அறம் செய விரும்பு - 21
பொதுவான தர்மங்கள்
தொடர்ச்சி..
மெழுகிக் கோலமிட்ட வீட்டில் லஷ்மி வசிப்பாள்.
ஒழுங்காக ஆடை தரித்துள்ளவர்களிடம் லஷ்மி வசிப்பாள்.
ஆடு, கழுதை, ஒட்டகம், துடைப்பம் இவற்றின் புழுதி, பிறரின் மூச்சுக்காற்று, ஆடைக்காற்று, முறத்தால் அசையும் காற்று இவை உடலில் பட்டால் லஷ்மி மறைவாள்.
ஆடையற்றவனையும் கச்சமில்லாதவனையும் கௌபீனம் மட்டும் தரித்து வெளியில் வருபவனையும் லஷ்மி விரும்பமாட்டாள்.
காலணி, குடை, தண்ணீர் பாத்திரம், துணைவர் இவையின்றி பெருவழி நடக்கக்கூடாது. பகலில் தலையைத் துணியால் மூடியும், இரவில் மூடாமல் வழிநடக்கக் கூடாது.
தன் வயது, செல்வம், குடும்ப ரகசியம், வருவாய், கொடுக்கல் வாங்கல், அவமானம் இவற்றைப் பிறரிடம் வெளியிடக்கூடாது. தம்பதிகள் பெற்ற உடல்உறவு, குருவிடம் பெற்ற மந்திரம், தான்சாப்பிடும் மருந்து இவற்றையும் வெளியிடக்கூடாது.
ஆண் விளக்கேற்றுவதும் அணைப்பதும், பெண் பூசணிக்காயைப் பிளப்பதும் கூடாது.
பிறர் தும்பினால் 'க்ஷேமமாயிரு' என்று உடன் சொல்ல வேண்டும். தடுக்கி விழுந்தால் விழுந்த இடத்திலுள்ள மண்ணை நெற்றியில் இடவேண்டும். கொட்டாவி விட்டால் கையால் வாயை மூடிப் பின் வலது காதை தொட வேண்டும்.
உறவினர்களுக்குள் கசப்பான பொருளை வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. இரும்பு, விதை, ஜலம், அன்னம், நெருப்பு, மோர், பால், தயிர், அக்கினி, தான்யம், மருந்து இவற்றை இரவுநேரத்தில் பிறருக்குத் தரக்கூடாது. தருபவனின் வீட்டிலிருந்து செல்வம் அகலும். எதையாவது பண்டமாற்று ஏற்றுக் கொடுப்பதானால் தோஷமில்லை.
மனைவி கருத்தரித்திருந்தால், 3வது மாதம் முதல் கணவன் க்ஷவரம், சவத்தைச்சுமத்தல், சவத்தைப்பின் தொடர்ந்து சுடுகாடு செல்லுதல், தூர தேச யாத்திரை, ஸமுத்ரஸ்நானம் புது வீடு கட்டுதல், புது வீடு பிரவேசம், பழைய வீட்டை இடித்துக் கட்டுதல் இவைகளைச் செய்யக்கூடாது.
இரவில் வயலில் உழுவதோ விதை விதைப்பதோ கூடாது.
சகோதரர்களும் பிதா-புத்திரர்களும் ஒரே நாளில் க்ஷவரம், சிரார்த்த போஜன செய்ய கூடாது.
ஏகாதசியில் உபவாஸம், துவாதசியில் திருவோணம் சேர்ந்தால் அன்றும் உபவாஸம் இருக்க வேண்டும். சிரவண துவாதசியில் இரண்டு நாட்கள் உபவாஸமிருக்க இயலாதவர் துவாதசியன்று உபவாஸம் இருக்க வேண்டும். துவாதசியின் முதல்பாதம் ஹரிவாஸரமாகும். அதிலும் போஜனம் கூடாது. துவாதசி அல்பமாயிருந்தால் உதயத்திற்கு முன்பே தேவபூஜை வரை செய்து உதயத்திற்குப்பின் பாரணை செய்ய வேண்டும்.
காதில்பூ, கழுத்தில் சந்தனம், சிகையில் துளசி தரிப்பது கூடாது.
ராத்திரியில் கடுகு, அஷ்டமியில் தேங்காய், துவாதசியில் புடல், துவிதியையில் கண்டங்கத்திரி, பிரதமையில் பூஷணி, பஞ்சமியில் வெள்ளரி கூடாது.
தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக்கூடாது.
பெண் மைதீட்டிக் கொள்ளும்போதும் எண்ணெய் குளியலில் உள்ளபோதும் ஆடை இல்லாத போதும் தூங்கும்போதும் பார்க்கத்தக்கவளல்ல.
