ஸநாதன தர்மமும் திருக்குறளும் -8
ஸனாதன தர்மமும் திருக்குறளும் - 8
ஸாதநஸ்வரூபம் - வீடுபெறும்வழி
தலைப்பட்டார் தீரத் துறந்தார்
இறைவன் அருளாலும் தன் புண்ணியச் சேர்க்கையினாலும் உலகின் நிலையாமையைப் புரிந்து கொள்ளுகின்ற பக்குவம் அடைந்த ஜீவர்கள் பிறவியில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். குருவருளால் மெய்யுணர்ந்து, அவா அறுத்து, வீடுபேற்றை அடைய விழைகிறார்கள். அதற்குத் துறவறம் உறுதுணையாக இருக்கிறது.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (திருக்குறள் 23)
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (திருக்குறள் 348)
சார் தரும் நோய் சார்தரா!
இந்த உலகப்பொருள்கள் எல்லாம் மெய்ப்பொருளான பரம்பொருளை சார்ந்து இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு உலகப்பொருள்களின் மேல் இருக்கும் சார்பை - பற்றை - விடுத்து பரம்பொருளை சார்ந்து வாழுகின்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டால், துன்பத்தைத் தருகின்ற பிறவியில் இருந்து விடுவித்து பிறவாத நிலையை அருளுவார் இறைவன்.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய்.
(திருக்குறள் 359)
பற்றுக பற்றற்றான் பற்றினை
உலகப்பற்றுகள் நம்மை இன்ப துன்பங்களில் ஆழ்த்துகின்றன; பிறப்பு இறப்புகளில் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொண்டு உலகப் பற்று களிலிருந்து விடுபடுவதற்கு பற்றற்ற இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனை அடைவதற்கு சாதனங்களான கர்மயோகம், உபாஸந(தியான)யோகம் ஞானயோகம் ஆகியவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (திருக்குறள் 350)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் (திருக்குறள் 10)
ஞானயோகம்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
விவேகம் உடைய மனிதர்கள் உலகின் நிலையற்ற தன்மையை அறிந்து கொண்டு நிலையான பொருள் எது என்று தேடி நிலையான பொருளை பற்றி பேசுகின்ற தத்துவநூல்களை குரு வாயிலாக முறையாக பயின்று மெய்யறிவைப் பெறுகிறார்கள். மெய்யறிவின் வாயிலாக மெய்ப்பொருளை காண்கிறார்கள்.
நம்முடைய பிறவிக்குக் காரணம் அறியாமையே என்று முன்பு சொல்லப்பட்டது. அப்படி அறியாமை நீங்குவதற்கு ஒவ்வொரு பொருளினினுடைய தன்மையையும் ஆராய்ந்து எல்லா பொருள்களிலும் மெய்ப்பொருளாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்வதே மெய்யறிவு. ஆத்மஞானம் அல்லது ப்ரஹ்மஞானம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருக்குறள் 355)
தொடரும்...
Comments