நீதிசதகம் Neethi Satakam

 ஓம்!


ஸ்ரீபர்த்ருஹரியின் நீதி சதகம்

மூலமும் உரையும்



பாரத தேசத்தில் தோன்றிய நமது ஹிந்து மதம் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டது. அதனால் தான் நமது மதத்திற்கு பாரம்பர்யப் பெயர் ஸநாதந தர்மம் என்று இருக்கிறது. பகவத்கீதையிலும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா, "எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அதை உயர்த்துவதற்கு நான் அவதாரம் செய்கிறேன்", என்று கூறுகிறார். தர்மம் தர்மத்தைப் பின்பற்றும் மனிதர்களாலே காக்கப்படுகிறது. ஆகவேதான் பகவான், "தர்மவான்களைக் காத்தும் அதர்மிகளை அழித்தும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக நான் யுகந்தோறும் தோன்றுகிறேன்", என்கிறார். பகுத்தறிவுள்ள ஜீவர்களாகிய நாம் தர்மத்தின் மதிப்பை உணர்ந்து அதைப் பின்பற்ற வேண்டும். நமக்கு இறைவன் துணை இருப்பார். தர்மத்தின் அடிப்படையிலேயே இறைவன் உலகை நடத்துகிறார்.


எது தர்மம் என்று மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் வேதங்களை அருளியுள்ளார். நமது வேதங்கள் எண்ணற்ற தர்மங்களைச் சொல்கின்றன. தர்மம் - அறம், நீதி, நியாயம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வாழ்வியலைப் பாடும் இலக்கிய நூல்களில் நீதி இலக்கியங்கள் எனத் தனியே பிரிக்கும் அளவிற்கு அளவற்ற நீதி நூல்கள் தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் கொட்டிக் கிடக்கின்றன. வேறு எந்தப் பண்பாட்டிலும் இவ்வளவு இல்லை என்று வியக்கும் அளவிற்கு நிறைந்து இருக்கின்றன. இது நமது பண்பாட்டின் பெருமை. மனித நாகரிகத்தின் உயர்வு.


ஆனாலும், “ஆசாரம்” “ஆசாரம்” என்று நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு நேர்மாறாக  இன்று நாம் தூய்மையின்மை, சுகாதாரக்கேடு, ஒழுக்கக்கேடு, உடல் நலனில் அக்கறையின்மை, உணவில் கட்டுப்பாடின்மை என்று எல்லாவிதத்திலும் மற்ற நாகரிகங்களை விடக் கீழ்நிலையில் இருக்கிறோம். இதற்கு நாம் நமது பாரம்பர்ய கல்வியை விட்டதும், நம் பழைய நூல்களை படிப்பதை விட்டதும் முக்கியக் காரணம். 


நாம் பரம்பரையாகப் படித்து வந்த நீதி நூல்களில் முக்கியமான ஒன்று  ஸ்ரீபர்த்ருஹரி மஹாகவி இயற்றிய நீதி சதகம் ஆகும். அறிஞன், மூடன், நல்லவர், துஷ்டன், வைராக்யம், விதி, புருஷார்த்தம் எனப் பல விஷயங்களை பற்றிய பல்வேறு நீதிகளை இந்நூலில் ஸ்ரீபர்த்ருஹரி எடுத்துரைத்துள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் சுருக்கமான விளக்கத்துடன் நீதி சதகக் கருத்துக்களை நாம் தொடர்ந்து காணலாம்.



ச்லோகம்:1


दिक्कालाद्यनवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये । 

स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे ॥ १ ॥


திக்காலாத்யநவச்சிந்ந அநந்தசிந்மாத்ரமூர்த்தயே ।

ஸ்வாநுபூத்யேகமாநாய நம: சாந்தாய தேஜஸே ।। 1 ।।


இறைவணக்கம்


பொழிப்புரை:

இடம், காலம் முதலான வரையறையில்லாத, அழிவில்லாத, ஞானமே வடிவான, தன்னனுபவம் ஒன்றினாலேயே அறியப்படக்கூடியதாக உள்ள, சாந்தமான பேரொளிக்கு - பரப்ரஹ்மத்திற்கு - வணக்கம்!


