அறம் செய விரும்பு - 16
போஜனம் - உணவு
உண்ட உணவு உடற்பகுதி அனைத்திற்கும் ஊட்டமும் வலிவும் தெளிவும் தருவதாக அமையவேண்டும். உணவாலேயே உள்ளமும் எண்ணமும் உணர்வுகளும் அறிவும் அமைகின்றன. அதனால் அவைகளுக்கு உறுதியும் தெளிவும் தருவதாக உணவு அமைய வேண்டும். செயலும் எண்ணமும் காரணமாக அமைய ஆத்மாவிற்கு வினையால் கட்டும்(பந்தமும்) வினைநீக்கமும் ஏற்படும். அதனால் போஜனத்தைப் பசி நீங்கவும் நாக்குக்குத் திருப்தி அளிக்கவும் உள்ளதாகக் கருதாமல் ஆத்மதிருப்தி தருவதாக அமைப்பதில் நாட்டம் தேவை. போஜனத்திற்குமுன் வைச்வதேவமும் அதிதி பூஜையும் நடத்துவதன் மூலம், தன்னலத்தை மட்டுமே கருதாமல் சமைத்த உணவில் தன்னுடன் உடல் சம்பந்தப்படாத பலருக்கும் அதில் பங்கு உண்டு என்பதை உணரலாம்.
மந்திரம் சொல்லிப் போஜனத்தைத் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். கை கால்களை அலம்பி உபவீதியாக உத்தரீயம் தரித்து இரண்டு தடவை ஆசமனம் செய்து. கிழக்கு அல்லது மேற்கு முகமாக (சிராத்தத்தன்று வடக்கு முகமாக) ஆஸனத்தில் அமர்ந்து கால்களை ஆசனத்திற்கு வெளியே தரையில் வைத்து சந்தனம் தரித்து, தங்கம் வெள்ளி வெண்கலம் தாமிரம் இவற்றாலான பாத்திரத்திலோ வாழை இலையிலோ சாப்பிடவேண்டும். உண்கலம் போடுமிடத்தை முன்னதாகச் சுத்தம் செய்திருக்கவேண்டும். நடுப்பகல், முன்னிரவு என இருவேளைகளில் மட்டும் சாப்பிடலாம். நோயாளி, சிறுவர், முதியவர், சக்திக்குறைவுள்ளவர், உடல் உழைப்பு மிக்கவர் இவர்களுக்கு இரு வேளை நியமமில்லை.
இனிப்புள்ளவை, சுத்தான்னம் இவற்றைத் தன்னை ஒட்டியுள்ள இலை அல்லது பாத்திரப்பகுதியிலும் மற்ற சுவையுள்ளவற்றை எதிர்புறத்திலும் பரிமாறவேண்டும். அன்னமிட்டு நெய் போடும்வரை திரிஸுபர்ணம் முதலிய மந்திரங்கள் கூற வேண்டும். இலை - சுத்த அன்னம் வைக்குமுன் நமஸ்தே அன்ன! என்று தன்முன் உள்ள அன்னத்தை வணங்கி "அஸ்மகம் நித்யமஸ்து ஏதத்" "என்றும் எமக்கு இந்த அன்னம் கிடைக்கட்டும்" என்று கோரி இடதுகையால் இலை - பாத்திரத்தைத் தொட்டுக்கொண்டு அன்னம் வைத்து நெய்விட்டதும் பிரணவம் வியாஹ்ருதியால் அன்னத்தை வரவேற்று காயத்திரியால் தூயதாக்கி "ஸத்யம் த்வா ருதேன (ருதம் த்வா ஸத்யேந என்று இரவில்) பரிஷிஞ்சாமி" என இலை, பாத்திரத்தைச் சுற்றிப் பரிஷேசனம் செய்ய வேண்டும். வலது கையில் ஜலம் விட்டு "அம்ருதோபஸ்தரணமஸி" என மந்திரத்தால் உண்ணும் உணவிற்கு கீழ்ஆதாரமாகும்படி கையில் உள்ள சலத்தை வேண்டி பருக வேண்டும். இது ஆபோசனம். பிறகு நெய் கலந்த சுத்தான்னத்தில் கட்டை விரல் நடுவிரல் பவித்ர விரல்களால் சிறிது அன்னமெடுத்துப் பிரணவத்துடன் கூடிய ''ப்ராணாய ஸ்வாஹா" முதலிய மந்திரங்களால் ஆறு ஆஹுதிகளாக வாயிலிட்டு மெல்லாமல் அதை விழுங்க வேண்டும். இது பிராணாஹுதி. பிறகு இலையில் வைத்திருந்த இடதுகையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து 'ப்ரும்மணிம ஆத்மா அம்ருதத்வாய' என்று வேண்டி இறைவனை தியானிக்க வேண்டும். சாப்பாடு முடிந்ததும் "உள்ளே சென்ற அமுத உணவிற்கு மூடியாக ஆவாய்" "அம்ருதாபிதானமஸி" என வலது உள்ளங்கையிலிட்ட நீரைப்பருகி மீதிநீரை தரையில் விடவேண்டும். இது உத்தர ஆபோசனம். உத்தராபோசனம் செய்த பின் இலையைத் தொடக்கூடாது. எழுந்திருந்து வாய், கைகளைக் கழுவி 16 தடவை நீரால் வாய் கொப்புளித்து இடது புறத்தில் துப்பி கை கால்களை அலம்பி இரண்டு தடவை ஆசமனம் செய்து கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளைத் தேய்த்துச் சர்யாதி, சுகன்யா, ச்யவனர், இந்திரன், அஸ்வினி தேவர்கள் இவர்களை நினைத்து கட்டை விரல்களால் கண்களை அழுத்தித்துடைத்து அக்கினியையும் இஷ்டதேவதையையும் வணங்கவேண்டும்.
உணவேற்க உட்காருமிடம், உணவைத் தாங்குகின்ற பாத்திரம் அல்லது இலை, அதனைப் போடும் இடம், உணவேற்கின்றவனின் கைகால்கள், உணவு பரிமாறுபவர், உணவு தயாரிப்பு, கூட உண்பவர், உணவு என எல்லாவற்றிலும் தூய்மை தேவை. அன்பும் அழகும் உபசரிப்பும் நிறைந்த சூழ்நிலை தேவை. நெய் சுத்தமல்லாததையும் சுத்தமாக்கும் என்று நம்பிக்கை. நெய்யிடுவதை அன்னசுத்தி செய்வது என்றே சொல்வர். பரிஷேசனத்திற்கு முன் நெய் இடாவிட்டால் பின் நெய் இட்டுக்கொள்வதில்லை.
தனித்து உட்கார்ந்து சாப்பிடுவதும், பரிமாறுவதிலும் உணவிலும் குற்றம் குறை இருந்தாலும் வெளிப்படுத்தாமல் இட்டதை நிந்திக்காமலே உண்பதும், பிராணாஹுதி வரை மௌனமும், பின்னர் மிதமாகப் பேசுவதும் மன கிளர்ச்சிக்கு இடம் கொடாமல் அமைதிகாத்தலும் பெரியோர் மரபு. மற்றவர் நியமம் காக்காதிருந்தால் குற்றம் கூறாமல், மறுபடி அப்படி வாய்ப்பு நேராமல் அவர்களைத் தவிர்ப்பதும் அமைதி காக்கும். உணவை உண்கலத்தில் இட்டதும் அதனிடம் தெய்விகத்தன்மை இருப்பதை உணர்ந்து அதனை காயத்திரியால் மேலும் தூயதாக்குவர். 'ஸத்யமான உன்னை நேர்மையால் சுற்றி நனைக்கிறேன்' எனக்கூறி ஸத்யத்திற்கு நேர்மையைப் பாதுகாப்பாகக் கருதுவதே பகலில் பரிசேஷனம் ஆகிறது. இரவில் நேர்மையால் ஸத்யத்திற்குப் பாதுகாப்பு அளிக்க பெறுகிறது. உண்ணும் உணவு அமிர்தம். அதற்கு வயிற்றில் ஆதாரமாக நீரை பருகுவது ஆபோசனம். பரிஷேசனமானதும் ஆபோசனத்திற்கு வலது புறத்தில் பரிஷேசன நீர் பட்ட இடத்திற்கு வெளியே "ஸர்வபூதேப்யோ நம:" என்றோ "பூதாநாம் பதயே நம:" என்றோ கூறி மூன்று சிறு அன்னப்பிடியை வைத்து அதன்மேல் "யத்ர வஸந ஸமஸ்தாநாம் க்ஷுத்த்ருஷ்ணோ பஹுதாத்மநாம். பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்" என்று கூறிச்சிறிது ஜலம் விடுவர் "எங்கோ இருந்துகொண்டு வாடி வதங்கிய உயிரினமனைத்தின் நீர் உதவட்டும்" என்பது பொருள். இந்த நினைப்பும் பரிவும் உலகெங்கும் பரவி நல்லெண்ணத்தை விளைவிக்கும்.
