Nov 7, 2020

Kaivalya Navanitham 1(41-60)

 


கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம்



பாடல் : 41

தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும்,
ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா,
கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே.

பொருள்:

தூடண தமத்தில் வந்த = நிந்திக்கத்தக்க தாமஸ குண(ப்ரதான) மாயையிலிருந்து உண்டான,

தோற்றமாம் சத்தி செய்யும் = விக்ஷேபம் ஆகிய சக்தி உண்டாக்கும்,

ஏடணை விகாரம் சொன்னீர் = இச்சா ரூபமான (இப்பிரபஞ்சத்தின்) தோற்றத்தை அருளிச் செய்தீர்,

இரண்டு சத்திகள் என் றீரே = (முன்னர் தாமஸ குணம்) இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும் என்று சொன்னீர் ஆதலால், 
மூடலாம் சத்தி செய்யும் மோகமும் = ஆவரணம் எனும் சக்தி செய்யும் மயக்கத்தையும்,
கேடற = என் துன்பம் விலகுமாறு,
ஐயா குருவே = என்‌ தந்தையாகிய குருவே, 
என்ன = (சொல்லும்) என்று சீடன் கேட்க,

கிருபையோடு அருள் செய்வாரே = ஸற்குருவானவர் கருணையோடு அருளிச்செய்தார்.


பாடல் 42

தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யென்னும், ஊனிடை உயிர்கள் உள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம்,

வானிலம் திசைகள் மூடு(ம்) மழைநிசி இருள்போல் மூடும்.


பொருள்:

தனக்குத் தான் நிகர் ஆம் ஈசன் தனையும் = தனக்குத்தான் வேறொரு நிகரில்லாத ஈச்வரனையும்,

தங்களைத் தாம் கண்ட ஞானிகள் தமையும் = தங்களது யதார்த்த சொரூபமான பிரம்மத்தை தாம் என்று அறிந்து கொண்ட ஞானிகளையும்,
அன்றி = தவிர,

நாஸ்தி = (பிரஹ்மம் என்பது) இல்லை,

ந பாதி = விளங்கவில்லை,

என்னும் = என்று நினைக்கும்,

ஊனிடை உயிர்கள் = உடலின்கண் உள்ள (மற்ற) ஜீவர்களை, உள்ளத்து உணர்விழி = உள்ளத்தின் அறிவுக்கண்ணானது,

குருடாம் வண்ணம் = குருடு ஆகும்படி,

வான் நிலம் திசைகள் மூடும் = வானம், பூமி, திசைகளைப் புலப்படாதபடி மறைத்து நிற்கும்,

மழை நிசி இருள்போல் = கார்காலத்து இரவின் இருள் போல

மூடும் = மறைக்கும். (அதுவே ஆவரண சக்தி செய்யும் மோஹமாம்.)


பாடல் : 43

பூன்றமாம் பிரமத் துக்கும் புறத்துள விகாரங் கட்கும், ஆன்றகூ டத்த னுக்கும் அகத்துள விகாரங் கட்கும், தோன்றிய பேதம் சற்றும் தோன்றாமல் மறைத்து மூடும், ஊன்றிய பவவி யாதி உண்டாக்கும் உபாதி ஈதே.


பொருள்:

பூன்றமாம் பிரமத்துக்கும் = பூர்ணமாகிய பிரஹ்மத்திற்கும், புறத்துள விகாரங்கட்கும் = புறத்திலே (இது என்னும் எண்ணத்திற்கு விஷயமாக) உள்ள ஆகாயம் முதலான பிரபஞ்சத்திற்கும்,

ஆன்ற கூடத்தனுக்கும் = அறிவுருவான கூடஸ்தனுக்கும், அகத்துள விகாரங்கட்கும் = உள்ளே (நான் என்னும் எண்ணத்திற்கு விஷயமாக உள்ள) அஹங்காரம் முதலானவைகளுக்கும்,
தோன்றிய பேதம் = (இயற்கையாகத்) தோன்றும் வேறுபாட்டினை,

சற்றும் = சிறிதும்,

தோன்றாமல் மறைத்து = அறிவுக்கு விளங்காத வண்ணம் அதைக் குருடாக்கி,

மூடும் = (அவ்வேறுபாடுகளை ஆவரண சக்தி) மறைக்கும்.

