அறம் செய விரும்பு - 7
அறம் செய விரும்பு - 7
ஸ்நானம் - நீராடுதல்
நீராடுவதற்கு காரணங்கள் பல. உடல் தூய்மை பெறச்செய்வது நித்யஸ்னானம். குறிப்பிட்ட நிமித்தத்திற்காகச் செய்வது நைமித்திக ஸ்நானமாகும். சூரியன் உதிக்குமுன் உள்ள நான்கு நாழிகை (96 நிமிஷங்கள்) அருணோதயவேளை எனப்படும். இந்த நேரத்திற்குள் நீராட வேண்டும். ஸ்நானத்திற்கு திதி வாரம் முதலிய காலத்தையும் தேசத்தையும் குறிப்பிட்டு ஸங்கல்பம் செய்து கொள்ளுதல், வருணஸூக்தம் அகமர்ஷண ஸூக்தம் சொல்லுதல், ஆபோஹிஷ்டா முதலிய மந்திரங்களால் புரோக்ஷித்துக்கு கொள்வது (நீர்த்துளிகளை தலையில் தெளித்துக் கொள்வது) தேவதைகளுக்குத் தர்ப்பணம் செய்வது என்ற அங்கங்கள் ஸ்னானத்துடன் செய்யத்தக்கவை.
நதியில் எப்போதும் பிரவாகத்திற்கு எதிராகவும், குளங்களில் பகலில் சூரியனை நோக்கியும் இரவில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும் நீராடவேண்டும். நீராடுகையில் ஆசமனம், ஸங்கல்பம், ஜலத்தில் எப்போதும் உள்ள தேவதாசக்தியை வழிபட்டு உள்ளத்தையும் உடலையும் புனிதமாக்கவும், நீராட அனுமதி பெறவும், உலகமெங்கும் பரவி நிற்கும் ஜல தேவதைகளும் நதி தேவதைகளும் நாம் நீராடும் நீரில் பிரஸன்னமாகவும் வேண்டிக்கொள்ளும் வேத மந்திரங்கள் வருணஸூக்கம் சொல்வது, நீராடுதல், உடல் தேய்த்துக் குளித்தல், இரண்டு தடவை ஆசமனம், புரோக்ஷணம், செய்த பாபம் நீங்க வேண்டுகின்ற வேத மந்திரங்கள் அகமர்ஷண ஜபம், நீராடுதல், இரண்டுதடவை ஆசமனம், இடுப்பளவு நிலத்தில் நின்று உபவீதியாய் தேவர்களுக்கும், நிவீதியாய் ரிஷிகளுக்கும், பிராசீனாவீதியாய் பித்ருக்களுக்கும் தர்ப்பணம், நீராடுதல், கரையேறி இடதுகாலைக் கரையிலும் வலது காலை ஜலத்திலும் வைத்துக் கொண்டு ஆசமனம், இவை நீராடும் போது வரிசையாகச் செய்ய வேண்டியவை.
நீராடிக் கரையேறும்போது இருகைகளில் நிறைய நீரை நிரப்பிக் கொண்டு "யந்மயா தூஷிதம் தோயம் சரீரமலஸர்சயை: தத்தோஷ பரிஹாராய யக்ஷ்மானம் தர்பயாம்யஹம்" - "என் உடல் அழுக்கால் நீரைக் கெடுத்துள்ளேன்; அந்தத்தோஷம் நீங்க யக்ஷ்மாவிற்கு நீரால் திருப்தி செய்கிறேன்" - என வேண்டிக் கரையில் அந்த நீரை விட வேண்டும். நின்று ஈரமுள்ள சிகையை முன் பக்கம் கொணர்ந்து அதன் நுனியில் வடிகின்ற ஜலத்தைப் பூமியில் விடவேண்டும். உடலில் இருந்து வடிகின்ற நீரைத் தேவர்களும் பித்ருக்களும் எல்லா உயிரினங்களும் ஏற்கின்றனர். அதனால் கணநேரம் அப்படியே நின்று நிவீதியாகி மேலாடையை நான்காக மடித்துப் பிழியவேண்டும். பிழியும்போது சொல்கின்ற மந்திரம் - "யே கே சாஸ்மத் குலே ஜாதா: அபுத்ரா: கோத்ரஜா மருதா: தே கிருண்ஹந்து மயா தத்தம் வஸ்த்ரநிஷ்பீடநோதகம்" - "என் குலத்தில் கோத்திரத்தில் பிறந்து ஸந்ததியின்றி மறைந்தவர்களுக்கு இந்தத் துணி பிழிந்த நீர் திருப்தி அளிக்கட்டும்." பிழிந்த மேலாடையை இடது மணிக்கட்டின்மேல் மேல் வைத்துக்கொண்டு இரண்டு தடவை ஆசமனம் செய்ய செய்ய வேண்டும். ஈரமுள்ள ஆடையை தோளிலோ காலிலோ வைக்கக்கூடாது. வைத்தால் மறுபடி நீராடவேண்டும். நீரிலேயே துணியைப் பிழியக்கூடாது.
