அறம் செய விரும்பு - 9



புண்யகாலத்தில் புண்ய தேசத்தில் ஸ்நானம்
சிவலிங்கத்திற்கு எதிரில் உள்ள குளம் சிவகங்கை எனப்படும். விஷ்ணுவின் ஆலயத்தின் அருகில் உள்ள குளம் விஷ்ணுகங்கை எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்யப் பாவமனைத்தும் நீங்கும். சித்திரை மாதத்து கிருஷ்ண சதுர்தசியில் சிவகங்கையில் நீராடுவது மிகச்சிறந்தது. கார்த்திகை பவுர்ணமியில் புஷ்கரத்திலும் மாசி பௌர்ணமியில் பிரயாகையிலும் செவ்வாய்க்கிழமை கூடிய அமாவாசையில் கங்கையிலும் ஸ்நானம் செய்வது மிகச்சிறந்தது. ஜன்ம நக்ஷத்திரம், பூசம், வ்யதீபாதம், வைத்ருதி, ஞாயிறு- செவ்வாய்-சனிக்கிழமைகள் இவைகளில் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வது சிறந்தது. மாசியில் சுக்லஸப்தமியில் புண்ய நதியில் அருணோதயத்தில் ஸ்நானம் செய்வது சூரியகிரகண ஸ்நானத்தை ஒத்தது. புதன்கிழமை புனர்வஸு கூடியிருந்தால் நதியில் நீராடுவது வாஜபேயயாகம் செய்த பலனைத்தரும். ஏகாதசியில் நெல்லிக்காய் தேய்த்துப்பின் ஸ்நானம் செய்வது விஷ்ணுவின் அருளைப்பெறச் செய்யும். பெரும் செல்வத்தை விரும்புபவன் த்விதீயை, ஷஷ்டி, ஸப்தமி, நவமி, தசமி, திரயோதசி, அமாவாசை, பௌர்ணமி, ஸங்கிரமணம் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் நெல்லிக்காய் தேய்த்து நீராடுவது நல்லது. அரசமரத்தின் நிழல்படுகின்ற நீர்நிலையில் வியாழனன்றும் அமாவாசையன்றும் ஸ்நானம் செய்வது பிரயாகையில் ஸ்நானத்திற்கு ஒத்தது. மாசி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆண்கள் சூரிய உதயத்திற்கு முன்னும், பெண்கள் உதயத்தின் போதும் ஹர மஹாதேவ ஹரி: மாதவ கோவிந்த அச்யுத கிருஷ்ண என்று இறைவன் நாமத்தைக் கூறிக்கொண்டு நதியில் ஸ்நானம் செய்தல் மிகச்சிறந்தது. ஆடி கார்த்திகை, மாசி, வைகாசி மாதத்தில் பௌர்ணமியில் (ஆகாமாவை) காலையில் நதியில் ஸ்நானம் செய்வது சிறந்தது.

அப்யங்க ஸ்நானம் -
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்

திங்கள், புதன், சனி, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஸப்தமி, நவமி, திரயோதசி இவை எண்ணெ ய்க் குளியலுக்கு நல்லவை. செவ்வாய், வெள்ளி பெண்களுக்கு ஏற்றது. ஞாயிறு, வியாழன், ஸங்க்ரமணம், கிரஹணம், வியதீபாதம், ஜன்ம நக்ஷத்திரம், பிரதமை, ஷஷ்டி, அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி, திருவாதிரை, உத்திரம், கேட்டை, திருவோணம் இவையும் சந்தியா காலம், இரவுவேளையும் ஏற்றவையல்ல. சனிக்கிழமையாயின் மற்ற தோஷங்களிருந்தாலும் பித்ருதினங்களைத்தவிர மற்ற நாட்களில் குளிக்கலாம். கடுகெண்ணை, மணமூட்டி எண்ணெய், மருந்து சரக்குகள் கூட்டி தயாரித்த எண்ணெய், துளசி தளத்துடன் கூடிய எண்ணெய், நெய் சேர்த்த எண்ணெய் இவை எப்போதும் சேர்க்கத்தக்கவை. அரிசிமா, கடலைமா, கஞ்சி, சேர்த்துக்குளிப்பதாலும் தோஷமில்லை. ஞாயிறில் புஷ்பமும் வியாழனில் அறுகும் வெள்ளியில் கோமியமும் செவ்வாயில் மண்ணும் சேர்த்த எண்ணெய் குளி செய்யலாம். நோயாளி நோய் நிலைக்கு ஏற்றவாறு எப்போதும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். பாலர் கர்ப்பிணி முதியவர் இவர்களுக்கும் நியமமில்லை. விடியற்காலை, அருணோதயம், ஸந்தியாகாலம் இந்த வேளைகளிலும் பிறந்தநாள், திருமண நாள், உபவாசநாள் இவற்றைக் கொண்டாடும்போது க்ஷவரம் செய்த அன்றும் எண்ணெய்க்குளி கூடாது. தீபாவளியன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது கங்கையில் ஸ்நானம் செய்ததற்கு ஒப்பானது. 

