாஸனைகளை செய்திட வேண்டும் பொழுது,

செய்யும் செய்கை முடிந்தவன் = (ஞானி) செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடித்தவன்,

என்றுரை செப்புவது எப்படியோ = என்று உபதேசிப்பது எவ்வாறு? (என்று நான் அறியேன்)

நையும் துன்பம் அகற்றிய குருவே = நெடுங்காலமாக வருத்தி வந்த  துன்பங்களை நீக்கிய குருநாதரே,

நலமா அருள்வீரே = இந்த சந்தேகத்திற்கு நன்றாக விடை அருள்வீராக.


பாடல் : 27

ஆடவர் செய்தொழில் மூவகை ஆகும் அவித்தைவசத் துறுநாள்,

ஏடணை மமதைய கந்தையு ளார்க்கே இகபர விவகாரம்,

வீடணு குவமெனும் இச்சையு ளார்க்கே வித்தைப டிப்பதெலாம்,

பாடன்மி கும்தொழி லாற்பல னுண்டோ பரிபூ ரணமானால்.


பொருள்:

அவித்தை வசத்துறு நாள் = (ஆத்மஞானத்திற்கு முன்னர்) அவித்யாவசத்தில் இருக்கும் காலத்தில்,

ஆடவர் செய்தொழில் = மனிதர்கள் செய்யத் தக்கனவான செயல்கள்,

மூவகை ஆகும் = (உழவாதி லெளகிகம், யக்ஞாதி வைதிகம், ச்ரவணாதி கல்வி, கேள்வி என) மூன்று விதமாகும்,

ஏடணை = அவற்றில் அனுபவிக்கும் ஆசையும், 

மமதை = குடும்பத்தில் எனது என்னும் பற்றுதலும்,

அகந்தை உளார்க்கே = உடலில் எனது எனும் எண்ணமும் உள்ளவர்களுக்கே,

இக பர விவகாரம் = இவ்வுலக, மறுவுலக தொழில்கள் செய்யத் தக்கனவாகும்.

வீடு அணுகுவம் எனும் இச்சையுளார்க்கே = மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசையுள்ளவர்களுக்கே,

வித்தை படிப்பது எலாம் = ஞானநூல்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் (நிதித்யாஸனம்) அனைத்தும் செய்யத்தக்கனவாகும்.

பரிபூரணமானால் = தேச கால வஸ்து வரையறையில்லாத பிரஹ்மமே தான் என்று ஆகிவிட்டால்,

பாடல் மிகும் தொழிலால் = பாடலாலும் (பாடல் கேட்டல் எனும் சிரவணத்தாலும்), இவ்வுலக, மறுவுலகிற்கான செயல்களாலும்,

பலன் உண்டோ = அடையத்தக்க பலன் ஏதும் உண்டா? (இல்லை).


பாடல் : 28

குரவர்சி காமணி யேகே ளீர்நீர் கூறின வழியொக்கும்,

பரமுடன் இகமும்இ ழந்தவர் அன்றோ பழகுவர் மெய்ஞ்ஞானம்,

விரவு முயற்சியின் மீண்டவர் அதைஇனி வேண்டுவரோ வேண்டார், 

சிரவண மனனா திகள்வேண் டாவோ சித்தம்உ றைத்திடவே.


பொருள் :

குரவர் சிகாமணியே கேளீர் 

நீர் கூறின வழியொக்கும் = நீங்கள் கூறிய (பரிபூரணமானால் பாடன் மிகு தொழிலால் பலன் உண்டோ?) என்று அருளிய உபதேசம் பொருத்தமானதே,

பரமுடன் இகமும் இழந்தவர் அன்றோ = மேலுலக சுக இச்சையும், இவ்வுலக சுக இச்சையும் விட்டவர் அல்லவா,

மெய்ஞ்ஞானம் பழகுவர் = ஆத்ம ஞானத்தை பயிற்சி செய்வர்,

விரவும் முயற்சியின் மீண்டவர் = போக இச்சை உடையவரால் செய்யப்படும் தொழில் முயற்சியிலிருந்து மீண்டு ஞான நெறிக்கண் திரும்பியவர்,

அதை இனி வேண்டுவரோ வேண்டார் = அத்தொழில்களை இனி விரும்புவார்களோ?, விரும்ப மாட்டார்கள், 

சித்தம் உறைத்திடவே = மனம் ஆத்மஞானத்தில் நிலைபெற,

சிரவண மனன ஆதிகள் வேண்டாவோ = சிரவணம், மனனம், நிதித்யாஸனங்கள் செய்ய வேண்டாமா?


பாடல் : 29

கிளர்மக னேகேள் தத்துவ மறியார் கேட்டல்செ யக்கடனே,

தளர்வறு சிந்தித் தலின்முயல் வார்சிலர் சந்தே கங்களுளார், தெளிதலின் நிற்பார் விபரீ தப்பேய் தீரா வாதனையோர்,

வெளிஉரு வாயறி வாய்நிறை வாயினர் வேண்டுவ தொன்றுண்டோ.


பொருள் :

கிளர் மகனே கேள் = ஞானமயமாக விளங்கும் சீடனே கேட்பாயாக.

தத்துவம் அறியார் = அத்தைவமான பிரஹ்மத்தை ஆத்மாவாக அறியாதவர்கள்,

கேட்டல் செயக் கடனே = சிரவணம் செய்ய வேண்டுவது அவசியம்தான்,

தளர்வு அறு சிந்தித்தலின் முயல்வார் = (சகல) துன்பங்களும் நீங்குவதற்குக் காரணமான மனனத்தில் முயற்சிப்பார்கள்,

சந்தேகங்கள் உளார் சிலர் = ஸந்ஹேங்களையுடைய சில பேர்,

விபரீதப்பேய் தீரா வாதனையோர் = தவறான அறிவெனும் பேயாகிய மலின வாசனை உடையவர்,

தெளிதலின் நிற்பார் = நிதித்யாஸனம் செய்வார்,

வெளி உருவாய் = (அஞ்ஞானத்தின்) மறைப்பு நீங்கிய சொரூபமாக,

அறிவாய் = உடல், மன ஆதிகளை அறியும் அறிவாக,

நிறைவாயினர் = வரையறையில்லாத ஆத்மாவாக தன்னை அறிந்தவர்கள், 

வேண்டுவது ஒன்று உண்டோ = செய்ய வேண்டியது என்றொரு ஸாதனை உள்ளதா? (இல்லை). 


பாடல்: 30

ஐயா கேளீர் தத்துவ ஞானியும் அஞ்ஞா னிகள்போலச்,

செய்யா நின்றேன் கண்டேன் உண்டேன் சென்றேன் எனலாமோ,

பொய்யாம் விபரீ தங்கள வர்க்குப் போயின வென்றீரே,

மெய்யாம் பிரமவி சாரம்இ தன்றே வெளியா வுரையீரே.


பொருள் : 

ஐயா கேளீர் =  குருவே (இன்னுமொரு ஐயம் உளது, அதைக்) கேட்பீராக,

தத்துவ ஞானியும் = பிரஹ்மஞானியும்,

அஞ்ஞானிகள்போல = அஞ்ஞானிகளைப் போலவே,

செய்யா நின்றேன் கண்டேன் உண்டேன் சென்றேன் எனலாமோ = செய்தேன், பார்த்தேன், உண்டேன், போனேன் என்று (உடலின் செயல்களைத் தான் என்று கொண்டு) பேசலாமா?,

பொய்யாம் விபரீதங்கள் = (உடல் நான், ஆத்மா கர்த்தா, போக்தா எனும்) மித்யையாகிய தவறான அறிவுகள், 

அவர்க்குப் போயின வென்றீரே = ஜீவன்முக்தர்களுக்குப் போய்விட்டன என்று சொன்னீர்களே,

மெய்யாம் பிரமவிசாரம் இது அன்றே = ஞானிகளுக்கு உரிய உண்மையான ஆத்மவிசாரம் இது அல்லவே,

வெளியா உரையீரே = விளங்குமாறு அருள்வீராக!


