அறம் செய விரும்பு - 11




ஸந்தியாவந்தனம்

சூரியனின் உதயத்திற்கு முன் 2 நாழிகை (48 நிமிஷங்கள்) காலை நேரத்து ஸந்தியாவந்தனத்திற்கு முக்கியகாலம். உதயத்திற்குப் பின் 3 3/4நாழிகை (1 1/2 மணி நேரம் ) கௌணகாலம். உதயம் முதல் 11 நாழிகைக்குமேல் 15 நாழிகை வரை (10.30 மணி முதல் 12 மணிக்குள்) மாத்யான்னிகத்திற்கு முக்யகாலம். அஸ்தமனம்வரை கெளணகாலம் அஸ்தமனத்திலிருந்து 2 நாழிகை வரை மாலை ஸந்தியாவந்தனத்திற்கு உரியகாலம். 

ஸந்தியாவந்தனத்தில் அர்க்க்யப்ரதானம் முக்யம் என்பர். பிரும்மைவாஹமஸ்மி என்ற பிரும்ம-ஆத்ம ஐக்ய அனுஸந்தானம் முக்கியமெனச்சிலர். காயத்ரி ஜபமும் காயத்ரியின் உபஸ்தானமும் முக்யமெனச்சிலர். இவற்றை அந்த முக்கிய ஸந்தியா காலத்தில் செய்யவேண்டும் என்பதுதான் நோக்கம். உரிய முக்கிய காலம் தவறினால் காலாதீத பிராயச்சித்தம் என்று ஒரு அர்க்க்யம் கூட விடவேண்டுமென்றிருப்பதால் அர்க்ய ப்ரதானத்தையாவது உரியகாலத்தில் செய்ய வேண்டும்.

பகலும், இரவும் அவ்வாறே இரவும் பகலும் சந்திக்கும் வேளை சந்தியா காலம். அக்காலத்தில் செய்யப்படுகின்ற வந்தனம் ஸந்தியாவந்தனமாகும். அக்காலத்தில் தியானிக்க வேண்டிய தேவதையின் பெயர் ஸந்தியாதேவி. அவளுக்கான வந்தனமிது. அதனாலும் ஸந்தியாவந்தனம். இந்த கர்மாவில் தியானம் கூடுவது முக்கியம். காயத்திரி தேவியை நன்கு தியானித்து வழிபடுவதால் சந்தியாவந்தனம். இதில் ஸங்கல்பம், ஜலதேவதையை பிரார்த்தித்து தூய்மை பெறுதல், சோம்பலை நீக்கித் தெய்வீகமான தூண்டுதல் பெற அர்க்க்யபிரதானம், ஆத்மானுஸந்தானம், நவக்ரஹங்கள், ரக்ஷா தெய்வமான விஷ்ணு இவர்களுக்கு தர்ப்பணம். பிரணவம், வ்யாஹ்ருதி, காயத்ரி, காயத்ரிசிரஸ் என்ற மந்திரங்களால் பிராணயாமமும் ஜபமும், காயத்ரிதேவியின் உபஸ்தானம், நேரத்தை ஒட்டி மித்ரன் ஆதித்யன் வருணன் என்ற வடிவில் உதவுகின்ற பரம்பொருளையும் திக்தேவதைகளையும் யமனையும் விச்வரூபரையும் நாராயணனையும் வணங்கி நாராயணனிடம் செய்ததை ஸமர்ப்பித்தல் என்பது முக்கால ஸந்தியாவந்தனத்தின் நிகழ்ச்சி நிரல். பொதுவாக பவித்ரம்-தர்ப்பம் தரித்தே எல்லா நற்பணிகளையும் செய்ய வேண்டும் எனும் நியமம் இதற்கும் பொருந்தும். எனினும் பெரும்பாலும் இதற்குப் பவித்ரம் தரிப்பதில்லை. ஏழு நாட்கள் தொடர்ந்து சந்தியாவந்தனம் செய்யாதவர்-பதிதன். மறுபடி உபனயனம் செய்து கொள்ளவேண்டும் என்பர்.

ஸந்தியாவந்தனத்தின் பொதுவழிகள்

ஆசௌச காலத்தில் கூட சந்தியாவந்தனம் முக்கியம். அபரக்ரியை தொடங்கும் நேரம் ஸந்தியாவந்தனத்திற்குரிய நேரமாயிருந்தால் ஸந்தியாவந்தனம் செய்த பின்னரே அபரக்ரியைத் தொடங்க வேண்டும். ஸந்தியாவந்தன வேளையில் வேறு எந்தப்பணி குறுக்கிட்டாலும் அதைத் தள்ளி வைத்து விட்டு ஸந்தியாவந்தனத்தைச் செய்ய வேண்டும். காலையில் ஸ்நானம் செய்ய இயலாதபோது கௌண ஸ்நான முறையில் உடலைச்சுத்தி செய்து புண்ட்ரதாரணம் செய்துகொண்டு உடன் முறைப்படி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

காலையிலும் மத்யான்னத்திலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்கியம் விடவேண்டும். இரண்டு கைகளிலும் ஜலத்தை நிரப்பி வணங்கி நின்று சூர்யனுக்கு எதிராய் உயர்த்தி அர்க்க்யம் விடவேண்டும். இரண்டு கைகளையும் பிரித்து கைகளின் இடையே ஜலம் விழும்படி விட வேண்டும். இரு கட்டை விரல்களையும் மற்ற விரல்களுடன் சேராமல் பிரித்துவிட வேண்டும்.

