Aug 31, 2020

Kaivalya Navanitham 1 (11-20)



தாண்டவராய சுவாமிகள் அருளிய 

கைவல்ய நவநீதம்  - தத்துவ விளக்கப் படலம்

பாடல் : 11

அடங்கிய விருத்தி யானென்று அறிந்தபின் செறிந்த மண்ணின்,

குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,

தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, 

உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.


பொருள்:

அடங்கிய விருத்தி யான் என்று =  அகங்கார எண்ணமில்லாதவன் இவன் என்று,


அறிந்தபின் = அறிந்து கொண்ட பின்னர்,


செறிந்த மண்ணின் குடம்பையுள் புழுமுன் = நெருங்கிய மண் கூட்டின் உள்ளே உள்ள புழுவுக்கு முன்னே,


ஊதும் குளவியின் கொள்கை போல = சப்தமிடும் குளவியின் திட்டம் போல,


தொடங்கிய குருவும் = (ஸங்கல்பம் முதலான தீக்ஷை வழங்கி) அருள்புரிந்து தொடங்கிய குருநாதரும்


ஆன்ம சொரூபமே மருவ வேண்டி = அவன் தன்னுடைய உண்மை வடிவத்தை உள்ளவாறு அறிந்துக் கொள்ளுவதற்காக,


உடம்பினுள் சீவனைப்பார்த்து = அவன் உடம்பின் உள்ளே உள்ள ஜீவனைப் பார்த்து


உபதேசம் ஓதுவாரே = உபதேசிக்கத் தொடங்கினார்.


குளவியின் கொள்கை போல : குளவியானது புழுவைக் கொட்டி பார்த்து மிக துடிப்பதையும் ( அதிக ரஜஸ்) துடியாமல் கிடப்பதையும் (அதிக தமஸ்) ஒழித்து மத்திய துடிப்புடையதை (ஸத்த்வம் மேலோங்கி இருத்தல்) எடுப்பதுபோல குருவும் சீடனின் இயற்கை குணம் சோதித்து உபதேசிக்க தொடங்கினார்.


ஜீவனைப் பார்த்து: பந்தம் உடையவன் ஜீவனே



பாடல் : 12


வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,

தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், 

பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், 

ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே. 


பொருள்:


வாராய் என் மகனே = சீடனே, கவனமாகக் கேள்,


தன்னை மறந்தவன் = (வாஸ்தவமாக தான் ஆத்ம ஸ்வரூபமாக இருந்தாலும்) தான் யார் என்று தன்னை அறியாமல் மறந்தவன், 


பிறந்து இறந்து = பல உடல்களில் பலமுறை பிறந்து இறந்து,


தீராத சுழற்காற்று உற்ற செத்தைபோல் = முடிவில்லாத சுழல் காற்றில் அகப்பட்ட கூளம் போல,


சுற்றிச் சுற்றி = மேல்கீழ் உலகங்களுக்கு செல்வதும் வருவதுமாய் சுற்றிச் சுற்றி


பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் = அழிவில்லாத காலச்சக்கரத்தில் மயங்கி சுற்றித்திரிபவன், 


போதம் ஆராயும் தன்னை = அறிவினால் ஆராய்ந்து அறியத்தக்க தன்னை, 

தான் என்று = நான் பிரம்மம் என்று


அறியும் அவ்வளவும் தானே = அறியும் வரையும் தான் ஸம்ஸாரபந்தம்.


ஸம்ஸார காரணம் - தன்னை மறந்தது.


மோக்ஷ காரணம் - தன்னை அறிவது.


ஆன்மீக அறிவியல் - Spiritual Science

பள்ளியில் ஒரு பாடமாக இருக்க வேண்டியது.

தர்சனங்கள் - மெய்ப்பொருளை அறிந்துகொள்ள உதவும் தத்துவங்கள். ஆஸ்திக தரிசனங்கள் ஆறு : ஸாங்க்யம், யோகம் நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை (அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவ சித்தாந்தம்)

நாஸ்திக தரிசனங்கள் ஆறு : பௌத்தம் 4, சமணம், லோகாயதம்.)


சிருஷ்டி எப்படி வந்தது? 

பந்தம் என்றால் என்ன ?

மோக்ஷம் என்றால் என்ன?

(பந்த காரணம் & மோக்ஷ காரணம்)



பாடல் : 13


தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், 

பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்,

உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, 

என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.