ஊன்றிய பவ வியாதி = (கடத்தற்கு அரியதாய்) வலிமை பெற்றுள்ள பிறவியாகிய நோயை,
உண்டாக்கும் உபாதி ஈதே = உருவாக்கும் உபாதி இவ்வாவரண சக்தியே ஆகும் (வேறொன்றன்று).

பாடல் : 44

ஆதாரம் மறைந்து போனால் ஆரோபம் எங்கே தோன்றும், ஆதாரம் மறையா தாகில் ஆரோபம் இலையே என்றால், ஆதாரம் சமம்வி சேடம் ஆமென இரண்டு கூறாம்,
ஆதாரம் சமமாம் எங்கும் ஆரோபம் விசேடம் ஆமே.

பொருள்:

ஆதாரம் மறைந்து போனால் = (அடர்ந்த இருளில் கயிறு போல) ஆதாரமான ப்ரஹ்மம் தோன்றாமல் மறைந்து போனால்,

ஆரோபம் எங்கே தோன்றும் = (கற்பிதமான பாம்பு போல) கற்பிதமான உலகம் எங்கே தோன்றும்?,
ஆதாரம் மறையா தாகில் = (நண்பகல் வெயிலில் கயிறு போல) ஆதாரமான‌ ப்ரஹ்மமானது மறையாமல் விளங்குமானால், ஆரோபம் இலையே என்றால் = கற்பனையான உலகம் தோன்றாது என்று வினவினால்,
ஆதாரம் சமம் விசேடம் ஆமென இரண்டு கூறாம் = ஆதாரமானது சாமான்யம் என்றும் விசேஷம் என்றும் இரண்டு கூறு உடையது ஆகும்,
ஆதாரம் சமமாம் எங்கும் = (அதிக காலத்திலும் அதிக தேசத்திலும்) ஒரே மாதிரியாக சமமாகப் பரவி இருப்பது சாமான்ய மாகும்,
ஆரோபம் விசேடம் ஆமே = (குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில்) தனிப்பட்டு விளங்குவது விசேஷமாகும்.

பாடல் : 45

சகமதில் இதுஎன் சுட்டாம் சமானந்தான் மறைந்தி டாது, மிகஇது கயிறாம் என்னும் விசேடந்தான் மறைந்து போகும், அகம்எனும் சமானம் தன்னை அஞ்ஞானம் மறைத்தி டாது, பகர்விசே டமதாம் சீவன் பரமெனும் அதனை மூடும்.


பொருள்:

சகமதில் = உலகினில்,
இதுஎன் சுட்டாம் = (மங்கிய இருளில் எதிரே இருக்கும் கயிறில் அறியாமல் இது பாம்பு எனும்போது) இது என்று சுட்டிக் காட்டப்படுவதான,
சமானந்தான் மறைந்தி டாது = சாதாரணமாக (ஏதோ ஒன்று இருப்பதாகத்) தெரிதல் மறைந்துவிடாது.
இது கயிறு ஆம் என்னும் = இது கயிறு ஆகும் என்று காணப்படும்,
விசேடந்தான் = சிறப்பு அம்சம் தான்,

மிக = பெரும்பாலும்,

மறைந்து போகும் = தெரியாமல் போகிறது.
பகர் விசேடமது ஆம் சீவன் = கற்பித விசேஷமாகச் சொல்லும் ஜீவனுக்கு,
அகம் எனும் சமானம் தன்னை = நான் (இருக்கிறேன்) என்னும் சாதாரணமான அறிவை,
அஞ்ஞானம் மறைத்திடாது = ஆவரண சக்தி மறைத்து விடாது.

பரமெனும் அதனை மூடும் = (உணர்வொளி நிறைவாய் நிற்கும்) பிரஹ்மம் (ப்ரஹ்மமாக இருக்கிறேன்) எனும் யதார்த்த வடிவத்தையே மறைக்கும்.


பாடல் : 46

கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம், சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ, ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ, மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய்.


