May 4, 2020

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஓம்

விவேகசிந்தாமணி 

பாடலும் பொருளும்

பொருளுரை : ஶ்ரீ ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதீ

விவேக சிந்தாமணி என்பது ஒரு தொகுப்பு நூல். தொகுத்தவர் யாரென்று தெரியவில்லை. பல அரிய கருத்துக்களை, உலகியல் அனுபவப் பாடங்களை பாடல்களாக ஆக்கி கொடுத்திருக்கிறார்கள் புலவர்கள். தொகுப்பு நூல் என்பதால் பாடல்களின் வரிசையில் மாறுபாட்டையும்
 மாறுபட்ட பாடல்களையும் காணமுடிகின்றது. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பொருளோடு காண்போம்.


விவேக சிந்தாமணி


01: கடவுள் வணக்கம்

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக் கால். 

திருவண்ணாமலை கோவிலில் எழுந்தருளியிருக்கும் கணபதியை கைகளை கூப்பி வணங்கினால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். சஞ்சிதகர்மம், பிராரப்தகர்மம், ஆகாமிகர்மம் அனைத்தும் தொலைந்து போகும்.

(ஸஞ்சித கர்மம் - எஞ்சுவினை - செயலுக்கு வராமலிருக்கும் பழையவினைப்பயன்கள். பிராரப்த கர்மம் - நிகழ்வினை - இப்பிறவிக்கு காரணமாக இருக்கும் வினைப்பயன்கள். ஆகாமிகர்மம் - வருவினை - இப்பிறவியில் செய்யும் புதியவினையின் பயன்கள்.)

02: பயன்படாதவை

ஆபத்துக் குதவாப்பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்; தாபத்தைத் தீராத் தண்ணீர்; தரித் திரமறியாப் பெண்டிர்; கோபத்தையடக்கா வேந்தன்; குருமொழி கொள்ளாச்சீடன்; பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை யேழுந் தானே.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை:
அருகில் இல்லாத பிள்ளை, பசியை தீர்க்காத உணவு, தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வருமானத்தை அறிந்து செலவு செய்யத் தெரியாத மனைவி, கோபத்தை அடக்கி சிந்தித்து செயல்பட இயலாத அரசன்,
குருவின் உபதேசத்தைக் கேளாத சீடன், புனிதம் (தூய்மை) இல்லாத நீர்நிலை.

03: அன்பே தலை

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைபேசி, உப்பிலா கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும், முப்பழமொடு பாலன்ன முகங்கடுத்து இடுவராயின், நப்பிய பசியினோடுகடும்பசி யாகுந்தானே.

மனம் ஒப்பி, மலர்ந்த முகத்துடன் உபசரித்து, உண்மை பேசி, உப்பில்லாத கூழ் கொடுத்தாலும் அது அமிர்தமாக இருக்கும். மா, பலா, வாழை முக்கனிகளோடு பாலன்னத்தை அன்பில்லாமல் முகம் கடுத்துக் கொடுப்பாரானால் அது பசியை அதிகமாகுமேயன்றி தணிக்காது. ( மனதிற்கு நிறைவைத் தராது).

(கொடுப்பதை அன்போடு கொடு. அன்போடு கொடுப்பதை மட்டுமே பெறு.)

04: உலகஇயல்பு

ஆலிலை பூவுங்காயும் இனிதரு பழமும் உண்டேல், சாலவே பட்சியெல்லாந் தன் குடி யென்றே வாழும், வாலிபர் வந்துதேடி வந்திப்பர் கோடாகோடி, ஆலிலை யாதிபோனால் அங்குவந்து இருப்பாருண்டோ.

ஆலமரத்தில் இலை, பூ, காய், இனிமையான பழம் இருந்தால் மிகுதியாக பறவைகள் இது தமது இருப்பிடம் என கூடிவாழும். இலை முதலானவை நீங்கி மரம் பட்டு நின்றால் ஒரு பறவையும் அங்கு இராது. அதுபோல செல்வமானது மிகுந்திருந்தால் பலர் வந்து வந்தனம் செய்து உறவுகள் என கூடி இருப்பார். செல்வம் இல்லை என்றால் ஒருவரும் எட்டியும் பார்க்க மாட்டார்.
(ஆகவே பணத்தினைப் பெருக்கு.)

05: கற்றவரே அறிவார்

தண்டாமரையினுடன் பிறந்தே தண்டேனுகரா மண்டுகம், வண்டேகானத் திடையிருந்து வந்தேகமல மதுவுண்ணும், பண்டே பழகியிருந்தாலு மறியார் புல்லோர் நல்லோரைக், கண்டே களித்தங்குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே.

தன்னுடன் பிறந்து வளர்ந்த தாமரையின் இனிய தேனை தவளையானது அறியாது. காட்டிலிருந்து வரும் வண்டுகள் அந்த தேனை உண்டு மகிழும். அருகில் இருந்தாலும் கற்றோரின் பெருமையை மூடர்கள் அறியார். எங்கிருந்தோ வரும் அறிஞர் அந்த நல்லவரைக் கண்டு அன்புகொண்டு உறவாடி அறிவிற்கலந்து இன்புறுவர்.

(கற்றாரைக் கற்றாரே காமுறுவர்)

06: ஈனருக்கு உரைத்திடாதே

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம், தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும், ஞான மும் கல்வியும் நவின்ற நூல்களும், ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே.

ஒரு குரங்கானது மழையில் நனைந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த (முன்னரே கூடுகட்டி வசிக்கும்) தூக்கணம் பறவை ஒன்று, தன்னைப்போல் ஒரு இருப்பிடம் அமைத்து பாதுகாப்பாக வாழக்கூடாதா? என்று கேட்க, கோபம் கொண்ட குரங்கு குருவியின் கூட்டை பிய்த்தெறிந்தது. கீழான குணம் கொண்ட அறிவில்லாதவர்க்கு கல்வியால் தான் பயின்ற நூல்களின் ஞானத்தை உபதேசம் செய்தால் அது துன்பத்தை உண்டாக்கும். 

(கேளாமல், தகுதி பாராமல் எதையும் சொல்லாதே)

07: சிற்றினம் சேராதே

கற்பகத் தருவைச்சார்ந்த காகமும் அமுத முண்ணும், விற்பன விவேகமுள்ள வேந்தரைச் சேர்ந்தார் வாழ்வார், இப்புவி தன்னிலொன்று இலவுகாத்திடுங்கிளிபோல், அற்பரைச் சேர்ந்தார்வாழ்வு அரிதரிதாகுதம்மா.

கற்பக மரத்தில் அமரும் காகமும் அமுதம் உண்ணும், மிகுந்த அறிவு படைத்த அரசனை சேர்கின்ற எளியவரும் நல்வாழ்வை பெறுவர், இலவம் மரத்தின் காய் 'பழுக்கும் பழுக்கும்' என்று காத்திருக்கும் கிளியை போல, அற்பமான அறிவையுடையவரைச் சேர்ந்து வாழ்பவர் வாழ்வு வீணாகும்.

(ஆகவே, சேரிடம் அறிந்து சேர்)

08: தரம் தாழாதே

சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர், அங்கதைக் கொய்துவிட்டால் அழுகச்செய் தந்நீர் கொல்லும், துங்கவன் கரையிற் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான், தங்களின்நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே.

சங்கு போன்ற வெண்மையான தாமரை பூவுக்கு சூரியனும் தண்ணீரும் தந்தையும் தாயும் ஆவர். ஆனால் அம்மலரைப் பறித்து தண்ணீரில் போட்டால் அந்நீரே அதை அழுகச் செய்து கொன்றுவிடும். தரையில் போட்டால் சூரியன் காயவைத்துக் கொன்றுவிடுவான். அதுபோல ஒருவர் தன் நிலை தவறினால் இப்படி அழிவை அடைவார். 

(ஆகவே, பணத்தினாலோ குணத்தினாலோ சொல்லாலோ செயலாலோ தரம் தாழ்ந்து விடாதே.)

09: நன்றே செய்க இன்றே செய்க

அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ, கரும்பு கோணிடிற் கட்டியும் பாகுமாம், இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம், நரம்பு கோணிடில் நாமதற் கென் செய்வோம்.

