எது பகுத்தறிவு ?
ஓம்
எது பகுத்தறிவு ?
ஸ்வாமி பூர்ணாநந்த ஸரஸ்வதி
கருப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து மத வெறுப்பர் கூட்டம் புராணங்களை ஆபாச புராணம் என்று பேசி வருகின்றது.
நாங்கள் ஆபாசமாகப் பேசவில்லை புராணங்களில் உள்ளதையே சொல்லுகின்றோம் என பகுத்தறிவு என்று ஆபாசம் பேசுபவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆபாசம் என்பது என்ன?
ஆபாசம் என்பது பொருளில் உள்ளதா? பார்வையில் உள்ளதா? நிர்வாணம் என்பது இயல்பாக இருப்பது. அது எப்பொழுது ஆபாசம் ஆகின்றது? காம நோக்கோடு பார்க்கப்படும்பொழுதே வெளிப்படுத்தப்படும்பொழுதே அல்லவா?
உடலின் நிர்வாணம் ஆபாசம் அல்ல. எல்லா விலங்குகளும் எப்பொழுதும் நிர்வாணமாகவே இருக்கின்றன. அது ஆபாசமாக கருதப்படுவது இல்லை. ஆடைகளுக்குள் அனைவரும் நிர்வாணமானவர்களே. அது காமத்தோடு பார்க்கப்பட்டு காமத்தைத் தூண்டும் விதமாக வெளிப்படுத்தப்படுகின்ற பொழுதே ஆபாசம் ஆகின்றது.
புராணங்களில் ஆபாசம் இல்லை. அது காமுகர்களால் ஆபாசமாகப் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்படுகின்றது என்பதே உண்மை.
உண்மையை தேடும் பகுத்தறிவு என்று, ஆபாசமாகப் பகுத்தறிவை வெளிப்படுத்துவது, பகுத்தறிவின் ஆபாசமே அன்றி வேறில்லை.
ஆபாசம் என்ற சொல்லுக்கு போலி என்பதே உண்மைப் பொருள். உண்மையை போல விளங்குவது என்று அர்த்தம். இந்தப் பெரியாரிய பகுத்தறிவுவாதிகள் பகுத்தறிவுப் போலிகள்.
உண்மையைத் தேடும் பகுத்தறிவு என்றால் என்ன?, என்பதைப் பற்றிய உண்மையை சற்று பகுத்தறிவோம்.
சிந்திக்கத் தொடங்கிய மனிதன் உண்மையைத் தேடுகிறான். உலகம் எப்படி வந்தது ? எப்படி இருக்கின்றது ? உயிர் என்பது என்ன? அது எப்படி உடலில் வந்தது? உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு என்ன? இரண்டும் வேறு வேறா அல்லது ஒன்றா? இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இருப்பதா? இல்லை, ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதா? சார்ந்து இருப்பது எனில், எது எதைச் சார்ந்திருக்கிறது?
இந்த கேள்விகள்தான் மதங்களின் தோற்றத்திற்கு அடிப்படை. இந்தக் கேள்விகளுக்கான விடையை, தவத்தோடும் மன அடக்கத்தோடும் பகுத்தறிவுரீதியாகத் தேடி அடையப்பட்டவைதான் பல்வேறு சித்தாந்தங்கள். உலகத்தின், உயிரின் உண்மையைப் பற்றிய பகுத்தறிவு ரீதியான விளக்கங்களே பல்வேறு மதங்கள்.
உண்மையைத் தேடும் பகுத்தறிவு, தான் கண்ட உண்மையை விவரிப்பது தான், அதை முறையாக விவாதித்து மற்றவர்களையும் ஏற்கச் செய்வதுதான் உண்மையான பகுத்தறிவு. அப்படி வாழ்ந்தவர்கள் தான் நம் முன்னோர்களான ரிஷிகள், ஞானிகள் ,யோகிகள், சித்தர்கள்.
கௌதமர், கணாதர், கபிலர், பதஞ்ஜலி, ஜைமினி, வியாசர், நீலகண்ட சிவாச்சாரியார் இப்படி அநேகம்பேர். இறைவன் அருளாலும் இவர்கள் முயற்சியாலும் கண்டடையப்பட்ட சித்தாந்தங்களே நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சைவ சித்தாந்தம். புத்தர், மகாவீரர், இயேசு கிறிஸ்து, முகமது நபி இவர்களும் தங்கள் மதத்தை பகுத்தறிவுரீதியாகத் தேடி அடைந்தவர்களே.
