Viveka Chintamani - விவேக சிந்தாமணி - பாகம் 2
ௐ
விவேக சிந்தாமணி - பாகம் 2
உரை: ஸ்வாமீ பூர்ணாநந்த ஸரஸ்வதி
01.எதற்கும் பயன்படாதவன்
கல்லாலயமாம் தேவருமாம், கழுதை கசடர் பொதி சுமக்கும்,
கடாவோ உழுது பயிரிடற்காம், காட்டம் பன்றிக்கிரையாகும், புல்லேறு ஈசர் வாகனமாம் பொதியுஞ்சுமக்கும், பிணமதுவும் பூசிமுடித்து மறையோர்க்கும் பொருளையீந்து புகழெய்தும்,
மல்லார் குட்டிச்சுவர் தானும் மறைவா(ம்) மாடுதேய்த்திடற்காம், மதியாத் துடைப்பம் தினந்தோறு(ம்) மாடகூடங்களை விளக்கும், அல்லார் உலுத்தன் எதற்குதவும்? அவனுக்கிணை இங்கெதுவுமிலை, அவனைக்குறித்துக் கூறுமிடத்தவனுக்கவனே சரிதானே.
கல்லானது ஆலயம் கட்டப் பயன்படும், தெய்வச் சிலைகளையும் செய்யலாம்; கழுதை பொதி சுமக்கப் பயன்படும்; எருமைக்கடா உழுது பயிரிடப் பயன்படும்; மலமும் பன்றிக்கு உணவாகும். எருது ஈஸ்வரனுக்கு வாகனமாகும், பொதி சுமக்கப் பயன்படும்; செத்த பிணமும்கூட சந்தனம் முதலியவை பூசி மலர்சூடி அந்தணருக்கு பொருளை தன்பொருட்டு தானமாகக் கொடுத்து (கொடுக்கச் செய்து) புகழ் எய்தும்; வலிமையுடைய குட்டிச் சுவரும் மறைவிடமாகும், மாடு முதுகு தேய்த்துத் தினவு தீர்க்க உதவியாகும்; உயர்வாக மதிக்கப்படாத துடைப்பமும் நாள்தோறும் வீடுவாசல் கூட்டப் பயன்படும்; ஆனால் மனதில் இருள் பொருந்திய லோபகுணமுடையவன் (உலுத்தன், லோபி, கருமி, கஞ்சன் = பொருளைத் தானும் அனுபவிக்காமல் மற்றவருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்திருப்பவன்) எந்தக் காரியத்திற்கு உபயோகமாவான்? (எதற்கும் உபயோகப் படமாட்டான்.) அந்தக் கஞ்சனுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் எதுவும் இணை இல்லை. அவனுக்கு அவனே சமானமாவான்.
02. பெற்றோருக்குப் பகை
மாலினால் இருவரு மருவி மாசிலாப், பாலனைப் பயந்தபின் படிப்பி யாது(உ)யர்,
தாலமேற் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர், காலனை வளர்க்கின்ற காட்சி போலுமால்.
தாய்தந்தையர் இருவரும் விரும்பி சேர்ந்து நல்ல குழந்தையை பெற்றபின், அவனைப் பள்ளிக்கு அனுப்பி படிக்கச் செய்யாமல், மண்ணில் (சிறந்த உணவு, ஆடை, ஆபரணங்களைக் மட்டும் கொடுத்துச்) செல்வச் செழிப்பில் வளர்ப்பது, தங்களுக்கு ஓர் எமனை அவர்களே வளர்த்துக் கொள்வது போலாகும்.
(குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைக்கவேண்டும்..)
03. புத்திரருக்குப் பகை
தீதுநன் றறிகிலாச் சேய ரென்செய்வார், கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடா(து), ஏதங்க ளவர்முன் செய்(து) இழிவைக் கற்பிக்கும், தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே.
தீயது எது என்றும் நல்லது எது என்றும் அறியாத குழந்தைகள் என்ன செய்வார்? குற்றம் நீங்குமாறு அவரை நன்னெறியில் வளர்க்காமல், அவர் முன்னாலேயே தாங்கள் குற்றங்கள் பல செய்து தவறான விஷயங்களைக் கற்பிக்கும் பெற்றோர்களே அவர்களுக்கு எதிரிகள்.
04. ஸத்புத்திரர் கடமை
மைந்த னைப்பெறுகின் றது மாசிலாப், புந்தி யன்பொடு போற்றி வளர்ப்பதும், தந்தை மாண்டுழித் தன்முறைக் கேற்பன, அந்த மாங்கட னாற்றுதற் கேயன்றோ.
தந்தையானவன் புதல்வனைப் பெறுவதும் தூய்மையான அறிவோடும் அன்போடும் பேணி வளர்ப்பதும் (எதற்காக என்றால்) தந்தை இறந்த பிறகு தன்குலமுறைப்படி இறுதிக் (பித்ரு) கடன் முதலியவற்றைச் செய்வதற்கே ஆகும்.
( தந்தை புத் என்ற நரகத்திற்குச் செல்லாமல் இறுதிக்கடன் செய்து காப்பாற்றுபவனே புத்திரன்)
(தந்தை மரணத்திற்கு பிறகும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று சிரத்தையுடன் காரியம் செய்கின்ற புத்திரர், அவர் வாழுகின்ற பொழுதும் நன்கு கவனித்துக் கொள்வர் என்பதில் ஐயமில்லை.)
05. உறவுகளே எதிரிகள்
கடன்படு பிதாவும், என்றுங் கற்பினில் தவறித் தீங்கிற்கு உடன்படும் அன்னை, தானு முயர்ந்திடு மழகு தானே
அடர்ந்திடும் பாரி, வித்தை யறிந்துகல் லாத பிள்ளை, தடங்கட லுலகுள் ளோர்க்குச் சார்ந்தசத் துருக்க ளன்றே.
பரந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில், கடன்பட்டிருக்கும் தந்தையும், ஒழுக்கம் தவறி குற்றநடத்தையுள்ள தாயும், மிகுந்த அழகுள்ள மனைவியும், கற்க வேண்டிய உயர்ந்த நூல்களை அறிந்து கல்லாத பிள்ளையும் அவர்களைச் சார்ந்த உறவுகளுக்கு எதிரிகளாவார்.
06. பயனற்றவை
மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபமும் நாடில்லான் செங்கோ னடாத்துவதும் - கூடுங்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டும் விருந்தில்லான் வீடும் விழல்.
உலகில் குடும்பம் நடத்துவதற்கு தேவையான செல்வம் இல்லாதவனுடைய இல்வாழ்க்கையும், விவேகமில்லாதவன் செய்யும் வியாபாரமும், நல்ல நாடு இல்லாதவன் அரசாட்சி நடத்துவதும், குரு இல்லாதவன் பயின்ற வித்தையும் நல்ல குணம் இல்லாத பெண்ணின் உறவும் தினசரி விருந்தினருக்கு (அதிதி) உணவளிக்காத இல்லமும் விழலைப்போல் பயனற்றவை.
( விழல் - ஒன்றுக்கும் உதவாத ஒரு வகைப்புல். "விழலுக்கு இறைத்த நீர் போல்" என்றொரு சொலவடை உண்டு.)
07: வெளியே சொல்லக்கூடாதன
மந்திரந் தன்னை பிறரவ மதித்தல் மகளிரைச் சேர்தல்வஞ் சனைதன், நந்தலி லாயுள் பிறந்தநாளில்லில் நண்ணிய குற்ற நீ ணிதியம், முந்திய கற்பின் மனைவிதன் குணங்கண் மொழிந்தவிவ் வொன்பது மாவி, சிந்துற வரினும் பிறரொடு மொழிதல் தீதென வுரைப்பரே தெளிந்தோர்.
1.குருவிடம் இருந்துதான் உபதேசமாகப் பெற்று மந்திரம், 2.பிறரால் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு, 3.மகளிரோடு கூடியது, 4.எதிரியை அழிக்க தான் செய்திருக்கும் திட்டம், 5.தன் முடிவு காலம், 6.தான்பிறந்த நட்சத்திரம், 7.தன் வீட்டிலுள்ள குறைகள், 8.தன் செல்வத்தின் அளவு, 9.கற்புடைய தன் மனைவியின் நற்குணங்கள் ஆகிய ஒன்பதையும் ஒருவன் உயிர் போகும் அளவிலான துன்பம் வந்தாலும் பிறரிடம் சொல்வது தீங்கானது என்பது அறிவுடையோர் கருத்து.
08. யாரை எப்போது புகழ வேண்டும் ?
நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரவே துதித்தல், ஆசானை யெவ்விடத்து மப்படியே - வாச, மனையாளைப் பஞ்சணையில் மைந்தர் தமை நெஞ்சில், வினையாளை வேலைமுடி வில்.
நண்பரை அவர் இல்லாத பொழுதும், குருவை எப்பொழுதும் (நேரிலும் அவர் இல்லாத பொழுதும்), மனைவியைப் பஞ்சணையிலும், புதல்வரை தனது மனதில் மட்டும், வேலையாளை வேலை முடிந்த பிறகும் புகழலாம்.