பொருள் :

பஞ்சகோசம் சீவனும் சகத்தும் ஆகி = அந்நமயாதி கோசங்களும், (அவற்றில் அபிமானம் கொண்ட) ஜீவனும், ஆகாசாதி உலகமுமாக,

செனித்த விட்சேபம் அன்றோ = தோன்றிய விக்ஷேப சக்தி அல்லவா,

கேவல நிலை தோன்றாமல் கெடுத்தது = பிரஹ்மநிலையை அறியமுடியாமல் மறைத்துக் கெடுத்தது,
(இவ்வாறு விக்ஷேபசக்தியே கொடியதாக இருக்க)
ஆவரணம் தானே = ஆவரண சக்திதானே,

பாழ் (என்றும்) = (உயிர்களுக்கு உள்ளத்து உணர்விழி குருடாம் வண்ணம் - பாடல் 49) பாழாக்கிற்று என்றும்,

அனர்த்தம் என்றும் = அனர்த்தம் (ஊன்றிய பவ வியாதி உண்டாக்கும் உபாதி ஈதே - பாடல் 50) என்றும்,

உரைத்தது ஏதோ = அருளியது யாது காரணமோ,

மேவரும் குருவே என்று = கிடைத்தற்கரிய குருவே என்று,

வினாவிடின் = கேட்பாயாகில்,

மகனே கேளாய் = மைந்தா, அதற்கு பதில் சொல்லுதும் கேட்பாயாக!


பாடல் : 46
தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும், ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ, ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,
மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.

பொருள் :

தோற்றம் ஆம் சத்தி தானும் = விக்ஷேபரூபமான சக்தியும்,

துன்பம் ஆம் பவம் ஆனாலும் = துன்பமயமான பிறவிக்கு காரணமாக இருப்பினும்,

ஆற்றலால் முத்தி சேர்வார்க்கு = (ஸத்ஸங்க) வலிமையால் முக்தி அடைய விரும்புகின்றவர்களுக்கு,

அனுகூலம் ஆகும் காண் நீ = (குரு, சாஸ்திராதி ரூபமாக) சகாயமாகும் என நீ அறிவாயாக,

ஊற்றம் ஆம் பகற்கா லம் போல் = (நல்லவர், தீயவர் அனைவருக்கும் சோம்பல் முதலானவைகளைப் போக்கி) எல்லா முயற்சிகளையும் செய்வதற்கு காரணமான பகல் காலத்தைப் போல,

உபகாரம் நிசியால் உண்டோ = உதவியானது இரவுப் பொழுதால் உண்டோ?,

மாற்றம் என் உரைப்பேன் = உன் வினாவிற்கு இதுபோன்ற உதாரணத்தை அன்றி வேறு என்ன பதில் உரைப்பேன்,
மைந்தா = மைந்தனே,
மறைப்பது = ஆவரண சக்திதான்,
மிகப்பொல்லாதே = மிகவும் கொடியது.

பாடல் : 47
தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும், ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ, ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,
மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.

பொருள் :
தோற்றம் ஆம் சத்தி தானும் = விக்ஷேபரூபமான சக்தியும்,
துன்பம் ஆம் பவம் ஆனாலும் = துன்பமயமான பிறவிக்கு காரணமாக இருப்பினும்,
ஆற்றலால் முத்தி சேர்வார்க்கு = (ஸத்ஸங்க) வலிமையால் முக்தி அடைய விரும்புகின்றவர்களுக்கு,
அனுகூலம் ஆகும் காண் நீ = (குரு, சாஸ்திராதி ரூபமாக) சகாயமாகும் என நீ அறிவாயாக,
ஊற்றம் ஆம் பகற்கா லம் போல் = (நல்லவர், தீயவர் அனைவருக்கும் சோம்பல் முதலானவைகளைப் போக்கி) எல்லா முயற்சிகளையும் செய்வதற்கு காரணமான பகல் காலத்தைப் போல,
உபகாரம் நிசியால் உண்டோ = உதவியானது இரவுப் பொழுதால் உண்டோ?,
மாற்றம் என் உரைப்பேன் = உன் வினாவிற்கு இதுபோன்ற உதாரணத்தை அன்றி வேறு என்ன பதில் உரைப்பேன்,
மைந்தா = மைந்தனே,
மறைப்பது = ஆவரண சக்திதான்,
மிகப்பொல்லாதே = மிகவும் கொடியது.

பாடல் : 48
சுழுத்தியில் பிரள யத்தில் தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும்,
அழுத்திய பவம்போய் முத்தி அடைந்தவர் ஒருவர் உண்டோ,
முழுத்தவிட் சேபம் எல்லாம் முத்தியில் கூட்டு கிற்கும்,
கொழுத்த ஆ வரணம் முத்தி கூடாமல் கெடுத்த கேடே.

