அறம் செய விரும்பு -17

போஜனநியமங்கள் 

வாய்கொள்ளுமளவிற்குக் கையில் உணவு எடுக்க வேண்டும். அதிகமாக எடுத்து வாயில் போட்டு மீந்ததையும் கடித்து மீந்ததையும் கலத்திலுள்ளதுடன் கலக்கக்கூடாது. சத்தமிட்டு உறிஞ்சி அல்லது கடித்துச் சாப்பிடக்கூடாது. பருகும் நீரும் குடிக்கக்கூடிய அளவில் எடுத்து உதட்டில் படாமல் எச்சிற்படாமல் தூக்கிப்பருக வேண்டும். பருகி மீந்த ஜலம், எச்சில்பட்ட ஜலம் நல்லதல்ல.

சம்பந்தப்படாத பலர் நோக்க உண்ணக்கூடாது. பந்தியாகப் பலர் உட்கார்ந்து சாப்பிடும்போது நடுவில் ஒருவர் எழக்கூடாது. எழுந்தால் மற்றவரும் அத்துடன் எழ வேண்டும். அப்படி எழநேர்ந்தால் சாம்பல் ஜலம் இவற்றைக்கொண்டு பிரிவினை செய்ய வேண்டும். தூண்களின் இடையே, வாசலுக்கு அருகே, வழியில், தாழ்ந்தோ, மேடிட்டோ மற்றவர் உட்கார்ந்த இடத்திற்குச் சமமாக இல்லாத இடத்திலோ அமர்ந்தவர் நடுவில் எழுந்தால் பந்தி தோஷமில்லை. உண்ணும்போது ஒருவரை ஒருவர் தொடக்கூடாது. இடதுகையால் நீர் பருகும்போது வலதுகையால் உண்கலனைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

உப்பு, வியஞ்சனம் (ஊறுகாய், காய்கறி) நெய், எண்ணெய், பாயஸம், அன்னம் இவற்றைக் கரண்டியாலன்றிக் கையால் பரிமாறக்கூடாது. எண்ணெய் பொரித்துப் பிசிப்பு இல்லாதவற்றையும் பழங்களையும்
கையால் பரிமாறலாம்.

பழம் பட்சணம் முதலியவற்றை சிறுவர் விருந்தினர் இவர்களுக்கு வழங்கியபின் தனக்கு இட்டுக்கொள்ள வேண்டும்.

பாயஸம் நெய் தயிர் தேன் பழம் இவைகளை மீதம் வைக்காமல் சாப்பிடலாம். மற்றவற்றைச் சிறிது மீதிவைத்தே சாப்பிட வேண்டும்.

வாழை இலையின் உட்புறத்தில்தான் உணவை வைக்கவேண்டும் தாமரை இலையில் உள்ளும் வெளியிலும் வைக்கலாம்.

உண்ணும்போது தீபம் அணைந்தால் சாப்பிடுவதை நிறுத்தி மறுபடி வெளிச்சம் வந்தபிறகு கலத்தில் இட்டதை மட்டும் சாப்பிடலாம். மறுபடி அதில் உணவுவகை சேர்க்கக்கூடாது. தயிரோ பாலோ கலந்த அன்னம் உண்டபின் நீர் பருகக் கூடாது.

கையில் எடுத்த அன்னத்தில் புழு, கேசமிருந்தால் அந்த அன்னகவளத்தைத் தள்ளி வைத்து விட வேண்டும். வாயில் அது சேர்ந்துவிட்டால் உமிழ்ந்து வாய் கொப்புளித்துப் பிறகு மற்றதை உண்ணலாம்.

கோழை உமிழ்வது, சத்தத்துடன் கோழை விழுங்குவது, காரித்துப்புவது, மூக்கைச்சிந்துவது இவை பலருடன் உண்ணும்போது தவிர்க்கத் தக்கவை. உண்ண உட்காருமுன்னே தொண்டை மூக்கு வாய் இவற்றைச் சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தாமரை இலையில் கிருஹஸ்தனும் வெண்கலப் பாத்திரத்தில் துறவியும் பிரும்மசாரியும் விதவையும் உண்ணக்கூடாது. கிருஹஸ்தனுக்கு வெண்கல பாத்திரம் சிறந்தது.

-உண்ணும்போது துணியைத் தலையில் சுற்றிக் கொள்ளக்கூடாது.

- காலணியுடன் உண்ணக்கூடாது.

- ஈரஆடை, ஈரத்தலையுடன் சாப்பிடக்கூடாது.

- மனக்கிளர்ச்சி தரும் வகையில் பெண்களுடன் சேர்ந்தமர்ந்து உண்ணக்கூடாது. யாத்திரை நேரத்தில் தோஷமில்லை.

- மனத்திற்குப் பிடிக்காத சத்தம் கேட்கும் இடத்தில், அருவருப்பு தரும் மணம் உள்ள இடத்தில் உண்ணக்கூடாது.

- நாய் கோழி காக்கை பூனை முதலியவை முகர்ந்த உணவு கூடாது.

- பிறரது எச்சில், ருசிமாறியது, நிறம் மாறியது, உண்ணத்தகாதவை.

- மேற்கூரை இல்லாத இடத்தில் ஆகாசம் பார்க்கச் சாப்பிடக்கூடாது.

உணவின் அளவு அவரவரது இயல்பிற்கும் ஜீர்ணிக்கும் சக்திக்கும் ஏற்றவாறு அளவுக்கு அடங்கினதாக இருத்தல் நல்லது. கொள்ளளவும் ஜீர்ண அளவும் பருவநிலையும் கருத்தில் கொள்ளத் தக்கது.

