Hindumatha Dharma Vilakkam - Chapter 4
ॐ
பாடம் 4
கடவுள் என்ன செய்கிறார் ?
சென்ற வாரம்…
கடவுள் எப்படி இருக்கின்றார்?
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம. நிர்குணம் நிராகாரம்.
பஞ்சபூதங்களில் பஞ்ச குணங்கள்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்.
பூமி தொடங்கி படிப்படியாகக் குறைந்து ஆகாசத்தில் சப்தம் மாத்திரம். அதற்கும் ஆதாரமான பிரம்மத்தில் அதுவுமில்லை நிர்குணம்.
ப்ரஹ்மம் + மாயாசக்தி = ஈச்வரன்… ஸகுணம் ஸாகாரம்
ஸர்வசக்திமான், ஸர்வஜ்ஞன்,
ஸர்வவ்யாபி, ஸர்வேச்வரன் கருணாமூர்த்தி, அப்ராகிருதன் ஸ்வதந்திரன், நித்யசுத்தன் பரிபூர்ணன், ஏகன் - ஒப்புயர்வற்றவன்.
இனி…
ஈச்வரனது செயல்கள் - பஞ்ச க்ருத்யங்கள்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.
ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஸதாசிவன்.
"மாயன் பிரம்மன் உருத்திரன் மகேசனோடாயும் சிவமூர்த்தி ஐந்து" - (ஔவைக்குறள் -1.6)
ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியினால் உலகங்களை படைக்கின்றார் காக்கின்றார் அழிக்கின்றார்.
தானே உலகமாக பல்வேறு பெயர் வடிவங்களோடு (தன்னுடைய மாயா சக்தியினால்) தோன்றுகின்றார். நாம் நம் மனோசக்தியினால் பல்வேறு நாம ரூபங்களோடு கனவு உலகத்தைப் படைப்பது போல்; கனவு உலகத்தில் தோன்றுவது போல. ஒரு கதாசிரியன் தன்னுடைய மனக் கற்பனையினால் பல்வேறு கதாபாத்திரங்களைப் படைப்பது போல. படைத்த கதாபாத்திரங்களுக்குள் உறவை ஏற்படுத்தி கதைப் பின்னுவது போல.
மாயா- மாயை - ஸத்துவ, ரஜோ, தமோ குணங்களை உடையது. குணங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உலகிலுள்ள வேறுபாடுகளுக்குக் காரணம்.
கடவுளை வணங்குவது எப்படி?
ஈஸ்வரன் சர்வவியாபி
ஆகாயத்தை விட அதி சூட்சுமமானவன் அவன்.
உடலில் உள்ள உயிர் போல.
அரூபமான அறிவு பொருளாக உள்ள ஜீவாத்மாவை திருப்தி செய்ய அனாத்மாவான உருவப் பொருளான ஜடமாய் உள்ள தேகத்தையே உபசரிக்க வேண்டும். வீடுவேறு, அந்த வீட்டுக்குள் வசிக்கும் மனிதன் வேறு. வீடும் மனிதனும் ஒன்றல்ல. அதுபோல தேகம் வேறு, இந்த தேகத்துக்குள் இருக்கும் ஜீவாத்மா வேறு. தேகமே ஜீவாத்மா என்பதல்ல. கால் முதல்கொண்டு தலை முடிவாக உள்ள பற்பல அவயவங்களை கூடிய தேகத்தை உபசரித்தால் அதற்குள்ளிருக்கும் ஆத்மா திருப்தி அடைகிறது.
அங்கத்தை உபசரித்தல் அங்கியின் திருப்திக்காகவே.
ஜீவாத்மா அங்கி, தேகம் அங்கம். அங்கத்தை விடுத்து அங்கியோடு பழக இயலாது.
அரூபவஸ்துவாகிய பேரறிவாளனான ஈஸ்வரனை திருப்தி செய்வித்தல் முதலிய விவகாரம் அவனால் வியாபிக்கப்பட்டுள்ள அங்கமாகிய பிரம்மாண்டத்தில் அடங்கிய யாதேனும் ஜடப்பொருளை உபசரித்தல் மூலமாகவே சாத்தியமாகும்.
பரமாத்மா அங்கி, உலகம் அங்கம். அப்படி பூஜிக்க வேண்டிய அங்கமே விக்ரஹம் எனப்படும்.
பிரம்மாண்டத்தில் சுத்தம் அசுத்தம் என இருவகை பொருட்கள் அடங்கியிருக்கின்றன.