பொருள் :
சுழுத்தியில் = தூக்கத்தில்,
பிரளயத்தில் = மஹாப்ரளயத்தில்,
தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும் = தோற்றத்தில் இருக்கிற உலகங்கள் அழிந்தும்,
அழுத்திய பவம் போய் = அப்போது நம்மை துன்பத்தில் ஆழ்த்திய பிறவியானது மீண்டும் உண்டாகாமல் நீங்கி,
முத்தி அடைந்தவர் = மோஷம் அடைந்தவர் ஒருவர் உண்டோ,
ஒருவர் உண்டோ = ஒருவரும் இல்லை,
முழுத்த விட்சேபம் எல்லாம் = முழுதுமான தோற்றங்கள் எல்லாம்
முத்தியில் கூட்டு கிற்கும் = முக்தியில் நேரே அல்லது பரம்பரையாக சேர்க்கும்,
கொழுத்த ஆவரணம் = கனமான ஆவரண சக்திதான்
முத்தி கூடாமல் கெடுத்த கேடே = முக்தியடையாமல் கெடுத்த தீயதாம்.

பாடல் : 49
சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்றம் ஆன,
சத்தியும் பொய்யே என்றால் சத்திசா தனமா வந்த, 
முத்தியும் பொய்யாம் என்னின் மோகநித் திரைவி லங்கால்,
நித்திரை தெளியு மாபோல் நிருவாண நிலைமெய் யாமே.

பொருள் :
சுத்தியில் வெள்ளி போல = சிப்பியின் மேல் கற்பிதமான வெள்ளி போல,
தோன்றிய தோற்றம் ஆன சக்தியும் = ப்ரஹ்மத்தின் மேல் தோன்றிய தோற்றமான விக்ஷேபசக்தியும்
பொய்யே என்றால் = மித்யையே என்று சொன்னால்,
சத்தி சாதனமா(க) வந்த முத்தியும் = அவ்விக்ஷேப சக்தியால் (ரூபமான குரு சாஸ்த்ராதிகளால்) வந்த முக்தியும்,
பொய்யாம் என்னின் = மித்யை ஆகுமே என்றால்,
மோக நித்திரை விலங்கால் = பொய்யான உறக்கத்தில் கண்ட புலி முதலிய விலங்கினால்,
நித்திரை தெளியுமாபோல் = தூக்கமானது கலைந்து போவது போல், நிருவாண நிலை மெய்யாமே = (குரு சாஸ்த்ராதிகளால் உண்டாகும்) முக்தி நிலையும் உண்மையாகும்.

பாடல் : 50
இம்பரில் நஞ்சை நஞ்சால் இரும்பினை இரும்பால் எய்யும்,
அம்பினை அம்பால் பற்றும் அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர்,
வம்பியல் மாயை தன்னை மாயையால் மாய்ப்பர் பின்னைத்,
தம்பமாம் அதுவும் கூடச் சவம்சுடு தடிபோல் போமே.

பொருள்:
இம்பரில் = இவ்வுலகில்,
நஞ்சை நஞ்சால் = விஷத்தை அதற்கு எதிரான விஷத்தினாலும்,
இரும்பினை இரும்பால் = இரும்பினை இரும்பாலும்,
எய்யும் அம்பினை அம்பால் = (எதிரி) எறிகின்ற அம்பினை அதற்கு எதிரான மற்றொரு அம்பினாலும்,
பற்றும் அழுக்கினை அழுக்கால் = துணியில் பற்றிருக்கின்ற அழுக்கை (உவர்மண்ணாகிய) அழுக்கினாலும்,
மாய்ப்பர் = அழிப்பார்கள்.
(அதுபோல)
வம்பியல் மாயை தன்னை = நிலையின்மையாகிய குணத்தினை உடைய அவித்தையினை,
மாயையால் மாய்ப்பர்= மாயையினால் அழிப்பார்கள்.
பின்னைத் = பின்னர்,
தம்பமாம் அதுவும் கூட = நிலைபெற்ற அந்த மாயையும் கூட,
சவம்சுடு தடிபோல் போமே = பிணம் சுடும் தடி போல கெட்டுப்போகும்.

கைவல்ய நவநீதம் -
தத்துவ விளக்கப்படலம் பாடல்கள்1-50 ஸாரம்
அத்யாரோபம் - அபவாதம். அத்யாரோபம் காரணமான நிர்குண - ஸச்சிதாநந்த - ப்ரஹ்மத்தின் மேல் காரியமான உலகம் எவ்வாறு கல்பிக்கப்பட்டது - தோற்றுவிக்கப்பட்டது - என்பது.

