ஒருமையும் இருமையும்
ஒருமையும் இருமையும்
உருவமில்லாத கடவுளுக்கு உருவம் எதற்கு?
எங்கும் இருக்கின்ற இறைவனுக்குச் சிலைகள் எதற்கு?
என்றெல்லாம் கேட்கிறார்கள் நவீன சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள்.
உண்மைதான். கடவுள் உருவம் இல்லாதவர், எங்கும் உள்ளவர். உருவமில்லாத எங்கும் உள்ளதை நாம் எப்படி காண்பது? எப்படித் தொடர்பு கொள்வது?
எங்கும் உள்ளது என்றால் என்ன பொருள்?
எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருப்பது எதுவோ அதுவே எங்கும் உள்ளது, என்றும் உள்ளது.
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் இறைவனே இருக்கின்றார் என்றால் உலகம் எங்கே இருக்கின்றது?
ஒரு இடத்தில் ஒரு காலத்தில் ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்பதே அனுபவம். எங்கும் கடவுள் இருக்கின்றார் என்றால் உலகம் இல்லை. உலகம் இருக்கின்றது என்றால் கடவுள் இல்லை.
உலகம் இருக்கின்றதா? கடவுள் இருக்கின்றதா?
இல்லை இரண்டும் தனித்தனியாக இருக்கின்றது என்றால்,
உலகம் இருக்கின்ற இடத்தில் கடவுள் இல்லை, கடவுள் இருக்கின்ற இடத்தில் உலகம் இல்லை என்றாகும். இரண்டும் ஒன்றை ஒன்று வரையறுக்கின்றது.
எனில், கடவுள் பூர்ணமானவர் அல்ல. பூர்ணத்துவம் இல்லாதவர் கடவுளல்ல. எனில் கடவுள் இல்லை என்றாகின்றது.
இல்லை, கடவுள் இருக்கின்றார் அவர் எங்கும் இருக்கின்றார் என்றால் உலகம் இல்லை என்றாகிறது. இரண்டில் ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும்.
உலகமா? கடவுளா?
தங்கம், வெள்ளி என்று சொல்லுகின்றபொழுது இரண்டும் வெவ்வேறு பொருள்கள். தங்கம் இருக்கின்ற இடத்தில் வெள்ளி இல்லை, வெள்ளி இருக்கின்ற இடத்தில் தங்கம் இல்லை. இரு வெவ்வேறு பொருட்கள்
ஒன்றை ஒன்று வரையறுத்து இருக்கின்றன.
ஆனால், தங்கநகை என்று சொல்லுகின்றபொழுது தங்கம் இருக்கிற இடத்திலேயே நகை இருக்கின்றது, நகை இருக்கின்ற இடத்திலேயே தங்கம் இருக்கின்றது. தங்கம் இருக்கிறதா? நகை இருக்கிறதா?
தங்கம் தான் உண்மையில் இருக்கின்றது. நகை தோற்ற மாத்திரமாக, வடிவ மாத்திரமாக இருக்கின்றது. இப்படி ஒன்று உண்மையாகவும், ஒன்று கல்பிதமாகவும் இருந்தால்தான், இருக்கின்ற உண்மைப் பொருளுக்கு எங்கும் இருக்கின்ற தன்மை பொருந்தும்.
கடவுள் இருக்கின்றார் என்றால் உலகம் கற்பனையாக மட்டும் இருக்கின்றது. அல்லது உலகம் இருக்கின்றது என்றால் கடவுள் கல்பிதமாக மட்டும் இருக்கின்றார். உலகமும் இருக்கின்றது, கடவுளும் இருக்கின்றது என்று சொன்னால் ஒன்றை ஒன்று வரையறைப்படுத்தி இருக்கின்றது. சமானமான இரண்டுள் ஒன்று இன்னொன்றை வணங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆகவே, உலகம் உண்மையில் இருக்கிறது என்றால், கடவுள் இல்லை அல்லது கடவுளும் வரையறைக்குட்பட்டவராக இருக்கிறார். வரையறைக்குட்பட்ட கடவுள், கடவுள் தன்மையை இழந்து விடுகிறார்.
எங்கும் இருக்கின்ற பொருள் ஜடமானதா? சேதநமானதா? ஜடமான இயற்கையே எப்பொழுதும் இருக்கின்றதா? அல்லது அறிவுடையதாக - கடவுள் தன்மை உடையதாக - அது இருக்கின்றதா?
மதங்கள் என்ன சொல்கின்றன?
உலகம்தான் (ஜடமான இயற்கைதான்) இருக்கின்றது, கடவுள் இல்லை என்று சொன்னால் அது நாஸ்திக மதம். இயற்கைவாதம்.
கடவுள் இருக்கின்றார், உலகம் இருக்கின்றது இரண்டும் வேறு வேறாக இருக்கின்றது. இரண்டும் உண்மையாக இருக்கின்றது என்பது த்வைத மதம்.