பொருள்:


தன்னையும் = ஜீவனாகிய தான் யார் என்பதையும், (அல்லது அஹங்காரமாகிய தன்னையும் - பிரதிபிம்ப சைதந்யம்)


தனக்கு ஆதாரத் தலைவனையும் = தனக்கு ஆதாரமாக இருக்கின்ற ஈச்வரனையும், (அல்லது அஹங்காரத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற ஆத்மாவையும் (பிம்ப சைதந்யம்)


கண்டானேல் = இதன் சொரூபம் இன்னது என்று அறிந்தானேயாகில்,


பின்னை அத்தலைவன் தானாய்ப் = பிறகு அந்த பிரம்மமே ( ஆத்மாவே) தான் என்று


பிரமமாய் = பிரம்மமாய் (ஆத்மாவாய்) இருந்து,


பிறப்புத் தீர்வன் = பிறவியிலிருந்து விடுபடுவான்.


உன்னை நீ அறிந்தாயாகில் = உன்னை நீ (உனது யதார்த்த சொரூபமான பிரம்மம் என்று) அறிந்தால்,


உனக்கொரு கேடும் இல்லை = (அதன்பிறகு) உனக்கொரு துன்பமும் இல்லை.


என்னை நீ கேட்கையாலே = என்னை நீ ச்ரத்தையுடன் கேட்டதனால்


ஈது உபதேசித்தேனே = மிகரகசியமான இதனை உனக்கு உபதேசித்தேன்.


தன்னையும் தனக்கு ஆதாரத் தலைவனையும் அறிந்தாயாகில் = நான்யார்? உடலா? மனமா? அறிவா? அகங்காரமா? இவை அனைத்துமா? இல்லை இதற்கும் மேலாக, வேறாக ஏதாவது இருக்கின்றதா?


உலகம் என்பது என்ன? எப்படி வந்தது?  

தானாகத் தோன்றியதா? அல்லது தோற்றுவிக்கப்பட்டதா?


தோற்றுவித்தவர் இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்?


சாஸ்திரம் சொல்லுவது.. உடம்பிற்கு வேறாக ஆத்மா இருக்கின்றது. 

உலகம் படைக்கப்பட்டது, படைத்தவர் இறைவன்.

இறைவனே ஒவ்வொரு உடலிலும் ஆத்மாவாக இருக்கின்றார்.


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் 

- திருமந்திரம்.


மெய்ப்பொருள் காண்பது அறிவு!

கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி!

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா பேர்த்துள்ள வேண்டா பிறப்பு! பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு!

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்!

  • திருக்குறள்.


என்னை நீ கேட்கையாலே = பக்தி சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு தான் இதை சொல்ல வேண்டும் என்பது கருத்து.



பாடல் :14


என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா,

தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ,

பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன்,

நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே.


பொருள்:


ஐயா = ஸத்குருவே,


என்னைத்தான் சடனா = என்னைத்தான் மூடன் என்று, 


உள்ளத்து எண்ணியோ சொன்னீர் = மனதில் நினைத்தா இவ்வாறு (உன்னை நீ அறிந்தாயாகில்…) சொன்னீர்கள்.


தன்னைத்தான் அறியா மாந்தர் = தன்னை யார் என்று அறியாத மனிதன்,


தரணியில் ஒருவர் உண்டோ = பூமியில் ஒருவர் உண்டா? (இல்லை).


பின்னைத்தான் அவர்கள் எல்லாம் = பின்னர் அவர்கள் அனைவரும்,

பிறந்து இறந்து உழலுவான் ஏன் = மீண்டும் மீண்டும் பிறவியை அடைந்து துன்பப்படுவது எதனால்?


நின்னைத்தான் நம்பி னேற்கு = உங்களையே நம்பி சரணாகதி அடைந்து இருக்கும் எனக்கு


நிண்ணயம் அருளுவீரே = உண்மையை உறுதிப்பட உபதேசிப்பீராக.


உன்னையறிந்தால் பிறவி இல்லை - குரு சொன்னது.

தன்னை அறியாதவர் யாருமில்லை - ஆனால் அனைவரும் பிறப்பு இறப்பில் உள்ளார், ஏன்?



பாடல் :15


இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன்,

அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார்,

சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான்,

பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார்.