அரட்டை அடித்துக்கொண்டும் மனம் வருத்தியும், பிறர் மனதை புண்படுத்தியும், படித்துக் கொண்டும், படுத்தும் உணவில் மனம் செலுத்தாமலிருப்பது தவறு. உண்ணும்போது அது ஒன்றையே பொருட்படுத்த வேண்டும்.

முதலில் இனிப்பும் தொடர்ந்து புளிப்பும் உப்பும் நடுவில் காரமும் கசப்பும் முடிவில் துவர்ப்பு அமையும்படி சாப்பிட வேண்டும்.

வீணாகப்பட்டினி இருப்பதும் உடலை வருத்துவதும் கூடாது.

வேகமாகவும் மிகவும் மந்தமாகவும் சாப்பிடக் கூடாது.

முன் உண்ட உணவு சீர்ணமாகாதபோதும், பசி வந்தும் அதனை மீறி வேறு பணியில் ஈடுபட்டும், பசி முற்றிய நிலையிலும் உண்ட உணவு சரியாக செரிக்காது.

துறவிக்கு எட்டு கவளம் (கைப்பிடி), வானப்ரஸ்தனுக்கு 16 கவளம் கிருஹஸ்தனுக்கு 32 கவளம் பிரும்மசாரிக்குக் கொள்ளுமளவு உண்பது நல்லது. 

போஜனத்தின் ஆரம்பத்தில் திரவஉணவும் நடுவில் கடின உணவும் முடிவில் திரவ உணவும் அமைவது நல்லது. 

ஆயுளை நீடிப்பதை விரும்புபவன் கிழக்கையும், புகழைவிரும்புபவன் தெற்கையும், செல்வத்தை விரும்புபவன் மேற்கையும் நேர்மையை விரும்புபவன் வடக்கையும் நோக்கி எப்போதும் உட்கார்ந்து உண்ணவேண்டும்.

மண்பாத்திரமும் இரும்பு பாத்திரமும் உண்கலனாக இருக்கக்கூடாது. தாமரையிலை, புரசிலை கிருஹஸ்தனுக்குக் கூடாது.

உண்ணும் போது இடது கை முழங்காலுக்கு உள்ளே இருக்கவேண்டும். வெளியே கை ஊன்றக் கூடாது.

உண்கலத்தைத் தானே அலம்பிக் கொள்ள வேண்டும்.

தாயாரோ, மனைவியோ உணவிடல் நல்லது. பலர் உபயோகிக்கும்படி தங்கம் வெள்ளி வெண்கலம் முதலிய உண்கலனை இடும்போது உண்டதும் அலம்பிச் சாணமிட்டு மறுபடி அலம்பி அனலில் காட்டிப்பின் மற்றொருவர் உண்பதற்கக் தர வேண்டும். ஒருவரே தொடர்ந்து சாப்பிட்டால் அலம்பினால் போதும்.

உணவைக் கையில் வைத்துக்கொண்டும் உண்கலனைக் கையில் ஏந்திக்கொண்டும் சாப்பிடக்கூடாது.

பலருக்கு உணவளித்துத் தானும் கூட உண்ணும் போது மௌனம் நல்லதல்ல, பரிவும் ஆதரவும் அன்பும் காட்டிப்பேசி கூச்சமின்றி அவர்கள் திருப்தியுடன் சாப்பிட செய்ய வேண்டும்.

பலருக்கு உணவளிக்கும் போது ஒருவருக்கு இட்டும் மற்றவர்க்கு இடாமலும் குறைத்தோ அதிகமாகவோ இட்டும் பந்திவஞ்சனை செய்யாமல் ஒரே சீராக, விரும்புமளவையும் ஒட்டி வழங்க வேண்டும்.

கைகளால் நீர் ஏந்தி பருக கூடாது. 

நேரிடையாக உப்பை உண்கலனில் இடக்கூடாது. ஏதாவது ஒருபொருளில் மறைத்து வழங்கவேண்டும். நெய், எண்ணெய், பாயஸம் முதலியவற்றை உண்கலனில்தான் இடவேண்டும் கையில்
இடக்கூடாது. 

உணவில் தள்ளத்தக்கதும் சேர்க்கத்தக்கதும்

சேர்க்கத்தக்கதைச் சேர்த்து தவிர்க்கத்தக்கதைத் தவிர்க்குபோது உடலும் உள்ளமும் தூய்மை பெறுகின்றன. வேதம் ஓதாமலிருப்பதாலும் ஆசாரத்தை விடுவதாலும் அன்னதோஷத்தாலும் பிராமணன் அழிகிறான். சில பொருட்களையே நல்லதல்ல எனத்தள்ளநேர்கிறது (ஜாதி கர்ஹிதம்). சிலவற்றை சிலர் சமைத்தால் அல்லது அளித்தால் தள்ள நேர்கிறது. அந்தப் பொருளை உடையவரின் தோஷம் பொருளையும் பாதிக்கிறது (ஆச்ரய கர்ஹிதம்). உள்ளிப்பூண்டும் வெங்காயமும் ஜாதிகர்ஹிதம். கெட்டவனின் உணவு ஆசிரயகர்ஹித மாகும். நாய் பூனை முகர்ந்தால் தள்ளத்தக்கது. அது கிரியாதுஷ்டம். நாட்பட்டது காலதுஷ்டம். பூண்டுடன் கூடிய தயிர் ஸம்ஸர்கதுஷ்டம் (சேர்க்கையால் கெட்டது.) கண்டதுமே உமட்டலும் அருவருப்பும் தருவது ரஸதுஷ்டம். அப்படித் தள்ளத்தக்கவைகளையும் சேர்க்கத் தக்கவைகளையும் பார்ப்போம்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101