ஜபம்

கிழக்கு அல்லது வடக்கு முகமாய் அமர்ந்து செய்ய வேண்டும். அமைதியுடன் அமர்ந்து தியானம் கூடும் வகையில் ஆஸனமிட்டு உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். மான்தோல், புலித்தோல், தர்ப்பம், வஸ்திரம், கம்பளி, மரப்பலகை இவற்றால் உறுத்தாதவாறு ஆஸனம் அமைத்து அதில் பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம் முதலியதில் ஏதேனும் ஒரு பழக்கப்பட்ட ஆஸனமுறைப்படி அமரவேண்டும். காலையிலும் மத்யான்னத்திலும் நின்றுகொண்டும் மாலையில் உட்கார்ந்தும் ஜபம் செய்வது உத்தமம். காலையில் மூக்குக்கு நேராகக் கைகளை நிமிர்த்தி வைத்துக்கொண்டு கைகளை உத்தரியத்தால் மறைத்து ஜபம் செய்யவேண்டும். மத்யான்னத்தில் மார்பிற்கு நேராகவும் மாலையில் நாபிக்கு சமமாக மலர்த்திக் கீழ்தாழ்த்தியும் வைத்து ஜபம் செய்யவேண்டும். பிரணவம், வ்யாஹ்ருதிகள், காயத்திரியின் மூன்று பாதங்கள் என்ற ஐந்தையும் சேர்க்காமல் தனித்தனியே உச்சரிக்க வேண்டும். மனத்திற்குள் ஜபிப்பது சிறந்தது. பிறர் காதுபடச் சொல்லாமல் வாய்க்குள் சொல்லிக்கொள்வது மத்யமம். பிறர் காதுபட ஜெபிப்பது அவ்வளவு சிரேஷ்டமல்ல. பொருள் உணர்ந்து தேவதை மந்திரம் இரண்டையும் உணர்ந்து ஜபிப்பது நல்லது. ஜபிக்கும்போது தொப்புளுக்குக் கீழுள்ள பகுதியைத் கைகளால் தொடக்கூடாது. தொட்டால் கைகளை ஜலம் இட்டு அலம்ப வேண்டும். அல்லது வலதுகாதைத் தொடவேண்டும். ஜலத்தில் நின்று ஜபிப்பதானால் ஈரவஸ்திரத்துடனும் ஜெபிக்கலாம். ருத்ராட்சம், பவளம், முத்து, ஸ்படிகம், தாமரைக் கொட்டை இவற்றைக் கொண்டு 27-54-108 மணிகள் கொண்ட மாலைகட்டி நடுவில் மேருவாக ஒரு மணியைத் தொங்கவிட்டு அதனைக் கொண்டு ஜபத்தை கணக்கிடலாம். விரல்களைவிட்டு எண்ணுவதும், விரல்களின் ரேகையில் கட்டை விரலைப் பதித்து எண்ணுவதும் உண்டு. தியானம் சிதறாமல் எண்ணிக்கையும் தவறாமல் ஜபிப்பது நல்லபலன் அளிக்கும். ஜபமாலையை நடுவிரலில் அல்லது மோதிர விரலில் தொங்கவிட்டு கட்டை விரலால் தள்ளிக் கணக்கிடலாம். கட்டை விரல் வைத்து நடுவிரலால் உருட்டலாம். மேருவைத் தாண்டாமல் மறுபடி திருப்பி உருட்டுவதும் அவசியம். அம் ஆம் இம் ஈம் என்று மாத்ருகாக்ஷரங்களை கொண்டு புற சாதனமின்றி ஜபிப்பது மிகச்சிறந்தது. குருமுகமாக இம்முறையைப் பெறுவது அவசியம், 

ஜபம் முடிந்து காயத்ரி உபஸ்தானம் தொடங்கி ஜப ஸமர்ப்பணம் வரை செய்து முடித்ததும் அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை குருவின் உபதேசம் பெற்றுச் செய்யலாம், ஸ்ரீருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் முதலிய ஸூக்தங்களையும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்வது பாபத்தைப் போக்கி மன அமைதியைத் தரும்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101