Apr 8, 2020

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 9

ஸனாதன தர்மமும் திருக்குறளும்  - 9


மோக்ஷஸ்வரூபம் - வீடு எது?

இருள்நீங்கி இன்பம் பயக்கும்
வேதாந்த நூல்களைக் குருவாயிலாகக் கேட்டு, பரம்பொருள் ஒன்றே மெய்பொருள்; அந்த பரம்பொருளே அனைத்துமாக இருக்கின்றது; உலகவேறுபாடுகள் எல்லாம் வெறும் தோற்றமாத்திரம் என்று புரிந்து கொள்வதுடன் - இந்த உண்மை நம் இதுநாள்வரையிலான அனுபவத்திற்கு மாறாக இருப்பதால் - இதில் ஏற்படுகின்ற சகலசந்தேகங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும். தெளிவை ஏற்படுத்திக் கொண்டபின் அந்த அறிவிலேயே மனதை நிலைநிறுத்தினால் விடுதலையானது உடனே சித்திக்கும். இந்த உலக இன்பங்களைவிட மேலான ஆனந்தம் நமக்கு இங்கேயே இப்பொழுதே கிடைக்கும். இது ஜீவன்முக்தி. 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் 
வானம் நணிய துடைத்து. (திருக்குறள் 353)

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி 
மாசுஅறு காட்சி யவர்க்கு. (திருக்குறள் 352)

மற்றீண்டு வாரா நெறி
மெய்யுணர்ந்து அவாஅறுத்து ஜீவன் முக்தரானவர் எல்லாவிதமான மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டவராய், புண்ணிய பாவம் அழிந்து போனவராய் ஆகிறார். இவர் ப்ரஹ்மநிஷ்டர். இவர் பிறவிக்குக் காரணமான அஜ்ஞானமும் புண்ணிய பாபமும் இல்லாமல் போவதால் பிறவாத நிலையை அடைகிறார். இது விதேகமுக்தி.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி. (திருக்குறள் 356)

வானோர்க்கு உயர்ந்த உலகம்
குளிர், வெப்பம், இன்பம், துன்பம் இவை வந்து போகக்கூடியவை, நிலையில்லாதவை; இறைவனால் நடத்தப்படுபவை. இந்த உடல், உலகம், உயிர்வாழ்க்கை, உறவுகள், செல்வம், அனைத்தும் இறைவனால் அருளப் பட்டவை; இறைவன் அருளில்லாமல் எனது அறிவு, திறமை இல்லை; என்னுடையது என்றும் எதுவும் இல்லை; எல்லாம் அவன் செயல் என்று நினைந்து எப்பொழுதும் இறைவனையே சிந்தித்துக் கொண்டிருப்பவன் உபாஸகன். உலக சுகபோகங்களில் பற்றின்றி இறைவனை அடைவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்பொழுதும் தியானித்து கொண்டிருக்கின்ற அவன் வானோர்க்கும் உயர்ந்த உலகை - ப்ரஹ்மலோகத்தை - அடைவான். அவன் திரும்பி வருவதில்லை. இது கிரமமுக்தி. 

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும் (திருக்குறள் 346).

இறுதியாக…

இந்தக்கட்டுரையில் திருக்குறளிலிருந்து மட்டுமே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. அறம் பொருள் இன்பம் வீடு, இல்லறம் துறவறம், புண்ணியம் பாபமுமாகிய வினைப்பயனின் விளைவாக பல பிறவிகள், அஜ்ஞானத்தினால் பிறவியும் ஞானத்தினால் மோக்ஷமும்,  அருவமும் உருவமாய் உள்ள இறைதத்துவம் போன்ற அனைத்தும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே ஹிந்துதர்ம சாஸ்திரங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டப்படவில்லை.

ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே 
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
(மாங்குடி மருதனார் - திருவள்ளுவமாலை)

வேதங்களுக்கு மறை என்றொரு பெயருண்டு. திருக்குறளுக்கு தமிழ்மறை என்றொரு பெயருண்டு. மறையின் பொருளை எளிய தமிழில் சொன்னதால்தான் அப்பெயர் வந்தது. திருக்குறள் வேதப் பொருளாய் விளங்குகின்றது என்பதை தீதற்றோர் நன்கறிவர். ஹிந்துத்தமிழர்களாகிய நாமும் திருக்குறளையும் வேதநெறியையும் கசடறக் கற்றறிந்து நிற்போம் அதற்குத் தக!

தமிழர்மதமும் ஹிந்துமதமும் வேறுவேறென்று தவறாக அரசியல்  செய்துவருகிறார்கள். ராமாயணத்தை தமிழில் படைத்த கம்பரும் பாரதத்தை தமிழில் செய்த வில்லிபுத்தூராரும் நல்லாப்பிள்ளையும் ஹிந்துத்தமிழர் தானே! விநாயகர் அகவல் செய்த அவ்வையாரும் திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் திருமுறை பாடிய நாயன்மார்களும் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களும் ஹிந்துத்தமிழர்கள் தானே!

தமிழர் மதமும் இந்து மதமும் ஒன்று தான். சங்க இலக்கியம் தொட்டு பாரதியார் வரை பக்தியுள்ள பண்பாடுள்ள அனைத்து தமிழரறிஞர்களும் ஹிந்துக்களே!
திருக்குறள் வேததர்மத்தைத் தமிழில் சொன்ன நீதி இலக்கியங்களும் தலையாயது ஆகும்.


முற்றும்

No comments: