அறம் செய விரும்பு - 20
பொதுவான நியமங்கள்
ஸூர்யசந்திரர்களை உதயத்திலும் அஸ்தமன ஸமயத்திலும் க்ரஹணகாலத்திலும் வானத்தில் நடுவில் இருக்கும் போதும் நீரில் பிரதிபிம்பித்திருக்கும் போதும் பார்க்கக் கூடாது.
மண்முட்டி, பசு, தேவதை, பிராமணன், நாற்சந்தி, காவல்மரம், ஸ்தலவிருக்ஷம் இவற்றை வலமாகச் செல்லவேண்டும், தாண்டக்கூடாது.
அக்கினியை வாயால் ஊதக்கூடாது. அசுத்தப்பொருளை அதில் போடக்கூடாது. அதில் கால்களைக் காய்ச்சக்கூடாது.
கிருஹஸ்தன் மூங்கில்தடி, தாமிரத்தாலான கமண்டலு, தங்கக் குண்டலம் இவற்றைத்தரிப்பது நல்லது.
ஆடையில்லாதவர்களைப் பார்க்கக் கூடாது.
காலை மாலை ஸந்தி வேளையில் உணவருந்துவதும் தூங்குவதும் பிரயாணமும் உடலுறவும் கூடாது.
மலமுத்திரங்கள், கோழை, ரத்தம், விஷம் இவற்றை நீரில் கலக்கக்கூடாது.
தூங்குபவரை எழுப்பக்கூடாது. அவர்கள் தர்மம் தவற நேர்ந்தால் எழுப்பலாம். தனித்துப் பாழ்வீட்டில் தூங்கக்கூடாது.
தனக்கெனப் பூமாலை தொடுக்கக் கூடாது.
கன்று ஊட்டுவதையும் வானவில்லையும் பிறருக்குச் சுட்டிக் காட்டக்கூடாது.
தனித்து பெருவழி நடப்பதும் மலையில் வெகுகாலம் வசிப்பதும் கூடாது.
மாதவிடாய் உள்ள பெண்ணுடன் நேரிடையாகப் பேசக்கூடாது.
வெண்கலத்தில் காலை அலம்புவதும், அஞ்சலியால் நீர் குடிப்பதும், பிறர் உபயோகித்த காலணி, ஆடை, உபவீதம், ஆபரணம், பூ, கமண்டலு இவற்றை உபயோகிப்பதும் கூடாது. காலை வெயிலில் காய்வதும் சவப்புகையை முகர்வதும் பிளந்த ஆசனத்தில் உட்கார்வதும், மயிர், நகம், ரோமம் இவற்றை அடிக்கடி தானே துண்டிப்பதும், வீண் அரட்டை அடிப்பதும் குறுக்குவழியில் வீட்டிற்குள்ளோ ஊருக்குள்ளோ நுழைவதும் கைகளால் நீந்தி ஆற்றைக் கடப்பதும், இரண்டுகைகளாலும் தலையைச் சொரிவதும் தவிர்க்கத் தக்கவை.
பெரியோரின் நிழலை மிதிப்பதும், நள்ளிரவிலும் சந்தி வேளைகளிலும் நாற்சந்தியில் நிற்பதும், திருடனுடனும் பாபியுடனும் துரோகியுடனும் பிறரது மனைவியருடனும் நட்பு கொள்வதும் நல்லதல்ல.
பிறரது படுக்கை, ஆசனம், வீடு, வாகனம் அவர்களது உபயோகத்தில் உள்ள பொருள் இவற்றை அவரனுமதியின்றி உபயோகிக்கக் கூடாது.
பற்களால் நகம் கடிப்பது, கேசங்களைக் கடிப்பது, துணியைக்கடிப்பது, காலால் காலைத்தேய்த்தலம்புவது, துரும்பைக் கிள்ளிப்போடுதல், பிச்சைக்காரனுக்கு அஞ்சி வாசற்கதவை மூடுதல், பந்துக்களுடன் விவாதிப்பது, பிறரை வீணே துன்புறுத்துவது, பொல்லாங்கு பேசுவது, ஆசார்யன் பெற்றோர் பசு இவர்களைத் துன்புறுத்துவது, அங்கக் குறையுள்ளவன், அதிகமாக அங்கவளர்ச்சியுள்ளவன், படிப்பில்லாதவன், அழகில்லாதவன், ஏழை, கீழ்த்தரத்தொழில் புரிபவன், தாழ்ந்த குலத்தோன் இவர்களை இகழ்ந்து பேசுதல் கூடாது.
வாயைக்கையால் மூடாமல் இருமுவதும் தும்முவதும் கொட்டாவி விடுவதும் கூடாது. தம்பதிகளுக்கிடையே, பெற்றோர் - மகன்களுக்கிடையே, ஆசிரியர் சீடர்க்கிடையே, நண்பர்க்கிடையே, பேசிக்கொண்டிருப்பவர்க்கிடையே, பசு - கன்றுக்கிடையே, சிவலிங்கம் - நந்திக்கிடையே செல்லக்கூடாது.
தொடரும்...
Comments