Kaivalya Navanitham கைவல்ய நவநீதம் பாயிரம் பாடலும் விளக்கமும்




தாண்டவராய சுவாமிகள் அருளிய
கைவல்ய நவநீதம்

ஶ்ரீலஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் உரையைத் தழுவிய பதப்பொருளும் பாடல் விளக்கக் குறிப்பும்


நூன்முகம்

முதல்நூல் இருக்கவும் வழிநூல், சார்பு நூல் செய்ய தொடங்குபவர் முதற்கண் மங்கலம் செய்யவேண்டுவது அவசியமே; ஏனென்றால் நூல் முடிவிற்கு இடையூறுகளாகவுள்ள எந்தவிதமான தடைகளும் மங்கலத்தால் அழிவுறுதலால். தடை என்பது பாவம். பாவத்தினால் நற்காரியங்கள் முடிவுபெறாது. ஆகவே, அப்பாவங்களைப் போக்கவல்ல மங்கலம் வேண்டும். பாவமில்லாதவராக இருக்கின்றவரோ என்றால், அவராலும் மங்கலம் செய்யத்தக்கது. இல்லையென்றால் அந்நூலைப் பார்ப்பவர்க்கெல்லாம், "இந்நூலாசிரியர் நாஸ்திகரோ" என்ற மயக்கம் உண்டாகி, அந்நூலின்கண் ஊக்கம் செல்லாது என்க.

(1)அப்படிச் செய்யும் மங்கலம் வஸ்துநிர்தேசரூப மங்கலம் என்றும், நமஸ்காரரூப மங்கலம் என்றும், ஆசீர்வாதரூப மங்கலம் என்றும் மூவகைத்தாகும். சகுணம் அல்லது நிர்குணமாகவுள்ள பரமாத்மாவே வஸ்துவாம் (மெய்ப்பொருளாம்). அந்த வஸ்துவின் புகழ்ச்சி வஸ்துநிர்தேச மங்கலம் எனப்படும். அப்படியின்றி அவ்வஸ்துவுக்கு வணக்கம் கூறுவது நமஸ்காரரூப மங்கலமாம். தனது, அல்லது மாணவரது விரும்பிய பொருளைப் பிரார்த்திப்பது ஆசீர்வாத மங்கலம்.

பாயிரம்


பாடல்: 1

இந்நூலாசிரியர் இங்கே சிஸ்டாசாரத்தால் பெற்ற (பெரியோர்களைப் பின்பற்றி வந்த) இஷ்டதெய்வ நமஸ்காரரூப மங்கலத்தைச் செய்கிறார்.

பொன்னில மாத ராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந், 
தன்னிலந் தரத்திற் சீவ சாட்சிமாத் திரமாய் நிற்கும், 
எந்நிலங் களினு மிக்க வெழுநில மவற்றின் மேலாம், 
நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி!

பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் உள்ளம், தன்னில் அந்தரத்தின் ஜீவ சாக்ஷி மாத்திரமாய் நிற்கும், எந்நிலங்களிலும் மிக்க எழு நிலம் அவற்றின் மேலாம்,
நன்னிலம் மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!

(1) இதன் பதப்பொருள்:
பொன் நிலம் மாதர் ஆசை பொருந்தினர் பொருந்தார் = பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை இயைந்த அஞ்ஞானிகளும் இயையாத ஞானிகளுமாகிய இவர்களது - உள்ளம் தன்னில் = அந்தக்கரணங்களில் - அந்தரத்தில் =(தாரதம்மியமான மட்குடம் பொற்குடங்களில் பெய்யும் பண்டங்கட்குக் தாரதம்மியமற அவகாசங்கொடுப்பது மாத்திரமாய் நிற்கும்) ஆகாயத்தைப் போல -
சீவ சாட்சி மாத்திரம் நிற்கும் = சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கின்ற -
ஏகநாயகன் = அகண்ட ஏகரசனான சிவபெருமானுடைய -
பாதங்கள் போற்றி = சீர் பாதங்கட்கு நமஸ்காரம் -  என்றவாறு.

பாட விளக்கக் குறிப்பு:-
உடல் + உள்ளம்(மனம்) + ஜீவன் + ஸாக்ஷி. 

ஆசை பொருந்தினர் + பொருந்தார் = அனைத்து மனிதர்களும்.