பூவின் அரும்பு கோணலாக இருந்தாலும் மலர்கின்ற பொழுது அதன் மணம் குறையாது; கரும்பு கோணலாக இருந்தாலும் அதன் சுவையானது குறையாது; இரும்பை வளைத்து கோணல் ஆக்கி அங்குசம் செய்தால் யானையை வெல்லலாம்; ஆனால் உடம்பில் நரம்பு கோணலானால் (இழுத்துக்கொண்டால்) யார் என்ன செய்ய முடியும்?
(ஆகவே அன்றறிவாம் என்னாது அறம் செய்க).

10: மாறும் விதி மாறாதது

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும், தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம், மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

11: விலகியே இருத்தல் நலம்

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை, மீளவே கொடுக்கி னாலே வெய்யுறக் கொட்ட லேபோல், ஏளனம் பேசித் தீங்குற் றிருப்பதை எதிர்கண் டாலும், கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.

தேளானது தீயில் விழுந்த போது அதை இறந்து விடக்கூடாது என்று காப்பாற்றி எடுத்தவரை அது கொடுக்கினாலே கொட்டுவது போல, கேலி பேசியும் கலகம் செய்தும் வாழ்கின்ற கோணல் புத்தி உள்ள ஒருவருக்குச் செய்கின்ற நன்மையானது செய்பவருக்கே துன்பமாக ஆகும்.

(ஆகவே துஷ்டனைக் கண்டால் தூர விலகு.)

12: ஈவதே உயர்வு

மடுத்தவர் வாணர் தக்கோர் மறையவர் இரப்போர்க் கெல்லாம், கொடுத்தவர் வறுமை யுற்றால் கொடாது வாழ்ந் தவர்யார் பூமேல், எடுத்து நாடுண்ட நீரும் ஈயாத காட் டகத்து நீரும், அடுத்த கோ டையிலே வற்றி அல்லதிற் பெருகுந் தானே.

தன்னை அடைந்தவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏழைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும், தானம் செய்ததால் வறுமை அடைந்தவர் பூமியில் யார் உள்ளார்? யாருக்கும் எதையும் கொடாது புகழடைந்தவர் யாரும் உலகில் உண்டோ? அனைவருக்கும் பயன்படும் ஊருக்கு நடுவே இருக்கும் நீர் நிலையும், யாருக்கும் பயன்படாமல் கானகத்தே இருக்கும் நீர்நிலையும் கோடையில் வற்றி மீண்டும் அடுத்த மழைக்காலத்தில் நீர் நிரம்பிப் பெருகும் தானே!

(ஆகவே, செல்வம் வருவதும் போவதும் இயல்பு; அதை அனைவருக்கும் பயன்படுமாறு ஈவதே உயர்வு)

13: காமம் வலியது

உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி, வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி, அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச், சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.

ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.
(ஆகவே எச்சரிக்கையாயிரு.)

14: அறிவே ஆற்றல்

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால், எத்தனை விதத்தி லேனும் இடரது வந்தே தீரும், மற்றொரு சிங்கந் தன்னை குறுமுயல் கூட்டிச் சென்றே, உற்றதோர் கிணற்றிற் சாயல் காட்டிய உவமை போலாம்.

அறிவு இல்லாமல் உடல்வலிமை மட்டும் உள்ள சிங்கம் ஒன்றை, பலமில்லாத அறிவுடைய ஒரு சிறு முயலானது அழைத்துச் சென்று கிணற்று நீரில் அதனுடைய நிழலைக்காட்டி அதை மடியச்செய்தது போல, அறிவுடையவனே உண்மையில் பலவான் ஆவான். அறிவற்றவன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் அவன் துன்பத்தையே இறுதியில் அடைவான்.
(ஆகவே எப்பாடுபட்டாயினும் அறிவைப் பெருக்கு.)

15: உலக இயல்பு

பொன்னொடு மணியுண் டானால் புலையனும் கிளைஞன் என்று, தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வார், மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவா ராகில் பின்னையும் ஆரோ வென்று, பேசுவார் ஏசு வாரே.

பொன்னும் மணியும் நிறைந்த செல்வம் இருந்தால் கீழானவரையும் உறவினன் என்று சொல்லி புகழ்ந்து கொண்டாடி அவன் வீட்டில் திருமணமும் செய்து செய்துகொள்வார்கள். அதேசமயம் மன்னரைப் போல் வாழ்ந்து பின்னர் செல்வம் இழந்து யாருக்கும் எவ்வித உதவியும் செய்ய சக்தி அற்றவராக ஒருவர் ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளமாட்டார், இகழ்ந்தும் பேசுவார்.

(யதார்த்தத்தைப் புரிந்து கொள். உலகின் புகழ்ச்சி இகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.)

16. பணமில்லாதவன் பிணமே

பொருளிலார்க் கின்பம் இல்லை புண்ணியம் இல்லை என்றும், மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை, கருதிய தரும மில்லை கதிபெற வழியுமில்லை, பெருநிலந் தனிற்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.

கையில் பணம் இல்லாத ஏழைக்கு இவ்வுலகில் மகிழ்ச்சியானது இல்லை, நற்செயல்களை செய்ய முடியாததால் புண்ணியமில்லை, புகழ் இல்லை, அவரது புதல்வர்களுக்கும் பெருமை ( ஸமூக அந்தஸ்து) இல்லை. தான தர்மங்களைச் செய்ய முடியாததால் மறுபிறவிக்கும் நன்மை இல்லை. இந்த பெரும் பூமியில் அவர்கள் நடைப்பிணங்களைப் போல திரிவார்கள்.
 (ஆகவே செய்க பொருளை.).

17.ஒழுக்கம் உயர்வு தரும்

ஆசாரம் செய்வா ராகில் அறிவொடு புகழும் உண்டாம், ஆசாரம் நன்மை யானால் அவனியில் தேவர் ஆவார், ஆசாரம் செய்யா ராகில் அறிவொடு புகழும் அற்றுப், பேசார்போல் பேச்சும் ஆகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

நல்லொழுக்கத்தோடு வாழ்பவருக்கு நல்ல அறிவொடு புகழும் உண்டாகும். அவரது (ஈகை முதலான) நற்குணங்களால் பலருக்கு நன்மையும் ஏற்படுமாயின் இவ்வுலகில் அவர் தெய்வமாக மதிக்கப்படுவார். ஒருவர் ஒழுக்கம் தவறினால் அறிவொடு புகழும் இழந்து அவச்சொல்லுக்கு ஆளாகி நோயோடு கொடிய நரகத்தில் வீழ்வார்.

(ஆகவே, ஒழுக்கம் பிழையாதே.)


18. என்றைக்கும் நிலைத்து வாழ

ஒருவனே இரண்டு யாக்கை ஊன் பொதி யான நாற்றம், உருவமும் புகழும் ஆகும் அதற்குள் நீ இன்ப முற்று, மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடும் மற்றி யாக்கை, திறமதாய் உலகம் ஏத்தச் சிறந்துமின் னிற்கு மன்றே.

ஒருவனுக்கு இரண்டு உடல்கள் உள்ளன. ஒன்று மாம்சத்தில் ஆன நாற்றமுடைய கண்ணுக்கு தெரிந்த உருவமுடைது. மற்றது புகழ் எனும் உடல். இன்ப துன்பத்தை அனுபவித்த இந்த மாம்ச உடலானது ஒரு நாள் அழிந்து விடும். புகழ் உடம்பானது உலக மக்கள் போற்றிப்பாட சிறப்பாக என்றைக்கும் நிலைத்துநிற்கும்.
(ஆகவே, புகழ்பட வாழ்.)

19. அன்று மாதம் மும்மாரி பெய்த காரணம்

வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை, நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை,
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை, மாத மூன்று மழையெனப் பெய்யுமே.

வேதத்தை நாள்தோறும் தவறாமல் ஓதுகின்ற அந்தணர்க்காக ஒருமழையும், நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்யும் மன்னனுக்காக ஒருமழையும், கற்புடைய பெண்களின் மாண்பிற்காக ஒருமழையுமென மாதம் மும்முறை மழை பெய்து அன்று நாடு செழித்து இருந்தது.

