அறம் செய விரும்பு - 8

அறம் செய விரும்பு - 8

உலகப்படைப்பில் முதலில் தோன்றியது நீர் (நாரா) அதனையே தன் இருப்பிடமாக (அயனமாகக்) கொண்டவர் நாராயணர். நரர்களாகிய ஜீவர்களுக்கு அடையவேண்டிய இலக்கும் அதற்கான பாதையும் (அயனம்) அவரே. அவரது நாமங்களின் ஜபமும் மனனமும் பாபத்தை நீக்குபவை. புனிதத்தைத் தருபவை, தெய்வ அருள் பரவத் தகுதி ஏற்படுத்துபவை. 

மந்திரங்கள் ஓதாதவரும் ஓத இயலாதவரும் தகுதி இல்லாதவரும்கூட, ஜலத்தில் உள்ள ஜலதேவவையான வருணனும் நதி தேவதைகளும் ஜலத்தின் அமிருத சக்தியும் நீராடும் நீரில் இருப்பதை உணர்ந்து அவர்கள் தன்னை அருளால் பாலித்துப் பாபமகற்றிப் புனிதனாக்கும்படி மனத்தளவில் வேண்டிக்கொள்வர். கங்கே! கங்கே! காவேரி! காவேரி! என நதிதேவதைகளை உரக்கக் கூப்பிட்டும் நீராடலாம். அப்போது மந்திரம் ஜபிப்பதன் பலன் கிட்டி விடுகிறது.

நோயுற்றிருப்பவர், பாலர், கர்ப்பிணி, முதியவர் மற்றும் குளிர்ந்தநீர் ஒத்துக் கொள்ளாதவர், குளங்களுக்குச் செல்லமுடியாதவர், தன் வீட்டிலுள்ள கிணற்றின் நீரால் நீராடலாம். அந்நிலையிலும் அந்நீரில் தெய்வ அருளை வேண்டிடுவது அவசியம். ஜனனம் மரணம் முதலியவற்றால் நேர்ந்த தீட்டு வென்னீரில் நீராடுதலால் நீங்காது, நோயுற்றவராயின் தீட்டு நீங்க வென்னீரில் நீராடிப் பின் நோய் நீங்கியதும் நீர் நிலைகள் சென்று நீராடிய பின்னரே முழுத்தீட்டு நீங்கும். ஸங்கிரமணம் (மாதப்பிறப்பு - சூரியன் ஒருராசியை விட்டு அடுத்த ராசியில் நுழையும் நாள்) சிரார்த்தம், கிரஹணம், அமாவாசை முதலிய நாட்களில் வெந்நீரால் நீராடுவதால் போதிய தூய்மை கிட்டாது. அப்படி வென்னீரில் நீராட நேர்ந்தால் நோயுற்றுள்ளதால் பூர்ணத்தூய்மை பெற இயலாதிருக்கிறோமே என்று வருந்தித் தெய்வ அருள் கோரலாம்.

உடுத்திய ஆடை, மேலாடையுடன் நீராடுவது ஸசேலஸ்நானம் எனப்படும். அவ்விதம் ஆடையுடன் ஸ்நானம் செய்வதே நியம ஸ்நானம், உடுத்திய ஆடையை நீக்கி சிற்றாடை அணிந்து குளிப்பது பலன் தராது. ஆடையின்றியும், ஆடைக்குறைவுடனும் நீராடுவது நீரில் உள்ள தேவதாசக்தியை அவமதிப்பதாகும். பாபம் விளையும். நதிகளிலும் தெய்விகக் குளங்களிலும் ஸ்நானம் செய்யும் போது உலர்ந்த ஆடையை மேல்போர்த்தி உள்ளாடையைக் கீழாக நழுவவிட வேண்டும், மற்ற இடங்களில் மேலாக உறுவி எடுக்க வேண்டும்.

நைமித்திகஸ்நானம்

தீட்டுள்ளவர்களைத் தொட்டாலும், சவமுள்ள இடத்தில் சென்றாலும், மயானம் சென்றாலும் மரணம் நேர்ந்த 10 நாட்களுக்குள் அவர்களது வீட்டிலோ வெளியில் வழியிலோ துக்கப்பிரச்னம் செய்தாலும் ஸசேலஸ்நானம் தேவை. தீட்டுள்ளவனைத் தொட்டவனைத் தொட்டாலும் தீட்டுண்டு. நீராடினால் அது நீங்கும். அப்படித் தொட்டவன் தீட்டென அறியாமல் தொட்டிருந்தால் ஆசமனம் போதும். வழி, யாத்திரை, யுத்தம், கலகம், விவாஹம், வேள்வி, உற்சவம், நகரம், தீப்பிடித்தலால் நெருக்கடி முதலிய நேரங்களில் இந்த ஸ்பர்சத்தீட்டு இல்லை.