விளக்கவுரை:

ஸ்வயம் ஜ்யோதியாக விளங்கும் பரம்பொருளுக்கு வணக்கம். 


உலகம் எனும் தோற்றத்திற்கு மூலமாக - காரணமாக - விளங்குவது எதுவோ அது அனைத்திற்கும் மேலான பொருள். முதற்பொருள். இறைவன். அதையே திருவள்ளுவர் ஆதிபகவன் என்கிறார். அது எப்படி இருக்கும்?


திசைகளும் - இடமும் - காலமும் தோன்றுவதற்கு முன்னிருப்பது அது. ஆகவே அது கால தேச வரையறைகள் இல்லாதது. வேறு மாதிரிச் சொல்வதென்றால், அதிலிருந்துதான் இடமும் காலமும் தோன்றியது என்பதால், எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும், அதைக் கடந்தும் இருக்கும் ஆதி அந்தமற்ற பூர்ண வஸ்து அது. அதுவே ஜடமான உலகங்களுக்கும் அனைத்து அறிவுள்ள உயிர்களுக்கும் மூலம் என்பதால், அது அறிவுப் பொருளாகவே, உயிர்ப் பொருளாகவே இருக்கும். தோற்றமும் மறைவுமற்ற  சுதந்திரமான  - இன்னொன்றைச் சாராத - அறிவு வடிவாகவே இருக்கும். அதை சித், சேதனம், சைதந்யம் என்று வேதங்கள் சொல்கின்றன. வாலறிவன் என்று திருவள்ளுவன் கூறுகிறார். அப்படிப்பட்ட அந்த ஸ்வயம் ஜோதியான பரம்பொருளுக்கு வணக்கம்.


அந்தப் பரம்பொருளை நாம் எங்கே, எப்படிக் காண்பது?


காரணமான ஒன்று, காரியங்கள் அனைத்துள்ளும் வியாபித்திருக்கும். காரணமான மண்ணானது, காரியங்களான மட்பாண்டங்கள் அனைத்துள்ளும் வியாபித்திருப்பது போல. இந்த உலகமும் நாமும் அந்தப் பரம்பொருளின் காரியங்கள் என்றால் நமக்கு அதுவே ஆதாரம், நம்முள் வியாபித்திருப்பது அதுவே.


எது இருப்பதால் இது இருக்கிறது? அல்லது நான் இருக்கிறேன். இங்கே, இது (உடல், உலகம்) இருக்கிறது அல்லது  நான் இருக்கிறேன் என்று சொல்லும்போது, எது இருப்பதால் இது இருக்கிறதோ அல்லது நான் இருக்கிறேனோ அதுவே இதன் - நம் - முதற்பொருள் பரம்பொருள் ஆகும். நான் (நாம்) என்று நம்மை நாம் உணரும் போது அறிவே விளங்குகிறது. (நாம் நம்மை ஜடமாக உணர்வதில்லை.) இந்த அறிவை - உயிரை  - நாம் புறத்தில் காண முடியாது. புறத்தில் காணப்படுவதெல்லாம் ஜடப்பொருள்கள். ஒரு மின்கருவி தன் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் காரணமான மின்சாரத்தை புறத்தில் காண முடியாதது போல. ஆகவே அந்தப் பரம்பொருள், சொந்த அனுபவத்தினால் மட்டுமே அறியத்தக்கதாய் - (ஸ்வாநுபூத் ஏகமாநாய) உள்ளது. 


எனக்குள் "நான்" "நான்" என்று உயிராய் அறிவாய் எப்பொழுதும் விளங்கிக்கொண்டிருக்கும் அந்த ஸ்வயம் ஜோதியான பரம்பொருளுக்கு வணக்கம். நிசப்தத்திலிருந்தே - மௌனத்திலிருந்தே - எல்லா ஒலிகளும் எழுவதும் இருப்பதும் அடங்குவதும் போல, அந்த சுயஞ்சோதியான பரம்பொருள் எப்பொழுதும் சாந்தமாகவே இருக்கிறது. அந்த சாந்தத்தில்  இருந்தே ஸகலப் பொருள்களும் தோன்றி, இருந்து, ஒடுங்குகின்றன.  பரமசாந்தமான அந்தப் பரம்பொருளுக்கு (சாந்தாய) வணக்கம். 