09. சொல்லத்தக்கன
தகுதிகொள் கடனக் கடன் றனைத் தீர்த்த தான்பொருள் கோடல்பின் பகர்தல்,
மகளிரைக் கொடுக்கல் தன்னுடை யொழுக்க மரபினில் புரிந்ததன் பாவம், புகலரு மயலோர் நற்குண மென்னப் புகன்றவிவ் வொன்பது மெவர்க்கும்,
இகலற மறையா துரைத்திட லொழுக்கத்
தியல்பென மொழிவர்நன் குணந்தோர்.
1.தன்னுடைய தகுதி, திறமை 2.தான் பிறரிடமிருந்து வாங்கும் கடன் 3. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துதல் (கடன் வாங்குதல், பிறகு தீர்த்தல் இரண்டையும் சாட்சியோடு செய்தல்) 4. வியாபாரத்திற்காக பொருளை வாங்குதல் 5. விற்றல் (தொழிலில் வெளிப்படைத்தன்மை) 6. பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தல் 7. தன்னுடைய ஒழுக்க நடத்தை 8. தான் செய்த தவறுகள் 9. பிறரின் நற்குணங்கள் ஆகிய
இந்த ஒன்பதையும் அறம் அறிந்தவர்கள் மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லுதல் - செய்தல் - ஒழுக்கம் என்று சொல்வார்கள்.
(இதனால் புகழ் உண்டாகும்)
10. தண்டனையால் பயன் தருவன
துர்ச்சனரும் பொன்னும் துடியும் துரகதமும், அச்சமற முன்னிற்கும் ஆயிழையும் - நச்சரவும், கண்டித்த எள்ளும் கரும்பும் இளநீரும் தண்டித்தார்க் கன்றோ சயம்.
தீயவர்கள், தங்கம், பறை வாத்தியம், குதிரை, அடங்கா மனைவி, பாம்பு, எள், கரும்பு, இளநீர் ஆகியவற்றை (அடித்தோ, நசுக்கியோ, வெட்டியோ) தண்டிப்பவர்க்கே - வருத்தினவர்க்கே - வெற்றி உண்டாகும்.
11. இவர்கள் தாயாவர்
தன்னை யளித்தாள், தமையன் மனை, குருவின் பன்னி, அரசன் பயிரேவி - தன் மனையைப் பெற்றாள், இவரையே பேசில் எவருக்கும், நற்றாய் என்றே நவில்.
மனமே, நன்கு ஆராய்ந்து சொல்லுமிடத்து, தன்னைப் பெற்றவள், மூத்தோன் (அண்ணன்) மனைவி, குருவின் மனைவி, அரசனின் மனைவி, தன் மனைவியின் தாயார் (மாமியார்) ஆகிய ஐவரையும் தாயென்று நினை.
12. பேயென விலக்கத்தக்கவர்
தன்னைப் புகழ்வானும் சாட்சிசொல்லி நிற்பானும், பொன்னை மிகத் தேடிப் புதைப்பானும் - ஒன்னலர் தம் நண்புத்தி கேட்பானும் நாணமில் லாதானும், பெண்புத்தி கேட்பானும் பேய்.
தன்னைத்தானே புகழ்ந்து (தற்பெருமை) பேசிக் கொள்பவனும், பொய் சாட்சி சொல்லி வாழ்பவனும், பணத்தைச் சேர்த்து (தான் அனுபவிக்காமலும், அறச்செயல்கள் செய்யாமலும்) பதுக்கிவைப்பவனும், தீயவர்களுடைய சொற்களைக் கேட்டு நடப்பவனும், வெட்கமில்லாமல் இழிவான செயல்களைச் செய்பவனும், மனைவி சொல்லைக்கேட்டு யோசிக்காமல் அப்படியே நடப்பவனும் பேய்க்கு ஒப்பாவான். (இழிதன்மை உடையவன், அஞ்சி விலக்கத்தக்கவன்).
13. மனையாளின் குணங்கள்
அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப், பொன்னின் அழகும் புவிப்பொறையும் வன்ன முறும்வேசி துயிலும் விறன் மந்திரி மதியும் பேசில் இவையுடையாள் பெண்.
ஆராய்ந்து கூறுமிடத்து தாயைப் போன்ற அன்பும், அடியார் போல் பணிவிடை செய்யும் பண்பும், மஹாலக்ஷ்மி போன்ற பரிசுத்தமான அழகும், பூமி போல் பொறுமையும், படுக்கையில் சுகமும், வெற்றிதரும் மந்திரியின் அறிவும் உடையவள் (உத்தமமான) மனைவி.
14. பெண்ணெனப் பிறந்தால்
அல்லலே பெண்ணெனப் பிறத்தலால் ஆங்கதின், அல்லலே யிளமையிற் சிறத்தல் ஆங்கதின்,
அல்லலே கட்டழ குடைமை யாங்கதின், அல்லலே இரவலர்ச் சார்பி னாகுதல்.
உலகில் பெண்ணெனப் பிறத்தலே துன்பமுடையதாம். அதைவிட இளம் பருவத்தில் துன்பம் மிகுதியாம். அதினும் கட்டழகுடன் இருந்தால் இன்னும் துன்பம் அதிகமாம். செல்வம் இல்லாத ஏழைக்கு மனைவியானால் அதைவிட மிகுந்த துன்பமாம்.
15. ஒளி தருபவை
மனைக்கு விளக்க மடவாள் மடவாள், தனக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய, காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கங்கு, ஓதிற் புகழ்சா லுணர்வு.
அற நூல்களை நன்கு ஆராய்ந்து பார்த்துச் சொல்லுமிடத்து, இல்லம் நற்குணமுள்ள பெண்ணால் (மனைவியால்) ஒளி பெறும். அப்பெண் (தாய்) நற்பண்புள்ள புதல்வரால் ஒளி பெறுவாள். பெற்றோர்க்கு மன மகிழ்வைத் தரும் அன்பிற்குரிய அப்புதல்வர் கல்வியால் ஒளி பெறுவர். அவர்களின் கல்வி புகழ்பெற்ற அறிவால் ஒளி பெறும் என்றறிக.
16. நாட்டிற்குக் கேட்டைத் தருவது
துற்சனன் தனக்கு மேலாம் துரைத்தனம் கொடுத்தால் என்றும், சற்பனை துரோகம் கேடு தரணியின் மிகவே செய்வான், மற்கடம் தனக்கு நீண்ட வாலிலே தேளும் கொட்ட, உற்றிடம் கொள்ளி ஈந்தால் ஊரெலாம் கொளுத்து மன்றே.
இயல்பாகவே பல சேட்டைகளைச் செய்யும் குரங்குக்கு வாலில் ஒரு தேள் கொட்ட, அதன் கையில் ஒரு கொள்ளிக்கட்டையையும் கொடுத்துவிட்டால், அது ஊரையெல்லாம் எரித்து அழித்து விடுவது போல, இயல்பாகவே பல கெட்ட குணங்கள் உடைய தீயவர்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால், அவன் சதி, துரோகம், கெடுதல் போன்றவற்றை உலகிற்கு மிகுதியாகச் செய்வான்.
( ஆகவே நல்லவனையே தலைவனாகத் தேர்ந்தெடு.)
17. அறிவுடையவர் செயல்கள்
மாதர்க் கிதங்கவி வாணர்க்குச் சால வணக்கங்குரு, நாதருக்கு நீதியோ டாசாரங் கல்வி நயந்தவர்க்குக்,
கோதற்ற வாசகம் பொய்க்குப் பொய் கோளுக்குக் கோளறிவி, லாதவர்க் கிரட்டிப் பறிவுடை யோர்செய்யு மாண்மைகளே.
மாதர்க்கு இதம், கவிவாணர்க்குச் சாலவணக்கம், குருநாதருக்கு நீதியோடு ஆசாரம், கல்வி நயந்தவர்க்கு
கோதற்ற வாசகம், பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், அறிவிலாதவர்க்கு இரட்டிப்பு, அறிவுடையோர் செய்யும் ஆண்மைகளே.
வீட்டில் உள்ள பெண்களுக்கு அவர்கள் விரும்புகின்ற நன்மைகளை செய்து கொடுப்பதும், கல்விமான்களை போற்றி வணங்குவதும், குருமார்களுக்கு அவர்கள் உபதேசித்த அறத்தினோடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்து காட்டுதலும், விரும்பிக் கற்கும் குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு குற்றமற்ற நல்ல அறங்களை உபதேசிப்பதும், பொய்யர்களையும், பழிசொல்பவர்களையும் அவர்கள் வழியிலேயே எதிர்ப்பதும், அறிவில்லாதவர்களிடம் அவர்களையும்விட மூடர்களை போல் நடந்து கொள்வதும், இவ்வுலகில் அறிவுடையவர் செயல்களாகும்.