ஈச்வர ஸ்வரூபம் = ப்ரஹ்மம் + மாயை (ஸத்வ பிரதானம்) + பிரதிபிம்பசைந்யம்.
ஜீவஸ்வரூபம் = ப்ரஹ்மம் + அவித்யா (மலின ஸத்வ மாயை) + பிரதிபிம்ப சைதந்யம்
ஜகத்ஸ்வரூபம் = ப்ரஹ்மம் + தமோகுண பிரதான மாயை.

அபவாதம் = உலகம் காரியம், ஆகவே மித்யா. காரணம் ப்ரஹ்மம் ஸத்யம்.

உலகம் (நமது மனம், உடல், போக விஷயங்கள், வாழ்க்கை) அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்வதே அபவாதம்.

மாயையின் ஆவரண சக்தி விஷேப சக்தி இரண்டில் எது மிகப்பொல்லாதது ? (அனர்த்த காரணம்).

ஆவரண சக்தியே. ஆவரண சக்தியே ஜீவனின் கண்ணை மறைக்கிறது. தோற்றம் தெரிவது பிரச்சனை இல்லை. அதை ஸத்யமாக நினைப்பதே ப்ரச்சனை. கானல் நீரைப் போல.

செல்லப்பிராணிகள் வளர்க்கிறோம். அதைப் பழக்குகிறோம். என்னதான் செல்லமாக அன்பாக வளர்த்தாலும் அது வேறு நாம் வேறு தான்.நமது குழந்தைகளும் அப்படியே தான்.
நமது உடல் மனமும் கூட அப்படியே தான்.
உடலையும் மனதையும் நம் விருப்பத்திற்கேற்ப நமக்கு ஸாதகமாக பழக்க வேண்டும். என்னதான் நமக்கு நெருக்கமாக இருந்தாலும் அதுவேறு (உடல், மனம்) நாம் (ஆத்மா) வேறு தான். விவகார உலகில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் உள்ள வேறுபாடு ஸமஸத்தா. ஆனால், ஆத்மாவுக்கும் அநாத்மாவான உடலுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடு விஷமஸத்தா. கயிறு - பாம்பு போல.

விக்ஷேப சக்தி மோக்ஷஸாதனமாகவும் உள்ளது.
மோக்ஷம் ஸத்யமா? மித்யாவா?
பந்தம் கல்பிதம். கல்பித நிவிர்த்தியே மோக்ஷம். மோக்ஷம் புதிய அடைவு அல்ல. பந்த நீக்கமே மோக்ஷம். ஆதாரமான - காரணமான - ஆத்மா பந்தமடையமில்லை, ஆகவே மோக்ஷமடைகிறது என்பதுமில்லை.

அறியாமையினால் பந்தம் கல்பிக்கப்பட்டது. ஞானத்தினால் அது நீக்கப்படுகிறது.

பாடல்: 51
இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும்,
அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய்,
முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம்,
சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல்.

பொருள்:
இந்த மாயையினால் = சுத்த அசுத்தங்களான இந்த மாயையினால்
சீவர்க்கு = உயிர்களுக்கு,
ஏழ் அவத்தைகள் உண்டாகும் = ஏழு அவஸ்தைகள் உண்டாகும்,
அந்த ஏழ் அவத்தை தம்மை = அந்த ஏழு அவஸ்தைகளையும்,
அடைவினின் மொழியக் கேளாய் = கிராமமாகச் சொல்லுகிறேன் கேட்பாயாக,
முந்த அஞ்ஞானம் = முதலாவது அஞ்ஞானம்,
மூடல் = (இரண்டாவது) மூடல் என்ற ஆவரணம்,
முளைத்தல் = (மூன்றாவது) தோற்றம் என்ற விக்ஷேபம்,
காணாத ஞானம் = (நான்காவது) பரோக்ஷ ஞானம்,
சந்ததம் கண்ட ஞானம் = (ஐந்தாவது) அபரோக ஞானம்,
தழல்கெடல் = (ஆறாவது) சோக நிவிர்த்தி,
குளிர்மை ஆதல் = (ஏழாவது) குறைவிலா நிறைவு (திருப்தி).

பாடல் : 52
பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம்,
பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல்,
நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம்,
குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.