 

மனதின் ஸகல விகாரங்களையும் ஒடுக்கி, சாந்தப்படுத்தும்போது அந்த அமைதியில், காலதேசம் கடந்த, அநந்த ஆநந்தமான அறிவுப்பொருளை, ஸ்வயம் ஜ்யோதியாய் விளங்கும் பரமசாந்தமான பரம்பொருளை நம் உள்ளத்தில் நன்கு காணலாம்.


இடம், காலம் முதலான வரையறையில்லாத, அழிவில்லாத, ஞானமே வடிவான, தன்னனுபவம் ஒன்றினாலேயே அறியப்படக்கூடியதாக உள்ள, சாந்தமான பேரொளிக்கு - பரப்ரஹ்மத்திற்கு - வணக்கம்!


ச்லோகம்: 2


बोद्धारो मत्सरग्रस्ताः प्रभव: स्मयदूिषताः ।

अबोधोपहताश्चान्ये जीर्णमङ्गे सुभािषतम् ।। २ ।।


போத்தாரோ மத்ஸரக்ரஸ்தா: ப்ரபவ: ஸ்மய தூஷிதா: ।

அபோதோபஹதாச்சாந்யே ஜீர்ணமங்கே ஸுபாஷிதம் ।। 2 ।।


பொழிப்புரை:

அறிஞர்கள் பொறாமையினால் பிடிக்கப்பட்டவர்களாகவும், அரசன் அஹங்காரத்தால் கலங்கியவனாகவும், மற்றவர்கள் அறியாமையினால் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதனால் நன்மொழிகள் என்னிடத்திலேயே மடிந்துபோய்விடுகின்றன.

விளக்கவுரை:
அறிவுள்ளவர்கள் பொறாமை குணம் இல்லாத நல்லவர்களாக இருக்க வேண்டும். செல்வந்தர்கள் கர்வம் இல்லாத பணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். விவேகம் இல்லாதவர்கள் தங்கள் மடமையை உணர்ந்து அறியும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறத்தை அறிந்தவர்கள் ஹிதத்தை எடுத்துக் சொல்ல முடியும். இல்லையெனில் அது விழலுக்கு இறைத்த நீராக பயனற்றதாகப் போய்விடும்.

பள்ளிகளில் கல்வியோடு நற்பண்புகளும் நல்லொழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டும். கல்வியில் சிறந்தவனாகும் ஒருவன் நற்பண்புகளிலும் சிறந்து நல்ல அறிஞன் என்பதோடு நல்ல மனிதன் என்றும் ஆக வேண்டும். 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (திருக்குறள்: 125)


என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒருவனிடம் செல்வம், பதவி, அதிகாரம் போன்றவை அதிகரிக்க அதிகரிக்க பணிவும் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்தும் நிலையில்லாதவை, முழுமையான நிறைவைத் தராதவை என்பதை உணர்ந்து அவற்றை அவன் ஸமூக நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் எளிய வாழ்க்கை வாழ வேண்டும். 


பிறக்கும்போது அனைவரும் ஒன்றும் அறியாதவர்களாகவே பிறக்கிறோம். கல்வி, கேள்விகளால் அறிவைப் பெறுகிறோம். 


சென்ற இடத்தால் செலவிடாத தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருக்குறள்: 422)


அறிவென்பது பொருள் ஈட்டுவதற்கும் இன்பம் துய்ப்பதற்குமான ஸாதனம் மட்டுமல்ல. மனதையும்  கண் முதலான பொறிகளையும் அதன் போக்கில், எல்லா போகவிஷயங்களிலும் போகவிடாமல், அதன் நல்ல தீய விளைவுகளை ஆராய்ந்து, துன்பத்தில் முடியும் தீயவற்றை விலக்கி, நன்மையைத் தரும் நல்லவற்றில் மட்டும் செல்லத் தூண்டுவது அறிவு ஆகும்.