உலர்ந்த வஸ்திரத்தால் தலைதுவட்டி உடலில் ஈரத்தைத் துடைக்க வேண்டும். தலைக்கும் உடலுக்கும் தனித்தனியே துடைக்கும் வஸ்திரம் தேவை. நீராடும்போது உடுத்திய ஆடையால் உடலைத் துடைத்துக் கொள்ளக்கூடாது.
நீராடுதல் ஆறு வகைப்படும். நித்தியம், நைமித்திகம், காம்யம், க்ரியாங்கம், மலாபகர்ஷணம், க்ரியாஸ்நானம் என.
அருணோதயத்திலும் மத்யான்னத்திலும் ஸந்தியாவந்தனம் முதலிய நித்யகர்மாக்களுக்கு முன்னதாகச் செய்வது நித்தியமாகும்.
தீட்டுள்ளவரை தொட்டதால் ஏற்பட்ட அசுசியைப் போக்கச்செய்வது நைமித்திகமாகும்.
தைப்பூசம் நவராத்திரி முதலியவற்றிற்காகச் செய்வது காமியமாகும்.
சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றிற்காகச் செய்வது கிரியாங்கமாகும்.
அழுக்கு முதலியவற்றை அகற்றச்செய்வது மலாபகர்ஷணமாகும்.
புனிதமான காசி முதலானவற்றில் செய்வது க்ரியா ஸ்னானமாகும்.
ஸ்நானம் செய்ய ஏற்ற நீர் நிலைகள்
1. மலையில் தோன்றிக் கடலில் கலக்கின்ற நதி.
2. கிழக்கிலுள்ள மலையில் உண்டாகி மேற்கில் உள்ள கடலில் கலக்கின்ற நதம்.
3. மலையில் அல்லது பூமியில் ஊற்றாக வெளிவந்து நதியில் கலந்து அல்லது பூமியில் மறைகின்ற ஸ்ரோதஸ்.
4. மலையின் முடியிலோ தாழ்வரையிலோ வற்றாது ஊறிக் கொண்டிருக்கின்ற ஓடை என்ற நீர்த்தேக்கம் - வடிகாலில்லாதது - ஸரஸ்.
5. மனிதர் வெட்டாமல் தானே அமைந்த குளம் - தேவகர்தம்.
6. மனிதர்களால் வெட்டப்பட்ட அரை மண்டல வடிவில் அமைந்த குளம் - தடாகம்.
7) கற்களால் சுற்றுச்சுவர்
கட்டப்பட்டுப் படியுள்ள குளம் - குண்டம்.
8) மலையின் பிளப்பிலிருந்து கிளம்பி தாரையாக விழுவது தாரை.
9) ஐந்துமுழ அகலத்திற்கு வட்டமாகக் கட்டப்பட்ட கிணறு - கூபம்.
இவற்றில் முன்னது பின்னதைவிடச் விடச் சிறந்தது. முன்னது அருகிலிருந்தால் பின்னதில் நீராடுவது முறையல்ல.
