ஹிந்துத்தமிழர் திருவள்ளுவர் !



ஹிந்துத்தமிழர் திருவள்ளுவர் !

திருவள்ளுவர் ஹிந்து இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? திருவள்ளுவர்  ஒரு 'ஹிந்து' என்று சொல்லிக் கொள்வதற்கு ஏராளமான ஆதாரங்கள் திருக்குறளில் இருக்கின்றன.

திருவள்ளுவரை ஹிந்து என்று சொல்வது மதவெறி ஆகாது, அது நமது பெருமை.

திருவள்ளுவர் தமிழர் என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்படிப் பெருமையோ அதேபோல, திருவள்ளுவர் ஹிந்து என்பது ஹிந்து தர்மத்துக்கும் ஹிந்துக்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். அப்படி இருக்கையில் ஏன் நாம் அதை சொல்லிக் கொள்ளக்கூடாது.

உலகப் பொதுவான விஷயங்களை திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார் என்பதனால் திருவள்ளுவரை தமிழர் என்று சிறுமைப்படுத்த கூடாது என்று யாரும் கூறுவதில்லை; உலகப் பொதுவான விஷயத்தை சொன்னது சொல்வது தமிழுக்கும் தமிழனுக்கும் எப்படி பெருமையோ அதைப்போலவே அது ஹிந்து தர்மத்திற்கும் இந்துக்களுக்கும் பெருமைக்குரிய விஷயம்.

 "வசுதைவ குடும்பகம்";- "உலகமே ஒரு குடும்பம்" - என்று சொல்வது ஹிந்து மதமே. உலகத்திலுள்ள எல்லா வேறுபட்ட மாறுபட்ட மதக்கருத்துக்களையும் பரந்த மனதோடு ஏற்றுக் கொள்வது இந்து தர்மத்திற்கே உள்ள பெருமைக்குரிய விஷயம்.

நாஸ்திகத்தையும் ஒரு சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருப்பது ஹிந்து மதமே. தன் மதத்தை தவிர வேறு மதம் எதுவும் இருக்கக் கூடாது என்று ஹிந்து மதம் என்றைக்கும் சொல்லுவது இல்லை. "தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதுதான் ஹிந்து மதத்தின் பெருமைக்குரிய கொள்கை. என்னாட்டவர்க்கும் பொதுமறை சொன்ன திருவள்ளுவர் ஹிந்துவாக மட்டுமே இருக்க முடியும், ஏனெனில்  அவ்வாறு இருப்பது ஹிந்து மதம் மட்டுமே!

திருவள்ளுவர் நிச்சயமாக நாஸ்திகர் இல்லை; மூடப்பகுத்தறிவுவாதியும் இல்லை; கடவுளை வணங்காதவனை மூடன் என்று சொன்னவர் (குறள் எண் 2). கடவுள் வாழ்த்து என்று தொடங்கி கடவுள் தத்துவம், ஒழுக்கம்,  விதி(ஊழ்), மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், புண்ணியம், பாபம், அறம் பொருள் இன்பம் வீடு என்ற பகுப்பு, இல்லறம், துறவறம் என்ற வாழ்க்கை பிரிவுகள் போன்ற ஹிந்து மதக் கோட்பாடுகளை திருக்குறள் முழுக்க நாம் பார்க்க முடிகிறது.

கடவுள் வாழ்த்தில் காணப்படும் பகவன் என்ற சொல் ஹிந்து மதத்திலேயே கடவுளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. 'திருவடி' என்ற சொல் கடவுள் வாழ்த்தில் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உருவமுள்ள கடவுளுக்குத்தான் திருவடிகள் இருக்கமுடியும், ஹிந்துமதத்தில்தான் கடவுளுக்கு உருவம் சொல்லியிருக்கின்றது. தேவர்கள், கண்ணன், ஸ்ரீதேவி போன்ற சொற்களும் இந்துக் கடவுள்களையே குறிக்கின்றன என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

1953இல் வெளிவந்த அவ்வையார் திரைப்படத்தில் திருவள்ளுவர் திருநீறு, பூணூல், ஜடை தரித்து ஹிந்து முனிவராகவே காட்டப்பட்டிருக்கிறார். அப்போது இருந்த பெரியாரோ, அண்ணாவோ வேறு யாருமோ, அதை மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை. ஏனெனில் அதுதானே உண்மை! இப்பொழுது எதிர்ப்பவர்கள் உண்மை விரோதிகள்.

கோ.வடிவேலு செட்டியார் அவர்கள் வெளியிட்ட பரிமேலழகர் உரை நூலிலேயே முதன்முதலில் திருவள்ளுவருடைய உருவப்படம் வெளிவந்தது. அதில் திருவள்ளுவர் ஹிந்து சமய சின்னங்களுடனே இருக்கின்றார். ஏனெனில் திருவள்ளுவரின் உருவத்தை சொல்லும் 'நாயனார் சொரூபஸ்துதி' அவ்வாறே அவரை வர்ணித்திருக்கின்றது. 

பொதுவாக நமது பாரம்பரியத்தில்  தியானத்திற்காக தெய்வத்தை அல்லது ரிஷிகளை உருவ அடையாளங்களை வர்ணித்து பாக்கள்   இருப்பது வழக்கம். அதுதான் அந்த தெய்வ வடிவத்திற்கான ஆதாரம். 

தமிழக நாஸ்திக அரசு அதிகாரபூர்வமாக வைத்திருக்கும், சமயச் சின்னம் எதுவும் தரிக்காத திருவள்ளுவர் படத்திற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது ? ஹிந்து மதத் துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், பெரியோர்கள் இவர்களுக்கு உருவம் கொடுக்கின்றபோது ஜடை, உருத்திராட்சம், விபூதிப்பட்டை இந்த அடையாளங்களோடு காட்டுவதுதான் பாரம்பரியம்.அது நம் பெருமை. நாம் ரிஷி பரம்பரை, நம் முன்னோர்கள் காட்டுமிராண்டிகளோ குரங்குகளோ அல்ல ரிஷிகள் என்ற பெருமை. 

இந்துமத ரிஷிகளின் அடையாளமான ஜடையோடு திருவள்ளுவரைக் காட்டியவர்கள், விபூதி இல்லாமல் காட்டியது அவர்களுடைய நாஸ்திக அடையாளத்தை திருவள்ளுவரிடம் திணித்ததாகவே இருக்கின்றது.

திட்டமிட்டு ஹிந்து அடையாளங்களை இருட்டடிப்பு செய்தார்கள்; செய்கிறார்கள்.

எனவே, திருவள்ளுவர் தமிழர்,  ஹிந்துத்தமிழர். மொழியால் வேறுபட்டு இருந்தாலும் இந்தியாவில் அன்னியர்கள் வருவதற்கு முன் வாழ்ந்த அனைவரும் ஹிந்துக்களே.

ஹிந்துத்தமிழர்களே! உங்கள் பாரம்பரியத்தை உங்கள் பெரியோர்களை உங்கள் அடையாளங்களை உங்களிடமிருந்து பறிக்கும் அன்னிய சமூக விரோத, ஹிந்து மத விரோத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்; இல்லையெனில் இல்லாமல் போவீர்கள்!

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101