சிற்றின்பமும் பேரின்பமும்
சிற்றின்பமும் பேரின்பமும்
ஒரு மனிதன் வாழ்க்கையில் அடைய முடிந்த உச்சபட்ச நிலை என்ன ?
ஜீவன்முக்தி என்பதுதான் அது.
நாம் உலக விஷயங்களை அனுபவிக்கிறபோது நமக்கு கிடைக்கக் கூடிய இன்பம் சிற்றின்பம். இந்த இன்பம் சிறிய காலம் இருந்து மறைந்து போகக்கூடியது. இது உலகப் பொருள்களை சார்ந்து வருவது. கண்கள் வழியாகக் காட்சிகளை பார்க்கிறோம். காதுகள் வழியாக இனிமையான ஒலிகளைக் கேட்கிறோம். அதனால் நமக்கு இன்பம் கிடைக்கிறது. மூக்கின் வழியாக நல்லவாசனைகளையும் நாக்கின் மூலம் பலவிதமான சுவைகளையும் அனுபவிக்கிறோம். தோல் வழியாக ஸ்பர்சசுகம் கிடைக்கிறது.
ஆனா இந்த இன்பங்கள் எல்லாம் கண் காது மூக்கு நாக்கு தோல் என்கிற இந்த கருவிகள் சரியாக இருக்கின்ற பொழுது தான் கிடைக்கும். அதே மாதிரி அனுபவிக்கக்கூடிய விஷயங்களும் சரியாக இருக்கின்ற பொழுது தான் இன்பம் இருக்கும். இந்த பொறிகளும் புலன்களும் மாறுபடக்கூடியவையாக இருப்பதனால் இதிலிருந்து வரக்கூடிய இன்பத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்தப்புலன்களும் பொறிகளும் சேருகின்ற பொழுது மனதும் அதோடு சேர்ந்தால்தான் இன்பமானது ஏற்படுகின்றது. மனது சரியான நிலையில் இல்லை என்றால் இன்பம் ஏற்படுவது இல்லை. ஆகவே இந்த புலனின்பம் மாறுபடக் கூடிய தன்மை உடையதாகவும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கின்றது. ஒரு விஷயத்தை நாம் அனுபவிக்கின்ற பொழுது மற்ற விஷயங்களில் நமக்கு குறை இருக்கிறது. அந்த குறையுணர்வினால் இந்த இன்பம் முழுமையாக அனுபவிக்க முடியாததாகவும் இருக்கிறது. ஆகவே ஒரு சிற்றின்பம், உலக விஷயம், எல்லாவிதத்திலும் நமக்கு திருப்தியை கொடுக்கும், கொடுக்கிறது என்பது இல்லை. அது மட்டும் இல்லாமல் இந்த உலக விஷயம் கிடைக்காமல் போகிறபொழுது அது நமக்கு பெரும் துன்பம் ஆகவும் ஆகின்றது. இந்த சிற்றின்பத்தை நாம் அடைவதற்கு பெரும் முயற்சி பண்ண வேண்டியதாகவும் இருக்கிறது. அது அதிலிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய இன்பத்தைவிட அதிக துன்பம் தருவதாகவும் பல சமயங்களில் இருக்கின்றது. ஆகவேதான் இது சிற்றின்பம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் பேரின்பம் என்பது இதற்கு முற்றிலும் மாறானது. பொறிகள் புலன்கள் இவைகளை எதிர்பார்க்காமல் நமக்கு எப்பொழுதும் கிடைக்கின்ற நிரந்தரமான இன்பம் தான் பேரின்பம். அதை அடைவதற்கு அதிகமான முயற்சி நாம செய்ய வேண்டியது இருந்தாலும் அடைந்தபிறகு அந்த இன்பம் எப்பொழுதும் இருப்பதாக, மாறுபடாததாக இருக்கின்றது. அந்த இன்பத்தை அடைந்தபிறகு வேறு எதையும் எதிர்பார்க்காத எல்லா விதத்திலும் நிறைவான ஒரு மனநிலை நமக்கு ஏற்பட்டு விடுகின்றது. மனதில் இருக்கக்கூடிய எல்லாவிதமான கவலைகளும் சோகங்களும் மயக்கங்களும் முற்றிலும் போய்விடுகின்றன. அதை அடைந்தவன் பேரின்பமே வடிவெடுத்தவனாக இருக்கிறான். அதையே சான்றோர்கள் ஜீவன்முக்தி என்று சொல்லுகிறார்கள். எல்லா உலக விஷயங்களிலிருந்தும் விடுதலை. எல்லா துக்கங்களில் இருந்தும் விடுதலை. எல்லா மனக்கவலைகளிலிருந்தும் விடுதலை. பரிபூரண இன்பம் - எதையும் யாரையும் எப்பொழுதும் எதிர்பார்த்திராத சார்ந்திராத இன்பம். செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்த நிறைவுணர்வு. அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்துவிட்ட திருப்தியான மனநிலை. ஆகவேதான் அது பேரின்பம் என்று சொல்லப்படுகின்றது. இந்த ஒன்றுதான் ஒரு மனிதன் வாழ்க்கையில் அடைய முடிந்த மிக மேலான விஷயம். எதை அடைந்தால் அதற்கு மேல் அடைவதற்கு எந்த லாபமும் இல்லையோ, எதை அடைந்தால் அதற்கு மேல் அடைவதற்கு எந்த சுகமும் இல்லையோ என்று இந்த நிலையே அடையப்பட வேண்டிய நிலைகளிலெல்லாம் மேலானது.
அப்படிப்பட்ட அந்த பேரின்பநிலையானது ஆத்ம ஞானத்தினால் ஏற்படும். மனமானது ஆத்மாவில் லயமாகின்ற பொழுது ஏற்படக்கூடியது. அதுமட்டுமில்லாமல் வாழுகின்ற காலம் வரை இந்த இன்பமானது நீடித்து இருந்து மரணத்திற்கு பிறகு மீண்டும் பிறக்காத நிலையை கொடுக்கின்றது. அது அமிர்தத்துவம் என்று சொல்லப்படுகின்றது. அதுவே இறைநிலை, இறைவனோடு இரண்டறக் கலந்தநிலை, பிறவா நிலை, வீடுபேறு, மோக்ஷம், ஜீவன் முக்தி, கைவல்யம், நிர்வாணம், பரிபூரணம்.
Comments