ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 3

ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 3

இரண்டாம் இலக்கு - பொருள்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
பொருள் என்னும் பணம் இவ்வுலக வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. பொருளே அனைத்து பொருள்களையும் பெறுவதற்கு முதற்பொருள். வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைப் பெறுவதற்கு பொருள் தேவை. இன்று அடிப்படைத் தேவைகளாக இவை மட்டும் இல்லை.
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்ற ஔவையாரின் வாக்கு எவ்வளவு உண்மையானது! பொருள் இன்மையே பல சமூகக் குற்றங்களுக்கு முதற் காரணமாக இருக்கின்றது. பொருளின்மையைப் போல துன்பம் தரத்தக்கது வேறு எதுவும் இல்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (திருக்குறள் 1041)

பொருளென்னும் பொய்யா விளக்கம்
இன்று சமூகத்தில் பொருளால் ஆகாதது ஒன்றும் இல்லை. கல்வி, மருத்துவம், உணவு அனைத்தும் வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்ட சமூகத்தில் பொருளின்றி வாழ்க்கை இல்லை. பொருள் இருந்தால் ஒரு பொருளாக மதிக்காத மனிதரும் மதிப்பு உடையவராக ஆகி விடுகின்றார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று அன்றே சொல்லியிருக்கிறார்கள். பொருளை வெளிநாடு சென்றாவது  நாம் சேர்த்து நம் துன்பத்தை போக்கி கொள்ளல்வேண்டும். 

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் (திருக்குறள் 751)

பொருளென்னும் பொய்யா விளக்கம்
இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று (திருக்குறள் 753)

அறன்ஈனும் இன்பமும் ஈனும்
பொருளுள்ளவர்கள் நல்லவர்களாகவும் இருக்கும் பொழுது அந்தப் பொருள் அனைவருக்கும்  பயன்தரத்தக்க ஒரு ஊருணி போல் இருக்கின்றது. தீயவர்களிடம் சேர்கின்ற பொருள் நச்சு மரம் போல் ஆகின்றது. 
ஆகவேதான் வாழ்வின் குறிக்கோளைச் சொல்லுகின்ற பொழுது அறத்தை முதலிலும் பொருளை இரண்டாவதாகவும் சொல்லியிருக்கிறது வேதம்.

நல்வழியில் பொருளீட்டுகின்ற பொழுதே அதை அச்சமின்றி வெளிப்படையாக அனுபவிக்க முடிகின்றது. அறச்செயல்களுக்கும் பயன்படுத்த முடிகின்றது. பிறருக்கு கெடுதல் இன்றி முறையாக ஈட்டிய பொருளே புண்ணியத்தையும் உண்மையான இன்பத்தையும் தருகின்றது.
பொருளைக் கொண்டே அறத்தையும் இன்பத்தையும் எளிதாக பெறமுடியும். அருளென்னும் அன்பின் குழந்தையும் பொருளாலேயே வளர்கின்றது.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் (திருக்குறள் 754)

செய்க பொருளை!
பொருளீட்டல் என்பது ஒரு கலை. ஓவியம் போல சிற்பம் போல இசை போல பொருளீட்டுதல் என்பதும் ஒரு கலை. அது அனைவருக்கும் வருவது இல்லை. யார் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்களோ அதன் நுட்பங்களை நுணுகி கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே பொருளைச் செய்யும் வல்லவர்கள் ஆகிறார்கள்.
பொருளே எதிரிகளை அழிக்கும் கூறிய வாளாகவும் அமைகின்றது. பொருள் உள்ளவரையே சமூகம் மதிக்கின்றது.
ஆகவே பொருள் செய்யும் வித்தையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். (திருக்குறள் 759)

- தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101