பாடல் :31

ஓய்ந்தக னாவில் கண்டப ழங்கதை ஓதுவன் வாதனையால்,

ஆய்ந்தறி வுற்றவன் அப்படிச் செப்புவன் ஆபா சனும்ஆகான்,

பாய்ந்தத னுடல்வே மளவும் விண்ணவன் மநுட னெனப்படுவான்,

வீய்ந்தசி தாபா சன்போம் அளவும் விவகா ரந்தொடரும்.


பொருள் :

ஓய்ந்த கனாவில் = விழிப்புநிலை ஒழிந்த கனவில்,

கண்ட பழங்கதை = முன்னர் தான் பார்த்த விவகாரங்களை,

வாதனையால் = வாஸனையால்,

ஓதுவன் = எப்படிச் சொல்வானோ,

அப்படி ஆய்ந்து அறிவு உற்றவன் =  (ஆத்ம அநாத்மாக்களை) அப்படி ஆராய்ந்து அநாத்மாக்களாகிய தேஹாதிகளை விலக்கி ஸந்தேஹமில்லாமல் ஆத்மாவை) அறிந்தவன், 

செப்புவன் = பூர்வவாஸனையால் செய்தேன் முதலாத விவகாரங்களைச் சொல்லுவான்,

ஆபாசனும் ஆகான் = (ஆனாலும் விவகார கர்த்தாவான சிதாபாஸனையும், விவகார கரணமாகிய மனதையும்) நான் என்று ஸத்தியமாக நினைக்க மாட்டான்,

மாய்ந்த தன் உடல் வேமளவும் = (அக்நியில் பிரவேசமான) இறந்த தன் உடல் வெந்து நீறாகும் வரையும், 

விண்ணவன் =  (மனிதனாய் பிறந்த தேவனானவன்),

மநுடன் எனப்படுவான் = மனிதன் எனப்படுவான்.

வீய்ந்த சிதாபாசன் போம் அளவும் = (தத்துவஞானத்தினால் அகம்பாவம்) இறந்த சிதாபாஸன் முற்றிலும் அழியும் வரையில்,

விவகாரம் தொடரும் = விவகாரம் தொடர்ந்து இருக்கும்.


பாடல் : 32

ஆனா லையா குருவே காண்ப தசத்திய மென்றாலும்,

நானா விவகார ந்துய ரலவோ ஞானசு கம்தருமோ,

போனா லன்றோ நன்றா நிட்டை பொருந்திடல் வேண்டாவோ,

தானா நிட்டை புரிந்தால் செய்கை தவிர்ந்தவ னெப்படியோ.


பொருள் :

ஆனால் = ஞானி விவகாரம் விதேக முக்தி வரையும் தொடரும் ஆனால்,

ஐயா குருவே = ஐயா குருநாதரே,

காண்பது அசத்தியம் என்றாலும் = காணுகிற உலகம் பொய் என்றாலும்,

நானா விவகாரம் துயர் அலவோ = பலவித உலக விவகாரம் துன்பம் அல்லவா,

ஞான சுகம் தருமோ = (விவகாரம்) பரிபூர்ண பரமாநந்தைத் தருமா?

போனால் அன்றோ நன்று ஆம் = புற விவகாரங்கள் நீங்கினால் அல்லவா ஆநந்தமும் உண்டாகும்.,

நிட்டை பொருந்திடல் வேண்டாவோ = அதற்கு சமாதியில் இருப்பது அவசியம் இல்லையா?

தான் ஆம் நிட்டை புரிந்தால் = தன்மயமாகும் ஸமாதி செய்தால்,

செய்கை தவிர்ந்தவன் எப்படியோ = அவன் கிருத்திருத்தியன் ஆகும்வகை எவ்வாறு? (என்று நான் அறியேன்).


பாடல் : 33

தெரிதரு மகனே ஆரம் பத்தொடு தீரும் விவகாரம்,

உரியதி யானமும் விவகா ரங்களும் உள்ளத் தொழி லன்றோ,

துரியப ரம்பொரு ளானவர் வேறொரு தொழில்செய் வதுமுண்டோ, 

அரியச மாதிகள் பழகுவ னேலவ னாரூ டனுமன்றே.


பொருள் :

தெரி தரும் மகனே = தன்னுண்மை தெரிந்திருக்கும் சீடனே,

ஆரம்பத்தொடு விவகாரம் தீரும் = பிராரப்த வினையுடன் எல்லா உலக விவகாரங்களும் முடிந்துவிடும்,

உரிய தியானமும் விவகாரங்களும் = ஸாதகர்கள் செய்வதற்குரிய சமாதிப் பயிற்சியும் மற்றைய தொழில்களும்,

உள்ளத்தொழில் அன்றோ ? = மனதின் செயல்கள் அல்லவா? (ஆதலால்),

துரிய பரம்பொருள் ஆனவர் = துரியமான ஆத்மாவான தன்னை பரம்பொருளாக எப்பொழுதும் உணர்ந்திருக்கும் ஞானிகள்,

வேறொரு தொழில் செய்வதும் உண்டோ = வேறே யாதேனும் ஒரு செயல் செய்வதும் உண்டா? (இல்லை), 

அரிய சமாதிகள் பழகுவனேல் = அடைவதற்கு அரிய சமாதிகளை (கர்த்தவ்ய புத்தியோடு) செய்தான் என்றால், 

அவன் ஆரூடனும் அன்றே = அவன் ஞானநிஷ்டை அடைந்தவன் அல்ல (ஸாதகனே ஆகும்).


பாடல் : 34

உத்தம குருவே யாரூ டருமாய் ஒருதொழி லற்றவருள்,

சித்தம டங்குதி யானா திகள்சிலர் செய்குவ தென்னென்றால்,

இத்தல மருவும் பிராரத் தப்பிறி வெப்படி அப்படியே,

முத்தரும் வெகுவித மாகுவ ரென்பது முன்னே சொன்னேனே.


பொருள் :

உத்தம குருவே = குருமார்களுள் சிறந்த குருவே,

ஆரூடருமாய் = ஞானநிஷ்டையுடைவராய்,

ஒருதொழில் அற்றவருள் = யாதொரு செயலும் செய்தே ஆக வேண்டுமென தேவையில்லாத ஜீவன்முக்தர்களுள்ளே,

சிலர் சித்தம் அடங்கு தியானாதிகள் = சில பேர் மனம் அடங்கியிருக்கும் தியானம் முதலான ஆன்மிக ஸாதனைகளைச்,

செய்குவது என்னென்றால் = செய்துகொண்டிருப்பது எதற்கு என்று நீ ஸந்தேஹம் கொண்டால்,

இத்தல மருவும் = இப்பூமியில் பொருந்தி நிற்கச் செய்யும், 

பிராரத்தப் பிறிவு எப்படி அப்படியே = வினைப்பயனின் வேறுபாடு (அவரவருக்கு) எப்படி இருக்கிறதோ அப்படியே,

முத்தரும் வெகுவிதம் ஆகுவர் என்பது = ஜீவன் முக்தரும் (பிரஹ்மவித், வரன், வரியான், வசிஷ்டன் என) பலவிதமாக இருப்பர் என்று,

முன்னே சொன்னேனே = முன்னரே (தத்துவ விளக்கப் படலம் 90 வது பாடல்) கூறினேன் அல்லவா?


பாடல் : 35

நல்லவ னேகேள் உலகுப காரம் ஞானிகள் விவகாரம்,

அல்லது வேறொரு பெறுபே றுமிலை அதனால் பிணியுமிலை,

வல்லசி ருட்டிமு தற்பல தொழிலால் வருபுண் ணியபாவம்,

எல்லவ ருக்கும்அ நுக்கிர கம்செயும் ஈசன் அடைத்திலனே.