கிரஹணஸ்நானம் 
சூரியகிரகணமோ சந்திரகிரகணமோ ஏற்பட்டால் கிரகணம் பிடிக்கத் தொடங்கியதும் விட்டபின்னரும் நீராடவேண்டும். ஜனன - மரணத்தீட்டுள்ளவனும் நீராடவேண்டும். கிரகணம் தெரியுமிடங்களில் கிரகணம் தெரியும் வரை தான் இந்த புண்யகாலம். கிரகணம் பிடித்துள்ள போது விடுவதற்கு முன்னரே அஸ்தமனமாகிற விட்டால் உபவாஸமிருந்து உதயத்திற்குப்பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.

ஸங்க்ரமண ஸ்நானம்

சூரியன் தான் ஸஞ்சரித்த ராசியைவிட்டு அடுத்த ராசிபில் நுழையும் வேளையே ஸங்க்ரமண புண்யகாலம் எனப்படும். ஸெளரமானப்படி தமிழ் நாட்டில் மாதப்பிறப்பென இதைக் கொண்டாடுவர்.

சித்திரை, ஐப்பசி மாதப் பிறப்பு விஷு என்றும், வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாத பிறப்புகள் விஷ்ணுபதம் (விஷ்ணுபதீ) என்றும், ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதப்பிறப்புகள் ஷடசீதி என்றும், ஆடி மாதப்பிறப்பு தஷிணாயனம் என்றும், தை மாதப்பிறப்பு உத்தராயணம் என்றும் தனிச்சிறப்புப் பெற்றவை. சூரியன் மகரராசியில் பிரவேசித்தபின் 20 நாழிகை உத்தராயண புண்யகாலம், கடகத்தில் பிரவேசிப்பதற்குமுன் உள்ள 20 நாழிகை தஷிணாயன புண்யகாலம், விஷுவத்தில் துலா ராசியிலும் மேஷராசியிலும் சூரியன் பிரவேசிக்குமுன் உள்ள 10 நாழிகையும் பிரவேசித்தபின்னருள்ள 10 நாழிகையும் புண்யகாலம், இந்த நேரத்தில் ஸ்னானம் செய்ய வேண்டும்.

ரஜஸ்வலை ஸ்நானம்
மாதவிடாயுற்ற பெண் நான்காம் நாளில் சூரிய உதயத்திற்குப்பின் ஆறு நாழிகை (2.24 மணி) கழித்து நீராடவேண்டும். 5-வது நாள் நீராடிய பிறகே தேவகாரியங்களுக்கும் பித்ரு காரியங்களுக்கும் ஈடுபடலாம். தீட்டுகண்ட நாளிலிருந்து 17 நாட்களுக்குள் மறுபடி தீட்டு கண்டால் ஸ்நானத்தால் சுத்தி. 18வது நாள் முதல் மூன்று நாள் தீட்டு. அது கழிந்ததும் ஸ்நானத்தால் சுத்தி. மாதவிடாய் நேரத்தில் ஜனன, மரணத் தீட்டு ஏற்பட்டாலும் ஜனன, மரணத் தீட்டு ஏற்பட்டபின் மாதவிடாய்த் தீட்டு ஏற்பட்டாலும் உடன் ஸ்நானம் செய்து பின் போஜனம் செய்யலாம். மாதவிடாய் தீட்டுள்ள பெண்ணை மற்றொரு மாதவிடாய் தீட்டுள்ளவர் தீண்டக் கூடாது.

நோயுற்றவனுக்கு ஸ்நானம்
நோயுற்று நீராடக்கூடாத நிலையில் இருந்து நீராடவேண்டிய அவசியமிருந்தால் தீட்டில்லாத மற்றொருவன் அவனைத் தொட்டுப் பத்துதடவை நீராடவேண்டும். ஒவ்வொரு ஸ்நானம் முடிந்தபிறகும் நோயாளி உலர்ந்த ஆடை அணியவேண்டும். மாதவிடாய் உள்ள பெண் நோயுற்று நீராடக்கூடாத நிலையில் இருந்தால் தீட்டுக் கழிய மற்றொரு பெண் இவளை தொட்டுத்தொட்டு பத்துதடவை முழுகுவதாலும், இவள் மாற்றி மாற்றி உலர்ந்த ஆடை உடுத்திக் கொள்வதாலும் தீட்டு நீங்க பெறலாம். பிறரது தீட்டு நீங்க ஸ்நானம் செய்பவர் கடைசியில் மந்திரமில்லாமல் முழுகி ஆசமனம் செய்து மறுபடி முறைப்படி ஸ்நானம் செய்து சுத்திபெறுவர்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101