அறம் செய விரும்பு -3
அறம் செய விரும்பு - 3
நன்முயற்சி நல்ல பலனைத்தரும் - விதி குறுக்கிடாதவரை. நாம் முன்செய்த புண்ணிய பாவங்களின் பின்விளைவே இந்த விதி. நம் முன்செயல் நல்லதாயின் அது நம்மையும் கெட்டதாயின் தீமையையும் விளையச் செய்கிறது. இந்த விதியை இன்று நாம் செய்கின்ற நல்வினையும் தீவினையும் தூண்டிவிடுகின்றன. விதியை ஒட்டி அமைந்த நம் மனப்பாங்கை இன்றைய நற்செயல் கட்டுப்படுத்துகிறது. நற்செயலில் நாம் எப்போதும் ஈடுபடும்படி இந்த ஆந்ஹிக நியமங்கள் நெறிப்படுத்தும். அதனால் முன் செய்த தீவினைப் பயனாகக் கெட்டதை நாடுகின்ற மனத்தை இந்த நியமங்கள் கட்டுப்படுத்தி நல்லதைப் பின்பற்றும்படி அடக்கி ஆளும்போது இந்த நியமங்கள் விதியை மாற்ற வல்லதாகின்றன. எந்த நற்பணியை மேற்கொள்ளும் போதும் "மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா" - "பலன் தர முனைந்துள்ள எனது எல்லாக் கெட்ட முன் வினைகளும் தேய்வுறச்செய்வதன்மூலம்" - என்று ஸங்கல்பம் செய்து கொள்கிறோம். அப்படி விதியை மாற்றவல்லவை இந்த ஆந்ஹிக நியமங்கள்.
"நான்" "எனது" என்று ஒவ்வொரு செயலிலும் அகந்தை மமதை கொள்வது இயல்பு. ஆனால் நம் நிலை அகந்தை மமதை கொள்ள சிறிதும் தகுதி இல்லாதது. பேராற்றல்மிக்க ஒரு பெரும் காலச்சக்ர சுழலில், அதன் வட்டத்திலும் ஆரத்திலும் ஒட்டிக் கொண்டுள்ள கோடிக்கணக்கான எறும்பு போன்ற சிறு ஜீவர்கள் ஆக நாம் இருக்கிறோம். நாம் சுதந்திரமாகச் சுழலவில்லை. அது சுற்றுவதால் நாம் சுற்றுகிறோம். நம் வசத்திற்கு உட்படாது பகல் இரவு என்ற மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் நில்லாத - நிறுத்தமுடியாத ஒன்று. நம்மை மீறிய ஒரு பேராற்றல் நம்மை ஆட்கொண்டு இருப்பதை நமக்கு இது உணர்த்துகிறது. அந்த பேராற்றலை உணர்ந்து அதனை ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு துடிப்பிலும் எங்கும் காண்பதற்கு உதவுபதையே இந்த ஆந்ஹிக நியமங்கள். அந்தப் பேராற்றலையே கடவுளாக அந்தர்யாமியாக எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக கருணைக்கடலாக விதியாக பல வடிவில் கண்டு, அதனிடம் ஆட்பட வைக்கின்றன இந்த ஆந்ஹிக நியமங்கள்.
இந்த நியமங்கள் நம் முன்னோர்களான பெரியோர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் நல்லதெனக்கண்டு அனுபவித்தவை. அவை பொய்யாய் இருந்தால் காலத்தால் அழிந்திருக்கும். மெய்யெனவே காலத்தால் அழியாமல் உபதேசத்தின் மூலம், வாழ்ந்து காட்டியதன் மூலம் நம்வரை வந்துள்ளன. இதனைக் கடைபிடிக்கும்படி நம் அந்தர்யாமி தூண்டும். நமது வினையால் அமைந்த விருப்பும் வெறுப்பும் இதற்குத் தடையாக நிற்கும். இந்த சுய விருப்பையும் வெறுப்பையும் பொருட்படுத்தாமல் நியமங்களை கடைப்பிடிப்பது தீரனின் செயல். அந்த நியமங்களைத் தொகுப்போம்.
Comments