அறம் செய விரும்பு - 13
வபனம் செய்ய நல்ல நாள்
திங்கள், வியாழன், புதன், வெள்ளி நல்லது. ஞாயிறு, செவ்வாய், சனி, ஷஷ்டி, அஷ்டமி, பிரதமை, சிரார்த்த திதி, அமாவாசை, குரு சுக்ர மௌட்யம் உள்ள நாள், விஷுபுண்யகாலம் உதயத்திலிருந்து 2 நாழிகைகள், ஸாயங்காலம் இவை நல்லதல்ல. மாதா பிதாக்களின் சிராத்தமாதம் அல்லது சிராத்த பக்ஷம், விவாஹம், உபனயனம், சௌளம் இவற்றிற்குப்பின் ஒருவருஷம் அல்லது 6 மாதம், வபனம் கூடாது. உபனயனத்திற்குப்பின் உபாகர்மா ஆறு மாதத்திற்குள் இருந்தால் வபனம் உண்டு. ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள், தந்தையும் மகனும் ஒரே தினத்தில் வபனம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு வபனங்கள் வெவ்வெறு நிமித்தத்தால் ஒரே நாளில் நேருமானால் ஒன்றை மந்திரத்தால் செய்து பின் மற்றதை நேரிடையாகச் செய்யலாம்.
கிருஹக்ருத்யம் - வீட்டுப்பணிகள்
ப்ராத: காலம் என்பது சூரியன் உதித்து 33/4 நாழிகைகள் (1.30 மணி). அதற்குள் ஸந்தியா வந்தனம் அக்னி உபாசனையும் முடிவடைகின்றன. பகல் போஜனத்திற்கு முன் பிரும்மயஜ்ஞம், தேவ பூஜை, வைச்வதேவம், அதிதி, விருந்தாளி, பிரம்மசாரி, ஸன்யாஸி இவர்களுக்கு உணவளித்தல் என்ற நான்கும் செய்யத்தக்கவை. ஸந்தியாவந்தனமும் ஒளபாஸனமும் முடிந்ததும் பிரும்மயஜ்ஞம், தேவபூஜை செய்து பின் தன் குடும்ப நிர்வாகத்திற்கான பணிகளைச் செய்து மதியான்ன காலத்தில் வைசுவதேவம் முதலியவற்றைச் செய்யலாம். குடும்பப் பொறுப்பு அதிகமில்லாவிடில், ஓதிய வேதத்தைத் தொடர்ந்து பிரச்னம் பிரச்னமாகச் சொல்லுதல், தக்க மாணவர்களுக்கு ஓதுவித்தல் இவற்றைச் செய்யலாம். அக்னி காரியத்தை அடுத்துக் குடும்பகாரியமும் அதன்பின் பிரும்ம யக்ஞம் தேவ பூஜை முதலானவற்றைத் தொடர்ந்தும் செய்யலாம். குடும்பகாரியம் காலையிலேயே நிறைவுறச் செய்கின்ற அவசியமில்லாவிடில் மத்யான்னம் போஜனத்திற்குப் பிறகுள்ள நேரத்தை அதற்கு ஒதுக்கி முற்பகலை ஸத்கர்மாக்களில் போக்குவதென்பதும் முன்னோர்களின் திட்டம்.
பிரும்மயஜ்ஞம்
முன்னுரை: பொதுவாக அனுஷ்டானத்தில் மாத்யாந்ஹிக (வந்தன) த்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் செய்கின்றனர். மாத்யாந்ஹிகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. முன்னரும் செய்யலாம். காலையில் செய்வதானால் ஒளபாஸனத்திற்குப் பிறகு பிரும்மயஜ்ஞம் தேவ பூஜை. மத்தியானம் செய்வதானால் மாத்யாந்ஹிகம், பிரும்மயஜ்ஞம், தேவபூஜை; மாத்யாந்ஹிகம், தேவபூஜை, வைச்வதேவம், பிரும்மயஜ்ஞம் என்றும் செய்யலாம். பித்ரு தர்ப்பணம், சிராத்தம் நேருகிறபோது மாத்யாந்ஹிகம், சிராத்தம் அல்லது தர்பணம் பின் பிரும்மயஜ்ஞம், வைச்வதேவம் என்று வரிசை.
பிரும்மயஜ்ஞம் என்ற பெயரால் இரண்டு தனிப்பட்ட கர்மாக்கள் இணைத்துக் கூறப்படுகின்றன. இரண்டும் தனித்தனியே. முதலாவது வேதம் ஓதுதல் அதற்குத்தகுதிபெற விதிகளும். அது பிரம்மயஜ்ஞம். இரண்டாவது தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம். இவை இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்ற தினங்களில்கூட காலையில் பிரும்மயஜ்ஞம் செய்து சிராத்தத்திற்குப் பின் தேவர்ஷிபித்ரு தர்ப்பணம் வைத்துக்கொள்பவரும் உண்டு.
அவரவர் குலாசாரப்படி தன் வேதசாகையைத் தினமும் ஒதிக்கொண்டிருக்கவேண்டும். தினமும் ஒரு காண்டம் அல்லது ஒரு பிரச்னம் அல்லது ஒரு அனுவாகம் அல்லது ஒரு ருக்காவது சொல்ல வேண்டும். அல்லது நான்கு வேதங்களின் ஆதி மந்திரங்களையாவது (வேதாதியையாவது) சொல்ல வேண்டும். இது பிரும்மயஜ்ஞம். இது முடியும்வரை காலையுணவு ஏற்கக்கூடாது. இதனை ஆறு, குளக்கரையில் மேற்கூரை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். அங்கு வேதத்தை உரக்கச் செல்லலாம். வீட்டில் செய்வதானால் வேதபாராயணம் பிறர் காதுகளில் படாதபடி சொல்ல வேண்டும். வேதம் ஓதக்கூடாத நாட்களில் கூட (அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாஸ்யை, பிரதமை, மேகம் மூடிய நாள் போன்ற அனத்யயன நாட்களில்) இதனைச் செய்ய வேண்டும். தேகசுத்தி செய்ய இயலாத போதும், தேசத்தில் கொந்தளிப்பு உள்ளபோதும் செய்ய வேண்டியதில்லை. உபநயனமான பிரும்மசாரி, முதல் உபாகர்மா நடைபெறும்வரை வேதம் ஓத தகுதி பெறுவதில்லை. அந்நிலையில் காயத்திரியையே கூறி நிறைவு செய்கின்றனர்.
(ஒவ்வொரு வேத சாகையும் முதலில் பல காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காண்டத்தின் உட்பிரிவு ப்ரச்னம் அல்லது பிரபாடகம் எனப்பெறும். பிரச்னத்தின் உட்பிரிவு அனுவாகம். அதன் உட்பிரிவு பஞ்சாசத் (பஞ்சாதி). இன்று வேதாதி மட்டும் சொல்வது பழக்கத்தில் உள்ளது. அக்னி மீடே, இஷேத்வா, அக்நஆயாஹி, சந்நோதேவீ என்ற நான்கு வேதங்களின் ஆதியை (வேதாதியை) மட்டும் கூறி நிறைவு செய்கின்றனர்.)
சூரியோதயத்திற்கு முன்னும் இரவிலும் பிரும்மயஜ்ஞம் செய்யக்கூடாது. வேதம் முழுதும் ஓதியவனாயினும் முறைப்படி அதனைச் சொல்ல இயலாதவன் புருஷஸூக்தம் ஸ்ரீருத்ரம் போன்றவற்றை யாவது சொல்லி வரலாம். சூரிய நமஸ்காரத்தை முறைப்படி வேத மந்திரங்களால் செய்பவர் இதனையடுத்து பிரும்மயஜ்ஞம் செய்யலாம்.
பிரும்மயஜ்ஞம்
தர்ப்பாஸனத்தில் கிழக்கு நோக்கி இடதுகாலின்மேல் வலதுகாலும் இடதுகையின்மேல் வலதுகையும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்து ஸங்கல்பம் செய்து மந்திரத்தால் தன் உடலும் உள்ளமும் தூய்மைபெற்றதாய் உணர்ந்து வானிற்கும் தரைக்கும் நடுவே பார்வை பதித்தவனாய் காயத்திரியைப் பிரணவம், வ்யாஹ்ருதியுடன் பிரித்திணைத்தும் வரிசையாக உச்சரித்தும் பிறகு ஹரிநாமஸ்மரணமும் ஓங்காரமும் முன்னும் பின்னும் அமைய வேதாதிகளைக் கூற வேண்டும். தனது வேதத்தின் வேதாதியைக் கூறியதும் அத்தியயனம் செய்த வேதத்தின் பகுதியை முடிந்தவரை சொல்லி மற்ற வேதாதி கூறி முடிக்கவேண்டும். முடிவில் பிரும்மா அக்கினி பூமி முதலானோருக்கு மூன்று தடவை மந்திரத்தால் நமஸ்காரம் செய்யவேண்டும். இது பிரம்மயஜ்ஞம்.