இந்த அறிவுநிலையை ஒருவன் அடையாவிட்டால் அவன் எவ்வளவு கற்றிருந்தாலும் மூடனே. ஸமூகத்தில் பெரும்பாலானவர்கள் இவ்வாறு அறத்தின் மதிப்பை அறியாதவர்களாக இருந்தால் அங்கு அறிஞர்களின் அறவுபதேசம் எடுபடாது. அப்பொழுது, ஸமுதாய நன்மை விரும்பும் நல்லவர்கள் எதுவும் எடுத்துரைக்காமல் மௌனமாக இருந்து விடுவார்கள். அவர்களோடே அவர்களுடைய அறிவும் அனுபவமும் மறைந்து போய்விடும்.



ச்லோகம்: 3


अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।

ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति   ।। ३ ।।


அஜ்ஞ: ஸுகமாராத்ய: ஸுகதர மாராத்யதே விஶேஷஜ்ஞ: ।

ஜ்ஞாநலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஜயதி ।। 3 ।।


பொழிப்புரை:

அறிவற்ற மூடரை எளிதில் மகிழ்விக்கலாம்; சிறந்த அறிவுடையவர்களையோ மிக எளிதில் மகிழ்விக்கலாம்; ஆனால் புல்லறிவு உடைய மனிதனை பிரம்மனும் மகிழ்விக்க இயலாது.


விளக்கவுரை:

கல்வியறிவில்லாத பாமர மனிதர்களை  பணமோ, பொருளோ, உணவோ கொடுத்து எளிதில் திருப்திப்படுத்தி விடலாம். அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் இருக்காது. நல்ல அறிவுடைய அறிஞர்கள் அவர்கள் அறிவினாலேயே திருப்தி உடையவர்களாக இருப்பார்கள். அறிவு சார்ந்த நல்ல விஷயங்களைப் பேசுவதன் மூலம் அவர்களை இன்னும் எளிதாக திருப்திப்படுத்தி விடலாம். ஆனால் அரைகுறையாகக் கற்று சிற்றறிவும் கெட்டமனதும் கொண்டு குதர்க்கமாகச் சிந்திக்கும் அற்ப அறிவுடையவர்களை யாராலும் நிறைவு படுத்த முடியாது. இவர்களிடம் வாதவிவாதங்கள் செய்யாமல் விலகியே இருப்பது நல்லது.



ஶ்லோகம்: 04


प्रसद्य मणिमुद्धरेन् मकरवक्त्रदंष्ट्रान्तरात्

समुद्रमपि सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।

भुजङ्गमपि कोपितं शिरसिपुष्पवद्धारयेत्

न तु प्रतिनिविष्ट - मूर्खजन - चित्तमाराधयेत् ॥


ப்ரஸஹ்ய மணிமுத்தரேந் - மகரவக்த்ர - தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி - மாலாகுலம் ।

புஜங்கமபி கோபிதம் ஶிரஸி - புஷ்பவத் - தாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்கஜந - சித்தமாராதயேத் ॥


பொழிப்புரை:

முதலையின் வாய்ப்பற்களுக்கு இடையிலிருக்கும் ரத்னமணியை பெருமுயற்சியால் (எடுத்தாலும்) எடுக்கலாம். வேகமான  அடுக்கடுக்கான அலைகளால் கொந்தளிக்கும் கடலைத் (தாண்டினாலும்) தாண்டிவிடலாம். சினத்துடன் சீறும் பாம்பையும் தலையில் மாலை போலச் சூடிவிடலாம். கெட்ட நடத்தையுள்ள மூடமனிதனின் மனத்தை ஒரு நாளும் அமைதிப்படுத்த முடியாது. 