ஆசை பொருந்தார் = ஞானிகள் =
ஸாக்ஷியாய் இருக்கும் ஆத்மாவை - கடவுளை - அறிந்தவர்கள்.

ஏன் பிரிக்கவேண்டும்?
ஆசை பொருந்தாதவர் ஸாக்ஷியை - ஆத்மாவை - ஏகநாயகனை - இறைவனை - அறிந்தவர்.
ஆசை பொருந்தியவர் அறியாதவர், தான் ஆத்மாவாகவே இருந்தும்!

ஏன் அறியவில்லை ? - ஆசை பொருந்தியதால் -  மறைத்திருப்பதால்.

அந்தரத்தில் = ஆகாசம் போல.
சீவ சாக்ஷி = இறைவன்.

கடவுள் எங்கோ இருப்பவர் அல்ல, எங்கும் இருப்பவர் ஆகாசம் போல; ஆகவே, கடவுள் அடையப்பட வேண்டியவர் அல்ல, அறியப்பட வேண்டியவர்.

என்னுள் இருப்பவரை நானே அறிந்து கொள்ள இயலாதா? குரு எதற்கு?
இயலாது. இயலும் என்றால் இத்தனை நாள் ஏன் அறியவில்லை?

ஆசை நீங்கினாலே அறியப்பட்டுவிடாதா ?
இல்லை, குரு உபதேசத்தினாலே அறியப்படும்.
அறிவு கல்வி கேள்வியினாலே வருவது. ஆசை நீங்கி இருத்தல் அதற்கு உதவியாக இருக்கும்.

எதைத் தேடுகிறோம்? எங்கே தேட வேண்டும்? எப்படித் தேட வேண்டும்? என்பதை அறிந்து தேடவேண்டும்.
இதை அறிவிப்பவர் குருவே!

தேடுபவன், தேடப்படும் பொருள், தேடும் இடம் மூன்றும் 'தான்'தான். (தன்னிடத்தில் தான்). குரு மட்டுமே புறத்தில்.

குருவும் ஆத்மாவே!
தேடப்படும் பொருளான ஆத்மாவே - ஈச்வரனே - குருவாக வந்து தன்னைத் தேடு என்று அவித்யையோடு கூடிய தன்னிடத்தில் உபதேசிக்கிறது.
(இதுதான் அத்வைத சித்தாந்தம்)

" ஈஸ்வரோகுருராத்மேதி மூர்த்திபேத விபாகினே |
வ்யோமவத் வ்யாப்தாய தக்ஷிணாமூர்த்தயே நம: || "

ஆகவே இதை...
அறிந்தபின் தேடவேண்டுவதில்லை,
அறிவே போதுமானது.

அறிந்தபின் தியானம் (நிதித்யாஸனம்) எதற்கு?
மீண்டும் தொலைந்து விடாமல் ஞானத்தைப் பாதுகாத்துக் கொள்ள.

எழு நிலம் = ஏழு நிலங்கள் மோக்ஷம் தரும் பூமிகள் ஏழு - "அயோத்தி மதுரா துவாரகா காசி காஞ்சி மாயா அவந்திகா".

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।
पुरी द्वारावती चैव सप्तैता मोक्षदायिकाः॥

நன்னிலம் = துரியம்
ஏழு ஞான பூமிகள் = ஸ்வேச்சா, விசாரணை, தநுமானசி, ஸத்வாபத்தி, அஸம்சக்தி, பதார்த்தாபாவனை, துரியம்

ஏக நாயகன் = ஒன்றாய் இருக்கும் நிர்குண பிரம்மம் அல்லது ஸகுண ஈஸ்வரன் அல்லது குரு.


பாடல் 2: ஆன்மசொரூப நமஸ்காரரூப மங்கலம்

ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், 
ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், 
பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், 
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே!

ஈன்று அளித்து அழிக்கும் செய்கைக்கு ஏதுவாம் அயனாய் மாலாய், ஆன்ற ஈசனுமாய்த் தானே அநந்தமூர்த்தியுமாய் நிற்கும், பூன்றமுத் தனுமாய் இன்பப்புணரி ஆதவனாய் நாளும், தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின்றேனே!