18. ஓதுவித்தல் இல்லா நாட்கள்
அட்டமியில் ஓதினால் ஆசா னுக் காகாது, சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும் - கெட்டவுவா, வித்தைக்கு நாசமாம் வெய்ய பிரதமையில் பித்தரும் பேசார் பிழை.
அஷ்டமி நாளில் ( அமாவாஸை, பௌர்ணமிகளிலிருந்து எட்டாம் நாள்) குரு சிஷ்யனுக்கு பாடம் பயிற்றுவித்தால் குருவுக்கு கேடு உண்டாகும்; சதுர்தசி எனப்படும் பதினான்காம் நாளில் பயின்றால் சீடனுக்கு (மாணவனுக்கு)த் தீமையுண்டாகும்; அமாவாசை,பௌர்ணமி நாட்களில் பயின்றால் கல்வி பயனற்றுப் போகும். பிரதமையில் (முதல்நாள்) பயின்றால் தவறுண்டாகும். ஆதலால் பித்தரும் இந்நாட்களில் பாடம் பயிற்றுவிக்கமாட்டார்.
19. தந்தையர் ஐவர்
பிறப்பித்தோன் வித்தை தனைப் பேணிக் கொடுத்தோன், சிறப்பி னுபதேசஞ் செய்தோன் - அறப்பெரிய,
பஞ்சத்தி லன்னம் படைத்தோன் பயந்தீர்த்தோன், எஞ்சாப் பிதாக்களென வெண்.
பிறப்பு கொடுத்த தந்தை, கல்வி அறிவு கொடுத்த ஆசிரியர், மந்திர உபதேசம் செய்து ஞானத்தை கொடுத்த குரு, பெரும் பஞ்சத்தில் உணவு கொடுத்துக் காப்பாற்றியவர், பயத்தை போக்கி தைரியம் கொடுத்தவர், இவ்வைவரையும் தந்தை எனக் கருதுவாயாக.
20. அரிது அரிது
எழுதரிது முன்ன மெழுதியபின் னத்தை, பழுதறவா சிப்பரிது பண்பா - முழுதுமதைக், கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால், நிற்பரிது தானந் நிலை.
முதலில் ஒரு நூலை இயற்றுதல் அரியதாகும் (கடினமாகும்); பின்னர் அதை பலரும் வாசிப்பது அரியதாகும்; வாசிப்பவரும் விரும்பி முழுதும் அதை மனனம் செய்வது அரிதாகும்; அதனுடைய நல்ல பயனை சிந்தித்து உள்ளவாறு அறிந்து கொள்ளுதலும் அரியதாகும்; அறிந்து கொண்ட பிறகு அதன்படி வாழுதல் மிக அரியதாகும்.
21. கைத்தடியின் பயன்கள்
முனியதட்டு முட்டூக்கு முன்னீ ரளக்கும், கனியுதிர்க்கும் கவ்வுநாய் காக்கும் - தனிவழிக்குப், பத்திரம தாக்கும் பயந்தீர்க்கும் பாம்படிக்கும், கைத்தலத்தில் தண்டிருந்தக் கால்.
பயணத்தின்போது கையில் ஒரு தடி இருந்தால், எதிர்ப்படும் முனியதனை ( தீயசக்திகளை) அதட்டி விரட்டும் (விரட்ட உதவும்); முள் குறுக்கிட்டால் தூக்கி எறியும்; தண்ணீர் இருந்தால் அதன் ஆழம் காட்டும்; பழம் உதிர்த்துக் கொடுக்கும்; கவ்வ வருகின்ற நாயிடம் இருந்து காக்கும்; தனிமையில் போகையில் துணையாய் இருக்கும்; பயம் தீர்க்கும்; பாம்பு (எதிர்ப்பட்டால்) அடிக்க உதவும்.
22. குடையின் பயன்கள்
பகலோன் றெறுங்கிரணம் பாய்பறவை யெச்சம், மிகமே லுறாதகற்றும் விண்ணின் -- முகிலதனால் பெய்யுமழை யைத்தடுக்கும் பேரழகு மாமொருவன் கையிற் குடையிருந்தக் கால்.
ஒருவன் கையில் குடை இருந்தால் எரிக்கின்ற சூரியனில் வெப்ப ஒளியையும், பாய்ந்து செல்லுகின்ற பறவைகளின் எச்சத்தையும் மேலே விழாமல் தடுத்து நீக்கும்; வானிலிருந்து பெய்கின்ற மழையைத் தடுக்கும்; அழகாகவும் இருக்கும்.
23. காலணியின் பயன்
கல்லு முறுத்தாது காலின் முட் டையாது, எல்லை மார்த்தாண்டன் சூடேறாது - தொல்லைவரு, மாலை யிருளில் வழி நடக்கக் கூசாது, காலில் செருப்பிருந்தக் கால்.
காலில் செருப்பணிந்திருந்தால் கல்லும் குத்தாது, முள்ளும் தைக்காது, பகலில் சூரியனின் வெப்பமும் தாக்காது, மாலைப்பொழுதிலும் இரவிலும் பாதையில் நடக்கும்போது (என்னயிருக்குமோ என தரையில் கால் வைக்கக்) கூச்சமும் ஏற்படாது.
24. வறுமை கொடியது
தரித்திர மிக்க வனைப்பினை யொடுக்கிச் சரீரத்தை யுலர்தர வாட்டும்,
தரித்திர மளவாச் சோம்பலை யெழுப்பும் சாற்றரும் உலோபத்தை மிகுக்கும், தரித்திரந் தலைவன் தலைவியர்க் கிடையே தடுப்பருங் கலாம் பல விளைக்கும், தரித்திர மவமானம்பொய் பேராசை தருமிதிற் கொடியதொன் றிலையே!
வறுமையானது ஒருவனின் அழகைக்கெடுத்து உடலை மெலியச்செய்து துன்புறுத்தும், வறுமை அளவில்லா சோம்பலைக் உண்டுபண்ணும், சொல்லுதற்கரிய கருமித்தனத்தை வளர்க்கும், வறுமை கணவன் மனைவியிடையே நீக்கமுடியாத பூசலை உண்டாக்கும், வறுமை ஒருவனிடம் மானக்கேட்டையும், பொய்கூறுதலையும் பேராசை குணத்தையும் தோற்றுவிக்கும். (ஆகவே,) வறுமையைக் காட்டிலும் கொடுமையானது (இவ்வுலகில்) இல்லை.
25. வறுமைத்தீ
தரித்திரங் களிப்பாங் கடலுக்கோர் வடவை சாற்றுமெண் ணங்கள்வா ழிடமாம், தரித்திரம் பற்ப றுக்கமுந் தோன்றத் தக்கபே ராக மென்ப, தரித்திர நன்மை சாலொழுங் கென்னுந் தழைவனந் தனக்கழ லெனலாம், தரித்திரங் கொடிய வெவற்றினுங் கொடிதத் தகையதை யொழித்தனன் றாமே.
வறுமையானது ஒருவன் அடையும் இன்பம் என்னும் கடலை வற்றச் செய்யும் பிரளயகால அக்னி ஆகும். வறுமை பலவிதமான தீய எண்ணங்கள் வாழுமிடமாகும், வறுமை பலப்பல துன்பங்கள் உண்டாகத்தக்க இடமாகும், வறுமையை வளமையான ஒழுக்கம் என்ற காட்டை அழிக்கின்ற தீ எனவும் கருதலாம், வறுமை கொடிய எல்லாவற்றுள்ளும் மிகக்கொடியதாகும். இத்தகைய வறுமையை (விடா முயற்சியுடன் உழைத்து) அழித்துவிடுதல் நன்றாகும்.
26. வீணாகும் பிறவி
எய்தற் கரிய யாக்கைதனக் கெய்திற் றென்றால் அதுகொண்டு, செய்தற் கரிய அறங்கள் பல செய்து துயர்கூர் பிறவியினின்று, உய்தற் குரிமை பெறவொண்ணா(து) உழல்வோ னுடம்பு பொற்கலத்தில், பெய்தற் குரிய பால்கமரிற் பெய்த தொக்கு மென்பரால்.
அடைதற்கரிய மனித உடல் தனக்குக் கிடைத்திருக்கின்றது என்றால், அதுகொண்டு செய்தற்கரிய பல அறச்.செயல்களைச் செய்து, துன்பம் மிகுந்த பிறவியிலிருந்து விடுபடுவதற்கான புண்ணியத்தை பெற முயற்சியாமல், வெறுமனே உழன்று கொண்டிருப்பவனுடைய உடம்பு, தங்கக்கலனில் ஊற்றுவதற்குரிய பாலை, வறண்ட வெடிப்பு நிலத்தில் ஊற்றுவதற்கு ஒப்பாகும் என்பர் பெரியோர்.
(ஆகவே, அறம் செய விரும்பு)
27.செல்வத்தின் இழிநிலை
நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள், பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம்
தீக்காகுங் காண்.
