அறம் செய விரும்பு - 12
தர்ப்பத்தால் பவித்ரம் தரித்தல்
பொதுவாக பிராமணன் செய்கின்ற நித்திய நைமித்திக கர்மங்களில் தர்ப்பத்தால் ஆசனம் ஆக அமைத்து அதன்மேல் உட்கார்ந்து மோதிரவிரலில் தர்பத்தால் ஆன பவித்ரத்தை தரித்து மேல் சில 2-4 தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு சங்கல்பம் செய்வர். தர்ப்பை ஆசனம் இல்லாவிடில் தர்ப்பங்களைப்பரப்பி அதன் மேல் உட்காரலாம். தர்ப்பம் மிகவும் புனிதமானது. தர்ப்பம்பட்ட கைகள், தர்ப்பத்தால் துடைக்கப்பட்ட பாத்திரங்கள், தர்ப்பம் பட்ட நீர், நெய் தரை முதலியவை தூய்மை பெறுகின்றன. ஸ்னானத்திற்கு ஸங்கல்பம் செய்வதிலிருந்து மந்திர பூர்வமாக செய்கின்ற பணிகள் அனைத்திலும் தர்ப்பமும் தர்ப்பத்தாலான பவித்ரமும் பயன்படுகின்றன. தர்ப்பத்திற்குப் பதிலாக தங்கத்தாலான பவித்ரம் என்ற மோதிரத்தை மோதிர விரலிலும் வெள்ளியாலானதை ஆட்காட்டி விரலிலும் தரிப்பர். தந்தையும் மூத்த சகோதரரும் உயிருடன் உள்ளவரை வெள்ளியாலானதைத் தரிப்பதில்லை. தாமிரம் 8 பங்கு, வெள்ளி 12 பங்கு, தங்கம் 11 பங்கு சேர்த்துச்செய்த திரிலோஹ மோதிரம் மிகவும் சிறந்தது. புண்ணியகருமங்கள் செய்யும் போது 2-4 தர்ப்பங்களாலும் பித்ருகர்மத்தில் (சிரார்த்தம் அமாவாசை தர்ப்பணம் முதலியவை) 3 தர்ப்பங்களாலும் அபரக்கிரியை செய்யும்போது ஒரு தர்ப்பத்தாலும் ஆன பவித்ரத்தைத் தரிப்பர்.
தர்ப்பத்தைப்போல் விச்வாமித்ரம், நாணல்புல், அருகம்புல், நெற்புல், யவைப்புல், புல் இவற்றைக் கொண்டும் பவித்ரம் செய்து தரிக்கலாம். தர்ப்பமோ விச்வாமித்ரமோ கிடைக்காத இடத்தில் மற்றவை பயன்படும்.
தினமும் புதிதாய் கொணர்ந்த தர்ப்பமே சிறந்தது. ஒரு தடவை பயன்படுத்திய தர்ப்பம் மறுபடி உபயோகிக்கத்தக்கதல்ல. அமாவாசையன்று தர்ப்பம் கொணர்ந்தால் ஒரு மாதம் பயன்படுத்தலாம். மாசி ஆவணி அமாவாசையில் எடுத்த தர்ப்பம் பலதடவைகளில் பயன்படுத்தலாம். ஸந்தியாகாலத்திலும் இரவிலும் தர்ப்பம் பறிக்கக்கூடாது. அக்னி குண்டத்தைச் சுற்றியும் ஆஸனத்திலும் பிண்டத்தின் அடியிலும் பிரும்மயஜ்ஞம் பித்ரு தர்ப்பணம் இவைகளிலும் உபயோகப்படுத்திய தர்ப்பம் மறுபடி உபயோகிக்கத்தக்கதல்ல. கர்மாவின் நடுவில் ஆசமனம் பாதங்களை அலம்புதல் போன்றவை செய்ய நேரும் போது பவித்திரம் கழற்றி வலது காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் முதலியவை செய்தபின் மறுபடி விரலில் தரித்துக் கொள்வர். ஸங்கல்பித்த காரியம் முடிந்ததும் அந்த பத்திரம் கழற்றி முடிப்பு அவிழ்த்து வடக்கில் போடவேண்டும். உடன் வேறு கர்மாவிற்கு ஸங்கல்பம் செய்வதாயிருந்தால் புது பவித்ரம் தரிக்க வேண்டும்.