பதப்பொருள்:
தானே--
ஈன்று = உலகத்தைச் படைத்து-
அளித்து = காத்து --
அழிக்கும் = சம்மரிக்கும்--
செய்கைக்கு =
(இம்மூன்று) தொழிற்கும் -
ஏது ஆம் = காரணமாகும் -
அயன் ஆய் = பிரமனாகியும் - மால் ஆய் = நாராயணனாகியும் -
ஆன்றஈசனும் ஆய் = மாட்சிமை பொருந்திய உருத்திரனாகியும் - அநந்தமூர்த்தியும் ஆய் = (இன்னும்) அளவிறந்த தேவ, மனித, விலங்கு ஆகிய சேதன (ஜீவ)ப் பிரபஞ்சங்களாயும், மலை, நதியாகிய அசேதன (ஜட)ப் பிரபஞ்சங்களாயும் - பூன்ற முத்தனும் ஆய் = (அனைத்தினும்) பூரணமாகும் நித்திய முத்தனான ஈசனாயும்- நிற்கும் = (நிறைந்து) நிற்கின்ற -
இன்பப்புணரி ஆதவன் ஆய் = ஆனந்த சமுத்திரமாயும் - (பர)மாதித்தனாயும் -
நாளும் தோன்றிய = சதாகாலமும் விளங்குவதாகிய -
விமலபோத சொரூபத்தை = நிர்மலமான ஞான சொரூபத்தைப் -
பணிகின்றேன் = வணங்குகின்றேன்.

பாட விளக்கக் குறிப்பு:-

"தானே, ஈன்று அளித்து அழிக்கும் செய்கைக்கு கேதுவாம் அயனாய் மாலாய் ஆன்ற ஈசனுமாய் அநந்த மூர்த்தியுமாய்ப் பூன்ற முத்தனுமாய் இன்பப்புணரி, ஆதவனாய் நிற்கும் விமலபோத சொரூபத்தைப் பணிகின்றேன்"
எனக் கூட்டிப் படிக்க.

பூன்ற = பூர்ணம்
முத்தன் = நித்ய முக்தம்
இன்பப்புணரி = ஆநந்தக்கடல்
ஆதவன் = ஸ்வயம்ப்ரகாசம் விமலபோதம் = சுத்தசைதந்யம்.

தன்னுடைய மாயா சக்தியினால் பிரஹ்மாதி தெய்வங்களாகவும், இதர தேவர்களாலும்,  மனிதர்களாகவும், பிற உயிர்களாகவும், ஜட உலகங்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற, (அப்படி விளங்கிக் கொண்டிருந்தாலும் அவற்றின் காலதேசத்தால் வரையறுக்கப்படாத) பூர்ணமான, (நாம ரூபத்தில் இருந்தாலும் அதனால் பந்தப்படாமல்) எப்பொழுதும் முக்தனாய் இருக்கக்கூடிய, (உலகியல் இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாத) ஆனந்த கடலாகவும், (சூரியன் முதலான ஒளிகளுக்கும் ஒளியைக் கொடுக்கக்கூடிய) சுயம்பிரகாச ஜோதியாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற, (அறியாமை மலமற்ற) தூய்மையான சைதந்ய சொரூபத்தை மனதால் தியானிக்கின்றேன்.

பாடல் 3:
எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால், 
கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து, 
சுவரிடை வெளிபோல் நான் என் சொரூபசு பாவம் ஆனேன், 
அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.

பதப்பொருள்: 
எவருடை அருளால் =(தாயினுஞ்சிறந்த) யாருடைய கருணையினால்-
சுவரிடை வெளிபோல் = சுவற்றினால் மறைக்கப்பட்டுள்ள  ஆகாயத்தை போல (அச்சுவறை விலக்கினால் அதுவே  மகாகாயமென்று அறிவதுபோல)-
யானே = (அசங்க சிதாத்மாவான என்னை மறைத்துள்ள பஞ்சகோசங்களையும், அவை என்னாலறியப்பட்டுச் சடமாவிருத்தலால், இது நானல்ல, இது நானல்ல என்று நீக்கி, மேலே அவைகளின் அபாவரூபமான சூனியத்தையும் ஒழித்து, அவைகட்குச் சாட்சியான அசங்கசிதாத்மாவான நானே - 
எங்கும் ஆம் பிரமம் = அரி, அயன், சிவன், அந்தகன், இந்திரனாதிய இடந்தோறும் (முத்தினுள் நூல்போல தொடர்ந்திருந்து சாட்சியாய்) நிறைந்திருப்பதாகிய பிரமமாம் - 
என்பால் = (இப்படிப் பரப்பிரமமான) என்னிடத்தில் - கவருடைப்புவனம் எல்லாம் = பிரிந்து கூறுபாடுடைய பிரபஞ்சமெல்லாமும் -- 
கற்பிதம் = (கானல் நீர்போல கற்பிதமாதலின்) மித்தையாம்--
என்று அறிந்து = (ஸந்தேஹமில்லாமல் ) ஸாக்ஷாத்கரித்து --
சுபாவம் = இயல்பாக -
யான் என் சொரூபம்
ஆனேன் = 
நான் எனது (உண்மை) வடிவினன் ஆனேனோ - அவருடைப் பத்மபாதம் = அக்கருணாமூர்த்தியினுடைய 
தாமரை மலர் போன்ற திருவடியை - அனுதினம் பணிகின்றேன் = நாள்தோறும் வணங்குகின்றேன்.

