Hindumatha Dharma Vilakkam - Chapter 07
ஓம்
பாடம் - 7
பொது தர்மம் தொடர்ச்சி
உலகியல் லட்சியங்கள் குறுகிய காலத்தில் முடிந்து விடுபவை. ஆனமிக லட்சியமான வீடுபேறு, நீண்ட நெடும் பயணம். ஒரு வாழ்க்கையில் மட்டுமல்ல, பல பிறவிகளில் தொடர்ந்து செய்யப்படுகின்ற சாதனை.
தர்மம் பக்தி ஞானம்
தர்மம் - சாமான்ய தர்மம், விசேஷ தர்மம்
சாமான்ய தர்மம் - தொடர்ச்சி
சென்ற வாரம் யமம் நியமம் பற்றிப் பார்த்தோம் இனி மேலும் சில நற்பண்புகள்...
ஆசார வித்துக்கள்
ஆசாரத்திற்கு காரணம்
எட்டு நற்பண்புகள் ஒருவனை ஆசாரம் - ஒழுக்கம் - உடையவனாக ஆக்கும்.
அவை:-
நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு, இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து.
- ஆசாரக்கோவை 1.
நன்றியறிதல் - பிறர் செய்த நன்மையை ஒருபொழுதும் மறவாது நன்றியுணர்வுடன் இருத்தல்.
காண்க: திருக்குறள் செய்நன்றி அறிதல்.
பொறையுடைமை - பிறர் செய்யும் தீமையைச் பொறுத்துக் கொள்ளுதல்.
காண்க: திருக்குறள் பொறையுடைமை.
இன்சொல் - வாய்மை - இனிமையும் உண்மையுமான சொற்களையே எப்பொழுதும் பேசுதல்.
காண்க: திருக்குறள் இனியவை கூறல்
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை - அஹிம்ஸா - எந்த உயிருக்கும் எவ்விதத்திலும் (உடலாலோ வாக்காலோ மனத்தாலோ) தீமை செய்யாது இருத்தல்.
காண்க: திருக்குறள் இன்னா செய்யாமை.
கல்வி - நீதிநூல்களை முறையாகக் கற்றறிதல்.
காண்க: திருக்குறள் கல்வி, கேள்வி
ஒப்புரவு ஆற்ற அறிதல் - உலக வழக்கைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடத்தல்.
காண்க: திருக்குறள் ஒப்புரவறிதல்
அறிவுடைமை - நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து அறிதல்.
காண்க: திருக்குறள் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் - நல்ல குணம் உடையவர்களை நண்பர்களாகக் கொண்டிருத்தல்.
காண்க: திருக்குறள் பெரியாரைத் துணைக்கோடல்
எண்ணற்ற நற்பண்புகள் நல்லொழுக்கங்கள் திருக்குறள் நாலடியார் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் உலகநீதி போன்ற அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சாமானிய தர்மமே.
சாமானிய தர்மத்தில் முதலாவதாக நற்பண்புகளைப் பார்த்தோம் இனி இரண்டாவது...
2️⃣ஆசாரம் - நன்னடத்தை
மூன்று நிலைகள் மனிதனை கட்டுப்படுத்துகின்றன. ஒன்று அகநிலை - ஆத்யாத்மிகம். இரண்டு புறநிலை - ஆதி பௌதிகம். மூன்று அகத்திற்கும் புறத்திற்கும் அப்பாற்பட்ட நிலை - ஆதிதைவிகம். நமது உடல், உள்ளம், அறிவு, ஆளுமை ஆகியவை நம்மை அகநிலையில் கட்டுப்படுத்துபவை. காற்று, வெப்பம், குளிர், வெட்டவெளி, மனிதன், மிருகம், மரம், செடி, நாம் வாழ்கின்ற பூமி இவை புறநிலையில் கட்டுப்படுத்துபவை. மனிதனின் ஆற்றலுக்கு உட்படாத வெயில், இடி, மின்னல் போன்றவை மற்றும் அவற்றிற்கும் அப்பாற்பட்டு நின்று அவற்றை அதனதன் இயல்புப்படி இயங்க வைக்கின்ற அறியவொனாத தெய்வ சக்தியும் மூன்றாவது நிலையில் வருபவை. ஆத்யாத்மிகத்தையும் ஆதிபௌதிகத்தையும் ஓரளவு கட்டுப்படுத்தி அனுகூலம் ஆக்கிக் கொள்ள முடியும். ஆதிதைய்விகம் நம்மை பாதிக்காதபடி நமக்கு பாதுகாப்பு தேடிக் கொள்வதும், அதனை அனுகூலம் ஆக்கிக் கொள்வதும் நமது முக்கியக் குறிக்கோள். இந்த மூன்று நிலைகளையும் அனுகூலம் ஆக்கிக் கொள்வதற்காகவே அன்றாட நடவடிக்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வது அவசியமாகிறது.
அன்றாட நியமங்கள்
அதிகாலையில் எழுதல், காலைக்கடன் முடித்தல்,
உடற்பயிற்சி செய்தல்,
குளித்தல், உடுத்தல்,
வழிபாடு செய்தல்,
உண்ணுதல்,
உழைத்தல், உறங்குதல்.
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதில் இருந்து இரவு உறங்கும் வரை பின்பற்ற வேண்டிய நியதிகள் ஆசாரம் எனப்படுகிறது.
"வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை"
- ஆசாரக் கோவை
குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு; ஆலயம் தொழுவது சாலவும் நன்று….
தேவையான அளவு -
ஒழுங்குக்கு - உட்பட்ட உணவும், விளையாட்டும் (உடற்பயிற்சி) உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. -பகவத்கீதை 6.17
காண்க: ஆசாரக்கோவை
Comments