ஸநாதநதர்மமும் திருக்குறளும் - 6
ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 6
ஈஸ்வர ஸ்வரூபம் - கடவுள் யார்?
ஆதிபகவன் - அபின்ன நிமித்த விவர்த்த உபாதான காரணம்
அனைத்திற்கும் முதலாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் இருப்பவர் கடவுள். உலகம் இறைவனைக் காரணமாக கொண்டது. ஒவ்வொரு பொருளும் தோன்றுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நிமித்தகாரணம். இன்னொன்று உபாதானகாரணம். உபாதானகாரணம் என்பது மூலப்பொருள். நிமித்தகாரணம் என்பது அறிவுப்பொருள். கடவுள் உலகத்திற்கு இரண்டுமாக இருப்பவர். அதனால் ஆதிபகவன்.
ஆதிபகவன் முதற்றே உலகு ( திருக்குறள் 1)
வாலறிவன் - ஸர்வஜ்ஞன்
அவர் முற்றறிவு படைத்தவர் - அனைத்தையும் அறிந்தவர் - தான் படைத்த அனைத்தைப் பற்றியும் முழுமையான அறிவு படைத்தவர். அறிவே வடிவானவர்.
வாலறிவன் (திருக்குறள் 2)
மலர்மிசை ஏகினான் - கூடஸ்தன் - அந்தர்யாமி
எல்லா உயிர்களுடைய இதயத்திலும் சாக்ஷியாக - அந்தர்யாமியாக - கூடஸ்தராக - விளங்கிக் கொண்டிருப்பவர். அனைத்தையும் விளக்குபவராக, அனைத்திக்கும் வேறானவராக, அனைத்தையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவராக, தன் நிலையிலிருந்து மாறாதவராக இருப்பவர்.
மலர்மிசை ஏகினான் (திருக்குறள் 3)
வேண்டுதல் வேண்டாமை இலான் இறைவன் பூர்ணமானவர். ஆதலால் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். இரும்புத் துகள்கள் காந்தத்தின்முன் அசைவதுபோல சைதந்ய ஸ்வரூபமான இறைவன்முன் ஜடமான மனமும் உடலும் இயக்கம் பெற்று இயங்குகின்றன. சூரியன் பூமியிலுள்ள அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருந்தாலும் நேரடியாக எவ்வித செயலையும் செய்வது இல்லை. இறைவன் முன்னிலையில் அனைத்துச் செயல்களும் நடந்தாலும் இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவராக இருக்கின்றார். ஜீவர்களுடைய அறிவு மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்றார்போல இறைவனுடைய அருளைப் பெறுவதிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. தாவரங்கள் அதனுதனுடைய சக்திக்கு ஏற்றவாறு சூரிய ஒளியை கிரகித்துக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்வது போல, ஜீவர்கள் தங்கள் புண்ணிய பாவத்திற்கு ஏற்றார்போல இறையருளை கிரகித்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்கின்றனர்.
வேண்டுதல் வேண்டாமை இலான் (திருக்குறள் 4)
இருவினையும் சேரா இறைவன் - அகர்த்தா அபோக்தா
கொடிய பிறவிக்குக் காரணமான புண்ணிய பாபங்கள் இறைவனுக்கு இல்லை. இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய பஞ்சகிருத்தியங்களை செய்பவராக இருந்தாலும் ஜீவர்களுக்கு புண்ணியபாவங்கள் ஏற்படுவதுபோல இறைவனுக்கு இல்லை. இறைவனின் சந்நிதி மாத்திரத்தில் மாயையினால் இவைகள் நடக்கின்றன.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் ( திருக்குறள் 5)
பொறிவாயில் ஐந்தவித்தான் - ஈச்வரன்
இறைவன் தன்னுடைய மாயையை தன் வசத்தில் வைத்திருப்பவர். ஜீவன் மாயையின் வசத்தில் இருப்பவன். ஆகவே இறைவன் தன் மாயையோடுகூடி உருவம் கொண்டிருந்தாலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்துபொறிகளையும் வென்றவர் ஆக இருக்கின்றார். அனைத்தையும் - தன்னையும் உலகையும் - ஆள்பவராக இருக்கின்றார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் ( திருக்குறள் 6)
அறவாழி அந்தணன்
இறைவன் ஒருவனே. தனக்கு சமமாகவோ மேலாகவோ இன்னொரு சக்தி இல்லாதவர். அவரே எல்லா சக்திகளுக்கும் மேலான இருப்பிடம் - சர்வசக்திமான். இயற்கை எண்ணற்ற விதிகளை ஒழுங்குகளை கொண்டிருக்கின்றது. எல்லா விதிகளையும் ஏற்படுத்தி நடத்துபவர் இறைவன் - நியந்தா. அறத்தின் வடிவமாக - அறக்கடலாக விளங்குபவர். வேதத்தின் முடிவான வேதாந்தத்தின் வாயிலாக அறியப்படுபவர்.
தனக்குவமை இல்லாதவன் (திருக்குறள் 7)
அறவாழி அந்தணன் ( திருக்குறள் 8)
எண்குணத்தான்
இறைவன் எண்ணற்ற குணங்களை உடையவர்; எண்ணுதற்கரிய குணங்களை உடையவர்; எல்லா குணங்களுக்கும் ஆதாரமான நிர்குணன்.
எண்குணத்தான் (திருக்குறள் 9)
இறைவன் - ஸர்வவ்யாபி
எங்கும் நிறைந்த பரம்பொருள். காலத்தாலும் இடத்தாலும் வரையறுக்க படாமல் எங்கும் நீக்கமற இ(நி)றைந்திருக்கின்றவர், ஆதலால் இறைவன்.
இறைவன் ( திருக்குறள் 5,10)
தொடரும்...
Comments