Mar 11, 2020

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101

ஓம்

ஆசாரக் கோவை

ஆசிரியர்: பெருவாயின் முள்ளியார்

உரை : ஸ்வாமீ பூர்ணாநந்ந ஸரஸ்வதீ

பாடல் 51 : உடற்பொலிவு கெடுப்பன

மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
தம்மொளி வேண்டுவார் நோக்கார். பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.

பொருள் :
தன்னுடல் பொலிவோடு இருக்க விரும்புபவர், மின்னல் ஒளியையும் எரி நட்சத்திரத்தையும் விலைமகளிர் அலங்காரத்தையும் (இன்று நடிகையர் படத்தையும்) சூரியனின் தோற்றத்தையும் மறைவையும் பார்த்தல் கூடாது.


பாடல் 52 : உரைக்கலாகாதன

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.

நிலையான மனத்தினர் வஞ்சனைப்பேச்சு, பயனற்றபேச்சு, தேவையற்றபேச்சு, பழிப்பேச்சு, புறங்கூறுதல் பேசார்.


பாடல் 53 : செய்யத்தகாத பழிச்செயல்கள்

தெறியொடு கல்லேறு வீளை  விளியே
விகிர்தம் கதங்கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.

தெறியொடு, கல்லேறு, வீளை,  விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கைபுடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட்டவர்.

பொருள் :
நல்ல ஒழுக்கம் உடையவர் ஒரு பொருளை விசிறியெறிதல், கல்லெறிதல், கனைத்தல் - உறுமுதல், தூரத்தில் செல்லும் ஒருவனை அழைத்தல், பிறர் செய்வது போலும் பேசுவது போலும் பழித்து நடித்துக் காட்டுதல், கோபம் கொள்ளல், மறைத்து வைத்தல், கையோடு கைதட்டுதல், கண்ணசைத்தல் - மூக்கசைத்தல்  (அங்க சேட்டைகள்) போன்றவற்றையெல்லாம் செய்யமாட்டார்.


பாடல் 54 : விருந்தோம்பும் முறை

முறுவல் இனிதுரை காநீர் மனைபாய்
கிடக்கையோ டிவ்வைந்தும் என்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.

பொருள் :
தன்னை தேடி வருபவர்களுக்கு உணவிடுதலோடு செய்யவேண்டியவை : மலர்ந்த முகத்தோடு இனிய சொற்களைக் கூறி வரவேற்றல், கை கால் கழுவ நீர் கொடுத்தல், அமர இருக்கையும் படுக்க பாயும் படுக்கும் இடமும் கொடுத்தல்.


பாடல் 55 : நெடுநேரம் நிற்றலாகாத இடங்கள்

கறுத்த பகைமுனையும், கள்ளாட்டுக் கண்ணும்,
நிறுத்த மனமில்லார் சேரி யகத்தும்,
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்,
நிகரில் அறிவினார் வேண்டார், பலர்தொகு
நீர்க்கரையு நீடு நிலை.

பொருள் :
ஒப்பில்லாத அறிவுடையவர்கள் சண்டை நடக்கின்ற இடத்திலும், மது அருந்தும் இடத்திலும், விலைமகளிர் வசிக்கும் இடத்திலும், நட்பு மாறிய இடத்தும், பலர் வந்து போகின்ற தண்ணீர்த்துறையிலும் நெடுநேரம் நிற்க விரும்பமாட்டார்.


பாடல் 56 : தவிர்வன சில

முளிபுல்லும் கானமும் சேரார், தீக் கூட்டார்,
துளிவிழக் கால்பரப்பி ஓடார், தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார், துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவில் தீர்ந்த தொழில்.

பொருள் :
அறிவுடையவர் முற்றிய புல்லுள்ள இடமும் அடர்ந்த காட்டிலும் போகமாட்டார்; அங்கு தீ வைத்தலும் செய்யமாட்டார். மழை பெய்யும் பொழுது கால் பரப்பி ஓட மாட்டார்; தந்நந்தனியாக வழி தெரியாத காட்டில் செல்லமாட்டார்; மழையின்றி வறுமை ஏற்பட்ட பொழுதிலும் குடும்ப ஒழுக்கத்திற்கு மாறான தொழிலைச் செய்யமாட்டார்.


பாடல் 57 : ஆரோக்கியம் வேண்டுவோர் செய்யலாகாதன

பாழ்மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;
நோயின்மை வேண்டு பவர்.

