அறம் செய விரும்பு - 6

அறம் செய விரும்பு - 6

ஆசமனம் செய்யவேறு நிமித்தங்கள்

வேதம் ஓதும்முன், தேவ வழிபாட்டிற்கு முன், குரு நமஸ்காரத்திற்குமுன், போஜனத்திற்காக முன்னும் பின்னும், தூங்கச் செல்லும்முன், உடல்உறவு கொள்ளும்முன், பித்ருகார்யம் செய்யும்முன், தூய்மைக்குறைவை உணர்ந்து அதனை நீக்க ஸ்நானம் செய்ய முடியாதபோது ஆசமனம் செய்வர். ஸ்நானம், தும்மல் தூக்கம், போஜனம் இவற்றின் பின், பிரயாணத்தின் பின் மற்றும் வஸ்திரம் தரித்ததும், அத்தியயனம் முடிந்ததும் ஸந்தியாவந்தனத்திற்கு முன்னும் இரண்டுதடவை ஆசமனம் செய்வர். புதிய உபவீதம் தரிப்பதற்கும், ஜபம், ஹோமம், பிண்டதானம் முதலியவற்றிற்கும் முன் ஆசமனம் செய்வர்.

ஆசமனம் செய்ய இயலாதபோது வலது காதைத் தொடவேண்டும். வலது காது நதி தேவதைகளும் சூரியன் அக்னி முதலிய தேவர்களும் வசிக்கின்ற புனித இடம். பேசும்போது முகத்திலும் புத்தகத்திலும் தெறிக்கின்ற நீர்த்துளிகளும் ஆசமன காலத்தில் தெறிக்கும் நீர்த்துளிகளும் அசுத்தமானவை அல்ல.

தந்த தாவனம் - பல் துலக்குதல்

பாலுள்ளதும் முள்ளுள்ளதுமான மரம் மற்றும் செடிகளின் குச்சிகளால் பல்துலக்குவர். கிழக்கு அல்லது வடக்கு நோக்கி குந்தி உட்கார்ந்து முழங்கால்களுக்கிடையே கைகளை வைத்து இடமிருந்து வலமாக ஒவ்வொரு பல்லாக மேலும் கீழும் மிகவும் அழுத்தாமல் தேய்க்கவேண்டும். (உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியத்திற்காகச் செய்யப்படுகின்ற உபசரணைகள் அனைத்தும் கிழக்கும் வடக்கும் நோக்கிச் செய்வர். தெற்கு மேற்கு நோக்கிச் செய்பவை இதமளிக்காது. ஸங்கல்பம், பிரார்த்தனை, ஸ்னானம் முதலிய சுத்திகர்மங்கள், தேவதர்பணம், ஜபம், முதலியவற்றை ஸூரியனை நோக்கி செய்வர்.) குச்சிகள் கிடைக்காவிடில் நாவலிலை அல்லது மாவிலையால் பல் துலக்கலாம். அமாவாசை, பௌர்ணமி, ஸங்கிரமணம் (மாதப்பிறப்பு) சிராத்தநாள், பிறந்ததினம், விரத உபவாசம் தினம், ஞாயிற்றுக்கிழமை இவற்றில் குச்சியால் ரத்தம் காணும்படி அழுத்தி தேய்க்க கூடாது. பிரம்மசாரி, கன்னிப்பெண், விதவை இவர்களும் குச்சியால் தேய்க்கக்கூடாது. இலையைக்கொண்டோ தந்ததாவன சூர்ணத்தைக் கொண்டோ தேய்க்கலாம். துவர்ப்பு, கசப்பு மற்றும் காரச்சுவையுள்ள குச்சிகள், முக்கியமாக வேம்பு, கருவேல், நாவல், புங்கை, அத்தி, மாதுளை, மா இவற்றின் மென்மையான பசுமையுள்ள குச்சிகள் ஏற்றவை. அரசும் புரசும் கூடாது. சூர்ணம் முதலியவற்றால் தேய்க்கும் போது
பவித்ர விரல் , நடுவிரல், கட்டைவிரல் இவற்றால் பற்களைத் தேய்க்கலாம். நாக்கை முன்கூறியவற்றால் வழித்துக் கொள்ளலாம்.

நீர்த்தேக்கம் மற்றும் ஆற்றின் கரையில், தேவாலயத்தின் அருகில், மாட்டுக்கொட்டகையில், நீரின் நடுவில் நின்று துலக்கக்கூடாது. குச்சியால் துலக்கும்முன் குச்சியில் மரங்களிலுள்ள தேவதாசக்தியான வனஸ்பதி வணங்கி அனுமதிபெறுவதும் பெறுவது ஆயுள், வலிவு, புகழ் பெருமை அறிவு முதலியவற்றை வேண்டுவதும் வழக்கம். ஆயுர் பலம் யசோ வர்ச்ச ப்ரஜா: பசு வஸூநி ச. ப்ரும்ஹ ப்ரஜ்ஞாம் ச மேதாம் ச த்வந்நோ தேஹி வநஸ்பதே" என்று சுலோகத்தைச் சொல்வது வழக்கம். பல்துலக்கியதும் பொதுத் தூய்மைக்காக 16 தடவை வாய் கொப்பளிக்க வேண்டும்.

- தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101