எவருடைய அருளால்  யா(நா)னே ப்ரஹ்மம் ஆனேன் எனக்கூட்டுக.

இப்பாடலில் நான் ப்ரஹ்ம் ஆனேன் என்றது "அஹம் ப்ரஹ்மாஸ்மி"
- யஜூர்வேத மகாவாக்கியம்.

முதல் பாடலில் சாட்சி ஏக நாயகன் என்றது "ப்ரஜ்ஞாநம் ப்ரஹ்ம" - ரிக்வேத மஹாவாக்யம்.

இரண்டாம் பாடலில் 
"இதம் ஸர்வம் ப்ரஹ்ம" - "அயம் ஆத்மா ப்ரஹ்ம" - அதர்வணவேத மஹாவாக்யம்.

நான் இப்பொழுது குறையுடைய, அடிமையான, துக்கக்கடலான அறியாமை இருள்‌நிறைந்த ஸம்ஸாரியான ஜீவன்.

எங்குமாம் = எல்லாவற்றுக்கும் ஆத்மாவான

ப்ரஹ்மம் = பூன்ற முத்தனுமாய் இன்பப்புணரி, ஆதவனாய் நிற்கும் விமலபோத சொரூபம்.

கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து =
பலவாகப் பிரிந்திருக்கின்ற அனைத்து உலகங்களும் மாயையினால் பிரம்மத்தின் மேல் கற்பிக்கப்பட்டவை (கனவுலகத்தைப் போல்)  என்று அறிந்து அவற்றை விடுத்து...

சுவரிடை வெளிபோல் = உள்ளும் புறமும் நிறைந்திருக்கின்ற ஆகாயம் போல
ப்ரஹ்மமே உள்ளும் புறமும் உள்ளதென்று,
உடல் மனம் நான் எனும் வரையறை விடுத்து....

நான் என் சொரூபசுபாவம் ஆனேன் =
பிரம்மமே என் சொரூபம் என்று அதுவாகவே இருக்கிறேன்.

எவருடைய அருளால் நான் இப்படி ப்ரஹ்மாக ஆனேனோ, அவருடைய தாமரைபோன்ற திருத்தாள்களை நாள்தோறும் வணங்குகின்றேன்.


பாடல் 4:
என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்,
என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி, என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய, என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே.

என்னுடை மனது = எனது (ஸம்சய வடிவமான) மனதும் - புத்தி = (நிச்சய வடிவமான) புத்தியும் - இந்தியம் = (ஞான, கரும) இந்திரியங்களும் - சரீரம் = (பஞ்ச பிராணன்களோடு கூடிய இந்த லிங்கதேகம் இருப்பதற்கு இடமான) தூல உடலும் காரண சரீரமும் -
என்னுடை அறிவினால் = (தம்மால் போதித்த) ஆத்மஞானத்தினால் - இரவிமுன் இமமே ஆக்கி = சூரியன் முன்னே பனியைப் போல(இல்லாதது) ஆக்கி - நீயும் (த்வம்பத லட்சியார்த்தமென்னும் கூடஸ்தனாகிய) = நீயும் - நானும் = (தற்பத லக்ஷ்யார்த்தமென்னும் நானும் -
ஏகம் என்று = (கடாகாயம் மஹாகாயம் போல) ஒன்றே என்று -
என்னுடை ஐக்கியம் செய்ய = என்னுடைய ஐக்கியத்தை எனக்கு உபதேசித்தருள - என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை = எனக்கு குருமூர்த்தியாக எழுந்தருளிய ஈச்வரனை -
இறைஞ்சினேன் = வணங்குகினேன்.