பொருள் :
நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவர் பாழடைந்த வீடு, கோயில், சுடுகாடு, ஊரில்லாத இடத்தில் தனியே இருக்கும் முதுமரம், ஆகிய இடங்களுக்கு தான் மட்டும் தனியே போக மாட்டார். பகலில் உறங்க மாட்டார்.


பாடல்: 58 : செய்யலாகாதவை

எழுச்சிக்கண் பிறர்கூவார், தும்மார், வழுக்கியும்
எங்குற்றுச் சேறிரோ என்னாரே, முன்புக்
கெதிர்முகமா நின்றும் உரையார். இருசார்வும்.
கொள்வர் குரவர் வலம்.

பொருள் :
பிறர் (அருகில் இருந்து) எழுந்து போன பிறகு அவரை பின்னே இருந்து அழைக்கக்கூடாது; அப்பொழுது தும்முதல் கூடாது; எங்கு போகிறீர் என்று கேட்கக் கூடாது; அவர் எதிரே மறித்து நின்றும் ஒன்றைச் சொல்லக் கூடாது; (அவசியம் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால்) அவருக்கு பக்கத்தில் நின்று சொல்லலாம். பெரியவரோடு செல்லுகின்ற பொழுது அவரை வலமாகக்கொண்டு செல்ல வேண்டும். (அவரின் இடது பக்கமாகச் செல்ல வேண்டும்.)


பாடல் 59 : தவிர்க்க வேண்டிய சில

உடம்புநன் றென்றுரையார், ஊதார் விளக்கும்,
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார், அதனைப்
படக்காயார் தம்மேல் குறித்து.

பொருள் :
பிறரைப் பார்த்து உனது உடம்பு நன்றாக இருக்கின்றது என்று சொல்லக்கூடாது; நெருப்பினை வாயால் ஊதி அணைக்கக் கூடாது; (விறகு) அடுப்பில் உள்ள நெருப்பை அவித்தல் கூடாது; அடுப்பில் உள்ள நெருப்பில் குளிர் காய்தல் கூடாது.


பாடல் 60 : பெரியோருடன் செல்லும்போது

யாதொன்றும் ஏறார் செருப்பு ; வெயில் மறையார்;
ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்மோடங்கு
ஓராறு செல்லும் இடத்து.

பொருள் :
அகன்ற (அகண்ட) அறிவும் அடங்கிய மனமும் வயதிலும் மூத்த நற்பண்புடைய பெரியவர்களோடு ஒன்றாக‌ இணைந்து செல்லும்பொழுது தாம் வாகனத்திலேரியோ செருப்பணிந்தோ வெயில் மறைக்கக் குடைபிடித்தோ செல்லுதல் கூடாது.


பாடல் 61 : அந்தணர் குரவர்போல் கொண்டொழுகல்

வான்முறை யான்வந்த நான்மறை யாளரை,
மேன்முறைப் பாற்றம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.

பொருள் :
தூய்மையான ஒழுக்கமுடைய வேதம் பயின்ற அந்தணரை உயர்ந்த தன் குருவைப் போல நினைக்கவேண்டும் என்பது அறநூல்கள் அறிந்த அறிஞர் கருத்து.


பாடல் 62 : குருவிடம் நடந்துகொள்ளும் முறை

கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்
பாசாரம் என்ப குரவர்க் கிவை. இவை
சார்த்தால் சொல்லிய மூன்று.

பொருள் :
காலில் விழுந்து வணங்குதலும், அவர் 'நல்லது எழுந்திரு' என்று சொன்ன பிறகு எழுந்து நிற்பதும், அவரைக் கண்ட உடனே எழுந்திருத்தலும் பலவகையான நன்நடத்தைகளுள் முக்கியமான மூன்றாகும்.


பாடல் 63 : செய்வன தவிர்வன சில

துறந்தாரைப் பேணலும் நாணலும், தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.

துறவியைப் (உணவு முதலானவை கொடுத்து) பாதுகாத்தலும், பழிக்கு நாணுதலும், தாம் கற்றவற்றை (பெருமைப்பட) குருமார்கள் முன் மறந்தும் சொல்லாதிருத்தலும் திறம்படக் கற்றவர் வாழும் நெறி.


பாடல் 64 : வழி விலகப்படுவோர்

பார்ப்பார் தவசே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையர் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு
ஆற்ற வழிவிலங்கினாரே பிறப்பினுள்
போற்றி எனப்படு வார்.

