அறம் செய விரும்பு - 14
தேவபூஜை
விநாயகராக சோணபத்திரத்தையும், சிவனாக பானத்தையும், கெளரியம்பாளாக ஸ்வர்ணமுகி (மாக்ஷிக) சிலையையும், விஷ்ணுவாக ஸாலக்ராமத்தையும், ஸூர்யனாக ஸ்படிகத்தையும் வைத்து வழிபடுவது பஞ்சாயதன பூஜை. ஸ்கந்தன், லஷ்மி, லலிதா, பரமேச்வரி முதலானவரை இஷ்டதேவதையாக விக்கிரகமாகவோ யந்திரமாகவோ படமாகவோ இவற்றுடன் சேர்த்துப் பூஜை செய்வதுண்டு. சோணபத்திரம் சோணா நதியில் கிடைக்கின்ற கூழான் கல், அவ்விதமே பாணம் நர்மதையிலும், ஸ்வர்ணமுகி குமுதவதி நதியிலும் ஸ்வர்ணமுகி நதியிலும், ஸாலக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகியிலும் ஸ்படிகம் வல்லம் முதலான இடங்களில் உள்ள தடாகங்களிலும் பானுமதி நதியிலும் பூமியினடியிலும் கிடைக்கின்றன. இவை உருவமுமல்ல, அருவமுமல்ல. அந்தந்த தேவதைகளின் ஆயதனம் - இருப்பிடம். இவற்றில் கணபதி முதலானோர் நிச்சயமாக ஆவாஹனம் முதலியதை எதிர்பாராமல் ஸான்னித்யம் கொண்டுள்ளார்கள். இவற்றில் பூஜை செய்யும்போது நம் உள்ளத்தில் குடி கொண்டவர்களே தியானத்தால் இரங்கி நம் பூஜையை ஏற்க இந்த ஆயதனங்களில் அருள் பரவி நிற்கிறார்கள் என்பதே கருத்து. இந்த வழிபாட்டிற்குத் தேவையானது சுத்தமான ஜலம், சந்தனம், பூ, தூப தீபங்கள், நிவேதனத்திற்காகப் பழம் அன்னம் முதலியவை. நமது பிரார்த்தனை, நமஸ்காரம், ஸ்தோத்திரம் இவை உடல் மனத்தால் ஆகுபவை. தானே தோட்டம் போட்டு வளர்த்த மரம், செடி, கொடிகளின் பூ மிக உயர்ந்தது. கோவில் தோட்டத்தில் கோவில் உபயோகத்திற்கென உண்டான பூ, பிறரது தோட்டத்தில் அவர் அனுமதிபெறாமலும் தோட்ட வளர்ச்சிக்கு உதவாமலும் பெற்ற பூ, வாடி வாங்கியது, துணியில் மூட்டை கட்டிக் கொணர்ந்தது, இடுப்புக்குக் கீழ்பகுதியில் பட்டது, மலராத மொட்டுக்கள், பழையபூ இவை ஏற்றவையல்ல. தாமரை, சம்பகம் மொட்டுக்களாயினும் நல்லதே. நீரில் விளைகின்ற தாமரை முதலானவற்றிற்கும், தொடுக்கப்பட்ட பூக்கும் பழம்(பழைய)பூ என்ற தோஷமில்லை.
ஜாதி, மல்லிகை, முல்லை , பாதிரி, அரளி, மகிழம், தும்பை, தாமரை, ஆம்பல், அல்லி, குவளை செங்கழனீர், புரசு, கடம்பம், செம்பருத்தி, நந்தியாவட்டை, புன்னை, தாழை, சம்பகம் இவற்றின் பூக்களும் வில்வம், வன்னி, துளசி, மருவு இவற்றின் இலைகளும் பூஜைக்கு ஏற்றவை. பிள்ளையாருக்குத் துளசியும் சிவனுக்குத் தாழை, முல்லை, செம்பருத்தியும், விஷ்ணுவிற்கு அக்ஷதையும் அம்பாளுக்கு அருகம்புல்லும் சூர்யனுக்கு வில்வமும் தனித்த பூஜையில் ஏற்றவையல்ல. பஞ்சாயதனமாகப் பூஜை செய்யும் போது தோஷமில்லை. சந்தனம், குங்குமப்பூ, கஸ்தூரி, புனுகு, பச்சைக்கற்பூரம் இவை மணமூட்டவும், குக்கில், தேவதாரம், சாம்பிராணி இவை தூபத்திற்கும் பசுநெய், நல்லெண்ணெய் தீபத்திற்கும் நெல், கோதுமை, யவை, துவரை, உளுந்து, பயறு, வெண்மொச்சை, எள்ளு, ஜீரகம், மிளகு, கடுகு, மா, வாழை, பலா, எலுமிச்சை, நார்த்தை, பாகல், கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி, இஞ்சி, பூசணி, வெள்ளரி, கக்கரி, பசுவின் பால், தயிர், வெண்ணெய், நெய் இவை நிவேதனப்பொருளாகவும் ஏற்றவை. புத்தரிசி, அறுவடையாகி ஒரு மாதத்திற்குள்ளானது மிகவும் ஏற்றது. துளசி பில்வம் இவற்றைப் பறிக்குமுன் அந்த செடிக்கும் மரத்திற்குமான தேவதையை வணங்கி பூஜைக்காக இலைகளைப் பறிப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும். செவ்வாய், வெள்ளி, மாலை நேரம், இரவு நேரம், சந்தியா காலம், ஸங்க்ரமண, அமாவாஸ்யை, பௌர்ணமி, கிருஷ்ணபக்ஷம் அஷ்டமி சதுர்தசி துவாதசி இக்காலங்களில் துளசியைப் பறிக்கக்கூடாது.