நீரிலும் எண்ணெயிலும் நிழலைப் பார்க்கக்கூடாது.
கன்றின் தும்பைத் தாண்டக்கூடாது.
ஆடையின்றி நீராடக்கூடாது.
எதெது பிறரது உதவிகொண்டு நடை பெறக்கூடியதோ அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தானே செய்யக்கூடியதில் முயன்று செயல்படவேண்டும். பிறர் வசமுள்ளது எதுவும் துக்கம். தன்வசமுள்ளது எதுவும் சுகமே. வேதத்தை நிந்தை செய்வது, தேவநிந்தை, துவேஷம், ஜம்பம், தன்மான மிகுதி, கோபம், வெறி முதலியவற்றை விட வேண்டும். பிறரை அடிப்பதற்கென கழியை ஓங்குவதோ கழியாலடிப்பதோ கூடாது. கட்டுப்படுத்த வேண்டிய சிஷ்யன் புத்திரன் விஷயத்தில் லேசாக இதைப் பயன்படுத்தலாம்.
கைகள், கால்கள், கண்கள், வாக்கு இவை சபலத்தால் செயல்படுவது கூடாது. உபயோகமில்லாத வஸ்துவை எடுப்பது கையின் சபலம். வீணாய் திரிவது காலின் சபலம், பிற பெண்களை உற்றுப்பார்ப்பது கண்களின் சபலம், வீணாகப் பேசுவது வாயின் சபலம், பிறரை துன்புறுத்தவோ மனம் நோகச் செய்வதோ தவிர்க்கத் தக்கது. குடும்பத்தினருடன் வீண் விவாதத்தில் இறங்கக்கூடாது.
தனக்கு எது கெடுதல் விளைவிக்க கூடுமோ அதைப் பிறருக்கு தான் செய்யக்கூடாது. பலருடன் விரோதம் கூடாது. தன்னை புகழ்ந்தும் பிறரை அவமதிப்பும் பேசுகின்ற பழக்கம் கூடாது. குரு, வேதம், தெய்வம், பெரியோர்கள் இவர்களை நிந்திக்கக்
கூடாது. அவர்களை நிந்திக்குமிடத்தில் நிற்கக் கூடாது. பிறரது ரகசியத்தை அறிய முற்படக்கூடாது.
பாபியைப் பாபி என்று சொல்லக்கூடாது. பாபம் செய்தது மெய்யானால் அதனை நினைத்த இவனும் பாவி. பாபம் செய்தது பொய்யானால் இரு மடங்கு குற்றம். தன்னை பரிதாபத்திற்கு உரியவனாக காட்டிக் கொள்ளக்கூடாது. தன்னைத் தானே அவமதிப்பிற்கு உள்ளாக்குவதும் கூடாது. பற்களை நரநரவெனக் கடிப்பது. மூக்கினால் பிறரறிய உருமுவது, வாயை மூடாமல் கொட்டாவிவிடுவது, அதிக ஓசையுடன் சிரிப்பது, அதிதூக்கம், அதிவிழிப்பு, அதிகமாய் நிற்பது, அதிகமாய்ப் படுக்கையிலிருப்பது, அதிதேகப் பயிற்சி இவற்றைத்தவிர்த்தல் நல்லது. கெட்டதைக்கூட கெட்டதென நேரிடையாகச் சொல்லக்கூடாது. இவன் எனக்கு எதிரி எனக்குறிப்பிடக்கூடாது. அப்படிச் சொல்வதால் எதிர்க்க வராதவனையும் எதிரியாக்கிக் கொள்ளக்கூடும். தர்மவிஷயமான கருத்துகளைப் பெரியோர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று கூறவேண்டும். இது தனது கருத்து எனக் கூறக்கூடாது. தன் கருத்து பிசகானதாகவும் இருக்கக்கூடும்.
வீட்டிலுள்ள பெண்பிள்ளை, வேலைக்காரன் இவர்கள் கடுஞ்சொல் கூறினால் பொறுத்துக்கொள்ளவேண்டும். மனவேதனைப் படக்கூடாது.
பிறரை நிந்திப்பது அழிவின் அடையாளம். கபடச்செயல் பாபத்தின் அடையாளம். நேர்மை பரம்பொருளின் அடையாளம். கல்வியால் ஒளிமிக்க வாழ்வு. பொருளை வழங்குவதால் சுகம். உழைப்பால் செல்வநிறைவு. அவமதிப்படைவதால் பாபம் தொலையும். பாராட்டப் பெறுவதால் புண்ணியம் தொலையும். பாராட்டும் மதிப்பும் பெறுகின்ற பிராமணன் கறவைப்பசுபோல் கறக்கப்பட்டே களைத்து விடுவான்.
தொடரும்...
Comments