பொருள் :
அந்தணர், துறவி, சுமையுடையவர், நோயாளி, வயது மூத்தவர், குழந்தை, பசு, பெண் ஆகிய இவர்கள் நாம் செல்லும் வழியில் எதிரே வந்தால், அவர்கள் முதலில் செல்ல வழி கொடுத்து விலகிநின்று, பின்தான் செல்பவரே பிறரால் போற்றப்படும் பிறவியை உடையவராவர்.


பாடல் 65 : தவிர்க்க வேண்டியது

ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள் ஆயினும்,
சான்றோர் தமித்தா உறையற்க-ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்!

பொருள் :
ஐம்புலன்களையும் எல்லாப்பொழுதும் கட்டுப்படுத்தி வாழுதல் கடினம் என்பதனால், கற்றறிந்தவர்கள் தன்மனை அன்றி பிற பெண்களுடன் தாய்-மகள்- உடன்பிறந்தவள் - ஆயினும் தனித்து வாழ்தல் கூடாது.


பாடல் 66 : இராசசேவையில் தவிர்வனவான செயல்கள்

கடை விலக்கிற் காயார்: கழிகிழமை செய்யார்:
கொடையளிக்கண் பொச்சாவார். கோலம்நேர் செய்யார்.
இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார் :
கடைபோக வாழ்துமென் பார்.

பொருள் :
முழுமையாக நீண்ட ஆயுள் வாழ விரும்புபவர், அரசனை பார்க்க சொல்லுகின்ற பொழுது வாயிலில் தடை ஏற்பட்டால் கோபப்பட மாட்டார்; அரசனோடு மிக நெருங்கி உறவு பாராட்ட மாட்டார்; அரசன் தனக்கு கொடுத்ததையும் தான் அரசனுக்குக் கொடுக்க வேண்டியதையும் (வரி முதலானவைகளையும்) மறக்க மாட்டார்;அரசனுக்கு சமமாக அலங்காரம் செய்து கொள்ளமாட்டார்; சபையினிடையே சென்று அரசனை தவிர்த்து பிறர் ஒருவரைச் சேர மாட்டார்.


பாடல் 67 :
தமக்குற்ற கட்டுரையும், தம்மின் பெரியார்
உரைத்ததற் குற்ற உரையும், அஃதன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க. சொல்லின்
வடுக்குற்றம் ஆகிவிடும்.

தமக்குப் பொருந்திய உறுதிமொழிகளையும், தன்னைவிடப் பெரியவர்கள் கூறிய குற்ற மொழிகளையும், அது மட்டுமில்லாமல், பிறரைக் குறித்த உறுதிமொழிகளையும் அரசனிடம் கூறக் கூடாது. கூறினால் அது நீங்காத பழியை உண்டுபண்ணும்.



பாடல் 68 : கூடாதன சில
பெரியார் உவப்பன தாம் உவவார், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர், அறிவு அறியாப்
பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து.

பொருள் :
பெரியவர்கள் விரும்புவதை தாம் விரும்பமாட்டார்; கீழான குணமுடையவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மாட்டார்; அறியாத சிறுவர் ஆயினும் தம்மோடு - நெருக்கமான பழக்கம் இல்லாத பொழுது - (அவரது குறைகளைச் சுட்டிக்காட்டி) அவரை இழிவாகப் பேசமாட்டார்.


பாடல் 69
முனியார், துனியார், முகத்து எதிர் நில்லார்,
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்,
'இனியவை யாம் அறிதும்!" என்னார் கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின்.

(நற்பண்பு உள்ளவர்) அரசனிடம் கோபம் கொள்ளமாட்டார், வெறுப்புக் கொள்ளமாட்டார், அவருக்கு நேர் எதிரே நிற்க மாட்டார், அரசனிடம் தனிமையில் தம் செயலைக் செல்ல மாட்டார், நல்லனவெல்லாம் எமக்குத் தெரியும் என்று பெருமைப்படக் கூற மாட்டார், அரசன் காகம் வெண்மையானது என்றாலும் அன்பு மாறமாட்டார்.


பாடல் 70 : செய்யத் தகாதவை
உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும்,
வகை இல் உரையும், வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியாரகத்து.