பொருள் :

நல்லவனே கேள் = நற்குணங்கள் உடைய சீடனே கேட்பாயாக, 

ஞானிகள் விவகாரம் உலகு உபகாரம் = ஞானிகள் விவகாரம் செய்வது உலகுக்கு உபகாரம் (செய்யும் பொருட்டே) ஆகும்,

அல்லது = இதுவே அல்லாமல்,

அதனால் = அந்த விவகாரங்களால்,

வேறொரு பெறு பேறும் இலை =  (அவர்கள்) வேறொரு பயனும் அடைவது இல்லை,

பிணியும் இலை = (அவ்வாறு விவகாரங்கள் செய்வதால்) துன்பம் அடைவதும் இல்லை,

எல்லவருக்கும் = எல்லா உயிர்களுக்கும்,

அநுக்கிரகம் செயும் ஈசன் = அருள்புரிந்து கருணை செய்கின்ற இறைவன்,

வல்ல சிருட்டி முதல் பல தொழிலால் = வல்லமையுடைய படைப்பு முதலான பல தொழில்களால்,

வரு புண்ணிய பாவம் = வருகின்ற புண்ணியமும் பாவமும்,

அடைத்திலனே = அடைவது இல்லை (அதுபோல).


பாடல் : 36

ஈசனு மாய்அரு வாய்உரு வாகி எழுந்தரு ளும்குருவே,

ஈசனும் ஞானியும் ஒப்பென் றீரே எப்படி ஒப்பென்றால்.

ஈசனும் ஞானியும் மமதைஅ கந்தையி கந்ததி னா லொப்பாம்,

ஈசனு மாம்பல சீவரு மாமுல கெல்லாம் இவனாமே.


பொருள் :

அருவாய் = (பரமார்த்தமாக) உருவமின்றிய சிதாகாசமாய் (இருந்தபடி இருந்தே),

ஈசனுமாய் = (மாயையினால் உலகின் படைப்பு முதலானவற்றுக்குக் காரணமான) ஈச்வரனுமாகி,

உருவாகி = (என் போன்றவர்களை உய்விக்கும் பொருட்டு) திருவுருவாகி,

எழுந்தருளும் குருவே = எழுந்தருளியிருக்கும் குருவே,

ஈசனும் ஞானியும் ஒப்பென்றீரே = ஈச்வரனும் ஆத்மஞானியும் சமானமானவர்கள் என்று முன் கூறினீரே,

எப்படி ஒப்பு என்றால் = எப்படிச் சமானமாவர் என்று நீ கேட்டால்,

ஈசனும் ஞானியும் = இறைவனும் ஆத்மஞானியும்,

மமதை அகந்தை இகந்ததினால் ஒப்பாம் = (மாயை அவித்தைகளிலும், அவற்றின் செயல்களிலும்) என்னுடையது எனும் எண்ணத்தையும், நான் எனும் எண்ணத்தையும் விட்டிருப்பதனால் ஸமமானவர் ஆவர்.

இவன் = இந்த ஞானி யானவன்,

ஈசனுமாம் = ஈச்வரனும் ஆவான்,

பல சீவருமாம் = பலவிதமாயிருக்கும் அனைத்து ஜீவர்களும் ஆவான்,

உலகெல்லாம் ஆமே = உலகமனைத்தும் தானே ஆவான்.


பாடல் : 37

எல்லாச் சீவரும் இவனாம் என்றீர் இவன்தான் முத்தியடைந்து,

எல்லாச் சீவரும் முத்திபெறாமல் இருப்பதும் ஏனையா, 

எல்லாச் சீவரும் வெவ்வே றானால் இவன்எல் லாமலனே,

எல்லாப் பொருளும் உரைத்தருள் குருவே இதைநீர் மொழியிரே.


பொருள் :

எல்லாச் சீவரும் இவன்ஆம் என்றீர் = எல்லா ஜீவர்களும் இந்த ஞானியாவான் என்று அருளினீர்கள்,

இவன்தான் முத்தியடைந்து = இந்த ஞானி அஜ்ஞானம் நீங்கி நிரதிய ஆநந்த மோக்ஷ பதத்தை அடைந்தவுடன்,

எல்லாச் சீவரும் முத்திபெறாமல் இருப்பதும் ஏன் = அனைத்து உயிர்களும் முக்தி அடையாமல் இருப்பது எதனால்?

ஐயா எல்லாச் சீவரும் வெவ்வேறானால் = ஐயனே, ஒவ்வொரு உயிரும் தனித்தனியானது என்றால்,

இவன் எல்லாம் அலனே = இந்த ஞானி எல்லா ஜீவனும் இல்லை அல்லவா?

எல்லாப் பொருளும் உரைத்தருள் குருவே = நான் வினவும் எல்லாவினாக்களுக்கும் விடையருளும் குருநாதரே,

இதை நீர் மொழியிரே = இவ்வினாவிற்கான விடையையும் நீங்கள் கூறி அருள்வீராக!


பாடல் : 38

அகமெனும் ஆன்மா பூரணம் ஏகம நேகவி த ஞ்சீவர்,

அகமெனும் அந்தக் கரணோ பாதிக ளளவிலை ஆதலினால், சகம்முழு தும்குளிர் சந்திரன் ஏகம் சலசந் திரர்பலராம்,

சகமதில் ஏரிகு ளங்சிறு குழிசால் சட்டிகு டம்பலவால்.


பொருள் :

அகம் எனும் ஆன்மா = நான் நான் என்று அனைத்து உயிர்களிலும் இருந்து உரைக்கும் ஆத்மா,

பூரணம் ஏகம் = முழுமையானதும் ஒன்றானதும் ஆனாலும்,

ஜீவர் அநேகவிதம் = ஜீவர்கள் பலவாக இருப்பது ஏனெனில்,

அகம் எனும் அந்தக்கரண உபாதிகள் = நான் என்று அறியாமையால் கருதப்படும் மனம் எனும் அந்தக்கரணமாகிய உபாதிகள்,

அளவிலை ஆதலினால் = வரையரைக்குட்டதாய், பலவாய் உள்ளன ஆதலால் (ஒரு ஜீவன் முக்தி அடைந்தால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைவதில்லை),

(இதற்கு உதாரணம்)

சகம் முழுதும் குளிர் சந்திரன் ஏகம் = உலகம் முழுவதும் குளிர்வதற்கு காரணமான (பிம்பச்) சந்திரன் ஒன்றுதான்,

சலசந்திரர் பலவாம் = (ஆனாலும்) நீரில் பிரதிபலிக்கும் பிரதிபிம்பச் சந்திரன் பலவாகும் (ஏனெனில்),

சகமதில் = உலகில்

ஏரி குளம் சிறுகுழி சால் சட்டி குடம் பலவால் = ஏரியும், குளமும், சிறுபள்ளமும், சாலும், சட்டியும், குடமும் ஆகிய உபாதிகள் பலவாக இருப்பதால்.



பாடல் : 39

சட்டிகு டங்களில் ஒன்றுந சித்திடின் அதினுள் சலசந்திரன்,

ஒட்டுமு தற்சந் திரனொடு கூடும்ஒ ழிந்தவை கூடாவே,

கட்டுமு பாதிந சித்திடு சீவன் காரண வான்மாவில்,

கிட்டும யிக்கியமு பாதிகெ டாதவர் கேவல மாகாரே.


பொருள் :

சட்டி குடங்களில் ஒன்று நசித்திடின் = சட்டி, குடம் முதலிய உபாதிகளில் ஏதேனும் ஒன்று அழிந்தால்,

அதினுள் சலசந்திரன் = அதின் உள்ளே உள்ள நீரில் பிரதிபலித்திருந்த சந்திரனின் பிரதிம்பம்,

ஒட்டும் முதல் சந்திரனொடு கூடும் = தான் கூடுதற்குரிய காரண (பிம்ப) சந்திரனோடு சேரும்.