பொருள் :
பிரமமாம் தனை மறந்த பேதைமையே அஞ்ஞானம் = (ஆதாரமான ஸச்சிதாநந்த) பிரஹ்மம் ஆன தன் யதார்த்த ஸ்வரூபத்தை மறந்த அறியாமையே முதல் நிலையாக அஞ்ஞானமாகும்,
பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் = பிரஹ்மம் - ஆத்மா - இல்லை, தெரியவில்லை என்று சொல்லுதல் இரண்டாவதான ஆவரணம் என்ற மூடல் ஆகும்.
நான் நரன் என ஒரு கருத்தால் = நான் மனிதன் என்று எண்ணும் எண்ணத்தால், (இப்போது செயல்களைச் செய்வதால் இனி அவற்றின் பலன்களை அனுபவிக்கும்)
சீவன் நான் என முளைத்தல் தோற்றம் = (கர்த்ருத்வம் போக்த்ருவம் உடைய) ஜீவன் நான் என எண்ணுதல் விக்ஷேபம் ஆகும்.
குரவன் வாக்கியத்தால் = குருவால் உபதேசிக்கப்பட்ட ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்ம என்னும் அவாந்தர வாக்கியத்தால்,
தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம் = ஆத்மா - ப்ரஹ்மம் - உண்டு என்று அறிந்து கொள்ளுதல் பரோக்ஷஞானம் ஆகும்.

பாடல் : 53
தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய்,
அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும்,
கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போதல்,
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா நந்தம் ஆமே.

பொருள்:
தத்துவ விசாரம் செய்து = (தத் துவம் அஸி போன்ற மஹாவாக்யங்கள் வாயிலாக) ப்ரஹ்ம விசாரம் செய்து,
சகல சந்தேகமும் போய் = எல்லா ஐயங்களும் நீங்கி,
அத்துவிதம்தான் ஆதல் = அத்வைதப் ப்ரஹ்மமே நான் என்று இருத்தல் அபரோட்ச ஞானம் ஆகும் = அபரோக்ஷ ஞானம் ஆகும்,
கர்த்தனாம் சீவபேதம் = நான் கர்த்தா போத்தா எனும் ஜீவத்வம்
கழிவதே துக்கம் போதல் = நீங்குவதே துக்க நிவிர்த்தி ஆகும்.
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்தது ஆநந்தம் ஆமே = (எல்லாத் துன்பங்களில் இருந்தும்) விடுபட்டவனாய் (செய்யத்தக்கன அனைத்தும்) செய்து முடிந்தது (அடைய வேண்டிய அனைத்தும் அடைந்துவிட்டேன்) என்னும் திருப்தி ஆநந்தம் ஆகும்.

பாடல் : 54

இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம்,

புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி,

உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி,

அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான். 


பொருள் :

இதுநினக்கு அறியும் வண்ணம் = இது (ஆத்மா ஒருவனுக்கே ஏழு அவஸ்தைகளும் உண்டாகின்றது என்பது) உனக்கு நன்றாக விளங்கும்படிக்கு,

இப்படி ஒரு திட்டாந்தம் = இப்படி ஒரு உதாரணமாக,

புதுமையாம் கதை கேள் = ஆச்சர்யமான ஒரு கதையைக் கேட்பாயாக,

பத்துப் புருடர் ஓர் ஆற்றை நீந்தி = 10 நண்பர்கள் ஒரு ஆற்றைக் கடந்து,

உதகதீரத்தில் ஏறி = அந்நதியின் மறுகரையில் ஏறிய பின்னர்,

ஒருவன் ஒன்பதுபேர் எண்ணி = அவர்களில் ஒருவன் மற்ற ஒன்பது பேர்களையும் எண்ணி,

அதனொடு தசமன் தான் என்று = ஒன்பது பேரோடு தானே பத்தாமவன் என்று,

அறியாமல் மயங்கி நின்றான் = அறியாமல் ஒருவனைக் காணவில்லை என்று மயங்கி  நின்றான். 


பாடல் : 55

அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல்,

பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம்,

நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக்,

குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.