பொருள் :
எச்சில் உமிழ்தல், உயர்ந்த இடத்து ஏறியமர்ந்து இருத்தல், பாக்கு மெல்லுதல், தெளிவில்லாமல் பேசுதல், தூங்குதல் இவை ஐந்தையும் பெரியவர்கள் முன்னால் செய்யற்க.


பாடல் 71 : சொல்லக்கூடாதவை
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார், பகைவர்போல்
பாரித்துப் பல்கால் பயின்று.

பொருள் :
பகைவரிடம் செருக்கோடு கூறுவதுபோல, அரசர் - பெரியவர் - முன் தன் செல்வத்தையும் கல்வியையும் புகழையும் குணங்களையும் பெருமையாகக் கூறிக்கொள்ளக்கூடாது.


பாடல் 72 : வணங்கற்க
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.

பொருள் :
அரசன் வாழும் அரண்மனையிலும், தெய்வம் வாழும் கோவிலிலும், ஊர்வலமாக தெய்வம் வரும்பொழுதும், நகர்வலமாக அரசன் வரும்பொழுதும், அவர் முன்னிலையில் குரு உட்பட யாரையும் வணங்கக்கூடாது.


பாடல் 73 : பெரியார்முன் செய்யத் தகாதன
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யார்; செய்யின்
அசையாது நிற்கும் பழி.

பொருள் :
(கேலியாக அல்லது சப்தமிட்டுச்) சிரித்தல், கொட்டாவி விடுதல், காறிஉமிழ்தல், தும்முதல் இவற்றை பெரியவர்கள் முன் செய்யார்; அப்படிச்செய்தால் பழியானது நீங்காமல் நிற்கும்.


பாடல் 74 : ஆசிரியர் முன்
நின்றக்கால் நிற்க, அடக்கத்தால் என்றும்,
இருந்தக்கால் ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்,
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக, மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

பொருள் :
நல்ல மாணவர் எப்பொழுதும் அடக்கத்துடன், ஆசிரியர் பாடம் சொல்லி நிறுத்தினால் தாமும் இயைந்து நிற்பர்; ஆசிரியர் "எழுந்து போ" என்று சொல்லாமல் எழுந்து போகமாட்டார்; அவர் பாடம் நடத்தினால் செவிகொடுத்துக் கவனமாகக் கேட்பர்; அவர் ஒன்றும் சொல்லாது மௌனமாக இருந்தால், தாமும் எதுவும் கேளாது மௌனமாக இருப்பர்.


பாடல் 75 : சபையில் தவிர்வன சில
உடுக்கை இகவார், செவிசுறண்டார் : கைமேல்
எடுத்துரையார், பெண்டிர்மேல் நோக்கார்; செவிச்சொல்லும்
கொள்ளார், பெரியா ரகத்து.

பொருள் :
பெரியோர் கூடியிருக்கிற அவையிலே, ஆடையைக் களைந்து கட்டார்; காதைச் சொறியார்; கையைத் தூக்கி பேசமாட்டார்; பெண்களை உற்றுநோக்கார்; மற்றவர் செவியில் (கிசுகிசுத்துச்) சொல்லுவதை கேளார்.


பாடல் 76 : ஒன்றைச் சொல்லும் முறை
விரைந்துரையார்; மேன்மேலுரையார்; பொய்யாய
பரந்துரையார்; பாரித் துரையார்; ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி யறிந்து.

பொருள் :
பேசும்பொழுது மிக வேகமாக பேசுதல்கூடாது; சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லக்கூடாது; பொய்யான தகவல்களை சொல்லக்கூடாது; விரிவாக நீட்டிச் சொல்ல கூடாது. சொல்லவேண்டியதைத் தொகுத்து குறைவான வார்த்தைகளால் பொருள் முழுவதும் விளங்குமாறு காலம் கருதியும் கேட்பவர் கருத்தறிந்தும் சொல்லவேண்டும்.


பாடல் 77 : பெண்கள் தவிர்க்கவேண்டியன
தம்மேனி நோக்கார்; தலையுளரார்; கைந்நொடியார்
எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன்
தன்மேனி யல்லால் பிற.

பொருள் :
நல்ல குலப்பெண்கள் நம் உடலை அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொள்ளார்; தலைமயிரை நீவிவிட்டுக் கொள்ளார்; பிறர் கவனம் திரும்புமாறு கை நொடித்தல் முதலியவை செய்யார்; எவ்வளவு அழகுடையதாக இருந்தாலும் தன் கணவனைத் தவிர மற்ற ஆண்களின் உடலைக் கவனித்துக் பார்க்கமாட்டார்.


