அறம் செய விரும்பு - 15
பஞ்சமஹாயஜ்ஞங்கள் - ஐம்பெரும் வேள்விகள்
வைச்வதேவம்
இதுவும் வேதம் மற்றும் ஸூத்ரங்களுக்கேற்ப மாறுபடும். பகலை எட்டாக வைத்து 5வது பாகத்தில் (15 - 18 3/4 நாழிகை 12 - 1 1/2 மணி) இது செய்யப்படவேண்டும். இது மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம் தேவபூஜைக்கு பின் நடைபெற வேண்டியது. சமையல் அடுப்பிலிருந்து எடுத்த அக்கினியும், தேவபூஜையில் நிவேதனம் செய்யுமுன் வைச்வதேவத்திற்கெனத் தனியே எடுத்துவைத்து நெய்யால் சுத்திசெய்யப்பட்ட அன்னமும் இதற்குத்தேவை. வைச்வதேவத்திற்கெனத் தனித்து அன்னமும் வியஞ்சனமும் தயாரிக்கலாம். சிஷ்டர்களான பெரியோர்கள் காட்டிய வழியில் இதனை செய்யலாம்.
இது மூன்று பிரிவில் அடங்கும். சகல ஹோமம், வைச்வதேவம், பலி இடுதல் என. செய்த பாபமனைத்தும் நீங்க சகல ஹோமம். அது முடிந்ததும் உணவைத் தயாரிப்பதில் பல உயிரினங்கள் அழிவதால் ஏற்பட்ட பாபம் விலக வைச்வதேவ ஹோமம் செய்கின்றனர். (1) அடுப்பு (2) அம்மி (3) உரல் உலக்கை (4) நீர்த்தவலை (5) முறம் சல்லடை முதலியவை என்ற ஐந்தும் உயிருள்ள தான்யம் காய்கறி முதலியவற்றை உணவுக்காக உருவழிக்கின்றன. இந்தப்பாபம் சாப்பிடுபவனை ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் சேர்கின்றது. ஐந்துபெருவேள்விகள் (பஞ்சமஹா யஜ்ஞங்கள்) அந்த பாபத்தை நீக்க செய்யப்படுகின்றன. பிரும்மயஜ்ஞம், பித்ருயக்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என அவை ஐந்து. வேதம் ஓதுதல், ஓதுவித்தல் பிரும்மயஜ்ஞமாகும். அன்னத்தாலோ ஜலத்தாலோ (சிராத்தத்தாலோ தர்பணத்தாலோ) பித்ருக்களை திருப்தி செய்வது பித்ரு யக்ஞம். அக்கினியில் ஹோமம் செய்வது தேவயஜ்ஞம். அதிதிக்கு உணவிடுவது மனுஷ்யயஜ்ஞம். பலியிடுவது பூதயஜ்ஞம். (பலி என்பது ஆட்டையோ, மாட்டையோ வேறொரு உயிரினத்தையோ வெட்டிப் பலி கொடுப்பது அல்ல. தனக்கெனச்சமைத்த அன்னத்தின் ஒரு பகுதியை உயிரினத்திற்கென அளிப்பதே பலியாகும்). மிகவும் விஸ்தாரமுள்ள இந்த ஐந்தையும் சுருக்கி இந்த வைசுவதேவமாகவும் பலிஹரணமாகவும், அதிதி பூஜையாகவும் செய்வர். எல்லா தேவர்களையும் குறித்துச்செய்வதால் இது வைச்வதேவம். தேவர்களுக்கு ஹோமம் செய்து மீதமானதைக் கொண்டு பூதபலி செய்யவேண்டும்.
அதன்பிறகு நாய், காக்கை முதலானவற்றிற்கு பலிதர வேண்டும். மீதியை ஹோமத்திலும் பலிதானத்திலும் குறிப்பிடப்பெறாத தேவர், மனிதர், மிருகங்கள், பட்சிகள், அசுரர், பிசாசர் முதலானோர், மரம் செடி முதலியவை, புழு பூச்சிகள் போன்றவை பசி நீக்க இதனை ஏற்றுத் திருப்தி அடையட்டும் என்று கூறி இடவேண்டும். பிறகு யம பரிவாரங்களுக்கு அளித்துப் பின் உலகில் பசியால் வாடுபவர் அனைவரும் பசிநீங்கப் பெறட்டும் எனக்கோருவர். இரவிலும் மனைவி மந்திரமின்றி காக்கை, நாய் முதலானவற்றிற்கு உணவு அளிக்கவேண்டும். சிராத்தத்தன்று சிராத்தம் முடிந்ததும் தனியாகத் தயாரித்த அன்னத்தால் வைச்வதேவம் செய்வர்.
அதிதி - அப்யாகத பூஜை
ஒரு கவள அளவுள்ள அன்னம் பிக்ஷையாகும். நான்கு கவளம் கொண்டது புஷ்கலம். 4 புஷ்கல அளவுள்ளது ஹந்தா எனப்படும் இதையாவது அதிதிக்கு இடவேண்டும். பூர்ண உணவு தருவதும் இல்லாவிடில் ஒரு கவளமாவது பிக்ஷை போடுவது மனுஷ்ய யஜ்ஞத்தின் உட்படும். வைச்வதேவமானதும் வாசலில் நின்று யாரேனும் உணவை எதிர்பார்க்கிறார்களா என்று கவனிக்கவேண்டும். அப்போது எதிர்பாராமல் வருபவர் அதிதி. இவர் வைச்வதேவம் செய்வதற்கு முன்வந்தால்கூட வைச்வதேவத்திற்கு எடுத்துவைத்துவிட்டு இவருக்கு உணவிட்டுப்பிறகு வைச்வதேவம் செய்யலாம். அதிதி, பிரம்மசாரி, ஸன்யாஸி, பிழைப்பதற்கு வழி இல்லாதவன் என்ற இந்த நால்வரும் சமைத்த அன்னத்தின் முதல்பங்குக்குரியவர். இவர்களுக்கு இடாமல் தனித்து உண்பவன் பாபத்தை உண்கிறான். அதிதி முதலானவர் வராவிடில் அவர்களுக்கெனத் தனித்துச் சிறிது உணவு ஒதுக்கிவைக்க வேண்டும். அப்படி எடுத்து வைத்ததை அவர்கள் வராவிடில் பசுவிற்கு அளிக்கவேண்டும்.
அதிதி, அப்யாகதர் (விருந்தாளி), சிறுவர், முதியவர், நோயாளி, கர்ப்பிணி இவர்கள் உண்ட பிறகே, தான் சாப்பிட வேண்டும். வைச்வதேவம் செய்வதற்கு முன்னரே வந்தவரும், அந்த கிராமத்தைச் சார்ந்தவரும் முன்னர் அறிமுகமானவரும் அதிதி அல்ல. அதிதி படித்தவரோ சிஷ்டரோ விரும்பத்தக்கவரோ விரும்பத்தகாதவரோ எவராயினும் மதிப்பிற்குரியவரே. அந்த அந்த வேளையின் தேவைக்கு அதிகமாக துறவியும் பிரும்மசாரியும் பிக்ஷை பெறக்கூடாது. நியமமும் வேதாத்யயனமும் இல்லாதவனுக்கு பிக்ஷை தராமலிருந்தால் தோஷமில்லை. இந்த அதிதிபூஜையே மனுஷ்யயஜ்ஞமாகும்.
தொடரும்...
Comments