ஸநாதனதர்மமும் திருக்குறளும் - 1


ஸநாதனதர்மமும்
திருக்குறளும் - 1


ஸனாதன தர்மம்

ஸனாதன தர்மம் என்ற பாரம்பரிய பெயர் கொண்டது ஹிந்து மதம். மதம் என்றால் கருத்து, கொள்கை, அபிப்ராயம் என்று பொருள். ஜீவஸ்வரூபம், ஜகத்ஸ்வரூபம், ஈச்வரஸ்வரூபம், பந்தஸ்ரூபம், மோக்ஷஸ்வரூபம், ஸாதனஸ்வரூபம் ஆகிய ஆறு அம்சங்களைப் பற்றிய தெளிவான வரையறுக்கப்பட்ட கொள்கையே மதம் ஆகின்றது. மதத்திற்கு மதம் இக்கொள்கைகள் வேறுபடுகின்றன. ஆகவே அவை தனி மதங்களாக - சித்தாந்தங்களாக - கருதப்படுகின்றன.

ச்ருதிகள் எனப்படும் நான்கு வேதங்கள், ஸ்மிருதிகள் எனப்படும் வேதத்தில் உள்ள கருத்துக்களை விரித்தும் தொகுத்தும் சொல்லும் தர்ம சாஸ்திரங்கள், அவற்றின் விளக்கங்களான புராண இதிகாசங்கள் இவையே ஹிந்து மதத்திற்கு ஆதாரங்களாக இருப்பவை.

வேதங்களை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு அதோடு தர்க்கம் என்ற யுக்திபூர்வமான அறிவாராய்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டவை ஆஸ்திக மதங்கள் எனப்படுகின்றன.
வேதத்தை ஏற்காமல் தர்க்கத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டவை நாஸ்திக மதங்கள். நமது பாரத தேசத்தில் தோன்றிய மதங்களில் இந்த வரையறையை நாம் தெளிவாகக் காணலாம். அவை தர்சனங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

வேதத்தை முக்ய ஆதாரமாகக் கொண்டும் அதற்கு ஒட்டிய தர்க்கத்தைக்  கொண்டும் வேதங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும், அதை வாழ்க்கைபடுத்துவதும், வேதத்தில் சொல்லிய கருத்துக்கள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக்கொண்டும், வேதத்திற்கு முரணான கருத்துக்களை விலக்கியும் வாழ்வதே ஸனாதன தர்ம வாழ்க்கையாகும். 

ஸனாதன தர்மம் காட்டும் வாழ்க்கைச் சித்திரம்
வேதங்கள் நான்கு. அவை ருக் யஜுர் ஸாமம் அதர்வணம். வாழ்க்கையின் குறிக்கோள்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு. குறிக்கோள்களை அடைய உதவும் வாழ்க்கைப் பிரிவுகள் நான்கு. அவை பிரஹ்மசர்யம் கிரகஸ்தம் வானப்ரஸ்தம் ஸந்நியாசம். ஸமூகம் நன்முறையில் இயங்க ஆதாரமான தொழில் பிரிவுகள் நான்கு. அவை பிராம்மணம் க்ஷத்ரியம் வைச்யம் சூத்ரம். அறிந்து கொள்ள வேண்டியவை ஆறு. அவை உலகம், உயிர், இறைவன், பந்தம், மோக்ஷம், ஸாதனம்.

அவரவர் தத்தம் வாழ்க்கை நிலைக்கேற்ற அறத்தை அறியவேண்டும்; வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்டவேண்டும்; 
இம்மை மறுமைக்கான இன்பத்தைப் பெறுவதற்காக இல்லறம் ஏற்று அறவாழ்வு வாழவேண்டும்; நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் உறவுகளோடும் பண்பாட்டோடும்  உயர்ந்த பாவனைகளோடும் மந்த்ரங்களாலும் சடங்குகளாலும் மனதை பக்குவப்படுத்தியும் வாழ்வாங்கு வாழ்ந்து,
உலக இன்பங்களை அனுபவித்து, பின் விவேகம் வைராக்கியம் முமுக்ஷுத்வம் கொண்டு துறவறம் ஏற்று முக்தி பெறுவதற்கு முயலவேண்டும் என்பதே வேதங்களின் விருப்பம். வேதங்களின் வழி இறைவன் அருளும் வாழ்க்கைத் திட்டம்.

ஸனாதன தர்மத்தின் மேற்கண்ட வாழ்க்கை சித்திரத்தின் விளக்கம் என்னவென்றும் அவை திருக்குறளில் எவ்வாறு காணப்படுகின்றன என்பதையும் இந்தத் தொடரில் நாம் தொடர்ந்து காணலாம்.

Comments

Popular posts from this blog

ஆசாரக்கோவை பாடல்கள் 1 - 50 Acharakovai 1 - 50

விவேகசிந்தாமணி - பாடலும் பொருளும்

ஆசாரக்கோவை பாடல்கள் 51 - 101