ஒழிந்தவை கூடாவே = மற்ற பிரதிபிம்ப சந்திரன்கள் (எப்படிக்) கூடாதோ (அப்படி),

கட்டும் உபாதி நசித்திடு சீவன் = பந்தப்படுத்தும் மனதிலுள்ள அஜ்ஞான உபாதி ஞானத்தால் அழிந்துபோன ஜீவன்,

காரண ஆன்மாவில் = தனக்குக் காரணமான ஆத்மாவிடத்தில்,

அயிக்கியம் கிட்டும் = ஐக்கியத்தை அடைதல் நடக்கும்,

உபாதி கெடாதவர் = அக்ஞான உபாதி ஞானத்தால் அழியாத மற்ற ஜீவர்கள்,

கேவலம் ஆகாரே = ஐக்கியமாக மாட்டார்கள்.


பாடல் : 40

இவனயன் மால்சிவ னாகிய ஈசரொ டெப்படி ஒப்பாவான், சிவன்முதல் மூவரு மகிலசி ருட்டி திதிநா சங்கள்செய்வார், அவர்பிறர் மதிகளும் முக்கா லங்களும் அறிவார் விபுவாவார்,

தவம்மிகு குருவே இவனுக் கவையிலொர் சற்றும் காணேனே.


பொருள்:

இவன் அயன் மால்சிவன் ஆகிய ஈசரொடு = இந்த ஜீவன்முக்தர் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய ஈச்வரர்களோடு,

எப்படி ஒப்பாவான் = எங்ஙனம் சமமாவான்,

சிவன்முதல் மூவரும் = சிவன், விஷ்ணு, ப்ரஹ்மா ஆகிய மூவர்களும்,

அகில சிருட்டி திதி நாசங்கள் செய்வார் = எல்லா உலகங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலைகளைச் செய்வார்கள்.

அவர் பிறர் மதிகளும் முக்காலங்களும் அறிவார் = அவர்கள் ஜீவர்களுடைய மனதையும், இறந்த, நிகழ், எதிர்காலங்களையும் அறிவார்கள்.

விபு ஆவார் = (இதனால்) அனைத்திலும் வியாபித்து இருப்பவர் ஆவார் அல்லது பிரபு ஆவார்,

தவம்மிகு குருவே = தவம் மிகுந்த குருநாதரே,

இவனுக்கு = இந்த ஞானிக்கு,

அவையில் ஓர் சற்றும் காணேனே = அம்மஹிமைகளில் ஒரு சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லையே.


பாடல் : 41

தடத்து நீர்நிலாத் திரியொளி யுபயமும் தழுவுமூர் தனைக்காக்கும்,

குடத்து நீர்விளக் கினி லொளி இரண்டுமோர் குடும்பமாத் திரம் காக்கும்,

அடுத்த மைந்தனே ஞானியும் ஈசனும் அறிவினால் பிரிவில்லை,

கெடுத்த மாயையின் குணங்களால் மேலொன்றும் கீழொன்றும் பிரிவாமே!


பொருள் :

தடத்து நீர் நிலாத்திரி ஒளி உபயமும் = ஊறுணி நீர், வாண மத்தாப்பு ஆகிய இரண்டும்,

தழுவும் ஊர்தனைக் காக்கும்

குடத்துநீர் விளக்கினில் ஒளி இரண்டும் = குடத்திலிருக்கும் நீர், விளக்கின் ஒளி ஆகிய இரண்டும், 

ஓர் குடும்பம் மாத்திரம் காக்கும் = ஒரு குடும்பத்தை மட்டும் காப்பாற்றும்,

அடுத்த மைந்தனே = ஸத்ஸங்கத்தை அண்டியிருக்கும் சீடனே,

ஞானியும் ஈசனும் அறிவினால் பிரிவில்லை = ஞானிக்கும் ஈச்வரனுக்கும் நான் பிரஹ்மமென்னும் ஞானத்தினால் பேதமில்லை,

கெடுத்த மாயையின் = (ஜீவர்களுக்கு தன் ஸ்வரூபம் விளங்கவொட்டாமல் மறைத்துக்) கெடுத்த மாயையின்,

குணங்களால் = ஸத்துவம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால்,

மேல் என்றும் = ஈச்வரன் மேல் என்றும்,

கீழ் என்றும் = ஞானி கீழ் என்றும்,

பிரிவாமே = வேறுபாடு உளதாம்.


பாடல் : 42

நரரின் மன்னனைச் சித்தரைப் போலவே நாரணன் முதலான,

சுரர்கள் மாயைவல் லவரணி மாதிகள் தொக்கமா தவம்மிக்கோர்,

தரணி மாநுடர்க் கவைகளில் லாமையால் தாழ்வுள ரானாலும்,

பிரம பாவனை யாலிவர் அவரெனும் பேதம்ஒன் றிலை பாராய்.


பொருள் :

நரரில் = மனிதர்களுக்குள்ளே, 

மன்னனைச் சித்தரைப் போலவே = (தீயவர்களை அடக்குதல், நல்லவர்களைக் காத்தலும் உடைய) அரசனையும், (சாபம், வரம் அருளும் சக்தி உடைய) சித்தரைப் போல,

நாரணன் முதலான சுரர்கள் = விஷ்ணு முதலான தேவர்கள்,

மாயை வல்லவர் = மாயை வித்திகள் செய்வதில் சமர்த்தர்,

அணிமாதிகள் தொக்க = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம், வஸித்துவம் என்னும் அஷ்ட சித்திகளும் கைவந்த,

மாதவம் மிக்கோர் = பெருந்தவம் மிகுந்தவர்கள்,

தரணி மாநுடர்க்கு = பூமியில் மனித உடலிலுள்ள ஞானிகளுக்கு,

அவைகள் இல்லாமையால் = அம்மாயா வல்லபங்களும் அவ்வஷ்ட சித்திகளும் இன்மையால்,

தாழ்வுளர் ஆனாலும் = தாழ்ச்சி உடையவர் ஆனாலும்,

பிரம பாவனையால் = யாம் பிரஹ்மம் எனும் ஞானத்தினால்,

இவர் அவர் எனும் பேதம் = ஞானிகள் தாழ்வுடையவர், ஈச்வராதிகள் மேலானவர் எனும் வேற்றுமை,

ஒன்றிலை = எதுவும் இல்லை.

பாராய் = இதனை சிந்தித்து புரிந்து கொள்வாயாக.


பாடல் : 43

முத்தி நல்கிய சற்குரு வேபல முனிகளுக் கணிமாதி,

சித்தி பூமியில் கண்டிருக் கவுமந்தச் செல்வமீ சனதென்றீர்,

புத்தி ஒத்திட உரைத்தருள் என்றிடில் புகழுமீ சனைநோக்கிப்,

பத்தி செய்திடும் தவத்தினால் யோகத்தால் பலித்ததென் றறிவாயே.


பொருள் :

முத்தி நல்கிய சற்குகுவே = (ஞானவுபதேசத்தின் வாயிலாக எனக்கு) முக்தியைக் கொடுத்தருளிய ஸற்குருநாதரே,

பல முனிகளுக்கு = பாதராயனுர் முதலான பல முனிவர்களுக்கு,

அணிமாதி சித்தி = அணிமா முதலான சித்திகள்,

பூமியில் கண்டிருக்கவும் = (உள்ளதாக) பூமியில் காணப்படவும்,

அந்தச் செல்வம் ஈசனது என்றீர் = அந்த சித்திகள் ஈச்வரனுடைய செல்வம் என்றீர்கள்,

புத்தி ஒத்திட = (அந்த சித்திகள் முனிவர்களுக்கு எப்படி வந்ததென) அறிவு ஏற்கும்படி,

உரைத்தருள் என்றிடில் = கூற வேண்டுமென கேட்பாயாகில்,

புகழும் ஈசனை நோக்கி = அனைவராலும் போற்றப்படும் ஈச்வரனை நோக்கி,

செய்திடும் பத்தி = செய்யப்படும் (மனம், மொழி, மெய்களால் ஒருமுகப்பட்டு செய்யும்) பக்தியாலும்,

தவத்தினால் = விரதம் முதலான தவங்களாலும்,

யோகத்தால் = யமாதி அஷ்டாங்க யோகத்தாலும்,

பலித்தது என்று அறிவாயே = அணிமாதி சித்திகள் முனிவர்களுக்கும் கிடைத்தன என்று அறிந்து கொள்வாயாக.


பாடல் : 44

சிவசொ ரூபமாம் தேசிக மூர்த்தியே சித்திமுத் தியிரண்டும்,

தவமு ளோரடை குவரெனில் அவர்கள்போல் சகலரும் அடைவாரே,

அவர்கள் பூருவம் சித்தியும் ஞானமு மடைந்ததும் கண்டோமே,

இவர்கள் ஞானிக ளென்றிடில் சித்திகள் இவர்க்கிலா வகையேதோ.


பொருள் :

சிவ சொரூபமாம் தேசிகமூர்த்தியே = ஆநந்தவுருவமாகிய குருவே,

சித்தி முத்தி இரண்டும் = அணிமாதி ஸித்தி, ஜீவன்முக்தி இரண்டையும்,

தவம் உளோர் அடைகுவர் எனில் = தவம் உடையவர்கள் அடைவார்கள் என்று (சாஸ்திரங்கள்) சொல்லில்,

அவர்கள்போல் = வியாஸர் முதலான முனிவர்கள் போல,

சகலரும் அடைவாரே = இக்காலத்துள்ள ஆசார்யர்களும் அடைய வேண்டுமே,,

அவர்கள் = பூர்வ ஆசார்யர்கள்,

பூருவம் சித்தியும் ஞானமும் அடைந்ததும் கண்டோமே = முன்னர் சித்தியும் முக்தியும் அடைந்திருந்ததைப் பார்த்திருக்கிறோமே,

இவர்கள் = இக்கால குருமார்களும்,

ஞானிகள் என்றிடில் = ஞானிகள் என்று சொன்னால்,

சித்திகள் இவர்க்கிலா வகையேதோ = சித்திகள் இவர்களுக்கு இல்லாத காரணம் யாது? (என்று அருள்வீராக).


பாடல் : 45

காமி யத்தவம் காமியம் ஒன்றையும் கருதிடாத் தவமென்றும்,

பூமி யில்தவம் இருவகை சித்தியும் போதமும் தரும்மைந்தா,

ஆமி வற்றிலொன் றியற்றினால் ஒன்றையே அடைகுவர் இதுதீர்வை,

யாமு ரைத்தவவ் விரண்டையும் இயற்றினா ரன்றுள பெரியோரே.


பொருள் :

காமியத்தவம் (என்றும்) = ஒன்றை விரும்பிச் செய்யும் (ஸகாம) தவம் எனவும்,

காமியம் ஒன்றையும் கருதிடாத் தவம் என்றும் = ஒன்றையும் விரும்பாத (நிஷ்காம) தவம் எனவும்,

பூமியில் தவம் இருவகை = இப்பூமியில் (மனிதர்கள் செய்யும்) தவம் இருவகை ஆகும்,

சித்தியும் போதமும் தரும் மைந்தா = ( ஸகாம தவம் அணிமாதி) ஸித்தியும் (நிஷ்காம தவம்) தத்துவஞானத்தையும் கொடுக்கும் மைந்தனே,

ஆம் இவற்றில் ஒன்று இயற்றினால் = சித்தி, ஞானம் இவைகளுக்கு ஸாதனங்களாகும் இவ்விருவகைத் தவங்களுள் ஒரு தவத்தைச் செய்தால்,

ஒன்றையே அடைகுவர் = ஒரு பயனையே அடைவர்,

இது தீர்வை = இது நியமம்,

யாம் உரைத்த = நாம் கூறிய,

அவ்விரண்டையும் இயற்றினார் = அவ்விரண்டு தவங்களையும் செய்தனர்,

அன்றுள பெரியோரே = முற்காலத்தில் வாழ்ந்த வியாஸர் முதலிய பெரியார்கள்.


பாடல் : 46

அனக மைந்தனே முத்திஞா னத்தையே அடைந்தன ரல்லாமல்,

ஜனகன் மாபலி பகீரதன் முதலினோர் சித்திகள் படித்தாரோ,

இனிய சித்தியே விரும்பினார் சிலர்சிலர் இரண்டையும் முயன்றாரம்,

முனிவர் சித்திகள் விநோதமாத் திரம்தரும் முத்தியைத் தாராவே.


பொருள் :

அனக மைந்தனே = பாவமற்ற சீடனே,

ஜனகன் மாபலி பகீரதன் முதலினோர் = ஜனக மஹாராஜா, மாபலி சக்ரவர்த்தி, பகீரதன் முதலானவர்கள்,

முத்தி ஞானத்தையே அடைந்தனர் அல்லாமல் = முக்தியைத் தரும் தத்துவஞானத்தையே நேரே அடைந்தார்கள் அல்லாமல்,

சித்திகள் படித்தாரோ = சித்திகள் பழகவில்லை,

சிலர் இனிய சித்தியே விரும்பினார் =  சில யோகிகள் தனக்கு இனிமையான சில சித்திகளையே விரும்பினார்கள்,

சிலர் இரண்டையும் முயன்றார் = சில முனிவர்கள் ஞானம், சித்தி இரண்டையும் முயன்றார்கள்,

அம்முனிவர் சித்திகள் = அந்த யோகிகள் அடைந்துள்ள சித்திகள்,

விநோத மாத்திரம் தரும் = விளையாட்டை மாத்திரம் தரும்.

முத்தியைத் தாராவே = அவை துக்க நிவிர்த்தி, சுக பிராப்தி வடிவ மோக்ஷத்தைத் தராது.


பாடல் : 47

யோக ஞானமே முத்தியைத் தருமெனின் ஒழிந்தசித் திகள்வேண்டி,

மோக மாயுடல் வருந்தினார் சிலசில முத்தர்கள் ஏனென்றால்,

போக மாய்வரும் பிராரத்த கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும், ஆகை யாலந்தச் சித்திகள் பிராரத்தமாகும்என் றறிவாயே.


பொருள்:

யோக ஞானமே = ஜீவாத்ம பரமாத்ம ஐக்ய ஞானமே,

முத்தியைத் தரும் எனின் = முக்தியைத் தரவல்லவை என்று சொன்னால்

ஒழிந்த சித்திகள் வேண்டி = முக்தியைத் தரவல்லாத சித்திகள் வேண்டி,

மோகமாய் சிலசில முத்தர்கள் = அவை கிடைக்கும் வழியில் பரவசமாய் சில சில முக்தர்கள்,

உடல் வருந்தினார் ஏன் என்றால் = உடல் வருத்தி தவம் செய்தது ஏன் என்று கேட்டால்,

போகமாய் வரும் பிராரத்த கர்மங்கள் = அனுபவிக்க வேண்டியனவாக வரும் பிராரப்த வினைகள்,

புசித்தன்றோ நசித்தேகும் = அதுபவித்துத்தானல்லவா அழிந்து போகும், 

ஆகையால்  அந்தச் சித்திகள் = ஆகவே சில ஜீவன்முக்தர்கள் அந்த சித்திகள் அடைவதற்குச் செய்யும் ஸாதனைகள்,

பிராரத்தம் ஆகும் என்று அறிவாயே = பிராரப்தவினையின் விளைவாகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.


பாடல் : 48

இலக்க மாயிரம் சுருதியால் ஊகத்தால் என்மன மசையாமல்,

பெலக்கவேண்டும்என் றருள்குரு வேயகப்பிராந்திபோய்த் தெளிவானேன்,

துலக்க மானகண்ணாடியை அடிக்கடி துலக்கினால் பழுதன்றே,

அலக்கண் மாற்றிய தேவரீர் எனக்குரை அமிர்தங்கள் தெவிட்டாவே.


