May 28, 2011

அறன் வலியுறுத்தல்


     திருவொற்றியூர் என்னும் ஊரில் கலிய நாயனார் என்றொரு சிவனடியார் இருந்தார். அவர் ஒப்பற்ற செல்வந்தர். செல்வத்தின் பயன் அறிந்தவர்; சிவத்தொண்டினைச் சிறிதும் மறவாதவர். அவர் திருவொற்றியூர்க் கோவிலுக்கு இரவும் பகலும் விளக்கேற்றி வந்தார்.
    அவர், நாள் தோறும் ஏற்றிய விளக்குகள் ஒன்று இரண்டல்ல, பலப்பல. அவரது தொண்டின் திறத்தை உலகுக்குக் காட்ட சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
       கலிய நாயனாரது செக்குத் தொழில் சீராக இயங்கவில்லை, நலிவடைந்தது. அதனால் அவரது பெருஞ்செல்வம் சுருங்கிற்று. அப்போதும் அவர் திருவிளக்குத் திருப்பணியை விடவில்லை. அவர் தம் மரபினரிடம் சென்று எண்ணெய் வாங்கி விற்றுக் கொடுப்பார். அதற்கு அவர்கள் தரும் கூலியைக் கொண்டு, திருவிளக்கேற்றி வரும் பணியைச் செய்தார்.
    அவ்வாறு சில நாள்கள் சென்றன. எண்ணெய் கொடுத்தவர்களும் கொடுக்க மறுத்தனர். பின் கலியனார் தாமே செக்காடினார். செக்காடிக் கிடைத்த கூலியால் திருவிளக்கேற்றினார்.
     செக்குத் தொழிலாளர் பெருகினர். அதனால் கலியநாயனாருக்குச் செக்காடும் வேலையும் கிடைக்கவில்லை.
      மிகுதியும் துன்புற்ற நாயனார் தமது வீட்டை விற்று, அதனால் வந்த பொருள் கொண்டு திருவிளக்கேற்றினார். அப்பொருளும் தீர்ந்தது. பின் அவர், தம் மனைவியை விற்றுத் திருவிளக்கேற்ற எண்ணினார். தம் மனைவியை அழைத்துக் கொண்டு செல்வந்தர் வீடுதோறும் சென்று விலை கூறினார். விளையாட்டுக்குக் கூட யாரும் விலை கேட்கவில்லை.
     விளக்கெரிக்க ஒரு வழியும் நாயனாருத்குத் தெரியவில்லை. அவர் அடைந்த துன்பத்திற்கும் அளவில்லை. தம் திருப்பணியை ஏற்றுக்கொள்ளும் பக்கநாதர் கோவிலுக்குச் சென்றார். அகல்களை வரிசையாக வைத்து அவற்றில் திரிகளையிட்டார். “இன்று திருவிளக்கேற்றாமல் உயிர்வாழ்வதை விட இறப்பதேமேல். இவ்வுடலின் குருதியைக் கொண்டு விளக்கெரிப்பேன்” என்று வாள் கொண்டு தம் உடலைச் சிதைக்கத் தொடங்கினார்.
  பெருங்கருணைக் கடலாம் சிவபெருமான் அவருடைய கைகளைப் பிடித்தருளிக் காட்சி தந்தார். நாயனார்தம் உடலில்பட்ட புண் மறைந்து ஒளி வீசியது. நாயனார் கைகளை உச்சிமேல் குவித்து வீழ்ந்து வணங்கினார். அவர் சிவலோகத்தில் திருவிளக்கேற்ற சிவபெருமான் திருவருள் புரிந்தார்.

                     வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்
                     வாழ்நாள் வழியடைக்கும் கல்.
                                                                                   - திருக்குறள் 38


No comments: