பாவம் மனிதர்கள்!

 

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

பாவம்! கலியுகத்தில் மனிதர்கள்!
அறிவுக்கான அங்கம் இருந்தும்
அதைக் குப்பைகளால் நிரப்பி
புழுக்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

இன்பம் எங்கே எங்கே என்று எங்கேயும் தேடி
துன்பத்தில் வீழ்ந்து துவண்டு போகிறார்கள்!
உயிர்களை நேசிப்பது விட்டு பொருட்களை நேசித்து
சடங்களாய் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்!

காண கண்ணுக்கினிய காட்சி நேரே இருக்க அதைக்

காட்சி ஊடகத்தின் வழியே கண்டு குதூகலிக்கிறார்கள்!

எதார்த்தத்தில் வாழ முடியாத வாழ்க்கையை
சினிமாக் கதைகளில் கண்டு கனவுகளில்
களித்துக் கொண்டிருக்கிறார்கள்!

பறவைகளும் விலங்குகளும்
எளிமையாய் வாழும் வாழ்க்கையை,
பரபரப்புடன் இயந்திரங்களுக்குள்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

இறைவனையே தலைவனாய்க் கொண்டு
வாழ்ந்த காலம் போய்,
இயக்கத் தலைவனையே இறைவனாய்க் காணும்
பகுத்தறிவு மோஹத்தில்,
பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்!

தன்னுள் இறைவனைக் கண்ட
யோகிகள் காலம் போய்,
தன்னையே இறைவனாய் சொல்லும்
போகிகள் குருமார்களாய் மலிந்த காலத்தில்,
பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்!


சிலருக்கு...
உண்பதும் குடிப்பதும்

ஊர் சுற்றுவதுமே வாழ்க்கை
என்றானபின் நிற்கவும்
யோசிக்கவும் நேரமேது?

சிலருக்கு..
உப்பிற்கும் காடிக்கும்
உழைப்பதற்கே முடியவில்லை
என்றானபின் ஞானத்திற்கும்
மோனத்திற்கும் நேரமேது?


பாவம்! கலியுகத்தில் மனிதர்கள்!

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101