20. இன்று வருடம் மும்மாரி பெய்வதன் காரணம்

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை, வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை,
புருஷனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை, வருஷ மூன்று மழையெனப் பெய்யுமே.

தானமாகப் பெற்ற அரிசியை விற்பனை செய்த அந்தணருக்காக ஒருமழையும், அறம் தவறி ஆட்சி செய்யும் அரசனுக்காக (ஆட்சியர்க்காக) ஒருமழையும், ஒழுக்கம் தவறிய பெண்களுக்காக ஒரு மழையும்
என இன்று வருடம் மூன்று முறை மட்டுமே மழை பெய்து நாட்டின்  வளமை குன்றி இருக்கிறது.

(யார்யாருக்கும் ஒழுக்கின்றி வான் (மழை) அமையாது.)

21. செல்வத்தின் பயன்

தன்னுடலி னுக்கொன் றீந்தால் தக்கதோர் பலம தாகும், மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யிலே வியாதி யாகும்,
மன்னிய உறவுக் கீந்தால் வருவது மயக்க மாகும், அன்னிய பரத்துக் கீந்தால் ஆருயிர்க் குதவி யாமே.

உழைத்துச் சேர்த்த பொருளை தனக்காக மட்டும் பயன்படுத்தினால் தனது உடல் பலமாகும், தவறான ஒழுக்கமுடைய பெண்களுக்குக் கொடுத்தால் உடலில் நோய் வந்து சேரும்; நெருங்கிய உறவுகளுக்கு பயன்படுத்தினால் பற்று மிகுந்து மனமானது மயங்கி துன்பத்தில் வாடும். ஏழைக்கும் தெய்வப்பணிக்கும் கொடுத்தால்  (அது புண்ணியமாக மாறி) ஜீவனுக்குத் துணையாக நின்று இன்பத்தைக் கொடுக்கும்.

(ஆகவே, ஏழைக்கு இரங்கு. )

22. அறிவே அழியாத செல்வம்

அறிவுளோர் தமக்கு நாளும் அரசருந் தொழுது வாழ்வார்; நிறையொடு புவியிலுள் ளோர் நேசமாய் வணக்கம் செய்வார்; அறிவுளோர் தமக்கு யாதோர் அசடது வருமே யாகில்; வெறியரென் றிகழா ரென்றும் மேதினி யுள்ளோர் தாமே.

அறிவுடைய சான்றோரை அரசர் எப்பொழுதும் போற்றி அவர் ஆலோசனைப்படி ஆட்சி செய்வார்; உலகில் உள்ள மக்களும் அவர் மேல் அன்பு கொண்டு  வணங்கி வாழ்வார்;
அப்படி அறிவுடையவர்க்கு வறுமையானது ஏற்பட்டாலும், ஒன்றுமில்லாதவர் என்று அவரை உலகிலுள்ளோர் இகழ மாட்டார்.

(ஆகவே, பிச்சைபுகினும் கற்கை நன்று.)

23. வெளியிடக்கூடாதவை

குருவுப தேசம் மாதர் 
கூடிய இன்பம் தன்பால், மருவிய நியாயம் கல்வி 
வயது தான் செய்த தன்மம், அரியமந் திரம்வி சாரம் ஆண்மையிங் கிவைக ளெல்லாம், ஒருவருந் தெரிய வொண்ணா (து) உரைத்திடில் அழிந்து போமே.

குரு தனக்கு தனியாக செய்த உபதேசம், பெண்களோடு தான் அனுபவித்த இன்பம், தன்னிடமுள்ள நற்பண்புகள், கல்வி, வயது, தான் செய்த தான தர்மம், குருவிடமிருந்து பெற்ற மந்திரம், ஞானம், தன் ஆண்மை நிலை ஆகியவற்றை ஒருவரும் அறிந்துகொள்ளாதவாறு பாதுகாக்கவேண்டும். வெளியே சொன்னால் அழிவு நேரிடும். 

24. ஈவது விலக்கேல்

இடுக்கினால் வறுமை யாகி ஏற்றவர்க் கிசைந்த செல்வம், கொடுப்பது மிகவும் நன்றே குற்றமே யின்றி வாழ்வார்; தடுத்ததை விலக்கி னோர்க்குத் தக்க நோய் பிணிகளாகி, உடுக்கவே உடையு மின்றி உண்ணுசோ றும்வெல்ல மாமே.

துன்பமும் வறுமையும் நிறைந்தவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை தேவைக்கேற்றவாறு கொடுப்பது மிகுந்த நன்மையைத் தரும். அவ்வாறு கொடுப்பவர் குறைவின்றி வாழ்வர். அவ்வாறு உதவி செய்பவர்களைத் தடுப்பவர்க்கு உடல் மன நோய் உண்டாகி, உடுத்த உடையும் இன்றி, உண்ணும் சோறும் அரிதாகும்.

(ஆகவே, கொடு, முடியாவிட்டாலும் கொடுப்பதைத் தடுக்காதே.)


25. வாய்மையே வெல்லும்

மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடும் மேலும் நன்மை, வையக மதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார், பொய்யதைச் சொல்வா ராகில் போசனம் அற்பம் ஆகும், நொய்யரி சியாகா தென்று நோக்கிடார் அறிவுள் ளோரே.

உண்மையைப் பேசுபவர்களுக்கு நன்மை உண்டாகும். உலகம் அவர்கள் வசப்படும் மனிதர்களுக்குள் உயர்ந்தவராகி தெய்வீக குணங்கள் பொருந்தியவர் ஆவார். மாறாக, பொய்மை பேசினால் உணவு கிடைப்பதும் கடினமாகும். நொய்யரிசி கொதிதாளாது குழைந்துவிடுவது போல, இவர்களிடம் பெருந்தன்மையைக் காணமுடியாது என்று அறிவுடையவர்களும் இவர்களைக் கவனியார்.

(ஆகவே உண்மை பேசு, பொய்மை தவிர்.)

26. நன்றிக்கு வித்து

பொல்லார்க்குக் கல்விவரில் கர்வம் உண்டாம் அதனோடு பொருளும் சேர்ந்தால், சொல்லாதுஞ் சொல்லவைக்கும் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய், நல்லோர்க்கும் மூன்று குணம் உண்டாகில் அருளதிக ஞானம் உண்டாம், எல்லோர்க்கும் உபகார ராயிருந்து பரகதியை எய்து வாரே.

தீய குணம் உடையவருக்கு கல்வி அறிவு வந்தால் கர்வம் உண்டாகும். அதனோடு பொருளும் சேர்ந்தால் உண்மையைத் திரித்து சொல்லக்கூடாததையும் சொல்ல வைக்கும். சொல்லாற்றலால் தவறாக வாதம் செய்து பிறரது வாழ்க்கையையும் கெடுக்கத் துணிவார். மாறாக, நல்லவர்களுக்கு மேற்கண்ட மூன்றும் கிடைக்குமாயின் (கல்வி,செல்வம்,சொல்திறன்)
அருளோடு மேலான ஞானமும் உண்டாகும். (அறிஞர்களோடு வாத, விவாதம் செய்து  மெய்ப்பொருள் பற்றிய மேலான ஞானத்தை அடைவார்கள்.) பிறருக்கு 
உபகாரமாக வாழ்ந்து மேலான கதியான மோக்ஷத்தை அடைவர்.

(ஆகவே, ஒழுக்கம் விழுப்பம் தரும்.)

27. இகலோக சொர்க்கம்

நற்குண முடைய வேந்தை நயந்துசே வித்த லொன்று, பொற்புடை மகளி ரோடு பொருந்தியே வாழ்த லொன்று, பற்பல ரோடு நன்னூல் பகர்ந்துவா சித்த லொன்று, சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையிற் சொர்க்கம் தானே.

அறநெறியில் ஆட்சிசெய்யும் நற்குணமுள்ள அரசனை (அரசனின் ராஜ்ஜியத்தில்) விரும்பிப் பணிவிடை செய்து வாழ்தல் ஒன்று,  கற்புடைய - நற்பண்புகளுள்ள - மனைவியோடு மனமொன்றி சேர்ந்து வாழ்தல் ஒன்று, ஒத்த சிந்தனை உடையவர்களோடு நல்ல மெய்ஞான நூல்களை சேர்ந்து வாசித்தல் ( வாசித்து ஞானம் பெறுதல்) ஒன்று என இம்மூன்றும் இப்பூவுலகின் சொர்க்கங்கள் ஆகும்.

28. இகலோக நரகம்

அறங்கெடும் நிதியும் குன்றும் ஆவியும் மாயும் காலம், நிறங்கெடும் மதியும் போக நீண்டதோர் நரகிற் சேர்க்கும், அறங்கெடு மறையோர் மன்னன் வணிகர்நல் லுழவோர் என்றும், குலங்கெடு வேசை மாதர் குணங்களை விரும்பி னோர்க்கே.

கல்விமான்கள், அரசாள்பவர், வணிகர், விவசாயி என எத்தரப்பினர் ஆயினும் (தனக்கு உரிமையல்லாய) அன்னிய மாதரை விரும்பினவர்களுடைய புண்ணியம் கெடும், செல்வம் குறைந்துபோகும், அழகு குன்றும், அறிவும் கெட்டுப்போகும், அற்ப ஆயுளில் உயிர்போகும், மரணத்திற்குப் பிறகு நெடுங்காலம் நரகத்தில் வாழ்வர்.

(ஆகவே, பிறன்இல் விழையாதே.)

பாடல் 29: யாருக்கு என்ன?

நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்க் கனிமலர்த் தாளைக், கிட்டையிலே தொடுத்து முத்தி பெருமளவும் பெரிய சுகங் கிடைக்குங்காம, வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம் பேசி விரும்பித் தாலி, கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்து மட்டுங் கவலை தானே.

ஞான நிட்டையில் இருந்து,
மனதில் அனைத்தையும் துறந்து, முக்தி சேரும் வரை
இறைவனின் திருவடிகளை பற்றி வாழும் (பேரறிவுடைய) பெரியவர்களுக்கு
பேரின்பம் கிடைக்கும். மாறாக, காம வெப்பத்தினால்  மதிமயங்கி, திருமணம் பேசி விரும்பித் தாலிகட்டுகையில் தொடங்கி சுடுகாட்டிலே 
கட்டையிலே சேரும் மட்டும் (சிற்றறிவுடைமையால்) சிறுவர் (போன்றவர்)களுக்குக் கவலை (துன்பம்) தான் மிஞ்சும் (கிடைக்கும்).

30: யாவும்பகை

தாய்பகை பிறர்நட் பாகில் தந்தை கடன் கார னாகில், வாய்பகை மனைவி யாரும் மாயழகு உற்ற போது, பேய்பகை பிள்ளை தானும் பெருமை கல்லா விட்டால், சேய்பகை யொருவர்க் காகும் என்றனர் தெளிந்த நூலோர்.

பிறர் நட்பாக இருந்தாலும், தாய் பகையாகவும் தந்தை கடனாகாரனாகவும் ஒருவனுக்கு இருந்தால் அவன் வாழ்க்கையில் பகையே வாய்க்கும். மேலும்  மிகுந்த அழகுள்ளவளாக இருந்தால் மனைவியும், சிறந்த அற நூல்களைக் கல்லாதவனாக இருந்தால் புத்ரனும் பகையாக ஆவர் என்று சொல்வர் கற்றறிந்தவர்.

வேறுபாடம்
தாய்பகை யன்புஅற்றாளேல் தந்தைபகை கடனாளியானால், பேய்பகை மனைவி நல்ல மதியினை யிழந்தா ளாகில், வாய்பகை யறிவுண் டாக்கு மறநூலைக் கல்லா விட்டால், சேய்பகை சிறுமைக் காகுஞ் செந்நெறி யொழுகா விட்டால்.

ஒருவனுக்கு அன்பு இல்லாவிட்டால் தாயும் பகையாக இருப்பாள், கடனாளியானால் தந்தையும் பகையாக இருப்பார், நல்ல மதியினை இழந்தால் மனைவியும் பேய் போன்ற பகையாக ஆகிவிடுவாள், அறிவுநூல்களை ஒருவன் கற்காவிட்டால் அவனுடைய வாயே (பேச்சே) அவனுக்குப் பகையாக இருக்கும், நல்வழியில் செல்லாத அச்சிற்றறிவுள்ளவனுக்குப் புதல்வனும் பகையாக இருப்பான்.

31: நிலை தாழ்ந்தால்...

நிலை தளர்ந் திட்ட போது நீணிலத்(து) உறவு மில்லை, சலமிருந்தகன்ற போது தாமரைக்(கு) அருக்கன் கூற்றம், பலவனம் எரியும் போது பற்றுதீக்(கு) உறவாம் காற்று, மெலிவது விளக்கே யாகில் மாறியே வாகும் கூற்றம்.

தன்னிலையிலிருந்து ஒருவன் (செல்வத்திலோ ஒழுக்கத்திலோ  அதிகாரத்திலோ) தவறிவிட்டால் பூமியில் உறவுகள் இல்லாமல் போய்விடும். (நீரிலிருக்கும்போது உறவாக இருக்கும்) சூரியன் நீரை விட்டு அகன்றபோது தாமரைக்கு எமனாக ஆகிவிடுகிறது. வனத்தைப் பற்றியெரியும்போது தீக்கு உறவாக இருக்கும் காற்று, மெலிந்து விளக்கில் எரியும் போது அணைக்கும் பகையாக ஆகிவிடுகிறது.

(ஆகவே, சார்புணர்ந்து சார்புகெட ஒழுகு.)

பாடல் 32: அநித்ய சுகம்

கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம், விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை, மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி, வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.

ஒரு கருடன்  தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும்,  தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து  அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.

(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)

33: அற்ப ஆசைகளால் வாழ்வு அழியும்

கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளும், இரிதலைப் புற்றில் நாகம் இன்று காணும் இரைஈ தென்று, விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி, நரியனார் பட்ட பாடு நாளைநாம் படவே போறோம்.

யானையை வேட்டையாடிய வேடனை, பாம்பு கடிக்க, பாம்பைக் கொன்று வேடன் இறந்தான். அங்கு வந்த நரி ஒன்று இந்த யானை ஆறுமாதங்களுக்கு உணவாகும், வேடன் மூன்று நாட்களுக்கு உணவாவான், பாம்பு ஒருநாளுக்கு உணவாகும், இப்பொழுது நாம் இந்த வில்லிலுள்ள நரம்பைத் தின்போம் என்று கடிக்க, நரம்பு அறுபட்டு நிமிர்ந்த வில்லானது தலையில் அடிக்க நரி இறந்து போனது. (இப்படியே வாழ்வில் அற்புதங்கள் பல இருக்க, அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தால், எதையும்  அனுபவிக்காமலே) நாளை நாம் நரிபட்டபாடு படவே போகிறோம்.

34: யார் யார், யார்?

கருதிய நூல் கல்லாதான் மூட னாகும் கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்,
ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும் ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும், பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாமல் இருப்பவனே பேய னாகும், பரிவு நழுவினவன் பசப்ப னாகும் பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே.

சான்றோர்கள் உயர்வாகக் கருதிய நூல்களைக் கற்காதவன் மூடன். யாரிடம், எங்கே, எப்படி, எவ்வளவு பேசவேண்டும் என்பதை அறியாமல் பேசுபவன் குற்றவாளி, எந்த வேலையும் செய்யாது வீணே பொழுதைக் கழிப்பவன் மூதேவி. யாருக்கும் பயன்படாதவன் சோம்பேறி. பெரியவர்களை வணங்கி ஆசி பெறாதவன் பேய். வேலையைச் செய்யாமல் அதற்கு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பவன் பொய்யன். பசித்தவனுக்குக் கொடாமல் தானே உண்பவன் பாவி.

பாடல் 35: கூடா ஒழுக்கம்

சம்புவே என்ன புத்தி சலந்தனில் மீனை நம்பி, வம்புறு வடத்தைப் போட்டு வானத்தைப் பார்ப்ப தேனோ, அம்புவி மாதே கேளாய் அரசனை அகல விட்டு, வம்பனைக் கைப்பி டித்த வாறுபோல் ஆயிற் றன்றே.

அழகிய பெண்ணே கேளாய், (நீ)
காக்கின்ற கணவனை விட்டு,
கொடியவன் ஒருவனை கைபிடித்தது, நீரில் ஓடுகின்ற மீனை நம்பி, வாயிலுள்ள உலர்ந்த மீனை போட்டு விட்டு வானத்தை பார்க்கும் நரியொன்றின் புத்தி போல ஆயிற்று அல்லவா!

(அல்லது)
நரியைப் பார்த்து ஒரு பெண் கேட்டாள், நரியே, என்ன புத்தி உடையவன் நீ, நீரில் தெரிகின்ற மீனை நம்பி ( ஆசைப்பட்டு அதைப் பிடிக்க விரும்பி) வாயில் வைத்திருந்த உலர்ந்த மீனை விட்டு  விட்டு இப்பொழுது வானத்தை பார்ப்பது ஏனோ?, 
நரி சொன்னது, "அழகிய பெண்ணே கேளாய், நீ உன் தலைவனை விட்டு விட்டு கயவன் ஒருவனை கைப்பிடித்தது போல் ஆயிற்று அல்லவா இது?"

(அல்லது)
அழகிய பெண்ணே கேளாய், நீ தலைவனை (கணவனை) விட்டு விட்டு கயவன் ஒருவனை கைப்பிடித்தது, நீரில் தெரிகின்ற மீனை நம்பி ( ஆசைப்பட்டு அதைப் பிடிக்க விரும்பி) வாயில் வைத்திருந்த மீனை விட்டு  விட்ட நரியின் (சபல) புத்தி போலாயிற்று அல்லவா? 
(இருப்பதையும் இழந்து) இப்பொழுது வானத்தை பார்ப்பது ஏனோ?

36: அழிவன

மூப்பிலாக் குமரி வாழ்க்கை, முனிவிலா அரசன் வீரம், காப்பிலா விளைந்த பூமி, கரையிலா திருந்த ஏரி,
கோப்பிலான் கொண்ட கோலம், குருவிலான் கொண்ட ஞானம், ஆப்பிலாச் சகடு போல அழியும் என்று உரைக்க லாமே.

மூத்தவர் துணை இல்லாத குமரிப் பெண்ணின் வாழ்க்கை, கோபம் இல்லாத அரசனின் வீரம், பாதுகாப்பு வேலியில்லாத விளைநிலம், உயர்ந்தகரை இல்லாத ஏரி, ஒழுக்கமில்லாதவன் கொண்ட  அழகு, குரு அருள் இல்லாமல் பெற்ற ஞானம் ஆகியவை அச்சாணி இல்லாத வண்டி போல அழிந்து போகும்.

37: நரகம் அடைபவர்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன், அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன், சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர், செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).

38: நடுநிலை தவறினால்..

நாரிகள் வழக்க தாயின் நடுவறிந்து உரைப்பார் சுத்தர், ஏரிபோல் பெருகி மண்மேல் இருகணும் விளங்கி வாழ்வார், ஓரமே சொல்வ ராகில் ஓங்கிய கிளையும் மாண்டு, தீரவே கண்கள் ரெண்டும் தெரியாது போவார் தாமே.

ஏழைப் பெண்களாயினும் நடுநிலை தவறாமல் நீதி வழங்கும் சுத்தமான மனதுடைய நீதிபதிகள் பெரிய நீர்நிலை போல் யாவரும் புகழத்தக்க பெருமையுடன் வாழ்வார்கள். நடுநிலை தவறி நீதி பிறழ்ந்து தீர்ப்பு வழங்கினால் தம் உறவினர் யாவரையும் இழந்து இருகண்களும் தெரியாத குருடர் ஆவர்.

39: கடமை தவறினால்

மண்டலத் தோர்கள் செய்த
பாவம்மன் னவரைச் சாரும், திண்டிநல் மன்னர் செய்த தீங்குமந் திரியைச் சாரும், தொண்டர்கள் செய்த தோஷம் தொடர்ந்துதம் குருவைச் சாரும், கண்டன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்காமே.

மக்கள் செய்யும் பாவம் மன்னவரை சாரும் (மக்கள் தர்மமாக வாழ்தலை நிலைநாட்டாதாதலால்), மன்னன் செய்யும் பாவம் மந்திரியை சாரும் (மன்னனை சரியாக வழிநடத்தாதலால்), சீடர்கள் (மாணவர்கள்) செய்யும் பாபம் குருவை (ஆசிரியரைச்) சாரும் ( அறத்தின் வலிமையை மாணவர்களுக்கு  சரியாக உணர்ந்தாததால்), மனைவி செய்யும் பாபம் கணவனையே சாரும் (மனைவியை சரியாகக் கவனிக்கவில்லை என்பதால்). 

40: ஒழுக்கம் தவறினால் 

நட்பிடைக் குய்யம் வைத்தார், பிறன்மனை நலத்தைச் சேர்வார்,
கற்புடைக் காமத் தீயார் கன்னியை விலக்கி னோரும், அட்டுடன் அஞ்சு கின்றோர் ஆயுளும் கொண்டு நின்று, குட்ட நோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய்.

நட்பில் வஞ்சனை செய்தவர்களும், பிறர் மனைவியை விரும்பிச் சேர்ந்தவர்களும், கற்புடை  மனைவியோடு சேர்ந்து வாழாமல் விலக்கினோரும், விருந்தினரை வரவேற்று உபசரிக்காமல் விலகியவரும் அல்லது யுத்த களத்தில் அஞ்சி பின்வாங்கிய கோழையும், நீண்ட ஆயுளோடு இந்த பூமியில் வாழ்ந்து குட்டநோய் பிடித்து நரகத்தில் வீழ்வர்.

41:  பேராசையுள்ளவர் பாடு

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பா லிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி, அருட் பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன் றில்லார், குருபாலர் கடவுளர் பால் வேதியர் பால்  புலவர் பாற் கொடுக்க ஓரார், செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே
கோடி செம்பொன் சேவித் தீவார்.

சிலர் பொருளை (பணத்தை) மிக  விரும்புவார்கள். காமத்திற்கு செலவழித்து மூழ்கிப் புரள்வர், புகழையும் புண்ணியத்தையும் தரும் அறச்செயல்களைச் செய்ய கனவிலும் விரும்பமாட்டார், அறிவில்லாத இவர்கள் குரு, கடவுள், அந்தணர், ஏழைப் புலவர் இவர்களுக்கு கொடுக்க நினைக்க மாட்டார், செருப்பாலே அடித்து மிரட்டிப் பறிக்கும் தீயவர்களுக்கு பணிந்து கொடுப்பார்.

42: அற்பரைச் சேராதே

பருப்ப தங்கள் போல் நிறைந்திடு நவ மணிப் பலன்களைக் கொடுத்தாலும்,
விருப்பு நீங்கிய கணவரைத் தழுவுதல் வீணதாம் விரையார்ந்த, குருக்கு சந்தனக் குழம்பினை அன்பொடு குளிர்தர அணிந்தாலும், செருக்கு மிஞ்சிய அற்பர்தம் தோழமை செப்பவும் ஆகாதே.

மலைபோன்ற செல்வதோடு நவமணிகளை கொடுத்து திருமணம் செய்துவைத்தாலும், விருப்பம் இல்லாத கணவனை அடைந்த ஒரு பெண்ணின் இல்வாழ்க்கை வீணதாகும். நறுமணம் மிகுந்த சந்தனம் முதலிய வாசனைப் பொருள்களை உடலில் பூசிக் கொண்டு இருந்தாலும் கர்வம் நிறைந்த அற்பப் புத்தியுடையவன் நட்பு - சிறுமை உடையதாக வெளியில் சொல்லவும் முடியாததாக - பயனற்றதாக இருக்கும்.

43: ஆராய்ந்து செய்

சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ் வார் புல்லர், வல்லவர் விசாரி யாமற் செய்வாரோ நரி சொற் கேட்டு, வல்லியம் பசுவும் கூடி மாண்ட தோர் கதையைப் போலப், புல்லியர் ஒருவ ராலே போகுமே யாவும் நாசம்.

அறிவற்றவர், பிறர் சொல்வதைக் கேட்டு நீண்டநாள் நட்பை இகழ்ந்து விலக்குவர். அறிவுடையவர் ஆராயாமல் ஒரு செயலையும் செய்யார். நரியின் பேச்சை கேட்டு கிழப்புலியின் இருப்பிடம் சென்று பசு மாண்டதைப் போல தவறான, கீழான அறிவுடையவர்களுடைய சொல்லைக் கேட்டால் நாசமே உண்டாகும்.