நம்பன் சிவனடியாருக்கு பயன்படுத்தப்படாத செல்வம், வெறும் ஆடம்பரத்திற்கும், கெட்ட சக்திகளுக்கும், தவறான போகத்திற்கும், வீண்வம்புகளை ஏற்படுத்துவதற்கும், தீயவர்கள் பறித்துச் செல்வதற்கும், மது அருந்துவதற்கும், அரசனுக்கு வரி கொடுப்பதற்கும், துக்க காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கும், கள்வர்க்கு திருட்டுக் கொடுப்பதற்கும், நெருப்புக்கு இரையாவதற்குமே செலவாகும்.
( அறச்செயல்களுக்கு பயன்படுத்தப்படாத செல்வம், வீணே அழிந்து போகும் என்பது கருத்து.)
28. ஏற்றுக்கொள்ளத்தக்கன
செந்தமி ழடைகாய் நீறு சிவிகைபொன் னார மாடை, சுந்தர மான தோகை துலங்குமிவ் வகைக ளேழும், வந்தபோ திருகை யேந்தி வாங்கலக் குமியுஞ் சேர்வள், அந்தநாளாகா வென்றால் அவனைவிட் டகலு வாளே.
செந்தமிழ் நூல், வெற்றிலைப்பாக்கு, திருநீறு, பல்லக்கு(அரசுமரியாதை), தங்கநகை, ஆடை, கன்னிப்பெண் இவை ஏழும் தேடி வருகின்ற பொழுது இரு கரங்களாலும் தாங்கி மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்ளவேண்டும். இவற்றோடு திருமகளும் வந்து சேர்வாள். அப்படித் தேடிவரும்போது ஒருவன் 'வேண்டாம்' என்று விலக்கினால், மஹாலக்ஷ்மியும் அவனை விட்டு விலகிப்போய்விடுவாள்.
29. அறத்தின் வலிமை
கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன, செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ,
நல்லவை செய்வா னரசனிம் மூவர்,
பெய்யெனப் பெய்யு மழை.
தன்னை மணந்து கொண்டவன் உள்ளக்குறிப்பறிந்து நடப்பவள் மனைவி, தான் எடுத்துக்கொண்ட விரதங்களை முறைப்படி அனுஷ்டிப்பவன் தவமுடையவன், தீயவற்றை விலக்கி அறநெறிப்படி ஆட்சிசெய்பவன் செய்பவன் அரசன். இம்மூவரும் பெய்யென பெய்யும் மழை. (இம்மூவருடைய பெருமையும் ஆற்றலும் அளவிடற்கரியது. இம்மூவருக்கும் இயற்கையும் தேவதைகளும் கட்டுப்படுவர் என்பது பொருள்)
30. பேரின்பம் பெறும் வழி
கைப்பொருள் பெற்ற ஞான்றே கடவுளா லயத்திற் கீந்து, மெய்ப்படு புராண நூல்கள் விருப்பொடு கேட்டு வந்து, வைப்பென இரப்போர்க் கீந்து வருபவ ருளரேற் கூற்ற, மொய்ப்புயத் தண்டந் தப்பி முன்னவ னின்பத் தாழ்வார்.
கையில் செல்வம் சேர்ந்திருக்கும்பொழுது, கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்தும், மெய்ப்பொருளில் சேர்க்கும் புராண, தத்துவ நூல்களை விருப்பத்தோடு (பொருளைக் குருவுக்கு தட்சணையாக கொடுத்துக்) கேட்டும், (பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டகம் இரப்போர்க்கு ஈவதே என்றுணர்ந்து) இல்லையென்று கேட்பவர்க்கு தானமாகக் கொடுத்தும் வாழ்பவர் உளரேல், அவர் எமன் கையிலுள்ள தண்டத்தில் இருந்து தப்பி அனைத்திற்கும் முன்னவனாம் (ஆதிபகவன்) இறைவனின் அருளால் இன்பத்துள் ஆழ்வார்கள். (இறைஇன்பத்துள் மூழ்கித் திளைப்பார்கள்.)
31. வீணாக்காதே
பந்தவுடல் வீண்பாடு பட்டவுடல் சீசீதுர்க், கந்தவுட லொன்றுக்கா காதவுடல் - இந்தவுடல் வைத்துப்பார்த் தென்ன வலிய உயிர்மாய்த்துச், செத்துப்போ னாலுநல்ல தே.
உறவுகளால் பந்தப்பட்ட உடல், (நாயாய், பேயாய்) வீணேபாடுபட்ட உடல், சீசீ எனத் தூற்றுமாறு துர்நாற்றம் உடைய உடல், ஒரு நன்மைக்கும் பயன்படாத உடல், இப்படிப்பட்ட உடலை வைத்து வெறுமனே அழகு பார்ப்பதை விட வலிய உயிரைப் போக்கிக்கொள்வது மேலானது.
(பிறவியை வீணாக்காமல் செயற்கரிய செய்.)
32. இன்றே அறம் செய்
பசிமிகுந்த பின்னெல்லை விதைப்பதுபோல் வீட்டிடைத்தீப் பற்றிக் கொண்டு, நசியும்போ ததையவிக்க வாறுவெட்டல் போலும்போர் நடக்குங் காலை, விசிகநூல் கற்க முயல் வதுபோலும் கபமிஞ்சி விக்கிச் சிக்கி, இசிவுகொண்டு சாங்காலத் தெப்படிநீ யறம்புரிவா யிதயப் பேயே.
ஏ, மனமாகிய பேயே, ஒருவன், பசி மிகுந்த பிறகு உணவுக்காக நெல்லை விதைப்பது போலவும், வீட்டில் தீப்பிடித்து எரிகின்றபோது அதை தடுப்பதற்காக ஆறு குளம் வெட்டுவது போலவும், போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது (யுத்தத்தில் வெல்வதற்காக) யுத்தப்பயிற்சி நூலைக் கற்க முயல்வது போலவும், கபம் மிகுந்து உணவானது உள்ளே செல்லாமல் விக்கி மூச்சானது வெளியே வராமல் சிக்கி நரம்புகள் இழுத்துக்கொண்டு மரணமடையும் காலத்தில் எப்படி நீ அறத்தைச் செய்வாய்?
(ஆகவே, அன்றறிவாம் என்னாது இன்றே அறஞ்செய்.)
33. இப்பொழுதே அறம் செய்க
இன்றருணோ தயங்கண் டோம் உயர்ககன முகட்டின் மிசை இந்தப் பானு, சென்றடைய நாங்காண்ப தையமதைக் காண்கினுமேற் றிசையி ருக்கும், குன்றடையு மளவுநா முயிர்வாழ்வ தரிததன்முன் குறுகுங் கூற்றம், என்றச்சத் துடன்மனமே மறவாமல் அறவழியி லேகு வாயே.
மனமே, இன்று சூரிய உதயம் இறைவன் அருளால் பார்த்திருக்கின்றோம்; ஆனாலும் இந்தச் சூரியன் உயர்ந்த ஆகாயத்தில் உச்சியை சென்றடைவதை நாம் காண்பதும், அதைக் கண்டாலும் மாலையில் மேற்கு திசையில் இருக்கும் மலையை அடைவதைக் காணும்வரை நாம் உயிர்வாழ்வதும் நிச்சயமில்லை; அதற்குமுன் எமன் நம்மைக் கொண்டு செல்ல வந்துவிடலாம் என்று நினைத்து (மரணத்திற்கும் பின் என்ன கதி வருமோ எனப்) பயந்து மறவாமல் இப்பொழுதே அறத்தைச் செய்வாயாக.
34. இவர்க்கு கூடாது
முத்தியில் விருப்ப முடையவன் மிடியன் மூர்க்கன்சேண் தேயத்தில் உள்ளோன், புத்தியில் வயிரம் பொருந்திய சூரன் புதல்விதன் வயதின்மும் மடங்கு, தத்திய வயது ளோளினார் தமக்குத் தரணியில் ஒருவரு முள்ள நத்திநன் மகளைத் தரத்தகா தென்னாக் கணிதநூல் நவின்றிடு மன்னோ .
முக்தியில் தீவிர நாட்டமுள்ளவன், வறியவன், கோபமுள்ளவன், மனதில் பகைவுணர்வுள்ள முரடன், தம் மகளைவிட மூன்றுமடங்கு வயதில் மூத்தவன் ஆகியோர்க்கு தன்விருப்பத்திற்குரிய புதல்வியை யாரும் திருமணம் செய்து தரக்கூடாது என்று சோதிடநூல் சொல்கிறது.
35. இவர்க்குக் கொடுக்கலாம்
புரைதபு குணனும் சீலமும் வனப்பும் பூரண வாயுளும் துப்பும், கரையில்விற் பனமும் பாலனம் புரியும் கருத்தருங் குறைவிலா தாக, விரவுசெல் வமுமாம் எண்வகை யுடைய ஆடவர் விருப்புறு வண்ணம், பரவிநின் றவர்க்கு மகட்கொடை யுதவல் பருணிதர் கடமைய தாமால்.