பாடல் 78 : தவிர்வன சில
பிறரோடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்: செவியோரார்; சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.

பொருள் :
பெரியோர் இருக்கையில் வேறு ஒருவரோடு ஒரு காரியத்தை ஆராய்தலும், பெரியோருக்கு மிக நெருங்கி நிற்றலும், பெரியவர் வேறொருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது தாம் அதைச் செவி கொடுத்துக் கேட்டலும் கூடாது. அப்பொழுது அவர் அருகில் செல்லவேண்டியிருந்தால் வேறொன்றில் கவனமாக இருப்பதுபோல் இருக்க வேண்டும்.


பாடல் 79 : செய்வன தவிர்வன
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை இம்மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

பொருள் :
துன்பம் வந்த காலத்து தான்மட்டும் துன்புற்று வாழ்தலும், இன்பம் வந்த பொழுது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்தலும், அன்பு இல்லாத இல்லம் செல்லாது இருத்தலும், ஒழுக்க நெறியில் வாழ்பவரிடம் உள்ள நற்பண்புகள் ஆகும்.


பாடல் 80 : கூறத்தகாதன
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார். இல்லத்
துறுமி நெடிதும் இராஅர். பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார். புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.

பொருள் :
நன்கு அறம் அறிந்தவர், கோபம் கொண்டிருக்கும் பொழுதும் தன் குருவின் பெயரைச் சொல்ல மாட்டார்; மனைவியிடம் கடிந்து நெடுநேரம் பேசமாட்டார்; பெரியவர்களை (சாதி)முறை கொண்டு சொல்லமாட்டார்; கீழோரையும் (சாதி)முறை கொண்டு சொல்லமாட்டார்.


பாடல் 81:
புழைக்கடைப்பு காரசன் கோட்டி யுரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிய றல்லா தவர்.


பாடல் 82 :
வண்ணமகளிர் இடத்தொடு தம்மிடம்
ஒள்ளிய மென்பார் இடங்கொள்ளார். தெள்ளி,
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே; பெண்டிர்க்
குவப்பன வேறாய் விடும்.

பொருள் :
விவேகம் உள்ளவர்கள், ஒழுக்கம் குறைந்த பெண்கள் வாழும் இடத்துக்கு அருகில் தம் இருப்பிடம் அமைத்துக் கொள்ளமாட்டார். தன் குடும்பப்பெண்களின் குணமும் மாறுபட வாய்ப்பு உண்டு என்பதால், எவ்வளவுதான் உரிமையுடைய இடமாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியது.


பாடல் 83 : தவிர்வன சில

நிரல்படச் செல்லார்; நிழல்மிதித்து நில்லார் :
உரையிடை ஆய்ந்துரையார்; ஊர்முனிவ செய்யார்:
அரசர் படையளவும் சொல்லாரே; என்றும்
கடைபோக வாழ்து மென் பார்.

பொருள் :
நீண்ட ஆயுளோடு வாழ விரும்புவர் பெரியோருக்கு இணையாக நடந்து செல்ல மாட்டார்; பிறர் நிழலை மிதித்து நிற்க மாட்டார்; பேசுகின்ற பொழுது ஆராயாமல் - சிந்திக்காமல் - பேசமாட்டார்; சமூகம் வெறுக்கின்ற செயல்களை செய்ய மாட்டார்; அரசன் படையளவையும் எதிரிகளுக்குச் சொல்லமாட்டார்.


பாடல் 84 : இகழத்தகாதன

அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றன என் றெண்ணி
இகழின் இழுக்கந் தரும்.

பொருள் :
புற்றில் வாழ்கின்ற பாம்பு, அரசன், நெருப்பு, குகையில் வாழ்கின்ற சிங்கம், இந்நான்கையும் இளையன என்றும் எளியன என்றும் பழகியன என்றும் கருதி அலட்சியமாக இருந்தால் துன்பம் வரும்.

பாடல் 85 : செய்யலாகாத செயல்

அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும்.

பொருள் :
அறிவுடையோர் செல்வம் மிகுதியாக இருப்பினும் அறச் செயல்கள், திருமணம், தொழில்முயற்சி, வீடு, ஆகியவற்றை அரசனைக் காட்டிலும் மேன்மையாக செய்யலாகாது. செய்தால் சேர்த்த செல்வம் அழிந்துவிடும்.