44: மூடரை மூடரே..

கழுதை காவெனக் கண்டு நின்
றாடிய அலகை, தொழுது மீண்டு மக் கழுதையைத் துதித்திட அதுதான்,
பழுதிலா நமக்கு ஆர் நிக ராம் எனப் பகர்தல், முழுது மூடரை மூடர் கொண் டாடிய முறை போல்.

ஒரு கழுதை கா என்றுகத்தியதை கண்டு பாராட்டியது ஒரு பேய். உடனே அக்கழுதையும் யார் நமக்கு நிகர் என்று நினைத்து மேலும் மேலும் கத்தியது, மூடரை மூடரே கொண்டாடுவது போல.

45: அன்னமிட்டு உண்

மண்ணார் சட்டி கரத் தேந்தி
மர நாய் கவ்வும் காலினராய், அண்ணார்ந் தேங்கி இருப்பாரை அறிந்தோம் அறிந் தோம் அம்மம்மா, பண்ணார் மொழியார் பாலடிசில் பைம் பொற் கலத்தில் பரிந்தூட்ட, உண்ணா நின்ற போ(து) ஒருவர்க்கு உதவா மாந்தர் இவர் தாமே.

மண் சட்டியை கையில் ஏந்தி, நாய்கள் துரத்தி வர, உணவுக்கு ஏங்கி, அலைந்து திரிகின்றவரைப் பார்க்கும் பொழுது அறிந்துகொண்டோம், அந்தோ!  ஒருகாலத்தில், இனிய மொழிகள் பேசி பெண்கள் தங்க கிண்ணத்தில் பால்சோறு ஊட்ட செல்வச் செழிப்போடு வாழ்ந்து இருந்தபோது, ஒருவருக்கும் ஒன்றும் ஈயாத மனிதர் இவர் என்று.

46: தீமையே தருவது

வல்லியம் தனைக் கண் டஞ்சி
மரந்தனில் ஏறும் வேடன், கொல்லிய பசியைத் தீர்த்து இரட்சித்த குரங்கை கொன்றான்,
நல்லவன் றனக்குச் செய்ய நலமது மிக்க தாகும்,
புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்கு வாரே.

புலிக்கு பயந்து மரத்தில் ஏறிய வேடன் ஒருவனை அங்கு இருந்த குரங்கு ஒன்று இடம் கொடுத்து, உணவும் கொடுத்து, அவனைப் பாதுகாத்தது. ஆனால் புலியானது அங்கிருந்து செல்லாமல் அங்கேயே இருக்க, இரை கிடைத்தால்தான் செல்லும் என்று குரங்கைக் கொன்று புலிக்கு இரையாக்கினான். நல்லவர்களுக்கு உதவி செய்தால் நன்மையே உண்டாகும். தீயவர்களுக்கு உதவி செய்தால் (அவர்கள் சுயநலத்திற்காக) நம் உயிரைப் போக்கும் தீமையையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

47: கீழ்மக்கள் யார் ?

தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான் சொல் வோரும், பொன்னைத்தான் தேடியறம் புரியாமல் அவை காத்துப் பொன்றி னோரும், மின்னைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும், அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறமில்லாக் கசட ராமே,

தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.

48: அறிவிலார் செய்கை

குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே, அரங்கு முன்பு நாய் பாடி கொண்டாடுவது போல், கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு, சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.

குரங்குகள் கூடி நின்று ஆடிய ஆட்டத்தைக் கண்டு, நாய் ஊளை இட்டுக் கொண்டாடுவது போன்றது, (வஞ்சகம் போன்ற) கீழான குணங்கள் உள்ள மனிதர், கைகளை நீட்டிக் குரலை உயர்த்திப் பேசுவதை கண்டு தலைகள் ஆட்டியே பாராட்டுவது, விவேகம் இல்லாதவர்கள் செய்கையாகும்.

49: ஆபத்துக்காலத்தில் உதவாதவை

தன்னுடன் பிறவாத் தம்பி, தனைப் பெறாத் தாயார் தந்தை, அன்னிய ரிடத்துச் செல்வம், அரும் பொருள் வேசி யாசை, மன்னிய ஏட்டின் கல்வி, மறுமனை யாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் ஆறும் இடுக்கத்துக்கு உதவா தன்றே.

தன்னுடன் பிறவாமல் சகோதரன் போல் பழகுபவன், தாய் தந்தை போல பழகக்கூடிய தாய் தந்தை அல்லாதவர், இன்னொருவரிடம் இருக்கும் தன்னுடைய செல்வம், விலை மகளிரின் அன்பு, மனனமாகாமல் புத்தகத்தில் இருக்கும் கல்வி, இன்னொருவன் மனைவியோடு வாழ்க்கை நடத்துதல், இவை ஆறும் துன்பகாலத்தில் உதவாதவை.

50: ஆபத்தானவை

அரவினை ஆட்டு வாரும், அருங்களிறு ஓட்டு வாரும், இரவினில் தனிப்போ வாரும், ஏரி நீர் நீந்து வாரும், விரை செறி குழலி யான வேசியை விரும்புவாரும், அரசனை பகைத்திட் டாரும் ஆருயிர் இழப்பர் தாமே.

பாம்பு பிடித்து வாழ்பவரும், யானையை ஓட்டும் பாகனும், இரவினில் தனியாகப் பயணிப்பவரும், ஆபத்து தெரியாமல் ஏரிநீரில் நீந்துபவரும், விலைமகளிரை விரும்புபவரும், அரசனைப் (அதிகாரத்தில் உள்ளவரைப்) பகைத்துக்கொண்டவரும் தன் இன்னுயிரை இழப்பர்.
( உயிர் வாங்கும் ஆபத்து உடையவை இவை என்பது கருத்து).

51: மாறாதன

தும்பினில் புதைத்த கல்லும் துகளின்றிச் சுடர்வி டாது,
பாம்புக்குப் பால் வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா, வேம்புக்குத் தேன் வார்த் தாலும் - வேப்பிலை கசப்பு மாறா தாம் பல நூல் கற் றாலும் - துர்ச்சனர் நல்லோர் ஆகார்.

சேற்றில் புதைந்து இருக்கும் உயர்ந்த மணியானது ஒளி விடாது, பாம்புக்கு பால் வார்த்து பழகினாலும் அது நன்மையைத் தராது, வேம்புக்கு தேன் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புச்சுவை மாறாது. அதுபோல பல நூல்களைக் கற்றாலும் கெட்டகுணம் உடையவர் நல்லவராக மாட்டார்.

52: நம்பக்கூடாதன

கல்லாத மாந்தரையும், கடுங்கோபத் துரைகளையும் காலந் தேர்ந்து,
சொல்லாத அமைச்சரையும் துயர்க்குதவாத தேவரையும், சுருதி நூலில், வல்லாவந் தணர்தமையும் கொண்டவனோடு
எந்நாளும் வலது பேசி, நல்லார் போல் அருகிருக்கும் மனைவியையும்
ஒரு நாளும் நம்பொ ணாதே.

அறிவில்லா மனிதரையும், கடுங்கோபம் கொண்ட அரசனையும், உரிய காலத்தில் நல்ல ஆலோசனைகளை சொல்லாத அமைச்சரையும், துயர் தீர்க்காத தெய்வத்தையும், வேதம் பயிலாத அந்தணரையும், கணவனோடு எப்போதும் சண்டையிட்டுப் பேசி நல்லவர்போல் அருகிருக்கும் மனைவியையும் எப்பொழுதும் நம்பக்கூடாது. (எச்சரிக்கையாக இருக்கவேண்டும்)

53: எதிர்த்து நில்

மையது வல்லி யம் வாழ் மலைக் குகை தனிற்பு குந்தே, ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்துங் காலை, பையவே நரிக் கோ ளாலே - படுபொருள் உணரப் பட்ட, வெய்ய அம் மிருகம் தான் கொன்றிட வீழ்ந்த தன்றே.

(சாயத் தொட்டியில் விழுந்து நிறம் மாறிய) ஆடு ஒன்று தான் வலிமை பெற்று விட்டதாக நினைத்து, புலியின் குகையில் நுழைந்தது. புலிக்கு பயம் காட்டி காட்டில் துரத்த, எதிர்ப்பட்ட நரி ஒன்று 'ஏன் பயந்து ஓடுகின்றாய் எதிர்த்துப் பார்' என்று சொல்ல, அவ்வாடு புலியால் கொல்லப்பட்டது. 

(எதையும் எதிர்கொண்டு பார்.)

54: நட்பாராய்தல்

அருமையும் பெருமை தானும் அறிந்துடன் படுவோர் தம்மால், இருமையும் ஒருமை யாகி இன்புறற் கேது வுண்டாம், பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்கள் தம்மால், ஒருமையில் நிரய மெய்தும் ஏதுவே உயரும் மன்னோ.

ஒருவரின் அரிய, பெருமைப்படத்தக்க பண்புகளை அறிந்து நட்புக்கொண்டவர்கள் உடல் இரண்டாக இருந்தாலும் உள்ளம் ஒன்றாகி இன்பத்தை அடைவதற்கு அது காரணமாகும். கருணையில்லா சகுனி போல நற்பண்புகள் இல்லாதவருடனான நட்பு, துன்பத்தை தரும் நரகத்தை அடைவதற்கே காரணமாகும்.
( ஆராய்ந்து நட்புக்கொள்.)

55: வறுமை கொடிது

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும், வேங்கைபோல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும், பூங்கொடி மனையாட்(கு) அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும், ஓங்கிய அறிவு குன்றி
உலகெலாம் பழிக்கும் தானே.

தாங்கிக்கொள்ள இயலாத அளவிற்கு ஒருவனுக்கு வறுமை வந்தால் அறிஞர் சபைதனிலே செல்வதற்கு நாணம் உண்டாகும். வேங்கை போன்று இருந்த வீரம் குன்றி விருந்தினரை எதிர்கொள்ளவும் (எப்படி உபசரிப்பது என்று) நாணம் உண்டாகும், மனைவியின் முகத்தை பார்ப்பதற்கும் (என்ன சொல்வாளோ என்று) அச்சம் வரும், பொய் சாட்சி சொல்லவும் மனம் ஒப்பும், உயர்ந்த அறிவும் குன்றிப் போக சமூகமும் அவனை பழித்துப் பேசும்.

56: வினைமாற்றும்

வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழ வேண்டாம், தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க, ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ, ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டி லீரோ.

(விதியினால்) நல்ல வாழ்வது வந்த போது மனதில் (அளவிற்கதிகமாக) மகிழ்ச்சி கொள்ளவேண்டாம். விவேகமுள்ளவர் விதியினால் தாழ்வானது வந்தபோதும் மனம் தளரமாட்டார். வினைப்பயனை யாராலே மாற்றமுடியும், பரம ஏழையாய் இருந்தவர் பல்லக்கில் ஏறுவதை (அரசனாக ஆவதை) பார்த்ததில்லையோ!

57: ஆணவ நோய்

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில், உருத்தெரி யாமலே ஒளிம ழுங்கிடும், மருத்துவ தோவெனில் வாக டத்திலை, தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே.

அதிகமான செல்வத்தினால் அகங்காரம் ஆகிய நோய் வந்துவிட்டால், உலகமானது தெரியாமல் அறிவு மறைந்துவிடும். இதற்கு மருந்து மருத்துவ நூல்களில் இல்லை, செல்வத்தை இழந்து வறுமை அடைதலென்னும் மருந்தொன்றால்தான் அது தீரும்.

58. இருக்கும் இடமே சிறப்பு

யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா, பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ, தானையும் தலைவரும் தலம் விட்(டு) ஏகினால், சேனையும் செல்வமும் திரங்கு வார்களே.

நீரில் யானையையும் இழுக்கும் வலிமையுடைய முதலையானது, கரைதனில் பூனையை இழுக்கவும் வலிமையற்றதாக இருக்கின்றது. அதுபோல சேனையும் சேனைத்தலைவரும் தன் நாட்டை விட்டுப் போனால் சேனையும் செல்வமும் குன்ற வலிமையற்றுவிடுவார்கள்.

59. எச்சரிக்கையாக இருக்கவேண்டுவன

வில்லது வளைந்த தென்றும்
வேழம துறங்கிற் றென்றும், வல்லியம் தூங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும், புல்லர்தம் சொல்லுக் கஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்றும், நல்லதென் நிற்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.

வில் வளைந்து இருக்கின்றது என்றும், யானையும் புலியும் உறங்கிக் கொண்டிருக்கின்றது என்றும், வளர்த்த ஆடு பின் செல்கின்றது என்றும், தீயவர்களின் சொல்லுக்கு அஞ்சி பெரியவர்கள் பொறுமை காக்கின்றனர் என்றும் (ஆகவே ஆபத்து இல்லை) நல்லது என்று தவறாக நினைக்க வேண்டாம், இவை தீமையே விளைவிக்கும் என்று எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

60. சான்றோர் நட்பு

சலந்தனிற் கிடக்கும் ஆமை சலத்தைவிட் டகன்ற போது, கொலைபுரி வேடன் கண்டு கூறையில் கொண்டு செல்ல, வலுவினால் அவனை வெல்ல வகையொன்றும் இல்லை யென்றே, கலை எலி காகம் செய்த கதையென விளம்பு வோமே.

தண்ணீரில் இருக்கும் ஆமை ஒன்று நீரை விட்டு வெளியே வந்தபோது, வேடன் ஒருவன் பார்த்து வலை கொண்டு பிடித்து செல்ல, வலிமையினால் அவனை வெல்லமுடியாது என்றுணர்ந்து மானும் எலியும் காகமும் தங்களுடைய தந்திரத்தினால் ஆமையைக் காப்பாற்றிய கதை நல்ல நட்பிற்கு உதாரணம் எனக்கூறுவோம்.

(கதையைப் பஞ்சதந்திரத்தில் காண்க.
ஆகவே நல்லவர்களை, விவேகிகளை நட்பாகக் கொள்க.)

61. நலமும் கேடும் யாரால்?

நிலமதில் குணவான் தோன்றின் நீள்குடித் தனரும் வாழ்வார், தலமெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்; நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம், குலமெலாம் பழுது செய்யும் கோடாரிக் காம்பு நேராம்.

ஒரு குடும்பத்தில் நல்ல குணமுடைய ஒருவன் தோன்றினால் அவனுடைய குடும்பமும் குலமும் நாடும் நல்ல பெருமையோடு வாழும். தான் இருக்கின்ற நிலம் முழுவதும் வாசனையை பரப்புகின்ற சந்தன மரத்திற்கு ஒப்பாவான் அவன். நன்மையைத் தராத தீயகுணங்கள் உடைய ஒருவன் தோன்றினால் அவன் குடும்பமும் குலமும் தேசமும்  கெடுதலையடையும். அது தன் மரஇனத்தையே அழிக்கும் கோடாரியின் கைப்பிடிக்குச் சமானமாகும்.

62. அந்தணர் அறம் மாறினால்..

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும், மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும், சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும், அந்தணர் கருமம் குன்றில்
யாவரே வாழ்வர் மண்ணில்.

அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?

63. கேடு செய்பவை

கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும், கேள்வி யில்லா அரசனால் உலகம் பாழாம்,  துற்புத்தி மந்திரியால் உலகுக்(கு) ஈனம்,
சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்திற்(கு) ஈனம், நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார், நன்மை செய்யத் தீமையுடன் நயந்து செய்வார், அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்,
அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே.

தாய்மையினால் தளர்ச்சி ஏற்பட்டு பெண்களுக்கு இளமை அழகு குறையும்; சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடக்காத அரசனால் உலகம் அழிந்து போகும்; கெட்ட புத்தியுடைய மந்திரியால் நாடு சிறுமை அடையும்; பெரியோர்களின் சொல்கேளாத  பிள்ளைகளால் குலத்திற்கு இழுக்கு ஏற்படும்; கீழான குணமுடையவர்கள் நல்ல உபதேசங்களை கேட்கமாட்டார்; அவர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீமையையே விரும்பிச் செய்வார்; கீழானவர்களோடு சேர்ந்தால் நல்லவர்களுடைய பெருமை குறையும்; உயர்ந்த தவம் சினத்தால் அழிந்து போகும்.

