ராமனும் ராவணனும் உன்னுள்ளே!
ராமனும் ராவணனும் உன்னுள்ளே!
பாகம் : 1
ராமனை உன்னுள்ளே தேடு!
தாய் தந்தை சொல் தட்டாத பணிவு!
தம்பிக்கு நாட்டை தந்த தியாகம்!
பண்பிருந்தால் வேறு குலத்தோனாயினும்
தம்பியாய் ஏற்கும் தகைமை!
பறவையையும் உறவாய்
பார்க்கும் மாண்பு!
நலிந்தோராயின் விலங்கினத்திற்கும்
தோள்கொடுக்கும் நல்குரவு!
அசுரனாயினும் அறவழி நின்றால்
ஆதரிக்கும் சால்பு!
அரசனாயினும் வாழ்க்கைத்துணை
ஒன்றே என்னும் அறம்!
எதிர்ப்பவர் எவராயினும்
எதிர்கொள்ளும் வீரம்!
தெய்வகுணங்களில் ரமிப்பவனே ராமன்,
ராமனை உன்னுள் தேடு!
பாகம் : 2
ராவணனைக் கொன்று போடு!
வலிமையையே பலவீனமாக்கும்,
வரத்தையே சாபமாக்கும் - அகங்காரம்.
உறவையே பகையாக்கும்,
மறத்தையே அறமாக்கும் - காமம்.
வீரத்தையும் வலிமையையும்
விழலுக்கிறைத்த நீராக்கும் - தூக்கமும் சோம்பலும்.
மூளையை மழுங்கடிக்கும்
வெட்கத்தை விரட்டியடிக்கும் - ஆசையும் மோகமும்.
அடிமையாக்கும் அசுரகுணங்களை
அடியோடு வெட்டி எறி.
உன்னுள் உறையும்
ராவணனையும் கும்பகர்ணனையும்
சூர்ப்பனகையையும் கொன்று போடு!
Comments