இப்படிப் பல்வேறு உண்மையான பகுத்தறிவுவாதிகள் தர்க்கரீதியாக பல்வேறு கோணங்களில் உண்மையை ஆராய்ந்து பல்வேறு சித்தாந்தங்களை நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள். சித்தாந்தம் என்பது நீண்ட ஆய்வின் முடிவாக சித்தித்த - அடையப்பட்ட - கொள்கை. அவைவே பல்வேறு மதங்கள். தங்களின் முடிவான வாழ்க்கைக் கொள்கை என்ன என்பதையே இவை விவரிக்கின்றன.
உண்மையைத் தேடியவன், தான் கண்டடைந்த உண்மையை உள்ளவாறு மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதுதான் உண்மையான அறிவுடைமை. இந்தப் பெரியாரிய பகுத்தறிவுவாதிகளும் தங்களுடைய சித்தாந்தம் என்ன என்பதை பகுத்தறிவு ரீதியாக மற்றவர்களுக்கு விவரிப்பது தான் உண்மையான பகுத்தறிவாக இருக்கும். வெறுமனே மற்ற மதங்களின் - குறிப்பாக ஹிந்து மதத்தைப் பற்றிய - குறியீடுகளை, புற அங்கங்களை, தோற்றங்களை விமர்சிப்பது மட்டும் பகுத்தறிவு ஆகாது. ஒருவன் தான் காண்கின்ற, கேட்கின்ற விஷயங்களின் நுண்பொருள் காண்பதே அறிவு. ஒருவர் எதை எப்படிச் சொன்னாலும், அவர் சொல்லுகின்ற நோக்கம் என்ன, எதைச் சொல்ல வருகின்றார், என்பதை உள்ளவாறு அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவு.
புராணங்களில் உள்ள கதைகளையும், கதைகளின் வழியாக சொல்லப்படுகின்ற தர்ம, தத்துவ விஷயங்களையும் நேர்மறைப் பார்வையோடு அணுகுவதும் புரிந்து கொள்வதும்தான் சரியான அறிவுடைமையாகும்.
உதாரணத்திற்கு ஹரியும் ஹரனும் சேர்ந்து ஹரிஹர புத்திரரான ஐயப்பன் வந்தார் என்று புராணம் கதை சொன்னால், ஆணும் ஆணும் சேர்ந்து குழந்தை வருவது சாத்தியம் இல்லை, வந்திருக்கிறதென்றால் ஒரு ஆண் பெண்ணாக மாறி என்று பொருள். அப்படித்தான் புராணத்திலும் இருக்கிறது. தேவர்களுக்கு இது சாத்தியம். அதுவும் இது மாயையினால் பண்ணப்படுவது. உண்மையான உடல் ரீதியான சேர்க்கை அல்ல, காக்கும், அழிக்கும் இரண்டு சக்திகளின் சேர்க்கை. (இன்று அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில படங்களில் காண்கின்றோம் பல்வேறு வேறுபட்ட சக்தியுடையவர்கள் ஒன்றுகூடி தீயசக்தியை அழிப்பதை.) தோன்றிய கதையைச் சொல்வது கதையின் நோக்கம் அல்ல. அப்படி வந்த அந்த புத்திரன் என்ன செய்தான்? எப்படி வாழ்ந்தான்? என்பதை சொல்வதுதான் புராணத்தின் நோக்கம்.
இதேபோல, பூமாதேவியும் மகாவிஷ்ணுவும் சேர்ந்து நரகாசுரன் வந்தான் என்று கதை சொன்ன புராணம், அந்த நரகாசுரன் தீயவனாக இருந்ததினால் தந்தையான மகாவிஷ்ணுவினாலேயே கொல்லப்பட்டான் என்றும் சொல்கிறது. தீயவன், புத்திரனாக இருந்தாலும் அவன் அழிக்கப்பட வேண்டியவனே என்பதே செய்தி. மனுநீதிச் சோழன் என்ற உண்மையான பகுத்தறிவுள்ள தமிழன் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினான். நேர்மையான ஒரு தமிழ் மன்னனை உருவாக்கியது இந்தப் புராணக் கதை தானே. இப்படிக் கதையின் தாற்பரியத்தை விடுத்து மகாவிஷ்ணுவும் பூமியும் சேர்வது போல ஆபாசமாக படத்தை வரைந்து இதுதான் புராணம் சொல்கின்றது என்று காட்டுவது ஆபாசமான பகுத்தறிவற்ற மூடத்தனத்தையே காட்டுகின்றது.
தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டுதல் தான் ஹிந்து மத புராணங்களில் காணப்படுகின்ற வரலாறுகளின் கருத்து. இதன்மூலம் அனைவரும் தர்மமாக வாழவேண்டும்; தர்மமாக வாழவில்லையென்றால் இறைவன் தண்டிப்பான். தர்மமாக வாழ்பவனை இறைவன் காப்பான். உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ வேண்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மக்கள் உண்மையானவர்களாக, நேர்மையானவர்களாக, நல்லவர்களாக தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்துமத புராண இதிகாசங்கள் சொல்லுகின்ற செய்தி. இந்த மையக் கருத்தை விட்டுவிட்டு வெறும் கதையை வைத்துக்கொண்டு ஆபாசமாக காலக்ஷேபம் பண்ணுவது பயனற்றது. இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை ஏற்படப்போகின்றது? இதுவரை ஏற்பட்டிருக்கின்றது?
புராண, இதிஹாஸக் கதைகளை படித்தும் கேட்டும்தான் நம் முன்னோர்கள் தர்மமாக, மனநிம்மதியோடு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள்.
பெரியாரில் தொடங்கி இன்றைக்குப் பெரியாரின் பிஞ்சுகள் குஞ்சுகள் வரை ராமர் முதல் அனைத்து புராண கதாபாத்திரங்களையும் ஆபாசமாகப் பார்த்து, சித்தரித்து இந்த சமூகத்திற்கு என்ன நல்ல செய்தியைச் சொல்லி விட்டார்கள்? அவர்களுடைய அழுக்குச் சிந்தனை சமூகத்தில் பரவி, சமூகமே தர்மத்தை விட்டும் பக்தியை விட்டும் ஒழுக்கத்தை விட்டும் சீர்கெட்டு போனதுதான் மிச்சம். நாத்திக கொள்கையால் சமூகமே சுயநலம் மிக்கதாகவும், பேராசை மிக்கதாகவும், பணம் என்பதை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டதாகவும் ஆகி இருக்கின்றது. வன்முறை, கொலை, கொள்ளை, காமம் மிகுந்ததாக தமிழினம், தமிழர் சமுதாயம் கடந்த நூறு வருடங்களில் கீழ்மை அடைந்திருக்கின்றது என்பதுதானே நாம் கண்கூடாக காணுகின்ற உண்மை. ஸம்ஸ்கிருத வெறுப்பு, ஹிந்தி வெறுப்பு என்று ஆங்கிலத்தை தூக்கிப்பிடித்து இன்று தமிழையும் தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிட்டார்கள்.
இதை இன்றைய இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு என்று சமூகத்தில் விஷம் பரப்பப்படுகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கப்படுகின்றது. அதை வைத்து பண அரசியல், சுயநல அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. மற்ற மதங்களின் வளர்ச்சிக்கு மறைமுகமாக பகுத்தறிவுவாதிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கின்ற மதமாற்றம் செய்யாத, பிற மதத்தை வெறுக்காத, அழிக்க நினைக்காத ஹிந்து மதம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய், உயர்ந்த சிந்தனை எளிய வாழ்க்கை போன்ற ஹிந்து மத சித்தாந்தங்கள் உடைக்கப்படுகின்றன. பன்னாட்டு வியாபாரிகளால் அவர்கள் வியாபார நோக்கங்களுக்காக போகத்தை முக்கியமாகக் கொண்ட மதங்கள், சிந்தனைகள் வளர்க்கப்படுகின்றன.
நன்கு சிந்திக்கும் ஆற்றலுள்ள இளம் வயதினர் உண்மையை - வாழ்க்கையின் பொருளைத் - தேடுதல் இயல்பு. இவர்கள் இந்த பகுத்தறிவுக் குருடர்களின் - மூடர்களின் - குதர்க்கவாதிகளின் - வலையில் விழுந்து விடாமல், நமது முன்னோர்கள் காட்டிய தர்மவழியில் உண்மையைத் தேடி, உண்மையான குருமார்களை அணுகி ஞான மரபை, யோக மரபைக் கேட்டு, கற்று, வாழ்வின் உண்மை பொருளை அறிந்து நம் முன்னோர்கள் வாழ்ந்த தெய்வீக வாழ்க்கையை வாழ்வதே அறிவுடைமை ஆகும்.
Comments