அமாவாசை, பௌர்ணமி தவிர மற்ற நாட்களில் கடலில் நீராடக்கூடாது. மனைவி கர்ப்பிணியாயிருந்தாலும் ஞாயிறும் செவ்வாயும் கூடிய அமாவாசை பெளர்ணமியானாலும் கடலில் நீராடக்கூடாது. செவ்வாயன்று கிருஷ்ணபக்ஷசதுர்தசியானால் கடல்நீராட்டம் மிக உயர்ந்தது. காவேரி கூடுமிடத்திலும் கங்கை கூடுமிடத்திலும் வாரதோஷம் கிடையாது. ராமஸேதுவில் தினமும் நீராடலாம். கடல் நீரால் ஸ்நானம் செய்ததும் சுத்தஜலத்தால் ஆசமனம் செய்யவேண்டும். தனிப்பட்ட ஒருவரின் தனி உபயோகத்திற்காக அமைந்த நீர் நிலையில் அவர் அனுமதியின்றி நீராடக்கூடாது. வேறு நீர்நிலை கிடைக்காவிடில் நீரின் அடியிலிருந்து 4-5 கையளவு மண்ணை எடுத்து வெளியே போட்டோ , 3-4 குடம் நீரை எடுத்து வெளியே கொட்டியோ பின்னர் நீராடலாம்.
வண்ணான் துணி தோய்க்கும் துறை, சுடுகாட்டிற்கு அருகில் உள்ள துறை, அசுத்திமிக்கவர்கள் குடியிருப்பின் அருகிலுள்ள துறை இவற்றில் நீராடக்கூடாது.
ஸ்நானம் செய்வதால் உடலின் மேல் சேர்ந்த அழுக்கு நீங்குகிறது. இதனை முக்கிய நோக்கமாகக்கொண்டு செய்வது மலாபகர்ஷண ஸ்நானம். இதற்கு கால-தேச நியமமோ செய்முறை நியமமோ இல்லை. அழுக்கு நீங்க நீராடினாலும் அதன் விளைவாக மனமும் தெளிவதும் கண் கூடே. ஆனால் புண்ணிய காலத்தை முன்னிட்டோ, புண்யக்ஷேத்திரத்தில் கங்கை காவிரி முதலிய புண்யநதியிலோ, பாபம் நீங்கவோ புண்யம் சேரவோ, புனிதமான ஜபம், இறைவழிபாடு முதலியவற்றைச் செய்வதற்கு முன்னரோ நீராடும்போது உடல் தூய்மை மட்டும் நோக்கமல்ல. உள்ளத்தூய்மை, தெளிவு, உள்ளத்தாலும் உடலாலும் செய்த தீவினைகளின் தாக்கத்திலிருந்து விடுதலை, ஆழ்மனத்தின் வக்கரிப்பு நீங்கித் தெளிவு, உள்வெளி சூழ்நிலையில் தூய்மை, நாம் வழிபடவிருக்கின்ற தெய்வத்தின் அருள் நம்மிடம் பரவத்தகுதி என்றவாறு பல நிலைகளைப் பெறுவதை முன்னிட்டே நீராடும் போது இந்த நியமங்கள், செய்முறை கட்டுப்பாடு, வேதமந்திரங்கள் ஓதுதல் முதலியதைச் செய்வது அவசியமாகிறது.
இந்நியமங்களை முறைப்படி பின்பற்ற இயலாதவர்களும், முறைப்படி செய்தாலும் அவற்றில் நிறைவு பெறவும், நியமக்குறை நீங்கவும் சிலவற்றைச்செய்வர். அவற்றில் மிக முக்கியமானது "ஹரே நாராயண!' 'ஹர மஹாதேவ!' முதலிய இறைவனின் திருநாமங்களை உணர்ந்து உரக்கச்சொல்லியும் இறைவனை நினைத்தும் முழுக்குப் போடுவர். ஹரி: ஹர: எனும்போது அந்நாமம் நம்மிடமுள்ள பாபத்தை நீக்குகிறது.
தொடரும்...
Comments