ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 7
ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 7
பந்தஸ்வரூபம் - பிறப்பு எப்படி?
புல்லறிவாண்மை
அழியாத ஆத்மாவாக இருக்கின்ற ஜீவர்கள் அறியாமையினால் மூடப்பட்டு, உடல் அபிமானம் கொண்டு தான் பிறப்பு இறப்பிற்கு உட்பட்டதாக கருதுகிறார்கள். நிலையில்லாத உடலையும் உலகையும் நிலையானதாகக் கருதுகிறார்கள்.
எல்லாப் பொருள்களுள்ளும் மாறாத இருப்பாக இருப்பவர் இறைவன். ஆகவே அவர் மெய்ப்பொருள் எனப்படுகின்றார். மற்ற எல்லாப் பொருள்களும் மெய்ப்பொருளான இறைவன் மேல் நாம ரூபங்களாக - பெயர்வடிவங்களாக - மாயையினால் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாமரூபங்களில் மயங்குகின்ற ஜீவர்கள் நிலையில்லாத தோற்றமாத்திரமான உலகத்தினை உண்மை என்று நினைக்கும் கீழான அறிவை அடைகிறார்கள்.
நில்லாதவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (திருக்குறள் 331)
மருளானாம் மாணாப் பிறப்பு
உயிர்களுக்கு ஒரு பிறவி அல்ல. பல பிறவிகள் உண்டு அப்படி பிறவிகள் தோன்றுவதற்கு காரணம் மருள் என்ற மயக்கம் - அறியாமை. மெய்ப்பொருளை அறியாது பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று கருதி வாழ்க்கையை நடத்துவதே மருள். இந்த அறியாமையே பிறவிக்கு காரணமாக இருக்கின்றது.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (திருக்குறள் 351)
வகுத்தான் வகுத்த வகையல்லால்
மனிதன்கள் மனதில் உள்ள விருப்பு - வெறுப்புகளால் தூண்டப்பட்டு உடலிலுள்ள பொறிகளின் வழியாக உலக விஷயங்களைத் தொடர்புகொண்டு இன்பதுன்பங்களை அனுபவிக்கிறார்கள். உடலின் இன்ப துன்பங்களை தன்னுடையதாக கருதுகிறார்கள். இன்பங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் துன்பங்களை போக்கிக் கொள்வதற்காகவும் பல விதமான வினைகளை தர்மமாகவோ அதர்மமாகவோ செய்கிறார்கள். அவ்வாறு செய்கின்ற வினைகளுக்கு த்ருஷ்டபலனோடு அதிர்ஷ்டமாக புண்ணியபாப பலனும் ஏற்படுகின்றது. இந்த புண்ணிய பாபங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின்னர் ஈச்வரனால் இன்ப துன்பங்களாகக் கொடுக்கப்படுகின்றன. திருக்குறளில் ஊழ் அதிகாரம் அதையே காட்டுகின்றது.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது (திருக்குறள் 377)
பிறப்பீனும் வித்து
ஒரு பிறவியில் அனுபவித்து முடியாத புண்ணிய பாப பலன்கள் அடுத்த பிறவிக்குக் காரணமாக அமைகின்றன. அடுத்த மனிதப்பிறவியில் மீண்டும் ஜீவனால் அறியாமையினாலும் ஆசையினாலும் புதிய வினைகள் செய்யப்பட்டு புண்ணிய பாபங்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி பிறவி தொடர்கின்றது முடிவில்லாமல்.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (திருக்குறள் 361)
தொடரும்...
Comments