அக்னி உபாஸனை
பிராமணனின் முதலாவதும் முடிவானதுமான தேவதை அக்னி. அதிலேயே மற்ற தேவதைகளையும் அவன் ஆராதிக்கிறான். அதேபோன்று அவன் வழிபடுமிடம் ஜலம். இரண்டும் இயல்பாகவே மிகவும் தூய்மை மிக்கவை. தூய்மை மிக்க இடங்களில்தான் தேவதைகளின் அருட்சக்தி பரவும். அதனால் அக்னிஉபாசனை மிக முக்கியமானது. அக்னியை முன்னிட்டு உபநயனம், விவாஹம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மம் என்ற அனைத்துக் கர்மங்களும் நடைபெறுகின்றன. அவனது இறுதியும் அக்னியில் தான். உபனயனமாகி மந்திரங்கள் மூலம் தேவதை அருள்பெறத் தகுதி பெறுபவர் அனைவரும் அக்னியை வழிபடுகிறார்கள். உபனயனத்தன்றே பிரும்மசாரி அக்னியை உபாசிக்கத் தொடங்குகிறான். அதனை ஸமிதாதானம் என்பர். திருமணம் மூலம் கிருஹஸ்தனானதும் அக்னியை மனைவியின் உதவியுடன் வழிபடத் தொடங்குகிறான். அதனை ஒளபாஸனம் என்பர். மேலும் தகுதிகளை வளர்த்துக்கொண்டு வேள்விகள் செய்யத் தகுதிவந்ததும் அக்னியை மூன்று இடங்களில் வளர்த்து வழிபடுகிறான். அதனை அக்னி ஹோத்ரம் என்பர். இப்படி வழிபடுகின்ற அக்னியின் மூலமே அவனது இக-பர நன்மை நாடிச்செய்கின்ற நற்கருமங்கள் முழுமை பெறுகின்றன.
பிரம்மசாரி தான் வழிபட்ட அக்னியிடம் தன் உடல்-உள்ளங்களின் பாதுகாப்பு, வலிவு, தான் நல்வழிபடல், வாழ்வின் மேன்மை , புகழ், செல்வம், கல்வி, அறிவு, மேதை, தத்துவ அறிவு, ஒளிமிக்கதான எதிர்காலம், தனக்குரிய பங்கைப் பிறர் அபகரிக்க முடியாமற் செய்தல் முதலியவற்றை வேண்டிப் பெறுகிறான். அந்த ஹோம விபூதி கொண்டு தன்னிடம் எல்லா நன்மைகளும் நிலைத்திருக்கும்படி ரக்ஷை செய்துகொள்கிறான். அக்னியே இவனுக்கு உபாஸனா தெய்வம். இதன் விரிவே ஒளபாஸனமும் அக்னிஹோத்ரமும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உலகிற்கும் நன்மையை வேண்டி இவை செய்யப்படுகின்றன.
பிரும்மசாரி தனக்காகத் தான்மட்டும்தான் ஸமிதாதானம் செய்யமுடியும். கிருஹஸ்தன் தான் இல்லாதபோது மனைவி, புத்திரன், சிஷ்யன், குரு, சகோதரன், மருமகன், மாப்பிள்ளை அல்லது தன்னால் வரிக்கப்பெற்ற ருத்விக் இவர்களைக்கொண்டு செய்து கொள்ளலாம். ஆனால் தம்பதிகளில் ஒருவராவது இல்லாதபோது ருத்விக் அல்லது மற்றவர் மூலம் செய்ய முடியாது. தொடர்ந்து செய்யமுடியாவிடில் ஹோமத்திரவ்யத்தைக் கணக்கிட்டு அதனைத் தானம் செய்யலாம். அக்கினியில் ஸமித்து அன்னம் நெய் என்ற மூன்று பொருள்களைக் கொண்டு ஹோமம் செய்யப்படுகின்றது. உபாசிக்கின்ற தேவதையையும் நாடுகின்ற பலனையும் ஒட்டி ஸமித்தும் அன்னமும் மாறுபடும். நெய் எல்லாவற்றிலும் பொதுவானது. பசுவின் நெய் ஹோமம் செய்ய தகுந்தது.
அரசு, புரசு, அத்தி, கருங்காலி, நாயுருவி, எருக்கு, வன்னி இவற்றின் குச்சிகளும் அருகம்புல்லும் தர்ப்பமும் ஹோமத்திற்கான ஸமித்துகளாகப் பயன்படுபவை. அரசு, புரசு, தர்ப்பை என்ற மூன்றே பொதுவாக எல்லா கர்மாக்களிலும் பயன்படுகிறது. அரசு மரத்திலிருந்து தானே ஒடிந்து விழுந்த குச்சியையே பயன்படுத்துவர். மற்றவற்றில் புழு துவாரமிட்டது, கோணலானது, இருகிளையுள்ளது, தோலில்லாதது, தானே உதிர்ந்தது, பசை இல்லாதது இத்தகைய சமித்துக்கள் பயனற்றவை. எதையும் தானே சேகரிப்பது மிகச்சிறந்தது.
ஹோமம் செய்யும் போது அதன் மந்திர உச்சாரணத்தைத் தவிர மற்ற பேச்சு கூடாது.
அக்கினிக்கு ஏழுநாக்குகள். அக்னி குண்டத்தில் அக்னிபரவியுள்ள நிலையில் கிழக்கு தென்கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வடகிழக்கு நடுப்பகுதி என்ற ஏழிடங்களில் வெளியாகின்ற ஜ்வாலையே அதன் நாக்குகள், அவற்றிற்கு முறையே வரிசையாக ஸுப்ரபா, அதிரக்தா, கிருஷ்ணா, ஸுவர்ணா, ரங்தா, பஹுரூபா, கனகா என்று தனிப்பெயர் உண்டு. காம்யகர்மங்களில் (குறிப்பிட்ட பலனைக் கோரிச் செய்வதில்) கிழக்கில்; சாந்தி (கிரஹபீடை சத்துருபீடை முதலியவை அடங்க) கர்மங்களில் தென்கிழக்கில், பித்ருகார்யங்களில் தெற்கில், விவாஹத்தில் மேற்கில் உபனயனத்தில் வடக்கில், உக்கிர கர்மாக்களில் (சத்ரு- நாசம் முதலியவற்றில்) வடகிழக்கில் வேள்விகளில் நடுவில் உள்ள ஜ்வாலைகளில் ஹோமம் செய்வர்.
காலை அக்னியை வழிபட்டதும் மங்களப் பொருள்களைப் பார்க்கவேண்டும். அருகம்புல், நெய், தயிர், நீர் நிரம்பிய கலசம், கன்றுடன்கூடிய பசு, எருது, தங்கம், மண், கோமியம், அமாவாசை, தேன், கன்னிப் பெண், ஆசாரசீலரான பிராம்மணன், அக்னி, சந்தனம், வெள்ளைப் பூ, ரத்தினம், அரசன், துறவி, குரு, கடல் இவை மங்களப்பொருள்கள்.
பூனை, மாடப்புறா, கிளி இவற்றை வளர்ப்பது நல்லது. பசுவைச்சொரிந்து விட்டு, புல் ஆத்திக்கீரை முதலியவைகளைத் தருவதும், அரசமரத்தைச் மரத்தைச் சுற்றிவருவதும், தன்னை விட மூன்று வயது பெரியவர்களையும் குருவையும் வணங்குவதும் நல்லது.
அக்கினி உபாசனையில் கவனிக்கத்தக்கவை
பிரும்மசாரி ஸமிதாதானத்தை ஒவ்வொரு வேளையிலும் புதிதாகக் கொணர்ந்த அக்கினியில் செய்யலாம். ஒளபாஸனத்திற்கான அக்கினியை எப்போதும் அணையாமல் குண்டானில் வைத்துக் காப்பாற்றுவர். அப்படி அணைந்தால் அரணிக்கட்டையைக் கடைந்து அக்கினியைப் பெறலாம். அல்லது வேதமோதி அக்கினியைப் பரிபாலிக்கின்றவருடைய வீட்டிலிருந்து அக்கினியைக் கேட்டுப்பெறலாம். தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ந்து ஒளபாஸனம் செய்யாவிடில் அது லௌகிகாக்கினி (அடுப்பில் உள்ள நெருப்பாக) ஆகிவிடும். மறுபடி அக்கினி ஸந்தானம் பிராயச்சித்தத்துடன் செய்யவேண்டும். வெளியூர் செல்ல நேர்ந்தால் தன்னிடமோ, ஸமித்திலோ அரணிக் கட்டையிலோ ஆரோபணம் செய்து, புது இடத்தில் அரணி கடைந்தோ எடுத்துப்போன ஸமித்தைக் கொண்டோ அக்கினியை உண்டாக்கி ஒளபாஸனம் செய்யலாம்.
அக்கினியை வலுப்படுத்த வாயால் ஊதக்கூடாது. தமனிக்குழாயின் மூலம் ஊதியோ, விசிறியால் விசிறியோ பெரிதுபடுத்தலாம்.
அக்கினியில் இட்ட பொருள் அருள் வடிவம் பெற்று இடுபவனைக் காப்பதுடன் சூரியனிடம் செல்கிறது. சூரியன் அதை மேகமாக்கிப் பொழிகிறான். தானியங்களையும், ஜீவராசிகளையும் போஷிக்கிறான். ஒவ்வொரு அந்தணர் செய்கின்ற நற்செயலும். இவ்வாறு உலக நன்மைக்குப் பயன்படுகின்றது.
தொடரும்...
Comments