பாடல் 86 : கேட்கக்கூடாதது

உண்டது கேளார் குரவரை, மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார். புல்லரையும்
உண்டது கேளார் விடல்.

பொருள் :
மனமாறுபாடு இல்லாதவர்கள், முன்னர் சொன்ன ஐந்து குருமார்களையும் சான்றோர்களையும் பார்க்கின்ற பொழுது "என்ன உணவு உண்டீர்?" என்று கேட்கமாட்டார்; அதேபோல கீழோரிடமும் கேட்கமாட்டார்.


பாடல் 87 : செய்யக்கூடாதன

கிடந்தாரைக் கால் கழுவார்,
பூப்பெய்யார், சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்,
கிடந்தார்கண்
நில்லார், தாம் கட்டில்மிசை.

ஒருவர் கட்டில் மீது படுத்திருக்கின்ற பொழுது அவரது கால்களை கழுவுதல், பூச்சூடுதல், சந்தனம் வைத்தல், அருகில் நிற்றல் போன்றவை செய்யக்கூடாது.

பாடல் 88 : செய்யத் தகாதன

உதவிப் பயனுரையார்; உண்டி பழியார்:
அறத்தொடு தாம்நோற்ற நோன்பு வியவார்;
திறத்துளி வாழ்துமென் பார்.

பொருள் :
பெரியவர்கள் சொன்ன ஒழுக்க நெறிப்படி வாழ நினைப்பவர் தாம் பிறருக்குச் செய்த உதவியை மற்றவரிடம் சொல்லமாட்டார்; உண்ணும் உணவைப் பழித்துப் பேசமாட்டார்; தான் செய்த நற்செயல்களையும் விரதத்தையும் தாமே புகழ்ந்து உரைக்க மாட்டார்.

பாடல் 89 : கவலைப்படத்தகாதவை

எய்தாத வேண்டார் ; இரங்கார் இழந்ததற்கு;
கைவாரா வந்த இடுக்கண் மன மழுங்கார்;
மெய்யாய காட்சி யவர்.

பொருள் :
தன்னால் அடைய முடியாததற்கு ஆசைப்படமாட்டார்; தாம் இழந்ததைக் குறித்து வருந்தமாட்டார்; நீக்க முடியாத துன்பத்தை குறித்து மனங்கலங்கமாட்டார் (இவை அனைத்தும் நிலையில்லாதவை என்ற) உண்மையை அறிந்தவர்.

பாடல் 90 : விட்டுவிட வேண்டியவை

தலைக்கிட்ட பூமேவார்; மோந்தபூச் சூடார்,
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்,
புலைக்கெச்சில் நீட்டார், விடல்.

பொருள் :
(அறம் அறிந்தவர்) பிறர் தலையில் சூட்டிய பூவைத் தாம் சூடார்; பிறர் முகர்ந்து பார்த்த பூவையும் சூடார்; அந்தணர், பசுவை தானமாக கொடுத்தால் வாங்கமாட்டார்; என்றும் தாம் உண்ட எச்சில் உணவை பிறருக்குக் கொடுக்கமாட்டார். ஆகவே இவைகளை விட்டுவிடவேண்டும்.

பாடல் 91 : அடக்கம்

மோட்டுடைப் போர்வையோடு,
ஏக்கழுத்தம், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்.

பாடல் : 92

தலை இய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர் நாள் கேட்டுச் செய்யார். தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க- அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல!


பாடல் 93 : விடவேண்டுவன

மன்றத்து நின்று உஞற்றார். மாசு தமிர்ந்து இயங்கார்.
என்றும் கருஞ் சொல் உரையார். இருவராய்
நின்றுழியும் செல்லார், விடல்!

பொருள் :
சான்றோர்கள் கூடி இருக்கின்ற அவையில் யாதொரு அங்கசேட்டையும் செய்யக்கூடாது; நடக்கும் போது அழுக்கு உள்ளவைகளை தேய்த்துக் கொண்டு நடக்கக் கூடாது; எப்போதும் கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது; இருவர் பேசும் இடத்தில் அருகே செல்லக்கூடாது. ஆகவே இவற்றை ஒழித்துவிடு.