விளக்கவுரை:

தீயகுணமும் நடத்தையும் உடைய விவேகமற்ற மனிதர்களை ஒரு நாளும் யாராலும் அமைதிப்படுத்த - திருப்திப்படுத்த - மகிழ்ச்சிப்படுத்த முடியாது. அவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லவர்களுக்கு நல்லது. 


ஶ்லோகம் : 5


लभेत सिकतासु तैलमपि यत्नतः पीडयन् पिबेच्च भृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।

कदाचिदपि पर्यटन्शशविषाणमासादयेत् न तु प्रतिनिविष्ट मूर्खजन चित्तमाराधयेत् ॥


லபேத ஸிகதாஸு தைலமபி யத்நத: பீடயந்

பிபேச்ச ப்ருகுத்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்தித:

கதாசிதபி பர்யடந் ஶஶவிஷாணமாஸயேத்  

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்கஜந - சித்தமாராதயேத் ॥


பொழிப்புரை:

மிக முயற்சித்து (அரைத்து) மணல்களில் எண்ணெயை (எடுத்தாலும்) எடுக்கலாம். மிகவும் தாஹமுள்ளவன் கானலில் நீரெடுத்துப் (பருகினாலும்) பருகலாம். எங்கும் அலைந்து திரிந்து (தேடினால்) எப்பொழுதாவது முயற்கொம்பை (அடைந்தாலும்) அடையலாம். கெட்ட நடத்தையுள்ள மூடமனிதனின் மனத்தை ஒரு நாளும் அமைதிப்படுத்த முடியாது. 


அவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லவர்களுக்கு நல்லது.


ஶ்லோகம்: 6


व्यालं बालामृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते

भेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यते ।

माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षाराम्बुधेरीहते

मूर्खान् यः प्रतिनेतुमिच्छति बलात्सूक्तैः सुधास्यन्धिभि: ॥


வ்யாலம் பாலாம்ருணாலதந்துபிரஸௌ ரோத்தும் ஸம்ருஜ்ஜ்ரும்பதே

பேத்தும் வஜ்ரமணிம் ஶிரீஷகுஸுமப்ராந்தேந ஸந்நஹ்யதே ।

மாதுர்யம் மதுபிந்துநா ரசயிதும் க்ஷாராம்புதேரீஹதே

மூர்க்காந் ய: ப்ரதிநேதுமிச்சதி பலாத்ஸூக்தை: ஸுதாஸ்யந்திபி: ।।


பொழிப்புரை:

எவன் மூடர்களை அம்ருதப்பெருக்குள்ள நல்லுபதேசங்களால் நல்வழிப்படுத்த விரும்புகிறானோ அந்த மனிதன் இளம் தாமரைத்தண்டு நூல்களால் மதயானையைக் கட்டுவதற்கு முயற்சிப்பவனாவான். வைரமணியை வாகைப்பூவின் துனியால் பிளப்பதற்கு முயற்சி செய்கிறவனாவான். உப்புக் கடலுக்கு தேன் துளியால் தித்திப்பை உண்டுபண்ண விரும்புகிறவனாகிறான். மூடர்களை அறிவுரையினால் திருத்துதல் இயலாது.


ஶ்லோகம்: 07


स्वायत्तमेकान्तहितं विधात्रा विनिर्मितं छादनमज्ञतायाः ।

विशेषतः सर्वविदां समाजे विभूषणं मौनमपण्डितानाम् ॥


ஸ்வாயத்தமேகாந்தஹிதம் விதாத்ரா

விநிர்மிதம் சாதநமஜ்ஞாதாயா: ।

விஶேஷத: ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌநமபண்டிதாநாம் ॥


பொழிப்புரை:

மூடர்கள் தங்களுக்கு முறையான நன்மையை செய்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மடமையை மறைத்துக் கொள்வதற்காகவே பிரம்மா மௌனம் என்பதை படைத்திருக்கிறார். அதிலும் அனைத்தையும் அறிந்த அறிஞர்களின் சபையில் மௌனம் அவர்களுக்குச் சிறந்த அணிகலன் ஆகும்.