குற்றமில்லா நற்குணமும், ஒழுக்கமும், அழகும், நீண்ட ஆயுளும், உடல்வலிமையும், அளவற்ற கல்வியும், பாதுகாக்கும் அக்கரையும், நேர்வழியில் வந்த செல்வமும் ஆகிய எட்டுத் தகுதியுமுள்ள ஆண்மகன் விரும்புமாறு அவரை வணங்கிநின்று அவருக்கு தன் மகளைத் தானமாக ( கன்னிகாதானம்) திருமணம் செய்துகொடுத்தல் அறிவுடையோர் கடனாகும்.
36. விரும்புவன
பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே, எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய்-நண்ணிடையில், கூரியநற் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது, பேரழகுதான் விரும்பும் பெண்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போது தந்தை மணமகனின் கல்வியறிவையே விரும்பிப் பார்ப்பார்; தாயானவள் மிகுந்த செல்வத்தையே (முக்கியமாகப்) பார்ப்பாள்; அவர்களது சுற்றத்தினர் மணமகனின் குலத்தையே (குடும்ப பாரம்பர்யத்தையே) பார்ப்பர். மணப்பெண்ணோ தன்னை மணந்துகொள்பவனது உடல் அழகையே விரும்புவாள்.
(இவை அனைத்தும் இருக்குமாறு வரன் அமைதல் இனிது.)
37: அரியன
மக்க ளாக்கையில் பிறத்தலே அரிதுமற் றதிலும், துக்க கூன்குரு டூமையைத் துறத்தலு மரிது, நற்குலத்திடை வருதலுமரிது ஞானத்தான், முக்க ணீசனுக்கு ஆட்படல் முற்றிலு மரிதே.
பூமியில் மனிதராய் பிறத்தல் அரியது; அதிலும் துன்பம் மிகுந்த கூன், குருடு, ஊமையின்றிப் பிறத்தல் அரியது; நல்ல குலத்தில் பிறத்தலும் அரியது; அறிவினாலே மூன்று கண்களையுடைய ஈச்வரனுக்கு அடிமையாதல் முழுமையும் அரியதே.
38: காமம் கொடிது
காமத்தால் இந்திரன் கலக்க மெய்தினான், காமத்தால் இராவணன் கருத்த ழிந்தனன், காமத்தால் கீசகன் கவலையுற் றனன், காமத்தால் இறந்தவர் கணக்கி லார்களே.
அகலிகை மேற்கொண்ட காமத்தால் இந்திரன் துன்பம் அடைந்தான்; சீதை மேல் கொண்ட காமத்தால் இராவணன் புத்தி அழிந்தான்; திரௌபதி மேற்கொண்ட காமத்தால் கீசகன் மரணமடைந்தான்; (இப்படி) காமத்தால் இறந்தவர்கள் கணக்கில் அடங்கார்.
39. காமத்தால் உண்டாகும் தீமைகள்
தீமை யுள்ளன யாவையுந் தந்திடும், சிறப்பும் தோமில் செல்வமுங் கெடுக்குநல் லுணர்வினைத் தொலைக்கும், ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால், காம மன்றியே யொருபகை யுண்டுகொல் கருதில்.
காமமானது எல்லாவிதமான தீமைகளையும் கொடுக்கும்; அழகையும் செல்வத்தையும் கெடுக்கும்; அறிவினையும் அழித்துவிடும்; நல்ல முக்தி நெறியில் செல்வதைத் தடுத்து, நரகத்தில் சேர்த்துவிடும். இதனால், ஆராய்ந்து பார்க்குமிடத்து காமத்தைவிட வேறொரு கொடியபகை மனிதர்களுக்கு இல்லை.
40. மிகவும் அஞ்சத்தக்கது
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும், வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக், கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம், அவற்றினும் அஞ்சப் படும்.
அம்பும், நெருப்பும், பரந்த கதிர்களையுடைய கதிரவனும் மிகுந்த வெப்பம் உண்டாக்கிச் சுட்டாலும் உடம்பின் மேற்புறத்தைத்தான் சுடும் (காயப்படுத்தும்). காமமானது அகத்தே வெப்பத்தை உண்டாக்கி, வருத்தப்படுத்தி, மனத்தைச் சுடுதலால் முற்சொன்ன அம்பு முதலானவற்றைவிட மிகவும் அஞ்சத்தக்கதாகும்.
41. நஞ்சை விடக் கொடியது
அஞ்சனவை வேற்கண் ணரிவையர் தம் பேராசை, நெஞ்சு புகினொருவர் நீங்கு நிலைமைத்தோ! எஞ்சல்புரி யாதுயிரை யெந்நாளும் ஈர்ந்திடுமால், நஞ்சமினிது அம்மவோர் நாளு நலியாதே.
பெண்களின் மேல் ஏற்படும் காமமானது ஒருவர் நெஞ்சில் புகுந்து விட்டால் அது நீங்கும் தன்மையுடையது இல்லை. மிச்சமில்லாமல் உயிரை உடனே கொல்லாமல் ஒவ்வொரு நாளும் அது பிளந்து துன்பப்படுத்தும். இதைவிட விஷமானது இனிமையானதாகும், ஒருநாளும் வருத்தப்படுத்தாமல் உடனே கொன்றுவிடுவதால்.
42. அடங்காதது
ஊரு ளெழுந்த வுருகெழு செந் தீக்கு, நீருட் குளித்து முயலாகும் - நீருள், குளிப்பினுங் காமஞ் சுடுமே குன்றேறி, ஒளிப்பினுங் காமஞ் சுடும்.
ஓர் ஊரையே சூழ்ந்து எரிக்கும் நெருப்பிற்கு தண்ணீரில் மூழ்கி இருந்தால் தப்பிக்கலாம். ஆனால் தண்ணீரில் குளித்தாலும் காமம் எரிக்கும்; குன்றேறி ஒளிந்தாலும் காமம் எரிக்கும்.
( ஆகவே, காமம் மனதில் வளர்ந்து விடாமல் மிக எச்சரிக்கையாக இரு.)
43.கோபம் கொடியது
வெகுளியே உயிர்க் கெலாம் விளைக்குத் தீவினை, வெகுளியே குணந்தவம் விரத மாய்க்குமால், வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால் வெகுளியில் கொடும்பகை வேறொன் றில்லையால்.
உயிர்களுக்கெல்லாம் கோபமே பல தீய செய்கைகளை உண்டாக்கும்; கோபமே நற்குணத்தையும், தவத்தையும், விரதத்தையும் கெடுக்கும்; கோபமே அறிவினை அழிக்கும்; வெப்பம்மிகுந்த கோபத்தை விடக் கொடிய பகை வேறொன்றும் இல்லை.
44. கோபத்தீ
மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கின் முதலற முருக்குமா போலத், தாங்கரும் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாஞ் சாய்க்கும், ஆங்கதன் வெம்மை யறிந்தவர் கமையா லதனையுள் ளடக்கவும் அடங்காது, ஓங்கிய கோபத் தீயினை யொக்கும் உட்பகை யுலகில்வே றுண்டோ.
மூங்கில்களுக்கு இடையே ஓசையுடன் எழுகின்ற தீயானது, அவற்றையே வேருடன் அழித்துவிடுவது போல, தாங்கமுடியாமல் தன்னுள்ளே எழுகின்ற கோபமானது, தன்னோடு தன் உறவுகளை எல்லாம் அழித்துவிடும். அதன் கொடுமையை அறிந்தவர் பொறுமையுடன் அதனை உள்ளே அடக்கினாலும் அடங்காது ஓங்கும் கோபத்தீயைவிடக் கொடியது உலகில் வேறு உண்டோ? (இல்லை).
45: கோபத்தால் இறந்தவர் கோடி..
கோபத்தால் கௌசிகன் தவத்தை கொட்டினான்; கோபத்தால் நகுடனும் கோல மாற்றினான்; கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்; கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே.
கோபத்தால் விசுவாமித்திர முனிவர் தவ சக்தியை இழந்தார்; கோபத்தால் (சந்திரகுலத்தரசன்) நகுஷனும் தன் உருவம் ( பாம்பாக) மாறினான்; கோபத்தால் இந்திரனும் தன் வஜ்ராயுதத்தை இழந்தான்; இப்படி கோபத்தால் இறந்தவர் பலகோடி.
(ஆகவே, கோபத்தைக் கொன்று விடு.)
46. விருந்தோம்பல் விதி
விருந்தினனாக ஒருவன் வந் தெதிரின் வியத்தனன் மொழியினி துரைத்தல், திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல் எழுதல்முன் மகிழ்வன செப்பல், பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வ தாதல்,
பரிந்து நன் முகமன் வழங்கல்இவ் வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
வீட்டிற்கு ஒருவர் விருந்தினராக வந்தால் வியந்து பாராட்டி நன்மொழி இனிது உரைத்தல், அன்போடு பார்த்தல், வருக என அழைத்தல், எழுந்து நிற்றல், அவர் மகிழுமாறு பேசுதல், அவர் அமர இருக்கை கொடுத்தல், அவரருகே இருந்தல், போகும்பொழுது ( வாசல் வரை) பின்செல்லுதல், அன்போடு நல்வார்த்தைகள் சொல்லி அனுப்புதல், இந்த ஒன்பது ஒழுக்கமும் விருந்தினரை உபசரிக்கும் பண்பாடாகும்.