பாடல் 94 : தவிர்வன சில

கைகட்டிக் கட்டுரையார்: கான்மேல் எழுத்திடார்:
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோ டொப்புரையார்:
கையிற் குரவர் கொடுப்ப இருந்தேலார்,
ஐயமில் காட்சி யவர்.

பொருள் :
தெளிந்த அறிவுடையவர்கள், கையை சுட்டிக்காட்டிப் பேசமாட்டார்; காலால் எழுத்தை எழுதிக் காட்டமாட்டார்; உடலைச் சுட்டிக்காட்டி இல்லாதவரையும் இருப்பவரையும் ஒப்பிட்டுப் பேச மாட்டார்; பெரியவர்கள் ஒன்றை கொடுக்கின்ற பொழுது உட்கார்ந்துகொண்டே வாங்க மாட்டார்.

பாடல் 95 : பொன்போல் போற்றத்தக்கவை

தன்னுடம்பு, தாரம், அடைக்கலம், தன்னுயிர்க்கென்று
உன்னித் துவைத்த பொருளோ டிவை நான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க: உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.

பொருள் :
தன் உடம்பு, மனைவி, பிறர் அடைக்கலமாக கொடுத்துச் சென்ற பொருள், தன் எதிர்காலத்துக்கு என சேமித்து வைத்த பொருள் ஆகிய நான்கையும் பொன்னினைப்போல் போற்றிப் பாதுகாக்கவேண்டும். இல்லாவிட்டால் அது மிகுந்த துன்பத்தைத் தரும்.


பாடல் 96 : இல்வாழ்க்கை சிறப்புறுதற்கான காரணம் 

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்
தங்கருமம் அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம்
எப்பெற்றி யானும் படும்.

பொருள் :
சுறுசுறுப்பு உள்ள எறும்பைப் போல உணவைப் பெருக்கியும் தூக்கணங்குருவி போல தனக்கென உறைவிடம் அமைத்தும் காக்கை போல உறவுகளோடு கலந்தும் திட்டமிட்டு வாழ்பவர் இல்வாழ்க்கை  எல்லா விதத்திலும் சிறப்பாக அமையும்.


பாடல் 97 : பெரியார் முன் பேசும் முறைமை 

தொழுதானும் வாய்புதைத் தானுமஃ தன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் : பழியவர்
கண்ணுளே நோக்கி யுரை.

பொருள் :
பெரியவர்களிடம் பேசும்பொழுது பணிவுடனும், (எச்சில் தெரிக்காதவாறு) கையால் வாயை மறைத்தும் பேச வேண்டும். அதனோடு குற்றம் ஏதும் உண்டாகாதவாறு ஆராய்ந்தும் பேசுவாயாக.

பாடல் 98 : புகலாகாத இடங்கள்

சூதர் கழகம் அரவ மறாக்களம்
பேதைக ளல்லார் புகாஅர். புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.

பொருள் :
அறிவுடையவர்கள், சூதாடும் இடத்திலும் கலகம் நடக்கும் இடத்திலும் செல்லமாட்டார். சென்றாரேயானால் அவை பலவித துன்பங்களைத் தரும்.


பாடல் 99: கூடாத இடங்கள்
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் : விடல்.

பொருள் :
களங்கமில்லாத தெளிவான அறிவை உடையவர்கள் கலவரம் நடக்கும் இடத்திலும், மடைப்பள்ளியிலும், பெண்கள் உறங்கும் இடத்திலும் சென்று பார்க்கமாட்டார்கள். வாருங்கள் என்று அழையாத வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். ஆகவே, இவை விடப்பட வேண்டியவை.

(மடைப்பள்ளி - கோவிலில் நைவேத்யம் சமைக்கும் இடம்)

பாடல் 100 : ஆசாரம் விலக்குபெற்றார்

அறியாத தேயத்தான்; ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிரிழந்தான், அஞ்சினான் , உண்பான்,
அரசர் தொழில்தலை வைத்தான், மணாளனென்று
என்பதின்மர் கண்டீர் உரைக்குக்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.

பொருள் :
வேற்று நாட்டினர், நோயாளி, மிக வயதானவர், சிறுகுழந்தை, உயிர் இழந்ததை போல அனைத்தையும் இழந்தவர், பயத்தில் உள்ளவர், பசியில் உள்ளவர், அரசர் ஏவலை செய்பவன், மணமகன் இந்த ஒன்பது பேரும் ஆசாரத்திற்கு விலக்களிக்கப்பட்டவர்கள்.

சுபம்

No comments: