அறம் செய விரும்பு - 10

வஸ்திரதாரணம் - ஆடை உடுத்தல்

மேலாடை (உத்தரீயம்) இடுப்பு வஸ்திரம் என இரண்டு ஆடைகள் எப்போதும் தரிக்க வேண்டும். உத்தரீயமின்றி ஒரு நற்கருமமும் செய்ய முடியாது. உத்தரீயத்தை இடுப்பிலும் இடுப்பாடையை உத்தரீயமாகவும் தரிக்கக்கூடாது. வெளுத்த ஆடை நல்லது. வேறு சாயம் உள்ள ஆடையை தரிக்கக் கூடாது. உலர்ந்த ஆடை உடுத்தியே நற்கருமங்கள் செய்ய வேண்டும். ஆடை உலர்ந்திராவிடில் ஈரவஸ்திரத்தை ஏழு தடவை காற்றில் உதறித் தரிக்கலாம். சணல் கம்பளி பருத்தி பட்டு இவற்றால் ஆடையை தரிக்கலாம். உத்தரியமில்லாத நிலையைத்தவிர்க்க கிருஹஸ்தன் மூன்று பூணூல்களைத் தரிப்பது உண்டு. இடது தோளின்மேல் பூணூல் போல் போட்டு வலது விலாப்புறமாகச் சுற்றி உத்தரீயத்தைத் தரிக்க வேண்டும். வஸ்திரம் தரித்தபின் இருதடவை ஆசமனம் செய்ய வேண்டும். வேண்டும். ஸ்னானத்தின் போது தரித்திருந்த இடுப்பாடையை நான்காய் மடித்து நிவீதியாய் நின்று மரத்தடியில் பிழியவேண்டும். "உச்சிஷ்ட பாகிநோ தாஸா: யே ம்ருதாஸ் தே த்வமந்த்ரகா: த்ருப்யந்து தருதாம் யாதா: மம ஸம்பந்த்திநோ நரா:" என்னோடு தொடர்புகொண்டு என் வீட்டில் மீதமுள்ள உணவை உண்டு எனக்குப் பணியாளாயிருந்தவர், இறந்து மந்திரமில்லாமல் உத்தரக்ரியை நடந்து நற்கதி பெறாமல் மரம் செடியாகப் பிறந்தவர்கள், இந்த துணி பிழிந்து நீரால் திருப்தியடையட்டும்" என்று கோரி விட்ட அந்த நீரைத் தர்பணமாக நினைக்க வேண்டும். பிழிந்த வஸ்திரத்தை இடது கையின் மணிக்கட்டின்மேல் வைத்துக்கொண்டு இருமுறை ஆசமனம் செய்ய வேண்டும். புதிய ஆடையாயின் மந்திர பூர்வமாக தரிக்க வேண்டும்.

ஆடை தரிப்பதில் முறையுண்டு. உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக்கொண்டு பூணூலை மாலையாக (நிவீதமாக) வலது காதில் சுற்றிக் கொண்டு கீழாடையை தரிக்க வேண்டும். சிவப்பு கருப்பு மற்றும் நீலச்சாயம் ஏற்றிய ஆடை, தலைப்பில்லாத ஆடை உடுத்தக்கூடாது. கச்சமுறையில் கிருஹஸ்தன் ஆடை உடுத்த வேண்டும். கச்சமுறையில் ஆடை உடுத்தாதவன் நல்ல கர்மா செய்வதால் பலனில்லை. ஆடையின் நுனி தனித்துத் தொங்காமல் உடுத்துவதே இந்த கச்சமுறையின் சிறப்பு. உடல் உள்ளங்களின் சக்தி சிதறாதிருப்பதற்கே இந்த கச்சமுறை. நுனியின் ஒருபக்கத்தை மட்டும் செறுகிக்கட்டுவது புச்சகச்சம். தலைப்பைவிட்டு நடுவில் சொருகிக் கொள்வது திர்யக்கச்சம். தொங்கும் நடுப்பகுதியை நடுவில் தூக்கிக்கட்டுவது ஊர்த்த்வகச்சம். அறை நாண்கயிற்றின் வலிவில் கச்சம் கட்டுவது கடிஸூத்ரகச்சம். இவை ஆடை இல்லாத நிலைக்கு ஒப்பானது. அரைஞாண் கயிறும் கௌபீனம் இல்லாதவனும், தட்டுச்சுற்றாக ஆடையை கட்டிக்கொண்டவனும், உத்தரீயமில்லாதவனும் ஆடையில்லாதவனே. உத்தரீயம் பூணூலைப்போன்று சுத்தமாகவும் இடுப்பிற்குக்கீழ் கொணராமலும் உடுத்தவேண்டும். அசுத்தநிலையில் தலையில் கட்டிக் கொள்ளலாம்.




புண்ட்ரதாரணம் - நெற்றிக்கு இட்டுக்கொள்வது 

நெற்றிக்கு அவரவர் குலாசாரப்படி ஏதேனும் இட்டு கொள்ள வேண்டும். அபரக்கிரியை செய்யும்போது மட்டும் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. விபூதியை ஜலம்விட்டுக் குழைத்து நெற்றிக்குக் குறுக்கே மூன்று பட்டையாக இட்டுக்கொள்வதை திரிபுண்ட்ரம் என்பர். கோபிசந்தனம், நாமக்கட்டி, ஸ்ரீசூர்ணம் முதலியவற்றால் நெற்றியில் கீழிருந்து மேல் இட்டுக்கொள்வது ஊர்த்வபுண்ட்ரம். புண்ட்ரத்தை அவரவர் குலாசாரத்தையொட்டித் தரிக்கவேண்டும். விபூதியால் ஊர்த்வபுண்ட்ரமோ கோபிசந்தனத்தால் த்ரிபுண்ட்ரமோ த்ரிபுண்டரத்தின் மேல் ஊர்த்வ புண்ட்ரம் இட்டு கொள்வதில்லை. கோபிசந்தன ஊர்த்வ புண்ட்ரத்தின் மேல் விபூதியால் திரிபுண்டரம் இட்டுக்கொள்வதும், உத்தூலானமாக (புழுதிவிபூதியாக ஜலத்தில் குழைக்காமல்) இட்டுக்கொள்வதும் வழக்கில் உள்ளது.

அக்னிஹோத்திரத்தில் கிடைத்த பஸ்மம், விரஜாஹோமம் செய்தெடுத்த பஸ்மம், ஒளபாஸனம், கணபதி முதலிய தேவதைகள் குறித்து ஹோமம் செய்தெடுத்த பஸ்மம் தரிக்கத் தக்கது. விபூதி இட்டுக் கொள்ளும்போதும் கோபிசந்தனமிட்டுக்கொள்ளும் போதும் இறைவனின் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபிப்பது நல்லது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101