புண்யதீர்த்தஸ்நானம்

நதி நதம் ஸ்ரோதஸ் முதலிய நீர்நிலைகளில் ஸ்நானம் செய்வதை க்ரியாஸ்நானம் என்பர். முதலில் ஸங்கல்பம் செய்து அங்குள்ள மண்ணை ஜலத்தில் குழைத்துப் பூசிக்கொண்டு நீராடி ஆசமனம் செய்து பின் அந்தந்த தீர்த்த தேவதையை (கங்கையாயின் கங்கா தேவியை, காவேரியாயின் காவிரி தேவியை) நீரில் ஆவாஹனம் செய்து அதனால் தலையிலும் உடலிலும் தெளித்துக்கொண்டு பின் முறைப்படி மந்திரங்கள் கூறி ஸ்நானம் செய்ய வேண்டும். 

தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்போது சுகமாக வாகனங்களில் செல்வதால் பயனில்லை. குடை, செருப்பு போன்ற பாதுகாப்பும் வண்டி டோலி போன்ற வாகனவசதியும் நல்லதல்ல. புண்ணிய சேமிப்பும் பாபநீக்கமும் பெற உடல்-மனவருத்தத்தை பொருட்படுத்தாத தீவிர ஆர்வம் தேவை. வேறு காரியத்திற்கென க்ஷேத்திரங்களுக்குச் சென்றவன் க்ஷேத்திர தரிசனம், தீர்த்த ஸ்நானம் செய்து நன்மை பெறலாம். எனினும் க்ஷேத்ர தரிசனத்திற்கென்றே ஆர்வத்துடன் செல்வதால் பெறக்கூடிய பலன் இதில் இருக்காது. தன் மாதா பிதா குரு முதலானோருக்காக ஸங்கல்பித்துத் தீர்த்தஸ்நானம் செய்வதனால் இவனுக்கும் பலன் உண்டு. 

ஆறுகுளங்களில் நீராடத்தகாத நாட்கள்

ஆடிமாதம் பிறந்ததும் புதுப்பெருக்கைப் பெறும் ஆறுகளும், குளங்களும் ரஜஸ்வலைகளாக- மாதவிடாய் பெறும் பெண்கள் ஆகின்றன. அதனால் அவற்றில் ஸ்நானம் செய்யக்கூடாது. கங்கை, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, சரயு முதலிய மகாநதிகளுக்கும் நதங்களுக்கும் இந்த தோஷம் இல்லை. மற்ற நதிகளுக்கு ஆடி முதல் மூன்று நாட்கள் (அல்லது புதுப்பெருக்கேற்பட்ட முதல் மூன்று நாட்கள்) தோஷமுண்டு. வற்றாத ஜலமுள்ள குளம் ஓடை கிணறு முதலியவற்றிற்கு இந்த தோஷம் இல்லை. உபாகர்ம, பிரேததகனத்திற்குப்பின் ஸ்நானம், கிரகணம் இவை நேரும்போது வேறு தோஷமற்ற நீர் நிலை இல்லாவிடில் ஆறுகளில் தோஷம் பார்க்காமல் ஸ்நானம் செய்யலாம். பொதுவாக புதுப்பெருக்காக வந்த நீர் தோஷம் உள்ளது. 

கௌண ஸ்நான முறை

ஸசேலஸ்நானம் செய்வது முக்கியமான ஸ்நானமுறை. அது இயலாதபோது ஈரத்துணியால் உடலைத் துடைத்துக் கொள்ளலாம். தலையை நனைக்காமல் உடலை மட்டும் நனைத்துக் குளிக்கலாம். இது காபீலஸ்நானம். மந்திரம் உச்சரித்துத் தலையில் நீரைத்தெளித்துக் கொள்ளலாம். இது பிரம்மஸ்நானம். விபூதியை நீர் கலக்காமல் உத்தூலனமாக உடல் எங்கும் பூசிக் கொள்ளலாம். இது ஆக்நேயஸ்நானம். பசுக்களின் குளம்படிமண்ணைப் பூசிக்கொள்ளலாம். இது வாயவ்யஸ்நானம். மூச்சடக்கி, மனமடக்கி யோகநிலையில் இறைவனை தியானிக்கலாம். இது யௌகிக ஸ்நானம். காயத்ரியைப் பத்துதடவை சொல்லி மந்த்ரித்த ஜலத்தைத் தெளித்துக்கொள்வது காயத்ரிஸ்நானம். வெயிலோடு மழை தூறும்போது அதில் நனைவது திவ்யஸ்நானம். வேதமோதுபவர் வாக்கால் அனுக்கிரகித்த ஜலத்தைத் தெளித்துக் கொள்வது ஸாரஸ்வத ஸ்நானம். இவை கௌண ஸ்நான முறைகள். முக்கிய ஸ்நானமுறை இயலாத போது கடைப்பிடிக்க கடைபிடிக்கத்தக்கவை.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101