47. தலை வைக்கும் திசை
இணையில்தன திலொருவன் கீழ்த்திசையில் தலைவைக்க இனிய மாமன், மணிதிகழ்பொன் னெடுமாடத் துறைந்திடில் தென் திசையதனில் வைக்க வேண்டும், அணிபெறுவேற் றூருறையில் குடதிசையில் சாரவைக்க வடுத்தெப் போதும், உணர்வின்றி யுத் தரத்தே தலைவைத்துத் துயில்புரிதல் ஒண்ணா தாமால்.
ஒருவன் ஒப்பற்ற தனது வீட்டில் கிழக்கு திசையிலும், இனிய மாமனார் மாளிகையில் தென்திசையிலும், அழகிய வேற்றூரில் தங்கினால் மேற்குத் திசையிலும் தலைவைத்துப் படுக்கவேண்டும். எக்காலத்திலும் எவ்விடத்திலும் அறிவில்லாமல் வடக்குத் திசையில் தலைவைத்துப் படுத்துறங்குதல் கூடாது.
48. அன்பில்லா மனம் அடையும் கேடு
அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவும்
அளவிலாப் பகைநமக் கெனவும், துன்பமார் சோக மோகமே முதலாம் துயரெலாம் விளை நில மெனவும், இன்பவீ டெய்தி டற்கிடை யூறாம் இருளுமென் றியம்புவர் பெரியோர், துன்பிலா இறைவர்க் கன்பிலா நெஞ்சே துணை யிலை துணையிலை யெனக்கே.
கடவுளிடத்தில் அன்பு இல்லாத மனம் நோய்வாய்ப்பட்டது என்றும், நமக்கு முடிவில்லாத பகையாகுமென்றும், துன்பத்தை கொடுக்கின்ற கவலை, மயக்கம், முதலாகிய கலக்கங்கள் விளைகின்ற நிலம் என்றும், இன்பம் நிறைந்த மோட்சத்தை அடைவதற்கு தடையாகும் இருள் என்றும், கூறுவர் பெரியோர். மனமே, துன்பமில்லாத கடவுளிடத்தில் அன்பு இல்லாத நீ, எனக்கு துணையில்லை துணையில்லை.
( ஆகவே, கடவுளிடம் அன்புகொள், அன்புகொள்.)
49. முயற்சி திருவினை ஆக்கும்
மானிட னொருவன் தனக்கருஞ் செல்வம் வாய்க்கவென் றனுதின முயற்சி, தானுஞற் றுவனேல் கடவுளும் அதனைத் தந்தளிக் குவனதா லன்றோ, ஆன பேரறிஞர் திருவினை முயற்சி யாக்கும் அம்முயற்சியல் லாமை, ஈனமா ரின்மை புகுத்திடு மாலென்று யாருநன் குணர்தர நவில்வார்.
மனிதன் ஒருவன் தனக்கு பெரும் செல்வம் வாய்க்க வேண்டும் என்று ஒவ்வொருநாளும் முயற்சி செய்தால் - கடுமையாக உழைத்தால் - கடவுளும் அந்த செல்வத்தை கொடுத்தருளுவார். அதனால்தான் பேரறிஞர்களும் "முயற்சி திருவினையாக்கும், முயற்சி இன்மை கீழான வறுமையைக் கொடுத்துவிடும்", என்று அனைவரும் நன்கு உணருமாறு சொல்லி இருக்கின்றார்.
50. ஊக்கமது கைவிடேல்
கடவுள் ஈகுவனென்று எண்ணிநித் தியமும் கரு துறு முயற்சி செய் யானேல், அடலுறு செல்வ மடை குவ னேகொல் அருங்கலத் திட்டபா லடிசில், மிடலுறு கரத்தால் எடுத்துணா தெங்ஙன் வீங்கும்வெம் பசிப்பிணி யொழிப்பன், உடல்பவம் தனக்கோ ராகர மாமென்று உடனனி வாட்டுமெய்த் தவத்தோய்.
உடலானது பிறந்த ஜீவனுக்கு ஓர் உறைவிடம் என்றுணர்ந்து, (பிறவா நிலையை அடைவதற்கு உடலை மிக வாட்டும்) கடுமையான தவத்தை செய்பவனே! கடவுள் கொடுப்பான் என்று கருதி எப்பொழுதும் உரிய முயற்சியைச் செய்யாமல் இருந்தால், மிகுந்த செல்வத்தை (மனிதன்) அடைவானோ? சொல்வாய், உயர்ந்த கலத்தில் இட்ட பால்சோற்றை வலிய கரத்தினால் எடுத்து உண்ணாமல் எப்படி கொடிய பசியைப் போக்குவான்?
51. ஈசனிடம் ஆசை வை
மங்கையர்கள் அங்கமிசை வைத்திருக்கும் ஆசையினைப், பங்குசெய்து நூற்றிலொரு பங்கெடுத்துக் - கங்கைமதி, வேணியரன் பாதார விந்தத்தில் வைத்தக்கால், காணலாங் காணாக் கதி.
மனிதன் பெண்களின் உடலின் மேல் வைத்திருக்கும் ஆசையினை, நூறு பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கை எடுத்து, கங்கையையும் சந்திரனையும் ஜடையில் தரித்திருக்கும் அரனின் - சிவபெருமானின் - திருவடித் தாமரைகளில் வைத்தானென்றால் யாரும் எளிதில் அடைய முடியாத மோக்ஷகதியை அடையலாம்.
52. செல்வந்தர் செய்யவேண்டுவன
செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப், பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு -- நல்லன, தான மறவாத தன்மையரேல் அஃதென்பர், வானகத்து வைப்பதோர் வைப்பு.
செல்வம் உடையவர்கள், கோபத்தை அடக்கி பணிவு முதலான நற்பண்பு உடையவராய், தமது உற்றார் உறவினர்கள் வறுமையில் வாடாமல் பகுத்துக் கொடுத்து, தாமும் உண்டு அனுபவித்து, தானம் முதலான நல்ல அறங்களையும் மறவாமல் செய்யும் தன்மை உடையவராக இருப்பார்களேயானால், அது (அவர்களின் நற்குணங்களும் நற்செயல்களும்) தங்கள் செல்வத்தை மேலுலகத்தில் பாதுகாத்து வைக்கும் வைப்புநிதியாகுமென்று பெரியோர்கள் சொல்லுவர்.
53. பெண்டிர் செய்யத்தகாதன
எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை, அட்டில் புகாதாள் அரும்பிணி-அட்டதனை,
உண்டி யுதவாதாள் இல்வாழ் பேய் இம்மூவர்,
கொண்டானைக் கொல்லும் படை.
கணவன் கோபம் கொண்டு இருக்கின்றபொழுது, தானும் கோபம்கொண்டு நெருப்பைப் போல எதிர்த்து நிற்கும் மனைவி, கணவனைக் கொல்லும் எமன் போலாவாள். அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து, அடுக்களை புகுந்து உணவு சமைக்காத மனைவி, கணவனுக்கு கொடியநோய் போலாவாள். சமைத்த உணவை அன்போடு கணவனுக்குப் பரிமாறாத மனைவி இல்லத்தில் வாழ்கின்ற பேய் போலாவாள். இம்மூவரும் தாம் கொண்ட கணவனைக் கொல்லுகின்ற ஆயுதம் ஆவர்.
54. மஹாலக்ஷ்மி விலகிச் செல்வாள்
காலை மாலை உறங்குவர் காரிகை, கோல மேனி குலைந்தபின் கூடுவர், சாலி ராத்தயிர் சாதமொ(டு) உண்பவர் மாலை நேரினு மாது பிரிவளே.
காலை, மாலை சந்திப்பொழுதுகளில் உறங்குபவர், விதவைப் பெண்ணோடு முறையின்றிச் சேர்பவர், இரவில் தயிர் கலந்து சாதம் உண்பவர், இவர்கள் திருமாலுக்குச் சமமானவர்களாக இருந்தாலும் லக்ஷ்மிதேவி அவர்களை விட்டுச் சென்றுவிடுவாள்.
55. மூதேவி தேடி வருவாள்
இஞ்சி நெல்லி யிலைக்கறி பாகற்காய், கஞ்சி வெண்டயிர் கங்கு லருந்திடில், பொஞ்சு பூமகள் போயுடன் மூத்தவள், கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி நடிப்பளே.
இஞ்சி, நெல்லிக்காய், கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர் ஆகியவற்றை இரவினில் உண்டால், செழிப்பாக வாழ்கின்ற பூமகளாகிய லட்சுமிதேவி போய்விட, உடனே அவளுக்கு மூத்தவளாகிய மூதேவி அங்கு வந்து கொஞ்சிக் குலாவிக் கூத்தாடுவாள்.