பொருள்:


இன்னது தேகம் = இது என்று அறியப்படுவதாக இருப்பது உடல் (அநாத்மா),


தேகி இவன் = இது உடல் என்று அறிபவன் (ஆத்மா),

என உணர்வான் யாவன் = என்று (அநாத்மாவையும் ஆத்மாவையும் வேறுபடுத்தி) அறிபவன் எவனோ,


அன்னவன் = அவனே


தன்னைத் தான் என்று = தனது உண்மையான சொரூபத்தை நான் என்று,


அறிந்தவன் ஆகும் என்றார் = உண்மையில் தன்னை அறிந்தவன் ஆவான் என்று சொன்னார்,


சொன்னபின் = அவ்வாறு குரு சொன்ன உடனே,


தேகி யார் இத் தூலம் அல்லாமல் = இந்தத் தூல உடல் அல்லாமல், வேறே தேகத்தை உடையவன் என்று யார் இருக்கின்றார்? என்று சீடன் கேட்டான்.


பின் அது கேட்ட ஐயர் = அதைக்கேட்ட பின்னர் குருவானவர், 


பீழையும் நகையும் கொண்டார் = வருத்தமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.


விளக்கம்:


இன்னது தேகம் தேகி இவன்

    அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. இது என்று அறியப்படுவது உடல். உடல் ஜடமானது. உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.


பீழையும் நகையும் கொண்டார்

பீழை = வருத்தம் தேகத்திற்கு வேறாக தேகியில்லை என்ற அறியாமையை கண்டு வருந்தினார் இரக்கத்தினால். 


நகை = அதை நீக்குவதற்கு அநேக ச்ருதி, யுக்திகள் உளளன என்று புன்னகைத்தார்.


பாடல் :16


தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய்,

மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய், சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய், ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.


தேகம் அல்லாமல் = இந்த பருவுடல் இல்லாமல்,

வேறே தேகியார் = உடலுக்கு வேறாக உடலை உடையவன் என்று யார் இருக்கிறார்? (இல்லை),

காணேன் என்றாய் = அப்படி யாரையும் நான் காணவில்லை என்று சொன்னாய்,

மோகமாம் கனவில் வந்து = உலகை அறியாத மயக்கமாகிய கனவில் வந்து,

முளைத்தவன் எவன்நீ சொல்வாய் = கனவைக் காண்பவனாக விளங்கிக்கொண்டிருப்பவன் யார் என்று நீ சொல்வாய்?

சோகமாம் கனவு தோன்றா = சுக துக்கத்தை தரும் கனவும் தோன்றாத,

சுழுத்தி கண்டவன் ஆர் சொல்வாய் ஆக = ஆழ்ந்த உறக்கமாகிய சுசுப்தி நிலையில் அதையும் காண்பவனாக விளங்கிக் கொண்டிருப்பவன் யார் என்று நீ சொல்வாயாக,

 நீ நனவில் எண்ணும் = விழிப்பு நிலையில் நான் நானென்று நீ நினைக்கும்,

அறிவு தான் ஏது சொல்வாய் = அனைத்தையும் அறிகின்ற அறிவுதான் எது என்று சொல்வாய்?


பாடல் :17

நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், 

கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல்,

தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே, மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. 


பொருள்:

நனவுகண் டதும் = விழிப்பு நிலையை அனுபவித்ததும்,

நான் கண்ட நனவுள நினைவு நீங்கி = நான் அனுபவித்த விழிப்பு நிலையின் நினைவுகள் நீங்கி,

கனவுகண் டதும் = கனவு நிலையை அனுபவித்ததும்,

சுழுத்தி கண்டதும் = ஆழ்ந்த உறக்க நிலையை அனுபவித்ததும்,

வேறொன் றேபோல் = தூலஉடம்பிற்கு வேறான ஒன்று போல்,

தினம் அனுபவிப்பது ஒக்கும் = தினம் அனுபவத்தில் இருப்பது ஒவ்வும் (நீங்கள் சொல்வதற்குப் பொருந்துகிறது). 

தெரியவும் இல்லை = (ஆனால்) அது என்னவென்று (தெளிவாகத்) தெரியவில்லை,

சற்றே மனதினில் உதிக்கும் = (தங்கள் உபதேசத்தைக் கேட்கின்ற பொழுது) உடலுக்கு வேராக ஒன்று இருப்பது போல் மனதிற்கு தெரிகின்றது,

பின்னே மறைக்கும் = பின்னர் அவ்வறிவு மறைந்துவிடுகிறது,

அது அருளுவீரே = அதை (இதைப் பற்றிய உண்மையை அடியேன் தெளிவாக அறிந்து கொள்ளுமாறு) உபதேசிப்பீராக!