பொதுவாக பிரும்மயஜ்ஞப்ரச்னம் சொல்வதாக ஸங்கல்பித்துத் தினம் ஒரு பிரச்னமாக யஜுர்வேதிகள் 82 நாட்களில் தன்சாகை முழுவதையும் சொல்லிவிடுவர். அதேபோல் மற்ற வேதத்தினரும் செய்வதுண்டு. இதனால் அத்தியயனம் செய்த வேதம் மறக்காதிருக்கும். வேதத்தை மறப்பது பெரும்பாவச் செயல். வேதத்தைத் தொடர்ந்து ஓதாதிருந்தால் பழையதாகிப் பலன் தராமல் போகும். பிரும்மயஜ்ஞப்ரச்னம் சொல்வதால் அக்குறை நீங்குகிறது. வேதத்தில் பல வேள்வி முறைகள் கூறப்பட்டுள்ளன. அந்த வேள்விகளை செய்வதால் உண்டாகிற பலன் அந்த வேதப்பகுதியைச் சிரத்தையுடன் ஓதுவதால் கிட்டுகின்றது. அதனால் தேவதைகளின் அருள் தொடர்ந்து அபரிமிதமாக கிட்டுகிறது. தொடர்ந்து வேதமோதாதவன் பிராமணன் அல்ல. அவனை துர் பிராமணன் என்பர். துர்பிராமணத்தன்மை வராதிருக்க முக்கால ஸந்தியாவந்தனமும் பிரும்மயஜ்ஞமும் உதவுகின்றன. வேதத்தின் ஒரு பகுதியை-வேதஸாரமான காயத்திரியைத் தினமும் சொல்லமுடிவதே இவற்றின் முக்கியப் பிரயோஜனம். ராமாயணம் பாகவதம் முதலியவற்றை இவற்றுடன் பாராயணம் செய்வதுண்டு.
தேவர்ஷி பித்ருதர்ப்பணம்
நாம் பிறந்ததும் மூவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம். 1.தேவர்கள் - பிரும்மா முதலானோர் 2. ருஷிகள் - வேதத்தைத் தன் தவவலிமையால் கண்டவர்களும் வேததேவதைகளும் 3. பித்ருக்கள் - நமது மூதாதையரான பித்ருக்கள் அதிவ்ய பித்ருக்கள். வஸு, ருத்ரர், ஆதித்தியர் என்ற திவ்ய பித்ருக்கள், ஸோமன், யமன், அக்னி போன்ற பித்ருக்களுக்கு உதவுபவர்கள். இந்த மூவரில் தேவர்கள் இயற்கையின் உதவியை அளித்து வாழச் செய்பவர்கள். ருஷிகள் வேதம் முதலிய அறிவு நூல்களைக் கருணையால் வெளியிட்டு வாழ வழிகாட்டியவர்கள். பித்ருக்கள், ஜீவன் தனக்கென உடலைத் தேடித்திரியும் போது உடல்தந்து வாழ்வில் நுழைத்தவர்கள். இவர்களைத் திருப்தி செய்வதற்கு தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். (தர்ப்பணம் = திருப்தி அளிக்கின்ற செயல்) இந்த தர்ப்பணம் ஆச்வலாயனம், ஆபஸ்தம்பம், போதாயனம் முதலிய ஸூத்திரங்களில் ஒவ்வொரு வேதசாகையைச் சேர்ந்தவர்க்கும் தனித்தனியே கூறப்பட்டுள்ளது. அவர்கள் தந்தம் முறைப்படியே தர்ப்பணம் செய்யவேண்டும். முழுவதும் செய்ய இயலாவிடில் "ஆபஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது" - "பிரம்மாவிலிருந்து புழுவரை உள்ள எல்லா உயிரினங்களும் திருப்தி அடையட்டும்" என்று அஞ்சலி நிறைய ஜலம் எடுத்து மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தேவர்களுக்கு உபவீதியாயும் (இடது தோளிலிருந்து வலது விலா சுற்றி வரும்படி பூணூலை தரித்தும்) ருஷிகளுக்கு நிவீதியாகவும் (பூணூலை மாலையாகத் தரித்தும்) பித்ருக்களுக்கு பிராசீநா வீதியாயும் (பூணூலை வலது தோளிலிருந்து இடதுவிலா சுற்றிவரும்படி தரித்தும்) தர்ப்பணம் செய்யவேண்டும். தேவர்களுக்கு இருகை விரல்களின் நுனியைக் கீழே சாய்த்து அஞ்சலி நிறைந்த நீரைவிட வேண்டும். ருஷிகளுக்கு வலது கையின் உட்புறம் (சுண்டுவிரல் உள்ள பகுதியைத் தாழ்த்தி) அதன்வழியே நீர்விழும்படி விடவேண்டும். பித்ருக்களுக்கு கட்டைவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே உள்ள பகுதியைத்தாழ்த்தி அதன்வழியே நீர்விடவேண்டும். நீரைத் தர்ப்பம் பரத்திய தரையில் விடவேண்டும். அல்லது தாமிரம் வெள்ளி தங்கம் வெண்கலம் இவற்றாலான பாத்திரத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன்மேல் நீர் விடவேண்டும், முடிவில் உபவீதியாகி ஆசமனம் செய்ய வேண்டும்.
தொடரும்..
Comments