Hindumatha Dharma Vilakkam - Chapter 12

 


ஹிந்துமத தர்மவிளக்கம்


பாடம்: 12

(27.08.20)


சென்ற வாரம்…

நவவித பக்தி

கர்மயோகம்


கடவுள் வழிபாட்டுமுறைகள்

சேவை செய்தல் (பகவத் கைங்கரியம், கர்மயோகம்),

ஷோடச / பஞ்ச உபசார பூஜை செய்தல், 

ஜபம், தியானம் செய்தல், ஸ்தோத்திர பாராயணம் செய்தல், 

நாம சங்கீர்த்தனம் பாடுதல், 

ஞான சாஸ்திரங்களைப் கேட்டல், படித்தல். 

அதுவாகவே இருத்தல்.


இனி…


ஷோடச உபசார பூஜை


    விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த தேவதைகளின் ஆயதனம் - இருப்பிடம். இவற்றில் கணபதி முதலானோர் நிச்சயமாக ஆவாஹனம் முதலியதை எதிர்பாராமல் ஸான்னித்யம் கொண்டுள்ளார்கள். இவற்றில் பூஜை செய்யும்போது நம் உள்ளத்தில் குடி கொண்டவர்களே தியானத்தால் இரங்கி நம் பூஜையை ஏற்க இந்த ஆயதனங்களில் அருள் பரவி நிற்கிறார்கள் என்பதே கருத்து. இந்த வழிபாட்டிற்குத் தேவையானது சுத்தமான ஜலம், சந்தனம், பூ, தூப தீபங்கள், நிவேதனத்திற்காகப் பழம் அன்னம் முதலியவை. நமது பிரார்த்தனை, நமஸ்காரம், ஸ்தோத்திரம் இவை உடல் மனத்தால் ஆகுபவை.


    புதிதான விக்கிரகம், படம், யந்திரம் முதலியவற்றில் மந்திரபூர்வமாகப் பிராணப் பிரதிஷ்டை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். பஞ்சாயதனமாக உள்ளவைகளுக்கு பிராண பிரதிஷ்டையும் ஆவாஹனமும் கிடையாது. இதயத்திலுள்ள தேவதையைத் தியானித்துப் பஞ்சாயதனத்தினுள் அவர்களிருப்பதாகப் பாவித்துப் பூஜை தொடங்குவர்.


    ஆஸனம் (இருக்கை தருவது), பாத்யம் (காலலம்ப நீர் வார்த்தல்), அர்க்கியம் (கைகளுக்கு மணமுள்ள நீர் அளித்தல்), ஆசமனம், மதுபர்கம் (களைப்பு நீங்க தேன் பால் கலந்த பானம் தருதல்), ஸ்நபனம் (நீராட்டுதல்), வஸ்திர தாரணம் (ஆடை உடுத்துதல்), ஆபரணம் (அணிகள் பூட்டுதல்), யஞ்ஞோபவீதம், கந்தம் (வாசனையுள்ள சந்தனம், குங்குமம் முதலியவற்றால் நெற்றிக்கு இடுதல்), அக்ஷதை (முனை முறியாத முழுஅரிசி, குங்குமப்பூ, மஞ்சளரைத்த நீரில் பிசறித்தருதல்), புஷ்பம் (பூக்களை மாலையாக்கி அணிவித்தல், புஷ்பத்தை பாதங்களில் நமஸ்காரம் என்ற பாவனையுடன் இடுதல்), தூபம் (மணமுள்ள புகை காட்டுதல்), தீபம் (நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் காட்டுதல்), நிவேதனம் (உணவளித்தல்), நீராஜனம் (சூடம் கொளுத்தி அபராதம் பொறுக்கக்கோரிச் சுற்றிக்காட்டுதல்), மந்திர புஷ்பம் (வேத மந்திரங்களைக் கொண்டு துதித்தல்), ஸ்வர்ணபுஷ்பம் (தங்கப்பூ சாத்துதல்), ஸ்தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பிரார்த்தனை, பூஜைஸமர்ப்பணம் என்ற இவை உபசாரங்கள் எனப்படும். இதை மானஸிக பாவனையாகச் செய்வது பரா பூஜை, மானஸ பூஜை எனப்படும். இதில் உலகில் மிக உயர்ந்த பொருளைக் கொண்டு பூஜை செய்வதாக பாவனை செய்து மனக்கண்ணால் தெய்வத்தின் அருள் கூர்ந்த வடிவத்தைக் காண முடியும். இயன்ற அளவு சேகரித்த பொருள்களைக் கொண்டு பூஜை செய்வது ஸபர்யை. மனத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் என்ற ஐந்தை மட்டும் ஸமர்பிப்பது மானஸ உபசாரபூஜை. பூஜையின் துவக்கத்திலும் முடிவிலும் இஷ்டதேவதையின் மந்திரஜபம் செய்து தெய்வத்தின் இடதுகையில் ஸமர்ப்பித்து மந்திர ஜபசித்தியை அருளும்படி கோருவர்.