64. செல்வச் பெருக்கால் விளையும் கேடு

செல்வம் வந்துற்ற போது தெய்வமும் சிறிதும் பேணார்; சொல்வதை அறிந்து சொல்லார்; சுற்றமும் துணையும் பேணார்; வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார்; வல்வினை விளைவும் பாரார்; மண்ணின் மேல் வாழும் மாந்தர்.

பூமியில் வாழும் மனிதர் மிகுதியான செல்வச் செருக்கு வந்துற்ற போது, கடவுளை சிறிதும் நினைக்க மாட்டார், கேட்பவர் தகுதி பார்த்து சிந்தித்து பேச மாட்டார், உறவுகளையும் மனைவியையும் பேண மாட்டார், வெல்லமுடியாத வலிமையுடையது வினை என்று அறியமாட்டார், வினையின் விளைவையும்
சிந்தித்துப் பார்க்க மாட்டார்.

(செல்வச் செருக்கு கண்ணை மறைக்கும்)

65. மனிதப்பிறவி அரிது

பூதலத்தின் மானிடராய்ப் பிறப்பதரிது என புகழ்வர் பிறந்தோர் தாமும், ஆதிமறை நூலின்முறை அருள்கீர்த்தி யாம் தலங்கள் அன்பாய்ச் சென்று, நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம் கொண்டு, காதவழி பேர் இல்லார் கழுதை எனப் பாரில் உள்ளோர் கருதுவாரே.

பூமியின் மேல் மனிதராய் பிறப்பது அரிது என்று சான்றோர்கள் சொல்லுவர். 
அப்படி மனிதர்களாய் பிறந்தவர்கள் வேத நூல்களைப் பயின்று அதன்படி வாழ்ந்து இறையருளும் புகழும் பெறவேண்டும். புண்ணிய தலங்களுக்கு பக்தியோடு சென்று வழிபட்டு, எங்கும் நீதி தவறாமல் எடுத்துப்பேசி, நல்லவர்களை நேசித்து வாழ வேண்டும். பத்து மைல் தூரமாவது தன் புகழ் பரவி இருக்குமாறு வாழாதவர் கழுதையென்று என்று உலகில் உள்ளோர் கருதுவார்.

(தோன்றிற் புகழோடு தோன்றுக!)

66. ஓரம் சொன்னால் உதிர்ந்து போவாய்!

ஆரம் பூண்ட அணிமார்பா அயோத்திக் கரசே அண்ணாகேள், ஈரம் மிக்க மரமிருக்க இலைகள் உதிர்ந்த வாறேது, வாரங் கொண்டு வழக்குரைத்து மண்மேல் நின்று வலிபேசி, ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே.

மாலைகளை அணிந்த அழகிய மார்புடைய அயோத்தியின் அரசே (ராமா), பசுமையாக மரம் இருக்க அதில் உள்ள இலைகள் காய்ந்து உதிர்ந்தது ஏன் அண்ணா? (என்று தம்பிகள் கேட்க), இவர் நமக்கு வேண்டியவர், இவர் வேண்டாதவர் என்று வரம்பு வைத்து வழக்கை விசாரித்து ஒருதலைப்பட்சமாக தீர்ப்புச் சொன்ன நீதியரசர்கள் வாழ்க்கையைப் போல உதிர்ந்து கிடக்கின்றன தம்பிகளே! (என்று ராமர் பதில் சொன்னார்.)

67. நெருங்கமுடியாதவை

கற்புடை மாதர் கொங்கை
கவரி மான் மயிரின் கற்றை, வெற்புறு வேங்கை யின் தோல் வீரன்கை வெய்ய கூர்வேல், அற்பர்தம் பொருள்கள் தாமும் அவரவர் இறந்த பின்னே, பற்பலர் கொள்வார் இந்தப் பாரினில் உண்மை தானே.

கற்புடைய பெண்ணின் உடலையும், கவரி மானின் முடியையும், குகையில் வாழும் வேங்கையின் தோலையும், வீரன் கையிலுள்ள கூரிய வேலையும், கருமிகளுடைய செல்வத்தையும் அவர்கள் இறந்த பின்னரே மற்றவர்கள் தொட முடியும். இதுவே உலகில் உண்மை.

68. அறியமுடியாதது

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும், பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தி மரத்தில் மலரையும் வெள்ளை உடலை உடைய காக்கையும் பித்தர்களுடைய மனதையும் நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும் பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும் காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை.

69. பயனில்லாதன

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி, இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது, புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம், இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

இறைவன் வாழும் திருத்தலங்களை - திருக்கோயில்களை - மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

(ஆகவே, இவற்றை செய்து, வாழ்வைப் பயனுடையதாக்கு.)

70. உலக இயல்பு

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச் சென்பார்,
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கமென்பார், காணவே பனைக்கீழாய்ப்பால் குடிக்கினுங் கள்ளே யென்பார், மாணுல கத்தோர் - புல்லர் வழங்குரை மெய்யென் பார்.

ஏழைகள் அணிந்தால் அது தங்கம் இல்லை வெறும் மேற்பூச்சு என்பார். செல்வந்தர் பித்தளையை அணிந்தாலும் தங்கம் என்பார்கள். பனைமரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள் என்பார்கள்.  பெருமை பொருந்திய உலகிலுள்ளோர், கீழானவர்கள் கலகம் செய்து பேசினாலும் உண்மை என்பார்கள்.

71. ஒழுக்கம் உயர்வு தரும்

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம், ஆச்சாரம் நன்மையானால் அவனியில் தேவராவார், ஆசாரஞ் செய்யாராகி லறிவொடு புகழுமற்றுப் பேசாமல்போற் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.

ஒழுக்கம் உடையவராக ஒருவர் வாழ்ந்தால் உலகில் நல்ல அறிவோடு புகழும் உண்டாகும். அவரது ஒழுக்கத்தினால் மற்றவர்களுக்கு நன்மையும் ஏற்படுகின்ற பொழுது அவர் உலகில் தெய்வத்தைப் போல் மதிக்கத்தக்கவராவார். நன்னடத்தையின்றி ஒருவன் வாழ்ந்தால், அறிவொடு புகழும் அழிந்துபோய், அவனது பேச்சும் மதிப்பில்லாததாகி, நோயோடு வாழ்ந்து, நரகத்தில் வீழ்வான்.

72. காமம் கொடிது

காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம், காமமே தரித்திரங்க ளனைத்தையம் புகட்டி வைக்குங் கடாரம், காமமே பரகதிக்குச் செல்லாமல் வழியடைக்குங் கபாடம், காமமே யனைவரையும் பகைவராக்கிக் கழுத் தரியுங் கத்தி தானே.

காமமே (தவறான பாலியல் விருப்பமே) குடும்ப பாரம்பரியத்தையும் நன்மையையும் கெடுக்க வந்த பெருங்குற்றம்; காமமே வறுமைகள் அனைத்தையும் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷம்; காமமே உயர்கதி செல்லவிடாமல் வழியடைக்கும் கதவு; காமமே அனைவரையும் எதிரிகளாக்கி கழுத்தை அரிந்துகொல்லும் கத்தி ஆகும்.

(ஆகவே, காமம் கட.)

73. நற்குணங்கள் பதின்மூன்று

மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே. 

மயில் (அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் - உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை - கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும்  ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.

(ஆகவேதான், நமது பண்பாட்டில் மயில் முதலான மேற்கண்ட 13-ம் மங்களமானவைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வங்களோடு இவை இணைக்கப்பட்டிருக்கின்றன. இக்குணங்களை உடையவர்கள் தெய்வங்களாகவும் போற்றப்பட்டிருக்கிறார்கள்.)



முதல் பாகம் முற்றிற்று.

குறிப்பு:-


விவேக சிந்தாமணி இரண்டு பாகங்களாகத் தொகுக்கப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் 135 பாடல்களும் இரண்டாம் பாகத்தில் 100 பாடல்களும் உள்ளன. இரண்டாம் பாகத்தின் உள்ள பாடல்களின் பொருளையும் தொடர்ந்து பார்க்கலாம்.

No comments: