அறம் செய விரும்பு - 22
சுத்தமானதும் சுத்தமாக்குவதும்
எப்போதும் சுத்தமானவை
நெருப்பு, நீர்நிரம்பிய கமண்டலு, பசுவின் பின்புறம், யானையின் முன்புறம், ஆடு-குதிரைவாய், குழந்தை, பிரம்மசாரி எடுத்த பிக்ஷை அன்னம், சூரியகிரணம், காற்று, தேனீ, ஜலத்திலுள்ள உயிரினங்கள், உபனயத்திற்குமுன் உள்ள பாலன், விவாகமாகாத வயதுக்குட்பட்ட கன்னி, வாகனம், ஓடம், வழி, புல்தரை இவை எப்போதும் சுத்தமானவை.
எப்போதும் அசுத்தமானவை
மலம், மூத்திரம், ரத்தம், கொழுப்பு முதலியவை.
சுத்தி பெற உதவுபவை
காலம், நெருப்பு, ஸம்ஸ்காரம், காற்று, மண், ஞானம், தவம், பச்சாதாபம், உபவாஸம் இவை சுத்திபெற விரும்புபவனுக்கு உதவுபவை.
சிலவற்றில் சூழ்நிலையிலுள்ளவை ஒட்டிக்கொண்டு அழுக்காகப்பற்றும். இவை அப்பழுக்கு, லேபம். உயிரினங்களின் கழிவுப்பொருள் உடலின் உள்ளிருந்து வெளிப்படும்போது அழுக்காகும். இவை மலம். இவ்விரு அழுக்குகளையும் செயற்கையாகப் போக்க முடியும். எண்ணத்தில் அல்லது அறிவில் அழுக்கிருந்தால் உபவாஸம், பச்சாத்தாபம், தவம், ஞானம் இவை மட்டுமே சுத்தப்படுத்தும்.
தங்கம், சங்கு, முத்து, ரத்தினம், வெள்ளி இவைகளில் உள் அழுக்கு இல்லை. அதனால் மேல் அழுக்கை ஜலம் சாம்பல் மண் இவற்றால் சுத்தி செய்யலாம்.
தாமிரம், இரும்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் முதலியவற்றை உப்பு, புளி, ஜலம் இவற்றால் சுத்தப்படுத்தலாம். அதிக அழுக்கைப்போக்க நெருப்பும் உதவும்.
பட்டு கம்பளம் நார்மடி முதலியவை குறைவான அசுத்தியானால் ஜலம் தெளிப்பதால் சுத்தி. அசுத்தி அதிகமானால் உவர்மண், ஜலம் இவற்றில் சுத்தி.
பஞ்சுடன் கூடிய மெத்தை, தலைகாணி, தடிப்பான விரிப்பு முதலியவை வெயிலில் உலர்த்துவதால் சுத்தி. மூங்கிலால் செய்யப்பட்ட பாய், கூடை, விசிறி, முறம், சல்லடை முதலியவை அழுக்குக் குறைவில் ஜலம் தெளித்தலாலும் அதிக அழுக்கில் அலம்புவதாலும் சுத்தி. மண்பாத்திரத்தை நெருப்பிலிடுவதால் சுத்தி, தானியக்குவியலில் அசுத்தி கண்டால் அசுத்தியுள்ள பகுதியை அகற்றி மற்றதை ஜலம் தெளித்து எடுத்துக்கொள்ளலாம். அதிக அசுத்தியானால் நீரால் அலம்பலம். நெல் முதலியதானால் குத்தி உமி நீக்குவதால் சுத்தி.
பிரஸவம் நேர்ந்தால் அந்த இடத்தை அலம்பிப் பசுஞ்சாணத்தால் மெழுகிப் பசுவின் குளம்பு படச் செய்து புண்யாஹவசனம் செய்தால் சுத்தி. வைக்கோல் பத்தையைக் கொளுத்தி அறைமுழுவதும் அதனை இழுப்பதால் சுத்தி. மரணம் ஏற்பட்டால், மண்பாண்டம், பக்குவமான உணவு பொருள் இவற்றை எறிந்துவிட்டு அலம்பி சாணத்தில் மெழுகி புண்யாஹவாசனம் செய்தால் சுத்தி.
வாவி, கிணறு, குளம் முதலியவற்றில் நாய், பூனை, மனிதன் இறந்தால் சவத்தை அகற்றிச் சிறிதாயின் 100 குடமாவது இறைத்துவிட வேண்டும். செத்து அழுகி அதிக நாளாகியிருந்தால் முழுவதும் தண்ணீரை இறைக்கவேண்டும். தடாகத்தில் நீரை வெளியேற்றுவதுடன் சூரியவெப்பம்படும்படி செய்தபின் உபயோகிக்கலாம்.
கடையில் வாங்குகின்ற ( சமைக்கப்படாத) பொருளனைத்தும் சுத்தம்.
எறும்பு, எலி, வண்டு, ஈ தொட்டது பக்குவப்படாத பொருளாயின் அசுத்தம் பக்குவப்பட்டதாயின் நீக்கத்தக்கவை.
கல்லால் செய்த விக்ரகமாயின் புற்று மண்ணால் அலம்பி பஞ்சகவ்யம் தேய்த்தால் சுத்தம்.
ரோகி, பாலன், பெண், சமையற்கட்டு இவற்றில் சுத்தி பற்றி அதிகம் விசாரிக்கக்கூடாது.
🌷 நிறைவு பெற்றது.🌷
Comments