56. கல்வியின் சிறப்பு
வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது; வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும் குறையாது; கொடிய தீய கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது; கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க, உலகெங்கும் பொருள்தேடி உழல்வ தென்னே!
மனிதர்களே!, மழை வெள்ளத்தாலே அழிந்து போகாதது; கொடிய நெருப்பினால் எரிந்து போகாதது; அரசனால் வரியென்று அபகரிக்க முடியாதது; கொடுத்தாலும் குறையாதது; கொடிய திருடர்களாலும் திருடிச்செல்ல இயலாததுமான கல்வி என்னும் அழியாப் பொருள் அகத்தே இருக்க, அழிகின்ற பொருளை உலகமெங்கும் தேடி வருந்துவது எதற்காக?
57. கவலை பொதுவானது
பாலுக்குச் சர்க்கரை இல்லையென்பார்க்கும் பருக்கையற்ற,
கூழுக்குப் போடவுப் பில்லையென் பார்க்குமுட் குத்தித்தைத்த, காலுக்குத் தோற்செருப் பில்லையென்பார் க்கும் கனகதண்டி, மேலுக்குப் பஞ்சணை யில்லையென்பார்க்கும் விசனம் ஒன்றே.
பாலில் கலக்க சர்க்கரை இல்லை என்று சொல்பவருக்கும், கூழில் கலக்க உப்பு இல்லை என்று சொல்பவருக்கும், முள் தைத்த காலில் போட செருப்பு இல்லை என்பவருக்கும், பொன் போன்ற உடலுக்கு பஞ்சணை இல்லை என்பவருக்கும் கவலை ஒன்றே.
(எல்லாருக்கும் கவலை உண்டு, காரணம்தான் வேறு வேறு.)
58. பொய்மை தவிர்
பொய்யருக்குப் பொய்யுரைத்தால் வெற்றியாம் அவருக்குப் பொய்யா காத, மெய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறை போல்
தவங்குறையு மிடியுண் டாகும்; துய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால் வறுமைபிணி தொலையா வென்றும், உய்யவரு தேசிகற்குப் பொய்யுரைத்தா நரகம் வுண்மை தானே.
எப்பொழுதும் பொய்யையே பேசிக்கொண்டிருக்கும் கயவரிடத்தில் பொய்யுரைத்தால் வெற்றி உண்டாகும்; எப்பொழுதும் பொய்மையில்லாத உண்மையான மனிதரிடத்தில் பொய் உரைத்தால் தேய்பிறை போல தவம் குறைந்து வறுமையும் உண்டாகும்; நல்ல தாய், தந்தையரிடத்தில் பொய் கூறினால் வறுமையும் நோயும் உண்டாகி எப்பொழுதும் நீங்காது இருக்கும்; நம்மை உய்விக்க வந்த குருவினிடத்தில் பொய் உரைத்தால் நரகம் உண்டாகுமென்பது உண்மையாகும்.
59. வறுமைக்கு மருந்து
தரித்திர வெம்பிணி தான்வந் துற்றிடில், கருத்தழிந்து உண்பதற் குயிர் கலங்குவார், மருத்துவ தோவெனின் மாநிலத்திலை, பொருத்தவொண் செல்வமென் மருந்திற் போகுமே.
வறுமை என்னும் கொடிய நோயானது வந்துவிட்டால், என்னசெய்வதன்று தெரியாமல், உண்பதற்கு உணவும் இன்றி உயிர் கலங்குவர். இதை நீக்குவதற்கு மருந்து, மருத்துவ உலகில் இல்லை. தேவையான அளவு செல்வத்தை அடைதல் என்ற மருந்தினாலேயே அது நீங்கும்.
(ஆகவே, செல்வம் சேர்.)
60. பயனற்றது
பொலிவளந் தங்கிய புவியில் தானுண்டும், பலிபிறர்க் கிட்டுமே பயன்துவ் வான்பொருள், வலியிலாப் பேடிகை வாள் கொலாணென, அலியினை மேவிய வரம்பை யேகொலோ.
சிறந்த வளம் பொருந்திய பூமியில் தான் அனுபவித்தும், மற்றவர்களுக்குத் தானம் கொடுத்தும் பயன்படுத்தாதவனுடைய செல்வம், வலிமை இல்லாத பேடியின் கையில் உள்ள வாளோ? அல்லது ஆண்மை இல்லாதவனை அடைந்த பெண்ணோ?
(பயனற்றது என்பது பொருள்.)
61. அழகு யாது?
படை தனக்கு யானை வனப்பாகும் பெண்ணின், இடைதனக்கு நுண்மை வனப்பு-நடை தனக்குக், கோடா மொழிவனப்புக் கோற்கதுவே, சேவகர்க்கு வாடாத வன்கண் வனப்பு.
அரசனின் சேனைக்கு யானை(ப்படை) அழகு; பெண்ணின் இடைக்கு மெலிந்து இருத்தல் அழகு; நல்லொழுக்கத்திற்கு நடுவு நிலைமை மாறாத பேச்சு அழகு; அரசருக்கும் அதுவே (நடுவுநிலைமை) அழகு; சேவகருக்கு குறையாத வீரம் அழகு.
62. இவையும் அழகு
கண் வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை, எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல் - பண்வனப்புக், கேட்டார் நன்றென்றல் கிளர்வேந்தன் தன்நாடு வாட்டானன் றென்றல் வனப்பு.
கண்ணுக்கு அழகு கருணை உடைமை; கால்களுக்கு அழகு யாசகம், கடன் வேண்டி எவ்விடத்தும் செல்லாமை; கணிதவியலாளர்க்கு அழகு எதையும் இவ்வளவினது என்று துல்லியமாக கணித்துச் சொல்லுதல்; (ஒருவர் பாடும்) பாட்டிற்கு அழகு கேட்டவர் நன்று என்று வியந்து சொல்லுதல்; அரசனுக்கு அழகு இவன் தன் நாட்டு மக்களை வருத்த மாட்டான், நன்மையே செய்வான் என்று பலர் பாராட்டிச் சொல்லுதல் ஆகும்.
63. அமிர்தம் யாது?
கற்புடைய பெண்ணமிர்தம்; கற்றடங்கி னானமிர்தம்; நற்புடைய நாடமிர்தம்; நாட்டுக்கு-நற்புடைய மேகமே சேர்கொடி வேந்தமிர்து; சேவகனும் ஆகவே செய்தி னமிர்து.
கற்பொழுக்கம் உள்ள பெண் புகுந்த வீட்டிற்கு அமிர்தம் போல் நன்மை செய்பவள் ஆவாள்; நல்ல நூல்களைக் கற்று அதன்படி வாழ்கின்றவர் சமூகத்திற்கு அமிர்தம் போலாவர்; நன்மைகள் பல உடைய நாடு குடிகளுக்கு அமிர்தம் போன்றதாகும்; நன்மையைச் செய்கின்ற, மேகத்தை தொடுகின்ற (புகழுடைய) கொடியை உடைய அரசன் நாட்டிற்கு அமிர்தம் போலாவான்; அரசசேவகனும் அரசனைப் போலவே செயல்பட்டால் அவனும் அமிர்தமே!
64. உயர்வும் தாழ்வும்
அருமையும் பெருமை தானும் அறிந்துடன் படுவர் தம்மால், இருமையும் ஒருமை யாகும் இன்புறற் கேது வுண்டாம், பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்கள் தம்மால், ஒருமையி னிரய மெய்தும் ஏதுவே யுயரு மன்னோ!
ஒருவருடைய அரிய நற்பண்புகளையும் பெருந்தன்மையான குணங்களையும் அறிந்து, அவருடன் நட்பு கொள்பவர்களால் இப்பிறப்பு மறுபிறப்பு இரண்டும் ஒன்றே போலாகும் (இருபிறப்பிற்கும் நன்மையாகும்); இன்பத்தை அடைவதற்கு காரணமான புண்ணியமுண்டாகும். உள்ளன்பில்லாத சகுனி போன்ற கெட்டபண்புடையவர் நட்பால் (மறுமையில்) நரகத்தை அடைவதற்குக் காரணமான பாபச்செயல்களே இப்பிறப்பில் மிகுந்துகொண்டு இருக்கும்.
(ஆகவே, ஆராய்ந்து நட்புக்கொள்.)
65. பொருட்பற்றை விடு
என்பொருளென் பொருளென்று சீவன்விடு மன மேயொன் றியம்பக் கேளாய், உன் பொருளா னால் அதன்மேல் உன்நாமம் வரைந்துளதோ உன்ற னோடும், முன் பிறந்து வளர்ந்ததுகொல் இனியுனைவிட்டு அகலாதோ முதிர்ந்து நீதான், பின்பிறக்கும் போததுவுங் கூடவிறந் திடுங்கொல்லோ பேசு வாயே.