உலகின் பெரும்பான்மையான மதங்களின் கருத்து இதுவே.
துவைத மதங்கள் அனைத்தும் ஏற்புடையவை அல்ல என்பது மேற்கண்ட ஆய்விலிருந்து தெரிகின்றது.
ஹிந்து மதம் என்ன சொல்லுகின்றது?
கடவுள்தான் உண்மையில் இருக்கிறார், உலகம் கற்பனையாகத் தோன்றுகின்றது என்ற அத்வைத சித்தாந்தமே வேதத்தின் முடிவான கருத்து.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் உலக விவகாரத்தில் த்வைதத்தை வேதங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
அத்வைதமே சத்தியம். அறிவுடைய - கடவுள் தன்மையுடைய - ஒரு பரம்பொருளே எப்பொழுதும் இருக்கின்றது, எங்கும் இருக்கின்றது, அது இரண்டற்ற ஒன்று என்பதே அத்வைதம்.
அத்வைதத்தில் உருவ வழிபாடு, விக்ரக வழிபாடு இல்லையா? இருந்தால் அது தவறா?
இருப்பது எல்லாம் இறைவனே என்றால், எல்லா உருவங்களும் இறைவனே, எல்லா நகைகளும் தங்கமே என்பது போல. நீங்கள் எந்த நகையை எடுத்தாலும் தங்கத்தையே எடுக்கிறீர்கள். எதைப் பார்த்தாலும் இறைவனையே பார்க்கிறீர்கள். எதை வணங்கினாலும் இறைவனையே வணங்குகிறீர்கள் என்பதே ச(சா)த்தியம். அப்படியென்றால் இறைவனுக்குத் தனி வடிவம் எதற்கு?
இறைவனே எல்லாம் என்றால் எதை எடுக்க முடியும்? எதைக் விடுக்க முடியும்? எதை விரும்ப முடியும்? எதை வெறுக்க முடியும்? எந்த விவகாரமும் நடைபெற சாத்தியமில்லை. ஆனால் உடல் இருக்கும் வரை உலக விவகாரங்கள் செய்யவேண்டியது இருக்கின்றது.
விவகாரத்தில் - தோற்றத்தில் இருக்கின்ற வேறுபாடுகளே முக்கியத்துவம் உடையவை. எல்லா நகைகளும் தங்கம்தான் என்றாலும் காது, மூக்கு, கழுத்து, கை இப்படி வெவ்வேறு உறுப்பிற்கு ஏற்றார்ப்போல வெவ்வேறு அமைப்பில் நகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் பயன்படுத்த முடியாது. ஆகவே, விவகாரத்தில் உலகம் இருக்கின்றது, உலகத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன, ஒவ்வொன்றிற்கும் ஒரு பயன்பாடு இருக்கின்றது,
அத்வைத உண்மையை அறிவில் புரிந்திருந்தாலும் விவகாரத்திற்கு ஏற்றார்போல உலகத்தில் வெவ்வேறாக பல பொருள்கள் இருக்கின்றன. நாம ரூப, கர்மத்தின் அடிப்படையில் பொருள்களுள் வேறுபாடு இருக்கின்றது. இந்த பொருள்களிலிருந்து வேறுபடுத்தி இறைவனுக்கும் ஒரு நாம ரூபம் கொடுத்து இறைவனை விவகாரத்தில் வணங்குவதற்கு வைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது.
விவகாரத்தில் மூழ்கிப் போனால், இறைவன் மறந்து போகும். இறைவனில் மூழ்கிப்போனால் விவகாரம் மறந்து போகும். இரண்டும் இருக்க வேண்டுமென்றால், நாம ரூப உலகில் இறைவனை உருவத்தில் - வடிவத்தில் - வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது நினைவுபடுத்திக்கொண்டு, வழிபட்டுக்கொண்டு வாழ்வதே சிறந்தது. அதைத்தான் நம் முன்னோர்கள் செய்தார்கள், சொன்னார்கள். நமது வாழ்க்கையை நலமாக வாழ்வதற்கு சரியான வாழ்க்கைமுறையை வழிகாட்டிச் சென்றார்கள்.
அத்வைதத்தை புரிந்து அதுவாகவே இருப்பதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்கே உலக வாழ்க்கை. இருமையிலிருந்து இருமைகள் கடந்து ஒருமையை அடைவதே வாழ்க்கையின் லட்சியம். இருமையைக் கடப்பதற்கு இறைவனின் அருள் வேண்டும். அதற்கு இறைவனை வணங்க வேண்டும். தர்மமாக வாழவேண்டும். ஒருமை புரிகிறவரை வணங்குபவனும் வணங்கப்படும் இறைவனும் வேறு வேறுதான். ஒருமை புரிந்த பிறகும் உடல் இருக்கும் வரை வேறுவேறுதான்.
ஒருமையைப் புரிந்துகொண்டால் இருமை லீலை - விளையாட்டு. இறைவனின் இயல்பு.
Comments