பொருள் :

இலக்கம் ஆயிரம் சுருதியால் = அநேகம் சுருதிப் பிரமாணங்களாலும்,

ஊகத்தால் = (அநேகம்) யுக்திகளாலும்,

என் மனம் அசையாமல் = என் மனமானது ஸந்தேஹத்தினால் ஞானத்திலிருந்து நழுவாமல்,

பெலக்க வேண்டும் என்று = திடமாய் அதில் நிறக வேண்டும் என்று,

அருள் குருவே = (நான் வினவும் வினாக்களுக்கெல்லாம் விடையருளும் குருநாதரே,

அகப்பிராந்தி போய்த் தெளிவானேன் = மனதில் முன்னர் இருந்த ஐயங்கள் தெளிந்தேன்,

துலக்கமான கண்ணாடியை = பிரகாசமான கண்ணாடியை,

அடிக்கடி துலக்கினால் பழுதன்றே = மேலும் மேலும் தூய்மைப்படுத்தினால் தவறொன்றும் இல்லையே,

அலக்கண் மாற்றிய தேவரீர் = எனது துன்பத்தைப் போக்கிய குருவே,

எனக்கு உரை அமிர்தங்கள் = அடியேனுக்கு தாங்கள் அருளிய அமிர்தமான உபதேசங்கள்,

தெவிட்டாவே = தெவிட்டவில்லை. (ஆதலால் இன்னும் கேட்க விரும்புகிறேன், அருள்புரிய வேண்டும்.)


பாடல் : 49

கைத வங்களைச் சாத்திரம் சொல்லுமோ கருணையால் எனைஆளும்,

ஐய னேகுரு வேயெவ ராகிலும் அநுபவித் தாலன்றிச்,

செய்த கர்மங்கள் விடாவென்ற வசனமும் சென்மசஞ் சிதம்வேவத்,

துய்ய ஞானத்தீச் சுடுமென்ற வசனமும் துணிவதெப் படிநானே.


பொருள் :

கருணையால் எனை ஆளும் ஐயனே குருவே = அன்பினால் எனையாளும் தந்தையே, குருநாதரே,

கைதவங்களைச் சாத்திரம் சொல்லுமோ = பொய்யான வாக்கியங்களை சாஸ்திரங்கள் கூறுமா?,

எவர் ஆகிலும் செய்த கர்மங்கள் = யாராக இருந்தாலும் (தாங்கள்) செய்த வினையின் பயன்கள்,

அநுபவித்தால் அன்றி = அனுபவித்தால் அல்லாமல்,

விடாஎன்ற வசனமும் = அழியாது என்ற வாக்கியமும்,

சென்ம சஞ்சிதம் வேவ = (பல) பிறவிகளுக்குக் காரணமான ஸஞ்சித கர்மங்கள் (எஞ்சுவினை) வெந்து நீராகும்படி,

துய்ய ஞானத்தீ = தூய்மையான ஞானமாகிய நெருப்பு,

சுடும் என்ற வசனமும் = எரிக்கும் என்ற வாக்கியமும்,

(ஆகிய இவ்விரண்டில்)

நான் துணிவது எப்படி ? = (இதுதான் உண்மையென்று) எவ்வாறு நான் நிச்சயிப்பது?


பாடல் : 50

சீவ பேதங்கள் அளவிலை மைந்தனே செய்கையும் அளவில்லை,

ஆவ வாமவ ரவரதி காரங்கள் அறிந்துபக் குவம்நோக்கிப்,

பூவ லர்ந்துபின் பலங்கள்காட் டுவனபோல் பூருவம் சித்தாந்தம்,

காவல் வேதங்கள் இரண்டையும் வசனிக்கும் காண்டம்மூ வகையாலே.


பொருள் :

மைந்தனே = மகனே,

சீவ பேதங்கள் அளவிலை = (சீவத்துவ உபாதிகளான அவித்யை, மனம் அளவின்மையினால்) ஜீவர் பேதங்களுக்கு அளவில்லை,

செய்கையும் அளவில்லை = (செயல்களுக்குக் காரணங்களான அவரவர் மனங்களிலுள்ள சுபம், அசுபம், சுபாசுபம், என்னும் வாஸனைகள் அளவின்மையினால் அவரவர்கள்) செய்யும் செயல்களும் அளவில்லாதவை,

ஆவ ஆம் அவரவர் அதிகாரங்கள் அறிந்து =  அவைகளால் ஆவனவாகும் அவரவர் தகுதிகள் அறிந்து,

பக்குவம் நோக்கி = மனப்பக்குவம் பார்த்து,

காவல் வேதங்கள் = (கருணையினால் யாவரையும் காக்கும்) வேதங்கள்,

காண்டம் மூவகையாலே = கர்மம், உபாஸனை, ஞானம் என மூன்று கூறுகளுள்ள காண்டங்களாலே,

பூருவம் சித்தாந்தம் இரண்டையும் வசனிக்கும் = பூர்வபக்ஷம் ஸித்தாந்தம் என்னும் இரண்டையும் வசனிக்கும்.

(இதற்கு உதாரணம்)

பூ அலர்ந்து பின் பலங்கள் காட்டுவன போல் = முன்னே பூக்களை மலரச் செய்து பின்னர் பழங்களைக் கொடுக்கும் மரங்களைப் போல.


பாடல் : 51

ஆன பாவிக ளடைவன நரகங்க ளவசிய மானாலும்,

தான மந்திர விரதஓ மங்களால் தவிரு மென் பதுபொய்யோ,

ஈன மாம்பல சன்மசஞ் சிதவினை எத்தனை யானாலும், ஞான மாங்கனல் சுடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே.


பொருள் :

ஆன பாவிகள் = சுபாதபங்களுக்குள்ள அசுபத்தைச் செய்பவரான பாவிகள்,

அடைவன நரகங்கள் அவசியம் ஆனாலும் = அடைவனவான நரகங்கள் நிச்சயம் உள்ளன ஆனாலும்,

தான மந்திர விரத ஓமங்களால் = தானம், மந்திரம், விரதம், வேள்வி எனும் பிராயச்சித்தங்களால்,

தவிரும் என்பது பொய்யோ = பாவம் நீங்குவதால் அவை வராது நீங்கி விடுமென்று சாஸ்திரங்கள் கூறுவது உண்மையில்லையா? (மெய்யே),

ஈனமாம் பல சன்ம சஞ்சிதவினை = இழிவான பல பிறவிகளுக்குக் காரணமாகும் ஸஞ்சித கர்மங்கள்,

எத்தனை ஆனாலும் = எவ்வளவு இருந்தாலும்,

ஞானம் ஆம் கனல் = ஞானமாகிய நெருப்பானது,

சுடும் என்ற மறைமொழி = அவற்றை எரித்துவிடும் என்று வேதவாக்கியங்களை,

நம்பினால் வீடுண்டே = (உண்மையென்று) நம்பினால் (நம்பி ஞான ஸாதனங்களை மேற்கொண்டால்) முக்தி உண்டாவது உறுதி.


பாடல் : 52

என்ம னம்திருக் கோயிலாத் தினம்குடி இருந்தருள் குருமூர்த்தி,

சென்ம சஞ்சித வினைகள்வேர் அறுத்திடும் தேவரீர் மெய்ஞ்ஞானம்,

தன்ம யம்தரு மகிமையை விபுதராம் சமர்த்தரும் அறியாமல், கன்ம மாம்குழி யினில்விழுந் தழிகின்ற காரணம் உரையீரே.


பொருள் :

என் மனம் திருக்கோயிலா = என் இதயத்தையே திருக்கோயிலாகக் கொண்டு,

தினம்குடி இருந்து அருள் குருமூர்த்தி = குடியிருந்து நாள் தோறும் அருளுகின்ற குருமூர்த்தியே,

தேவரீர் மெய்ஞ்ஞானம் = தேவரீர் அருளிய மெய்ஞானமானது,

சென்ம சஞ்சித வினைகள் = பிறவிக்குக் காரணமான ஸஞ்சித கர்மங்களின்,

வேர் அறுத்திடும் = மூலமாகிய அஞ்ஞானத்தினை அழித்திடும்,

தன்மயம் தரும் = தத் எனும் ப்ரஹ்மயமாகத் தானிருக்கும் தன்மையைக் கொடுக்கும்,

மகிமையை = இந்த மஹத்துவத்தை,

விபுதராம் சமர்த்தரும் அறியாமல் = மிகக் கற்றவர்களாய் குணதோஷங்களை பகுத்தறிய வல்லவரும் அறியாமல், (அல்லது அறிந்தும் பின்பற்றாமல்),

கன்மமாம் குழியினில் = கர்மமாம் படுகுழியில்,

விழுந்து அழிகின்ற = விழுந்து துன்பப்படுகின்ற,

காரணம் உரையீரே = காரணத்தை அருள்வீராக!


பாடல் : 53

அழிவி லாததற் பதந்தனை மைந்தனே அகமுகத் தவர்சேர்வர்,

வழிந டப்பவர் பராமுக மாயினால் மலர்ந்தகண் ணிருந்தாலும்,

குழியில் வீழ்வர்கா ணப்படி வெளிமுகம் கொண்டுகா மிகளானோர்,

பழித ரும்பிற விக்கடல் அழுந்துவர் பரகதி அடையாரே.


பொருள் :

மைந்தனே = சீடனே,

அழிவிலாத தற் பதந்தனை = அழிவில்லாத ப்ரஹ்ம நிலையை,

அக முகத்தவர் சேர்வர் = உள்முகச் சிந்தனையுடையவர்கள் அடைவார்கள்,

வழிநடப்பவர் பராமுகம் ஆயினால் = புறப்பாதையில் செல்பவன் (பாதையை விடுத்து) வேறு எங்கோ பார்த்துக் சென்றால், 

மலர்ந்த கண்ணிருந்தாலும் = கண்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும்,

குழியில் வீழ்வர் காண் அப்படி = (எப்படிக்) குழியில் வீழ்வார்களோ அப்படியே,

வெளிமுகம் கொண்டு = புற விஷயங்களையே பார்த்துக் கொண்டு.

காமிகளானோர் = ஆசை வசப்பட்டவர்களாக உள்ளவர்கள்,

பழி தரும் பிறவிக்கடல் அழுந்துவர் = துன்பத்தைத் தரும் பிறவியாகிய கடலில் மூழ்குவர்,

பரகதி அடையாரே = முக்தியடைய மாட்டார்கள்.


பாடல் : 54

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார் செய்விக்கும் செயல்அன்றோ,

பிறந்த சீவர்கள் என்செய்வர் அவர்கண்மேல் பிழைசொலும் வழிஏதோ,

துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில் சுருதிநூற் பொருள்மார்க்கம்,

மறந்த மூடர்கள் வசனிக்கும் பிராந்திகாண் மைந்தனே அதுகேளாய்.


பொருள் :

சிறந்த நன்மையும் = அனைவருக்கும் நன்மை பயக்கும் நற்செயல்களும், 

தீமையும் = தீய செயல்களும்,

ஈசனார் செய்விக்கும் செயலன்றோ = அனைத்தையும் ஆளும் ஸர்வேச்வரன் நடத்தும் செயல் அல்லவா?

பிறந்த சீவர்கள் என்செய்வர் = அவர் ஆணைப்படி பிறக்கும் ஜீவர்கள் என்னதான் முடியும்?

அவர்கள் மேல் = (சுதந்திரமற்றவர்களான) அந்த ஜீவர்கள் மேல்,

பிழைசொலும் வழியேதோ = குற்றம் கூறும் நெறியாது காரணமோ?,

துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில் = அனைத்தையும் நீத்திருக்கும் அற்புத குருமூர்த்தியே, என்று கேட்பாயாகில்,

சுருதிநூற் பொருள்மார்க்கம் = வேத நூல்களின் பொருள் நெறியை,

மறந்த மூடர்கள் = பின்பற்றாத அறிவிலிகள்,

வசனிக்கும் பிராந்தி காண் = கூறும் மயக்க வார்த்தைகள் அவையென அறிவாயாக,

மைந்தனே அது கேளாய் = புதல்வனே, அதற்கான விடையைக் கேட்பாயாக.


பாடல் : 55

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே,

சகந்த னிற்பொது ஈசனார் சிருட்டிகள் சராசரப் பொருளெல்லாம்,

அகந்தை யாமபி மானங்கள் கோபங்க ளாசைகள் இவையெல்லாம்,

இகழ்ந்த சீவனார் சிருட்டிக ளாகும் காண் ஈசனார் செயலன்றே.


பொருள்:

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் = சுத்த ப்ரஹ்மமாக விளங்கும் ஈச்வரனது படைப்பும்,

சீவனார் சிருட்டியும் = ஜீவனின் படைப்பும்,

வெவ்வேறே = வேறுவேறாகும்,

சகந்தனிற்பொது = உலகிலுள்ள அனைவருக்கும் பொதுவான,

சராசரப் பொருள் எல்லாம் = சர அசரப் பொருள்கள் அனைத்தும்

ஈசனார் சிருட்டிகள் = ஈச்வரனது படைப்பு ஆகும்.

அகந்தையாம் அபிமானங்கள் = உடலில் நானெனும் அஹங்காரமும், அதனால் புத்ராதிகளிடம் எனது எனும் அபிமானங்களும்

கோபங்கள் ஆசைகள் இவை எல்லாம் = கோபம், ஆசை போன்ற மனக் கற்பனைகள் அனைத்தும்,

இகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண்  = பெரியோரால் இகழப்படும் ஜீவனின் படைப்புகள் ஆகும் என்று அறிவாயாக,

ஈசனார் செயல் அன்றே = (அஹங்காராதிகள்) ஈச்வரனின் படைப்புகள் அல்ல.


பாடல் : 56

மூவ ராம்பரன் சிருட்டிகள் உயிர்க்கெலாம் முத்திசா தனமாகும்,

சீவ னார்செயும் சிருட்டிகள் தங்களைச் செனிப்பிக்கும் பிணி யாகும்,

தாவ ராதிகள் நசித்திடில் ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம்,

கோப மாதிகள் நசித்திடில் பந்தமாம் கொடும்பிற விகள்போமே.


பொருள் : 

மூவர் ஆம் பரன் சிருட்டிகள் = மும்மூர்த்தி ௹பமான ஈச்வரன் படைப்புகள்,

உயிர்க்கெலாம் முத்தி சாதனம் ஆகும் = மனிதர்க்களுக்கெல்லாம் மோக்ஷமடைவதற்கு ஸாதனங்கள் ஆகும்,

சீவனார் செயும் சிருட்டிகள் = ஜீவர்கள் மனக் கற்பனையினால் செய்யும் படைப்புகள்,

தங்களைச் செனிப்பிக்கும் பிணி ஆகும் = (தேவ, மனித, விலங்குப் பிறவிகளில்) அவர்களைப் பிறப்பிக்கும் பந்த ஹேதுக்கள் ஆகும்,,

தாவராதிகள் நசித்திடில் = (ஈச்வரனின் படைப்புக்களான) செடிகொடிகள் முதலானவை அழியும் போது,

ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம் = கீவர்கள் யாருக்கும் பிறவியானது அழியாதாம்,

கோபம் ஆதிகள் நசித்திடில் = (ஜீவக் கற்பனைகளான, கோபம் முதலானவை அழிந்தால்,

பந்தம்ஆம் கொடும்பிறவிகள் போமே = பந்தமான கொடிய பிறவிகள் அழிந்து போகும்.