பொருள் :

அறியாத மயல் அஞ்ஞானம் = தன்னை (ஒன்பது பேரோடு பத்தாவது மனிதன் தான்தான் என்பதை) அறியாத மயக்கமே அஞ்ஞானம்,

அவன் இலை காணோம் என்றல் = பத்தாவது ஆள் இல்லை, காணவில்லை என்று கூறுதல்,

பிறியா ஆவரணம் ஆகும் = நீங்காத மறைப்பு ஆகும்,

பீழை கொண்டு அழல் விட்சேபம் = (நதியில் அவன் இறந்துவிட்டான் என்று கருதி) துன்பம் கொண்டு அழுதல் விக்ஷேபம்,

நெறியாளன் = ஆப்தன் ஒருவன்,

தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லை = பத்தாமவன் இருக்கின்றான், இங்கே நிற்கின்றான் என்று கூறுதலை,

நெஞ்சில் குறியாக எண்ணிக் கொள்வது = மனதில் நிச்சயித்து கருதிக் கொள்வது,

பரோட்ச ஞானம் = பரோக்ஷ ஞானமாகும் (கேள்வி அறிவாகும்).


பாடல் : 56

புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை,

எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல்,

கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல்,

திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த  மாமே.


பொருள் :

புண்ணிய பதிகன் = தர்மவானான பாதையில் செல்லும் ஓர் ஆப்தன்,

பின்னும் புருடர் ஒன்பதின்மர் தம்மை = பின்னரும் மனிதர் ஒன்பது பேரை,

எண்ணும் நீ தசமன் ஆவை என்னவே = எண்ணுகின்ற நீயே பத்தாவது மனிதன் ஆவாய் என்று சொல்லவே,

தன்னைக் காணல் = (பத்தாமவன் இருக்கின்றான், நானே அவன் என்று) தன்னை அறிந்து கொள்ளுதல்,

கண்ணினில் கண்ட ஞானம் = அபரோக்ஷ ஞானம் (நேரே கண்ட அறிவு) ஆகும்.

கரைதல் போவது நோய் போதல் = (பத்தாமவன் நதியில் போனான் என்று கருதி) அழுத துன்பம் நீங்குதலே துக்க நிவர்த்தி,

திண்ணிய மனதில் ஐயம் தெளிதல் ஆனந்தம் ஆமே = மனதில் சந்தேகமின்றி நிச்சய ஞானம் ஏற்பட்டு இன்பம் அடைதல் ஆனந்தம் ஆகும். 


பாடல் : 57

தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன்,

நிசவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான்,

சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு,

அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய்.


பொருள் : 

தசபுமான் தனைக்கண் டாற்போல் = பத்தாமவன் தான்தான் என்று கண்டுகொண்டார் போல,

சற்குருமூர்த்தியே என் = ஸத்குருநாதரே என்னுடைய,

நிச வடிவினை யான் காண = என்னுடைய உண்மையான சொரூபத்தை நான் அறிந்து கொள்ள,

நீர்காட்டல் வேண்டும் என்றான் = தாங்கள் உபதேசித்து அருள வேண்டும் என்று சீடன் வினவினான்.

தொம்பதம் தத்பதங்கட்கு = த்வம் (நீ), தத் (அது = ஈச்வரன்) ஆகிய சொற்களுக்கு,

சுசி பெறும் இலக்கியார்த்தம் = உபாதி சம்பந்தம் இன்றிய தூய்மையான லட்சிய அர்த்தங்களுக்கு,

அசிபத ஐக்கியம் செய்யும் = அஸி (இருக்கிறாய்) எனும் சொற்பொருளான ஐக்கியத்தை போதிக்கும்,

அதுசெயும் உண்மை கேளாய்= அஃது அங்ஙனம் போதிக்கும் தத்துவார்த்தத்தை

உபதேசிப்போம் கேட்பாயாக!


பாடல்: 58

விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில்,

மண்ணொன்று கடவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும், எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன், நண்ணும்கூ டத்தன் சீவன் நான்குசை தந்யம் ஆமே.


பொருள்:

பாரில் = உலகில்,

விண் ஒன்றை =  ஒன்றேயான ஆகாயத்தை,

மகாவிண் என்றும் = மஹாகாயம் என்றும்,

மேகவிண் என்றும் = மேகாகாயம் என்றும்,

மண்ணொன்று கடவிண் என்றும் = மண்ணினால் ஆன கடத்தில் கடாகாயம் என்றும்,

மருவிய சலவிண் என்றும் =  பொருந்திய ஜலாகாயம் என்றும்,

எண்ணும் கற்பனை போல் = சொல்கின்ற கற்பனை போல,

ஒன்றே எங்கும் ஆம் பிரமம் = ஒன்றேயாக எங்கும் வியாபித்திருக்கின்ற நிர்குண பிரஹ்மம்,

ஈசன்  = ஈச்வரன்

நண்ணும் கூடத்தன் = கூடஸ்தன்

சீவன் = ஜீவன் என,

நான்கு சைதந்யம் ஆமே = நான்கு சைதந்யமாக விளங்கும்.