விளக்கவுரை:

அறிஞர்கள் கூடி இருக்கிற சபையில் அவர்கள் பேச மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது, அறிவுடைமை ஆகும். அது நமது அறியாமையை போக்கிக் கொள்ள சிறந்த வழியாகும். அறிஞர்கள் சபையில் நாம் பேச விரும்பினால் முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். (திருக்குறள் 401)


ஒருவன் அறிஞர்கள் நிறைந்த சபையில், தான் நிரம்புவதற்கு - நிறையறிவு பெறுவதற்குக் - காரணமாகிய நூல்களைக் கற்காமல் பேசுதல், நல்ல ஆட்டகளம் இன்றி விளையாடுவது போன்றதாகும்


ஶ்லோகம்: 08


यदा किञ्चिज्ज्ञोऽहम् द्विप इव मदान्धः समभवम् 

तदा सर्वज्ञोऽहमस्मीति अभवदवलिप्तं मम मनः ।

यदा किञ्चित्किञ्चिद् बुधजनसकाशादवगतं

तदा मूर्खोऽस्मीति ज्वर इव मदो मे व्यवगतः ॥


யதா கிஞ்சிஜ்ஞோsஹம் த்விப இவ மதாந்த: ஸமபவம்

ததா ஸர்வஜ்ஞோऽஹமஸ்மீதி அபவதவலிப்தம் மம மந: ।

யதா கிஞ்சித் கிஞ்சித் புதஜந ஸகாஶாதவகதம்

ததா மூர்கோऽஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யவகத: ॥


பொழிப்புரை:

எப்பொழுது (நானாகக் கற்று) ஏதோ அறிகிறேனோ, மதநீரினால் யானையின் கண் மறைக்கப்படுவது போல, அப்பொழுது "எல்லாம் அறிந்தவன் நான்" என்று என்னுடைய மனது அஹங்காரத்தினால் நிரம்பியதாக ஆகிறது. எப்பொழுது என்னால் அறிஞர்களுடைய துணையினால் சிறிது சிறிதாக சரியான அறிவு அடைப்படுகிறதோ அப்பொழுது "நான் மூடனாக இருக்கிறேன்" என்று என்னுடைய அகங்காரமானது காய்ச்சலைப் போல நீங்கிவிடுகிறது.


விளக்கவுரை:

சிறந்த நூல்களை நாமாகக் கற்பது, நிச்சயமில்லாத அறிவையும் தவறான புரிதலையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்லாமல், அது நம்முடைய அகங்காரத்தை வலுக்கச் செய்யும். வித்யாகர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு குருவிடம் இருந்து முறையாக கற்கிறபொழுது நம்முடைய அறியாமை படிப்படியாக நீங்கும். சரியான அறிவு ஏற்படும். அது குருவின் பெருமையையும், சாஸ்திரங்களைச் இயற்றிய மஹான்களுடைய பெருமையையும் நமக்குக் காட்டும். நாம் அடைய வேண்டிய உயரத்தை குரு உபதேசம் உணர்த்தும். குரு மூலமாக பரம்பரையாக வரும் கல்வி, நம்முடைய அறியாமையை நமக்கு அறிவித்து, அதைப் போக்குவதோடு பணிவையும் நம்மிடத்தில் வளர்க்கின்றது.


வெண்மை எனப்படுவது யாதெனின் உண்மை

உடையாம் என்னும் செருக்கு - திருக்குறள் 844


அறிவுடைமையை அகங்காரமாகக் கொண்டிருத்தலே அறியாமை ஆகும்.