உடலில் ஐந்து வாயுக்கள் பிராணன், அபானன், வியானன், உதானன் என. இறைவனே உடலில் ஜாடராக்னியாக இருந்து செரிக்கச் செய்கிறான். பிராணன் முதலான ஐந்து வாயுக்களாக இருந்து செரித்த உணவின் சத்தை உடலில் சேர்த்தும், ஊட்டத்திற்கு உதவிப் பயனற்றுப் போன கழிவுப்பொருளை அகற்றியும் இரத்த ஓட்டம் முதலியவற்றின் மூலம் உடலில் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் சமநிலைக்கும் உதவுகிறான் என்பர். அந்த ஐந்து பிராணசக்திகளைத் தருகின்ற ஐந்து வாயுக்களுக்கும் தூண்டுதல் தர இந்த பிராணாஹுதி தரப்படுகிறது. அப்படி வலிவடைந்த ஜீவனைப் பரம்பொருளிடம் அழியாநிலை பெறுவதற்காக இணைப்பதே ப்ரும்மணிம ஆத்மா என்ற மந்திரத்தின் பொருள். உண்ணும் போது 'கோவிந்த' 'கோவிந்த' என்றும் மற்ற இறைவனின் நாமங்களையும் கூறிக் கொண்டே உண்பதும் நல்லோர் வழக்கம்.
பிராணாஹுதி முடியும்வரை இலையை தொட்டுக்கொண்டிருந்த இடதுகையைத் தனியே ஜலம் விடச்செய்து அலம்பிக் கொள்ளவேண்டும். பரிஷேசனத்தின் போது சொட்டிய ஜலத்தால் அல்ல. பரிஷேசனம் செய்து மீந்த ஜலத்தால் ஆபோசனம் செய்யக்கூடாது. ஆபோசனத்திற்குப் பிறரை நீர்வார்க்கச் செய்ய வேண்டும். இடது கை இலையைத் தொட்டுள்ளதால் இந்த நியமம். பிராணாஹுதிக்கான அன்னத்தைப் பற்களால் மென்று சாப்பிடக் கூடாது.
பிராணாஹுதிக்கான அன்னத்தை எல்லா விரல்களாலும் எடுக்கலாம். அல்லது பிராணாய ஸ்வாஹா (1.சிறுவிரல் 2.மோதிர விரல் 3. நடுவிரல் 4. ஆட்காட்டி விரல் 5. கட்டை விரல்) 3-4-5 விரல்களாலும், அபானாய ஸ்வாஹா என 2-3-5 விரல்களாலும், வியாநாய ஸ்வாஹா என 1-2-5 விரல்களாலும், உதாநாய ஸ்வாஹா என 1-2-3-5 விரல்களாலும், ஸமாநாய ஸ்வாஹா என்பதையும் பிரம்மணே ஸ்வாஹா என்பதையும் எல்லா விரல்களாலும் அன்னத்தை எடுப்பது மரபு. இடதுகையைத் தொடையில் அல்லது தரையில் ஊன்றிக்கொள்ளக் கூடாது. உணவுப்பாதை கோணிக்காற்றுப் பாதை தடைப்படும்.
கட்டில் முதலியவற்றில் உட்கார்ந்து காலை தொங்கவிட்டோ, தரையில் ஆஸனமின்றி உட்கார்ந்தோ, காலை நீட்டிக்கொண்டோ, வாகனங்களில் ஏறி அமர்ந்தோ உண்ணக்கூடாது. உணவுக்குழாய் இரைப்பை சீராக இருக்க ஆசனத்தில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கார்வதே நல்லது. உபவீதமாய்ப் பூணூலைத் தரிக்காமலும் உத்தரீயமில்லாமலும் சாப்பிடுவது நல்லதல்ல.
தொடரும்...
Comments