கருத்துரை:

1-வது பிரமாண்டத்தின் உட்புறமெங்கும் ஏகரசமாய் வியாபகமாயுள்ள ஆகாசசொரூபத்தை மஹாகாச மென்பர். 


2-வது- மேகத்திற்கு அவகாசங்கொடுத்திருக்கின்ற ஆகாசத்தையும், மேகசலத்தில் பிரதிபிம்பித்துள்ள ஆகாசத்தையும் மேகாகாசம் என்பர்.


3-வது--சலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்திற்கு எவ்வளவு  ஆகாசம் அவகாசங் கொடுத்திருக்கின்றதோ, அவ்வளவு ஆகாசத்தைக் கடாகாசம் என்பர்.


4 வது - ஜலத்தினால் நிறைந்திருக்கின்ற கடத்தில் மேக நட்சத்திரங்களோடு பிரதிபிம்பித்திருக்கின்ற ஆகாச பிரதி பிம்பத்தையும் கடாகாசத்தை சேர்த்து சலாகாசம் என்பர்.


பாடல் : 59

பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும்,

வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா,

காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும்,

ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே.


பொருள்:

பூச்சிய ஈசன் = அனைவராலும் பூசிக்கத் தகுந்த ஈச்வரனும், 

சீவன் = பூகப்பவனான ஜீவனும்,

புகல் பதம் இரண்டினுக்கும் வாச்சியம் = மஹாவாக்கியத்தில் சொல்லப்படுகின்ற 'தத்' எனும் சொல் 'த்வம்' எனும் சொல் இரண்டுக்கும் வாச்யார்த்தம் ஆகும்.

லட்சியம்தான் = லட்சியார்த்தமாவன,

மலம் இலாப் பிரமம் ஆன்மா = அவித்யா மலமற்ற ப்ரஹ்மமும் கூடஸ்தனுமாம்.

காய்ச்சிய பாலில் நெய்போல் = பாலில் நெய்யானது கலந்து ஒன்றாக இருப்பது போல,

கலந்தொன்றாம் = அவ்வாச்சிய இலட்சியங்கள் (விவேகம் இன்மையால்) கலந்து ஒன்றாக இருக்கின்றன.

கடைந்தெடுக்கும் ஆச்சியம் என்ன = மத்தினால் கடைந்து எடுக்கும் நெய்யைப் போல,

உன்னை அறிந்து = விசாரத்தால் இலட்சியார்த்தமான உன்னை அறிந்து,

நீ பிறிந்து கொள்ளே = வாச்யார்த்தத்தில் இருந்து நீ வேறுபடுத்திக்கொள்.


பாடல் : 60

பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும், அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ, வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால், எறிபிரா ணனும்நீ அல்லை இராசத குணவி காரம். 


பொருள் :

பிறிவது எப்படி என்றக்கால் = (என்னை அறிந்து வாச்யார்தத்தில் இருந்து) வேறுபடுவது எவ்வாறான விவேகத்தால் என்று கேட்பாயாகில்,

பிணமாகும் உடல் நான் என்னும் = சில நாட்களில் இறந்து போகும் அந்தமயமான தூல உடல் நான் என்ற,

அறிவினைக் கொல்லல் வேண்டும் = தவறான அறிவினை அழிக்க வேண்டும்.

ஐம்பூத விகாரம் அன்றோ = இத்தூலவுடல் பஞ்சீகரணமான பஞ்சபூதங்களின் மாறுபாடு அல்லவா?

வெறியதோர் துருத்தி = வெறுமையான ஓர் தோல் துருத்தி

மூக்கின் விடுவது போல் = மூக்கினால் காற்றை விடுவது போல,

உன் மூக்கால் எறி பிராணனும் நீ அல்லை = உன்னுடைய மூக்கினால் வீசுகின்ற (சடமான) பிராணமய கோசமும் நீ இல்லை.

இராசத குண விகாரம் = அது அபஞ்சீகிருத பஞ்சபூதங்களின் ரஜோகுணக்காரியம்.