ஏ மனமே, 'என்னுடைய பொருள்,' 'என்னுடைய பொருள்' என்று உயிரை விடுகின்றாயே! உனக்கு நான் ஒன்று சொல்ல கேட்பாயாக! உன் பொருளானால், அதன் மேல் உன் பெயர் எழுதப்பட்டுள்ளதோ?, அது உன்னுடனே பிறந்து வளர்ந்ததுவோ ?, அது உன்னை விட்டு நீங்கவே நீங்காதோ?, வயது முதிர்ந்து பின்னர் நீதான் இறக்கும்போது அதுவும் உன்னுடன் இறந்திடுமோ? சொல்வாய்!
( ஆகவே, பொருட்பற்றை விடு.)
66. நோய் வரும் காரணம்
தன்னைத்தான் பேணா தாலும் சரீரத்தின் தண்டிப் பாலும், பின்னுற்ற விசாரத் தாலும் பின் சல மலத்தி னாலும், அன்னத்தை யொறுப்ப தாலும் அரையுடல் முழுக லாலும், தன்மத்தை யிகழ்வ தாலும் சரீரத்தில் வியாதி தோன்றும்.
( யோகாஸனம் முதலான நற்பழக்கங்களால்) உடலைப் பராமரிக்காததாலும், (அளவுக்கதிகமான ஓய்வற்ற வேலையினால்) உடலைத் துன்புறுத்துவதாலும், வாழ்வின் பின்பகுதியில் அடையும் மனக்கவலைகளாலும், மலஜலக் கழிவுகள் உடலில் தங்குவதாலும், உணவை தவிர்த்தலாலும், அரையுடல் குளிப்பதாலும் ( தலையுடன் முழுவதுமாக குளிக்காததாலும்), தர்மத்தை மீறிய வாழ்க்கையாலும் உடலில் நோய் உண்டாகும்.
67. செல்வத்தின் இயல்பு
திரவியம் வந்த போது சேர்ந்தபல் லோர்க்கும் ஈந்தால், வரவர வளரும் அந்த வகை செயா விடிற்கெட் டேகும், ஒருகலிங் கினைவிட் டக்கால் ஓதநீர் போக்குப் போகப் பெருகுறும் ஏரி, இல்லா விடினடு வணையைப் போக்கும்.
ஏரியில் வெள்ளநீர் மிகுந்து வருகின்றபோது, அதன் ஒரு மதகை திறந்து நீரை அதன் போக்கில் வெளியேறவிட்டால், ஏரி ஆபத்து இல்லாமல் நீரால் நிறையும். இல்லாவிடில் கரையானது உடைந்து மொத்த நீரும் போய்விடும். அதுபோல செல்வம் சேருகின்ற காலத்தில் அதன் ஒருபகுதியை பலருக்கும் பயன்படும்படி பகிர்ந்து கொடுத்தால் மேலும் மேலும் பெருகும்; அப்படி செய்யாவிட்டால் மொத்தமாக விட்டுப் போய்விடும்.
68. ஆசையின் விளைவுகள்
கைதவ மிழைத்தலும் களவு செய்தலும், ஐதுயிர் கோறலும் அறத்தைக் கோறலும், பொய்தவ வுரைத்தலும் பொரு ளிழத்தலும், எய்திய காமத்தி னன்றி யில்லையே.
பிறருக்கு துன்பத்தைச் கொடுத்தலும், களவு செய்தலும், உயிர்க் கொலை செய்தலும், பொய்மிக உரைத்தலும், பொருளை இழத்தலும் ஒருவன் அடைந்த காமத்தினால் அன்றி, வேறு வகையில் இல்லை.
69. ஆசையினால் வரும் கேடுகள்
நன்றியைக் கோறலும் நலனைக் கோறலும், வென்றியைக் கோறலும் விவேகம் கோறலும், துன்றிய வொக்கலை துறந்து நிற்றலும், கன்றிய காமத்தி னன்றி யில்லையே.
நன்மையைக் கெடுத்தலும், அழகை அழித்தலும், வெற்றியைத் தொலைத்தலும், விவேகம் இழத்தலும் நெருங்கிய உறவை விலக்கி தனியாக நிற்றலும் மனதை வருத்தும் காமத்தினாலன்றி வேறு வகையில் இல்லை.
70. மேலும் பல
பகையினை யாக்கலும் பாவமாக்கலும், நகையினை யாக்கலு நவையை யாக்கலும், திகைமன மாக்கலுஞ் சிறுமை யாக்கலும், அகைதரு காமத்தினன்றி யில்லையே.
பகைவரை உருவாக்குவதும், பாவச்செயல்களை செய்யச் செய்தலும், பிறர் நகைக்கும் படியாக நடக்கச் செய்வதும், பல குற்றங்களை செய்யச் செய்வதும், மனதை மயங்கச் செய்வதும், சிறுமை குணங்களை உண்டாக்குவதும் துன்பத்தைத் தருகின்ற காமத்தினை அன்றி வேறு இல்லை.
(மேற்கூறிய மூன்று பாடல்களிலும் காமம் என்று கூறியுள்ளதை,பொதுவாகப் பேராசை என்றோ, குறிப்பாகப் பெண்ணாசை என்றோ எடுத்துக் கொள்ளலாம். காமம் என்ற சொல் பொதுவாக எல்லா ஆசைகளையும் குறிக்கும். ஆசைகளில் மிகுந்த பலமுள்ளதாக இருப்பதால் பெண்ணாசையை குறிப்பாகக் குறிப்பதாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.)
71. பொருளாசையினால் வரும் கேடு
எவரையும் மனந்திரிப்பதும் ஈன்றவர் தமக்குத், தவறி ழைத்திடப் புரிவதும் தையலார் தங்கள், கவறில் கற்பினே யொழிப்பதுங் கற்குநூற் கலைகள், அவையெ லாங்கெடக் கெடுப்பதும் பொருள்விருப் பன்றே.
யாருடைய மனதையும் அறத்திலிருந்து மாற்றுவதும், பெற்றோருக்கும் தீங்கு செய்விப்பதும், தங்கள் பெண்களின் கற்பினை மாறுபட செய்வதும், கற்ற நூல்கள், கலைகள் எல்லாம் கெட அழிப்பதும் பொருளாசையேயாகும்.
72.உழவின் சிறப்பு
அலகில்லா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும், பலகலையாம் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும், மலர்குலாம் திருவிளங்கு மழைவிளங்கு மனுவிளங்கும், உலகெலாம் ஒளிவிளங்கும் உழவர் உழும் உழவாலே.
உழவர்கள் செய்யும் உழவுத்தொழிலினாலே,
எல்லையில்லா வேதபாராயணம் எங்கும் நடைபெறும்; அந்தணர் செய்யும் வேள்விகள் நடைபெறும்; பலகலைக் கல்வியும் தொழிலும் சிறந்து விளங்கும்; கவிஞர்கள் சிறந்த கவிதைகளைப் படைப்பார்கள்; தாமரை மலரில் வசிக்கும் லட்சுமிதேவியின் அருளால் எங்கும் செல்வம் செழிக்கும்; நன்கு மழை பொழியும்; தர்மம் நன்கு தழைக்கும்; உலகமெல்லாம் நற்புகழ் விளங்கும்.
73. தவிர்க்க வேண்டுவன
தான் கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின், ஊன் கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த,
வையக மெல்லாம் பெறினும் உரையற்க, பொய்யோடு இடைமிடைந்த சொல்.
தான் செல்வமில்லாமல் கெட்டு அழிந்தாலும், நல்லவர்களுக்குக் கெடுதலை ஒருபொழுதும் நினைக்கவேண்டாம்; தன்னுடைய உடம்பு உணவில்லாமல் துன்பப்பட்டாலும், தகாதவர்கள் கையினால் உண்ண வேண்டாம்; ஆகாயம் மூடியிருக்கின்ற உலகம் எல்லாம் கிடைக்கும் என்றாலும், பொய் கலந்த வார்த்தைகளைப் பேச வேண்டாம்.
74. முக்தர் நிலை
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும், முத்தர் மன மிருக்கு மோனத்தே- -வித்தகமாய்க் காதிவிளை யாடியிரு கைவீசி வந்தாலும் தாதிமன நீர்க்குடத்தே தான்.
நீர் குடத்தை தலையில் சுமந்து வரும் பெண், குடத்தை பிடிக்காமல் கைகளை வீசி விளையாடி நடந்தாலும், மனமானது தலையில் இருக்கும் குடத்திலேயே கவனமாக இருக்கும். அதுபோல, முக்தியடைந்த ஞானியர் மனமானது எப்படிப்பட்ட உலக காரியங்களைச் செய்தாலும், விதியினால் எப்படிப்பட்ட துன்பங்களை உடலால் அனுபவிக்க நேர்ந்தாலும், அவர்கள் மனமானது ஆத்ம தத்துவத்திலேயே அசையாது இருக்கும்.
விவேக சிந்தாமணி இரண்டாம் பாகம் முற்றிற்று
Comments