பாட விளக்கக் குறிப்பு:
இரவிமுன் இமமே ஆக்கி = மாயையினால் கற்பிக்கப்பட்டவை, அறிவினால் நீங்குபவை கானல்நீர் போல. இதனால்
அனர்த்தநிவ்ர்த்தி. துன்பத்திலிருந்து விடுதலை.

ஐக்கியம் செய்ய = ஆநந்தப் ப்ராப்தி. பேரின்பத்தின் அடைவு.

நான் = பிரம்மமே!
ஐக்கியம் தனக்கு ஏற்கனவே உளதாயிருத்தலான்,
"என்னுடை ஐக்கியம்"

சாமவேத மஹா வாக்கியம்
தத்துவமஸி உபதேசிக்கப்பட்டது.

பாடல்: 5
(குருவை வணங்கி அவரருளால் நூல் செயய் புகுந்து, நூலின் அதிகாரி, சம்பந்தம், விஷயம், பயனென்னும் அநுபந்த சதுஷ்டயம் இல்லாமல் விவேகிக்கு, நூல் கேட்பதற்கு ஊக்கம் பிறவாதாகலின், அவற்றை இரண்டு செய்யுளால் முன்னே கூறத்தொடங்கி, இதில் அதிகாரியையும் விடயத்தையும் கூறுகின்றார்.)

அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வான்போல், சந்தத மொளிரு ஞான சற்குரு பாதம் போற்றிப், பந்தமும் வீடுங் காட்டப் பரந்த நூல் பார்க்க மாட்டா, மந்தரும் உணரு மாறு வத்து தத் துவஞ்சொல் வேனே (5)

பதப்பொருள்:
ஆதியும் நடுவும் இன்றி = (தனக்குத்) தோற்றமும் இடையுமில்லாமல் -
அந்தமும் இன்றி= முடிவுமில்லாமல் வான்போல் - ஆகாயம்போலச் (சூட்சமமாய் வியாபகமாய் அடக்கமாய்)-
சந்ததம் ஒளிரும் = சர்வகாலமும் விளங்கிக் கொண்டிருக்கும்  -
ஞான சற்குரு பாதம் போற்றி = ஞானமயமான குருவினுடைய சீர்பாதங்களைத் துதி செய்து ( குருவின் திருவருளால்) - பந்தமும் வீடும் காட்ட = பந்த லட்சணம் இன்னதென்றும், மோட்சலட்சணம் இன்னதென்றும்
(அதிகாரிக்கு) அறிவித்தற் பொருட்டு -
பரந்த நூல் = (பாதராயணர் முதலிய பூர்வாசாரியால் அருளிச்செய்யப்பட்டுள்ள சூத்திரம், பாஷ்யம், வார்த்திக முதலிய) வேதாந்த நூல்கள் -
பார்க்க மாட்டா மந்தரும் = விசாரித்தறிய சாமர்த்தியம் இன்றிய மந்த புத்தியுடைய அதிகாரிகளும் -
உணரும் ஆறு = (அப்பந்த மோட்ச சொருபங்களை எளிதில்) அறியும்படி -    வஸ்துதத்துவம் = வஸ்துவின் உண்மையை  -
சொல்வேனே = (இந்நூலின்கண்) சொல்லுகிறேன்.

அநுபந்த சதுஷ்டயம் = நூலை கட்டியுள்ள (மையமாகக் கொண்டுள்ள) நான்கு விஷயங்கள்: அதிகாரி, விஷயம், பிரயோஜனம், சம்பந்தம்.
அதிகாரி = நூலை படிக்கத் தகுதி உடையவன்.
விஷயம் = நூலின் செய்தி.
பிரயோஜனம் = பயன். நூலைப் படிப்பதால் படிப்பவருக்கு உண்டாகும் பயன்.
சம்பந்தம் = விஷயத்திற்கும் பயனுக்கு உடைய சம்பந்தம். நூலுக்கும் விஷயத்திற்கும் உடைய சம்பந்தம். அதிகாரிக்கும் விஷயத்திற்கும் உடைய சம்பந்தம். அதிகாரிக்கும் பலனுக்கமுள்ள சம்பந்தம்...