ஜபம் / தியானம் செய்தல்


    கிழக்கு அல்லது வடக்கு முகமாய் அமர்ந்து செய்ய வேண்டும். அமைதியுடன் அமர்ந்து தியானம் கூடும் வகையில் ஆஸனமிட்டு உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். மான்தோல், புலித்தோல், தர்ப்பம், வஸ்திரம், கம்பளி, மரப்பலகை இவற்றால் உறுத்தாதவாறு ஆஸனம் அமைத்து அதில் பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம் முதலியதில் ஏதேனும் ஒரு பழக்கப்பட்ட ஆஸனமுறைப்படி அமரவேண்டும்.

மனத்திற்குள் ஜபிப்பது சிறந்தது. பிறர் காதுபடச் சொல்லாமல் வாய்க்குள் சொல்லிக்கொள்வது மத்யமம். பிறர் காதுபட ஜெபிப்பது அவ்வளவு சிரேஷ்டமல்ல. பொருள் உணர்ந்து தேவதை மந்திரம் இரண்டையும் உணர்ந்து ஜபிப்பது நல்லது. ஜபிக்கும்போது தொப்புளுக்குக் கீழுள்ள பகுதியைத் கைகளால் தொடக்கூடாது. தொட்டால் கைகளை ஜலம் இட்டு அலம்ப வேண்டும். அல்லது வலதுகாதைத் தொடவேண்டும். ஜலத்தில் நின்று ஜபிப்பதானால் ஈரவஸ்திரத்துடனும் ஜெபிக்கலாம். ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம், தாமரைக் கொட்டை இவற்றைக் கொண்டு 27-54-108 மணிகள் கொண்ட மாலைகட்டி நடுவில் மேருவாக ஒரு மணியைத் தொங்கவிட்டு அதனைக் கொண்டு ஜபத்தை கணக்கிடலாம். விரல்களை விட்டு எண்ணுவதும், விரல்களின் ரேகையில் கட்டை விரலைப் பதித்து எண்ணுவதும் உண்டு. தியானம் சிதறாமல் எண்ணிக்கையும் தவறாமல் ஜபிப்பது நல்லபலன் அளிக்கும். ஜபமாலையை நடுவிரலில் அல்லது மோதிர விரலில் தொங்கவிட்டு கட்டை விரலால் தள்ளிக் கணக்கிடலாம். கட்டை விரல் வைத்து நடுவிரலால் உருட்டலாம். மேருவைத் தாண்டாமல் மறுபடி திருப்பி உருட்டுவதும் அவசியம். அம் ஆம் இம் ஈம் என்று மாத்ருகாக்ஷரங்களை கொண்டு புற சாதனமின்றி ஜபிப்பது மிகச்சிறந்தது. குருமுகமாக இம்முறையைப் பெறுவது அவசியம்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101