அறம் செய விரும்பு - 5
அறம் செய விரும்பு - 5
மலஜல நீக்கம்
ஸந்தியா காலத்திற்கு முன்னரே, வீட்டிற்குக் கிழக்கிலோ வடக்கிலோ வடகிழக்கிலோ அமைந்த மலக் கழிப்பிடம் சென்று ( பூணூல் அணிந்திருந்தால் பூணூலைத் தாவடமாக - மாலையாக - நிவீதமாக ஆக்கி வலது காதில் சுற்றி) வஸ்திரத்தால் தலையைச்சுற்றி, பகலில் வடக்கு முகமாகவும் இரவில் தெற்கு முகமாகவும் அமர்ந்து மலமூத்திரங்களைக் கழிக்கவேண்டும். கழிப்பிடமிருந்து அகலும்வரை மௌனத்தில் வாய் மூடி இருக்க வேண்டும்.
சூரியன், ஜலம், நல்லோர், பசு முதலியவற்றைப் பார்த்துக்கொண்டே மலம் கழிக்கக்கூடாது. கழிப்பதற்கு முன்னரே சுத்திக்கு நீர், இவற்றைச் சேகரித்து வைக்க வேண்டும். முதலில் மலசுத்தி, பின் மூத்திரசுத்தி, பிறகு பாதசுத்தியும் கைசுத்தியும். தாரையாக விழும் நீரிலோ ஆறுகுளங்களிலோ சுத்தி செய்யக்கூடாது. தனக்கெனத்தனித்த பாத்திரத்தில் ஜலம் மொண்டெடுத்துத் தனித்தமர்ந்து சுத்திசெய்து
கொள்ளல் நல்லது. மலஸ்தானங்களையும் கைகால்களையும் சுத்தி செய்துகொள்ள வேண்டும்.
கண்டூஷம் - வாய் கொப்பளித்தல்
மலநீக்கமானதும் வாய்க்கொப்பளித்தல் அவசியம். சிறுநீர் கழித்திருந்தால் நான்குதடவையும் மலம் கழித்திருந்தால் எட்டுதடவையும் வாயில் நீர் நிரப்பிக் கொப்புளித்துத் தனது இடப்புறத்தில் துப்ப வேண்டும். தனக்கு வலப்புறத்தில் தேவர்கள் இருப்பதை எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். கண்டூஷம் செய்ததும் ஆசமனம் செய்ய வேண்டும்.
ஆசமனம்
வலது உள்ளங்கையில் உளுந்து முழுகுமளவு நீர்வார்த்துக் கையின் அடிப்பகுதியைக் குவித்து, உறிஞ்சுகிற போது ஒலி எழாமல் பருகுவதே ஆசமனம். கால்களை முழங்கால் வரை அலம்பிக் கைகளை மணிக்கட்டுவரை அலம்பிக் கிழக்கு வடக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை முழங்கால்களுக்கு இடையே வைத்து உபவீதியாக இருந்து ஆசமனம் செய்ய வேண்டும். 3 தடவை ஆசமனம் செய்தலும் உதடுகளை வலதுகைப் பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்துப் பின் கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரல்களாலும் துடைக்கவேண்டும். பின்னர் வலது கட்டைவிரலால் வலது இடது கன்னங்களையும் மோதிரவிரலால் வலது இடது கண்களையும் ஆள்காட்டி விரலால் மூக்கின் வலது இடது புறத்தையும், சுண்டுவிரலால் வலது இடது காதுகளையும், நடுவிரலால் வலது இடது தோள்களையும் நான்கு விரல்களால் மார்பையும் ஐந்துவிரல்களால் தலையையும் தொடவேண்டும். அந்தந்த விரல்களால் இடங்களைத் தொடும்போது அந்த விரல்களில் நடுப்பகுதியை கட்டைவிரல் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். 3 தடவை நீர் பருக முறையே அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம: என்றும் கன்னம் முதலிய இடங்களை தொடும்போது கேசவ - நாராயண (கன்னங்களில்) மாதவ - கோவிந்த (கண்களில்) விஷ்ணோ - மதுஸூதந (மூக்கில்) த்ரிவிக்ரம வாமந (காதுகளில்) ஸ்ரீதர - ஹ்ருஷீகேச (தோள்களில்) பத்மநாப (மார்பில்) தாமோதர (தலையில்) என்று பகவன் நாமாவை உச்சரித்து நினைக்கவேண்டும்.
நின்றோ, ஆஸனத்தில் அமர்ந்து கொண்டோ, உத்தரியமில்லாமலோ உபவீதியாக இல்லாமலோ, ஆசமனம் செய்யக்கூடாது.தூயநீரைக்கொண்டு தான் ஆசமனம் செய்ய வேண்டும். நோயுற்றிருந்தால் வென்னீரால் ஆசமனம் செய்யலாம்.
நதி குளங்களில் முழங்காலளவு நீரில் நின்று வலதுகையால் நீரேந்தி ஆசமனம் செய்யலாம். தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தாலான பாத்திரம், கொட்டாங்கச்சி, மரத்தாலான குடுவை இவற்றில் நீர் ஏந்தி இடதுகையில் வைத்துக்கொண்டு வலதுகையில் நீர்வார்த்து ஆசமனம் செய்யலாம். ஈரவஸ்திரம் தரித்தவன் நீரில் நின்று கொண்டு ஆசமனம் செய்யலாம். உலர்ந்த ஆடை தரித்தவன் தரையில் அமர்ந்தே ஆசமனம் செய்ய வேண்டும்.
ஆசமனம் என்பது உள்ளத்தையும் வாக்கையும் தூய்மை படுத்தும் செயல். (ஆசமனம் = தூய்மை செய்தல்) பல்வேறு நற்செயல்களுக்கு முன்னும் பின்னும் இதனைச் செய்வர். கால்களையும் கைகளையும் கழுவுதல், ஸ்னானம் செய்தல் இவை உடலின் தூய்மைக்காக; ஆசமனம் வாக்கும் உள்ளமும் தூய்மைபெற. ஸ்நானத்தையும் ஆசமனத்தையும் மந்திரத்துடன் செய்யும்போது பௌதிகத் தூய்மையுடன் தெய்வீகத் தூய்மையும் கிட்டுகிறது.
Comments