விக்ரகம், யந்திரம் முதலானவற்றுக்குத் தினமும் அபிஷேகம் செய்வதில்லை. கிருஷ்ண அஷ்டமி, கிருஷ்ண சதுர்த்தசி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாதப்பிறப்பு என்ற பஞ்சபர்வதினங்களில் அழுக்கு நீங்கும்படி அபிஷேகம் செய்வித்தால் போதும். ஆனால் தேவபூஜையில் அதிக ஈடுபாடுள்ளவர் தினமும் மூன்றுகாலங்களும் அல்லது ஒருவேளையாவது அபிஷேகம் முதலியவற்றைச் செய்வர்.
தேவபூஜைக்குப் பயன்படுத்திக் களைந்ததை நிர்மால்யம் என்பர். நிர்மால்யமான பூவைத் தலையில் தரிக்கலாம். தோளில் தரிக்கக்கூடாது. ஸாலக்கிராம தீர்த்தத்தை முதலில் பருகிப் பின் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். தீர்த்தத்தைப் பருகிய பின் கை அலம்ப கூடாது. தனுர் மாதத்தில் விடிவதற்கு முன்னரே பூஜைசெய்ய வேண்டும். மற்ற மாதங்களில் ஸந்தியா வந்தனமும் அக்னி உபாஸனமும் முடிந்த பிறகே பூஜை. பித்ரு தினங்களில் தர்ப்பணம், சிராத்தம் முடிந்த பிறகே பூஜை.
புதிதான விக்கிரகம், படம், யந்திரம் முதலியவற்றில் மந்திரபூர்வமாகப் பிராணப் பிரதிஷ்டை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். பஞ்சாயதனமாக உள்ளவைகளுக்கு பிராணப் பிரதிஷ்டையும் ஆவாஹனமும் கிடையாது. இதயத்திலுள்ள தேவதையைத் தியானித்துப் பஞ்சாயதனத்தினுள் அவர்களிருப்பதாகப் பாவித்துப் பூஜை தொடங்குவர்.
ஆஸனம் (இருக்கை தருவது), பாத்யம் (காலலம்ப நீர் வார்த்தல்), அர்க்கியம் (கைகளுக்கு மணமுள்ள நீர் அளித்தல்), ஆசமனம், மதுபர்கம் (களைப்பு நீங்க தேன் பால் கலந்த பானம் தருதல்), ஸ்நபனம் (நீராட்டுதல்), வஸ்திர தாரணம் (ஆடை உடுத்துதல்), ஆபரணம் (அணிகள் பூட்டுதல்), யஞ்ஞோபவீதம், கந்தம் (வாசனையுள்ள சந்தனம், குங்குமம் முதலியவற்றால் நெற்றிக்கு இடுதல்), அக்ஷதை (முனை முறியாத முழுஅரிசி, குங்குமப்பூ, மஞ்சளரைத்த நீரில் பிசறித்தருதல்), புஷ்பம் (பூக்களை மாலையாக்கி அணிவித்தல், புஷ்பத்தை பாதங்களில் நமஸ்காரம் என்ற பாவனையுடன் இடுதல்), தூபம் (மணமுள்ள புகை காட்டுதல்), தீபம் (நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் காட்டுதல்), நிவேதனம் (உணவளித்தல்), நீராஜனம் (சூடம் கொளுத்தி அபராதம் பொறுக்கக்கோரிச் சுற்றிக்காட்டுதல்), மந்திர புஷ்பம் (வேத மந்திரங்களைக் கொண்டு துதித்தல்), ஸ்வர்ணபுஷ்பம் (தங்கப்பூ சாத்துதல்), ஸ்தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பிரார்த்தனை, பூஜைஸமர்ப்பணம் என்ற இவை உபசாரங்கள் எனப்படும். இதை மானஸிக பாவனையாகச் செய்வது பரா பூஜை, மானஸ பூஜை எனப்படும். இதில் உலகில் மிக உயர்ந்த பொருளைக் கொண்டு பூஜை செய்வதாக பாவனை செய்து மனக்கண்ணால் தெய்வத்தின் அருள் கூர்ந்த வடிவத்தைக் காண முடியும். இயன்ற அளவு சேகரித்த பொருள்களைக் கொண்டு பூஜை செய்வது ஸபர்யை. மனத்தால் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் என்ற ஐந்தை மட்டும் ஸமர்பிப்பது மானஸ உபசாரபூஜை. பூஜையின் துவக்கத்திலும் முடிவிலும் இஷ்டதேவதையின் மந்திரஜபம் செய்து தெய்வத்தின் இடதுகையில் ஸமர்ப்பித்து மந்திர ஜபசித்தியை அருளும்படி கோருவர்.
தொடரும்...
Comments