பாடல் ; 57

ஈசர் காரியம் பிரளயத்து ஒழியவும் எவர்பவ மொழிந்தார்கள், தேச காலதே காதிகள் இருக்கவும் சீவகா ரியமோகம்,

நாச மாக்கிய விவேகத்தின் உயிரொடு ஞானமுத் தர்களானார்,

பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே.


பொருள் : 

ஈசர் காரியம் பிரளயத்து ஒழியவும் = (சராசர வரவமான) ஈச்வரனின் படைப்புகள் பிரயை காலத்தில் அழிந்து போகவும்,

எவர் பவம் ஒழிந்தார்கள் = யார் பிறப்பு லிருந்து விடுபட்டார்கள்.(ஒரு வரும் இல்லை), 

தேச கால தேகாதிகள் இருக்கவும் = தேசம், காலம், உடல் முதலான ஈச்வரரின் படைப்புகள் இருக்கும் போதும்,

சீவ காரிய மோகம் = (ஈச்வர படைப்புக்களான குரு சாஸ்த்ரங்களின் உதவியைக் கொண்டு) ஜீவனின் படைப்புகளாகிய மோகம் முதலானவைகளை,

நாசமாக்கிய விவேகத்தின் = அழியச் செய்த விவேகத்தினால், உயிரொடு = பிராணனோடும்,

ஞான முத்தர்கள் ஆனார் = ஞானமுடைய ஜீவன்முக்தார்கள் ஆனார்கள்,

பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் = (ஆகவே) மாசமாகிய மோஹங்கள் இவர்களின் செயல் இல்லாமல்,

பசுபதி செயலன்றே = ஈச்வரனின் காரியம் அல்ல.


பாடல் : 58

அச்சு வத்தமென் றொருமரம் அதிலிரண்டு அரும்பற வைகள்வாழும்,

நச்சு மங்கொரு பறவையம் மரக்கனி நன்றுநன்று எனத்தின்னும்,

மெச்சு மங்கொரு பறவைதின் னாதென வியங்கியப் பொருளாக,

வைச்சு மாமறை சீவனை ஈசனை வகுத்தவா றறிவாயே.


பொருள் :

அச்சுவத்தம் என்று ஒரு மரம் = அரசு என்று சொல்லப்படும் ஒரு மரம் உண்டு.

அதில் இரண்டு அரும் பறவைகள் வாழும் = அம்மரத்தில் இரண்டு அரிய பறவைகள் வாழ்ந்து வரும்,

அங்கு = அம்மரத்திலுள்ள இரு பறவைகளுள்,

நச்சும் ஒரு பறவை = போகங்களை விரும்புகின்ற ஒரு பறவை,

அம்மரக்கனி = அந்த மரத்திலுள்ள பழங்களை,

நன்று நன்று எனத் தின்னும் = இது நல்லது இது நல்லது என்று உண்ணும்,

அங்கு = அம்மரத்திலுள்ள,

மெச்சும் ஒரு பறவை = அறிஞர்களால் கொண்டாடப்படுகின்ற மற்றொரு பறவை,

தின்னாது என = அம்மரத்தின் பழங்களை உண்ணாது என்று,

வியங்கியப் பொருளாக வைச்சு = குறிப்புப் பொருளாக வைத்து,

மாமறை = மஹத்துவமுள்ள (முண்டக) உபநிஷத்தானது,

சீவனை ஈசனை = ஜீவனையும் ஈச்வரனையும்,

வகுத்தவாறு அறிவாயே = பிரித்துக் கூறிய முறையை நீ அறிவாயாக.


பாடல் : 59

இந்தச் சீவனால் வருமறு பகையெலாம் இவன்செயல் என்னாமல்,

அந்தத் தேவனால் வருமென்ற மூடர்கள் அதோகதி அடையார்கள்,

இந்தச் சீவனால் வருமறு பகையெலாம் இவன்செயல் அல்லாமல்,

அந்தத் தேவனால் அன்றெனும் விவேகிகள் அமலவீட டைவாரே.


பொருள் :

இந்தச் சீவனால் = (இது என்று இங்கு அறியப்படுகின்ற) இந்த ஜீவனின் அறியாமையால்,

வரும் அறு பகை எலாம் = வருகின்ற காமம் குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் (ஆசை, கோபம், பொருட்பற்று, மயக்கம், அகந்தை, பொறாமை) ஆகிய ஆறுவகை பகைமைகள் அனைத்தும்,

இவன்செயல் என்னாமல் = தன்னுடைய (கற்பனையினால் விளையும்) செயல்கள் என்று அறியாமல்,

அந்தத் தேவனால் = (அது என்று அறியப்படுகின்ற, அந்த ஈச்வரனால்,

 வரும் என்ற மூடர்கள் = வருகின்றன என்று எண்ணுகின்ற அறிவிலிகள்,

அதோகதி அடையார்கள் = கீழ்மையை அடைவார்கள்,

இந்தச் சீவனால் வரும் அறு பகை எலாம் = இந்த ஜீவனின் அறியாமையால் உண்டாகின்ற ஆறு விதமான பகை குணங்கள் அனைத்தும்,

இவன்செயல் அல்லாமல் = இவனது (அறியாமையின் விளைவுகளே) அல்லாமல்,

அந்தத் தேவனால் அன்று = அந்த ஈசனால் உண்டு பண்ணப்படுபவை இல்லை,

எனும் விவேகிகள் = என்று அறிந்து (தன் முயற்சியினால் அவற்றை நீக்க முயலும்) மெய்யறிவுடையவர்கள் 

அமலவீடு அடைவாரே = நித்ய சுத்தமான மோக்ஷ பதத்தை அடைவார்கள்.


பாடல் : 60

நலம்மெய் ஐயனே எல்லவர்க் கும்தெய்வ நாயகன் பொதுவானால்,

சிலரை வாழ்வித்தல் சிலரொடு கோபித்தல் செய்வதேன் என்றாயேல்,

குலவு மக்களைத் தந்தைபோல் சிட்டரைக் குளிர்ந்துதுட் டரைக்காய்வன்,

கலைகள் நல்வழி வரச்செயும் தண்டமும் கருணையென்று அறிவாயே.


பொருள் ;

நலம் மெய் ஐயனே = ஆநந்தமே திருமேனியான குருவே,

எல்லவர்க்கும் = நல்லவர், கெட்டவர் அனைவருக்கும்,

தெய்வ நாயகன் = எல்லா தேவதைகளுக்கும் நாயகனான ஈச்வரன்,

பொதுவானால் = ஸமமானவர் என்றால்,

சிலரை வாழ்வித்தல் = நல்லவர்களை (அவர்களுக்குத் தேவையானவற்றை அருளி) வாழவைப்பதும்,

சிலரொடு கோபித்தல் = சில தீயவர்களை கோபித்துத் தண்டிப்பதும்,

செய்வது ஏன் என்றாயேல் = செய்வது ஏன் என்று கேட்பாயானால்,

குலவு மக்களை = தன் அன்புக்குரிய புதல்வர்களை,

தந்தை போல் = (குணம் கண்டு வாழ்த்துவதும், குற்றம் கண்டு கோபிப்பதும் செய்யும்) தந்தையைப் போல,

சிட்டரைக் குளிர்ந்து = (அறவழியில் நடக்கும்) அன்பர்களைக் மகிழுமாறு அருள்வதும்,

துட்டரைக் காய்வன் = (அதர்ம வழியில் நடக்கும்) தீக்குணம் உடையவரைத் தண்டிப்பதும் செய்வன்.,

கலைகள் நல்வழி = சாஸ்த்ரங்கள் கூறும் தர்மப்பாதைக்கு 

வரச்செயும் தண்டமும் = வரச் செய்யும் தண்டித்தலும்,

கருணை என்று அறிவாயே = (இறைவனின்) கருணையே (அன்றி வேறல்ல) என்று அறிவாயாக!