நம் உடலில் கை, வாய், தலை, மார்பு சுத்தமானவை. கேசம், பிறப்புறுப்புகள், அக்குள் அசுத்தமானவை என்பதுபோல.
ஒரு மனிதனுக்கு மரியாதை செய்கின்ற பொழுது கை, தலை முதலான உயர்ந்த உறுப்புகள் வழியாகவே செய்யப்படுகிறது.
அப்படியே பிரம்மாண்டத்தில் அடங்கியிருக்கும் சுத்த அசுத்தங்களாகிய பொருள்களில் அசுத்தங்களை விடுத்து சுத்த அங்கங்களாகிய சிலாக்கியமான உயர்ந்த பொருள்களையே பூஜித்து வழிபடுதல் உசிதமாகும்.
மனிதனின் மனம் சுத்த அசுத்த பாவனை உடையது. சுத்தமான பொருள்களிலேயே அதிக ஈடுபாடு காட்டும்.
சேதனப் பொருள்களைக் காட்டிலும் ஜடப் பொருள்கள் சுத்தமானவை.
காந்தத்திற்கு மட்டும் இரும்பை இழுக்கும் தன்மை அமைந்திருப்பது போல, சாலகிராவம், பாணலிங்கம் போன்ற இயற்கைக் கற்களில் மனிதரது மனசை ஒரே வழியில் நிறுத்தும்படி கவரக்கூடிய சக்தி அமைந்திருக்கின்றது.
சூரியன் ஒளி மிக்கது. சூரியனின் ஒளி வெப்பமானது, எரிக்கக் கூடியது. சந்திரன் ஒளியற்றது. சூரிய ஒளியை வாங்கியே சந்திரன் ஒளிர்கின்றது. ஆனால் சந்திரனின் ஒளி குளிர்ச்சியாகவும் இதமாகவும் இருக்கின்றது.
அதைப்போல இயற்கையில் இருக்கும் சில பொருள்கள் ஒலிகளை வாங்கி வெளிவிடும் தன்மை உடையவை. வேத மந்திரங்களை, நல்ல ஒலிகளை வாங்கி வெளிவிடுகின்றன.
இயற்கை வழிபாடு வேதத்திலேயே உள்ளது. இயற்கை வழியாக இறைவனை வணங்கும் அறிவு ரீதியான அணுகுமுறை இது.
"பூமியை வணங்குகின்றேன்; வாயு மேகாதி சஞ்சாரம் உள்ள புவர் லோகத்தை வணங்குகின்றேன்; ஸுவர் என்னும் சுவர்க்க லோகத்தை வணங்குகின்றேன்; ஜராமரணாதிகளும் ராகத்வேஷாதிகளும் இராத ஞானிகளான ஆதிகாரிக புருஷர்களை வணங்குகின்றேன்; கடைந்தெடுத்தது போன்றுள்ள பாணலிங்க, சாலக்ராவ, ஸ்படிக லிங்காதி சிலா விசேஷங்களை வணங்குகின்றேன்." - யஜுர் வேத ஆருணம்.
அங்கத்தின் உபாசனையாலேயே அங்கியான இறைவனை உபாசிக்க வேண்டும் எனும் கருத்திலேயே, வேதத்தில் மண், ஜலம், அக்னி, சூரியன், சந்திரன் முதலிய பொருள்களில் ஆராதனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
நம் முன்னோர்கள் அறிவுபூர்வமாகத் தெரிந்தே இவற்றை தெய்வங்களாக வணங்கி இருக்கிறார்கள்.
வேதத்தில் ஜடப்பொருளின் துதிகள் காணப்படுகின்றமையால், நமது முன்னோர் பூர்வகாலத்தில் ஈஸ்வரன் என்னும் பொருளை அறியாதவர்களாய் பயத்தினால் ஜடப் பொருள்களை வணங்கி வந்தனர் என தற்காலம் மேற்குத்திசை நாகரீக கோமாளிகள், கம்யூனிஸ்டுகள் நாத்திகவாதிகள் தாறுமாறாக கூறுவதை தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே கடவுளுக்கு பல வடிவங்கள்
அவனே பிரம்மம் அவன் சிவன் அவன் ஹரி அவனே இந்திரன் அவன் அக்ஷரன் - யஜுர் வேதம்.
இந்திரன் வருணன் சூரியன் என அவனையே சொல்லுகின்றனர். அன்றியும் திவ்யமான சுபர்ணன் எனும் கருடனும் அவனே. வேதமறிந்த பெரியோர் ஏகனான அவனை பலவாகக் கூறுகின்றனர். அதாவது அக்னி, எமன், வாயு இவர்களும் அவன் எனக் கூறுகின்றனர் - ரிக்வேதம்.
கடவுளின் அவதாரங்கள்
ஜீவன் - பிறப்பு, இறைவன் - அவதாரம்
ஜீவர்களின் பிறப்புக்கும் கடவுளின் அவதாரத்திற்கும் உள்ள வேறுபாடு
i. காரணம்
ஜீவன் - அஜ்ஞானம்
பகவான் - கருணை ஞானம் ஸ்வாதந்த்ரியம்
ii. ஸ்வரூபம்
ஜீவன் - பத்தன், அஜ்ஞானி பௌதிக சரீரம்
பகவான் - ஞானி மாயிகசரீரம்
iii. காரியம் (நோக்கம்)
ஜீவன் - புண்ய பாபங்களை அனுபவிப்பதற்காக.
பகவான் - துஷ்டநிக்ரஹ சிஷ்டஅநுக்ரஹார்த்தம். தர்மவான்களை காக்கவும் அதர்மவான்களை அழிக்கவும் (தர்மத்தை நிலைநாட்ட.)
கடவுளின் கையில் ஆயுதங்கள்
அவரே நம்மை காப்பார் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதற்காக. நான்கு தலையை நான்கு கைகள் போன்றவை நம்மைவிட அதிகமான ஞானம் உடையவர்கள் சக்தி உடையவர்கள் என்பதை காட்டுவதற்காக.
தெய்வங்களின் வாகனங்கள்
சிவனுக்கு வாகனம் ரிஷபம், தேவியின் வாகனம் சிங்கம்.
சிவனின் ஒரு கையில் மான், மறுகையில் அக்னி.
விஷ்ணுவுக்கு வாஹனம் கருடன், சர்ப்பம் சயனம். விநாயகருக்கு வாஹனம் எலி, ஆபரணம் நாகம். குமரனுக்கு வாகனம் மயில். பிரியவஸ்து நாகம். லட்சுமியின் கையில் தாமரை, அருகில் யானை, பிரம்மாவின் வாகனம் அன்னம், ஆசனம் வெண்தாமரை.
இப்படி ஒன்றுக்கொன்று முரணானவை, எதிரானவை, பரஸ்பர விரோத எண்ணத்தை விட்டு சாந்தமான ரீதியில் இறைவனின் சந்நிதியில் இருக்கின்றன. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்...
பதஞ்சலி யோக தரிசனத்தில், "அஹிம்சா தர்மம் நிலைக்கப்பெறுமாயின், அவ்வாறு நிலைக்க பெற்றவர் சன்னிதியில், விரோதம் நீங்கி சாந்தமான ஸ்திதியே ஏற்படும்" என ஒரு சூத்திரத்தில் சொல்லியிருக்கின்றார்.
பகவான் சாந்த சொரூபியாய் இருக்கின்றார், பகவான் முன்னிலையில் அனைத்தும் விரோதம் இன்றி நேச பாவத்தோடு இருக்கின்றன.
அஹிம்சா தர்மம் நிறைந்துள்ள கடவுளிடம் நாம் மனதைச் செலுத்தி அவரது அருளைப் பெற வேண்டும் என்றால் நம்மிடம் அஹிம்சா தர்மம் நிலை பெற வேண்டும். நீதி, சத்தியம் முதலிய மேலான குணங்களையுடைய ஓர் நீதிபதியின் சேவகன் பொய், களவு முதலிய கெட்ட நடத்தை உடையவனாக இருந்து அவருடைய அருளை எப்படி சம்பாதிக்க முடியாதோ, அப்படியே அகிம்சா தர்மத்திற்கு நிலமாகிய ஈஸ்வரனை உபாசிப்பவன் ஹிம்சை முதலிய கெட்ட குணங்களை விட்டுவிட வேண்டியது அவசியம் என்பது இதன் கருத்து.
உலகில் அனைத்து ஜீவர்களிடத்தும் இறைவன் இருக்கின்றான். அனைத்து உடல்களும் ஈஸ்வரனுக்கு அங்கங்களே. அங்கங்களுக்குச் செய்யும் கேடு அங்கிக்கு செய்யும் கேடு ஆகும்.
இதைப்போலவே சிவ விஷ்ணு விரோதம் பார்ப்பதும், தெய்வங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும், ஒரு தெய்வம் உயர்ந்தது இன்னொரு தெய்வம் கீழானது என்று கருதுவதும் ஆகும்.
தேவ, ரிஷி, பித்ருக்களின் பூஜைகளும் கடவுளின் உபாசனையே. கடவுளின் வழிபாடே ஆகும்.
Comments