ஶ்லோகம்: 09


कृमिकुलचितं लालाक्लिन्नं विगन्धि जुगुप्सितं

        निरूपमर्सवं प्रियया खादन्नरास्थि निरामिषम्।

सुरपतिमपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते

        न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 9॥


க்ருமிகுலசிதம் லாலாக்லிந்நம் விகந்தி ஜுகுப்ஸிதம்

நிரூபமஸர்வம் ப்ரியயா காதந்நராஸ்தி நிராமிஷம் |

ஸுரபதிமபி ஶ்வா பார்ஶ்வஸ்தம் விலோக்ய ந ஶங்கதே

ந ஹி கணயதி க்ஷுத்ரோ ஜந்து: பரிக்ரஹபல்குதாம் ||


பொழிப்புரை:

நாயானது, கிருமிகளால் மூடப்பட்டதும் எச்சிலால் நனைந்ததும் கெட்ட வாடை வீசுவதும் அருவருக்கத்தக்கதும் மாமிசம் இல்லாததுமான கழுதையின் காய்ந்த எலும்பை ஒப்புயர்வற்ற சுவையுடையதாகக் கருதி விரும்பி உண்ணுகின்றபொழுது தேவர்களுக்குத் தலைவனான இந்திரனே அருகில் வந்தாலும் வெட்கப்படுவது இல்லை. அதைப்போல கீழான குணமுடைய மக்கள் தாங்கள் கொண்ட விஷயங்களின் கீழ்மையைக் குறித்து எண்ணுவதில்லை.


விளக்கவுரை: 

கீழான கெட்ட விஷயங்களில் தொடர்ந்து மனம் ஈடுபடும்பொழுது அறிவு தன் விவேகத்தை இழந்து விடுகின்றது. தன்னுடைய மானத்தை மனிதன் விட்டுவிடுகிறான். தான் செய்வது கீழ்மையானது என்றும், கிடைத்தற்கரிய மனிதப் பிறவியில் செய்வதற்கு பல மேலான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும், தான் அனுபவிப்பதற்கு இன்னும் மேலான இன்பங்கள் இருக்கின்றன என்பதையும் உணரும் ஆற்றல் போய்விடுகிறது. புலன்களுக்கு அடிமையாகிற மனிதர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகைக் கவனிப்பதில்லை. உயர்ந்தவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களின் மதிப்பை இவர்கள் அறிவதில்லை. தங்கள் கீழ்மையை உணர்வதில்லை.


ஆசை அறிவை மறைக்கின்றது. மானத்தை அழிக்கின்றது. அல்பமானதை உயர்ந்தென்று நினைக்கச் செய்கிறது.

ஶ்லோகம்: 10


शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं

        महीध्रादुत्तुङ्गादवनीमवनेश्चापि जलधिम्।

अधोऽधो गङ्गेयं पदमुपगता स्तोकमथवा

        विवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 10॥


ஶிர: ஶார்வம் ஸ்வர்காத் பஶுபதிஶிரஸ்த: க்ஷிதிதரம் 

மஹீத்ராதுத்துங்காதவநீமவநேஶ்சாபி ஜலதிம் |

அதோSதோ கங்கேயம் பதமுபகதா ஸ்தோக மதவா

விவேகப்ரஷ்டாநாம் பவதி விதிபாத: ஶதமுக: || 10 ||


பொழிப்புரை:

இந்த கங்கையானது சொர்க்கலோகத்திலிருந்து பரமேச்வரனுடைய தலையிலும், பசுபதியின் தலையிலிருந்து இமயமலையிலும், இமயமலையிலிருந்து பூமியிலும், பூமியிலிருந்து கடலிலும் என கீழே கீழே இறங்கி சிறுமையை அடைகிறது. இப்படியே விவேகம் தவறியவர்களுடைய வீழ்ச்சி நூறுவிதங்களில் (அநேகவிதமாக) இருக்கிறது.


விளக்கவுரை:

விவேகமே மனிதப்பிறவியின் சிறப்பு. ஆசையினால் மனிதன் விவேகத்தை இழக்கிறான். விவேகத்தை இழக்கும் மனிதன் படிப்படியாகக் கீழ்நிலையை அடைந்து அழிவை அடைகிறான். 


குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின் (திருக்குறள் 965)


மலைபோல உயர்ந்த நிலையில் உள்ளவரும் குன்றச் செய்யும் குன்றிமணி அளவான சிறுசெயலைச் செய்தாலும் தாழ்வை அடைவர்.


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101