மந்தர் = இந்நூலின் அதிகாரி. வஸ்து தத்துவம் = இந்நூலின் விஷயம்;
வஸ்து - ஜீவபிரம்மங்கள், தத்துவம் = அவைகளின் ஏகத்துவம்.

மனதில் உள்ள மூன்று குறைபாடுகள்
மலம் விக்ஷேபம் ஆவரணம். மல நீக்கம் நிஷ்காம கர்மத்தால்.
விக்ஷேபநீக்கம் நிஷ்காம உபாசனையால்.
ஆவரணநீக்கம் ஆத்ம ஞானத்தால்.

கர்ம யோகத்தினாலும்  இறைவழிபாட்டாலும் மனத்தூய்மையும் மனவொருமுகப்பாடும் அடைந்திருப்பவன் இந்நூலைப் படித்தால் துக்க நிவிர்த்தி சுகப்ராப்தி வடிவமான கைவல்யத்தை அடையலாம்.

பாடல் 6:
படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,
குடங்கலில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,
கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை,
அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.

பதப்பொருள்:
படர்ந்த வேதாந்தம் என்னும் = (பலவாய்) விரித்துள்ள உபநிஷத்துக்கள் என்று கூறும்,
பாற்கடல் மொண்டு = பாற்கடலில் முகந்து,
முன்னூல் குடங்களில் (சூத்திரம், பாஷ்யம், வார்த்திக முதலிய) புராதன கிரந்தங்கள் என்னுங் குடங்களிலே, நிறைத்து வைத்தார் = நிரப்பி வைத்தார்கள்,
குரவர்கள் எல்லாம் = (பாதராயனர் முதலிய) பூருவாசாரியர்கள் எல்லாம் காய்ச்சி (உபநிஷத் வாக்கியங்களென்னும் அப் பால்களை சற்குரு சந்நிதி தீயில்) காய்ச்சி,
கடைந்து = எனது அநுபூதி மத்தால் கடைந்து,
எடுத்து அளித்தேன் = (திரட்டி) எடுத்துக் கொடுத்தேன்,
இந்தக் கைவல்ய நவநீதத்தை = இக் கைவல்ய நவநீதமென்னும் (ஞான) நூலினை,
அடைந்தவர் = இதனை அநுபூதி அளவில் பெற்றவர், விடயமண் தின்று = (சாரமற்ற) விஷயமாகிய மண்ணையுண்டு,
அலைவரோ = (அவ்விஷய வாசனையால் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புக்களை அடைந்து) வருந்துவரோ (வருந்தார்), என்னை? -  பசியிலாரே = திருப்தராகலின்.

"எடுத்து அளித்தேன்" என்றது சம்பந்தம்.
விஷயமண் தின்று அலைவரோ பசியிலாரே!" என்றது அனர்த்த நிவர்த்தி ஆனந்த பிராப்தி ரூபமான இந்நூலின் பயன்.

பாடல் 07:
முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட,
கர்த்தனை வணங்கிச் சொல்லும் கைவல்ய நவநீ தத்தைத்,
தத்துவ விளக்க மென்றும் சந்தேகந் தெளித லென்றும்,
வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.

பதப்பொருள்:
முத்தனை = (சம்சார பந்தம்) விடுபட்டவனை,
வேங்கடேச முகுந்தனை = வேங்கட மென்னும் மலைக்கிறைவனான திருமாலை,
எனையாட்கொண்ட கர்த்தனை = என்னை அடிமை கொண்ட இறைவனை,
வணங்கிச்சொல்லும் = வணங்கி, சொல்ல எடுத்துக் கொண்ட,
கைவல்ய நவநீதத்தைத் = கைவல்ய நவநீதம் என்னும் பெயரையுடைய இந்த ஞான நூலினை,
தத்துவ விளக்கம் என்றும் சந்தேகம் தெளிதல் என்றும், இருபடலமாக வகுத்து வைத்து = இரண்டு படலமாகப் பிரித்து வைத்து,
உரை செய்கிறேன்  = சொல்கின்றேன்.

முகுந்தன் = முக்தியையும் புத்தியையும் கொடுப்பவன்.

வேங்கடேச முகுந்தன் - இறைவன்
நாராயணதேசிகர் - குரு
சிலேடையாக.

பாயிரம் முற்றிற்று.


Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101