ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 4
ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 4
மூன்றாம் இலக்கு - இன்பம்
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை
பாபத்தை தருகின்ற தீச்செயல்களைக் குறைத்து, புண்ணியத்தை தருகின்ற நற்செயல்களைப் பெருக்கி இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையை, இன்பத்தைத் தேடிக் கொள்வதற்கே இல்லறம் - இல்வாழ்க்கை.
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்கிறார் ஔவையார்.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்போடு கூடிவாழ்வது இல்வாழ்வு. கணவன் மனைவியாக கற்பொழுக்கத்தோடு இல்லத்தில் இருந்து அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற தர்மங்களை செய்து வாழ்வது இல்வாழ்வின் கடன் ஆகும். அனைத்து உறவுகளோடும் கூடி அன்பு கொண்டு வாழ்வது இல்வாழ்வின் இன்பம் ஆகும். மற்றவரையும் அறநெறியில் வாழச் செய்து தானும் அறம் தவறாது வாழ்வது இல்வாழ்வின் அறம் ஆகும். பல்வேறு நற்செயல்களைச் செய்து புண்ணியத்தை ஈட்டுவது இல்வாழ்வின் பயன் ஆகும்.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை. (திருக்குறள் 49)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை (திருக்குறள் 48)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (திருக்குறள் 45)
அறிவறிந்த மக்கட்பேறு
மக்களைப் பெற்று மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; சொல் கேட்டல் செவிக்கு இன்பம்.
அவர்களை அறிவும் பண்பும் உடையவர்களாக வளர்த்து, சான்றோனாக்கி அவையத்து முந்தி இருப்பச் செய்து, மட்டற்ற மகிழ்ச்சி அடைதல் ஈன்றபொழுதினும் பேரின்பம்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (திருக்குறள் 68)
நல்லாற்றின் நின்ற துணை
ஹிந்து மதம் வாழ்க்கையை நான்காக பிரித்து அமைக்கின்றது. பிரம்மசரியம் என்ற மாணவப்பருவம், க்ருஹஸ்தம் என்ற இல்வாழ்க்கை, வானப்பிரஸ்தம் என்ற வன வாழ்க்கை, ஸந்யாஸம் என்ற துறவு வாழ்க்கை. பிரம்மச்சரியத்தின் தொடங்குகின்ற மனித வாழ்க்கை துறவில் நிறைவடைகின்றது.
எதற்காக வாழ வேண்டும் ? எப்படி வாழவேண்டும் ? என்பதை அறிந்து கொள்வதற்கான கற்கும் பருவம் பிரம்மசர்யம். குருவிடமிருந்து கல்விகற்று அறிவைப் பெற்று, பெற்ற அறிவால் பொருளைச் சேர்த்து, பொருளால் இல்வாழ்வின் இன்பத்தை அநுபவித்து, அறம் பலசெய்து வீடுபேற்றிற்கான தகுதியைப் - விவேகம் வைராக்யம் - பெற்று ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கின்ற ஸத்குருவைச் சரணடைந்து பகவத்கீதை, உபநிஷத் ஆகிய தத்துவ சாஸ்திரங்களை முறையாகக் கேட்டு, ஆத்மஞானத்தால் வீடுபேற்றை பெறுதலே மனித வாழ்க்கையின் முறைமையாகும்.
பிரம்மசாரியும் துறவியும் பிக்ஷை ஏற்று ஜீவனம் நடத்த வேண்டும். மற்ற மூன்று வர்ணத்தவரும் அவரவர் தர்மத்தை முறையாகக் செய்வதற்கு தேவையான உணவு முதலானவற்றை செய்து கொடுப்பது இல்லறத்தில் இருப்பவர்கள் கடமையாகும்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. (திருக்குறள் 41)
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
ஸனாதன தர்மம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஐந்து வித கடமைகளை வலியுறுத்துகின்றது. அவை தேவயஜ்ஞம் என்ற தெய்வ வழிபாடு, பித்ரு யஜ்ஞம் என்ற முன்னோர் வழிபாடு, பிரம்மயஜ்ஞம் என்ற அறிவுநூல்களைக் கற்றல், மனுஷ்ய யஜ்ஞம் என்ற விருந்தோம்பல், பூதயஜ்ஞம் என்ற பல்லுயிர் ஓம்புதல்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள் 43)
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (திருக்குறள் 322)
- தொடரும்..
- தொடரும்..
Comments