பாடல் : 18


தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல் ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல் தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.


பொருள்:

தாலத்தின் மரங்கள் காட்டி = பூமியிலுள்ள மரத்தின் கிளையை (முதலில்) காட்டி,

தனிப்பிறை காட்டு வார்போல் = (பின்னர் அதன் அருகிலுள்ள) மூன்றாம் பிறையைக் காட்டுபவரைப் போல,

ஆலத்தின் உடுக்கள் காட்டி = வானத்தில் உள்ள (தூலமான வசிஷ்டர் முதலிய) விண்மீன்களை (முதலில்) காட்டி,

அருந்ததி காட்டு வார்போல் 

= (பின்னர் அதன் அருகிலுள்ள சூட்சுமமான) அருந்ததி நட்சத்திரத்தை காட்டுபவரைப் போல,

தூலத்தை முன்பு காட்டி = தூலமான (உலகம், ஜீவன், ஈஸ்வரன் ஆகியோரின் தோற்றத்தை) முதலில் தெரியச்செய்து, 

சூக்கும சொரூபம் ஆன மூலத்தைப் = சூக்ஷ்ம ஸ்வரூபமான  அனைத்திற்கும் மூலமான பரம்பொருளை (நிர்குண பிரஹ்மத்தை)

பின்பு காட்ட = பின்பு கூற வேண்டும் எனக் கருதி,

முனிவரர் தொடங்கி னாரே = முனிவர்களுள் சிறந்தவரான அக்குருநாதர் (உபதேசிக்கத்) தொடங்கினார்.


தாலத்தின் மரங்கள் காட்டி தனிப்பிறை காட்டுவார் போல் -

ஶாகா சந்த்ர நியாயம்


ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார் போல் -

தூல அருந்ததி நியாயம்.


தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல்.


காரியமான தெரிந்த உலகத்தைக் கொண்டு காரணமான ஸூக்ஷ்மமான இறைவனை -ப்ரஹ்மத்தை - அறிந்துகொளல். 


(எ - கா)

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.



பாடல் :19

அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும், உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம், மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால், முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய்.


பொருள்:

வேதாந்தம் எல்லாம் = வேதாந்த நூல்கள் அனைத்தும்,

அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் = அத்தியாரோபம், அபவாதம் என்று உபதேசிக்கும் முறையால், பந்தம் வீடு என்றுரைக்கும் = பந்தமும் வீடும் (எப்படித் தோன்றுகிறது) என்று கூறுகிறது. 

மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் = பொய்யான கற்பிதத்தால் பந்தம் (பிறவி) உண்டாகின்றது. 

அபவாதத்தால் முத்தியாம் = அபவாதத்தால் (கற்பனையை நீக்குவதால்) முக்தி (பிறவியிலிருந்து விடுதலை) உண்டாகின்றது. 

இவ்வி ரண்டின் = அத்யாரோபம், அபவாதம் என்ற இரண்டில்,

முந்தியாரோபம் கேளாய் = முதலில் ஆரோபம் பற்றி (நான் கூறக் கவனமாகக்) கேட்பாயாக.


பாடல் :20


ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம் ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல் நாயுடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல் நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.


பொருள்:

ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவ எல்லாம் = ஆரோபம் (அ) அத்தியாசம் (அ) கற்பனை என்று சொல்லப்படுவது,

ஓரோர் வத்துவினில் = ஒவ்வொரு பொருளிலும், வேறே ஓரோர் வத்துவினை ஓர்தல் = அதற்கு வேறான ஒவ்வொரு பொருளை ஏற்றிப் பார்த்தால் ஆகும்.

(அது எப்படி என்றால்)

நாரூடு பணியாய்த் தோன்றல் = கயிறு பாம்பாகத் தெரிதல்,

தறியில் நரனாகித் தோன்றல் = கட்டை மனிதனாகத் தெரிதல்,

கானல் ஊடு நீர் தோன்றல் = கானல் நீராகத் தெரிதல், வெளியில் நிறம் தலம் தோன்றல் = வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் (போன்றதாகும்).