ஸநாதனதர்மமும் திருக்குறளும் -2

ஸநாதன தர்மமும் திருக்குறளும் - 2

முதல் இலக்கு - அறம்

ஸனாதன தர்மம் என்ற நமது ஹிந்து தர்மம் அறத்தை ஆதாரமாகக் கொண்டது. அனாதியானது. என்றென்றைக்கும் மனித இனம் பின்பற்றவேண்டிய தனிமனித, சமுதாய ஒழுக்கங்களை உபதேசித்து தனிமனிதனையும் சமுதாயத்தையும் காப்பது. அதனால்தான் நமது வேதங்களுக்கு சாஸ்திரம் என்று பெயர். வேதங்கள் கடவுளால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டவை. எதன் அடிப்படையில் உலகங்களும் உயிர்களும் படைக்கப்பட்டு இயங்குகின்றனவோ அந்த அடிப்படை விதிகளை எடுத்துச் சொல்வன வேதங்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று வரையறுத்துச் சொல்வன வேதங்கள். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று திருவள்ளுவர் சொன்னது போல தீயவற்றை விலக்கி நல்லனவற்றைச் செய்வதற்கான அறிவை தரும் அறிவு நூல்களே வேதங்கள். மனிதனால் விரும்பப்படும் வாழ்க்கை இலக்குகளை - புருஷார்த்தங்கள் என - அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்காக சொல்லியிருக்கின்றன அறநூல்கள். இந்த நாற்பயன்களையும் அடைய வழிகாட்டுபவை வேதங்கள்.

அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு !
எதற்காக வாழவேண்டும்? எப்படி வாழவேண்டும்? என்றறிந்து, அதன்படி திட்டமிட்டு வாழ்வதே மனிதப்பிறவியின் மாண்பு. எதற்காக வாழவேண்டும் என்ற வாழ்க்கை இலக்குகளில் முதலாவது இருப்பது அறம். அறமே உயிர்களுக்கு நிலைத்த செல்வத்தை ஆக்கித் தருவது. செல்வம் இன்பத்தை தருகின்றது. அன்பு, அறிவு, கல்வி, நற்பண்புகள், நல்உறவுகள், உடைமைகள், புண்ணியம், மோக்ஷம் என அனைத்தும் செல்வமே. இவை அனைத்தையும் ஒரு மனிதன் பெறுவதற்கும் தொடர்ந்து அனுபவிப்பதற்கும் ஆதாரமாய் இருப்பது அறம், அறவாழ்க்கை. மாறாக அனைத்தையும் அழிக்கவல்லது அறமின்மை.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. (திருக்குறள் 32)

அறத்தான் வருவதே இன்பம் 
அறத்தின் பயன் புண்ணியம் ஆகின்றது. புண்ணியமே ஒரு ஜீவன் வாழ்வில் இன்பத்தை அனுபவிப்பதற்காக நற்சூழலை உண்டு பண்ணுகிறது. புண்ணியம் இல்லை எனில் எவ்வளவு வாழ்க்கை வசதிகள் இருந்தாலும் அவை இன்பத்தைத் தரா. புண்ணியம் மன அமைதியை - ஸத்வகுணத்தைத் - தருகின்றது. தெளிந்த நீர் நிலையில் சூரியனின் பிரதிபிம்பம் தெளிவாகத் தெரிவது போல், அடங்கிய மனதில் ஆத்மானந்தம் வெளிப்படுகின்றது. அதுவே உண்மையான ஆனந்தம். தூய்மையான இன்பமே எல்லா உயிர்களின் விருப்பமும். அந்த இன்பம் அறத்தின் பலனாய் வருகிறது.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. (திருக்குறள் 39)

செயற்பாலதோரும் அறனே
செய்யத்தக்கது அறமே. அறம் செய்ய வேண்டுமெனில் - அறத்தின்படி நம் வாழ்வு நல்வாழ்வாக அமைய வேண்டுமெனில்  - முதலில் எது அறம் என நாம் அறியவேண்டும். நற்பண்புகள் - பண்பாடு, சடங்குகள் - பண்டிகைகள் , உறவுகள், பாவனை - உயர்ந்த மனோபாவம் போன்றவை அறம் எனப்படுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நாம் ஒழுக வேண்டிய நியதிகளை சொல்லித்தருவன அறநூல்கள். வாழ்வின் நோக்கத்தையும் வாழும் வகையையும் கற்றுத் தருவன அற நூல்கள். அவற்றை முறையாகக் கற்று செயற்பால தோரும் அறனே.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. (திருக்குறள் 40)

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
மனதில் கோபம் முதலான தீய குணங்களை  அடக்கி, நற்குணங்களை வளர்த்து, கற்க வேண்டிய நூல்களை முறையாகக் கற்று அதன்படி தன்னுடைய புலன்களையும் மனதை கட்டுப்படுத்தி யார் வாழ்கிறார்களோ அவர்கள் இருக்குமிடம் தேடிவரும் அறதேவதை.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (திருக்குறள் 130).

வேதங்கள் அனைத்தும் அறத்தின் மூலங்கள் - வேர்கள். வேதவிருக்ஷத்தின் விழுதுகளே அறநூல்கள் (18 தர்ம சாஸ்திரங்கள் மற்றும் தமிழ் நீதிஇலக்கியங்கள்). இந்த அறநூல்கள் சொல்லும்படி வாழ்ந்தால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை நமக்கு.

- தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101